Skip to content
Home » கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

விமர்சனம்: இர.மௌலிதரன்

25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஓர் எழுத்தாளருக்கு இந்த 2025லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது? இந்தக் கேள்வி கொடுத்த ஆர்வத்தில்தான் இந்தத் தொகுப்பை தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு முறையும் ஓர் அனுபவமிக்க எழுத்தாளரின் சமகால படைப்பை வாசிக்கும்பொழுது அ.முத்துலிங்கம் அவர்களின் ஒரு வரி எங்கிருந்தாலும் வந்து என் மனதில் அமர்ந்துவிடும். 100 நாற்காலிகளைச் செய்த ஒரு தச்சனுக்கு 101ஆவது நாற்காலி செய்வது சுலபம். ஆனால், நூறுக்குமேல் சிறுகதைகள் எழுதிய ஓர் எழுத்தாளனுக்கு 101ஆவது கதை எழுதுவது அவருடைய முதல் கதையைவிடப் பல மடங்கு கடினமான ஒன்று.

ஒருபக்கம் அவருடைய கதைகளை அவர் தாண்ட வேண்டும். மறுபக்கம், சமகால படைப்பாளிகளின் திறனுக்கு ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டும். இவையெல்லாம் தாண்டி புதுமையை எதிர்பார்க்கும் ஒரு நவீன யுகத்தில் மொழியில் தொடங்கி வடிவம் முதற்கொண்டு புதுமையான முறையில் படைக்கப்பட வேண்டும். இத்தனை சவால்களுக்கு மத்தியில் எந்தவிதச் சலிப்பும் – அழுத்தமுமின்றி ஒரு நதி அமைதியாக எங்கோ ஒரு வனத்திற்குள் காலம் காலமாக ஓடிக்கொண்டேயிருப்பதுபோல எஸ்.ராவின் சிறுகதை உலகம் தனக்கே உரிய பாதையில் தொடர்ந்து அதே ஆர்பரிப்புடன் ஓடிக்கொண்டேயிருப்பது ஒரு வாசகனாக எனக்குப் பெரும் திகைப்பைக் கொடுக்கிறது .

கவளம், எஸ்.ராவின் புத்தக தலைப்புகளின் தேர்வு தனிச்சிறப்பு மிக்கவை. உறுபசி, யாமம், சஞ்சாரம், துணையெழுத்து, கோடுகள் இல்லாத வரைபடம் – கிதார் இசைக்கும் துறவி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு கவளம் என்ற சொல்லைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு பிடிசோறு என்பதுதான் நினைவுக்கு வந்தது. சங்க இலக்கியத்தில் பயன்படுத்திய ஒரு சொல்லை நவீன தமிழ் சிறுகதைக்குத் தலைப்பாகத் தேர்வு செய்ததில் தொடங்கி இந்தப் புத்தகம் வாசகர்களின் கவனத்தைப் பெறத்தொடங்குகிறது. ஒவ்வொரு தொகுப்பிலும் புதுமையைத் தொடும் எஸ்.ராவின் எழுத்து இந்த முறை குறுங்கதைகள் என்ற வடிவத்தை எட்டியிருக்கிறது. வெற்றி தோல்வி இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்டதுதான் ஒரு புதிய முயற்சி. முயலாமல் திருப்தி அடைவதைக் காட்டிலும் முயன்று தோற்பது நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுக்கும். ஒரு தோல்வி நமக்கும் வெற்றிக்குமான இடைவெளியை குறைத்துவிடுகிறது. இந்தத் தொகுப்பில் இருக்கும் குறுங்கதைகள் பெரும்பாலும் ஒரு கட்டுரையின் வடிவம்போல தோன்றினாலும் ஒருசில குறுங்கதைகள் தன்னளவில் கதைகளாகத் தனித்து நிற்கின்றன. எப்பொழுதும்போல எஸ்ராவிற்குள் இருக்கும் அந்தச் சரித்திர விரும்பியும், தகவல் விரும்பியும் இந்தக் குறுங்கதைக்குள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், அந்த குறுங்கதைகளை வாசிக்கும்பொழுது எஸ்.ராவின் உரையை கேட்பது போலவும் எஸ்ராவே நம்முடன் உரையாடுவது போலவும் உள்ளது. 

எஸ்.ராவின் சிறுகதை தொகுப்பில் ப்ளூ பிரிண்ட் போல சில பகுதிகள் நிச்சயம் இடம்பெறும். எஸ்.ராவை தொடர்ந்து பின்தொடரும் ஒரு வாசகனால் அதனை எளிதில் கண்டுகொள்ள முடியும். உலக இலக்கியத்தின் ஒரு பிரபலமான கதாபாத்திரத்தை வைத்தோ, அவரை சுற்றியோ, அதன் நிலம் மற்றும் சூழலைச் சுற்றியோ ஒரு கதை நிச்சயம் எஸ்.ராவின் தொகுப்பில் இடம் பிடிக்கும். முன்பு ஒரு தொகுப்பில் வீட்டில் அடைந்து கிடக்கும் ஒரு பெண்ணைப் பூனையாக மாற்றியவர், இந்தத் தொகுப்பில் ஒருபடி மேலே சென்று கிரிகோர் சம்ஸாவின் நண்பனின் பார்வையில் உருமாற்றம் கதையை மீட்டுருவாக்கம் செய்திருப்பது சிறப்பு. மற்றொரு கதையில் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அந்தச் சூரியன் ஒளிரும் இரவில் அதே பாலத்தில் நின்று நாஸ்தென்காவை தேடுகிறார். இவை வாசிப்பதற்கு பெரும் ஆர்வத்தையும் வசீகரத்தையும் கொடுக்கிறது. அதே நேரத்தில் தீவிர வாசகனுக்கு மட்டுமே எட்டக்கூடிய இடத்தில் கதைகள் இருப்பதால் இது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே யாதுமற்ற கற்பனை வெளியில் நிகழும் ஒரு கைகுலுக்கல்.

ஏனோ கவளம் கதையில் வரும் அந்த வயது முதிர்ந்த நொடிந்துபோன, பணிநிறைவு பெற்றாலும் வாழ்க்கையில் நிறைவு பெறாத காவல் அதிகாரி திருமலைக்குமரன் எனக்கு கே.ஆர்.மீரா அவர்களின் யூதாஸின் நற்செய்தியில் வரும் தந்தையை நினைவுபடுத்துகிறார். இருவரும் ஒரு ஆத்மாவின் இரு பிம்பங்கள்போலத் தெரிகின்றனர். யூதாஸின் நற்செய்தி கதையில் அந்தக் காவல் அதிகாரி கேட்காத மன்னிப்பும், அவருக்குக் கிடைக்காத மன்னிப்பும் இங்கு கவளம் கதையில் வரும் திருமலைக்குமரனுக்குக் கிடைத்துவிடுவது ஒரே சரடில் இணைக்கப்பட்ட இரு பாவப்பட்ட ஆன்மாக்களுக்குக் கிடைத்த ஒற்றைப் பொதுமன்னிப்பாகத் தோன்றுகிறது .  

எழுத்தாளனின் பார்வையின் சிறப்பு என்னவென்றால் நாம் அன்றாடம் கண்டும் காணாமல் கடந்து போகக்கூடிய மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கையும் உற்று நோக்கி அதனைத் தனது புனைவுலகத்திற்குள் எடுத்துக்கொண்டு அவர்களைக் கதை நாயகர்களாக உருமாற்றுவதே ஆகும். இதனைத் தன்னுடைய ஒவ்வொரு தொகுப்பிலும் தவறாமல் செய்யும் எஸ்.ரா, இந்தத் தொகுப்பில் அப்படிப் பல மனிதர்களை நாயகர்களாக்கியுள்ளார். ஜெய்சங்கரியும் துரைக்கண்ணுவும் அப்படி நாயகர்களான அலுவலக அதிகாரிகள்தான். இருவரும் வேறு வேறு கதைகளில் தோன்றினாலும் இருவரும் அலுவலக  எந்திரத்தில் ஒரு சிறு பிசகில்லாமல் சதா சுழனன்றுகொண்டே இருக்கும் துரும்பாகத்தான் பிரவேசிக்கின்றனர். ஒரே உருவத்தின் இருவேறு காலநிலைகளின் பிம்பங்கள்போல அவர்களின் கதைகளில் காட்சியளிக்கின்றனர் . 

காலம் தவறாமல் கடிவாளம் கட்டியதுபோல ஒரே நேர்கோட்டில் பயணித்து வந்த ஜெய்சங்கரியின் இறுதி நாளின் மாற்றுப் பயணம் ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்த தருணமும், துரைக்கண்ணுவின் நேர்மையான துணிச்சலான செயலுக்குப் பின் கிடைத்த பெருமதிப்புமிக்க தருணமும் எங்கோ ஒரு புள்ளியில் இணைகின்றன. ஒன்று மட்டும் நிச்சயம் இருவரும் நிம்மதியைப் பரிசாகப் பெற்று இனி வாழ்வின் எல்லை வரை அந்தப் பரிசை பேருவகையுடன் சுமந்து செல்வார்கள்.  

இந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கதையை உலக இலக்கிய தராசில் நிறுத்திப்பார்க்க வேண்டுமென்றால் அது அப்பையாவின்  சிறிய முடிவு கதைதான். போட்டி பொறாமை வஞ்சம் என்று பணம் காட்டும் கானல் நடனத்திக்கு ஆட்கொண்டு மனிதனை மனிதனே ஏய்த்து பிழைக்கும் யுகத்தில் இப்படி ஒரு கதை எந்த நிலத்திலும் அர்த்தம் கொடுக்கும். தனிமையும் வறுமையும் தன்னை வாட்டினாலும் தன்னளவில் ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து வரும் அப்பையாவின் வாழ்வில் எங்கிருந்தோ வந்து சேரும் அந்த 100 டாலர் நோட்டு அவரின் நிம்மதியைக் குழைப்பதோடு, பல மனிதர்களின் முகத்திரையையும் கிழித்து அவருக்கு அடையாளம் காட்டிவிடுகிறது. சமகாலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நீதிக்கதை இதுவாகத்தான் இருக்கக்கூடும். 100 டாலரை எரித்து வெண்டைக்காய் புளிக்குழம்பு வைத்து அதனை உள்ளங்கையில் இட்டு ருசி பார்த்து சப்புகொட்டும் அப்பையாவின் உருவ சித்திரம் இதுவரை இலக்கியத்தில் பதிவுசெய்யப்படாத ஒரு சித்திரம். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இன்றும் பல அப்பையாக்கள் இந்த உலகத்தை நினைத்து எந்த வித கேள்வியும் எதிர்ப்புமின்றி தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்குள் தினமும் அதே புத்துணர்ச்சியுடன் பயணித்துக்கொண்டே இருக்கின்றனர். நகரத்தில் வாழ்கின்ற நாமோ இன்று ஒவ்வொரு அலைபேசி அழைப்பிலும், குறுஞ்செய்தியிலும் யாரோ நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று பயந்து, பயந்து வாழ்க்கையைக் கடத்துகிறோம். இந்த முரணை சொல்லாமல் சொல்லிவிடுகிறது இந்தச் சிறிய முடிவு கதை. முடிவு சிறிதாயினும் அதனை எடுத்த அப்பையாவின் மனது நம் அனைவரின் மனதைவிடப் பெரியது .

புலிவேடமிட்டு நடமாடும் நிகழ்வைப் பார்த்தாலோ, கேள்விப்பட்டாலோ நமக்கு உடனே நினைவுக்கு வருவது அசோகமித்ரனின் புலிக்கலைஞன் கதைதான். அசோகமித்திரனின் சிறுகதை உலகத்திற்கு அந்தக் கதை ஒரு முத்திரை கதை. அதுபோல ஒரு கதையை வேறு தளத்தில் மூன்று தலைமுரைகளை ஒரே சிறுகதைக்குள் உள்ளடக்கும் ஒரு புதுமையை புகுத்தி மாறுபட்ட வடிவத்தில் உருவாகியிருக்கும் கதைதான் சிறகுள்ள புலி. புலிவேடமிட்டு நடனமாடுவது என்பது காட்சிகளில் பிரமிப்பைக் கொடுக்கலாம். ஆனால் அந்தப் பிரமிப்பை எழுத்தில் கொண்டுவருவது அத்தனை எளிதல்ல. மேலும் ஒரு கலை வடிவம் ஒரு குடும்பத்தில் பல தலைமுறைகளுக்கு முன் பிரசித்தி பெற்று இருந்திருந்தாலும், பின்னாட்களில் அது கைவிடப்பட்டிருந்தாலும் அது தன்னைத்தானே தனக்கான ஒருவரை அந்தக் குடும்பத்தின் விழுதுகளிலிருந்து அதுவே தேர்ந்தெடுத்து கொண்டு தன்னைப் பன்மடங்கு மெருகேற்றி வெளிப்படுத்திக்கொள்ளும். அத்தகைய புலியாட்டத்தின் ஒரு நீட்சிதான் இந்தச் சிறகுள்ள புலி. சிறகை விரித்து வெயிலோன் புலிவேடமிட்டு ஆடும் அந்த ஆட்டத்திற்கு வெய்யிலின் உக்கிரமும் கூடுதல் உயிர்ப்பை சேர்த்து ஒரு புலியே றெக்கை விரித்து பறப்பதை நம்மால் உணரமுடியும் அதோடு சிகிலனின் ஆட்டத்தைக் கண்டு மயங்கிய ஆங்கிலேயனைப்போல நாமும் சற்று நேரம் உறைந்துபோய்த்தான் இருக்க நேரிடும் .

விநோதமான பல மனிதர்களை உள்ளடக்கிய ஒரு புத்தகமாக இதனைப் பார்க்கிறேன். ஒரு திருடனைப் பற்றியே நினைத்துக்கொண்டு, அவனைத் தன் இரண்டாவது நிழலாகப் பாவித்து, அவனைத் தேடி அலையும் ஒருவர், மனைவியிடம் கோபித்து கொண்டு பெயர் கூடத்தெரியாத பல திரைப்படங்களை  இடைவேளை வரை மட்டும் பார்த்துவிட்டு திரும்பும் ஒருவர், தன் வாழ்நாள் முழுக்க தன் பக்கத்து இருக்கை நபரைத் தனது நாட்குறிப்பில் பதிவிட்டு வரும் ஒருவர், தன் பள்ளிப்பருவப் புகைப்படத்தில் தனக்கு அருகே நின்ற பெண்ணின் பெயரை மட்டும் சுவற்றில் எழுதி அதன் அருகே நின்று 60 வயதில் ஒரு புகைப்படம் எடுத்து ஆசுவாசப்டுத்திக்கொள்ளும் ஒருவர், நடந்து சென்றே செய்திகளையும் கடிதங்களையும் பல இடங்களுக்குச் சேர்த்தும், அதற்குக் கூலியாக பணம் பெற மறுப்பதோடு, நடப்பதற்கு எதற்கு கூலி என்று வேடிக்கையாக கேள்விகேட்கும் ஒருவர், முதன் முதலாக மழைக்குப் பயந்து ரெயின்கோட் அணிந்த நபரைப் பார்த்து குழப்பமாகும் சிறுவன், தான் அறியாத இரண்டு மொழிகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு மொழியின் உருவ வெளிப்பாட்டின் வழியே வேறு ஏதோ ஒன்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஒருவர் என ஏராளமான விநோதமானவர்கள் இத்தொகுப்பு முழுக்க நடமாடுகின்றனர். நமக்கு அவர்கள் விநோதமானவர்களாகத் தோன்றலாம் ஆனால் அவர்கள் தன்னளவில் சாதாரணமானவர்கள். இந்த உலகை அவர்களுக்கு தெரிந்தவிதத்தில் பார்க்க முயற்சிக்கின்றனர். நாம் வகுத்து வைத்திருக்கும் சட்டகத்தரிக்குள் அடங்காததால் அவர்களை விநோதமானவர்கள் என்று எளிதில் முத்திரைக்குத்திவிடுகிறோம். உண்மையில் அவர்கள் பார்வையில் நாம்தான் உயிர்பற்றவர்கள். இந்த உலகிலேயே ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்புடன் வாழ்பவர்களும், இவ்வுலகை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களும் அந்த விநோதமானவர்கள்தான். 

கவளம் சிறுகதை தொகுப்பு ஓர்அடர் வனத்தின் நீரோடையின் மடியில் நிற்கும்  பெருமரத்தின் அடியில் அமர்ந்து வாசிப்பதுபோல  இலகுவான அனுபவத்தை நமக்குக் கொடுக்கும். இத்தொகுப்பின் பிரதானமாக தோன்றுவது பேரன்பு மட்டுமே. பேரன்பின் வெவ்வேறு வடிவங்களில் இக்கதைகளின் மாந்தர்கள் அவர்களின் உலகில் உலாவருகின்றனர். இறக்கும் தருவாயில் இருக்கும் தெருநாய்க்குத் துணையாக இரண்டு நாய்கள் தனக்கு வாலின் தொடுதலோடு படுத்துறங்கும் காட்சியையும், மௌனத்தை மட்டுமே பரிசாக பெற்றுக்கொள்ளும் இரு முதியவர்கள் அமர்ந்திருக்கும் காட்சியையும் ரசிக்க மறந்து வாழ்க்கையே மரத்துப்போன ஒரு சமூகத்திற்கு இப்படி ஒரு இளைப்பாறல் கொஞ்சம் தேவைதான். எந்த வித விருப்பு வெறுப்பின்றி, விவாதமின்றி, அதீத ஆராய்ச்சிகளுமின்றி, தத்துவ விசாரணைகளுமின்றி ஒரு கூதிர்காலத்தின் நுனிப்புல்லின் உறைந்துபோன ஒரு பனித்துளிபோல இத்தொகுப்பு உங்கள் மனதிற்குள் ஒரு ஈரத்தைப் பரவச்செய்யும். இந்த உலகம் முழுக்க சூரியன் தன் கைகளால் தொட முயன்றாலும் அதனிடமிருந்து விலகி எங்கோ ஒரு மூலையில் ஓர்உருகாத பனித்துளி, ஒரு புல்லின் நுனியில், அந்தப் புல்லிற்கான மகுடமாக நிலைத்துக்கொண்டே இருப்பதுபோல இக்கதைகள் நம் மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் பேரன்பு என்ற ஈரத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

0

ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி
விலை: ரூ.220
தொடர்புக்கு: 9789825280

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *