Skip to content
Home » ஆன் ஃபிராங்க் டைரி #7

ஆன் ஃபிராங்க் டைரி #7

ஞாயிறு, செப்டம்பர் 27, 1942

அன்புள்ள கிட்டி,

அம்மாவும் நானும் இன்று பெயரளவில் ஒரு ‘விவாதத்தை’ நடத்தினோம். அதில் எரிச்சலூட்டும் பகுதி என்னவென்றால் நான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்பா எப்போதும் என் மீது அன்பாக இருப்பவர். என்னை நன்றாகப் புரிந்துகொள்பவர். இதுபோன்ற தருணங்களில் அம்மாவை என்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. நான் அவருக்கு அந்நியமானவள் என்பது தெளிவாகத் தெரிகிறது. சாதாரண விஷயங்களைப் பற்றிகூட நான் என்ன நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரியாது.

வேலைக்காரர்களை இந்த நாட்களில் ‘வீட்டு உதவியாளர்கள்’ என்று குறிப்பிட வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். போர் முடிந்ததும், அவர்கள் அப்படித்தான் அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். நான் அப்படிப் பார்க்கவில்லை. உடனே நான் ஓர் எஜமானியைப்போல நடந்து கொள்கிறேன் என்று அவர் சொன்னார். நான் அப்படி நடப்பவள் இல்லை என்றாலும், காற்றில் மணல் கோட்டைகளைக் கட்டுவது அவ்வளவு மோசமான விஷயமாக எனக்குத் தோன்றவில்லை; பிறர் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வரை. எப்படியிருந்தாலும், அப்பாதான் வழக்கமாக எனக்கு ஆதரவாக வருவார். அவர் இல்லாமல் என்னால் இங்கு இருக்கவே முடியாது.

எனக்கும் மார்கோட்டுக்கும் அவ்வளவாக ஒத்துப் போவதில்லை. மேல் மாடியில் இருப்பவர்களிடையே உள்ள கோபம் எங்கள் குடும்பத்தில் ஒருபோதும் இல்லை என்றாலும், அது எனக்கு இனிமையானதாகத் தெரியவில்லை. மார்கோட்டின் குணாதிசயங்களும் அம்மாவின் குணாதிசயங்களும் எனக்கு அந்நியமாக தோன்றுகின்றன. என் சொந்த அம்மாவை விட என் தோழிகளை நான் நன்றாகப் புரிந்துகொள்கிறேன். அது வெட்கக்கேடு இல்லையா?

தொடர்ச்சியாக திருமதி வான் டான் வெறுப்பை உமிழ்கிறார். அவர் தன்னுடைய உடைமைகளை அகற்றி தனியாக பூட்டி வைக்கிறார். வான் டானின் இது போன்ற ஒவ்வொரு செயலுக்கும், அம்மா வெளிப்படையாக பதிலடி கொடுக்காமல் இருப்பது மிகவும் மோசமானது.

வான் டான்களைப்போல பலரும், தங்கள் சொந்தக் குழந்தைகளை வளர்ப்பதில் மட்டுமன்றி, மற்றவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்க உதவுவதிலும் கூடுதல் சந்தோசம் அடைவதாகத் தெரிகிறது. வான் டான்களின் அறிவுரைகளும், அதற்கு எனது காரசாரமான பதிலடிகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. அப்பாவும் அம்மாவும் எப்போதும் எனக்காகப் பரிந்து பேசுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நான் என் வழக்கமான அமைதியுடன் மீண்டும் இந்த பிரச்சினையில் இறங்க முடியாது. நான் குறைவாகப் பேச வேண்டும், என் சொந்த விஷயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும், அடக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பா அவ்வளவு பொறுமையாக இல்லாவிட்டால், என் பெற்றோரின் மிதமான எதிர்பார்ப்புகளை எப்போதாவது பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டிருப்பேன்.

எனக்குப் பிடிக்காத ஒரு காய்கறியை ஒதுக்கிவிட்டு, அதற்கு பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால், வான் டான்ஸ், குறிப்பாக திருமதி வான் டான், நான் எவ்வளவு கெட்டுப்போயிருக்கிறேன் என்று குத்திக் காட்டாமல் இருக்க மாட்டார். இன்னும் கொஞ்சம் காய்கறிகளைச் சாப்பிடு ஆன்,’ என்று அவர் சொல்வார்.

‘பரவாயில்லை மேடம். உருளைக் கிழங்குகளே போதும்’ என்று நான் பதிலளிப்பேன்.

‘காய்கறிகள்தான் உன் உடலுக்கு நல்லது. உன் அம்மாவும் அதைத்தான் சொல்கிறார். இன்னும் கொஞ்சம் சாப்பிடு’ என்று வற்புறுத்துவார். அந்த நேரம் அப்பா தலையிட்டு, எனக்கு பிடிக்காத உணவுகளை நான் மறுப்பதற்கான உரிமையை நிலைநாட்டுவார்.

பின்னர் திருமதி வான் டி. கடும் கோபமடைந்து: ‘நீங்கள் எங்கள் வீட்டில் இருந்திருக்க வேண்டும், அங்கு குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படி வளர்ப்போம். நான் இதை சரியான வளர்ப்பு என்று சொல்லமாட்டேன். ஆன் மிகவும் கெட்டுப் போயிருக்கிறாள். அவள் என் மகளாக இருந்தால்… நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’  என்பார்.

அவருடைய வசைபாடல்கள் எப்போதும் இப்படித்தான் தொடங்கி முடியும்: ‘ஆன் என் மகளாக இருந்தால்…’ நல்லவேளையாக நான் அவருடைய மகளாக இல்லை. ஆனால் குழந்தைகளை வளர்ப்பது பற்றிய பிரசங்கத்தை நேற்று திருமதி வான் டி. முடித்த பிறகு ஒரு மெளனம் நிலவியது. பின்னர் தந்தை பதிலளித்தார், ‘ஆன் மிகவும் நன்றாக வளர்க்கப்பட்டவள் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் அவள் உங்கள் முடிவில்லா பிரசங்கங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்க கற்றுக் கொண்டிருக்கிறாள். காய்கறி விவகாரத்தைப் பொறுத்தவரை, அதை யார் சொல்வது என்று பாருங்கள்’ என்றார்.

திருமதி வான் டி. முழுவதுமாக தோற்கடிக்கப்பட்டார். அப்பா அப்படிக் குறிப்பிட்டதற்கு காரணம், திருமதி வான் டானால் மாலை நேரத்தில் பீன்ஸையோ, முட்டைக்கோஸையோ சாப்பிட முடியாது., ஏனெனில் அவை அவருக்கு ‘வாயு’ பிரச்னைகளை ஏற்படுத்தின. நானும் இதையே சொல்ல முடியும். இனியாவது அவர் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்துவார் என்று நம்புகிறேன். திருமதி வான் டான் எவ்வளவு விரைவாக முகம் சுளிக்கிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அது அவரை முடிவில்லாமல் ரகசியமாக எரிச்சலூட்டுகிறது.

உன் அன்பான ஆன்,

0

திங்கள், செப்டம்பர் 28, 1942

அன்புள்ள கிட்டி,

நான் இன்னும் முடிக்கவே இல்லையென்றாலும்கூட நேற்று நான் நிறுத்த வேண்டியிருந்தது. எங்கள் மோதல்களில் இன்னொரு விஷயத்தைப் பற்றி நான் உனக்கு சொல்ல ஆவலாக இருக்கிறேன். ஆனால் நான் சொல்வதற்கு முன்பு மற்றொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன்: பெரியவர்கள் இவ்வளவு எளிதாக, அடிக்கடி இதுபோன்ற அற்ப விஷயங்களுக்காகச் சண்டையிடுவது விசித்திரமானது என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற அற்ப சச்சரவுகள் எல்லாம் குழந்தைகள் செய்வது என அவர்கள் கடந்து வந்திருப்பார்கள் என்று நான் இப்போதுவரை நினைத்திருந்தேன். சில நேரங்களில் ‘உண்மையான’ சண்டைக்கு ஒரு காரணம் இருக்கும். ஆனால் இங்கே நடக்கும் வாய்மொழிப் பரிமாற்றங்கள் வெறும் அற்ப சச்சரவுகள்தான். இந்தச் சண்டைகள் எல்லாம் அன்றாட நிகழ்வுகள் என்ற உண்மையை நான் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட அனைத்து விவாதங்களிலும் நான் கருப்பொருளாக இருக்கும் வரை அப்படி ஒருபோதும் நினைக்க மாட்டேன் (அவர்கள் இவற்றை ‘சண்டைகள்’ என்று சொல்வதற்கு பதிலாக ‘விவாதங்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஜெர்மானியர்களுக்கு இவற்றுக்கு இடையிலான வித்தியாசம் தெரியாது!) அவர்கள் எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்கள். அதாவது என்னைப் பற்றிய அனைத்தையும். என் நடத்தை, எனது குணநலன், என் பழக்கவழக்கங்கள்; என் தலை முதல் கால் வரை ஒவ்வொரு அங்குலமும் வதந்திகள், விவாதங்களின் மையப்பொருளாக இருக்கின்றன. கடுமையான வார்த்தைகளும் கூச்சல்களும் என்னை நோக்கி தொடர்ந்து வீசப்படுகின்றன. இருப்பினும் எனக்கு அது முழுவதுமாக பரிட்சயப்படவில்லை. நான் சிரித்துக்கொண்டே அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாது! அவர்கள் ஏற்படுத்தும் அவமானங்களை சகித்துக் கொள்ள எனக்கு எந்தக் காரணமும் இல்லை. ஆன் ஃபிராங்க் நேற்று பிறந்தவள் அல்ல என்பதை நான் அவர்களுக்குக் காண்பிப்பேன். எனது நடத்தையைவிட தங்களது சொந்த நடத்தையில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் அவர்களுக்குப் புரிய வைக்கும்போது அவர்கள் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள். அவர்கள் அப்படி நடந்து கொள்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? இது காட்டுமிராண்டித்தனம்.

வான் டான்ஸ் சொல்வதுபோல் நான் உண்மையில் மோசமான நடத்தை கொண்டவளா? தலைக்கனம் பிடித்தவளா? பிடிவாதக்காரியா? அழுத்தமானவளா? முட்டாளா, சோம்பேறியா? இன்னும் என்னென்னவோவா? இல்லை, நிச்சயமாக இல்லை. என்னிடமும் குறைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்கள் அளவுக்கு மீறி பேசுகின்றனர். அவர்கள் என்னைத் திட்டும்போதும், கேலி செய்யும்போதும் நான் எப்படிக் கோபப்படுவேன் என்பதை நீ பார்க்க வேண்டும் கிட்டி. அடக்கி வைக்கும் கோபம் வெடித்து வெளியே வர நீண்டநேரம் ஆகாது.

சரி, போதும். என்னுடைய சண்டைகளால் நான் உன்னை அதிகம் சலிப்படைய செய்துவிட்டேன். எனினும் ஒரு சுவாரஸ்யமான இரவு நேர உணவு உரையாடல் குறித்து என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

எப்படியோ பிம்மின் தீவிரமான கூச்ச சுபாவம் பற்றிய விஷயத்திற்கு நாங்கள் வந்தடைந்தோம். அவனது பணிவு என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. அதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது. திடீரென, ஒவ்வொரு உரையாடலிலும் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியத்தை உணரும் திருமதி வான் டான், ‘நான் மிகவும் அடக்கமானவள். என் கணவரைவிட கூச்ச சுபாவம் கொண்டவளும் கூட!’ என்று குறிப்பிட்டார். இவ்வளவு அபத்தமான எதையும் நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த வாக்கியம் அடக்கம் என்ற சொல்லுக்கு அவர் தகுதியானவர் இல்லை என்பதை தெளிவாக விளக்குகிறது!

‘என் கணவரைவிட அதிகமாக’ என்பதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த திரு. வான் டான், அமைதியாகப் பதிலளித்தார், ‘அடக்கத்தையும் கூச்ச சுபாவத்தையும் நான் விரும்பவில்லை. நாம் வற்புறுத்துபவராக இருப்பதன் மூலமே இன்னும் நிறைய பெறமுடியும் என்பதே என் அனுபவம்!’ என்று கூறிய அவர் என்னிடம் திரும்பி, ‘அடக்கமாகவும் கூச்சத்துடனும் இருக்க வேண்டாம், ஆன். அது உன்னை எங்கும் அழைத்துச் செல்லாது.’ என்றார்

அம்மா இந்தக் கண்ணோட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும் திருமதி வான் டான் தன் கருத்து கூறும் வைபோவத்தை நிறுத்தவில்லை. இந்த முறை, என்னிடம் நேரடியாகப் பேசுவதற்குப் பதிலாக, என் பெற்றோரிடம் திரும்பி, ‘நீங்கள் அதை ஆனிடம் சொல்ல உங்களுக்கு வாழ்க்கை பற்றிய ஒரு விசித்திரமான பார்வை இருக்க வேண்டும். நான் வளரும்போது சூழல் வித்தியாசமாக இருந்தது. இப்போதும் எதுவும் பெரிதாக மாறவில்லை என்றாலும் உங்கள் நவீன குடும்பம் அப்படி இல்லை!’ என்றார்.

இது அம்மாவின் நவீன குழந்தை வளர்ப்பு முறை மீதான நேரடித் தாக்குதலாக இருந்தது. திருமதி வான் டான் கோபமாக இருந்ததால், அவரது முகம் கடுமையாகச் சிவந்தது. அதிகம் முகம் சிவக்கும் நபர்கள், கோபமடையும்போது அதிகமாகக்  கொதித்தெழுகிறார்கள். ஆனாலும் தங்கள் எதிரிகளிடம் விரைவாகத் தோற்கிறார்கள்.

அதிகம் பதற்றப்படாத என் அம்மா, இப்போது அந்தப் பிரச்னையை விரைவில் பேசி முடிக்க விரும்பியதால், பதிலளிப்பதற்கு முன் ஒரு கணம் யோசித்தார். ‘சரி, திருமதி வான் டான், ஒரு நபர் அதிக அடக்கம் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். என் கணவர், மார்கோட், பீட்டர் ஆகியோர் அடக்கமானவர்கள். ஆனால் உங்கள் கணவர், ஆன் மற்றும் நான், முற்றிலும் நேர்மாறாக இல்லாவிட்டாலும், எங்களை யாரும் ஆட்டிப்படைக்க நாங்கள் அனுமதிப்பதில்லை’ என்றார்

திருமதி வான் டான்: ‘ஓ, ஆனால் திருமதி ஃபிராங்க், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை! உண்மையிலேயே, நான் மிகவும் அடக்கமானவள். ஒதுங்கிச் செல்பவள். நான் பிடிவாதமானவர் என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும்?’

இதற்கு அம்மா: ‘நீங்கள் பிடிவாதமானவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களை ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மை கொண்டவர் என்று யாரும் வர்ணிக்க மாட்டார்கள்.’

திருமதி வான் டி.: ‘நான் எந்த விதத்தில் பிடிவாதகாரி என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்! இங்கு என்னை நான் பார்த்துக்கொள்ளவில்லை என்றால், வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். நான் விரைவில் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். ஆனால் அதற்காக நான் உங்கள் கணவரைப்போல அடக்கமான, ஒதுங்கிச் செல்பவர் அல்ல என்று அர்த்தமில்லை.’

இந்த அபத்தமான பேச்சைக் கேட்டு அம்மா சிரிக்க வேண்டியதாயிற்று. இது திருமதி வான் டானுக்கு எரிச்சலூட்டியது. இயல்பிலேயே விவாதத் திறமை இல்லாததால், அவர் தனது மகத்தான விளக்கத்தை ஜெர்மன் மற்றும் டச்சு மொழிகளின் கலவையாகத் தொடர்ந்தார். எனினும் இறுதியில் தனது சொந்த வார்த்தைகளில் சிக்கித் தடுமாறி, இறுதியாகத் தனது நாற்காலியில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேற எத்தனித்தார். அப்போது அவரது பார்வை என் மீது விழுந்தது. நீ அவரை பார்த்திருக்க வேண்டும்! அதிர்ஷ்டவசமாக, திருமதி வான் டி. திரும்பிப் பார்த்தபோது, நான் பரிதாபமும் கிண்டலும் கலந்த பாவனையில் என் தலையை ஆட்டினேன். நான் வேண்டுமென்றே செய்யவில்லை, ஆனால் அவரது ஆவேசமான பேச்சை நான் கூர்ந்து கவனித்ததால், எனது எதிர்வினை முற்றிலும் தன்னிச்சையாக இருந்தது. திருமதி வான் டி. சட்டென்று திரும்பி, என்னைக் கடுமையாகப் பார்த்து, ஜெர்மானிய மொழியில், கேவலமான, அநாகரீகமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். அச்சு அசலாக கொழுத்த, சிவந்த முகம் கொண்ட ஒரு மீன் விற்கும் பெண்ணைப்போல அவருடைய செய்கை இருந்தது. எனக்கு அதைப் பார்ப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எனக்கு வரையத் தெரிந்திருந்தால், அவர் இருந்த அந்த நிலையைக் ஓவியமாக வரைந்திருக்க விரும்புவேன். அவர் எனக்கு நகைச்சுவையாகத் தெரிந்தார். ஆனால் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்: சண்டைக்குப் பிறகே ஒருவரை நாம் உண்மையில் அறிந்துகொள்ள முடியும். அப்போதுதான் அவர்களுடைய உண்மையான குணாதிசயத்தை நாம் தீர்மானிக்க முடியும்.

உன் அன்பான ஆன்,

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *