Skip to content
Home » அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

அறம் உரைத்தல்

காமத்துப்பால்

உயிர்க்கு உறுதிப் பொருளாவன நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். எவ்வகை ஆயினும், நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால், வீடு விளக்கப்படுவது ஆன்றோர் நூல்களின் மரபன்று. எனவே, ‘வீடு’ நீக்கி அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே தமிழ் அறநூல்கள் உரைக்கும். இவற்றுள் அறம், பொருள் பற்றிய செய்திகளை ஏற்கெனவே பார்த்தோம்.

பொருளால் துய்க்கப்படும் இன்பங்கள் பலப்பல ஆகும். எனினும், ஐம்புலன்களால் (சுவை, ஒளி, ஓசை, ஸ்பரிஸம், வாசனை) ஒருங்கே, ஒரே சமயத்தே, அனுபவிக்கத்தக்கச் சிறப்புடன் திகழ்வதால், அவற்றுள் மதிக்கத்தக்கது காம இன்பம் மட்டுமே. ‘இன்ப துன்ப இயல்’ மற்றும் ‘இன்ப இயல்’ ஆகிய இரு இயல்களைக் கொண்டது ‘காமத்துப்பால்’ ஆகும். ‘இன்ப துன்பவியலின்’ கீழ் ‘பொது மகளிர்’ என்னும் ஓர் அதிகாரமும், ‘இன்பவியலின்’ கீழ் ‘கற்புடை மகளிர்’ மற்றும் ‘காமநுதலியல்’ ஆகிய இரு அதிகாரங்களும் உள்ளன.

இன்ப துன்ப இயல்

காம இன்பத்திலும் ஒருபுறம் இன்பம் தருவதாகவும், மற்றொருபுறம் துன்பம் தருவதாகவும் விளங்கும் தன்மை பற்றிக் கூறுவது இப்பகுதியாகும். மனமொத்த மனைவியுடன் கூடி வாழும் இன்பமான வாழ்க்கை; மனத்தால் கலந்து உறவாடாமல், பொன்னுக்கும் பொருளுக்கும் ஆடவர் பலருடன் கூடி வாழும் பொது மகளிர் உறவு; இத்தன்மைகளின் முழு இயல்புகளையும் பின் வரும் அதிகாரங்கள் எடுத்துக் காட்டும். உள்ளத்தில் பற்றில்லாது, பொன்னும் பொருளும் தருபவனுக்கே இன்பம் தருவர் வரைவின் மகளிர். எனினும், வேறொருவன் அவனை விடவும் மிகுதி படத் தர முன்வரும் போது, தர இயலாதவனை இழித்தும், பழித்தும் பேசி ஒதுக்கி விடுவர். இவ்வாறாக இன்பமும் துன்பமும் அமைந்த தன்மையால் இவ்வியல் ‘இன்ப துன்ப இயல்’ எனப் பெயர் பெற்றது.

38. பொது மகளிர்

தமது மேனியை, உள்ளம் கலந்த ஒருவனுக்கே அளித்து, தாமும் இன்புற்று அவனையும் இன்புறுத்தும், கற்புத் தன்மை அற்றவர்கள் பொது மகளிர். தம் உடலை விரும்பி அதற்கான விலையைக் கொடுக்கும் ஆடவர்க்கெல்லாம், இன்னார் இனியார் என்ற பேதமின்றி, இன்பத்தை வாரி வழங்குவர். பொது மகளிர் ஒருத்திக்கு ஒருவன் என்னும் அறநெறிக்கு எதிரானவர் என்பதால், இவ்வகைப் பெண்டிருடனான உறவு நற்குடும்பங்களின் கேட்டிற்கு வழிவகுக்கும். எனவே, இவர்களுடனான உறவைச் சான்றோர் தீதென்று கடிந்துரைப்பர். இத்தன்மை ஆடவர் ஒழுக்கக் குறைபாடு காரணமாகவே அமைகிறது என்பதும் கருத்தாம்.

விளக்கின் ஒளியும், பொது மகளிர் தொடர்பும், வேறு வேறல்ல. மயக்கமின்றி, சஞ்சலமின்றி, பொறுமையுடன் ஆராய்ந்து பார்க்கின் இரண்டும் ஒன்றேதான். எண்ணெய் / நெய் வற்றிய அந்தக் கணமே, விளக்கின் ஒளியும் இல்லாமல் போகும். பொது மகளிர் குணமும் அவ்வாறே. பொன்னும், பொருளும் கொடுக்க இயலாமல் போகும் அந்த நொடிப் பொழுதே, பொது மகளிரின் உறவும் நீங்கிவிடும். உண்மை அன்பில்லாதவர் இன்பம் இனியதன்று, நீடித்து நிலைக்காது. துன்பமே தரும். வேசியர் நட்புக்கு விளக்கின் பிரகாசம் உவமானம்.

உயர்ந்த அகன்ற இடுப்பின் அடிப்பாகத்தைக் கொண்ட அழகான பொது மகளுக்குப் பொன்னையும், மணியையும், இரத்தினக் கற்களையும், விலை உயர்ந்த ஆபரணங்களையும் வாரி வழங்கினேன். அப்போது அவள் ‘நீ மலை மீது ஏறிக் கீழே விழுந்து சாக நினைத்தால் கூட, உன்னோடு சேர்ந்து நானும் விழுவேனே அன்றி, நீ இல்லாத உலகில் ஒரு கணம் கூடத் தனியே உயிர் வாழ மாட்டேன். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையெனில், ஒன்றாக இறப்போம்’ என முன்பு உறுதிபடக் கூறினாள். காலம் மாறியது. அவளுக்குக் கொடுக்க இன்றைக்கு என்னிடம் பொருள் இல்லை. வாழப் பிடிக்காமல் இறக்கத் துணிந்த நான், முன்பொரு தருணம் என்னிடம் அவள் சொல்லியதை நினைவுபடுத்தி ‘வா இருவரும் மலையிலிருந்து குதித்து மரணத்திலாவது ஒன்றிணைவோம்’ என்று அழைத்தேன். பொருள் இல்லாத எனது நிலையைத் தெரிந்து கொண்ட அவள் ‘காலிலே வாத நோய். என்னால் மலை ஏற முடியாது’ என்று கூறி வர மறுத்துவிட்டாள். பொது மகளிர் காட்டும் அன்பு போலியானது. பொன்னுக்காகவும், பொருளுக்காகவும் மட்டுமே என்பதை உணர்த்தும் பாடலிது.

பரந்து விரிந்த பெரிய விண்ணுலகத்தில் தேவர்களால் தொழப்படும் செந்தாமரை போன்ற சிவந்த கண்களைக் கொண்ட மும்மூர்த்திகளுள் ஒருவர் காக்கும் கடவுளான நாராயணன். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்ட திருமாலே ஆனாலும், கையில் கொடுப்பதற்குப் பணம் ஏதும் இல்லாதவர்க்கு மதிப்போ, மரியாதையோ கிடையாது. கொய்யத்தக்கத் தளிர் போன்ற மேனியை உடைய பொது மகளிர், அவர்களுடன் கூடி இன்பம் தராமல், இரு கரம் குவித்து, கைகளால் கும்பிட்டு அனுப்பி விடுவார்கள். ஆடவர்க்கு அழகும், பெருமையும் இருந்தாலும், வரைவின் மகளிர் பொருள் தராதவர்க்கு இன்பம் தரமாட்டார்.

அன்பில்லாத மனத்தை உடைய, அழகிய குவளை மலர் போன்ற கண்களை உடைய பொது மகளிர் கையில் மிகுதியாகப் பொருள் உள்ள ஆடவரையே விரும்புவர். ஆடவரின் கல்வியறிவோ, உயர்குடிப் பிறப்போ முக்கியமல்ல. எத்துணைப் பிற வழிகளில் சிறந்தவரே என்றாலும், செல்வம் இல்லாதவரை, கொடிய விஷம்போல் வெறுப்பார்கள். செக்கை ஆட்டும் தொழில் செய்பவர் என்றாலும், பெரும் செல்வம் உடையவர் எனில், பொது மகளிர்க்கு அத்தகையோரே இனிமையானவர்கள். பொருள் இல்லாதோரை விஷம் போல் வெறுப்பதும், பொருள் உள்ளோரை சர்க்கரை போல் விரும்புவதும் வரைவின் மகளிர் இயல்பாகும். பொது மகளிர் செல்வத்தைக் கொண்டே ஆடவரின் தகுதியை எடை போடுவர். பணம் படைத்தவர்க்குச் சர்க்கரையும், பணம் இல்லாதவர்க்கு நஞ்சும் உவமைகள். (செக்கு ஆட்டுவோர் மேனி எப்போது அழுக்கு நிறைந்திருக்கும், வியர்வை வழிந்து கொண்டிருக்கும்).

விலாங்கு மீனுக்கு ஒரு வித்தியாசமான குணமுண்டு. தன்னைப் பாம்பு பிடிக்க வந்தால் தானும் அதன் இனமே என்பதை உணர்த்தத் தலையைக் காட்டும். தன்னைத் தெளிந்த தண்ணீரிலுள்ள மீன் பிடிக்க வந்தால் தானும் அதன் இனமே என்பதை உணர்த்த வாலைக் காட்டும். இவ்வாறாகப் பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையையும் காட்டி விலாங்கு மீன் தப்பித்துக் கொள்ளும். பொது மகளிரும் இத்தகைய குணம் கொண்டவர்களே. அவரவர் விருப்பம் போல ஆசை காட்டிப் பலருக்கும் இன்பம் தருவர். அவருடனான உறவை உண்மை அன்பென நாடிச் செல்வோர் பகுத்தறிவற்ற மூடர்கள். ஏமாற்றுவோரை விலாங்கு மீனுக்கு ஒப்பிடுவது வழக்கம். பொது மகளிர்க்கு விலாங்கு மீன் உவமை.

‘பொத்தலிட்டு நூலிலே கோக்கப்பட்டிருக்கும் இரத்தினம் போலவும், சேர்ந்திருப்பதை விட்டு நீங்காது எப்போதும் இணைந்திருக்கும் அன்றில் பறவைகள் போலவும், உம்மை விட்டு எப்போதும் பிரிய மாட்டோம்’ என்று முன்பொரு முறை உறுதிபடச் சொன்னாள். அப்போது, புன்னகை பூக்க, பொன் வளை அணிந்து, ஆசையோடு பேசிய அந்தப் பொது மகள், இப்போது, போர் செய்யும் தன்மையுள்ள ஆட்டுக் கடாவின் கொம்புபோல், வேறுபட்ட குணம் கொண்டவளாக வஞ்சகியாக மாறிவிட்டாள். அவ்வாறு அவள் உன்னை வெறுத்துப் புறக்கணித்த பிறகும், அவளது போலியான அன்பை நிஜமென்று நம்பி ஆசை மாறாமல் இருக்கப் போகிறாயா? அல்லது அவளை விட்டு விலகி என்னோடு வரப் போகிறாயா?’ எனத் தனது மனத்தை நோக்கி ஒருவன் கேட்கிறான். பொது மகளிர் மனம் மாறுபட்டதற்கு, முறுக்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக் கடாவின் கொம்பு உவமானம்.

காட்டுப் பசு உடலை நக்கினால் அப்போதைக்குச் சுகமாக இருந்து பின்னர் அதுவே விஷம்போல் மரணத்தை விளைவிக்குமாம். சற்று அஜாக்கிரதையாக உள்ளபோது முட்டித் தள்ளிக் கொல்லும் என்பர். பொது மகளிரும் தம்மோடு கூடியவர்களின் செல்வத்தை ஆசை காட்டிக் கவர்ந்து கொண்டு அவர் பொருளின்றி வறிஞராக வரும்போது, சண்டித்தனம் செய்யும் எருதைப்போல் குப்புறக் கவிழ்ந்து படுத்துக் கொள்வர். இத்தகைய பொது மகளிர் அன்பு தமக்கு மட்டுமே உரியதென நம்பி ஏமாந்த பலர், இறுதியில் ஏளனத்துக்கும், பரிகசிப்புக்கும் ஆளாவர். வேசியர் தரும் இன்பமெல்லாம் ஆசை காட்டிச் செல்வத்தைக் கவர்ந்து கொண்டு பின் கைவிடுவர் என்பது கருத்து. பொது மகளிர்க்கு காட்டுப் பசுவும், எருதும் உவமைகள்.

பொது மகளிர் தம்மை விரும்பி வந்தவர்களிடம் அன்புள்ளவர் போல் ஆசை காட்டி, அவர்கள் மோகத்தில் மயங்கிக் கிடக்கும்போது பொருளைப் பறித்துச் செல்வர். அத்தகையோர், வறுமையுற்ற காலத்து தம்மைத் தேடி வந்தால், மானைப் போன்று மருளும் கண்களைக் கொண்ட வரைவின் மகளிர், ஆட்டுக் கடாவின் கொம்பைப்போல் முறுக்கிக் கொள்வர். முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டும் காணாததுபோல் இருப்பர். எனவே, அற வழியிலே நடந்து, நல்ல முக்தி மார்க்கத்தை அடைய வேண்டுமெனக் கருதுவோர், இத்தகைய குணம் கொண்ட பொது மகளிரின் பெரிய தனங்களை ஒருபோதும் விரும்பித் தழுவிக் கொள்ள மாட்டார். ‘தந்நெறிப் பெண்டிர்’ என்போர் யாருக்கும் வசப்படாமல், தம்முடைய எண்ணம்போல் நடந்து கொள்ளும் பொது மகளிரைக் குறிக்கும் காரணப் பெயராகும்.

ஒளி பொருந்திய நெற்றியை உடைய பொது மகளிர் யாருக்கும் உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆகார். ஆத்மார்த்தமான உள்ளத்து அன்பை யார் மீதும் செலுத்தார். அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படார். தம்முடைய உடல் நலத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவர். தம்மை நாடி வருவோர்க்குத் துன்பம் இழைக்கும் வஞ்சனை எண்ணத்தை யாரும் அறியாமல் மனத்துக்குள்ளேயே அடக்கி வைப்பர். தேடி வருவோரிடம் ஆசை வார்த்தை பேசி மயக்குவர். வரைவின் மகளிர் கூறும் அன்புப் பசப்பு பாசாங்கு மொழியை உண்மை என நம்பி உறவினர் என்றும், எம்மவர் என்றும், எண்ணுபவர் ஏமாந்து போவர்.

மனம் ஒருவர் மீது லயித்திருக்க, மற்றவர் மேல் அன்புள்ளவர் போல் நடிப்பர் பொது மகளிர். இதன் காரணமாகவே, வஞ்சனை மிக்க வஞ்ச மனம் கொண்ட வரைவின் மகளிரை, இருமனப் பெண்டிர் என்றும் கூறுவர். ஒளிரும் விளக்கமான நெற்றியை உடைய பொது மகளிர் அன்புடையவர் போன்று கள்ளத்தனம் செய்வர். முற்பிறவியில் செய்த தீவினை காரணமாக, பாவம் மிகுந்த உடலைப் பெற்ற பாவிகள், அவர்கள் உறவு விலக்கத்தக்கது என்பதை அறியார். அத்தகைய பெண்டிர் மீதே அன்பு செலுத்துவர்.

இன்ப துன்ப இயல் முற்றும்

(தொடரும்)

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *