இன்பவியல்
காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர் மற்றும் காமநுதலியல் ஆகிய இரு அதிகாரங்கள் உள்ளன. இன்பம் ஒன்றையே முற்றும் தரும், கற்புடைய மகளிர் உறவு பற்றிக் கூறுகிறார். இல்லற நூலில் பெண்களுடனான உறவை வெறுத்துக் கூறியிருந்த நிலையில், பெண்களுடனான உறவைப் பாராட்டிக் கூறுதல் முரண் ஆகாது. சிற்றின்பமாகிய காமத்தைக் கூறும் வகையினாலே, பேரின்பத்தின் சிறப்பைக் காட்டி வலியுறுத்துதலே, இதன் சிறப்பாகும். மேலும், உலகிற்குப் பல வகைகளில் உதவியாக அமைவது இல்லறமே. இந்நெறியோடு, உலக வாழ்வு செம்மையுற அமையவும், திறம்பட நடத்தவும், கற்புடை மனைவியோடு கூடிப்பெறும் இன்பமும் முதற் காரணமாகும்.
39. கற்புடை மகளிர்
இவ்வதிகாரத்தின் பொருள் கற்புடைய பெண்களின் தன்மையைக் கூறுவதாகும். பெண்களிடம் தம் நாயகன் ஒருவனிடத்தே மட்டும் உண்டாகும் காதலின் உறுதியே கற்பாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு வகைப் பெண்மைக் குணங்களால் நிறைவுற்றுக் கற்புடைய மகளிர், ஊழின் வலியினால், தனக்குரிய ஒருவனைக் கண்டு காதலித்துக் கடிமணம் புரிந்த பிறகு, அவன் ஒருவனே தனக்கு எல்லாமும் என வாழும் உயரிய நிலையாகும். தான், தனது என எழுகின்ற பொதுவான அகப்பற்றும், புறப்பற்றும், இன்றித் தமது என்னும் உறவுப் பிணிப்பில் ஒன்றுபட்டவளாக நிலைபெறும் பெண்ணின் கற்பின் அமைதியில், உலகின் நலவாழ்வும், வளர்ச்சியும், சிறப்பும், பொருந்தி இருக்கிறது என்பது ஆன்றோர் கூறும் உண்மையாகும்.
களவு மற்றும் கற்பு ஆகியவை அகத்துறையில், காதல் இன்பத்தைத் துய்ப்பதில் இருவேறு நிலைகளாகும். காதலனும் காதலியும் தொல்காப்பியர் கூறும் ‘பால்வரைத் தெய்வம்’ என்ற ஊழின் துணையால், முன்பின் அறியாதவர்களாக இருந்தாலும், ஒரிடத்தில் சந்தித்துக் காதல் கொண்டு, கலந்து இன்பம் துய்க்கின்றனர். இதனைக் ‘களவு’ என அகப்பொருள் இலக்கணம் கூறும். இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள் பிறகு, பலர் அறிய மணந்து கொள்வதை ‘கற்பு’ என்பர் அகப்பொருள் நூலார். முதலில் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டுப் பிறகு திருமணம் புரிந்து கொண்டு, இல்வாழ்க்கையாகிய கற்பொழுக்கத்தை மேற்கொள்வது ‘களவின் வழி வந்த கற்பு’ ஆகும். களவு ஒழுக்கமே நிகழாமல் முதலிலேயே திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்வது ‘களவின் வழி வாரா கற்பு’ ஆகும். இந்த இரு வகைக் கற்பிலும், ‘களவின் வழி வந்த கற்பே’ சிறந்தது என்பது பண்டைத் தமிழர் கருத்து.
பெறுவதற்கரிய சிறந்த கற்பினால், இந்திரன் மனைவி இந்திராணியைப் போல் கீர்த்தியும், புகழும் பெற்ற பெண்களைக் காதலியாகப் பெறும் ஆசையோடு, தன் பின்னே ஆண்கள் சுற்ற வேண்டுமென எண்ணாமல், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே கற்புடை மகளிர்க்கான இலக்கணமாகும். மிகச் சிறந்தவளே என்றாலும், தன்னைச் சேர வேண்டுமென விருப்பம் கொள்ளும் ஆண்களுக்குச் சிறிதும் இடம் கொடாமல் ஒழுக வேண்டும். தன்னைப் பார்த்து ஆடவர்கள் ஆசைப்படாத வகையில், நற்குணத்தைப் பேணி, அடக்கத்துடன் நடந்து கொள்ளும், நல்ல நெற்றியை உடைய குலமகளே சிறந்த வாழ்க்கைத் துணை / மனைவி ஆவாள். தான் பிறந்த குலத்தார்க்கும், புகுந்த குலத்தார்க்கும் நற்கதி உண்டாக்குபவளே கற்புடைய மனைவி ஆவாள்.
குடத்து நீரை மட்டுமே காய்ச்சிக் குடிக்கும் துன்பம் நிறைந்த ஏழ்மைக் காலத்தும், கடல் நீரே வற்றும்படி அதிக எண்ணிக்கையில் உறவினர் வந்தாலும், கடமை தவறாதவளாக விளங்க வேண்டும். நற்குணங்களையே ஒழுக்க நெறியாகக் கொள்கின்ற, பெண்ணே இல்வாழ்வுக்கு ஏற்ற துணை ஆவாள். எத்துணைக் கொடிய வறுமை வந்தாலும், சிரித்த முகமும், இன்மொழிப் பேச்சும், விருந்தோம்பலும், சுற்றம் பேணுதலும், வறியவரிடத்து அருளுடைமையும், வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களைத் தேர்ந்து காப்பாற்றி வைத்தலும், சமையல் வல்லமையும், உதவி செய்தலும் உள்ளிட்ட நற்குணங்களுடன், கடமைகளைச் செவ்வனே செய்யும் பெண்ணே சிறந்த மனைவியாவாள்.
வாழும் வீடு மிகவும் சிறியது. நான்கு பக்கங்களிலும் வழிகளை உடையது, வானமே மேற்கூரையாக எல்லா இடங்கள் வழியாகவும் மழைத் துளி உள்ளே விழும். இருப்பினும், இல்லாளுக்கான சிறந்த தான தருமக் கடமைகளைத் தவறாமல் செய்யும் வல்லமை உடையவள் அவள். அவள் வாழும் ஊரில் உள்ளவர்கள், அவளது குணத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசுவர். அத்தகைய கற்பினைக் கொண்ட நற்குணமுள்ள மனைவி இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும். உண்ணப் போதிய உணவுமின்றி, குடியிருக்க நல்ல வீடுமின்றி, வறுமையில் வாடினும், ஒழுக்கம் பிறழாமல் பிறர்க்கு உதவும் குணவதியே சிறந்த மனைவி ஆவாள்.
கண்ணால் காண்பதற்கு அழகானவள். இனிதான உடல் வனப்புள்ள பேரழகி. ஆனாலும், அவளது கணவன் விரும்புகின்ற வகையில்தான் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். நற்செயல்களில் மட்டுமே ஈடுபடுவாள். தீய காரியங்களைச் செய்ய அச்சம் கொள்வாள். ஊரார் பழிப்புக்கும், பிற ஆடவர்க்கும் நாணி ஒதுங்குவாள். கணவனுக்கு அடங்கி நடப்பாள். கணவனுக்கு அஞ்சிப் பிணங்கி ஊடல் கொள்வாள். பின்பு காலமறிந்து அவனுக்கு இன்பம் உண்டாகும்படி கூடுவாள். இவ்வாறாக ஊடல் தீர்ப்பவளாக, கள்ளம் கபடமற்ற இனிய பேச்சுக்களைக் கொண்டவளாக, கணவன் மனம் கோணாமல் நடப்பவளே கற்புடை மகளே சிறந்த மனைவி ஆவாள்.
எந்நாளும் எனது கணவர் எனது தோள்களைத் தழுவிக் கூடி எழுந்தாலும், அவரைத் திருமணம் செய்த அன்று புதிதாக உறவு கொண்டு நாணியதைப் போலவே. இன்றும் அவரைக் கண்டதும் நாணம் அடைகிறேன். இவ்வாறிருக்க, எந்நாளும், பணம் பொருள் ஆசையால், பலரைத் தழுவிக் கொண்டு வாழும் பொது மகளிர், எப்படித்தான் நாணமின்றி உறவு கொள்கின்றனரோ? எல்லோருக்கும் உரியவராக இருக்கின்றனரோ? இது என்ன பெண் தன்மையோ? தனது கணவன் மீது பற்றுள்ள குலமகள் ஒருத்தி, பொது மகளிரைப் பார்த்து மேற்கண்டவாறு இகழ்கிறாள். பலரையும் தழுவிக் கொள்ளும் பொது மகளிர் வெட்கம் இல்லாதவர்கள் என்பது கருத்து.
வாரிக் கொடுக்கும் ஈகைத் தன்மை கொண்ட வள்ளலிடம் உள்ள செல்வமானது, மனத்திலே நல்லறிவுள்ளவன் படித்தறிந்த நூல்களைப்போல் எல்லோர்க்கும் பயன்படும். அதுபோல், நாணத்தை அணிகலனாகக் கொண்ட கற்புடைய குலமகளிரின் அழகு, தெளிந்த ஆண் தன்மையுள்ள வீரன் கையிலுள்ள கூரான வாள்போல் பலரும் புகழும்படியாகப் பெருமையுடன் விளங்கும். செல்வத்துக்கு நூலும், அழகுக்கு வாளும் உவமைகள்.
பகுத்தறிவற்ற ஒருவன் கருமையான கொள்ளையும், சிறந்த சிவப்புக் கொள்ளையும், அவற்றின் தன்மையும், தரமும் அறிந்து வேறு வேறாகக் கொள்ளாமல், ஒரே விலைக்கும், ஒரே அளவுக்கும், சரிசமமாக வாங்கிக் கொண்டானாம். அதுபோல், எனக்கு ஈடில்லாத, நல்ல நெற்றியை உடைய, பொது மகளிரைத் தழுவிக் கொண்ட மலைபோன்ற மார்புடைய எனது கணவன், குளிக்காமல் என்னையும் தழுவ வருகின்றான். அவன் நீராடிவிட்டு வந்தால் மட்டுமே என்னோடு கூடலாம். கருங்கொள் மட்டமானது. செங்கொள் உயர்ந்தது. குலமகளைக் காட்டிலும் பொதுமகள் இழிந்தவள் என்பதால், பொதுமகளுக்குக் கருங்கொள்ளும், குலமகளுக்கு செங்கொள்ளும் உவமைகள். (கணவன் செய்யும் துரோகத்தைப் பொறுத்துக் கொள்வதுடன், பொது மகளிருடன் உறவு கொண்ட பின்னர் குளித்துவிட்டு வந்தால் கூடலாம் என்பதே கற்புடைய மகளிர் நிலையாகும்).
(பாணன் என்பவன் பாட்டுப் பாடுபவன். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே செய்திகளைப் பரிமாறும் தூதன்) பாணனே! கொடுமையான சொற்களை என்னிடம் கூறாதே. (உடுக்கைக்கு வலது மற்றும் இடது என இரு பக்கங்கள் உண்டு. உடுக்கை அடிக்கும் போது வலப்பக்கமே அதிகம் அடிபடும். இடப்பக்கம் அதிகம் அடிபடாது. எனவே, இடப்பக்கம் பயன்படாது என்பர்). அதுபோல், நான் தலைவனுக்கு இப்போது உடுக்கையின் இடப்பக்கம் போல் பயனற்று இருக்கிறேன். எனவே, நீ மெதுவாக என்னை விட்டு விலகி, உடுக்கையின் வலது பக்கம்போல் தலைவனின் காதலுக்கு அதிகம் பயன்பட்டுக் கொண்டிருக்கும் பொது மகளிரிடம் சென்று சொல்வாயாக! பொது மகளிரை விட்டுப் பிரிந்த தலைவன் மீண்டும் தலைவியின் இசைவைப் பெற பாணனைத் தூது விடுகிறான். ஆனால், தலைவியோ ஊடல் குறையாமல் சொன்ன வார்த்தைகள் இவை. உடுக்கையின் இடது பக்கம் குலமகளுக்கும், வலது பக்கம் பொதுமகளுக்கும் உவமை.
மண்டியிருக்கும் கோரைப் புற்களைப் பிடுங்கி எடுத்த அடுத்த கணமே, நீர் சுரந்து கொண்டிருக்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊரை உடைய தலைவனே! உன்னோடு வாழ்ந்திருந்த காலத்தில், உன் தலை மீது ஓர் ஈ பறந்தாலும் அதைக் காணச் சகிக்காமல் வருந்திக் கவலைப்பட்டளும் நானே! இப்போது, என்னை விட்டுக் கணவர் பிரிந்து சென்று விட்டார். மோகத்தின் உச்சத்தில், அனலாகக் கொதிக்க, பொது மகளிர், தங்களது தனங்களால் என் தலைவனின் பரந்து விரிந்த மார்பின் மீது மோதுகின்றனர். தழுவிய வேகத்தில், பூசியிருந்த குளிர்ந்த சந்தனக் கலவை அழிந்த காட்சியையும் நான் பொறுமையுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பொது மகளிரோடு கூடி அனுபவித்து விட்டு, இல்லம் திரும்பிய தலைவனோடு ஊடியிராமல், அவனோடு கூடியது ஏன்? எனக் கேட்ட தோழிக்குத் தலைவி சொன்ன பதிலாகும். கட்டிய கணவன் பொது மகளிரோடு கூடிக் குலவினாலும், கற்புடைய மகளிர் பொறுமை காக்கும் இயல்பினராம் என்பது கருத்து.
‘பாணனே! அரும்புகள் விரிந்து மலர்ந்த மாலையை அணிந்தவன் என்னிடம் அன்பு காட்டுவான், என்னை வந்து சேர்வான் என்னும் பெரும் பொய்களைச் சொல்ல வேண்டாம். அந்த மருத நிலத் தலைவனுக்கு நாங்கள் கரும்பின் கடைசியிலுள்ள கணுவைப் போன்றவர்கள். எனவே நீ சொல்ல வந்த செய்தியைக் கரும்பின் நடுப்பாகத்தைப் போல் என் தலைவனுக்கு இனிதாக இருக்கும் பொது மகளிரிடம் போய்ச் சொல்’ எனக் கோபத்தில் மனைவி வெடிக்கிறாள். தலைவியைப் பிரிந்து தலைவன் முன்பு பொதுமகளுடன் கூடி, இப்போது மீண்டும் தலைவியோடு சேரத் துடிக்கிறான். ஆனால், தலைவியோ கோபத்தில் இருக்கிறாள். எனவே அவள் கோபத்தைத் தணிக்க, பாணன் ஒருவனைத் தலைவன் அனுப்புகிறான். ‘தலைவன் உன்னிடம் விரைந்து வருவான்’ எனப் பாணன் சமாதான மொழி சொன்னதற்குத் தலைவி வெகுண்டு கூறிய வார்த்தைகள் இவை. கரும்பின் கடைக் கணுக்களில் இனிப்பு இல்லாததால் குலமகளுக்கும், இடைப்பகுதி கணுக்களின் இனிப்பு இருப்பதால் பொதுமகளுக்கும் உவமைகள்.
இன்பவியல் முற்றும்
(தொடரும்)