Skip to content
Home » அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

அறம் உரைத்தல்

இன்பவியல்

மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு அதிகாரங்களில் எதிர்மறையாகவும் கூறப்பட்டுள்ளது. புலன்கள் தாமே உணர்வு உடையன அன்று. அவற்றால் விளையும் பயன்களை இன்பமாகவும், துன்பமாகவும் கருதி உணரும் தன்மை மனத்திற்கே உண்டு. இன்பத்தை உண்மையாக உணர்ந்து பயன்பெற மனத்தின் செப்பமும், தெளிவும், அவசியமாகும். மனம் புலன்களின் கிளர்ச்சிகளுக்கு உட்பட்டு அறியாமையுடன் திகழ நேரிடலாம். அவ்வாறு விளங்குமானால், தீயன நல்லனவாகவும், துன்பங்கள் இன்பங்களாகவும், பிழைபட அறியக் கூடும். இதனால், இன்பத்தின் தன்மையை உள்ளது உள்ளபடி அறிய, ஒவ்வொருவரும், தத்தம் மனத்தைத் தக்க வகையிலே, தகுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அந்த முறையில், உள்ளத்தினை இன்ப நெறிகளில் மட்டுமே செலுத்தும் மன உறுதி குறித்துக் கூறும் இயலாகும்.

25. அறிவுடைமை

அறிவுடைமையாவது இயல்பான நுண்ணறிவும், கல்வி கேள்விகளால் பெற்ற தெளிவுமாகும். இன்னாருடனான உறவு நன்மை தரும், இன்னாருடனான உறவு தீமை தரும், இன்ன செயல் நன்மை விளைவிக்கும், இன்ன செயல் தீமை பயக்கும் என, நல்லன தீயனவற்றின் கூறுகளை ஆராய்ந்து அறிந்து, இன்பம் தரும் நெறிகளில் மனத்தைச் செலுத்துவதே உண்மையான அறிவுடைமை ஆகும். இன்னவர் கூடு நண்பர், இன்னவர் கூடா நண்பர் என ஆய்ந்து அறிந்து அவர்களுடன் முறையே கலத்தலும், கலவாமையும் வேண்டும். எனவே அறிவு என்பது காரண காரியங்களின் உண்மையைப் பகுத்து அறிந்து கொள்ளும் தன்மை ஆகும். இயற்கை அறிவு மற்றும் செயற்கை அறிவு என அறிவு இரு வகைப்படும். இயற்கை அறிவு இயல்பாகவே ஒவ்வொருவரிடமும் அமையப் பெறும். மாறாக, செயற்கை அறிவோ ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியினால் கண்டும், கேட்டும், கற்றும் பெற்றுக் கொள்வதாகும். நூல்களில் கண்டுள்ளபடி இம்மை, மறுமை, வீடுகட்கு உரியனவற்றை அறிவதுடன், உலக நடைமுறையையும் அறிதல் வேண்டும். செல்வத்துள் சிறந்த செல்வம் அறிவுச் செல்வமே ஆகும்.

பாம்புக்குப் பால் வார்த்தாலும் அதன் இயல்பு குணம் காரணமாகக் கடிக்கவே செய்யும். அத்தகைய நன்மை தீமை பார்க்காத கொடிய பாம்பு (ராகு) கூடச் சந்திரன் இளம்பிறையாக இளைத்திருக்கும் போது அணுகாது, பௌர்ணமி முழு நிலவாக ஒளிரும் போதுதான் பிடிக்கிறது. சந்திர கிரகணம் உண்டாவது இப்படித்தான் என்பது பழங்கால நம்பிக்கை. அதுபோல் நமக்குத் துன்பம் இழைத்தவர் பகைவரே என்றாலும் கூட, அவர் நொடிந்திருக்கும், தருணத்தில் அவரை வெல்லக் கற்றறிந்த நடுவுநிலை தவறாத அறிவுடையோர் துணியார். சம பலத்துடன் இல்லாமல் சக்தியும் வீரமும் குறைந்து தளர்ந்திருக்கும் நேரத்தில் எதிரிகளை அழிக்க எண்ணார். அப்போதைக்குத் துன்பம் இழைத்தவர் மீது இரக்கம் கொண்டு தளர்விலிருந்து மீண்டு தலையெடுத்த பின்பே மேன்மக்கள் வெல்லக் கருதுவர்.

பெரிய கடலின் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையைக் கொண்ட நாட்டின் தலைவனே! பொருள் இல்லாமல் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு அழகு தரும் அணிகலன் அல்லது ஆபரணம் அடக்கம் நிறைந்த நற்குணமே ஆகும். அவ்வாறின்றி, பணிவற்றத் தன்மையோடு, அடக்கமின்றி நடப்பார்களே ஆனால், அவர்களை மட்டுமின்றிப் பிறந்த குடியையும் ஊரே தூற்றும். நற்குடியில் பிறந்தவர்கள் வறுமைக் காலத்திலும் பண்பு மாறாமல் அடக்கமாகவே இருப்பார். மாறாகக் கெட்ட குடியில் பிறந்தவர்கள் வறுமைக் காலத்தில் பண்பு குறைந்து, ஒழுக்கம் தவறி, அடக்கமின்றி, வரம்பு மீறி நடப்பர். வறுமையிலும் அடக்கமுடன் வாழ்வதே அறிவுடைமை.

எந்த விதையைப் போடுகிறோமோ அந்த விதைதான் முளைக்கும். செழிப்பான நிலமாகவே இருந்தாலும், கசக்கும் எட்டி அல்லது காஞ்சிகை மரத்தின் விதையைப் போட்டால் சுவையான இளநீரையும், தேங்காயையும் தரும் தென்னை மரமா முளைக்கும்? முளைக்காது. தென் திசையில் உள்ளோரும், அறிவுடைமையால் அறம் செய்து சொர்க்கம் செல்கின்றனர். அதே சமயம் வட திசையில் உள்ள சிலர் அறம் செய்யாமல் வீணே பொழுதைக் கழித்து நரகத்தை அடைகின்றனர். புண்ணிய பூமியான வடநாட்டு உயர்ந்தோரே நற்கதி பெற்றுச் சொர்க்கம் செல்வர் என்றும், பாவ பூமியான தென் நாட்டு மிலேச்சர் நற்கதியற்று நரகம் புகுவர் என்றும் சிலர் கூறி வந்தனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அவரவர் செய்யும் அறச் செயல்களுக்கு ஏற்பவே சொர்க்கமும், நரகமும் கிடைக்கும். வடக்கு தெற்கு யாராக இருப்பினும், ஒழுக்கம் கெட்டால் நரகம்தான். மறுமை இன்பத்துக்கு (சொர்க்கம்) ஒழுக்கமே காரணம் என்றும் அது அறிவுடைமையினால் மட்டுமே அமையும். (பித்ருக்களுக்குக் கருமம் செய்வோர் தெற்குப் பக்கம் நோக்குவதால் தென் திசை இழிவாக நரகம் என்றும், மங்கலச் செயல்களைச் செய்வோர் வடக்குப் பக்கம் நோக்குவதால் வட திசை உயர்வாகச் சொர்க்கம் என விளக்கம் தருவாரும் உண்டு). எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும். அதுபோல், செயல்களுக்கு ஏற்பவே மறுமைப் பயன் உண்டாகும்.

வேப்ப மரத்தின் இலைகளுக்குள் வாழைக் காய்களை வைத்துப் பழுக்க வைப்பது வழக்கம். கசப்பான வேப்ப இலைகளுக்குள் கிடத்தினாலும் வாழைப்பழம் தனது இனிப்பான சுவையை இழக்காது. அதுபோல், நற்பண்புகளைக் கொண்ட மேன்மக்கள் விதிவசத்தால் தீயோருடன் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், எந்த நிலையிலும் பண்பு குறைந்து கெட்டவர்களாக மாற மாட்டார்கள். நல்லவர்களுக்குச் சுவையான வாழைப்பழமும், தீயவர்களுக்குக் கசப்பான வேம்பும் உவமைகளாம்.

அலைகள் வீசுகின்ற கடலின் குளிர்ந்த கரையைக் கொண்ட நாட்டின் தலைவனே! பாண்டியனே! கரிக்கும் கடலைச் சார்ந்தும் அல்லது ஓரத்திலும் சுவையான நல்ல தண்ணீர் ஊறும். சுவையான அருவி நீர் பாயும் மலையின் அருகிலும் உப்பு நீர் கிடைக்கும். எனவே மக்கள் எனப்படும் அறிவுடையோர் தத்தம் இனத்தைப் போன்றவர்கள் அல்லர். தத்தம் மனத்தை ஒத்தவர்களே ஆவர். தண்ணீர், தான் கொண்டிருக்கும் தன்மையைப் பொருத்தே சுவைக்கும் அல்லது கரிக்குமே அன்றிச் சார்ந்திருக்கும் இடத்தைப் பொருத்து அல்ல. அதுபோல் மக்களும் அவரவர் மனத்தின் செப்பம் கருதி மதிக்கப்படுவாரே அல்லாமல் அவரவர் சார்ந்திருக்கும் இனத்தைக் கருதி மதிக்கப்படமாட்டார்கள். மாசற்ற தெளிந்த அறிவுடையோர் எந்தச் சூழலிலும் மனம் திரியார் என்பது கருத்தாம்.

பருத்த அடியினை உடைய புன்னை மரங்களால் பொலிவு பெற்ற குளிர்ச்சியான கடற்கரைச் சோலைகளைக் கொண்ட நாட்டின் தலைவனே! உறுதியாக ஒரு நிலையில் நிற்கும் உள்ளத் திண்மை உடைய மனமுடையோர், நற்குணம் பொருந்திய மேன்மக்களோடு முதலில் கூடுவதும், பின்னர் நீங்குவதுமான செயல்களைச் செய்வாரோ? ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நல்லவர்களுடன் சேர்ந்த பிறகு அவர்களை விட்டுப் பிரிதல் அறிவுடைமை ஆகாது. அப்படிச் சேர்ந்து பிரிவதை விட அவர்களுடன் நட்பு கொள்ளாமல் இருப்பதே நன்றாகும். கூடிய நல்லோரைப் பிரிந்த குற்றமும் துன்பமும் கூடாதவர்க்கு இல்லை என்பதால், கூடிப் பிரிவதை விடவும், கூடாமை நல்லது. ஒருவரை நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ந்து தெளிந்து நட்பு கொள்ளுதலே அறிவுடைமை ஆகும்.

நன்மை தீமைகளைப் பகுத்தறியும் விவேகமுடைய அறிவுள்ளோரை நண்பராகக் கொண்டால் பல்வகை இன்பங்கள் உண்டாகும். நல்லது எது கெட்டது எது எனப் பகுத்தறியும் விவேகமற்ற அறிவிலிகளை நண்பராகக் கொண்டல் துன்பமே மிஞ்சும். நாம் மனத்தில் நினைப்பதைக் குறிப்பால் உணரும் நுண்ணறிவு கொண்டோருடன் கொள்ளும் நட்பு இனிமை தரும். நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தெரிந்த போதும் அதை உணராத அறிவிலிகளுடன் கொள்ளும் நட்பு துன்பமே தரும். இருப்பினும், பகுத்தறிவற்ற விவேகமற்ற அறிவிலிகளுடன் தெரியாமல் சேர்ந்து விட்டால், அவரை விட்டு விலகிய அக்கணமே துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கற்ற அறிவுடையோர் நட்பு இன்பமும், கல்லா அறிவிலார் நட்பு துன்பமும் தரும்.

தன்னை நன்மையாகிய நல்ல நிலையில் நிறுத்துபவனும், தன்னை நல்ல நிலையிலிருந்து தவறுதலாகச் சிதைத்தும் கலங்கச் செய்தும் கீழ் நிலைக்குக் கொண்டு போகின்றவனும், தன்னை இருக்கின்ற நிலையைக் காட்டிலும் மேன்மேலும் உயர்த்திக் கொள்கின்றவனும், தன்னை யாவரினும் சிறந்தவனாகத் தலைவனாக உயர்த்தும் வல்லானும், எல்லாம் அவனே தான். ஒவ்வொருவரின் உயர்வுக்கும், தாழ்வுக்கும், அவரவர் அறிவும் அறிவின்மையுமே காரணமாகும். பிறரால் வருதன்று. தீதும் நன்றும் பிறர் தர வாரா.

பெறுதற்கு அருமையான சீரான மரபினை உடைய அலைகள் ஓயாத ஒலி முழங்கிக் கொண்டிருக்கும் கடலின் குளிர்ந்த கரையை உடைய நாட்டின் தலைவனே! கல்லாத படிக்காத அறிவிலிகள் பின்னேயும், பெருமை பெற்ற கல்விச் சிறப்புடையவர்கள் செல்ல வேண்டிய சூழல் உண்டாகும். முன்வினையால் நடைபெறும் இச்செயல் அவர்களுடைய பேதைமையும் அல்ல. அறியாமையும் அல்ல. சமுதாயத்துக்குப் பயன் அளிக்கத்தக்க ஒரு நற்செயல் இனிதே நிறைவேறும் பொருட்டு கல்லாதார் பின்னே மேன்மக்கள் செல்லுதல் அறிவுடைமையே ஆகும். அறிவிலார் பின் பொது நலம் கருதி அறிவுடையோர் செல்லுதலும் அறிவுடைமையே.

அறப்பொருள்களுக்குக் காரணமான தொழில்களை முயற்சியுடன் உடன்பட்டுச் செய்ய வேண்டும். அவற்றால் உண்டாகும் உலக இன்பங்களையும் சுகங்களையும் அனுபவிக்க வேண்டும். தானம் தருமம் ஈகை உள்ளிட்ட அறச்செயல்களைக் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த தகுதி உடையவருக்கே செய்ய வேண்டும். இம்மூன்றையும் தங்குத் தடையின்றி ஒரே பிறவியில் ஒருவனால் செய்து முடிக்க முடியுமெனில், அதுவே வியாபார நிமித்தம் தூர தேசங்களுக்குச் சென்று நல்ல வருமானத்துடன் மீண்டும் பட்டினத்தை வந்தடைந்த மரக்கலம் போலச் சிறப்பாகும் என்பது அறிவுடையோர் கருத்து. கப்பல் பத்திரமாகக் கரை சேர்ந்தது என்பதைக் குறிக்கும் ‘பட்டினம் பெற்ற கலம்’ என்பதன் பொருள் ‘பிறப்பு பயன் பெற்ற பிறப்பு’ அதாவது ‘வாழ்வு கடைத்தேறுவது’ என்பதாகும்.

26. அறிவின்மை

அறிவின்மை என்பது இயற்கையான நுண்ணறிவு இல்லாத் தன்மையாகும். கல்வி கேள்விகளால் உண்டான அறிவு இல்லாமையோடு, உண்மை அறிவும் இல்லாதவனாகிறான். காரண காரியங்களைப் பகுத்தறியும் தெளிவோ, விவேகமோ, இல்லாத காரணத்தால் இம்மை இன்பங்களைப் பெற இயலாமல் போவதுடன், மறுமை இன்பத்தையும் இழக்கிறான். அறிவுடைமையே மனிதனுக்குச் சிறந்த நல்வாழ்வைத் தருமென முந்தைய அதிகாரத்தில் பார்த்தோம். அறிவின்மையால் பற்பல கேடுகள் விளையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அறிவின் சிறப்பை நன்கு உணரும் வகையில் முன்பு உடன்பாடாகக் கூறிய உண்மைகள் தற்போது எதிர்மறையாகவும் சொல்லப்படுகின்றன.

நுட்பமான அறிவுத் திறன் இல்லாமை மனிதர்க்கு மிகப் பெரிய வறுமை அல்லது தரித்திரத் தன்மையாம். அந்த நுண்ணறிவுடைமை மிகப் பெரிய செல்வமாம். அறிவு ஒன்றே நீடித்து நிலைக்கும் என்பதால், பொன், முத்து, பவளம், வைரம் உள்ளிட்ட பொருள்களை உண்மையான செல்வம் எனச் சிறப்பாகக் கொள்ளத் தக்கவை அல்ல. அறிவுடையோர்க்குக் கிடைக்கும் பெருமையும், புகழும், அறிவிலார்க்கு எவ்வளவு செல்வம் இருந்தும் கிடைக்காது. பெண் தன்மை இல்லாத பேடி எவ்வளவு ஆபரணங்களை அணிந்து கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டாலும், இயற்கை பெண்ணுக்குள்ள அழகின் சிறப்பும், இன்பப் பயனும் உண்டாகாது. அறிவுதான் உண்மையான செல்வம். ஏனைய செல்வங்கள் எவ்வளவு இருந்தும் அறிவுச் செல்வத்துக்கு இணையாகாது.

பல்வகை நூல்களைக் கேட்டறிந்து அவற்றின் பயனை அறிந்த அறிவுடையோர், பொருள் இன்மையால் பெருமை கெட்டு துன்பத்தில் துவண்டும், துயரத்தில் உழன்றும் தவிக்கின்றனர். காரணத்தை உலகத்தீரே அறிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு அதிபதி சரஸ்வதி. செல்வத்துக்கு அதிபதி இலக்குமி. கற்றவரின் நாவில் சரஸ்வதி வசிப்பதால், செந்தாமரைப் பூவில் விற்றிருக்கும் இலக்குமி கோபித்துப் பிணக்கு கொண்டு கற்றவரோடு சேரமாட்டாள். அறிவுச் செல்வம் உள்ளோரிடம், பொருள் செல்வம் சேர்வதில்லை. புராணங்களில் இலக்குமி மாமியாராகவும், சரஸ்வதி மருமகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இயற்கையாகவே மாமியாரும், மருமகளும் ஒத்துப் போகார் என்பதால், சரஸ்வதி (கல்வி) இருக்கும் இடத்தில் இலக்குமி (செல்வம்) தங்காது என்பது பொதுவான கருத்தாம். கல்வி கற்றலில் நாட்டம் கொண்டோர், பொருள் பற்றில் நாட்டம் கொள்ளார் என்பதை உணர்த்தும் பாடலிது.

‘படி’, ‘படி’ என்று தந்தை அடிக்கடி சொல்லும் சொல்லைத் தனது நன்மைக்காகவும், வாழ்விற்கான உறுதியான சொல்லாகவும் எண்ணாமல் இகழ்ச்சியாகக் கருதினான் புதல்வன். அவரது பேச்சை அலட்சியப்படுத்தி இளமையில் கல்வி கற்காமல் பொழுதைக் கழித்தான். சில காலம் கழித்துப் பலர் கூடிய சபையின் முன்னே, யாரோ ஒருவன் எழுதப்பட்ட ஓலை ஒன்றைக் கையில் கொடுத்து, இதில் எழுதப்பட்டிருப்பதைப் படிப்பாயாக என்று சொன்னான். அதைக் கேட்டவுடன், உயிரை விட்டவன்போல், அவமானத்தில் கூனிக் குறுகினான். கோபத்தில் கோலை எடுத்து அவனை அடிக்கக் கையை ஓங்கினான். அங்கிருந்து தப்பித்தால் போதும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டான். இளமையில் கல்வி கற்க வேண்டும். அவ்வாறு கல்லாதவன் கற்றவர் சபை நடுவே அவமானப்பட நேரிடும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப, சொல் கேளாமல் இளமையில் கல்லாதவன் பின்னாளில் மூடனெனப் பலர் முன் கேவலப்படுவான்.

தந்தை சொல் கேளாமல் இளமையில் கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வளர்ந்த ஒருவன் கற்றறிந்த விவேகமுள்ள சபையில் புகுந்தானாம். அறிஞர்கள் நடுவே அவன் பேசினாலும், பேசாவிட்டாலும் நகைப்புக்கும், வெறுப்புக்கும் உள்ளாவான். அறிஞர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாமல், வாய் மூடி மௌனியாக அமைதியாக இருந்தால் ஆன்றோர் சபையிலே ‘நாய் புகுந்ததற்கு’ ஒப்பாம். மாறாக, எதுவுமே தெரியாமல், அடக்கமின்றிக் கல்வி கற்ற மேன்மக்கள் அவையில் வாய் திறந்து எதைப் பேசினாலும் அது ‘நாய் குரைத்தது’ போலாகும். கல்வியறிவு, உலகில் இன்றி அமையாத சிறப்பைக் கொண்டதாகும். கல்லாதவன் நாய்க்கு இணை, அவன் பேசுவது குரைத்தலுக்குச் சமம். அறிஞர் சபை நடுவே நாய் புகுந்தாலும், குரைத்தாலும் அதை அடித்து விரட்டவே முற்படுவர். கல்லாதவன் நிலையும் அதுவேதான் என்பது கருத்தாம்.

இலக்கிய இலக்கணத்தோடு பொருந்தாத, முறையாகக் கல்வி கற்காத, போலிப் புலவர்களின் கூட்டத்தின் நடுவே புகுந்து கீழ்மக்கள், கற்றறியாத செய்திகளையும் அச்சமின்றிப் பேசுவார்கள். ஆனால், கல்வி கேள்விகளில் சிறந்த கற்றறிந்த மேன்மக்களோ, கற்றுத் தெளிந்த படித்தறிந்த விஷயங்களைச் சொல்லுங்கள் எனப் பிறர் கேட்டாலும் கூட, சபை நடுவே பேசும்போது பயப்படுவார்கள். கேட்பவர்களின் அறிவானது தாம் சொல்லும் அரிய பொருளின் மீது முழுவதும் செல்லாமல் விடுபட்டுப் போய்விடுமோ எனக் கருதி எதுவும் சொல்லாமலேயே இருப்பார்கள். நிறைகுடம் தளும்பாது என்பதுபோல் முற்றிலும் உணர்ந்த அறிவுடையோர் தாம் சொல்வதைக் கேட்கும் தகுதி உடையோர்க்கு மட்டுமே ஆராய்ந்து உரைப்பார்கள். மாறாக, குறைகுடம் தளும்புவதுபோல், கீழ்மக்கள் எல்லாம் தெரிந்ததுபோல், அரைகுறையாக, அடக்கமின்றி உளறுவார்கள். அறிவிலார்க்குக் கல்வியறிவும் இல்லை, அவை அடக்கமும் இல்லை, அச்சமும் இல்லை. எதையாவது சொல்லிப் பெருமை அடைய வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் இலக்காகும்.

நல்ல நூல்களைக் கற்று உண்மைப் பொருள்களைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நாக்கை உடைய புலவர் பெருமக்கள் இவர்கள். பிறர்க்கு அறிவுறுத்தும் சொல்லாற்றல் கொண்டவர்களே என்றாலும், பேசும் போது சொற்களில் குற்றங்கள் ஏற்பட்டு விடுமோ எனப் பயந்து கண்டபடி பேச மாட்டார்கள். ஆனால் எதையும் முறையாகக் கற்றுணராத சிறுமதி கொண்டவர்களோ, உண்மைப் பொருள்களை ஆராய்ந்து அறியும் திறனின்றி, எதற்கும் அஞ்சாமல் வீண் பெருமைக்காகக் கண்டபடி பேசித் திரிவார்கள். இது எவ்வாறெனின், பனை மரத்திலுள்ள உலர்ந்த காய்ந்த ஓலைகள் காற்றடிக்கும் போது அசைந்து கலகலவென ஒலியெழுப்பும். ஆனால் அதே பனை மரத்திலுள்ள பச்சை ஓலைகளோ பலமான காற்றடித்தாலும் எந்த ஒலியையும் ஏற்படுத்தாமல் அமைதியாக அசையும். அறிவிலார்க்கு ஒலியெழுப்பும் காய்ந்த பனை ஓலைகளும், அறிவுள்ளோர்க்கு ஒலியெழுப்பாத பசுமை ஈரப் பனை ஓலைகளும் உவமைகளாகும். கற்றோர் அடக்கம், கல்லாதோர் அடங்காமை குணங்கள் கூறப்பட்டுள்ளன.

நல்லது எது, கெட்டது எது என அறியாத மூடர்களுக்குத் தர்மத்தின் வழியை உரைப்பதில் எந்தப் பயனும் இல்லை. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என உதாரணம் சொல்வார்கள். அதுபோல், பன்றிகளுக்குக் கூழ் ஊற்றும் தொட்டியில், நறுமணம் மிக்க, இனிப்பான, தேன் மாம்பழத்தின் சாற்றை ஊற்றினாலும், சுவையின் மாற்றத்தை அவை அறியா. பன்றிகளுக்குக் கூழின் ருசி தெரியுமே தவிர மாம்பழத்தின் ருசி தெரியாது. அதுபோலக் கீழ்மக்கள் அதர்மத்தின் தன்மை அறிவாரே அன்றித் தர்மத்தின் பெருமை அறியார். அவர்களுக்குத் தர்மத்தை உபதேசிப்பதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. மலை மீது கூர்மையான மர முனையை அடித்தால், கூரான முனைதான் சிதைந்து ஒடிந்து விழுமே தவிர, கற்பாறைக்குள் இறங்காது. அறிவில்லாத மூடர்களின் செவிகளுக்குத் தர்மம் நீதி எதுவுமே சேராது, உள்ளத்தில் பதியாது. நன்மைகளை அறியும் திறனற்ற முட்டாள்களுக்கு நல்லுரை வழங்குவதால் எந்தப் பயனுமில்லை. அறிவிலார்க்கு அறம் உரைத்தல் வீண்.

கரிக்கட்டை இயல்பாகவே கருமை நிறம் கொண்டது. அதை நாள்தோறும் வெண்மையான பாலைக் கொண்டு கழுவிச் சுத்தம் செய்து பல நாள்கள் காய வைத்தாலும் கரிக்கட்டை ஒருபோதும் வெள்ளை நிறத்தைக் கொள்ளாது. அதுபோல், கல்வியறிவு பெறத் தேவையான அறத்தை முற்பிறவியில் செய்தல் வேண்டும். அவ்வாறு அறம் செய்யாத அறிவிலா மூடரை, கோல் கொண்டு அடித்து, காதில் தொ(து)ளை செய்து, அறிவைப் பெருக்கும் நல்லுரைகளைச் சொன்னாலும், அவை உள்ளே புகா. முற்பிறப்பில் தவமும், புண்ணியமும் செய்தவர்களுக்கு மட்டுமே இப்பிறப்பில் அறிவுரைகள் மனத்தில் ஏறும். அறிவிலிகளுக்கு ஞானம் வருவதில்லை.

இனிக்கும் தேனைச் சொரிந்தாலும், மணக்கும் வாசனையை வீசினாலும், பூவிலுள்ள தேனை உண்ணச் செல்லாமலும், நறுமணத்தை முகரச் செல்லாமலும், துர்நாற்றம் வீசுகின்ற இழிவான பொருள்களையே விரும்பிச் செல்லும் குணம் கொண்டவை ஈக்கள். அதுபோல், இழிந்த கருத்துகள் நிறைந்த மனமுடையோர்க்கு, கற்றறிந்த மேன்மக்களின் வாயிலிருந்து வரும் தேனைப் போன்ற இனிமையான சொற்கள் என்ன பயனைத் தரும்? கல்லாதோர்க்குக் கற்றறிந்தோரின் தெளிந்த அறிவுரைகள் எந்தப் பயனையும் தராது. அறிவிலார் தாமும் அறியார், பிறர் கூறினும் உணரார், கீழானவற்றையே விரும்புவதால், அஃறிணையான இழிவான ஈக்கள் உவமை கூறப்பட்டன.

கற்றறிந்த அறிவுடையோர் சொல்லுகின்ற குற்றமற்ற அருமையான கேட்பதற்குரிய செய்திகளை, அறிவிலார் செவிகளில் வாங்கி மனத்தினுள் பிடித்து வைத்துக் கொள்ளார். சந்தேகங்கள் நீக்கும் நுட்பமான பொருள்களை உறுதிப் பொருள்களாகக் கேட்டு உணரார். கற்றார் பேச்சை அவரது மனம் உதைத்துத் தள்ளிவிடுவதால், அறிவிலியான அந்தக் கீழ்மகன் தன்னைப்போல் மற்றொரு கீழ்மகனிடம் இழிவான பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்குவான். அவன் சொல்லும் அற்பமான சொற்களையும் ஏற்றுக் கொள்வான். அற்பனுக்கு அறிவுடையோர் சொல் ஏறாது. அவனைப் போன்ற அற்பர் சொல்லே ஏறும்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *