Skip to content
Home » செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

நெல்லிக்காய்கள்

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய நாளும் எந்த அசைவும் இல்லாமல், குளிராகவும், அலுப்பூட்டுவதாகவும் இருந்தது. கால்நடை மருத்துவரான இவான் இவனிச்சும், பள்ளி ஆசிரியரான பெர்க்கினும் நடந்து, நடந்து களைப்படைந்திருந்தனர். வயல்கள் முடிவில்லாமல் செல்வது போல இருந்தது. வெகுதூரத்தில் மிரோஸ்க்கி கிராமத்தில் இருக்கும் காற்றாலைகளைக் காண முடிந்தது. கிராமத்தின் வலதுபுறம் தூரத்தில் வரிசையாக இருந்த குன்றுகளையும் பார்க்க முடிந்தது. அது நதியின் கரை என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

புல்வெளிகள், வில்லோ மரங்கள், பண்ணை வீடுகள்; அங்கிருக்கும் குன்றிலிருந்து எல்லையில்லாமல் நீண்டு செல்லும் தந்தி கம்பங்களையும் பார்க்க முடிந்தது. தூரத்தில் கம்பளிப்பூச்சியைப்போல நெளிந்து செல்லும் ரயிலையும் பார்க்கலாம். தெளிவான வானிலை இருக்கும் நாட்களில் தூரத்தில் இருக்கும் நகரத்தையும் பார்க்க முடியும். இயற்கை மென்மையாகவும் வருத்தத்துடனும் இருக்கும் அமைதியான வானிலை உள்ள நாட்களில், இவான் இவனிச்சும் பெர்க்கினும் வயல்களை மிகுந்த அன்புடன் பார்த்து, கிராமங்கள் எவ்வளவு அழகாகவும், கண்ணைக் கவரும் வகையில் இருக்கிறது என்று நினைத்தார்கள்.

“சென்ற முறை, நாம் பிரோகுபியின் கொட்டகையில் நின்ற போது, நீங்கள் எனக்கு ஒரு கதை சொல்லப் போவதாக கூறினீர்கள்” என்றார் பெர்கின்.

“ஆம். என் சகோதரனைப் பற்றிச் சொல்ல விரும்பினேன்.”

இவான் இவனிச் நீண்ட பெரு மூச்சை இழுத்துக்கொண்டு, கதையை ஆரம்பிப்பதற்கு முன் அவரது புகையிலைக் குழாயைப் பற்றவைத்தார். சரியாக அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. ஐந்து நிமிடங்களில் வேகமாக வர ஆரம்பித்த மழை, நிற்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. இவான் இவனிச் தயக்கத்துடன் நின்றார். கால்களுக்கு நடுவே வால்களை வைத்துக்கொண்டு, முழுவதுமாக நனைந்திருந்த நாய்கள் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

“எங்காவது ஒதுங்கவேண்டும். அலியோகினின் வீடு அருகில் இருக்கிறது. அங்கே செல்லலாம்.”

“சரி.”

அறுவடை முடிந்திருந்த வயலின் வழியே வேகமாக நடந்து, வலதுபுறமாகத் திரும்பி சாலை ஒன்றை அடைந்தனர். விரைவிலேயே நெட்டிலிங்க மரங்களும், தோட்டமும், தானிய களஞ்சியங்களின் சிவப்பு கூரைகளும் தோன்றின. நதி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் அகன்ற சாலை ஒன்று சென்றது. அங்கேயே காற்றாலை ஒன்றும், வெள்ளை குளியல் அறையும் இருந்தது. அதுதான் சோபினோ, அலியோகினின் வீடு.

காற்றாலை சுற்றிக்கொண்டிருந்த சத்தத்தில், மழை விழும் சத்தம் கேட்கவில்லை. அருகில் இருந்த நீர்த்தேக்கம் அதிர்ந்து கொண்டிருந்தது. வண்டிகளைச் சுற்றி குதிரைகள், தலைகளைக் குனிந்தவாறு நனைந்து கொண்டிருந்தன. மனிதர்கள், தலைகளில் சாக்குப்பையைப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். மிகவும் நனைந்த நிலையில், சகதியும் மிகவும் மோசமாக இருந்தது. நதி நீண்டு, குளிர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இவான் இவனிச்சும், பெர்க்கினும் முழுவதுமாக நனைந்து, நடப்பதைச் சிரமமாக உணர்ந்தார்கள்; சகதியில் நடப்பது அவர்களது கால்களைக் களைப்படையச் செய்திருந்தது. நீர் தேக்கத்தைத் தாண்டி, களஞ்சியத்தை நோக்கி அமைதியாக, ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டது போல நடந்து கொண்டிருந்தார்கள்.

களஞ்சியத்தில் தானியம் உடைக்கும் யந்திரம், மேகம் போலத் தூசியை எழுப்பிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தது. அதன் ஓரத்தில் அலியோகின் நின்று கொண்டிருந்தார். நாற்பது வயது மதிக்கத்தக்க அவர், உயரமாகவும் பருமனாகவும், பேராசிரியரைப் போல நீண்ட முடியுடன், கொஞ்சம்கூட விவசாயியைப் போல இருக்கவில்லை. அழுக்கான வெள்ளைச் சட்டையும் கயிறை இடுப்பில் கட்டியும் இருந்தார். முழுக்கால் சட்டை அணிந்திருந்தார். அவரது காலணிகள் சகதியும் வைக்கோலுமாக இருந்தன. அவர் இவான் இவனிச்சை அடையாளம் கண்டு கொண்டவுடன், மகிழ்வுடன் பார்த்தார்.

“தயவுசெய்து வீட்டுக்குச் செல்லுங்கள். நான் ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்” என்றார்.

வீடு பெரியதாகவும், இரண்டு மாடிகளுடன் இருந்தது. அலியோகின் கீழே இருக்கும், பண்ணையில் வேலை செய்பவர்களுக்காகக் கட்டப்பட்ட சிறிய சன்னல்களுடன் இருந்த இரண்டு அறைகளில் தங்கியிருந்தார். வீடு எளிய முறையில் இருந்தது. ரொட்டியும், வோட்க்காவும், தோல் பொருட்களும் கலந்த வாசம் அடித்துக் கொண்டிருந்தது. அவர் வரவேற்பு அறையை உபயோகிப்பதில்லை. விருந்தினர்கள் வரும் போது மட்டுமே அந்த அறை உபயோகிக்கப்படும். இவான் இவனிச் மற்றும் பெர்கின் இருவரையும் பணிப்பெண் வரவேற்றாள்; மிகவும் அழகாக இருந்த அவளைக் கண்டவுடன், நின்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“உங்களைப் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, நண்பர்களே” என்றார் அவர்களுக்குப் பின்னே வந்து சேர்ந்த அலியோகின்.

“நான் உங்களை எதிர்பார்க்கவில்லை. பெலகுயா,” என்று பணிப்பெண்ணை அழைத்த அவர், “என் நண்பர்கள் மாற்றிக் கொள்ள உடைகள் கொடு. நானும் உடை மாற்றப் போகிறேன். ஆனால், நான் குளிக்கப் போகிறேன். வசந்த காலத்திலிருந்து நான் குளிக்கவில்லை. நீங்களும் குளியல் கொட்டகைக்கு வருகிறீர்களா? அதற்குள் நமக்குத் தேவையானவை தயாராக இருக்கும்.”

மென்மையும், அழகும் கொண்ட பெலகுயா, துண்டுகளும், சோப்பு கட்டியும் கொண்டு வந்து கொடுத்தாள். அலியோகின் அவரது விருந்தினர்களைக் குளியல் கொட்டகைக்கு அழைத்துச் சென்றார்.

“ஆமாம். நான் குளித்து வெகு காலமாகிவிட்டது. என்னுடைய குளியல் கொட்டகை நன்றாகத்தான் இருக்கிறது. நானும் என் அப்பாவும் இதைக் கட்டினோம். ஆனால், குளிப்பதற்கு மட்டும் எனக்கு நேரமிருப்பதில்லை” என்றார்.

அவர் படியில் அமர்ந்து கொண்டு, தலைமுடியையும் கழுத்தையும் தேய்க்க ஆரம்பித்தார். அவரைச் சுற்றியிருந்த நீர் பழுப்பு நிறமாக மாறியது.

“ஆமாம். புரிகிறது” என்று இவான் இவனிச், அவரது தலையைப் பார்த்துக் கொண்டே கூறினார்.

“நான் குளித்துப் பல நாட்களாக ஆகிவிட்டது” என்று அலியோகின் வெட்கத்துடன் கூறினார். திரும்பவும் சோப்பைத் தேய்த்துவிட்டார். அவரைச் சுற்றியிருந்த நீர் இப்போது அடர் நீலமாக, எழுதும் மை போல இருந்தது.

இவான் இவனிச், கொட்டகையை விட்டு வெளியே வந்து, ஓடிக் கொண்டிருந்த நீரில் பாய்ந்தார். மழையின் நடுவே கைகளைத் தூக்கிப் போட்டு, தண்ணீரை விசிறியடித்து, நீச்சல் அடிக்க ஆரம்பித்தார். எழும்பிய அலைகளில் வெள்ளை லில்லி மலர்கள் ஆடிக் கொண்டிருந்தன. ஆற்றின் நடுவே நீந்திச் சென்று, அங்கே மூழ்கி, ஒரு நிமிடத்தில் சற்று தூரம் சென்று வெளியே வந்தார். அதுபோலவே மீண்டும், மீண்டும் நீந்தவும், மூழ்கி எழவும் செய்து கொண்டிருந்தார்.

“ஆ! எவ்வளவு இனிமையாக இருந்தது!” என்று மகிழ்ச்சியில் கத்தினார். “எவ்வளவு இனிமை!”. அவர் களஞ்சியம் வரை நீந்திச் சென்று, குடியானவர்களிடம் பேசிவிட்டு, திரும்பவும் வந்தார். ஆற்றின் நடுவே அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு, அவரது முகத்தில் மழை நீர் விழுவதை ரசித்துக் கொண்டிருந்தார். பெர்க்கினும், அலியோகினும் அதற்குள் உடை அணிந்து வந்துவிட்டனர். இவான் இன்னமும் நீந்திக் கொண்டிருந்தார்.

“இனிமை! என்ன இனிமை!” என்றார்.

“நீந்தியது போதும்.” என்று பெர்கின் சத்தமாகக் கூறினார்.

அவர்கள் வீட்டுக்குள் சென்றார்கள். மேலே இருந்த வரவேற்பறையில் விளக்கேற்றப்பட்ட பொழுதுதான், பெர்கின் மற்றும் இவான் இவனிச் இருவரும் பட்டு மேலங்கி மற்றும் நல்ல காலணி அணிந்து நாற்காலிகளில் வசதியாக அமர்ந்து கொண்டனர். அலியோகின் குளித்து, தலை சீவி, புதிய மேலங்கி அணிந்து, காய்ந்த துணிகளையும், காலணிகளையும் அணிந்ததன் வசதியையும், சுத்தத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தார். அழகான பெலகுயா, அழகான புன்னகையுடன், தரைவிரிப்பில் சத்தமில்லாமல் நடந்து வந்து, அவர்களுக்குத் தேநீரும், பழக்களியும் கொண்டு வந்தார். அதன் பின் இவான் இவனிச் அவரது கதையை ஆரம்பித்தார். அவரது கதையை பெர்கின், அலியோகின் மட்டுமில்லாமல், அங்கிருந்த தங்க சட்டமிடப்பட்ட படங்களில் இருந்த வயதான, இளம் பெண்களும், அதிகாரிகளும் கூட அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது போல இருந்தது.

“நாங்கள் இரு சகோதரர்கள்” என்று ஆரம்பித்தார். “இவான் இவனிச், நான், மற்றும் என்னைவிட இரண்டு வயது இளைய என் சகோதரன், நிக்கோலாய் இவனிச். நான் படிக்கச் சென்று கால்நடை மருத்துவர் ஆனேன். நிக்கோலாய், பத்தொன்பது வயதில் நிதித் துறையில் வேலைக்குச் சென்றுவிட்டான். எங்கள் தந்தை, சிம்சா-ஹிமாலய்ஸ்கி சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்துவிட்டார். ஆனால் அவர் அதில் அதிகாரியாக இருக்கும் போதே இறந்துவிட்டார். எங்களுக்குப் பிரபு பட்டமும், சிறிய அளவில் சொத்தும் விட்டுவிட்டுச் சென்றார். அவரது மரணத்துக்குப் பின்னர், அவரது சொத்துகள் எல்லாம் கடனுக்குச் சரியாகப் போய்விட்டது.

எங்களது இளமைக் காலம் முழுவதையும் பண்ணைகளில் கழித்தோம். குடியானவர்களின் குழந்தைகள் போலவே, பகலும் இரவும் வயல்களிலும், காடுகளிலும் நாட்களைச் செலவழித்தோம். வீடுகளைப் பார்த்துக் கொள்ள, எலுமிச்சை மரங்களில் பட்டை உரிப்பது, மீன் பிடிப்பது என்று பலவும் செய்தோம்… ஒரு முறை நதிகளில் மீன் பிடித்துப் பழகிவிட்டாலோ, கிராமத்தின் மேல் குளிர்ந்த, இலையுதிர் கால நாட்களில் பறவைகள் கூட்டமாகப் பார்த்துவிட்டாலோ அதன் பின்னர் எவரும் நகர்ப்புற மனிதனாக முடியாது என்பது தெரிந்திருக்கும். அவனது கடைசிக் காலம் வரை கிராமம் அவனை இழுத்துக் கொண்டேயிருக்கும்.

என் சகோதரன் நிதித்துறையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். வருடங்கள் கழிந்தன. அவன் ஒரே இடத்தில் தங்கி, ஒரே காகிதங்களை எழுதி, ஒன்றை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான் – எப்படிக் கிராமத்துக்குத் திரும்புவது என்பதே அவனது நினைப்பாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவனது கவலை ஒரு நிலையான விருப்பமாக மாறியது: நதியோ ஏரியின் அருகிலோ ஒரு சிறிய பண்ணையை வாங்கி விடவேண்டும்.

அவன் மிகவும் நல்லவன். நான் அவனை மிகவும் விரும்பினேன். ஆனால் பண்ணையில் சென்று ஒடுங்கிவிடுவது போன்ற ஆசைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மனிதனுக்குத் தேவை எல்லாம் ஆறு அடி நிலமே. ஆனால், அது பிணத்துக்குத்தானே ஒழிய, மனிதனுக்கு அல்ல. நம்முடைய புத்திசாலிகள் எல்லாம் நிலத்துக்கும் விவசாயத்துக்கும் ஏங்கிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. எல்லாம் அந்த ஆறு அடி நிலத்தில் வந்துதான் நிற்கிறது. நகரத்திலிருந்து கிளம்பி, வாழ்வின் துயரங்களிலிருந்து விலகி, பண்ணை வீட்டில் சென்று மறைந்து கொள்வதன் பெயர் வாழ்க்கை இல்லை, அது சுயநலம், சோம்பேறித்தனம். ஒரு விதமான சாமியார்த்தனம். அதுவும் எந்தச் செயலும் இல்லாத சாமியார்த்தனம். மனிதனுக்குத் தேவை ஆறு அடி நிலமோ பண்ணையோ அல்ல; பூமி முழுவதும், இயற்கை முழுவதும் தேவை. அதில் முழு சுதந்திரத்தோடு, சுதந்திர ஆன்மாவின் முழுமையான பண்புகளையும் உடைமைகளையும் காட்டவேண்டும்.

என்னுடைய சகோதரர் நிக்கோலாய், அவனது அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, பண்ணையில் முட்டைகோசு சூப் குடிப்பதாகவும், அதன் வாசம் பண்ணை முழுவதும் வீசுவதாகவும் கனவு கண்டு இருப்பான். அல்லது வெளியே அமர்ந்து உண்பதாகவோ சூரியனுக்குக் கீழே தூங்குவதாகவோ அல்லது வாயிலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, மணிக்கணக்கில் வயல்களையும், காடுகளையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதாகவோ கனவு கண்டு கொண்டு இருப்பான். விவசாயம் பற்றிய புத்தகமோ, நாள்குறிப்புகளில் இருக்கும் குறிப்புகளுமே அவனுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுத்தன. அவனுடைய ஆன்மாவின் உணவாக இருந்தது எனலாம். விற்பனைக்கு வரும் நிலங்கள் பற்றிய விவரங்களைச் செய்தித்தாள்களில் படிப்பது அவனுக்கு விருப்பமானது. எத்தனை ஏக்கர் விளைநிலம், பண்ணை வீடு, தோட்டம், நதி, காற்றாலை, நீர்த்தேக்கம் என அவற்றைப் படித்துவிட்டு, தோட்டச் சுவர்கள், பூக்கள், பழங்கள், கூடுகள், நதிகளில் மீன்கள் எனப் பலவற்றையும் சேர்த்துக் கனவு கண்டு கொண்டிருப்பான். அன்று வந்திருக்கும் விளம்பரத்தைப் பொறுத்து அவனது கனவுகள் மாறும். ஆனால் எல்லா கனவுகளிலும் ஒரு நெல்லிக்காய் மரம் கட்டாயம் இருக்கும். வீடோ அல்லது ஒரு அழகான இடமும் நெல்லிக்காய் மரம் இல்லாமல் அவனால் யோசிக்க முடியாது.

“கிராம வாழ்வில் பல பயன்கள்.” என்று சொல்லுவான். “வெராண்டாவில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டு, குளத்தில் வாத்துகள் நீந்த எல்லாம் நல்ல வாசத்துடன் இருக்கும்… அப்புறம் நெல்லிக்காய்கள்.”

அவனுடைய பண்ணை பற்றிய திட்டத்தை வரைவான். அதில் எப்போதும் ஒரே இடங்கள்தான் காணப்படும். (1) பண்ணை வீடு (2) கொட்டகை (3) காய்கறி தோட்டம் (4) நெல்லிக்காய் மரம். மிகவும் சிக்கனமாக வாழ்ந்தான். அவன் எப்போதும் சரியாகச் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லை. பிச்சைக்காரனைப் போல உடை அணிவான். எப்போதும் பணத்தைச் சேமித்து, வங்கியில் சேர்த்துவைத்து வந்தான். மிகவும் கஞ்சத்தனமாக இருப்பான். அவனைப் பார்க்கவே எனக்கு வருத்தமாக இருக்கும். விடுமுறைக்கு எங்காவது செல்வதற்கு அவனுக்கு நான் பணம் தருவேன். அதையும் அவன் சேமிப்பில் போட்டுவிடுவான். மனிதனுக்கு ஒரு நோக்கத்தின் மீது கவனம் குவிந்துவிட்டால், அவனால் வேறெதையும் யோசிக்க முடியாது.

வருடங்கள் கழிந்தன. அவனை வேறு ஒரு பிரதேசத்துக்கு மாற்றல் செய்தார்கள். அவனுக்கு நாற்பது வயதானது. அவனும் விளம்பரங்களைப் படிக்கவும், பணத்தைச் சேமிக்கவும் செய்து கொண்டிருந்தான். அப்போதுதான், அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டதைக் கேள்விப்பட்டேன். இன்னமும் நெல்லிக்காய் மரத்துடன் பண்ணை வீட்டை வாங்க வேண்டி, வயதான, அவலட்சணமான கைம்பெண் ஒருவளைத் திருமணம் செய்து கொண்டான். அவள் மீது அன்பினால் அல்ல. அவள் பணம் வைத்திருந்தாள் என்பதால். அவளுடனும் மிகவும் கஞ்சத்தனமாக வாழ்ந்து வந்தான். அவளைப் பாதிப் பசியுடன் வைத்திருந்து, பணத்தை அவனது பெயரில் வங்கியில் போட்டு வந்தான். அவள் ஒரு தபால்காரரைத் திருமணம் செய்து, நன்றாக வாழ்ந்திருந்தவள். ஆனால் அவளது இரண்டாவது கணவனிடம், அவளுக்குக் கறுப்பு ரொட்டி கூடப் போதுமான அளவில் கிடைக்கவில்லை.

பழைய வாழ்வை எண்ணியே அவள், மூன்று வருடத்தில், உயிரை விட்டுவிட்டாள். அவளது மரணத்துக்கு, தான் ஒரு காரணம் என்றெல்லாம் என் சகோதரன் பெரிதாகக் கவலைப்படவில்லை. வோட்காவை போலப் பணமும் மனிதனின் குணத்தை மாற்றி விடும். ஒரு முறை எங்களது நகரில் ஒரு வணிகர் மரணப்படுக்கையில் இருந்தார். மரணத்துக்கு முன் அவர் சிறிது தேன் வேண்டும் என்று கேட்டார். அவர் தன்னுடைய பணக்குறிப்புகள், ரசீதுகள் என அனைத்தையும் தேன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிட்டான். அதை வேறு எவருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான்.

ஒரு முறை நான் கால்நடைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, குதிரைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவன் யந்திரத்தின் கீழே விழுந்து, அவனது கால் தனியாக வந்துவிட்டது. அவனை ரத்தம் சொட்டச் சொட்ட, பக்கத்து அறைக்குத் தூக்கிச் சென்றோம். என்ன பயங்கரம்! அவனோ வெட்டுப்பட்ட அவனது காலைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தான். அந்தக் காலில் இருந்த பூட்ஸ் காலணியில் அவன் இருபத்து ஐந்து ரூபிள் பணம் வைத்திருந்ததுதான் காரணம்.”

(தொடரும்)

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *