“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின்.
நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் நீங்கள் ஐந்து வருடங்கள் தேடிய பின்னரும், குதிரை என்று கழுதையை வாங்கலாம். தரகரின் மூலமாக நிக்கோலாய் கடன் வாங்கி, முந்நூறு ஏக்கர் நிலமும் அத்துடன் பண்ணை வீடு, கொட்டகை, பூங்கா போன்றவற்றைச் சேர்த்து வாங்கினான். பழத்தோட்டம், நெல்லிக்காய் மரம், வாத்துகள் நீந்தும் குளம் முதலியவை இல்லை. நதி ஒன்று இருந்தது. ஆனால் அது செங்கல் சூளைக்கும், பசைத் தொழிற்சாலைக்கும் நடுவே இருந்ததால், பழுப்பு நிறத்தில் இருந்தது. ஆனால் என் சகோதரன் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை; இருபது நெல்லிக்காய் மரங்களை வாங்குவதற்குக் கட்டளையிட்டுவிட்டு, கிராம வாழ்வில் ஈடுபட ஆரம்பித்தான்.
சென்ற வருடம் நான் அவனைச் சென்று பார்த்தேன். அவன் எப்படி இருக்கிறான் என்று பார்க்க விரும்பினேன். என் கடிதங்களில் என் சகோதரன் அவனது பண்ணையை சிம்பர்சோவ் மூலை அல்லது ஹிமாலயசுக்கோ என்று அழைத்திருந்தான். நான் அங்கே மதிய நேரத்தில் வந்து சேர்ந்தேன். மிகவும் வெப்பமாக இருந்தது. எங்கும் குழிகள், வேலிகள், புதர்கள், வரிசையாக இளம் பிர் மரங்கள், எங்கு பார்த்தாலும் மரங்கள். பண்ணையிடத்தை எப்படிக் கடப்பது அல்லது குதிரையை எங்கே கட்டுவது என்று கூடத் தெரியாமல் இருந்தது. வீட்டுக்குச் சென்றவுடன், அங்கே ஒரு சிவப்பு நிற நாயைப் பார்த்தேன். அது பன்றியைப் போல இருந்தது. குரைக்க விரும்பினாலும், அது சோம்பேறியாக இருந்தது. சமையல் அறையில் இருந்து வெளியே வந்த சமையல்காரனும், பன்றி போலவே பருமனாக இருந்தான்.
அவனது முதலாளி மதிய நேர ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பதாகக் கூறினான். நான் என்னுடைய சகோதரனிடம் சென்றேன். அவன் படுக்கையில் தன்னுடைய முட்டி வரை போர்வையைப் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தான். வயதாகியும், பருமனாகவும், தளர்ந்தும் இருந்தான். அவனுடைய கன்னங்கள், மூக்கு, உதடுகள் எல்லாம் தொங்கிக்கொண்டிருந்தன. அவன் பன்றியைப்போல உறுமப்போகிறான் என்று ஒரு நொடி எதிர்பார்க்கவும் செய்தேன்.
“நாங்கள் பார்த்துக்கொண்டவுடன், மகிழ்ச்சியில் கண்ணீருடன் கட்டிப்பிடித்துக் கொண்டோம். நாங்களும் ஒரு காலத்தில் இளமையாக இருந்தோம்., இப்போது நாங்கள் இருவரும் தலை வெளுத்து, மரணத்தின் அருகில் இருந்தோம். அவன் உடையணிந்து, தன்னுடைய பண்ணையைச் சுற்றிக் காட்டக் கிளம்பினான்.
“எப்படிப் போகிறது?” என்று கேட்டேன்.
“கடவுள் அருளால், எல்லாம் நன்றாக போகிறது.”
அவன் இப்போது ஏழையான களைப்படைந்த அதிகாரி அல்ல. உண்மையான நில உடைமையாளர். ஊர்ப் பெரிய மனிதன். அவனும் அந்த இடத்துக்குப் பழகிவிட்டான். நன்றாகச் சாப்பிட, ருஷ்யக் குளியல் எடுத்துக்கொண்டு பருத்துக் கொண்டிருந்தான். அந்தக் கிராமத்தின் திருச்சபையின் மீதும், இரண்டு தொழிற்சாலைகள் மீதும் ஏற்கனவே வழக்கு போட்டிருந்தான். குடியானவர்கள் தன்னை ‘பிரபு’ என்று அழைக்கவில்லை என்றால் கோபப்பட்டான். நல்ல நில உடைமையாளர் என்றால் அவனது ஆன்மாவைக் கவனித்துக் கொண்டும், நல்ல செயல்களைச் செய்து கொண்டும் இருக்க வேண்டும், இல்லையா?
என்ன நல்ல செயல்கள்? குடியானவர்களுக்கு சோடாவும், விளக்கெண்ணெய்யும் கொடுத்து அவர்களது நோயை குணமாக்கினான். அவனது பிறந்த நாளின் போது, கிராமத்தின் நடுவே பெரிய நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தினான். அங்கே அரை வாளி வோட்காவை அவர்களுக்குக் கொடுத்தான். அதுவே சரியானது என்று நினைத்தான். ஆ! பயங்கரமான வோட்கா வாளி. ஒருநாள், நில உடைமையாளனாக, அத்துமீறி நுழைந்ததாகக் குடியானவர்களை ஸிம்ஸ்டோவோ நீதி மன்றத்துக்கு இழுத்து செல்வான். அடுத்து, விடுமுறை என்றால் அவர்களுக்கு ஒரு வாளி வோட்காவும் கொடுக்கப்படும். அதையும் அவர்கள் குடித்து விட்டு, அவனது காலணியை நக்கி, குடி போதையுடன் சத்தம் போடுவார்கள். நல்ல உணவும், சோம்பேறித்தனமும் எப்போதும் ருஷ்யர்களுக்கு மிகவும் அதிகமான அகந்தையைக் கொடுத்து விடுகிறது.
நிதித்துறையில் இருந்த போது, தனக்கென ஒரு கருத்து இருப்பதை எண்ணிப் பயந்த நிக்கோலாய் இவனிச், இப்போது தான் சொல்வதுதான் சட்டம் என்று நினைத்தான். ‘பொதுமக்களுக்குக் கல்வி தேவைதான். ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல.’ ‘தனி மனிதர்களுக்குத் தண்டனை பொதுவாகத் தீமைதான். ஆனால் சில நேரங்களில் அது தேவையாகவும், உபயோகமாகவும் இருக்கிறது’என்று பேசப் பழகியிருந்தான்.
‘எனக்கு மக்களை எப்படி நடத்துவது என்று தெரியும். அவர்கள் என்னை விரும்புகிறார்கள். நான் ஒரு விரலை உயர்த்தினால், நான் சொல்வதை எல்லாம் செய்வார்கள்’ என்பான்.
‘இதை எல்லாம் மிகவும் அறிவார்ந்த புன்னகையுடன் சொல்வான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் ‘நாங்கள், பிரபுக்கள்’ அல்லது ‘நான், ஒரு பிரபுவாக’ என்று எப்போதும் சொல்வான். எங்களது தாத்தா குடியானவர் என்பதையோ, எங்களது தந்தை சாதாரணப் போர்வீரர் என்பதையோ அவன் மறந்துவிட்டதாகத் தெரிந்தது. எங்களுடைய வினோதமான குடும்பப் பெயரான சிம்ச்சா-ஹிமாலய்ஸ்கி கூட அவனுக்கு இப்போது நல்ல பெயராகவும் மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும், உயர்ந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது.
‘ஆனால் நான் சொல்ல வந்தது, அவனைப் பற்றியோ, என்னைப் பற்றியோ அல்ல. நான் அங்கிருந்த சில மணி நேரங்களில் அந்த வீட்டில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றியே சொல்ல வந்தேன். மாலையில், நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, சமையல்காரன் ஒரு தட்டில் நெல்லிக்காய்களைக் கொண்டு வந்து வைத்தான். அவை வாங்கப்பட்டவை அல்ல. அவனது மரங்களில் முதல் முறையாக காய்த்தவை. நிக்கோலாய் இவனிச் மகிழ்வுடன் சிரித்துக் கொண்டு, அந்த நெல்லிக்காய்களை ஒன்றிரண்டு நிமிடங்கள் கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியில் அவனால் பேச முடியவில்லை. ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, என்னை வெற்றிகரமாகப் பார்த்தான். கைகளில் தன் பிடித்தமான பொம்மையை வைத்துக்கொண்டிருக்கும் குழந்தையைப்போல என்னைப் பார்த்து, “எவ்வளவு நன்றாக இருக்கிறது!” என்றான்.
அவற்றை வேகமாகத் தின்று கொண்டிருந்தான். ‘எவ்வளவு நன்றாக இருக்கிறது! ஒன்றை எடுத்துக் கொள்!’ என்று சொல்லியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அது கடினமாகவும், கசப்பாகவும் இருந்தது. ஆனால் புஷ்கின் சொன்னது போல நம்மை உற்சாகப்படுத்தும் ஒரு மாயை, பத்தாயிரம் உண்மைகளைவிடப் பெரியது. நான் மகிழ்ச்சியான மனிதன் ஒருவனைப் பார்த்தேன். தன்னுடைய கனவுகளை உண்மையாக்கிய, தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளை அடைந்த மனிதனை, தனக்கு வேண்டியதைப் பெற்றுவிட்ட மனிதனை, விதியை எண்ணியும், தன்னை எண்ணியும் மகிழ்ந்த மனிதனைப் பார்த்தேன். என்னுடைய கருத்தில், மனித வாழ்வு என்பது எப்போதும் ஏதோ ஒருவிதத்தில் சோகமானது. ஆனால் என் முன்னால் இருந்த மகிழ்ச்சியான மனிதனைப் பார்க்கும்போது, எனக்கு மனக்கசப்பு போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. இரவில் அது அதிகமானது.
என்னுடைய அறை, என் சகோதரனின் அறைக்கு அருகில் இருந்தது. இரவில், தூங்க முடியாமல், அவன் எழுந்து திரும்பத் திரும்ப நெல்லிக்காயைத் தட்டில் எடுத்து உண்பதை என்னால் கேட்க முடிந்தது. ‘திருப்தியடைந்த, மகிழ்ச்சியான மக்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும்! அதன் சக்தி எப்படிப்பட்டது! நான் இந்த வாழ்வை பார்த்து, அதன் திமிரையும், வலிமையானவர்களின் சோம்பேறித்தனத்தையும், எளியவர்களின் முட்டாள்தனத்தையும், அவர்களது மிருகம் போன்ற வாழ்வையும், எங்கும் பரவியிருக்கும் பயங்கரமான ஏழ்மையையும், நெருக்கடி, குடி, ஏமாற்றுவேலை, பொய் போன்றவற்றைப் பார்க்கிறேன்… அதே நேரத்தில், வீடுகளில், தெருக்களில் எங்கும் அமைதி நிலவுகிறது; நகரில் இருக்கும் ஐம்பதாயிரம் மக்களில் ஒருவர் கூட இதையெல்லாம் எதிர்த்துப் பேசுவதில்லை!
சந்தையில் உணவு வாங்கச் செல்பவர்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்; பகலில் உண்கிறார்கள்; இரவில் உறங்குகிறார்கள், எதையோ பேசுகிறார்கள், திருமணம் செய்கிறார்கள், வயதாகிறது, கல்லறைக்கு அமைதியாகச் சென்றுவிடுகிறார்கள். துயரப்படுபவர்களைப் பற்றி அவர்கள் பார்ப்பதோ, கேட்பதோ இல்லை. வாழ்வின் எல்லாப் பயங்கரங்களும் ஏதோ திரைக்குப் பின்னே நடக்கிறது. எல்லாம் அமைதியாக இருக்கிறது. அதற்கு எதிராக இருப்பதெல்லாம் புள்ளிவிவரங்கள்: எவ்வளவு பைத்தியங்கள், எவ்வளவு லிட்டர் குடிக்கப்பட்டது, பசியால் எவ்வளவு குழந்தைகள் இறக்கின்றன… அப்படியாக இருப்பதையே நாம் விரும்புகிறோம்;
ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதன் காரணம், மகிழ்ச்சியற்றவர்கள் தங்களது துயரங்களை அமைதியாகத் தாங்கிக் கொள்வதே. அது இல்லாமல், மகிழ்ச்சி என்பதே சாத்தியமில்லை. இது ஒரு பொதுவான மயக்க நிலை. ஒவ்வொரு மகிழ்ச்சியான மனிதனின் கதவின் பின்னாலும் ஒருவன் கையில் சுத்தியலோடு நின்று கொண்டு, கதவைத் தட்டி, அவனுக்கு உலகில் இருக்கும் மகிழ்ச்சியற்ற மனிதர்களை நினைவுபடுத்தியும், எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், வாழ்க்கை தன்னுடைய கோரமான நகங்களைக் காட்டிவிடும் என்பதையும், அவனையும் ஏதாவது துரதிர்ஷ்டம் – நோய், ஏழ்மை, இழப்பு – பிடிக்கும் என்றும், அன்று அவனை யாரும் பார்க்கவோ, கேட்கவோ மாட்டார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஆனால் அப்படிச் சுத்தியலோடு யாரும் இல்லை. எனவே மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் அப்படியே வாழ்கிறார்கள். மரத்தின் இலைகள் போல அன்றாடக் கவலைகளில் சிறிது நடுங்கினாலும், எல்லாம் சரியாக இருப்பதாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.’
அன்றிரவு நானும் எப்படித் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். இவான் இவனிச் இப்போது எழுந்து கொண்டார். நானும் சாப்பிடும் போதோ, வேட்டையாடும் போதோ, வாழ்வது, மதம், ஆட்சி செய்வது போன்றவற்றைப் பற்றி என்னுடைய விதிமுறைகளைத் தெரிவித்தேன். நானும் சொல்லிக் கொடுப்பது எளிது என்றும், கல்வி தேவை என்றும், ஆனால் சாதாரண மக்களுக்கு இப்போதைக்கு எழுத, படிக்கத் தெரிந்தால் போதும் என்றும் பேசுவேன். சுதந்திரம், நாம் சுவாசிக்கும் காற்றைப்போல ஒரு வரம், ஆனால் அதற்கு நாம் காத்திருக்க வேண்டும். அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஆனால் இப்போது ‘ஏன் காத்திருக்க வேண்டும்?’ என்று கேட்கிறேன்” என்று இவான் இவனிச், பெர்க்கினை கோபமாகப் பார்த்தார். “ எதற்காகக் காத்திருக்கவேண்டும்? என்று கேட்கிறேன். நாம் மெதுவாகச் செல்வது எதற்கு? நாம் எல்லாவற்றையும் உடனே பெற்றுவிட முடியாது என்றும், ஒவ்வொரு கருத்தும் அதனதன் நேரத்தில் நடைபெறும் என்றும் சொல்கிறோம். ஆனால், இதை யார் சொல்வது? அதற்கு என்ன ஆதாரம்? இயற்கையாக இப்படித்தான் இருக்கிறது என்கிறீர்கள். காரணமும், விளைவும்தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், வாழும், சிந்திக்கும் மனிதனான நான், ஒரு குழியின் முன்னே, அது இயற்கையாக நிறையும் வரை காத்திருப்பதற்கு ஏதாவது இயற்கை காரணம் இருக்கிறதா? அல்லது அதன் நான் தாண்டியோ, பாலம் கட்டியோ கடப்பது சரியானதா? சொல்லுங்கள், நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? நமக்கும் வாழ்வதற்குத் தேவையான சக்தி இல்லை, ஆனாலும் நாம் வாழ்வதற்கும், வாழ்வதற்கான ஆசையும் இருக்கிறது!”
அன்று காலையே நான் என் சகோதரனிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். அப்போதிருந்து நகரத்தில் வாழ்வது எனக்கு முடியாததாகிவிட்டது. அதன் அமைதி என்னை அழுத்தியது. சன்னலின் வழியே பார்க்கவும் முடியவில்லை. மகிழ்ச்சியான குடும்பங்கள் மேசையில் சுற்றி அமர்ந்து தேநீர் குடிப்பதையும் பார்க்க முடியவில்லை. நான் இப்போது வயதான மனிதன். இதற்கு மேலும் போராட முடியாது. நான் ஆரம்பித்ததே தாமதமாக இருந்தது. நான் என்னுடைய ஆன்மாவின் உள்ளேயே அழுதும் சோகமாகவும் இருக்கிறேன். இரவில் என்னுடைய தலையின் உள்ளே எழும் சிந்தனைகளினால், என்னால் தூங்க முடியவில்லை… ”ஆ! நான் மட்டும் இன்னமும் இளமையாக இருந்தால்!”
இவன் இவனிச் மேலும், கீழுமாக அறையில் நடந்து கொண்டே, திரும்பவும் கூறினார்.
“நான் மட்டும் இளமையாக இருந்தால்!”
சட்டென்று அலியோகினிடம் நடந்து சென்று, முதலில் ஒரு கையையும், பின்னர் இன்னொரு கையையும் பிடித்து குலுக்கினார்.
“பாவெல் கொன்ஸ்டான்டினிச்” என்று பரிவோடு ஆரம்பித்தார். “எதிலும் திருப்தி அடையாதீர்கள். யாரையும் தாலாட்டி தூங்கவைத்துவிடாதீர்கள்! நீங்கள் இளமையுடனும், வலிமையுடனும், செல்வத்துடனும் இருக்கும் போது, நல்லது செய்வதை நிறுத்திவிடாதீர்கள்! மகிழ்ச்சி என்ற ஒன்றே இல்லை, அது இருக்கவும் கூடாது. வாழ்வில் ஏதாவது அர்த்தமும், காரணமும் இருக்க வேண்டும் என்றால், அது நம்முடைய சிறிய சந்தோஷங்களில் இல்லை, ஆனால் பெரியதும், அறிவுடையதுமானதானவற்றில் இருக்கிறது. நல்லது செய்யுங்கள்!”
இதை இவான் இவனிச் பரிவான, கெஞ்சும் குரலில், தனக்கு ஏதோ உதவி கேட்பதைப் போலக் கூறினார்.
அவர்கள் மூவரும் அறையின் மூன்று மூலைகளில் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இவான் இவனிச்சின் கதை பெர்க்கினையும், அலியோகினையும் திருப்திப்படுத்தவில்லை. சட்டமிட்ட படங்களில் இருந்து தளபதிகளும், பெண்களும் நெருப்பின் வெளிச்சத்தில் கீழே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நெல்லிக்காயைத் தின்னும் பரிதாபமான அதிகாரியைப் பற்றிய கதை கேட்பது அலுப்பாக இருந்தது… அவர்கள் அழகான மனிதர்கள், பெண்களைப் பற்றிப் பேசவும், கேட்கவும் ஏங்கினார்கள், வரவேற்பறையில் அமர்ந்து இருப்பது மட்டுமே – விளக்கு, நாற்காலிகள், தரை விரிப்பு – அந்தப் படங்களில் இருக்கும் மனிதர்கள் எப்படி நடப்பார்கள், உட்கார்ந்திருப்பார்கள், தேநீர் குடிப்பார்கள் என்றெல்லாம் சொல்லியது. அத்தோடு அழகான பெலிகுயா அருகில் இருப்பது – எல்லாக் கதைகளை விடவும் நன்றாக இருந்தது.
அலியோகின் படுக்கைக்குச் செல்ல விரும்பினார்; அன்று காலை வேலை இருந்ததால், இரண்டு மணிக்கே எழுந்துவிட்டார். அவரது கண்கள் மூடிக் கொண்டிருந்தன. ஆனால், அவர் சென்ற பிறகு, அவரது விருந்தினர்கள் ஏதாவது சுவாரசியமாக சொல்வார்களோ என்று நினைத்தார். எனவே அவர் அங்கேயே இருந்தார். இவான் இவனிச் சொன்னது புத்திசாலித்தனமானது அல்லது சரியானது என்றெல்லாம் அவர் யோசித்துக் கொள்ளவில்லை. அவரது விருந்தினர்கள் தானியங்கள் பற்றியோ, வைக்கோல் பற்றியோ அல்லது அவருக்கு விருப்பமான எதைப் பற்றியும் அவர்கள் பேசவில்லை. ஆனால் அவருக்கு அவர்கள் பேசியது பிடித்தது. எனவே, அவர்கள் பேச வேண்டும் என்று விரும்பினார்.
“படுக்கைக்குச் செல்லும் நேரமாகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் நல்லிரவு!” என்று பெர்கின் எழுந்து கொண்டே கூறினார்.
அலியோகினும் அனைவருக்கும் நல்லிரவு வணக்கம் தெரிவித்துவிட்டு, விடைபெற்றுக்கொண்டு கீழே சென்றுவிட்டார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய அறையும், அதில் வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மரப் படுக்கையும் இருந்தது. அறையின் மூலையில் தந்தத்தாலான சிலுவை இருந்தது. அழகான பெலகுயா அவர்களது அகன்ற, குளிர்ந்த படுக்கையை விரித்திருந்தாள். சுத்தமான துணியின் வாசம் இனிமையாக அடித்தது.
இவான் இவனிச் அமைதியாக உடையை மாற்றிவிட்டுப் படுத்தார்.
“கடவுளே, இந்தப் பாவியை மன்னித்துவிடும்!” என்று முணுமுணுத்துவிட்டு, போர்வையைத் தலைக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டார்.
அவரது மேசையில் இருந்த புகைக்குழாயில் எரிந்து கொண்டிருந்த புகையிலையின் வாடை அடித்துக் கொண்டிருந்தது. பெர்க்கினால் வெகு நேரம் தூங்க முடியவில்லை. எங்கிருந்து அந்த மோசமான வாடை வந்து கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை.
இரவு முழுவதும் மழை சன்னல்களில் அடித்துக் கொண்டிருந்தது.
(முற்றும்)