ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி கே. சந்துரு அவர்களின் ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலை படிக்கத் தொடங்கி ஐந்தே நாட்களில் முடித்துவிட்டேன். பொதுவாக சுயசரிதை எழுதுபவர்கள் முன்னுரையில் ஒரு சிறிய குறிப்பைச் சேர்த்துவிடுவார்கள். உண்மையை முழுமையாகச் சொன்னால் பலரைச் சங்கடத்தில் ஆழ்த்தவேண்டியிருக்கும் என்பதால் பலவற்றைத் தவிர்த்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்பதே அந்தக் குறிப்பு. இந்நூலில் அப்படியொரு குறிப்புக்கான அவசியமே இல்லை. 30 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் 7 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர் பல உண்மைகளைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
1971ல் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்ததையொட்டி, மாணவர்களிடையே எதிர்ப்பு கிளம்பி போராட்டமாக வெடிக்கிறது. அதனைத் தொடர்ந்து கல்லூரி, விடுதி வளாகங்களுக்குள் புகுந்து காவல்துறை மாணவர்கள்மீதான தடியடித் தாக்குதல் நடத்துகிறது. உதயகுமார் என்கிற மாணவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அது பிரச்னையாக உருவெடுக்கிறபோது மாணவரின் தந்தையே ‘இது என் மகன் அல்ல’ எனச் சொல்ல வைக்கப்பட்டு, படிப்படியாக வழக்கு மட்டுப்படுத்தப்படுகிறது.
அப்போது மாணவர் சங்கத்தைக் கட்டமைத்து போராட்டங்களை முன்னெடுத்த நூலாசிரியர் அந்த நிகழ்வுகளை முதல் அத்தியாயத்தில் விரிவாக விவரிக்கிறார். தனி நீதிபதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, அதன் முன்பாக மாணவர்கள் சாட்சியம் அளித்தது, விடுதி வளாகங்களில் ரத்தக் கறைகளும், பூட்ஸ் தடங்களும் இருந்தவற்றை விசாரணை ஆணையத்திடம் அழைத்துச் சென்று காண்பித்தது, இருப்பினும் அரசியல் அழுத்தங்களால் விசாரணை நடவடிக்கைகள் நீர்த்துப் போனது என பல வரலாற்றுச் செய்திகளை விவரித்துள்ளார். இதே போல் 22 தலைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விறுவிறுப்பான நடையில் ஒரு திரில்லர் நாவல் படிப்பதுபோல் இருக்கிறது.
அரசியல் அழுத்தங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘உலகில் நடக்கும் பல சூழ்ச்சிகள், தந்திரோபாயங்கள் இவையெல்லாம் புரியாத இளம் வயதில், ஒரு அப்பா தனது மகனை இவன் என் மகனில்லை! என்று சாட்சி சொல்ல வைத்த இந்த அமைப்பையும், அதன் பின்னால் இருந்த மனிதர்களையும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது’ என்று குறிப்பிடுவதோடு, எந்த முதல்வரை எதிர்த்துப் போராட்டக் களத்தில் முன்னணியாக இயங்க நேரிட்டதோ, அதே முதல்வர் பின்னாளில் தான் நீதிபதியாக ஓய்வுபெற்ற பின் சமூக நீதி குறித்தத் தீா்ப்புகளை ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீா்ப்புகள்’ என்று புத்தகமாக வெளியிட்டபின் அதைப் படித்துவிட்டு கலைஞர் பாராட்டியது பற்றியும் தனக்கு நீதிபதி என்கிற பரிந்துரை எழுகிறபோது அவர் பரிந்துரைத்ததையும் செய்திகளாகக் குறிப்பிடுகிறார்.
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்றுதான் தொடக்ககத்தில் விரும்பியிருக்கிறார். விசாரணை ஆணையத்தின் நீதிபதியே ஒரு சந்தர்ப்பத்தில் நூலாசிரியரைச் சட்டம் பயிலச் சொல்லியிருக்கிறார். பின்னாளில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் வழிகாட்டியதன் அடிப்படையில் சட்டம் பயில நேரிட்டதையும், வழக்கறிஞர் ஆன பிற்பாடு, தொழிலாளர்கள் தரப்பு, வறியவர்களின் தரப்பிலான பல வழக்குகளைக் கையாண்டதைப் பற்றியும் அடுத்தடுத்து விவரிக்கிறார்.
பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை கால நிகழ்வுகள், மிசா கைதுகள், தொழிற்சங்கத் தலைவர்கள், போராளிகள், எதிர் கட்சி அரசியல் தலைவர்கள் எனப் பலரும் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறைத் துன்பங்கள் அனுபவித்ததைப் பற்றியும் வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. பின்னாளில் அமைக்கப்பட்ட நீதிபதி மு.மு. இஸ்மாயில் ஆணையத்தின் முன்பாக பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதிட்டதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் தான் பிரபலமாக அறியப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நீதிபதி சந்துருவும் மாணவப் பருவத்தில போராட்டக் காலத்தில் தடையை உடைத்து சிறை சென்றிருக்கிறார். அங்கு அன்றாடம் பட்ட சிரமங்களைத் திரைப்படக் காட்சிபோல் விவரித்திருக்கிறார். அந்த அனுபவங்கள் பின்னாளில் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகையில் அவருக்கு உதவிகரமாக இருந்தன.
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. இன்றைக்கு ஆளும் அரசிற்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள், செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் (தேசத் துரோகச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றவற்றில் சிறையிலிடப்படுவதைப் பார்க்கிறோம். அந்த வகையில் தடா மற்றும் பொடா சட்டங்கள் ஆட்சியாளர்களால் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை ‘அது ஒரு பொடா காலம்’ என்னும் அத்தியாயத்தில் விரிவாகப் பேசுகிறார்.
நீதித்துறையின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் காலம் தொட்டு இன்றுவரை பேசு பொருளாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சலமலேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் பகிரங்கமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, வழக்குகளிலும் பணி ஒதுக்கீட்டிலும் உள்ள பாரபட்சங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டனர்.
நீதிபதி ரஞ்சன் கோகாயும் அவர்களுள் ஒருவர். பின்னாளில் அவர் தலைமை நீதிபதியான பின்னரும் அதே நடைமுறை தொடர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் மோசமான வகையிலான குற்றச்சாட்டிற்கு ஆளானார். பின்னர் அரசின் தயவில் நாடாளுமன்றம் சென்றார்.
இந்தப் புத்தகத்தில் கொலிஜிய தேர்வுமுறை, நீதிபதிகளுக்குப் பணி ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி கையாளும் சார்புத்தன்மை போன்றவை குறித்து, தான் சில தலைமை நீதிபதிகளுடன் இணைந்து பணியாற்றிய காலங்கள் குறித்து, கையாண்ட வழக்குகள் குறித்து பல செய்திகளை முன்னிறுத்துவதோடு, நீதித்துறையின் மீதான, சில நீதிபதிகளின் மீதான தனது ஆழமான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
இறுதியாக நானும் நீதிபதியானேன் என்கிற அத்தியாயத்தில் நீதிபதியாகத் தேர்வாவதற்கு முன்பு நடைபெற்ற பல சம்பவங்களைத் தெரிவிக்கிறார். 2001 மார்ச் மாதத்தில் ஒருநாள் மதியம் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின் அவரைச் சந்திக்க அழைத்தபோது, நீதிபதி பதவிக்கு இசைவு கேட்டாராம். திரு சந்துருக்கு முன்பாக 5 பேர் அந்தப் பதவியை மறுத்திருப்பாகச் சொல்லி, உங்களுக்குச் சம்மதமா என்று கேட்டிருக்கிறார். ஆம் சம்மதம் என்று அவர் சொன்னதும், உடனே தெரிவிக்க வேண்டியதில்லை, பெற்றோரிடம் கலந்தாலோசித்து பதில் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். என் பெற்றோர் உயிருடன் இல்லை என்று பதிலளித்திருக்கிறார் திரு. சந்துரு.
அடுத்து நடைபெற்ற கொலிஜியம் கூட்டத்தில் நீதிபதி சந்துருவின் பெயர் பரிந்துரை பட்டியலில் இல்லை. நீதிபதி கே.என். குரூப் இது பற்றித் தலைமை நீதிபதியிடம் கேட்டபோது, சந்துரு பெற்றோரிடம் கலந்து பேசிவிட்டுச் சொல்வார் எனத் தெரிவித்தாராம். உடனடியாக நீதிபதி குரூப், கிருஷ்ணய்யரிடம் இதைத் தெரிவிக்க, அவர் நீதிபதி சந்துருவைத் தொலைபேசியில் அழைத்து நீதிபதி பதவியை ஏற்பதில் தயக்கமா எனக் கேட்டிருக்கிறார். அவருக்கோ எதுவும் விளங்கவில்லை. அதன்பிறகுதான் நடந்தது தெரியவந்திருக்கிறது. மறுநாள் அவரது பெயர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது.
செல்வி ஜெயலலிதா தனது நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது, பின்னர் மத்திய அரசின் தலையீடு, கூட்டணியில் அங்கம் வகித்தக் கட்சியின் தலையீடு எனப் பல நிகழ்வுகளுக்குப் பின்னா் தான் நீதிபதியானதை விரிவாக விவரிக்கிறார். பணிக்காலத்தில் சுமார் 96,000 வழக்குகளை அவர் தீர்வு செய்துள்ளார்.
தொழிலாளர்களுக்காகவும் நலிந்தாருக்காகவும் பலமுறை ஆஜராகியிருக்கிறார். தனது நீதிபதி பணிக்காலத்தில் கையாண்ட பல சுவாரசியமான வழக்குகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.
மொத்தத்தில் அனைவரும் வாசிக்கவேண்டிய முக்கியமான நூல் இது. குறிப்பாக, சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் போன்றவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்.
0
நானும் நீதிபதி ஆனேன், நீதிபதி கே. சந்துரு, அருஞ்சொல் வெளியீடு