வெள்ளி, ஜூலை 10, 1942
அன்புள்ள கிட்டி,
எங்கள் வீட்டைப் பற்றிய நீண்ட விவரணை மூலம் அநேகமாக உன்னைச் சலிப்பைடைய செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் நான் எங்கே வந்திருக்கிறேன் என்பது குறித்து நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இங்கே எப்படி வந்தேன் என்பது குறித்து என்னுடைய அடுத்த கடிதங்களின் மூலம் நீ தெரிந்துகொள்வாய்.
ஆனால் முதலில், நான் என்னுடைய கதையைத் தொடர நீ அனுமதிக்க வேண்டும். ஏனெனில் நான் இன்னும் முடிக்கவில்லை. 263 பிரின்சென்கிராட்ச் வீட்டுக்கு நாங்கள் வந்து சேர்ந்ததும், மீப் எங்களை உடனடியாக நீண்ட நடைபாதை வழியாக, மரப் படிக்கட்டுகள் மேல் ஏறி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். கதவை அடைத்த அவர், எங்களைத் தனியாக விட்டுச் சென்றார். மார்காட் தன்னுடைய மிதிவண்டியில் முன்னதாகவே வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
எங்களுடைய பிரதான அறை உட்பட எல்லா அறைகளையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குப் பொருட்களால் நிரப்பியிருந்தனர். கடந்த சில மாதங்களாக அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கார்ட்போர்ட் அட்டைபெட்டிகள் தரைகளிலும், மெத்தைகளிலும் குவிந்து கிடந்தன. சிறிய அறை, தரை முதல் கூரை வரை துணிகளால் நிரம்பி இருந்தது. ஒழுங்கமைப்பட்ட படுக்கைகளில் நாங்கள் உறங்க விரும்பினால், அந்த குவியல்கள் அனைத்தையும் சரிசெய்யவேண்டும். அம்மாவும் மார்காட்டும் கை, கால்களைக்கூட அசைக்க முடியாத நிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் விரிப்புகளில் களைப்புடன், பரிதாப நிலையில் படுத்தனர். ஆனால் எங்கள் குடும்பத்தின் இரண்டு சுத்திகரிப்பாளர்களான அப்பாவும் நானும், உடனடியாக வேலைகளை ஆரம்பித்தோம்.
நாள் முழுக்க நாங்கள் பெட்டிகளைத் திறந்து, சுவர் அலமாரிகளை நிரப்பி, ஆணிகள் அடித்து, அலங்கோலங்களைச் சரிசெய்தோம். இரவில் எங்களுடைய சுத்தமான படுக்ககளில் நாங்கள் சோர்வுடன் விழுந்து உறங்கும் வரை இது நடந்தது. நாள் முழுக்க நாங்கள் ஒருமுறைகூட சூடான உணவு உட்கொள்ளவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. அம்மாவும் மார்காட்டும் மிகவும் களைப்புடன் இருந்தனர். சாப்பிட ஆர்வமுடன் இருந்தனர். அப்பாவும் நானும் பரபரப்பாக இருந்தோம்.
செவ்வாய்க்கிழமை காலையில் முந்தைய இரவில் எங்கு விட்டோமோ அங்கிருந்தே தொடங்கினோம். பெப்பும் மீப்பும் எங்களுடைய ரேஷன் கூப்பன்களுடன் பொருட்கள் வாங்கச் சென்றனர். அப்பா எங்களுடைய மறைப்புத் திரைகளில் வேலை செய்து கொண்டிருந்தார். நாங்கள் சமையலறை தரையைத் துடைத்தோம். மீண்டும் ஒருமுறை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பரபரப்பாக காணப்பட்டோம். புதன் வரை, என் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றம் குறித்து சிந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ரகசிய வீட்டுக்கு நாங்கள் வந்தபிறகு முதல்முறையாக, இதைப் பற்றியெல்லாம் உன்னிடம் சொல்லவும், எனக்கு என்ன நடந்தது, இன்னும் என்ன நடக்க உள்ளது என்பதை உணரவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
உன் அன்பான ஆன்
சனிக்கிழமை, ஜூலை 11, 1942
அப்பா, அம்மா, மார்காட் மூவராலும் இன்னும் வெஸ்டர்டோரன் கடிகாரத்தின் மணியோசைக்குப் பழக முடியவில்லை. அது ஒவ்வொரு கால் மணி நேரத்தையும் எங்களுக்குச் சொல்லும். ஆனால் எனக்கு அப்படி அல்ல. ஆரம்பத்திலிருந்தே எனக்கு பிடித்ததாய் அது இருந்தது. மிகவும் தைரியம் தருவதாகவும் இருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில். பதுங்கிக் கொண்டிருப்பது குறித்து நான் என்ன நினைக்கிறேன் என நீ கேட்க விரும்புகிறாய் என்பதில் சந்தேகமே இல்லை. என்னால் சொல்ல முடிவதெல்லாம், இன்னும் அது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதே. நான் இந்த வீட்டில் என்னுடைய சொந்த வீட்டில் இருப்பதை உணர்வேனா என்று தெரியவில்லை. அதற்காக நான் இதை வெறுக்கிறேன் என்றும் அர்த்தம் இல்லை. ஏதோ ஒரு விசித்திரமான விடுதியில் விடுமுறையில் தங்கியிருப்பதைப் போன்ற உணர்வே மேலிடுகிறது. இந்த வீடு பதுங்கிக் கொள்ள ஏற்றவகையில் இருக்கிறது. ஈரமாகவும், ஒரு பக்கம் சாய்வாகவும் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனாலும் பதுங்குவதற்கு ஆம்ஸ்டர்டாம் முழுக்க இதைவிட அதிக வசதியான இடம் எதுவும் இருக்க முடியாது. ஏன், ஹாலந்து முழுவதுமேகூட.
வெற்றுச் சுவர்களைக் கொண்ட எங்கள் படுக்கையறை மிகவும் வெறுமையாக இருந்தது. ஆனால் என்னுடைய ஒட்டுமொத்த தபால் அட்டைகளையும் திரைப்பட நடிகர்களின் புகைப்படங்களையும் இங்கே முன்கூட்டியே கொண்டு வந்த என் அப்பாவுக்கும், கூடவே ஒரு பானை முழுக்க பசைக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னால் அந்தப் படங்களை சுவர்களில் ஒட்டமுடிந்தது. அச்செயல் உற்சாகமூட்டுபவையாகவும் இருக்கிறது. வான் டான்கள் வந்ததும், மாடியறையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மரங்களைக் கொண்டு எங்களால் சுவர் அலமாரிகள் உள்ளிட்டவற்றைச் செய்ய முடியும்.
மார்கோட்டும் அம்மாவும் ஓரளவு மீண்டுவிட்டனர். நேற்றைய தினம் அம்மா, முதல்முறையாக பட்டாணி சூப் செய்யும் அளவுக்குத் தேறியிருந்தார். ஆனால் அதன்பிறகு மாடியிலிருந்து கீழிறங்கி பேசிக் கொண்டிருந்தபோது, அதைப் பற்றியே மறந்துவிட்டார். பீன்ஸ் கருகிப் போய்விட்டது. எவ்வளவு சுரண்டியும் அவற்றைச் சட்டியில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை.
நேற்று இரவு நாங்கள் நால்வரும் கீழே இறங்கி தனி அலுவலகத்துச் சென்று ரேடியோவில் இங்கிலாந்து செய்திகளைக் கேட்டோம். யாரேனும் அதைக் கேட்டுவிடக் கூடும் என்ற பயத்தில் நான் என் அப்பாவிடம் என்னை மீண்டும் மாடிக்கு அழைத்து சென்று விடுமாறு கெஞ்சினேன். என்னுடைய பதற்றத்தைப் புரிந்து கொண்ட அம்மா என்னுடன் வந்தார். நாங்கள் என்ன செய்தாலும், எங்களுடைய அண்டை வீட்டார் எங்களைப் பார்க்கவோ அல்லது கேட்டுவிடவோ கூடும் என்று மிகவும் அஞ்சினோம். உடனடியாக முதல் நாளே திரைச்சீலைகள் தைக்கத் தொடங்கினோம். உண்மையில் அவற்றை அப்படி அழைக்க இயலாது. காரணம் அவை வெறும் கந்தல் துணிகளாகவும், அளவுகளில், தரத்தில், வடிவத்தில் வெவ்வேறாகவும் இருந்தன. நானும் என் அப்பாவும் அவற்றை எங்களது அனுபவமற்ற விரல்களைக் கொண்டு அலங்கோலமாகத் தைத்தோம். எங்களுடைய இந்தக் கைவினைப் படைப்புகள் ஜன்னல்களில் பொருத்தப்பட்டன. நாங்கள் எங்கள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியேறும் வரை அவை அங்கேயே இருக்கும்.
எங்களுக்கு வலது பக்கத்தில், ஸாண்டமைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கெக் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவலகம் இருக்கிறது. இடது பக்கம் ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் பட்டறை. அங்கே வேலை செய்பவர்கள், பணி நேரத்துக்குப் பிறகு அங்கு இருப்பதில்லை என்றாலும், நாங்கள் எழுப்பும் எந்த ஒரு சத்தமும் சுவர்களை ஊடுருவிச் செல்லக் கூடும். மார்காட்டுக்குக் கடுமையான சளி இருந்தும், இரவு நேரங்களில் இரும வேண்டாம் என்று அவளிடம் சொல்லி இருக்கிறோம். மேலும் கோடீன் மருந்தை அதிகமாக அவளுக்குக் கொடுக்கிறோம்.
வான் டான்களின் வருகைக்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் செவ்வாய்க்கிழமை வருவதாகச் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் வருகை வேடிக்கையானதாகவும், அமைதியற்றதாகவும் இருக்கும். மாலைகளிலும், இரவு நேரங்களிலும் அமைதி என்னை மிகவும் பதற்றத்துக்குள்ளாக்குகிறது. எங்கள் உதவியாளர்களில் ஒருவரை இங்கே வந்து தூங்க வைக்க நான் எதைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
நாங்களே எங்களுக்கு உணவு சமைத்துக் கொள்ள முடிவதாலும், அப்பாவின் அலுவலகத்தில் இருக்கும் வானொலியைக் கேட்கமுடிவதாலும் இங்கு அந்த அளவுக்கு மோசமாக இல்லை. திரு.க்ளேமேனும், மீப், பெப் வோஸ்குய்ல்யும் கூட எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கின்றனர். நாங்கள் ஏற்கெனவே ஏராளமான ருபார்ப், ஸ்ட்ராபெர்ரி பழங்களை, செர்ரி பழங்களை கேன்களில் அடைத்து விட்டோம். எனவே இப்போதைக்கு எங்களுக்குச் சலிப்பு தட்டிவிடும் என்று தோன்றுகிறது. எங்களிடம் வாசிப்பதற்கான புத்தகங்களும் உள்ளன. நாங்க நிறைய விளையாட்டுகளை வாங்க இருக்கிறோம். நிச்சயமாக, எங்களால் ஜன்னலுக்கு வெளியே பார்க்கவோ அல்லது வெளியே செல்லவோ இயலாது. கீழே இருக்கும் மக்கள் எங்களைக் கேட்டுவிடக் கூடாது என்பதால் நாங்க அமைதியாக இருக்க வேண்டும்.
நேற்று எங்கள் கைகள் நிறையப் பொருட்கள் இருந்தன. திரு.கூக்லருக்காக இரண்டு பெட்டிகள் நிறைய செர்ரி பழங்களை நாங்கள் புதைத்து வைக்க வேண்டி இருந்தது. காலிப் பெட்டிகளை நாங்கள் புத்தக அலமாரிகள் செய்ய பயன்படுத்தப் போகிறோம்.
யாரோ என்னை அழைக்கிறார்கள்.
உனது ஆன்,
செப்டம்பர் 28, 1942 அன்று ஆன் ஃபிராங்கால் சேர்க்கப்பட்ட கருத்து:
வெளியே செல்ல முடியாமல் இருப்பது, வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு என்னை வருத்துகிறது. எங்களது பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு நாங்கள் சுடப்படுவோமோ என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக அது மோசமானதாக அமையும்.
ஞாயிறு, ஜூலை 12, 1942
அவர்கள் அனைவரும் ஒரு மாதம் முன்பு, என் பிறந்தநாள் காரணமாக என்னிடம் மிக நல்ல முறையில் நடந்துகொண்டனர். எனினும் ஒவ்வொரு நாளும் நான் அம்மாவிடமிருந்தும், மார்காட்டிடமிருந்தும் விலகிச் சென்று கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன். இன்று நான் கடுமையாக வேலை செய்தேன். அவர்கள் என்னைப் புகழ்ந்தனர். ஐந்து நிமிடம் கழித்து உடனடியாக என்னை மீண்டும் வெறுக்கத் தொடங்கினர்.
அவர்கள் மார்காட்டை நடத்தும் விதத்திலும் என்னை நடத்தும் விதத்திலும் இருக்கும் வித்தியாசத்தைச் சுலபமாக பார்க்க முடியும். உதாரணமாக, மார்காட் சுத்திகரிக்கும் கருவியை உடைத்து விட்டாள். அதன் காரணமாக நாங்கள் அன்றைய நாள் முழுக்க விளக்கு இல்லாமல் இருந்தோம். அதற்கு அம்மா, ‘சரி மார்காட், உனக்கு இந்த வேலையெல்லாம் பழக்கமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இல்லையென்றால் பிளக்கை வெளியே இழுப்பதை தாண்டி இன்னும் நிறைய விஷயங்களை நீ தெரிந்துவைத்திருப்பாய்’ என்று சொன்னார். அதற்கு மார்காட் சில பதில்களைக் கூறினாள். அவ்வளவுதான் அதோடு முடிந்துவிட்டது.
ஆனால் இன்று மதியம், அம்மாவின் மளிகைப் பொருட்கள் பட்டியலில் நான் ஒன்றைத் திருத்தி எழுத விரும்பினேன். காரணம், அவரது கையெழுத்து படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அவர் என்னை அனுமதிக்கவில்லை. என்னை அவர் திரும்பவும் திட்டி தீர்த்தார். மொத்த குடும்பமும் அதில் பங்கேற்றது.
நான் அவர்களுடன் ஒத்துப் போகவில்லை. அதை நான் கடந்த சில வாரங்களில் தெளிவாக உணர்ந்தேன். அவர்கள் ஒன்றாக உணர்ச்சிவயப்படுகின்றனர். ஆனால் நான் என்னளவில் தனியாக உணர்ச்சிவசப்படுவதை விரும்புகிறேன். நாம் நால்வரும் ஒன்றாக இருப்பது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்றும், நாம் அனைவருக்கும் நன்றாக ஒத்துப் போவதாகவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் நான் அப்படி உணரவில்லை என்பது பற்றி யோசிக்க அவர்கள் நேரம் கொடுப்பதில்லை.
அப்பா மட்டும்தான் என்னைப் புரிந்து கொள்கிறார். அவ்வப்போது அவரும் அம்மா, மார்காட் பக்கம் சாய்ந்து விடுவார். என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாத இன்னொரு விஷயம், வெளி ஆட்கள் முன்னால் என்னைப் பற்றி அவர்கள் பேசுவது. நான் எவ்வாறு அழுதேன், எவ்வளவு புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறேன் என்று அவர்களிடம் சொல்வது. அது மிக கொடுமையானது. சில நேரம் அவர்கள் மூர்ட்ஜே குறித்தும் பேசுகின்றனர். என்னால் அதைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
மூர்ட்ஜேதான் என்னுடைய பலவீனம். நான் அவளை தினசரி ஒவ்வொரு நிமிடமும் தேடுகிறேன். நான் அவளை பற்றி எவ்வளவு நினைக்கிறேன் என்று யாருக்கும் தெரியாது. அவளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் கண்கள் கண்ணீரால் நிரம்புகின்றன. மூர்ட்ஜே மிகவும் இனிமையானவள். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அவள் எங்களிடம் திரும்பி வந்துவிடுவாள் என்று தொடர்ந்து கனவு காண்கின்றேன்.
எனக்கு ஏராளமான கனவுகள் உள்ளன. ஆனால் உண்மை என்னவென்றால், போர் முடியும் வரை நாங்கள் இங்கேயேதான் இருக்க வேண்டும். எங்களால் எப்போதும் வெளியே செல்ல இயலாது. மீப், அவருடைய கணவர் ஜேன், பெப் வோஸ்குய்ல், திரு.வோஸ்குய்ல், திரு. கூக்லர், திரு. கிளெய்மென் மற்றும் திருமதி. கிளெய்மென் ஆகியோர் மட்டுமே எங்களுடைய விருந்தினர்கள். திருமதி. கிளெய்மென், இங்கு வருவது மிகவும் ஆபத்து என்று கருதுவதால் அவர் வரவில்லை.
செப்டம்பர் 1942இல் ஆன் ஃப்ராங்கால் சேர்க்கப்பட்ட கருத்து:
அப்பா எப்போதும் நல்ல முறையில் நடந்து கொள்வார். அவர் என்னை சரியான முறையில் புரிந்து கொள்கிறார். உடனடியாக வெடித்து விடாமல் அவரும் நானும் மனம் விட்டு பேசவேண்டும் என்று விரும்புகிறேன். வெளிப்படையாகச் சொன்னால் அது என் வயது தொடர்புடையது பற்றிதான். நான் என்னுடைய நேரம் அனைத்தையும் எழுத்தில் செலவிட விரும்புகிறேன். ஆனால் அநேகமாக அது சலிப்பை ஏற்படுத்திவிடும் என நினைக்கிறேன்.
இப்போது வரை நான் என்னுடைய எண்ணங்களை என்னுடைய டைரியில்தான் சேமிக்கிறேன். பிற்காலத்தில், சத்தமாகப் படிக்கக் கூடிய அளவுக்குச் சுவாரஸ்யமாக எழுதும் பழக்கம் இன்னும் வரவில்லை. எதிர்காலத்தில் உணர்வுகளுக்குக் குறைவான நேரத்தையும், நிஜத்துக்கு அதிக நேரத்தையும் அர்ப்பணிக்கப் போகிறேன்.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14, 1942
அன்பான கிட்டி,
ஒரு மாதம் முழுக்க நான் உன்னைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மிகக் குறைந்த நிகழ்வுகளே நடந்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்புப்படுத்திக் கொள்ளும் வகையில் பரபரப்பான விஷயங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ஜூலை 13 அன்று வான் டான் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் 14 அன்றுதான் வருவார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், 13 முதல் 16 வரை ஜெர்மானியர்கள் எல்லாப் பக்கமும் அழைப்பு அறிவிப்பாணைகளை அனுப்பிக் கொண்டிருந்ததால் மிகுந்த அமைதியின்மை உண்டாக்கியது. எனவே ஒருநாள் தாமதாகச் செல்வதைவிட, ஒருநாள் முன்கூட்டியே செல்வது பாதுகாப்பானது என அவர்கள் முடிவு செய்தனர்.
பீட்டர் வான் டான் காலை 9.30 மணிக்கு வந்தான் (அப்போது நாங்கள் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்). பீட்டருக்கு 16 வயது ஆகிறது. கூச்ச சுபாவம் கொண்ட அவனது இருப்பு ஒரு சுமையாக இருக்காது. அரை மணி நேரம் கழித்து வான் டான் தம்பதியினர் வந்தனர். உள்ளே பெரிய சேம்பர் பானையுடன் கூட்டிய ஒரு தொப்பி வைக்கும் பெட்டியை, திருமதி வான் டான் எடுத்து வந்தது எங்களது ஆர்வத்தை தூண்டியது. ‘என்னுடைய சேம்பர் பானை இல்லையென்றால், எனக்கு வீட்டில் இருக்கும் உணர்வு கிடைக்காது’ என்றார். படுக்கைக்குக் கீழே ஒரு நிரந்தர இடம் கொடுக்கப்பட்ட முதல் பொருள் அதுதான். சேம்பர் பானைக்குப் பதில், திரு வான் டான், தனது கைகளுக்கு அடியில் வைத்து, மடித்து வைக்கக்கூடிய டீ மேஜையைத் தூக்கி வந்தார்.
தொடக்கம் முதலே நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டோம். மூன்று நாட்களுக்குப் பிறகு, நாங்க ஏழு பேரும் ஒரு பெரிய குடும்பமாக மாறிவிட்டதைப் போல உணர்ந்தோம். இயற்கையாகவே, நாங்கள் வெளியுலகக் தொடர்புகளில் இருந்து விலகி இருந்த அந்த வாரத்தில் நடந்தவை பற்றிச் சொல்ல வான் டான்களுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. குறிப்பாக எங்களுடைய குடியிருப்புக்கும், திரு. கோல்டுஸ்மித்துக்கும் என்ன ஆனது என்ற தெரிந்துகொள்ள நாங்கள் ஆர்வமாக இருந்தோம்.
திரு வான் டான் எங்களிடம் கூறியது: ‘திங்கள்கிழமை காலை 9 மணியளவில் திரு.கோல்ட்ஸ்மித் என்னைத் தொலைபேசியில் அழைத்து, என்னை அங்கு வரச் சொன்னார். நான் உடனடியாக அங்கு சென்றேன். மிகுந்த கவலையுடன் இருந்தார் திரு.கோல்ட்ஸ்மித். நீங்கள் விட்டுச் சென்ற ஒரு குறிப்பை எனக்குக் காட்டினார். அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி, உங்கள் பூனையை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தார். அது நல்ல யோசனை என்று நானும் ஒப்புக்கொண்டேன். வீடு சோதனை செய்யப்படும் என்று அவர் அஞ்சினார். எனவே நாங்கள் எல்லா அறைகளையும் சென்று ஒழுங்குப்படுத்தினோம். மேஜையிலிருந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினோம். திடீரென திருமதி. ஃபிராங்கின் மேஜையில் இருந்த ஒரு குறிப்பேட்டைக் கண்டேன். அதில மாஸ்ட்ரிச்சில் உள்ள ஒரு முகவரி எழுதப்பட்டிருந்தது. திருமதி ஃபிராங்க் அதனை வேண்டுமென்றேதான் விட்டுச் சென்றிருப்பார் என்று எனக்குத் தெரிந்தாலும், நான் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைவதுபோல நடித்தேன். திரு. கோல்ட்ஸ்மித்திடம் இந்தக் காகிதத் துண்டை எரித்து விடுமாறு கெஞ்சினேன். நீங்கள் தலைமறைவானது குறித்து எனக்கு எதுவும் தெரியாதைப்போலச் சத்தியம் செய்தேன். ஆனால் அந்த குறிப்பு எனக்கு ஒரு யோசனையை தோன்ற வைத்தது. ‘திரு. கோல்ட்ஸ்மித், இந்த முகவரி எதைக் குறிக்கிறது என்று எனக்கு தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பாக ஓர் உயர் அதிகாரி அலுவலகத்துக்கு வந்தார். அவரும் திரு ஃபிராங்க்கும் ஒன்றாக வளர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவசியம் என்றால் திரு.ஃபிராங்க்குக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார். அவர் மாஸ்ட்ரிச்சில் இருந்ததாக எனக்கு நினைவு. இந்த அதிகாரி தன்னுடைய வாக்குறுதியைக் காப்பாற்றியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர்கள் பெல்ஜியத்தைக் கடந்து ஸ்விட்சர்லாந்து செல்ல எப்படியோ உதவி செய்ய திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து கேட்கும் ஃபிராங்கின் நண்பர்களிடம் இதைச் சொல்வதில் எந்த ஆபத்தும் இல்லை. நிச்சயமாக மாஸ்ட்ரிச் குறித்து நீங்கள் எதுவும் குறிப்பிடவேண்டியதில்லை’ என்று கூறினேன். அதன் பிறகு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இந்தக் கதைதான் உங்கள் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில், பின்னால் வேறு சிலரிடமிருந்து இதை நான் கேட்டேன்.
வான் டான் கூறிய கதை மிகவும் வேடிக்கையான ஒன்றாகத் தோன்றியது. ஆனால் குறிப்பிட்ட சிலரது கற்பனைத் திறனைப் பற்றி திரு.வான் டான் சொன்னபோது நாங்க விழுந்து புரண்டு சிரித்தோம். உதாரணமாக, எங்கள் சதுக்கத்தில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர், அதிகாலையில் நாங்கள் நால்வரும் எங்களது மிதிவண்டிகளில் சென்றதாக சொல்லியிருக்கின்றனர். இன்னொரு பெண், நள்ளிரவில் ஒரு ராணுவ வாகனத்தில் நாங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக அடித்துக் கூறியிருக்கிறார்.
உனது அன்பான ஆன்,
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 21, 1942
அன்புள்ள கிட்டி,
இப்போது எங்களது ரகசிய வீடு உண்மையிலேயே ரகசியமாக மாறிவிட்டது. காரணம், ஏராளமான வீடுகளில் மறைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்காகத் தேடுதல் வேட்டைகள் நடந்தன. எங்களுடைய பதுங்குமிடத்துக்கான நுழைவாயிலுக்கு முன்னால் ஒரு புத்தக அலமாரி செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என திரு. கூக்லர் எண்ணினார். அதற்கான தச்சு வேலையை திரு.வோஸ்குய்ல் செய்தார். (நாங்கள் ஏழு பேரும் தலைமறைவாக இருப்பதாக திரு. வோஸ்குய்லுக்குச் சொல்லப்பட்டுள்ளது. அவர் மிகவும் உதவியாக இருந்து வருகிறார்)
இப்போது நாங்கள் கீழே செல்ல விரும்பும் போதெல்லாம், குனிந்தபடி சென்று பின்னர் குதிக்க வேண்டும். முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு, தாழ்வான நுழைவாயிலில் எங்கள் தலையை மோதியதால் நெற்றியில் புடைப்புகள் ஏற்பட்ட நிலையில், நாங்கள் அனைவரும் சுற்றித் திரிந்தோம். அதன் பிறகு பீட்டர், மரச்சட்டகத்தால் நிரப்பப்பட்ட ஒரு துணியை, கதவுச் சட்டகத்தில் ஆணியடித்து மாட்டினார். அது கைகொடுக்கிறதா என்று பார்க்கலாம்!
நான் பள்ளிப் பாடங்களை அதிகம் செய்வதில்லை. செப்டம்பர் வரை விடுமுறை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பா எனக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்க விரும்புகிறார். ஆனால் அதற்கு முன்னால் எல்லாப் புத்தகங்களையும் நாங்கள் வாங்க வேண்டும்.
இங்கே எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. பீட்டரின் தலைமுடி இன்று சுத்தம் செய்யப்பட்டது., ஆனால் அதில் ஒன்றும் சிறப்பு இல்லை. திரு. வான் டானும் நானும் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். அம்மா எப்போதும் என்னை ஒரு குழந்தையைப் போன்று நடத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. மற்றபடி, அனைத்தும் நல்லபடியாகவே செல்கிறது. பீட்டர் நல்லமுறையில் மாறிவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. நாள் முழுக்க படுக்கையிலேயே கிடக்கும் ஒரு சோம்பேறி பையன் அவன். தூங்குவதற்கு முன்பாகச் சிறிது தச்சு வேலை செய்ய அவன் தன்னை ஊக்கப்படுத்திக் கொள்கிறான். சரியான முட்டாள்!
அம்மா இன்று காலை இன்னொரு பயங்கரமான பிரசங்கத்தை எனக்கு நிகழ்த்தினார். நாங்கள் எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்க்கிறோம். அப்பா மிகவும் அன்பானவர். அவர் என் மீது கோபம் கொண்டாலும், அது ஒருபோதும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது.
வெளியே நாள் மிகவும் அழகாகவும், கதகதப்பாகவும் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, மாடியில் உள்ள மடிப்புப் படுக்கையில் நாங்கள் ஓய்வெடுப்பதன் மூலம் இந்த வானிலையைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
உனது ஆன்,
செப்டம்பர் 21, 1942 அன்று ஆன் ஃபிராங்கால் சேர்க்கப்பட்ட கருத்து:
திரு.வான் டான் சமீப நாட்களாக என்னிடம் நல்லமுறையில் நடந்து கொள்கிறார். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அது நீடிக்கும்போதே நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
புதன், செப்டம்பர் 2, 1942
அன்புள்ள கிட்டி,
திரு. வான் டானுக்கும், திருமதி. வான் டானுக்கும் இடையே படுபயங்கரமான சண்டை நடந்தது. அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் இப்படிக் கத்தி சண்டையிட்டுக் கொள்வதைக் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என்பதால், இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. இந்த வாக்குவாதம் மிகவும் அற்பமான ஒன்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது, அதற்காக ஒரு வார்த்தையைக்கூட வீணாக்குவது மதிப்புக்குரியதாகத் தெரியவில்லை.
நிச்சயமாக, இருவருக்கு நடுவிலும் சிக்கிக் கொண்ட பீட்டருக்கு இது மிகவும் கடினமான சூழலாக இருக்கும். ஆனால், அவன் மிகவும் சோம்பேறியாக இருப்பதால், பீட்டரை இப்போதெல்லாம் யாரும் திவீரமாக எடுத்துக் கொள்வதில்லை.
நேற்று அவன் தன் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்திற்குப் பதிலாக, நீல நிறத்தில் இருந்ததால் கவலையில் மூழ்கியிருந்தான். இந்த அரிய நிகழ்வு வந்த உடனேயே மறைந்துவிட்டது. இன்று அவன் கழுத்து சுலுக்கி இருப்பதால் தடிமனான துண்டைக் கழுத்தில் சுற்றித் திரிகிறான்.
ஐயா, தற்போது முதுகு வலி குறித்தும் புகார் செய்கிறார். அவனது இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியற்றில் இருக்கும் வலிகளும் இயல்பானவையே. அவனுக்குத் தன் உடல்நிலை குறித்து அதீத பதற்றம் இருக்கிறது. அம்மாவும், திருமதி வான் டானும் பெரியளவில் ஒத்துப் போகவில்லை. இந்த உரசலுக்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். திருமதி வான் டான், எங்கள் பொது லினன் அலமாரியிலிருந்து மூன்று விரிப்புகளைத் தவிர மற்ற அனைத்தையும் அகற்றிவிட்டார். அம்மாவின் விரிப்புகளை இரு குடும்பங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று அவர் கருதுகிறார். அம்மா தனது வழியைப் பின்பற்றியதை அவர் தெரிந்து கொள்ளும்போது அவருக்கு ஒரு மோசமான ஆச்சரியம் காத்திருக்கும்.
மேலும் எங்களுடைய தட்டுகளுக்குப் பதிலாக திருமதி வான் டான் உடைய தட்டுகளை நாங்கள் பயன்படுத்துவதால் அவர் மிகவும் கோபமாக இருக்கிறார். எங்களுடைய தட்டுகளை நாங்கள் என்ன செய்தோம் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அவர் நினைப்பதைவிட அவை மிகவும் பக்கத்தில்தான் இருக்கின்றன. அவை மாடியில் ஓபெக்டா விளம்பரப் பொருட்களுக்குப் பின்னால், அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் மறைந்திருக்கும் காலமெல்லாம், அந்தத் தட்டுகள் அவருடைய பார்வைக்கு அகப்படாமலே இருக்கும். எனக்கு எப்போதும் விபத்துக்கள் ஏற்படுவதால், நேற்று நான் திருமதி வான் டி.யின் சூப் கிண்ணங்களில் ஒன்றை உடைத்து விட்டேன். அவர் கோபத்தில் கத்தினார். ‘உன்னால் இன்னும் கவனமாக இருக்க முடியாதா? அதுதான் என்னுடைய கடைசி கிண்ணம்’ என்றார்.
கிட்டி, தயவுசெய்து நினைவில் கொள், இரண்டு பெண்களும் அருவருப்பான டச்சு மொழியைப் பேசுகிறார்கள் (ஆண்களைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கத் விரும்பவில்லை. அப்படி செய்தால் அவர்கள் மிகவும் அவமானப்படுவார்கள்). அவர்களின் முட்டாள்தனமான முயற்சிகளைக் கேட்டால், நீ விழுந்து புரண்டு சிரிப்பாய். அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை நாங்கள் கைவிட்டுவிட்டோம். ஏனெனில் அவர்களைத் திருத்துவது என்பது எந்த வகையிலும் உதவாது. அம்மாவையோ, திருமதி வான் டானையோ நான் மேற்கோள் காட்டும் போதெல்லாம், அவர்களின் பேச்சை நகலெடுக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, சரியான டச்சு மொழியைப் பயன்படுத்துவேன்.
கடந்த வாரம் எங்களது ஒரே போன்ற சலிப்பான வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டது. இது பீட்டராலும், பெண்களைப் பற்றிய ஒரு புத்தகத்தாலும் நடந்தது. திரு. கிளெய்ன்மென் எங்களுக்கு வழங்கும் அனைத்து புத்தகங்களையும், பீட்டரும் மார்காட்டும் படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் சொல்லி ஆகவேண்டும். ஆனால் பெரியவர்கள் ஒரு விசேஷப் புத்தகத்தைத் தங்களுடனேயே வைத்திருக்க விரும்பினர். இது உடனடியாக பீட்டரின் ஆர்வத்தைத் தூண்டியது. அதில் என்னதான் ரகசியம் இருக்கிறது என அவன் தெரிந்து கொள்ள விரும்பினான். அவனது அம்மா கீழே பேசிக் கொண்டிருந்தபோது அவன் அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, மாடிக்குச் சென்றான். இரண்டு நாட்கள் அனைத்தும் நன்றாகச் சென்றது. அவன் என்ன செய்கிறான் என்பதைத் திருமதி வான் டான் அறிந்திருந்தார். ஆனால் திரு. வான் டான் அதைத் தெரிந்து கொள்ளும் வரை அவர் அமைதியாக இருந்தார். அவர் கடும் கோபம் அடைந்து, அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றுவிட்டார். இருப்பினும், அவர் தனது மகனின் ஆர்வத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார். பீட்டர், தனது தந்தையின் இந்த விரைவான செயலால் சிறிதும் வியப்படையவில்லை. மிகவும் சுவாரஸ்யமான அந்தப் புத்தகத்தின் மீதமுள்ளவற்றைப் படிக்க வழிகளை யோசிக்கத் தொடங்கினான்.
இதற்கிடையில், திருமதி வான் டான் என் அம்மாவிடம் இது குறித்த கருத்தைக் கேட்டார். இந்தக் குறிப்பிட்ட புத்தகம் மார்கோட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என அம்மா நினைக்கவில்லை. ஆனால் மற்ற பெரும்பாலான புத்தகங்களைப் படிக்க அனுமதிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தார்.
‘இதோ பாருங்கள், திருமதி வான் டான்’ அம்மா கூறினார், ‘மார்கோட்டுக்கும் பீட்டருக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. முதலில், மார்கோட் ஒரு பெண். பெண்கள் எப்போதும் ஆண்களைவிட முதிர்ச்சியடைந்தவர்கள். இரண்டாவதாக, அவள் ஏற்கெனவே பல தீவிரமான புத்தகங்களைப் படித்திருக்கிறாள். இனி தடைசெய்யப்படாதவற்றை அவள் தேடுவதில்லை. மூன்றாவதாக, ஒரு சிறந்த பள்ளியில் நான்கு ஆண்டுகள் படித்ததன் விளைவாக, மார்கோட் மிகவும் புத்திசாலித்தனமாகவும் அறிவுபூர்வமாகவும் முன்னேறியவள்.’ என்று கூறினாள்.
திருமதி வான் டானும் அம்மாவின் வார்த்தைகளில் உடன்பட்டார். ஆனால் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்களைச் சிறுவர்கள் படிக்க அனுமதிப்பது கொள்கை அடிப்படையில் தவறு என்று நினைத்தார்.
இதற்கிடையில், பீட்டர் தன்னைப் பற்றியோ அல்லது புத்தகத்தைப் பற்றியோ யாரும் ஆர்வம் காட்டாத ஒரு பொருத்தமான நேரத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். மாலை ஏழு முப்பது மணிக்கு, முழு குடும்பமும் அலுவலகத்தில் வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவன் தனது புதையலை எடுத்துக்கொண்டு மீண்டும் மாடிக்கு திருட்டுத்தனமாகச் சென்றான். அவன் எட்டரை மணிக்குள் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் புத்தகத்தில் மிகவும் லயித்திருந்ததால் நேரத்தை மறந்துவிட்டு படிக்கட்டுகளில் இறங்கிக்கொண்டிருந்தபோது அவனது தந்தை அறைக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து நடந்த காட்சி ஆச்சர்யமான ஒன்றல்ல. ஒரு அறை, ஒரு அடி. அந்தச் சலசலப்புக்கு பிறகு, அந்தப் புத்தகம் மேசையில் கிடந்தது, பீட்டர் மாடியில் இருந்தான்.
குடும்பத்தினர் சாப்பிட வேண்டிய நேரம் வந்தபோது நிலைமை இப்படித்தான் இருந்தது. பீட்டர் மாடியில் இருந்தான். யாரும் அவனைப் பற்றி யோசிக்கவில்லை; அவன் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று காதைத் துளையிடும் ஒரு விசில் சத்தம் கேட்டது. நாங்கள் எங்கள் முட்கரண்டிகளைக் கீழே போட்டுவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். அதிர்ச்சி எங்களது வெளிறிய முகங்களில் தெளிவாகத் தெரிந்தது.
புகைபோக்கி வழியாக பீட்டரின் குரல் கேட்டது: ‘நான் கீழே வரமாட்டேன்!’
திரு. வான் டான் உடனடியாக எழுந்தார், அவரது நாப்கின் தரையில் விழுந்தது, முகத்தில் சிவக்க, ‘எனக்குப் போதும்!’ என்று கத்தினார்.
என்ன நடக்குமோ என்று பயந்து, என் அப்பா அவரது கையைப் பிடித்துக் கொண்டார். இருவரும் மாடிக்குச் சென்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பீட்டர் தனது அறையில் அடைப்பட்டான். நாங்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம்.
திருமதி வான் டான் தனது செல்ல மகனுக்காக ஒரு ரொட்டித் துண்டை எடுத்து வைக்கவிரும்பினார். ஆனால் திரு. வான் டான் பிடிவாதமாக இருந்தார். ‘இந்த நிமிடம் அவன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவன் மாடியில் தூங்க வேண்டியிருக்கும்’ என்று கர்ஜித்தார்.
இரவு உணவு இல்லாமல் இருப்பதே போதுமான தண்டனை என்று நாங்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தோம். பீட்டருக்குச் சளி பிடித்தால் என்ன செய்வது? எங்களால் அங்கு மருத்துவரை அழைக்க முடியாது.
பீட்டர் மன்னிப்பு கேட்கவில்லை. மாடிக்குச் சென்றான். திரு. வான் டான் அப்படியே விட்டுவிட முடிவு செய்தார். இருப்பினும் மறுநாள் காலையில் பீட்டர் தனது படுக்கையில் தூங்கிவிட்டிருந்ததை அவர் கவனித்தார். ஏழு மணிக்கு பீட்டர் மீண்டும் மாடிக்குச் சென்றான். ஆனால் என் அப்பா அவனிடம் சில அன்பான வார்த்தைகளைப் பேசியபிறகு கீழே வர சம்மதித்தான். மூன்று நாட்கள் சோகமான பார்வை, பிடிவாதமான மவுனத்திற்குப் பிறகு, அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
உன் அன்பான, ஆன்
(தொடரும்)