சாதி குறித்த எழுத்துகள் பெரும்பாலும் அந்த அமைப்புபற்றி விமர்சனப் பார்வையின்றிப் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டுச் சிந்திக்கத் தவறிவிடுகின்றன. ‘சாதி தொடர்பான மிக எளிய அடிமட்டநிலைப் புரிதலே, அது தொடர்பான உயர் மட்ட அறிவார்ந்த புரிதலாகவும் இருக்கிறது. ஆகவேதான், ஒரே சாதிக் கட்டமைப்பு முறையே சாதி அமைப்பில் உள்ள ஒவ்வொருவராலும் அங்கீகரிக்கப்பட்டும் ஏற்கப்பட்டும் இருக்கிறது என்ற பொது நம்பிக்கையை மாற்றி அமைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது’ என்கிறார் இந்திய சமூகவியல் ஆய்வாளர் தீபங்கர் குப்தா. ஆனால், இந்தியாவில் சாதிகளைப் போலவே வேறு பல அதிகாரக் கட்டமைப்புகளும் உள்ளன என்பதே உண்மைநிலையோடு பொருந்துவதாக இருக்கிறது. அதேபோல், பிராமணர்கள் முதல் ‘தீண்டத்தகாதவர்கள்’ வரையில் ஒவ்வொரு சாதியினரானாலும் கோட்பாடாகவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒற்றை சாதிக் கட்டமைப்பு இருப்பதாகக் கருதுவதும் தவறே.
உண்மை நிலை என்னவெனில், எந்தவொரு சாதியும், சமுதாயத்தில் அதன் படிநிலை எதுவாக இருந்தபோதிலும், தனது நிலை கீழிறக்கப்பட்டிருப்பதற்குக் கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஹரிஜன்களில் எந்த உட்சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தங்களது உடல்கள் அசுத்தமானவை என்ற சாதிய ஆதிக்கவாதிகளின் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்பதை தீபங்கர் சுட்டிக்காட்டுகிறார். அதேநேரத்தில், தங்களது சாதி கலப்படமானது என முத்திரை குத்தப்படுவதை ஏற்க மறுக்கிற எந்தவொரு சாதியும் வேறு சில தூய்மையற்ற சாதிகள் இருப்பதாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. மேலாதிக்க சாதிகளில் மட்டுமல்லாமல், சாதிப் படிநிலையில் அடித்தட்டுகளைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறவர்களிடையேயும் இந்தப் போக்கு இருக்கிறது.
இந்தியாவில் சாதிய அமைப்பு தனக்கான கோட்பாட்டு உரங்களை இந்து மதத்தின் புனித நூல்களிலிருந்தே எடுத்துக்கொள்கிறது. தூய்மையானது, கலப்படமானது என்ற ஒன்றுக்கொன்று எதிரான இருவகைப் பிரிவுகள் இருக்கின்றன என்ற கருத்தையே அந்தப் புனித நூல்கள் வலியுறுத்துகின்றன. மேல் சாதி, தாழ்ந்த சாதி எனப்படும் எல்லாச் சாதிகளுமே அந்த நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டமைப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன்படியே இருக்கின்றன என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்த நூல்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதற்கும், உண்மை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதற்கும் இடையே பெரும் வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு சாதியும் இந்தப் படிநிலையோடு ஒத்துப்போவதற்கும், தனது சொந்தக் கருத்தாக்கத்தை நிறுவுவதற்கும், தனக்கென ஒரு சமூக நிலையை ஏற்படுத்திக்கொள்வதற்கும் பல வழிமுறைகளைக் கையாள்கிறது.
‘தாழ்ந்த சாதிகள்’ எனப்படும் பிரிவுகள், ‘கர்ம வினைப்படியே பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது’ என்ற இந்து மதக் கோட்பாட்டின் அடிப்படையில் தங்கள் மீது சுமத்தப்பட்ட தாழ்நிலையை நீக்க இடையறாது முயல்வது ஏன் என்பதற்கான விளக்கத்தை இதிலேதான் காண முடியும். தாழ்ந்தநிலைக்குத் தள்ளப்பட்ட சாதிகள் தங்களது இழிநிலைக்குத் தாங்களேதான் காரணம் என்ற பிராமணிய போதனையைப் புறந்தள்ளுகின்றன. இவ்வாறு அந்தச் சாதிகள் உறுதியான நிலை எடுப்பது, எல்லோரும் ஏற்றுக்கொண்ட அமைப்புதான் இது என்ற கருத்தாக்கத்தை எதிர்க்கிறது. வாய்ப்புகள் பறிக்கப்படுவதையும் பாகுபடுத்தப்படுவதையும் அடிப்படையாகக் கொண்ட சமத்துவமற்ற சமுதாயக் கட்டமைப்போடு மோதுகிறது.
இந்தியாவில் முன்பு தீண்டத்தகாதவர்கள் என்று தள்ளப்பட்ட, இப்போது தங்களை தலித் என்று அடையாளப்படுத்திக்கொள்கிற சாதியினர் இந்து சமுதாயத்தில் கணிசமான அளவில் இருக்கின்றனர். நெடுங்காலமாக இவர்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’ என, அனைத்து வகையான பொது சமுதாயச் செயல்பாடுகளிலிருந்தும் தள்ளி வைக்கப்பட்டுவந்தார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு, பொருள் உற்பத்திக்காக இவர்களது உழைப்பு மட்டும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டு வந்தது. இத்தகைய ஒரு சமூக ஒடுக்குமுறையை இந்து மத ‘தர்ம சாத்திரங்கள்’ அங்கீகரித்திருந்தன. நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் அது ஒரேவிதமான கறார்த்தன்மையோடு கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. இந்துயிசத்துக்கான சட்டங்களை வகுத்தவரான மனு வரையறுத்த விதிகளை ஆராய்ந்த டாக்டர் அம்பேத்கர், ‘ஓர் இந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான் என்றால், அவனுடைய மதம் அப்படிச் செய்யுமாறு அவனுக்கு ஆணையிடுவதுதான் அதற்குக் காரணம்’ என்று கூறினார்.
மனு தர்மம் இவ்வாறு கூறுகிறது: ‘(ஏதேனும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த) தீண்டத்தகாத ஒருவன், (இரு பிறப்பாளராக உள்ள சாதிகளைச் சேர்ந்தோரால் மட்டுமே தொடப்படக்கூடிய,) இரு பிறப்பாளராக உள்ள இன்னொரு சாதியைச் சேர்ந்தவனைத் தொடுவதன் மூலம் தர்மத்தை மீறுவானானால் அவன் கொல்லப்பட வேண்டும்.’ இப்படிப்பட்ட விதிகள் எல்லாம் அந்தக்கால இந்து சமயக் கட்டமைப்பில்தான் இருந்தன. இந்தக்காலத்தில் நிலைமை அப்படியில்லை என்று ஒருவர் சொல்லலாம். ஆனால், சுதந்தரத்துக்குப் பிறகும், அரசியல் சாசனத்திலேயே தீண்டாமை ஒழிக்கப்பட்டு, அதை மீறுகிறவர்களுக்குத் தண்டனை அளிப்பதற்கான சட்ட விதிகள் உருவாக்கப்பட்ட பிறகும், தீண்டாமைப் பழக்கம் இப்போதும் பல வடிவங்களில் தொடர்கிறது. நகர்ப்புற இந்தியா, கிராமப்புற இந்தியா இரண்டிலுமே தொடர்கிறது. ஆக, சாதி என்பது கடந்த காலத்திய சமுதாய அமைப்பை அடையாளப்படுத்துகிற நினைவுச்சின்னமாகிவிடவில்லை, இன்றும்கூட இந்து சமுதாயத்தின் அடிவாரக்கல்லாக இருக்கிறது.
ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும் காலங்காலமாக இந்திய சமுதாயத்தின் தனித்துவமாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இன்றும்கூட, அரசாங்கத்தால் சில திட்டவட்டமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், பட்டியல் சாதி மக்களின் சுதந்தரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. அவர்கள் தங்களது விடுதலைக்கான நீண்ட போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அண்மைக்காலமாகத் தங்களை ‘தலித்’ என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். தேசிய அரசு, நவீன வாழ்க்கை என்றெல்லாம் பேசுகிற ஆதிக்க சாதிகளின் இலக்கியங்களுடன் கூர்மையாக மாறுபடுகிற தலித் இலக்கியங்கள் தேசத்தையும் அரசையும் விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றன. பிராமணிய மேல் சாதிகளின் பரந்த ஆதிக்கங் களுக்குள் இந்திய தேசம் சிக்கிக்கொண்டது, தலித் மக்களை ஒரு ‘ஜனநாயகச் சிறை’ க்குள் தள்ளிவிட்டிருக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.
‘தலித்’ என்ற சொல் இன்றைய பொதுவான புரிதலில் பல பொருள்களை உள்ளடக்கியிருக்கிறது. ஒவ்வொரு பொருளும் சுரண்டல்–பாகுபாட்டுக் கதைகளைச் சொல்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில், சமூக சீர்திருத்தத்துக்காகப் போராடிய, மராத்தி அடித்தட்டுச் சாதியைச் சேர்ந்த சிந்தனையாளர் ஜோதிராவ் புலேயின் எழுத்துகளிலிருந்து உருவான சொல் இது. 1970ஆம் ஆண்டுகளில் தலித் பேந்தர் (தலித் சிறுத்தைகள்) இயக்கத்தினர் மேற்கொண்ட தீவிரத் திட்டங்களால் இந்தச் சொல்லுக்குப் புதிய பொருள் உருவானது. பரவலாகப் புழக்கத்துக்கு வந்த இந்தச் சொல், ‘ஹரிஜன்’ என்ற சொல்லின் இடத்தைப் பிடித்தது. ஹரிஜன் என்ற சொல் மகாத்மா காந்தியால், 1932 புனே ஒப்பந்தத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. தலித் போராளிகளோ, ஹரிஜன் என்ற சொல்லாடலை, என்றென்றும் அடிமைப்பட்டிருப்பதற்கு என்றே விதிக்கப்பட்ட சமூகங்களை அடையாளப்படுத்துகிற மரபு சார்ந்த ஒரு சொல்லாடலாகவே பார்த்தார்கள்.
மொழி அகராதிப்படி தலித் என்ற சொல்லுக்கு ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ ‘நொறுங்கிப்போனவர்கள்’ என்றே பொருள். தொடக்கத்தில் அது எதிர்மறையான பொருளைத் தருவதாகவே இருந்தது. இன்று அது சுயமரியாதை, பெருமிதம், ஆவேசம் ஆகிய உணர்வுகளோடு இணைந்த சுய உறுதிப்பாட்டுச் சொல்லாகியிருக்கிறது. 1990ஆம் ஆண்டுகளின் தொடக்கக்கட்டத்திலிருந்து தலித் இயக்கங்கள் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. இந்த இயக்கங்களுக்கு உலகளாவிய பரிமாணமும் கிடைத்திருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கிற தலித் இயக்கத்தினர், இந்தியர் அல்லாதோர் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.
முன்னொரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட சமூகங்கள் சுதந்தர இந்தியாவிலும் பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; அரசியல் பங்கேற்பில் இன்னும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். தலித் இயக்கங்கள் இதற்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றன. மண்டல் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, அதன் பரிந்துரைகளை மத்திய – மாநில அரசுகள் செயல்படுத்தியதைத் தொடர்ந்து உயர் சாதி இந்துக்களின் எதிர்த்தாக்குதல்கள் தொடங்கின. அது மட்டுமல்லாமல் மதச் சார்பற்ற இந்தியாவில் சாதிய உணர்வுகளின் தாக்கங்கள் குறித்த ஆழ்ந்த கேள்விகளும் எழுந்துள்ளன.
0
நவீன வளர்ச்சிகளுக்கும் பொருளாதார முன்னேற்றங்களுக்கும் தொழில்துறை மேம்பாடுகளுக்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் சாதிய அமைப்பு ஏற்றதா எதிரானதா? இந்த விவாதம் சுதந்தரத்துக்கு முன்பும் நடந்தது, அதற்குப் பிறகும் நடந்து வருகிறது. சாதிய அமைப்பும் இந்துத்துவமும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்று 1920ஆம் ஆண்டு வாக்கிலேயே கூறினார் ஜெர்மன் நாட்டு அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் மேக்ஸ் வெபர். சுதந்தரம் கிடைத்த பிறகும் சில ஆய்வாளர்கள் இதே கருத்தைக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், சில வல்லுநர்கள் இந்தியாவின் சாதிய அமைப்பு வளைந்துகொடுக்கக்கூடியதாக, புதியவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள். சுதந்தரம் கிடைத்த பத்து ஆண்டுகளுக்குள், அமெரிக்க ஆய்வாளர் செலிக் ஹாரிசன் பொருளாதாரத்திலும் அரசியலிலும் போட்டியை வளர்ப்பதற்கான அடிப்படையாகச் சாதி அமைப்பு இருக்கிறது, அந்த வளர்ச்சிப்போக்கில் அதன் மோசமான தன்மைகளும் பெரிதாகியுள்ளன என்ற கருத்தை வெளியிட்டார். வேறு சொற்களில் கூறுவதானால், சரியாக ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கங்கள் உருவாகாத நிலையில், சாதி என்பது ஒரு வகையான ஜனநாயகக் கட்டமைப்புதான் என்றொரு கருத்து நிலவி வந்திருக்கிறது.
சுதந்தரம் அடைந்ததும் புதிய நாட்டின் முன்னிருந்த தலையாய பணி, தனது குடிமக்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் சம நிலைகளையும் அளிக்கக்கூடிய ஒரு அரசமைப்பு சாசனத்தை எழுதுவதுதான். அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப்பட்ட சட்டங்களும் விதிகளும், சாதியே இல்லாத ஒரு ஜனநாயக சமுதாயமாக இந்த தேசம் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருவதற்கு முயன்றன. மக்களை அடையாளப்படுத்துகிற ஒரு ஊற்றாக, அவர்களை அணிதிரட்டுவதற்கான ஒரு அடிப்படையாக சாதி இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் தாங்கள் தயாராக இல்லை என்பதை இந்திய சமுதாயத்தின் முற்போக்கான பிரிவினர்கூட வெளிப்படுத்தினர். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு 1957 ஜனவரியில் எழுதிய ஒரு தலையங்கத்தில், தேர்தல் சார்ந்த அரசியலில் சாதி எவ்வித முக்கியப் பங்கும் வகிக்காது என்று கூறியிருந்தது. ஆனால் அண்மைக்காலத் தேர்தல் பிரசாரங்களைப் பார்த்தால், அரசியல் கணக்குகள் தொடர்ந்து சாதிகளின் எண்ணிக்கையும் சாதிகளைச் சேர்ந்த மக்களது சதவீதத்தையும் சார்ந்தே இருப்பது தெரியவருகிறது. சொல்லப்போனால், பல முற்போக்கான அரசியல் தலைவர்கள் சாதி அம்சத்தைப் பொருட்படுத்தாதற்குப் பெரிய விலை தர வேண்டியிருந்திருக்கிறது. தேர்தல்களிலும், அமைச்சர்கள் பிரதிநிதித்துவத்திலும், உயர் பதவி நியமனங்களிலும் சாதியின் பங்கு குறித்து நாட்டின் முன்னணிப் பத்திரிகைகள் தலையங்கங்களும் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளன.
காலனியாதிக்கத்துக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றில் 1990களின் முற்பகுதி மிகவும் சிக்கலான காலகட்டமாக அமைந்தது. மக்களைத் திரட்டுவதில் சாதி ஒரு முக்கிய அம்சமாக இந்தக் காலகட்டத்தில்தான் ஏற்கப்பட்டது. அதேவேளையில், தற்கால இந்திய சமுதாயத்தில் மதவாதத்துக்கும் சாதிப்படிநிலை ஏற்பாட்டுக்கும் எதிரான தளமாக சாதி அமையக்கூடும் என்றும் நம்பப்பட்டது. ஆயினும், இட ஒதுக்கீடு பிரச்னையில் உயர்சாதியினர் வெளிப்படுத்திய பிடிவாதமான வெறுப்பு, சாதி உணர்வுகள் கிளப்பிவிடப்படுவது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துமோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கும் உயர்சாதியினருக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அறிவார்ந்த மக்களிடையே, சாதி அடையாளம் நாட்டின் அரசியல் சார்ந்த உயர் தன்னாளுமையை (இறையாண்மை) சீர்குலைத்துவிடும் என்ற கவலையை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சிப்போக்குகளின் பின்னணியில் சாதி அடையாளம் குறித்தும், தேசக் கட்டுமானத்தில் அதன் பங்கு குறித்தும் ஒரு ஆய்வு தேவைப்படுகிறது. காலனியாட்சிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில், தேசியவாதிகள் சாதி அடையாளத்தை நாட்டின் பன்முகத்தன்மை சார்ந்த இதர கூறுகளோடு இணைக்கவும், அதனை ஒரு வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கான அடித்தளமாக்கவும் முயன்றார்கள். ஆகவே, காலனியாட்சிகாலத்தில் அடையாளங்கள் உருவானதன் வரலாற்றையும், அத்தோடு இணைந்த போராட்ட அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டியது தேவையாகிறது.
0
நந்தனின் பிள்ளைகள்: பறையர் வரலாறு 1850 – 1956
ராஜ் சேகர் பாசு
தமிழில் : அ.குமரேசன்
நூலைப் பெற: Amazon | FlipKart