Skip to content
Home » செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6

செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6

கோவரினின் காதல் பற்றி மட்டுமல்லாது, திருமணமும் நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் யெகோர் செமினோவிச் ஒவ்வொரு மூலையாக நடந்து, தன்னுடைய உள்ளக் கிளர்ச்சியை மறைக்க முயன்றார். அவரது கைகள் நடுங்கின, அவரது கழுத்து வீங்கி, நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. அவரது குதிரையைப் பந்தய வண்டியில் பூட்டச் சொல்லிவிட்டு, வேகமாக அதில் கிளம்பிச் சென்றார். அவர் தொப்பியைக் காதிற்குக் கீழே இழுத்துவிட்டிருப்பதில் இருந்தும், குதிரைகளைச் சவுக்கால் அடித்ததைக் கண்டும் அவரது மனநிலையைத் தெரிந்துகொண்ட தான்யா, தன்னுடைய அறையில் சென்று பூட்டிக்கொண்டு, நாள்முழுவதும் அழுது கொண்டிருந்தாள்.

தோட்டத்தில், பீச் மற்றும் பிளம் பழங்கள் ஏற்கெனவே பழுக்க ஆரம்பித்துவிட்டன. பழங்களை மாஸ்கோவிற்குக் கட்டியனுப்புவது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய வேலை. கோடையின் வெப்பத்தில் ஒவ்வொரு மரத்திற்கும் நீர் ஊற்ற வேண்டி இருந்தது; கம்பளிப் புழுவகைகளும் வந்தன. அவற்றை வேலையாட்கள், யெகோர் செமினோவிச், தான்யா போன்றோர் தங்களது கைகளாலேயே நசுக்கிக் கொன்றனர். அதைக் கோவரின் அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இலையுதிர்காலத்தில் பழங்கள், மரங்கள் தொடர்பான விஷயங்கள் எல்லாம் அதிக கவனத்துடன் கையாளப்படவேண்டியிருந்தன. இந்த மிகவும் வேலை மிகுந்த நேரத்தில், யாருக்கும் ஒரு நொடிகூட ஓய்வில்லாத நேரத்தில், வயலிலும் வேலை ஆரம்பித்துவிட, தோட்டத்தில் இருந்து பாதி வேலையாட்கள் வயலுக்குச் சென்றுவிட்டனர். யெகோர் செமினோவிச் வெப்பத்தில் மிகவும் கறுத்து, கவலையுடனும், எரிச்சலுடனும் வயலுக்கும், தோட்டத்திற்குமாகச் சென்றுகொண்டிருந்தார். தன்னை அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து எடுப்பதாகவும், தான் தலையில் சுட்டுக் கொண்டு சாகப் போவதாகவும் கத்திக் கொண்டிருந்தார்.

இவை எல்லாவற்றிற்கும் இடையில்தான்யாவின் திருமண உடைகளைத் தயாரிக்கும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. பெசோட்ஸ்க்கிக் குடும்பத்தினர் அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தனர். எப்போதும் கத்தரிக்கோல் சத்தமும்தையல் இயந்திரம் சுற்றும் சத்தமும், சிகை அலங்காரக் கருவிகளின் வெப்பக் காற்றின் வாசமும் கேட்டவண்ணம் இருந்தன.  வீடு முழுவதும் தலைகால் புரியாமல் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்து. அதோடுதினமும் விருந்தினர்களும் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் உபசரித்துஉணவளித்துதங்குவதற்கு அறைகளைத் தயார் செய்வது என்று  நிறைய வேலைகள் இருந்தன. எனினும் மகிழ்ச்சியின் திரைக்குப் பின்னால் இந்தப் பரபரப்பான வேலைப்பளுவும் கவலைகளும் மறைந்துபோயின. 

திடீரென்று அவள் வாழ்வில் மகிழ்ச்சியும், காதலும் அளவில்லாமல் தோன்றிவிட்டதாகத் தான்யா உணர்ந்தாள். ஆனால் அவளது 14ஆவது வயதில் இருந்தே கோவரின் தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யப் போவதில்லை என்பதை அவள் தெரிந்தே இருந்தாள். ஆனாலும் எப்போதும் ஒருவிதமான ஆச்சரியத்துடனும், சந்தேகத்துடனும், நம்பிக்கையில்லாமலும் அவள் இருந்தாள்.

ஒரு கணத்தில் அவள் மகிழ்ச்சியில் வானில், மேகத்தில் பறப்பதுபோலவும், கடவுளிடம் வழிபடுவதுபோலவும் உணர்ந்தாள்; அதே நேரத்தில், கோவரின் போன்ற பெரிய மனிதருக்கு முன் தான் முக்கியமில்லாத, அற்பமானவள் என்ற எண்ணமும் அவ்வப்போது அவளுக்குத் தோன்றியது. இதுபோன்ற சிந்தனை வரும்பொழுதெல்லாம் அவள் அறைக்குச் சென்று, பூட்டிக் கொண்டு, பல மணி நேரத்திற்கு அழுது தீர்த்தாள். ஆனால் விருந்தினர்கள் இருந்தபோது, கோவரின் தனித்துவமான அழகைக் கொண்டவர் என்பதை உணர்ந்தாள். அங்கிருக்கும் பெண்கள் எல்லாம் அவரை விரும்புகிறார்கள் என்றும், அவளைப் பார்த்துப் பொறாமை கொள்கிறார்கள் என்பதையும் தெரிந்தாள்.

அத்தகைய நேரங்களில் அவளது இதயம் முழுவதும் மகிழ்ச்சியுடன் நடுங்கி, உலகையே கைப்பற்றியதுபோலப் பெருமை அடைந்தாள். அவர் எந்தப் பெண்ணையாவது நோக்கிச் சிரித்தால், அவளது உள்ளம் பொறாமையால் நிரம்பியது. அப்போதும் அவளது அறைக்குச் சென்று கண்ணீர் வடித்தாள். அவளைப் புதிய உணர்வுகள் முழுவதுமாக ஆக்கிரமித்தன. அவளது தந்தைக்கு இயந்திரத்தனமாக உதவினாள். காகிதத்தையோ, கம்பளிப் புழுவையோ, வேலையாட்களையோ, எவ்வளவு வேகமாகக் காலம் செல்கிறது என்பதையோ அவள் கவனிக்கவும் இல்லை.

யெகோர் செமினோவிச் அதே மனநிலையில் இருந்தார். காலை முதல் இரவு வரை உழைத்தார். தோட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வப்போது பொறுமையை இழந்தார். இருந்தும் நாள் முழுக்க மாயப் பகற் கனவில் ஆழ்ந்திருந்தார்.

அவரது உறுதியான உடலின் உள்ளே, இரண்டு நபர்கள் இருந்தார்கள். ஒருவர், உண்மையுள்ள யெகோர் செமினோவிச். தன்னுடைய தோட்டக்காரன் இவான் கார்லோவிச் ஏதேனும் தவறு பற்றியோ அல்லது ஒழுங்கின்மை பற்றியோ பேசினால், அவர் உணர்ச்சி வேகத்தில் பைத்தியம்போல் தலையைப் பிய்த்துக் கொண்டார்; மற்றொன்று, மெய்யற்ற யெகோர் செமினோவிச். பாதி மயக்கத்தில் இருக்கும் கிழவன், அவரது தோட்டக்காரனுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே, அதை நிறுத்திவிட்டு, அவனது தோளைப் பிடித்துக் கொண்டார்.

‘என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள், ஆனால் ரத்தம் தண்ணீரைவிடக் கெட்டியானது. அவரது தாயார் மிகவும் அதிசயமான, மேன்மையான, அறிவு கூர்ந்த பெண். அவளுடைய தூய்மையான, தேவதை போன்ற, திறந்த, நன்மையை மட்டுமே காட்டும் முகத்தைப் பார்ப்பதே ஆனந்தம். அழகான ஓவியம் தீட்டுவாள், கவிதை எழுதுவாள், ஐந்து மொழிகள் பேசுவாள், பாடவும் செய்வாள்… ஆனால், பாவம்! காச நோயால் இறந்து போனாள்!’

மெய்யற்ற யெகோர் செமினோவிச் பெருமூச்சு விட்டார். ஒரு நொடி அமைதிக்குப் பின்னர், தொடர்ந்தார்.

‘அவன் சிறுவனாக என்னுடைய வீட்டில் வளரும்போது, அவனும் அதுபோலவே அழகான, திறந்த, தேவதை போன்ற முகத்துடன் இருந்தான். அவனுடைய உருவம், செயல்கள், அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் அவனது தாயாரைப்போலவே மென்மையாகவும், நளினமாகவும் இருக்கும். அவனது அறிவு! அவன் பேராசிரியரானது தற்செயலானது அல்ல! ஆனால், இவான் கார்லோவிச், இன்னமும் சில காலம் பொறுத்திரு; பத்து வருடத்தில் அவர் என்னவாகிறார் என்பதைப் பார். இங்கிருக்கவே மாட்டார்!’

இப்போது உண்மையான யெகோர் செமினோவிச் தன்னை நினைத்துக் கொண்டார், தலையைப் பிடித்துக் கொண்டு, கத்தினார்;

‘பாவிகள்! பனி விழுந்துவிட்டது! அழிந்துபோனது! தோட்டம் பாழாகிவிட்டது; தோட்டம் அழிந்துவிட்டது!’

கோவரின் அவரது முந்தைய வேகத்தோடு வேலை செய்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நடந்து கொண்டிருந்ததை அவர் கவனிக்கவும் இல்லை. காதல், ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த ஜ்வாலையில் மேலும் எண்ணெயை ஊற்றியது.   ஒவ்வொருமுறை தான்யாவைப் பார்த்துவிட்டு வரும்போதுஅவர் மிகுந்த மகிழ்ச்சியோடும் குதூகலத்தோடும் அறைக்குத் திரும்பினார். அவளை முத்தம் கொடுத்தபோதும்காதலைத் தெரிவித்த போதும் இருந்த அதே வேகத்தோடு தன்னுடைய புத்தகத்துக்கான வேலையைத் தொடர்ந்தார்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டது, நித்திய உண்மை மற்றும் மனிதகுலத்தின் புகழ்பெற்ற எதிர்காலம் பற்றி கருப்பு துறவி அவரிடம் கூறியது, அவரது அனைத்து வேலைகளுக்கும் ஒரு விசித்திரமான, அசாதாரண முக்கியத்துவத்தை அளித்தது.  வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ, பூங்காவிலோ வீட்டிலோ அவர் துறவியைச் சந்தித்தார். அவர்கள் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவருக்குப் பயத்தைத் தரவில்லை. மாறாக மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதுபோன்ற மாயத்தோற்றங்கள், கருத்துகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மிகவும் தலைசிறந்தவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே தென்படும் என்று அவர் நம்ப ஆரம்பித்திருந்தார்.

மரியாளின் விண்ணேற்பு நாளும் சென்றது. அதன் பின்னர், யெகோர் செமினோவிச்சின் விருப்பப்படியே திருமணம் இரண்டு நாட்களுக்கு அர்த்தமில்லாத கொண்டாட்டங்களோடு நடைபெற்றது. உணவிற்கும் பானங்களுக்கும் மட்டுமே மூன்றாயிரம் ரூபிள்கள் செலவானது. ஆனால், மோசமான இசை, இரைச்சல்மிகு பாராட்டுகள், சலசலக்கும் வேலையாட்கள், கும்மாளம், ஆரவாரம் இவற்றுக்கு நடுவே மாஸ்கோவில் இருந்து பிரத்யேகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்களையோ, விலையுயர்ந்த வைன்களையோ யாரும் பாராட்டவில்லை.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *