Skip to content
Home » அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

சினம் கொள்ளாமை

7.சினம் இன்மை

துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற மன வலிமையும், தவ வலிமையும், சினம் கொள்ளும் போது முற்றிலும் அழிந்துவிடும். பலருக்குத் துன்பங்களும் வந்து சேரும். எனவேதான் எல்லா அற நூல்களும் சினம் கொள்ளாமை குறித்து வலியுறுத்துகின்றன.

பிறர் அறிந்தோ, அறியாமலோ, தவறு செய்யும் பட்சத்தில், சினம் கொள்ளாமல் தன்னுள்ளே அடக்கி அவர் மீது இரக்கம் கொள்ளுதலே ‘சினம் இன்மை’ ஆகும். சினம் கொள்ளாமை துறவிகளுக்கு முதன்மைப் பண்பாக இருக்க வேண்டும் என்றாலும் கூட, இல்லறத்தில் ஈடுபடுவோர்க்கும் இப்பண்பு முக்கியமாகும். சினம் பகையாக உருவெடுத்து பல்வேறு தீமைகளுக்குக் காரணமாவதைக் காண்கிறோம். திருக்குறளும் ‘வெகுளாமை’ என்ற தலைப்பில் இதையே கூறுகிறது.

நன்கு மதித்து கௌரவித்து மேன்மைப்படுத்தி நடப்பவர்கள் செல்லட்டும். அவமதித்து மதிக்காமல் கீழ்மைப்படுத்தி நடப்பவர்களும் செல்லட்டும். உயர்ந்தோர், பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் மரியாதை அளிப்பார்கள். ஆனால் இழிந்தோர், நற்குணம் படைத்த சான்றோரையும் இழித்தும் பழித்தும் மரியாதையின்று அவமானப்படுத்துவர். சாக்கடையிலும், அசுத்தத்திலும் மொய்க்கும் ஈ, காலால் மிதித்து நம் தலைமேல் உட்காருவதைக் காண்கிறோம். இது அந்த ஈயின் அறியாமையே ஆகும். இதை நன்கு உணர்ந்த அறிவுடையோர் ஈ மீது கோபம் கொள்ள மாட்டார். அதைப் பொருட்படுத்தவும் மாட்டார். கீழ்மக்கள் ஈயைப் போல் அற்பமானவர்கள். பெரியோரை இகழ்ந்து தூற்றுவோர் அதற்கான பாவ புண்ணியங்களை அனுபவிப்பார். ஈயின் மீது கோபிப்பதால் எந்தப் பயனும் இல்லை. நம்மை அவமதிக்கும் கீழோர் மீது சினம் கொண்டு சபிப்பதால், நம் தவ வலிமையால் பெற்ற சக்தியை நாம்தான் இழக்க நேரிடும். எனவே கோவம் கொள்ளாமல் இருப்பதே நன்மை அளிக்கும்.

வைத்த காலை எடுக்கவும் இயலவில்லை. ஓர் அடி கூட முன்னெடுத்து வைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மிகப் பெரிய தாழ்வும், அவமதிப்பும், இடைவிடாது நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், அந்த நிலையிலும், தவ வலிமை உடையோர், எதற்கும் கலங்காமல், உள்ள உறுதியுடன், மேற்கொண்ட அறச்செயலை நிறைவேற்றுவர். அடுத்தவர் அவமதிப்பைக் கண்டு சினம் கொள்ளார். அற்பர்களின் இகழ்ச்சி கண்டு வெதும்பி மனம் வருந்தி உயிரைத் துறக்கவும் மாட்டார். உயிரை மாய்த்துக் கொண்டேனும் இந்தப் பிறப்பில் மானத்தைக் காக்க வேண்டும் என்பது இல்லறத்தார்க்கு விதிக்கப்பட்டதாகும். ஆனால் துறவிகளின் முக்திப் பேற்றுக்கு இந்த மானம் காத்தல் காரணம் ஆகாது. துறவிகள் உயிரை விட்டால், அரிதாகக் கிடைக்கும் மானிட உடலை இழக்க வேண்டும். இதன் மூலம் பெறுதற்கு உரிய வீடு பேற்றையும் இழக்க நேரிடும். ஆகவே அறிவில் சிறந்த சான்றோர் உயிரை விடத் துணிய மாட்டார்கள். சினம் கொள்ளாமல் பழியை ஏற்றுக்கொண்டு அமைதியாக அறப்பணியில் கவனம் செலுத்துவர்.

ஒருவன் எதைக் காக்காவிட்டாலும் தனது நாவைக் காக்க வேண்டும். நாவை அடக்க வேண்டும். தீயால் சுட்ட வடுவை விடவும் நாவினால் சுட்ட வடு ஆறுவதற்கு நீண்ட காலமாகும். எனவே நாக்கு குடியிருக்கும் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்பதற்கும், நல்ல சொற்களைப் பேசுவதற்கும் மட்டுமே வாயைத் திறக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் வாயைக் கட்டுப்படுத்தாமல் சொல்லும் தீய சொற்கள், மற்றவர்களைக் காயப்படுத்துவதுடன், சொல்பவரையும் ஓய்வின்றிச் சுட்டு வருத்தும். சினம் கொண்டு பிறரைச் சபிப்பதால், சொல்பவரின் தவம் கெடுவதுடன், இம்மைத் துன்பத்தோடும், முந்தைய பிறவிகளின் துன்பங்களும் ஒருங்கே சேர்ந்து வாட்டும். எனவே தவநெறி மிக்க அறிவுடையோர், சினம் கொண்டு கடுஞ்சொற்களைக் கூற மாட்டார்கள். பிறரது கடுஞ்சொற்களால் தாம் அடையும் வேதனையை அறிந்த சான்றோர், தனது கடுஞ்சொற்களால் மற்றவர் வேதனையை மனத்தால் உணர்ந்து, தாமும் கூற மாட்டார்.

ஈடு இணை இல்லாதவர்கள், எதிர்க்கத் தகுதி அற்றவர்கள், தங்களைத் தாங்களே ஒப்பானவர்கள் என எண்ணும் கீழ்மக்கள் இனிமையற்ற சொற்களைக் கூறலாம். நிகரற்றவர்களின் கடுஞ்சொற்களைக் கேட்டு விழுமியோர் மனம் புழுங்கவோ, வருத்தமோ, கவலையோ படமாட்டார்கள். தம் மீது கொடுமையான சொற்களை வீசியவர்கள் மீது சினம் கொள்ளார். அற்பர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் துறவு நிலையில் உள்ளோர் சஞ்சலம் அடையார். ஆனால் கீழ்மக்களோ தம்மை மற்றவர்கள் நிந்தித்த கடுஞ்சொற்களை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளவோ கடந்தோ போக மாட்டார்கள். ‘எப்படி அந்த வார்த்தைகளைச் சொல்லலாம்’ என அவர்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் மனத்தால் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அவற்றை ஆராய்ந்து, ஊரில் உள்ள பலரும் கேட்கும்படி உரக்கச் சொல்வர். ஐயோ! இப்படிச் சொல்லிவிட்டாரே எனப் புலம்பிக் கொண்டே அங்குமிங்கும் ஓடுவர். துள்ளிக் குதிப்பர். சுவரில் உராய்ந்து, தூணிலே முட்டிக் கொண்டு பிதற்றுவர்.

பெண்கள் மீது மையல் கொண்டு, துள்ளிக் குதிக்கும் வாலிபம். சிற்றின்பங்களின் மீது நாட்டம் செல்லும் காளைப் பருவம். புலன் வழி எழுகின்ற ஆர்வத் துடிப்புகளை நிறைவேற்றும் யௌவனம். பொதுவாகவே காமத்தை அடக்கி நடப்பதே மேலான அடக்கமாகும். எனினும், வயது முதிர்ந்தவனை விடவும், இளைஞனின் புலன் அடக்கமே சிறந்த அடக்கமாகும். யாசகம் கேட்டு வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது ஈகையாகும். தர்மம் செய்யும் இந்த நற்குணத்தை யார் செய்தாலும் பாராட்டுக்கு உரியவர்களே. ஆனாலும், பணம் படைத்த ஒருவன் செய்யும் ஈகையை விடவும், அதிகப் பொருள் இல்லாதவன் தன்னிடம் இருக்கும் சிறிதளவு பணத்தையும் மற்றவர்க்கு மனமுவந்து கொடுப்பதே மிகச் சிறந்த ஈகையாகும். பிறர் செய்யும் குற்றத்தைப் பொறுத்து சினம் கொள்ளாமை சிறந்த பண்பாகும். என்றாலும், ஆற்றல் இல்லாதவன் பொறுமை காப்பது சிறப்பல்ல. வலிமையானவன், பலம் பொருந்தியவன், தன்னை இகழ்ந்தவர் மீது கோபம் கொள்ளாமல், காக்கும் பொறுமையே சிறந்த பொறுமை ஆகும். இளமையில் புலன் அடக்கம், ஏழ்மையில் ஈகை மற்றும் வலிமையில் பொறுமை ஆகியவையே சிறப்பாகும்.

படம் எடுத்து ஆடுகிறது விஷம் பொருந்திய நாகப் பாம்பு. தன்னைத் துன்புறுத்துவோர் கண்டு சீறுகிறது. அதன் சீற்றத்தைத் தடுக்கத் திருநீறு மந்திரித்து அதன் மீது வீசப்படுகிறது. படம் விரிந்து ஆடிய பாம்பு திடீரென மந்திரித்து வீசப்பட்ட விபூதிக்கு அடங்கி தனது சீற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது. தம்மை நிந்திப்பவர்கள் மீது கோபம் கொள்ளுதல் மனித இயல்பு. ஆனால், அறிவில் சிறந்த மேன்மக்கள், அடக்கத்துக்கு உரிய துறவறத்தை மேற்கொண்ட காரணத்தால், தன்னை இகழ்ந்தவர்கள் மீது சினம் கொள்ளாமல் அடக்கிக் கொள்வர். கற்களால் காயப்படுத்துவதுபோல், கயவர்கள் கடுமையான சொற்களால் தாக்கினாலும், பதிலுக்குப் பழிக்காமல், குலப் பெருமை மற்றும் குடிமையின் தகுதி காரணமாக, பொறுமை காப்பார்கள்.

பகைமைக்கு ஏற்றச் செயல்களைச் செய்யும் பகைவரை எதிர்த்துப் போரிட்டு அவர்களை அழிப்பதே வீரர்களின் குணமாகும். ஆனால் அறிவுடையோர் அவ்வாறு செய்யத் துணிய மாட்டார்கள். முற்றும் துறந்த முனிவர்கள் தமக்குத் தீமை இழைத்த பகைவர்கள் மீது சினம் கொள்ளார். கொடுமை புரிந்தவர்களை எதிர்க்காமல் அமைதி காப்பர். தீமை செய்தோர்க்கும் தீங்கு இழைக்காமல் இருப்பதே, நன்மை பயக்கும். மன்னிப்பே மேலோரின் உயர்ந்த பண்பாகும். இதை ஆற்றல் இன்மை என்றோ இயலாமை என்றோ பலவீனம் என்றோ அறிவுடையோர் கருதார்.

கீழ்மக்களின் சினம் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அடங்காது. வெளியே நெருப்பு அணைந்தது போல் போலியாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கும். அதுபோல், காலப்போக்கில் சினம் மேன்மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லுமே தவிர, எள்ளளவும் குறையாது. இதற்குக் காரணம் கீழ்மக்களின் அறியாமையும், அகந்தையுமே ஆகும். ஆனால் ஞான நூல்களைக் கற்றுத் தேர்ந்து, தவ ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் அறிவுடைய சான்றோரின் சினம், படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக மறைந்தே போகும். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் காய்ச்சும் போது சூடாகத்தான் இருக்கும். தண்ணீரின் வெப்ப நிலையும் அதிகரித்தே காணப்படும். ஆனால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பிறகு தண்ணீரின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நிறைவாக ஆறிப்போகும். அதுபோல், சான்றோர் தொடக்கத்தில் சினம் கொண்டாலும், சீர்மையான உள்ளம் காரணமாகக் கோபம் தானே அடங்கிவிடும்.

பிரதிபலன் பாராமல் அடுத்தவர்க்கு நன்மை செய்தல் பெரியோர் பண்பாகும். ஆனால் அத்தகைய உபகாரத்தைப் பெற்றவர்கள், நன்றி விசுவாசத்துடன் பதிலுக்கு நல்லது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடாது. நீசர்கள் நன்றி மறந்து உபகாரம் செய்யாமல், அபகாரம் செய்யவே முற்படுவர். தனக்குச் செய்த நன்மையை எண்ணிப் பாராமல், தீமையே மிகுதியாகச் செய்தாலும், கற்றறிந்த அறிவுடையோர், அத்தகைய கீழ்மக்களை இகழ மாட்டார்கள். நன்மை செய்தவர்க்குத் தீமையா செய்கிறாய் எனச் சினம் கொள்ளார். மாறாகத், தீமை செய்தவர்க்கு, மீண்டும் மீண்டும் நன்மையே செய்வர். இத்தகைய பரந்த மனப்பண்பு கொண்டோரே, வானளாவிய புகழ் மிக்கவர்கள், உயர்குடிப் பிறந்தவர்கள் எனப் போற்றத் தக்கவர். இது துறவிகளின் இயல்பாகும்.

சாலையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அப்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்த வெறி நாய் துரத்தி வந்து நம்மைக் கடிக்கிறது. நாய் கடித்தவுடன் கோபம் கொண்டு பதிலுக்கு நாயைக் கடித்தவர்கள் உலகில் யாருமில்லை. வெறி நாய்க்கு இணையானவர்கள் கீழ்மக்கள். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் நாமுண்டு நமது வேலையுண்டு என அமைதியாக இருக்கிறோம். கீழான குணம் கொண்டவர்கள், வசை மாரிப் பொழிந்தாலும், கடுஞ்சொற்களை வீசினாலும், அறிவுடையோர் திரும்பவும் பதிலுக்கு அவர்களைப் பழிக்க மாட்டார்கள். ஏனெனில், துறவோர், அத்தகைய இழிவான சொற்களைத் தம் வாயால் சொல்லாத உயர் பண்பினர் ஆவர்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *