Skip to content
Home » அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’, நாலடி இரண்டடி கற்றவனிடத்து வாயடி கையடி அடிக்காதே’ ஆகிய இரு சொற்றொடர்களில் ‘நால்’ என்பது நாலடியாரையும், ‘இரண்டு’ என்பது திருக்குறளையும் குறிக்கும். ஈரடி குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் என்பதால் ‘திருக்குறள்’ என்றும், நாலடி வெண்பாக்களால் ஆகிய நூல் என்பதால் ‘நாலடியார்’ என்றும் அவை அழைக்கப்படுகின்றன. நானூறு பாக்களைக் கொண்டதால் ‘நாலடி நானூறு’ என்றும் ‘வேளாண் வேதம்’ என்றும் ‘ஆர்’ விகுதி கூட்டப்பட்டுச் சிறப்பாக ‘நாலடியார்’ என்றும் வழங்கப்படுகிறது. ஈரடிகளால் சுருங்கச் சொல்லித் திருக்குறள் விளக்கும். நாலடிகளால் புரியும்படி, விரிவாக நாலடியார் கூறும்.

வடநாட்டில் ஒரு முறை பெரும் பஞ்சம் தலைவிரித்தாடவே, சமண முனிவர்கள் எண்ணாயிரவர் பாண்டிய நாட்டில் தஞ்சம் புகுந்தனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இல்லமும் வழங்க, இங்கேயே தங்கிவிட்டனர். தமிழை ஓதி உணர்ந்து சான்றோர்களாகவும் திகழ்ந்தனர். சில பல ஆண்டுகள் கழித்து வடநாட்டுப் பஞ்சம் நீங்கியதாகச் செய்தி வரவே, சமண முனிவர்கள் சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்தனர்.

பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியிடம் விவரத்தைத் தெரிவித்து, ஊர் திரும்ப அவனது உத்தரவுக்காகக் காத்திருந்தனர். ஆனால் பாண்டியனோ சமணர்களைப் பிரிய மனமின்றி அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தினான். வேறு வழியின்றி எண்ணாயிரம் சமண முனிவர்களும் தலா ஒரு பாடலாக 8000 பாடல்கள் எழுதினர். அவற்றைத் தமிழுக்கும், பாண்டியனுக்கும் தம் காணிக்கை என்ற குறிப்புடன், அவரவர் இருக்கைகளின் கீழே வைத்துவிட்டு, யாரும் அறியா வண்ணம் பாண்டிய நாட்டை விட்டு அகன்றனர்.

தனது அன்பைப் புரிந்து கொள்ளாமல் சமணர்கள் வெளியேறிய செய்தி அறிந்து பாண்டியன் மிகவும் வருந்தினான். அவர்களே போன பிறகு, அவர்கள் எழுதிய பாடல்கள் மட்டும் எதற்கு என்ற கோபத்தில், பாடல்கள் எழுதப்பட்ட ஏடுகளை வைகை ஆற்றிலே வீசி எறிய ஆணையிட்டான். எண்ணாயிரம் ஏடுகளில் நானூறு ஏடுகள் வைகை வெள்ளத்தை எதிர்த்துக் கரை ஒதுங்கின. மீதம் அனைத்தும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தப்பிய நானூறு ஏடுகளும் இறைவன் சித்தம் போலுமென மன்னன் மகிழ்ந்தான். இவையே பின்னாளில் நாலடி நானூறாகத் தொகுக்கப்பட்டு, பேணிப் போற்றப்பட்டன.

நாலடியார் தோன்றியதை விளக்கும் பழந்தமிழ்ப் பாடல்கள் பின்வருமாறு:

மன்னன் வழுதியர்கோன் வையைப் பேராற்றின்கண்
எண்ணி இருநான்கோடு ஆயிரவர் – நண்ணி
எழுதியிடும் ஏட்டுக்குள் ஏடெதிரே ஏறும்
பழுதிலா நாலடியைப் பார்.

வெள்ளாண் மரபுக்கு வேதம் எனச்சான்றோர்
எல்லோரும் கூடி எடுத்துரைத்த – சொல்லாரும்
நாலடி நானூறும் நன்கு இனிதா என்மனத்தே
சீலமுடன் நிற்க தெளிந்து.

நாலடியார் பிறந்த கதை எப்படி இருப்பினும், அது சிந்திக்கத் தக்க உயரிய கருத்துக்களைக் கொண்டவை. இதைச் சிறந்த நூலென இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் போற்றி உள்ளனர். செல்வச் செழிப்பும், வளமும் நிறைந்த சங்க காலத்தில், கள் அருந்துதல், புலால் உண்ணல், பரத்தையர் உறவு ஆகியவை பரவலாக நிலவின. இதைக் கண்ட சமணர்கள் அவற்றைக் கண்டித்துப் பாடல்கள் புனைந்தனர். அற வழியில் மக்கள் வாழ நீதி போதனைகளை உரைத்தனர். தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவியிருந்த சமண சமயம், காலப்போக்கில் மறைந்து போனாலும், அவ்வழி வந்த சமணர்கள் இயற்றிய நாலடி நானூறு என்னும் இந்நூல், தமிழர் வாழ்வோடு கலந்து நிலை பெற்று விட்டது.

சொற்செறிவும், நடைச்சிறப்பும், பொருள் நுணுக்கமும், ஆழ்ந்த கருத்தும் பொதிந்துள்ள இந்த நூலை 3 பால்கள், 11 இயல்கள், 40 அதிகாரங்கள் என முறைமை செய்து உரையும் கண்டவர் பதுமனார் ஆவார். தருமர் மதிவரர் உள்பட இன்னும் சிலரும் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். ஜி.யூ. போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

‘அறம்’ பற்றிக் கூறும் செய்யுட்கள் அதிகாரத்துக்கு 10 செய்யுட்கள் வீதம் 13 அதிகாரங்களாக மொத்தம் 130 செய்யுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 13 அதிகாரங்களுள் முதல் 7 துறவற இயலையும், மீதி 6 இல்லற இயலையும் கூறும். விழுமிய சொல்லுடன், கெழுமிய பொருளுடன், செறிவு தெளிவு குணங்களுடன், தன்மை, நவிற்சி, உவமை உள்ளிட்ட அணிகளுடன், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கையும் நன்கு உரைக்கும் நூலாகும்.

‘அறம்’ என்னும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தர்மம்’ என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் ‘அறம்’ ஆகும். ‘அறம்’ என்னும் சொல்லின் மற்றொரு அர்த்தம் ‘அறம் பாடுதல்’. அதாவது கொடுமையானவர்களைக் கடுமையான சொற்களால் வசை பாடுவதை அறம் பாடுதல் எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்க அது ‘பக்தி’ மொழியாகவும் ‘நீதி’ மொழியாகவும் இருப்பதுதான்.

உயிர்கள் உய்வதற்கான உறுதியை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தருகின்றன. இதில் வீடு என்பது முக்தி / சொர்க்கம். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றுள் ‘இம்மை, மறுமை மற்றும் வீடு பேறு’ ஆகிய மூன்றையும் தருவது ‘அறம்’ ஆகும். ‘இம்மை மற்றும் மறுமை’ ஆகிய இரண்டைத் தருவது ‘பொருள்’ ஆகும். ‘இம்மை’ ஒன்றை மட்டுமே தருவது ‘இன்பம்’ ஆகும். எனவேதான் மூன்றையும் தரும் ‘அறம்’ முதலாவதாகவும், இரண்டைத் தரும் ‘பொருள்’ இடையிலும், ஒன்றை மட்டுமே தரும் ‘இன்பம்’ கடைசியிலும், தகுதி முறையில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்டவற்றுடன், ஆள்வோர், சமயங்கள் மற்றும் சமூகங்கள் வகுத்துக் கொடுத்தவையும் ‘அறம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கியங்களில் அறம் என்பது சொல்லுக்கு ஒழுக்கம், உயர்ந்தோர் வழக்கு, நடுவு நிலைமை, நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் போன்ற பொருள்களும் உண்டு. சைவ சித்தாந்தக் கழகத் தமிழ் அகராதி அறம் என்னும் வார்த்தைக்கு கடமை, நோன்பு, தர்மம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை, பசித்தோர்க்கு உணவு வழங்கல், உயிர் இரக்கம், கல்வி எனப் பல்வேறு அர்த்தங்களைத் தருகிறது.

அறம் என்பது சொல்லா, செயலா அல்லது எண்ணமா? செயலுக்கு அடிப்படை எண்ணம். அந்த எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும், செயலும் தூய்மையாக அமையும். மனம் மாசு இல்லாமல் இருந்தால்தான் எண்ணம் தூய்மை பெறும். மனத்திலுள்ள மாசைப் போக்க முயல்வதே அறமாகும். பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகியவை இன்றி இருத்தலே அறம்.

அறம் எனப்படுவது வழக்கு, தண்டம், ஒழுக்கம் என 3 வகைப்படும். ‘வழக்கு’ என்பது தான், தனது, என்னும் சுயநலம் காரணமாக ஒருவருக்கு ஒருவர் மாறுபடுதல் ஆகும். இது பதினெட்டு வகைப்படும். ‘தண்டம்’ என்பது ஒழுக்க நெறி தவறியவர்களை மீண்டும் அதே நெறிகளில் நிறுத்த விதிக்கப்படும் தண்டனை ஆகும். மக்களை நல்வழிப்படுத்த ‘வழக்கும்’, ‘தண்டனையும்’ பயன்படுத்தப்படும். ‘ஒழுக்கம்’ மட்டுமே உயிர்க்கு நிலையான உறுதியைத் தரும். எனவே சிறப்பான அந்த ஒழுக்கமே, சிறப்பான அறமாக, நாலடியாரிலும் முதலில் இடம் பெற்றுள்ளது.

ஒழுக்கம் என்பது ‘இல்லறம்’ மற்றும் ‘துறவறம்’ என இருவகைப்படும். ‘இல்லறம்’ என்பது மனைவியுடன் இல்வாழ்க்கை நடத்தி, இன்ப துன்பங்களை அனுபவித்து வாழும் இனிய வாழ்வாகும். ‘துறவறம்’ என்பது வீடு பேறு பெறும் ஒரே குறிக்கோளுடன் உலகப் பற்றுகளைத் துறந்து வாழும் துறவு வாழ்வாகும்.

திருக்குறள் முதலில் இல்லறத்தையும் பின்னர் துறவறத்தையும் கூறுகிறது. ஆனால் நாலடியாரோ முதலில் துறவறத்தையும் பின்னர் இல்லறத்தையும் கூறுகிறது. வீடு பேற்றைப் பெறுவதுற்குத் துறவறமே காரணமாகும். உலகிலுள்ள ‘அகப்பற்று’ மற்றும் ‘புறப்பற்று’ ஆகியவை நிலையற்றவை என்பதால் அவற்றின் மீது பற்று வைக்காமல் வாழும் பற்றற்ற வாழ்வே துறவறம் ஆகும். திருமணம் செய்துகொள்ளாமல் இளமையிலேயே துறவறம்கொள்வது ஒரு வகை; இல்வாழ்க்கையை அனுபவித்துப் பின்னர் நிலையாமை உணர்ந்து துறவறம் பூணுதல் மற்றொரு வகை. இவ்விரண்டில் இளைமையில் துறவே சிறந்த துறவு நெறியாகும்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *