செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 29, 1942
அன்புள்ள கிட்டி,
நீ தலைமறைவாக இருக்கும்போது உடனக்கு நடக்கும் விசித்திரமான விஷயங்கள் என்ன? இதை கற்பனை செய்து பார். எங்களிடம் குளியல் தொட்டி இல்லாததால், நாங்கள் கழுவும் தொட்டியில்தான் எங்கள் உடலைக் கழுவுகிறோம். மேலும் அலுவலகத்தில் (நான் சொல்வது ஒட்டுமொத்த கீழ் தளமும்) வெந்நீர் மட்டுமே இருப்பதால், இந்தச் சிறந்த வாய்ப்பை நாங்கள் ஏழு பேரும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொள்கிறோம். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தம்மைக் கழுவிக்கொள்வதற்கு வெவ்வேறு இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பீட்டர் அலுவலகச் சமையலறையில் குளிக்கிறான். குளிப்பதற்கான நேரம் வரும்போது, அவன் எங்கள் ஒவ்வொருவரிடமும் வந்து அடுத்த அரை மணி நேரத்திற்கு சமையலறை பக்கம் நடக்கக்கூடாது என்று அறிவிக்கிறான். இந்த நடவடிக்கை போதுமானது என்று அவன் கருதுகிறான். திரு. வான் டி.மாடிக்கு குளிக்கச் செல்கிறார். அந்தப் படிக்கட்டுகளில் வெந்நீரை சுமந்து செல்வதில் உள்ள சிரமத்தை விட தன் சொந்த அறையின் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக அவர் கருதுகிறார். திருமதி. வான் டி. இன்னும் குளிக்கவில்லை; எது சிறந்த இடம் என்று அவர் காத்திருக்கிறார். அப்பா தனி அலுவலகத்தில் குளிக்கிறார். அம்மா சமையலறையில் உள்ள நெருப்புத் திரைக்குப் பின்னால் குளிக்கிறார். அதே நேரத்தில் மார்கோட்டும் நானும் முன் அலுவலகத்தை எங்கள் குளியல் மைதானமாக அறிவித்துள்ளோம். சனிக்கிழமை மதியம் திரைச்சீலைகள் மூடப்படும் என்பதால், நாங்கள் இருட்டில் குளிக்க வேண்டி இருக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று முடிவு செய்து, மிகவும் வசதியான குளியலறைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். விசாலமான அலுவலகக் குளியலறையில் குளிக்கும் தொட்டியை அமைக்கும் யோசனையை எனக்கு வழங்கியது பீட்டர்தான். அங்கு நான் உட்காரலாம். விளக்கை இயக்கலாம். கதவைப் பூட்டலாம். யாருடைய உதவியும் இல்லாமல் தண்ணீரை ஊற்றலாம். எந்தப் பயமும் இல்லாமல் இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக எனது அழகான குளியலறையைப் பயன்படுத்தினேன். இது விசித்திரமாகத் தோன்றினாலும், வேறு எந்த இடத்தையும்விட மிகவும் பிடித்திருந்தது. புதன்கிழமை பிளம்பர் கீழே வேலை செய்து கொண்டிருந்தார். குளிர்காலத்தில் குழாய்கள் உறைந்து போகாமல் இருக்க அலுவலகக் குளியலறையிலிருந்து தண்ணீர் குழாய்கள் மற்றும் வடிகால்களை ஹால்வேக்கு நகர்த்தினார். பிளம்பர் வருகை இனியதாக இல்லை. பகலில் தண்ணீர் இயக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்லாமல், குளியலறையிலும் அனுமதி இல்லாமல் இருந்தது. இந்தப் பிரச்னையை நாங்கள் எப்படிக் கையாண்டோம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; இதைப் பற்றிப் பேசுவது அநாகரீகமாகத் தோன்றலாம். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் நான் அவ்வளவு கடுமையானவள் அல்ல. நாங்கள் இங்கு வந்த நாளில், அப்பாவும் நானும் ஒரு சேம்பர் பானையைப் புதுப்பித்தோம். இதற்காக ஒரு கேனிங் ஜாடியைத் தியாகம் செய்தோம். பிளம்பர் வருகையின்போது, பகல் நேரத்தில் கேனிங் ஜாடிகள் எங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்தப்பட்டன. என்னைப் பொறுத்தவரை, நாள் முழுவதும் அமைதியாக உட்கார்ந்து ஒரு வார்த்தைகூட பேசாமல் இருப்பதைவிட சிரமம் இல்லை. சாதாரண நாட்களில் முணுமுணுப்பாகப் பேச வேண்டும்; பேசாமலோ அல்லது நகராமலோ இருப்பது மிகவும் மோசமானது. மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்த பிறகு, என் முதுகு கடுமையாக வலித்தது. இரவு நேர உடற்பயிற்சிகள் எனக்கு உதவின.
உன் அன்பான ஆன்.
0
வியாழன், அக்டோபர் 1, 1942
அன்புள்ள கிட்டி,
நேற்று எனக்குக் கடுமையான பய உணர்வு ஏற்பட்டது. இரவு எட்டு மணிக்கு அழைப்பு மணி திடீரென ஒலித்தது. யாரோ ஒருவர் எங்களை அழைத்து செல்ல வருகிறார்கள் என்பது மட்டுமே என் மனதில் தோன்றியது. நான் யாரைச் சொல்கிறேன் என்று உனக்குத் தெரியும். ஆனால் அது யாரேனும் குறுப்புக்காரச் சிறுவர்களாகவோ அல்லது தபால்காரராகவோ இருக்கும் என்று அனைவரும் உறுதியளித்த போதுதான் நான் அமைதியானேன்.
இங்குள்ள நாட்கள் மிகவும் அமைதியாக இருக்கின்றன. யூத மருந்தாளுநரும் வேதியியலாளருமான திரு. லெவின்சோன், சமையலறையில் திரு. குக்லரிடம் வேலை செய்கிறார். முழுக் கட்டடத்தையும் அவர் நன்கு அறிந்திருப்பதால், முன்பு ஆய்வகமாக இருந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்பதை அவர் மூளைக்குள் ஏற்றிக் கொள்வார் என்று நாங்கள் தொடர்ந்து பயந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் குட்டி எலிகளைப் போல அமைதியாக இருக்கிறோம்.
திருமதி வான் டானின் பிறந்தநாள் கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி வந்தது. நாங்கள் அதைப் பெரிய அளவில் கொண்டாடவில்லை என்றாலும், அவருக்குப் பூக்கள், எளிய பரிசுகள் மற்றும் நல்ல உணவுகள் கிடைத்தன. திருமதி வான் டான் பற்றிப் பேசும்போது, அப்பாவிடம் அவர் வழிய முயற்சிப்பது எனக்கு எப்போதும் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று சொல்ல விரும்புகிறேன். அவர் அப்பாவின் கன்னத்திலும் தலையிலும் தட்டுகிறார். தனது ஸ்கர்ட்டை மேலே உயர்த்துகிறார். பிம்மின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் நகைச்சுவையான கருத்துக்களைச் சொல்கிறார். அதிர்ஷ்டவசமாக, அவரை அழகாகவோ அல்லது வசீகரமாகவோ பிம் பார்க்கவில்லை என்பதால், அவர் வழிவதற்கு பிம் பதிலளிப்பதில்லை. உனக்கே தெரியும், எனக்குப் பொறாமை அதிகம். அவருடைய நடத்தையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அம்மா திரு. வான் டி.யிடம் அப்படி நடந்து கொள்வதில்லை. அதை நான் திருமதி வான் டி.யிடம் அவரது முகத்திற்கு நேராகவே சொன்னேன்.
அவ்வப்போது பீட்டர் மிகவும் வேடிக்கையாக நடந்து கொள்வான். அவனுக்கும் எனக்கும் பொதுவான விஷயம் ஒன்று உள்ளது: நாங்கள் அணிய விரும்பும் உடை அனைவரையும் சிரிக்க வைக்கிறது. ஒரு மாலையில், பீட்டர் அவனது தாயின் இறுக்கமான உடைகளில் ஒன்றையும், நான் அவனது சூட்டையும் அணிந்துகொண்டோம். அவன் ஒரு தொப்பி அணிந்திருந்தான். நானும் ஒரு தொப்பி அணிந்திருந்தேன். பெரியவர்கள் எங்களைப் பார்த்து பலமாகச் சிரித்தனர். நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தோம்.
பெப், மார்கோட்டுக்கும் எனக்கும் புதிய பாவாடைகளை வாங்கினார். அத்துடன் என்னை, மார்கோட்டை, பீட்டரை ஒரு தொலைதூர சுருக்கெழுத்துப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அடுத்த ஆண்டு இதே நேரத்தில் நாங்கள் சுருக்கெழுத்தில் தேறி இருப்போம். எப்படியிருந்தாலும், அது போன்ற ஒரு ரகசிய குறியீட்டை எழுதக் கற்றுக்கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.
என் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. அதனால் என்னால் எந்த இஸ்திரி வேலையும் செய்ய முடியாது. என்ன அதிர்ஷ்டம்! மார்கோட் தனக்குப் பொருத்தமான அளவுக்குச் சாப்பிடாததால், மிஸ்டர் வான் டான் என்னை மேஜையில் அவருக்கு அருகில் உட்கார வைக்க விரும்புகிறார். நல்லதுதான். எனக்கு மாற்றங்கள் பிடிக்கும். எப்போதும் ஒரு சிறிய கருப்புப் பூனை முற்றத்தில் சுற்றித் திரிகிறது, அது என் அன்பான மூர்ட்ஜேவை நினைவூட்டுகிறது. இந்த மாற்றத்தை நான் வரவேற்கும் மற்றொரு காரணம், அம்மா எப்போதும் என்னைப் பார்த்து, குறிப்பாக மேஜையில், சீறிப்பாய்வதுதான். இப்போது மார்கோட்டும் அதன் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். ஏனென்றால் அம்மா அவளுக்கு இதுபோன்ற கிண்டலான வார்த்தைகளைச் சொல்வதில்லை. அந்த யோக்கிய சிகாமணிக்கு அப்படி நடப்பதே இல்லை. இப்போதெல்லாம் நான் யோக்கிய சிகாமணி என்று மார்கோட்டைக் கிண்டல் செய்கிறேன். அவள் அதை வெறுக்கிறாள். அது அவளுக்கு இவ்வளவு நல்லொழுக்கத்துடன் இருக்கக்கூடாது என்பதைக் கற்பிக்கலாம். அவள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.
விடைபெறுகிறேன், ஆன்.
0
சனிக்கிழமை, அக்டோபர் 3, 1942
அன்புள்ள கிட்டி,
நேற்று, நான் திரு. வான் டானுக்குப் பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்ததை வைத்து எல்லோரும் என்னைக் கிண்டல் செய்தனர். ‘இந்த வயதில் நீ செய்வது அதிர்ச்சி!’ என்ற வகையில் பல கருத்துகளைக் கூறினர். நிச்சயமாக இது முட்டாளதனமான ஒன்று. அவர்கள் நினைக்கும் விதத்தில் திரு. வான் டானுடன் நான் ஒருபோதும் படுத்து உறங்க விரும்பமாட்டேன். நேற்று எனக்கும் அம்மாவுக்கும் இடையே மீண்டும் ஒரு சண்டை வந்தது. அவர் என் எல்லாத் தவறுகளையும் அப்பாவிடம் சொல்லி அழ ஆரம்பித்தார். அது எனக்கும் அழுகையை வரவழைத்தது. எனக்கு ஏற்கெனவே தலைவலி வேறு அவ்வளவு மோசமாக இருந்தது. நான் அம்மாவைவிட உங்களைத்தான் அதிகமாக நேசிக்கிறேன் என்று கடைசியில் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர் இது ஒரு தற்காலிக நிலைதான் என்று பதிலளித்தார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. என்னால் அம்மாவைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. எல்லா நேரத்திலும் அவரிடம் படபடவெனப் பேசாமல் இருக்கவும், அமைதியாக இருக்கவும் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்குப் பதிலாக அவர் முகத்தில் ஒரு அறை விடவே நான் விரும்புகிறேன். ஏன் எனக்கு அவர் மீது இவ்வளவு மோசமான வெறுப்பு வந்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அல்லது தலைவலி என்றால், நான் தானாக முன்வந்து அவருக்கு உதவ வேண்டும் என்று அப்பா சொல்கிறார். ஆனால் நான் செய்யப்போவதில்லை. ஏனென்றால் எனக்கு அவர் மீது அன்பு இல்லை. அதைச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அம்மா இறந்து போவதைப் பற்றி என்னால் கற்பனை செய்ய முடியும். ஆனால் அப்பாவின் மரணம் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. இது என்னிடம் உள்ள மிகக் கொடுமையான குணம்தான். ஆனால் நான் அப்படித்தான் உணர்கிறேன். அம்மா இதை ஒருபோதும் படிக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
சமீப காலமாக வயது வந்தோருக்கான புத்தகங்களை அதிகமாகப் படிக்க எனக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. நிக்கோ வான் ஸுக்டெலென் எழுதிய ‘ஈவாவின் இளமை’ (Eva’s Youth) தற்போது என்னை அதிகம் கவர்ந்துள்ளது. இதற்கும் டீனேஜ் பெண்களுக்கான புத்தகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. குழந்தைகள் மரத்தில் ஆப்பிள்களைப் போல வளர்கிறார்கள் என்றும், அவை பழுத்ததும் நாரைகள் கொத்தி எடுத்து வந்து அம்மாக்களிடம் கொடுக்கும் என்றும் ஈவா நினைத்தாள். ஆனால் அவளுடைய தோழியின் பூனை குட்டிகள் ஈன்றதைக் கண்ட ஈவா, அவை பூனைக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்த்ததால், பூனைகள் முட்டை இட்டு, கோழிகளைப்போல அடைகாக்கும் என்றும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் அம்மாக்களும் மாடிக்கு சென்று ஒரு முட்டை இட்டு அதன் மீது அடைகாப்பார்கள் என்றும் நினைத்தாள். ஒரு கட்டத்தில், ஈவாவிற்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று தோன்றியது. அவள் ஒரு கம்பளித் துண்டைத் தரையில் விரித்து, முட்டை அதில் விழும்படி செய்து, குந்திக்கொண்டு கஷ்டப்பட்டு முக்க ஆரம்பித்தாள். கொக்கரித்தாள். ஆனால் முட்டை எதுவும் வெளியே வரவில்லை. கடைசியில், அவள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த பிறகு, ஒன்று வெளியே வந்தது. ஆனால் அது முட்டைக்குப் பதிலாக ஒரு சாசேஜ். ஈவா வெட்கப்பட்டாள். தனக்கு ஏதோ நோய் என்று நினைத்தாள். வேடிக்கையாக இருக்கிறது, இல்லையா? ‘ஈவாவின் இளமை’யில், பெண்கள் தெருவில் தங்கள் உடல்களை விற்று நிறையப் பணம் ஈட்டுவதைப் பற்றிய பகுதிகளும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு ஆணின் முன் நிற்பதற்கு நான் அவமானப்படுவேன். மேலும், அதில் ஈவாவின் மாதவிடாய் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனக்கு மாதவிடாய் வரவேண்டும் என்று ஏங்குகிறேன். அப்போது நான் உண்மையில் பெரியவளாகிவிடுவேன். அப்பா என் டைரியை பறிமுதல் செய்வதாக மிரட்டுகிறார். இது எவ்வளவு பயங்கரமான விஷயம்! இனிமேல், நான் அதை மறைத்து வைக்கப் போகிறேன்.
ஆன் ஃப்ராங்க்.

