திங்கள், செப்டம்பர் 21, 1942
அன்புள்ள கிட்டி,
இன்று நான் உனக்கு என் வீட்டில் நடந்த பொதுவான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். என் படுக்கைக்கு மேலே ஒரு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில், துப்பாக்கிகள் வெடிப்பதை நான் கேட்கும்போது, ஒரு கம்பியை இழுத்து விளக்கை இயக்க முடியும். ஆனால் இப்போது நான் அதைப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் நாங்கள் எங்கள் ஜன்னலை இரவும் பகலும் சிறிது திறந்து வைத்திருக்கிறோம்.
வான் டான் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள், மரத்தால் ஆன, திரைகளுடன் கூடிய மிகவும் எளிமையான ஒரு உணவுப் பெட்டகத்தை உருவாக்கியுள்ளனர். இதுவரை இந்த அற்புதமான மர அலமாரி பீட்டரின் அறையில் இருந்தது. ஆனால் வெளிக்காற்று வருவதற்காக அந்த அலமாரி மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அது இருந்த இடத்தில், இப்போது ஒரு சுவர் அலமாரி உள்ளது. அந்த அலமாரி, அவனது சிறிய அறையை இன்னும் வசதியாக மாற்றக்கூடும். இருப்பினும் நான் நிச்சயமாக அங்கு தூங்க விரும்பமாட்டேன்.
திருமதி வான் டானின் இம்சை தாங்க முடியவில்லை. மாடியில் இருக்கும்போது, நான் இடைவிடாமல் பேசுவதற்காக என்னைத் தொடர்ந்து திட்டுகிறார். அவரது வார்த்தைகளை என்னைத் தொடர்ந்து தாக்குகின்றன. மேடம் இப்போது ஒரு புதிய தந்திரத்தை கையாள்கிறார்: பானைகளையும் பாத்திரங்களையும் கழுவுவதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். பானையின் அடிப்பகுதியில் சிறிது உணவு மீதமிருந்தால் கூட, அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றுவதற்குப் பதிலாக அதை அப்படியே கெட்டுப்போக விட்டுவிடுகிறார். பின்னர் மதியம் மார்கோட் அனைத்து பாத்திரங்களையும் சுத்தம் செய்வதில் சிக்கிக் கொள்ளும்போது, மேடம், ‘ஐயோ, பாவம் மார்கோட், உனக்கு நிறைய வேலை இருக்கிறது!’ என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் திரு. க்ளீமன் என் வயது பெண்களுக்காக எழுதப்பட்ட இரண்டு புத்தகங்களைக் கொண்டு வருகிறார். ஜூப்டர் ஹியூல் தொடரை படிக்க நான் ஆர்வமாக உள்ளேன். சிஸ்ஸி வான் மார்க்ஸ்வெல்ட்டின் அனைத்து புத்தகங்களையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். நான் தி ஜானியஸ்ட் சம்மரை நான்கு முறை படித்திருக்கிறேன். மேலும் அதில் இருக்கும் அபத்தமான சூழ்நிலைகள் இப்போதும் என்னைச் சிரிக்க வைக்கின்றன.
அப்பாவும் நானும் தற்போது எங்கள் வம்சாவளியை பற்றித் தெரிந்து கொள்கிறோம். அவர் ஒவ்வொரு நபரைப் பற்றியும் ஏதேனும் சொல்கிறார்.
நான் எனது பள்ளிப் பாடத்தைத் தொடங்கிவிட்டேன். பிரெஞ்சுப் பாடத்தில் கடினமாக உழைத்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஒழுங்கற்ற வினைச்சொற்களை என் தலையில் திணித்துக் கொள்கிறேன். ஆனால் பள்ளியில் நான் கற்றுக்கொண்டவற்றில் பெரும்பாலானவற்றை மறந்துவிட்டேன்.
பீட்டர் மிகுந்த தயக்கத்துடன் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டான். சில பள்ளிப் புத்தகங்கள் இப்போதுதான் வந்துள்ளன. நான் வீட்டிலிருந்து ஏராளமான குறிப்பேடுகள், பென்சில்கள், அழிப்பான்கள், லேபிள்களைக் கொண்டு வந்தேன். பிம் (அதுதான் எங்கள் அப்பாவின் செல்லப் பெயர்) அவரது டச்சு பாடங்களுக்கு நான் உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.
பிரெஞ்சிலும், பிற பாடங்களிலும் அவர் செய்யும் உதவிக்கு ஈடாக அவருக்குப் பயிற்சி அளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர் நம்பவேமுடியாத தவறுகளைச் செய்கிறார்!
நான் சில நேரங்களில் வானொலியில் லண்டனில் இருந்து வரும் டச்சு ஒலிபரப்புகளைக் கேட்கிறேன். இளவரசர் பெர்ன்ஹார்ட் சமீபத்தில் ஜனவரி மாதம் இளவரசி ஜூலியானா குழந்தையை எதிர்பார்க்கிறார் என்று அறிவித்தார். இது அற்புதமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அரசக் குடும்பத்தில் நான் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறேன் என்பது இங்கு யாருக்கும் புரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு நான் வீட்டில் பேசுபொருளாக இருந்தேன். நான் ஒன்றும் அறியாத சிறுமி என்று அனைவரும் முடிவு செய்தனர். நான் பதினான்கு அல்லது பதினைந்து வயதில் முதலாம் ஆண்டு மாணவியைப் போல இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லாததால், மறுநாள் என் பள்ளிப் பாடத்தில் மூழ்கிவிட்டேன். எதையும் படிக்க எனக்கு அரிதாகவே அனுமதி உண்டு என்பதும் விவாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில், அம்மா தி ஹவுஸ் ஆஃப் டேவெலின்க் படித்து வருகிறார், நிச்சயமாக நான் அதைப் படிக்க அனுமதிக்கப்படவில்லை (அதை மார்கோட் படித்துவிட்டாலும் கூட). முதலில் நான் ஒரு சகோதரியின் மேதைமையைப் போல அறிவுபூர்வமாக வளர வேண்டும். பின்னர் தத்துவம், உளவியல் மற்றும் உடலியல் பற்றிய எனது அறியாமையைப் பற்றி விவாதித்தோம் (நான் உடனடியாக அகராதியில் இந்த பெரிய வார்த்தைகளைத் தேடினேன்!). உண்மைதான், இந்தப் பாடங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அநேகமாக அடுத்த வருடம் நான் புத்திசாலியாக இருப்பேன்!
குளிர்காலத்தில் அணிய எனக்கு ஒரே ஒரு நீளக் கை உடையும் மூன்று கார்டிகன்களும் மட்டுமே உள்ளன என்ற அதிர்ச்சியூட்டும் முடிவுக்கு வந்துவிட்டேன். வெள்ளை கம்பளி ஸ்வெட்டரை பின்னுவதற்கு அப்பா எனக்கு அனுமதி அளித்துள்ளார். நூல் பெரியளவில் அழகாக ஒன்றும் இல்லை. ஆனால் அது கதகதப்பாக இருக்கும். அதுதான் முக்கியம். எங்களது சில உடைகள் நண்பர்களிடம் இருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக போர் முடியும் வரை எங்களால் அதை வாங்க முடியாது.
திருமதி வான் டான் அறைக்குள் நுழைந்தபோது, நான் அவரைப் பற்றி சில விஷயங்களை எழுதி முடித்தேன். நான் புத்தகத்தைச் சடாரென மூடிவிட்டேன்.
‘ஹேய், ஆன், நான் லேசாகக்கூட பார்க்கக் கூடாதா?’
‘கூடாது, திருமதி வான் டான்’
‘கடைசிப் பக்கத்தையாவது பார்க்கலாமா?’
‘கடைசிப் பக்கத்தைக்கூட பார்க்கக் கூடாது, திருமதி வான் டான்’
கிட்டத்தட்ட என் உயிரே போய்விட்டது. காரணம், அந்தக் குறிப்பிட்ட பக்கத்தில் அவரை பற்றிய மோசமான விளக்கம் இடம்பெற்றிருந்தது.
தினமும் ஏதாவது ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் அவற்றையெல்லாம் எழுத முடியாத அளவுக்கு நான் மிகவும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருக்கிறேன்.
உன் அன்பான ஆன்,
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 1942
அன்புள்ள கிட்டி,
அப்பாவுக்கு எழுபதுகளில் இருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார், அவர் திரு ட்ரெஹர். அவர் ஒரு நோயாளி. ஏழை. காது கேளாதவர். அவருக்கு பயனற்ற துணை போல, அவரது மனைவி. இருபத்தேழு வயதே ஆன அதே அளவு ஏழையானவர். அவரது கைகள், கால்களில் உண்மையான ஆபரணங்களும், போலி ஆபரணங்களும் நிரம்பியிருக்கும். அவை, அவர்கள் வளமாக இருந்த காலத்தின் எச்சங்கள். இந்த ட்ரெஹர் ஏற்கெனவே அப்பாவுக்கு ஒரு பெரிய தொந்தரவாக இருந்தார். அப்பா தொலைபேசியில் இந்த முதியவரைக் கையாண்ட அசாத்திய பொறுமையை நான் எப்போதும் பாராட்டியிருக்கிறேன். நாங்கள் எங்கள் வீட்டில் வசிக்கும்போது, அம்மா ஒரு கிராமபோனை ரிசீவரின் முன் வைக்க அப்பாவுக்கு அறிவுறுத்துவார். அது ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும், ‘ஆம், மிஸ்டர் ட்ரெஹர்’, ‘இல்லை, மிஸ்டர் ட்ரெஹர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கும். ஏனெனில் அந்த முதியவர் அப்பாவின் நீண்ட பதில்களில் ஒரு வார்த்தையைகூடப் புரிந்து கொள்வதில்லை.
இன்று திரு.ட்ரேஹர், அலுவலகத்திற்கு போன் செய்து திரு. கூக்லரை வந்து பார்க்கச் சொன்னார். திரு. கூக்லர் அதற்கான மனநிலையில் இல்லாததால் மீப்பை அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் மீப் அந்தச் சந்திப்பை ரத்து செய்துவிட்டார். திருமதி ட்ரேஹர் அலுவலகத்திற்கு மூன்று முறை தொலைபேசியில் அழைத்தார். ஆனால் மீப் மதியம் முழுவதும் அலுவலத்தில் இல்லை என்று கூறப்பட்டதால், மீப், பெப்பின் குரலில் பேச வேண்டியிருந்தது. அலுவலகத்தின் கீழ் மாடியிலும், வீட்டின் மேல் மாடியிலும், நகைச்சுவையான காட்சியாக இருந்தது. இப்போது ஒவ்வொரு முறை தொலைபேசி ஒலிக்கும்போதும், பெப், ‘அது திருமதி ட்ரேஹர்!’ என்று கூறுகிறார். மீப் சிரித்த உடன், லைனில் மறுமுனையில் உள்ளவர்கள் ஒரு கோபம் கலந்து சிரிப்பை எதிர்கொள்வர். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
இதுதான் உலகிலேயே மிகச்சிறந்த அலுவலகமாக இருக்க வேண்டும். முதலாளிகளும் அலுவலகப் பெண்களும் மிகவும் வேடிக்கையானவர்களாக இருக்கிறார்கள்.
சில மாலைகளில் நான் வான் டான் குடும்பத்தினருடன் சென்று கொஞ்சம் அரட்டை அடிப்பேன். சமீபத்தில் எங்களுடைய உரையாடல் பீட்டரைப் பற்றி இருந்தது. அவன் அடிக்கடி என் கன்னத்தில் தட்டுவான். அது எனக்குப் பிடிக்காது. பீட்டர் என்னை ஒரு சகோதரியைப் போல நேசிப்பதால், அவனை ஒரு சகோதரனைப்போல நேசிக்க நான் எப்போதாவது கற்றுக்கொள்வேனா? என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ‘இல்லை!’ என்று நான் சொன்னேன். ஒருவேளை பீட்டர் கூச்ச சுபாவமுள்ளவன் என்பதால் இப்படி இருக்கலாம். பெண்களுடன் பழகாத சிறுவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
வீட்டின் ஆண்கள் பிரிவு மிகவும் ஆக்கப்பூர்வமானது என்று நான் சொல்ல வேண்டும். ஓபெக்டா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியும், எங்களின் சில பொருட்களை எங்களுக்காக மறைத்து வைத்திருக்கும் நண்பருமான திரு. ப்ரோக்ஸுக்கு ஒரு செய்தியைப் அனுப்ப அவர்கள் போட்ட திட்டத்தைக் கேளுங்கள்! அவர்கள் தெற்கு ஜீலாந்தில் உள்ள ஒரு கடை உரிமையாளருக்கு ஒரு கடிதத்தைத் தட்டச்சு செய்யப் இருந்தார்கள், அவர், ஓபெக்டாவின் மறைமுக வாடிக்கையாளர்களில் ஒருவர். அவரிடம் ஒரு படிவத்தை நிரப்பி அதைச் சுய முகவரியிடப்பட்ட உறையில் திருப்பி அனுப்பச் சொன்னார்கள். தந்தையே உரையில் முகவரியை எழுதினார்.
ஜீலாந்திலிருந்து அந்தக் கடிதம் திரும்பி வந்ததும், படிவத்தை அகற்றி, தந்தை உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் கையால் எழுதப்பட்ட அந்தச் செய்தியை உறைக்குள் வைப்பார்கள். இப்படியாக திரு. ப்ரோக்ஸ் சந்தேகம் எதுவுமின்றி அந்தக் கடிதத்தைப் படிக்க முடியும். பெல்ஜியத்திற்கு அருகில் இருப்பதாலும் (ஒரு கடிதத்தை எல்லையைத் தாண்டி எளிதாகக் கடத்த முடியும்), சிறப்பு அனுமதி இல்லாமல் யாரும் அங்கு பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதாலும் அவர்கள் ஜீலாந்து மாகாணத்தைத் தேர்ந்தெடுத்தனர். திரு. ப்ரோக்ஸ் போன்ற சாதாரண விற்பனையாளருக்கு ஒருபோதும் அங்கு அனுமதி வழங்கப்படாது.
நேற்று அப்பா இன்னொரு விஷயத்தைச் செய்தார். தூக்கத்தில் தடுமாறிய நிலையில் படுக்கைக்குச் சென்றார். அவரது பாதங்கள் ஜில்லென்று இருந்தன. அதனால் நான் அவருக்கு என் சாக்ஸைக் கொடுத்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து அவர் அவற்றைத் தரையில் வீசினார். பின்னர் வெளிச்சம் அவரைத் தொந்தரவு செய்ததால் போர்வையைத் தலைக்கு இழுத்தார். விளக்கு அணைக்கப்பட்டது. அவர் மெதுவாகப் போர்வைகளுக்கு அடியில் இருந்து தலையை வெளியே நீட்டினார். இவை எல்லாம் மிகவும் வேடிக்கையாக இருந்தது. மார்கோட்டை ‘பட்டின்ஸ்கி’ என்று பீட்டர் சொல்வது பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தோம். திடீரென்று அப்பாவின் குரல் ஆழமாக கேட்டது: ’அதற்கு, அவள் பிட்டத்தின் மீது அமர்கிறார் என அர்த்தமா?’ என்றார். மௌஷி என்ற பூனை, நாட்கள் செல்லச் செல்ல என்னிடம் இனிமையாக பழகி வருகிறது. ஆனால் நான் அதைக் கண்டு இன்னும் பயப்படுகிறேன்.
உன் அன்பான ஆன்,