காமநுதலியல்
காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் ‘காமநுதல் இயல்’ ஆகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப்பால் என்றும், முந்தைய இரண்டும் பொருட்பால் எனக் கொள்வாரும் உண்டு. இப்பிரிவு காமத்தின் பாகுபாடு மற்றும் காம இன்பத்தின் பகுதிகள் குறித்துக் கூறுவதாகும். இழி குணம் கொண்ட பொது மகளிர் இன்பத்தை விடவும், உயர்குணம் கொண்ட குலமகளிர் இன்பம் நன்று என்பதால், இவ்வதிகாரத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
கடல் அலைகள் ஓயாமல் மோதுதற்கு இடமான நீண்ட நீர்நிலைகளின் குளிர்ச்சி பொருந்திய கரைகளை உடைய தலைவனே! காதலனைத் தழுவிக் கூடாவிடின், பிரிவுத் துன்பத்தின் மிகுதியால், தேகம் மெலிந்து, வளையல் கழன்று, வெளிர்நிறம் (பசலை) உடலெங்கும் பரவுகிறது. காதலனுடன் ஊடி வருந்தாமல், எப்போதும் சேர்ந்தே இருந்தால், காம நுகர்ச்சி சுவை இல்லாமல் போகும். எனவே காதலுடன் முதலில் கூடுவதும், பின்பு ஊடுவதுமே, காம இன்பத்தை அடைவதற்கான ஒரே வழியாகும். ஊடலும், கூடலுமே இல்லற வாழ்வில் கணவன் மனைவிக்கு இன்பம் தரும் நன்நெறியாகும்.
தம்மை விரும்பும் காதலரின் மாலை அணிந்த அழகிய மார்பை, மகிழ்ச்சி பெருகப் பூரிப்புடன் விம்மித் தழுவ முடியாமல் தலைவனைப் பிரிந்து தலைவி வாடுகிறாள். ‘இம்’ என்னும் பேரொலியுடன் கருத்த மேகங்கள் திசையெங்கும் இடி முழங்க மழையைப் பொழிகின்றன. மழை பெய்யும் ஓசையும், மாரி காலத்து இடி முழக்கமும், உலகுக்கே மகிழ்ச்சி தரக் கூடியதாகும். ஆனால், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கோ, இந்த ஓசை, இறந்த வீட்டில் ஒலிக்கும் சாவுப் பறையொலி போல் நாராசமாக உள்ளதாம்.
கம்மியம் எனப்படும் ஒரு வகைக் கைத்தொழிலைச் செய்கின்ற கம்மாளர்களின் கருவிகளை வேலையின்றி அடங்கச் செய்யும் கதிரவன் மறையும் அந்தி நேரம். மனத்தை மயக்கும் மாலைப் பொழுதில், உள்ளம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்ட, பகலெல்லாம் தேடித் தேடி ஆராய்ந்து பறித்த மலர்களை, வாஞ்சையுடன் தலைவி தொடுத்துக் கொண்டிருக்கிறாள். திடீரென அவளுக்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. ‘எனக்குத்தான் நாயகன் இல்லையே? தலைமகனைப் பிரிந்த மகளிர்க்கு இந்தப் பூமாலை எதற்கு? இந்த மலர் மாலையைத் தொடுத்து யாருக்குச் சூட்டப் போகிறேன்? இந்த மாலையால் யாருக்கு என்ன பயன்?’ என்று புலம்பிக் கொண்டே கையிலிருந்த மாலையைக் கீழே போட்டுவிட்டுக் கண் கலங்கி அழத் தொடங்குகிறாள். மாலை நேரம் கணவன் வருவான், அவனுக்கு மாலை சூட்டலாம் என எண்ணி மனைவி பூத்தொடுக்கிறாள். அவன் வராமல் போகவே மாலையால் என்ன பயன் எனக் கலங்குகிறாள்.
தனது தோளைத் தலையணையின் மீது வைத்து (தனது தோளையே / கைகளையே தலையணையாகக் கொண்டு) படுத்துத் தலைவி சோர்ந்து கிடக்கிறாள். துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ள விம்மித் துடிக்கிறாள். மேற்கே மறைகின்ற செஞ்சுடர் கதிரவனைப் பார்த்து, ரேகைகள் படர்ந்த கண்களில் நிரம்பி வழியும் நீரை, காந்தள் மலர் போன்ற தனது மெல்லிய விரல்களாலே அடிக்கடித் துடைத்தவாறே கதறி அழுகிறாள். செய்த தவறுகளையும், தலைவன் பிரிந்த நாளை எண்ணிக் கணக்கு வைத்தும், துயரம் தாங்காமல் தலைவி உறக்கமின்றி வருந்துகிறாளோ? ஐயோ!
சிரல் அல்லது சிச்சிலிக் குருவி எனப்படும் சிறிய மீன் கொத்திப் பறவையானது, எனது காதலியின் கண்களைக் கயல் மீன்கள் என நினைத்து, அவள் பின்னே பறந்தது. கொத்துவதற்காக மேலும் கீழுமாக, அக்கம் பக்கமாக, முன்னும் பின்னுமாக ஊக்கமுடன் திரிந்தது. அவளது கண்களைப் பார்த்ததும் அப்பறவைக்குத் திடீரென ஓர் ஐயம் எழுந்தது. விழிகளுக்கு மேலுள்ள ஒளிரும் புருவங்கள் வளைந்திருப்பதைக் கண்டு, அவை வில்லின் வளைவோ என அஞ்சி, கண்களாகிய கயல் மீன்களைக் கொத்தாமல் பறந்து சென்றது. காதலியின் கண் = கயல் மீன்; புருவம் = வளைந்த வில்.
‘செவ்வல்லி அல்லது செவ்வாம்பல் மலர்போல் நறுமணம் வீசும் வாயையும், அழகிய சிற்றிடையையும் கொண்டவள் என் மகள். செந்நிறப் பஞ்சுக் குழம்பைப் பூச்செண்டால் உடல் முழுவதும் மெதுவாகத் தடவிப் பூசினாலும், அதைப் பொறுக்க முடியாமல் வலிக்கிறது எனத் துடிப்பாள். அழுத்தாமல், இன்னும் இன்னும் மெல்ல மெல்லத் தடவுங்கள் என அஞ்சிக் கால்களைப் பின்னே இழுத்துக் கொள்வாள். அத்தகைய மலரினும் மெல்லிய பாதங்கள், காட்டு வழியில் நிறைந்திருக்கும் கொடுமையான பருக்கைக் கற்களை எப்படித்தான் தாங்கிக் கொண்டனவோ? ஐயோ!’ என மகளை எண்ணித் தாய் கலங்குகிறாள். செந்நிறக் பஞ்சுக் குழம்பைப் பூக்களால் தொட்டு மெல்லத் தடவினாலே வலியால் துடிக்கும் என் மகளின் பாதங்கள், காட்டிலுள்ள கூர்மையான கருங்கற்களை எப்படித் தாங்குமோ எனத் தாய் பரிதவிக்கிறாள்.
பனை ஓலைகளிலே கணக்கர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும்போது ‘க்றீச் க்றிச்’ என ஏற்படும் ஓசை அடங்கும் அந்திப் பொழுது. செவ்வானில் சூரியன் மறையும் மாலை நேரம். பொருள் தேட என்னைப் பிரிந்து சென்ற கணவர் இன்னும் இல்லம் திரும்பவில்லை. அவர் வருகையை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன். வாசனை மிக்க மலர் மாலைகள் சூடியும், மார்பகங்களின் மீது நறுமணம் வீசும் சந்தனக் குழம்பைப் பூசியும், அவரை வரவேற்க நன்கு அலங்கரித்துக் கொண்டுள்ளேன். ஆனால் அவர் வரவில்லை. அவர் இல்லாத சூழலில், எனக்கு இந்த அலங்காரம் எதற்கு? என்று சொல்லிப் புலம்பினாள். அணிந்து கொண்டிருந்த பூ மாலைகளைப் பிய்த்து எறிந்தாள். கணவனைப் பிரிந்த ஏக்கத்தில் மார்பகங்களில் பூசிய ஈரமான சந்தனக் குழம்பு இப்போது செதில் செதிலாகக் காய்ந்து விட்டது. உலர்ந்த சந்தனத்தை உதிர்த்துத் தள்ளி விட்டுக் கணவரின் பிரிவை நினைத்து அழத் தொடங்குகிறாள்.
‘ஒளிரும் பளபளக்கும் பிரகாசமான வளையல்களை அணிந்தவளே! யாருமே கடப்பதற்கு அஞ்சும் பயங்கரமான அடர்ந்த காட்டுக்குள், காளை போன்ற தலைவனின் பின்னால் நீ நாளை நடந்து போகும் அளவுக்கு மன உறுதியும், உடல் வல்லமையும் உன்னிடம் இருக்கிறதா?’ என உடன்போக்குக்குத் தயாரான தலைவியிடம் தோழி ஐயமுடன் கேட்கிறாள்? அதற்குத் தலைவி ‘பெரியதொரு குதிரையை ஒருவன் வாங்கியிருப்பின், அப்போதே அதன் மீது ஏறிச் சவாரி செய்யும் வழிமுறையையும், திறனையும் அறிந்திருப்பான் அல்லவா? அதுபோலத்தான் நானும். ஒருவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கைப்பட்ட நான், எத்துணைத் துன்பமும், இடரும் வந்தாலும், அவன் பின் செல்ல, உடலாலும், உள்ளத்தாலும், என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்’ எனப் பதிலளித்தாள்.
‘எனது மார்புக் காம்புகளும், முத்து மாலையும் நன்றாக அழுந்தும் வகையில், என் உடல் முழுவதையும் நேற்று என் மகள் ஆரத் தழுவிக் கொண்ட காரணத்தை நான் அப்போது சிறிதும் அறியவில்லை. தாமரை மலரில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியை ஒத்த, அழகிய சித்திரப் பதுமையைப் போன்ற எனது மகள், இவ்வாறு என்னை அழுந்தக் கட்டி அணைத்ததன் நோக்கம் என்ன? என்னை விட்டுப் பிரிந்து, மான் கூட்டங்கள் அஞ்சி ஓடும், பயங்கரமான புலிகள் வாழும் கொடுமையான காட்டுக்குள், காதலனுடன் செல்லப் போவதை மறைமுகமாகவும், குறிப்பாகவும் உணர்த்தவே அவ்வாறு செய்தாளோ?’ என மகளைப் பிரிந்த தாய் கண் கலங்குகிறாள்.
பொன் போன்ற தேமல் படர்ந்த, கோங்க மலரின் அரும்பு போன்ற, மார்பகங்களை உடைய பெண்ணே! நெற்றிக் கண்ணோடு சேர்த்து மூன்று கண்களைக் கொண்ட முக்கண் சிவபெருமானும், கரைகின்ற காக்கையும், படமெடுக்கும் பாம்பும், என்னைப் பெற்றெடுத்த தாயும், எனக்கு இழைத்த குற்றம் என்ன? (ஒன்றும் இல்லை). பொருள் ஈட்டுவதற்காக எனது கணவன் என்னைப் பிரிந்து சென்றதுதான் எனக்குச் செய்த பிழையாகும். இது கணவனைப் பிரிந்து தனித்திருக்கும் பெண்ணின் கூற்றாகும். நெற்றிக் கண்ணால் எரித்த மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்த முக்கண் சிவபெருமான். தனது கூட்டில் முட்டையிட்டுப் பொரிந்த குயில் குஞ்சுகளைக் கொல்லாத காக்கை. தான் விழுங்கிய சந்திரனை மீண்டும் உமிழ்ந்த பாம்பு. தன்னைப் பெற்ற போதே கொல்லாமல் வளர்த்த தாய். எனவே, சிவன், காக்கை, பாம்பு, தாய் ஆகிய நால்வருமே குற்றம் செய்தவர்கள் எனக் கூற வந்தவள், அவ்வாறு சொல்லாது, அவர்கள் குற்றம் செய்யவில்லை என்றாள். பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற அவள் கணவன் செய்ததுதான் குற்றம் என்று நயமாக மாற்றிக் கூறினாள்.
நாலடியார் முற்றும்