Skip to content
Home » செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

செகாவ் கதைகள் #12 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 3

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

III

“மலஸ்யோமோவ்வுக்கு வந்த இளவரசர், உங்களைக் கேட்டதாகச் சொன்னார்” என்று லைடா, வீட்டுக்குள் நுழையும் போது, கையுறைகளை கழற்றிக்கொண்டே, அவளது தாயாரிடம் கூறினாள்.

“அவர் என்னிடம் பல சுவாரசியமான விவரங்களைக் கூறினார். மலஸ்யோமோவ்வில் மருத்துவமனை ஆரம்பிப்பது குறித்து ஸிம்ஸ்டோவ் மன்றக்குழுவுக்கு முன் விவாதத்துக்குக் கொண்டு வருவதாகக் கூறினார். ஆனால், பெரிய நம்பிக்கை இல்லை” என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “மன்னித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு இதில் எல்லாம் ஈடுபாடு இல்லை என்பதை மறந்து விட்டேன்.”

எனக்கு எரிச்சலாக இருந்தது.

தோள்களை குலுக்கி கொண்டு, “ஏன்? என்னுடைய கருத்தை நீங்கள் மதிப்பதில்லை.  எனக்கு இதிலெல்லாம் ஈடுபாடு உண்டு” என்றேன்.

“அப்படியா?”

“என்னுடைய கருத்து என்னவென்றால், மலஸ்யோமோவ்வில் மருத்துவமனை தேவையில்லை.”

என்னுடைய எரிச்சல் அவளையும் தொற்றியது; என்னை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு, பாதி கண்களை மூடிக்கொண்டு, சொன்னாள்.

“அப்புறம் என்ன தேவை? இயற்கை காட்சிகளா?”

“இயற்கை காட்சிகளும் அல்ல. அங்கு எதுவும் தேவையில்லை.”

அவள் கையுறைகளை நீக்கிவிட்டு, அன்றைய தபாலில் வந்த செய்தித்தாளை எடுத்துக்கொண்டாள். ஒரு நொடிக்கு பின்னர், அமைதியாக, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பதில் கூறினாள்.

“சென்ற வாரம், பிரசவத்தின்போது அன்னா இறந்து போனாள். இங்கே மருத்துவர் இருந்திருந்தால், அவள் உயிரோடு இருந்திருப்பாள். ஆனால், இயற்கை காட்சியை வரையும் ஓவியர்கள், அவர்களது கருத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாம்.”

“எனக்கென்று உறுதியான கருத்து இருக்கிறது” என்றேன் நான்.

அவள், நான் சொல்வதைக் கேட்க விரும்பாதவள் போல செய்தித்தாளின் பின்னே ஒளிந்து கொண்டாள்.

“என்னுடைய எண்ணத்தில், மருத்துவமனைகள், பள்ளிகள், நூலகங்கள், மருந்து கடைகள் எல்லாம், இப்போதிருக்கும் நிலையில், அடிமைத்தனத்துக்கு அழைத்துச் செல்கின்றன. மக்கள் அனைவரும் பெரிய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். நீ அதை வெட்ட முயலவில்லை. பதிலாக அதில் மேலும் கண்ணிகளைச் சேர்க்கிறாய். இதுதான் என்னுடைய கருத்து.”

அவள் என்னைப் பார்த்து, கேலியாகச் சிரித்தாள். நான் என்னுடைய சிந்தனையை விட்டுவிடாமல் அப்படியே தொடர்ந்தேன்.

“அன்னா பிரசவத்தின் போது இறந்தது முக்கியமல்ல. ஆனால், எல்லா அன்னாக்களும், மவ்ராக்களும், பெலகுயாக்களும், நாள்தோறும் காலையில் இருந்து இரவு வரை ஓய்வின்றி, தாங்கள் நோய்வயப்படும் வரை உழைக்கிறார்கள். அவர்கள் வாழ்வு முழுவதும் தங்களது நோயுற்ற, பசியுடன் இருக்கும் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். வாழ்க்கை முழுவதும் நோயிற்கும், மரணத்துக்கும் பயந்தபடியே இருக்கிறார்கள். அவர்களது உடலையும் அவர்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது. அவர்களது இளமை வேகமாக மறைகிறது, வேகமாக வயதாகிவிடுகிறது, இறுதியில் குப்பையிலும், அழுக்கிலும் இறந்து போகிறார்கள்.

“அவர்களது குழந்தைகளும் அது போலவே வளர்ந்து, இப்படியே பல நூற்றாண்டுகள் கழிகிறது. பல லட்சக்கணக்கான மக்கள், மிருகங்களைவிட மோசமாக வாழ்ந்து மடிகிறார்கள். ஒருவேளை ரொட்டி கிடைக்குமோ என்ற பயத்திலேயே வாழ்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களது வாழ்வின் பயங்கரம், அவர்களால் அவர்களது ஆன்மாவை பற்றி யோசிக்க நேரமில்லை என்பதுதான். அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்பதையும் அவர்கள் நினைப்பதில்லை. பசி, குளிர், மிருகங்கள் மீதான பயம், எப்போதும் வேலை என அனைத்தும் ஆன்மிக வாழ்வுக்கான அனைத்து பாதைகளையும் பனியைப்போல அடைத்து விடுகிறது.

“ஆன்மிக வாழ்வு ஒன்றே நம்மை மிருகங்களில் இருந்து வேறுபடுத்தி, வாழ்வை வாழ்வதற்கான காரணத்தைக் கொடுக்கிறது. அவர்களுக்குப் பள்ளிகளும் மருத்துவமனைகளும் கொடுக்க நீ முயல்கிறாய். ஆனால் அவர்களது சங்கிலிகளை உடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே நீ அவர்களை இன்னமும் அடிமைகளாக மாற்றவே உன் உதவி பயன்படுகிறது. அவர்களது வாழ்வில் புதிய சங்கிலிகளை அறிமுகப்படுத்தி, அவர்களது தேவைகளை இன்னமும் அதிகரிக்கிறாய். அத்தோடு அவர்கள் மருந்துகளுக்கும் புத்தகங்களுக்கும் ஸிம்ஸ்டோவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். அதற்காக இன்னமும் கடினமாக உழைக்க வேண்டும்.”

“நான் உங்களுடன் விவாதம் செய்யப் போவதில்லை. இவை எல்லாவற்றையும் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன்” என்றபடியே கையில் இருந்த செய்தித்தாளை கீழே வைத்தாள். “நான் உங்களுக்கு ஒன்றுதான் சொல்வேன். கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது இதற்கு முடிவல்ல. நாங்கள் மனித குலத்தைக் காக்கவில்லை என்பது உண்மைதான். நாங்கள் தவறுகள் செய்தாலும், எங்களால் முடிந்ததை, சரியான முறையில் செய்யவே முயல்கிறோம். படித்தவர்களுக்கான உயர்ந்த, புனிதமான உண்மை என்பது அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதுதான். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். உங்களுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் எல்லோரையும் மகிழ வைக்க யாராலும் முடியாது.”

“உண்மை, லைடா, உண்மை” என்றாள் அவளது தாயார்.

லைடாவின் முன்பு அவளது தைரியம் பறந்து போய்விடும். அவள் பேசும் போது, லைடாவை மிகவும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டே பேசுவாள். எதையாவது முட்டாள்தனமாக அல்லது தேவை இல்லாமல் சொல்லிவிடுவோமோ என்று பயந்தாள். எனவே, எப்போதும் மறுத்துப் பேசாமல், அவள் சொல்வதை ஒத்துக்கொள்வாள். “உண்மை, லைடா, உண்மை.”

“குடியானவர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்குச் சிறு பிரசுரங்களைக் கொடுப்பது, மருத்துவ உதவி போன்றவை அவர்களது முட்டாள்தனத்தையோ, இறப்பையோ தடுக்காது. இந்த சன்னலின் வரும் வெளிச்சத்தைக் கொண்டு, அந்தப் பெரிய இருண்ட தோட்டத்தை வெளிச்சப்படுத்த முயல்வது போன்றது. அவர்களின் வாழ்வில் குறுக்கிடுவதன் மூலம் நீங்கள் எதையும் அவர்களுக்குத் தருவதில்லை. அவர்களுக்குப் புதிய தேவைகளையும், இன்னமும் உழைப்பதற்கான காரணங்களையும் மட்டுமே தருகிறீர்கள்” என்றேன்.

“ஓ! கடவுளே, நாம் ஏதாவது செய்யத்தான் வேண்டும்!” என்று எரிச்சலுடன் லைடா கூறினாள். அவளது குரலில் இருந்து அவள் என்னுடைய கருத்துகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும், அவற்றை அவள் வெறுத்தாள் என்பதும் தெரிந்தது.

“மக்களைக் கடுமையான உடல் உழைப்பில் இருந்து விடுவிக்கவேண்டும். அவர்களை அழுத்திக் கொண்டிருக்கும் நுகத்தடியில் இருந்து அவர்களை விடுவித்து, அவர்கள் மூச்சுவிட இடம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அவர்கள் வாழ்வை முழுவதும் சமையலறையிலோ, தொழுவதிலோ, வயலிலோ கழிப்பதில் இருந்து காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு அவர்களது ஆன்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் யோசிக்கவும், அவர்களது ஆன்மிக வாழ்வை வாழவும் வழி செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ரட்சிப்பும், அவனது ஆன்மிக வாழ்வில் இருக்கிறது – உண்மையைத் தேடுவதிலும், வாழ்வின் அர்த்தத்தைக் கண்டறிவதிலும் இருக்கிறது. அவர்களது கடுமையான, மிருகத்தனமான வேலைகளில் இருந்து அவர்களை விடுவித்துப் பார். அப்போது உன்னுடைய மருந்து கடைகளும், பிரசுரங்களும் எவ்வளவு முட்டாள்தனமானவை என்பதை உணர்வாய். மனிதன் தன்னுடைய வாழ்வின் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டால், அவனை மதம், சேவை, கலை மட்டுமே திருப்திப்படுத்த முடியும்” என்றேன்.

“வேலையில் இருந்து விடுவிப்பதா? அது முடியுமா?” லைடா புன்னகைத்தாள்.

“ஆமாம்… அவர்களது வேலையில் ஒரு பகுதியை நீ எடுத்துக்கொள். நகரத்திலும், கிராமத்திலும் இருக்கும் நாம் அனைவரும் உடலுழைப்பில் மனிதர்கள் செலவழிப்பதைப் பகிர்ந்துகொண்டால், நாம் ஒவ்வொருவரும் நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்ய வேண்டி இருக்காது. நாம் அனைவரும், பணக்காரர்களும், ஏழைகளும், மூன்று மணி நேரம் தினமும் உழைத்தால், மற்ற நேரம் முழுவதும் நமக்குச் சுதந்திரமாக இருக்கும். இன்னும் நமது உடலுழைப்பைக் குறைக்க நாம் இயந்திரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். நமது தேவைகளையும் முழுவதுமாகக் குறைத்துக் கொள்ளவேண்டும். நம்மையும், நமது குழந்தைகளையும் குளிரையும், பசியையும் கண்டு அச்சப்படாமல் இருக்கப் பழக்க வேண்டும். அன்னா, மரியா, பேலகுயா போல நமது ஆரோக்கியத்தை நினைத்து எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவும் கூடாது. மருத்துவர்களைப் பற்றியும், மருந்து கடைகளைப் பற்றியும் கவலைப்படாமல், புகையிலை தொழிற்சாலைகளையும், மது தயாரிக்கும் இடங்களையும் மூடிவிட்டால், நமக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும்! நமது நேரத்தைக் கலைகளிலும், சேவையிலும் செலவிடலாம். குடியானவர்கள் அனைவருமாகச் சேர்ந்து சாலைகளைச் சரி செய்வது போல, அனைவரும் இணைந்து வாழ்வின் அர்த்தத்தையும், உண்மையையும் கண்டறிய முயல வேண்டும். அப்படிச் செய்தால், உண்மை விரைவாகக் கண்டறியப்பட்டுவிடும். மனிதனையும், அவனுக்கு எப்போதும் இருக்கும், மனதை கவலையில் ஆழ்த்தும் மரணம் பற்றிய பயத்தையும், ஏன் மரணத்தையுமே வென்று விடலாம்.”

“ஆனால் நீங்கள் சொல்வதே முரணாக இருக்கிறது. சேவையைப் பற்றி பேசும் போதே, கல்வி தேவையில்லை என்கிறீர்கள்’’ என்றாள் லைடா.

“பொது இடங்களில் எழுதியிருப்பதைப் படிப்பதற்கும், தனக்குப் புரியாத பிரசுரங்களைப் படிக்கவும் மட்டுமே உபயோகப்படும் கல்வியைத் தேவையில்லை என்கிறேன். அது போன்ற கல்வியே அரசர் ரியூரிக் காலத்தில் இருந்து கற்பிக்கப்படுகிறது. ஆன்மிக வளர்ச்சிக்கான முழுமையான சுதந்திரமே தேவை. கல்வி அல்ல. பள்ளிகள் தேவையில்லை. பல்கலைக்கழகங்களே தேவை.”

“மருத்துவத்தையும் மறுக்கிறீர்கள்.”

“ஆம். மருத்துவம் இயற்கையாகத் தோன்றும் நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே தேவை. அவற்றைக் குணப்படுத்த அல்ல. நோய்களின் காரணிகளை நீக்காமல், நோயை குணப்படுத்தி பிரயோஜனமில்லை. முக்கியமான காரணியான, உடல் உழைப்பை நீக்கிவிட்டால், நோய்களே இருக்காது. குணப்படுத்தும் அறிவியலை நான் அங்கீகரிப்பதில்லை” என்று உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தேன்.

“அறிவியலும், கலையும் உண்மையாக இருக்கும்போது, அவை தற்காலிகமான அல்லது தனிப்பட்ட பயன்பாடுகளுக்குத் தேவைப்படுவதில்லை. அவை எப்போதும் நிரந்தரமான, எல்லோருக்கும் பொதுவான உண்மைகளைக் கண்டறியவே பயன்படுகிறது – வாழ்வின் அர்த்தமும், உண்மையும், கடவுளை தேடுவது, ஆன்மா போன்றவை. அவற்றைக்கொண்டு மருந்துக் கடைகளும், நூலகங்களும் அமைக்கப்படும்போது, அவை வாழ்வை மேலும் குழப்பமாகவே செய்கின்றன. நம்மிடம் மிகவும் அதிகமாக, மருத்துவர்கள், மருந்து கடைக்காரர்கள், வக்கீல்கள், மிகவும் அதிகமாகப் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், உயிரியல் நிபுணர்கள், கணிதவியல் அறிஞர்கள், தத்துவ ஞானிகள், கவிஞர்கள் இல்லை. நம்முடைய முழுமையான அறிவுசார் மற்றும் ஆன்மிக முயற்சிகள் தற்காலிக தேவைகளுக்காகவே செலவிடப்படுகிறது… விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஒவ்வொரு நாளும் உழைத்து, உழைத்து, நம்மிடையே அன்றாட வாழ்வை இன்னமும் சுகமாக செய்கிறார்கள். நம்முடைய உடல் தேவைகளும் அதிகரிக்கிறது. ஆனாலும் நாம் இன்னமும் உண்மையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறோம். மனிதன் இன்னமும் பேராசை கொண்ட, ஆபாசமான மிருகமாகவே இருக்கிறான். அனைத்தும் மனித குலத்தை இன்னமும் மோசமாக்கவும், நமது வலிமையைக் குறைக்கவுமே உபயோகப்படுகின்றன. அது போன்ற நிலையில், கலைஞனின் வாழ்வுக்கு எந்த அர்த்தமும் இல்லை. மிகவும் திறமை வாய்ந்தவனாக இருந்தால், அவனுடைய நிலை இன்னமும் விநோதமாகவும் புரியாததாகவும் இருக்கிறது. அவன் வாழ்வும் மனிதன் என்னும் வேட்டையாடி உண்ணும், அருவருப்பான மிருகத்தையும், இன்றைய வாழ்வியல் நிலையையும் தாங்கி நிற்பதாகவே இருந்துவிடுகிறது. நான் வேலை செய்ய விரும்பவில்லை, செய்யவும் மாட்டேன்… எதுவும் தேவையில்லை, எனவே இந்த உலகம் எக்கேடு கெட்டும் போகட்டும்.”

“மிஸ்சியுஸ், இங்கிருந்து போ!” என்று லைடா, நான் பேசும் வார்த்தைகள் அந்தச் சிறுமிக்கு ஆபத்தானவை என்று உணர்ந்தவளைப் போல, அவளது சகோதரியை அங்கிருந்து அனுப்பினாள்.

ஜென்யா சோகமாக அவளது சகோதரியையும், தாயாரையும் பார்த்துக் கொண்டு, வெளியே சென்றாள்.

“தாங்கள் அக்கறையில்லாமல் இருப்பதை மறைப்பதற்கு, மக்கள் இப்படித்தான் பேசுவார்கள். அங்கு வந்து கற்றுக் கொடுப்பதைவிட, மருத்துவமனைகளும், பள்ளிகளும் தேவையில்லை என்று சொல்வது எளிதானது” என்றாள் லைடா.

“உண்மை, லைடா, உண்மை” என்று அவளது தாயார் ஒத்துக்கொண்டாள்.

“நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்று சொல்கிறீர்கள்” என்று லைடா தொடர்ந்தாள். “உங்கள் வேலையை மிகவும் உயர்வாக நினைக்கிறீர்கள். ஆனால் விவாதம் செய்யாதீர்கள். நாம் எப்போதும் ஒத்துப்போக போவதில்லை. நீங்கள் இப்போது இகழ்ச்சியாக பேசிய, மிகவும் குறைபாடான நூலகத்தையோ, மருந்து கடையையோ, உங்களது அனைத்து இயற்கை காட்சி ஓவியங்களையும்விட உயர்வாகவே கருதுகிறேன்” என்று சொல்லிவிட்டு, அவளது தாயாரை நோக்கி திரும்பி, வேறு தொனியில், “இளவரசர் மிகவும் மெலிந்துவிட்டார். கடைசி முறை இங்கிருந்ததைவிட மிகவும் மாறிவிட்டார். மருத்துவர்கள் அவரை விச்சிக்குச் செல்ல அறிவுறுத்தி இருக்கிறார்கள்.”

அவளது தாயாரிடம் இளவரசர் பற்றிப் பேசியது, என்னிடம் பேசுவதைத் தவிர்க்கவே. அவளது முகம் கோபமாக இருந்தது. அதை மறைத்துக்கொள்ள, மேசையில் இருந்த செய்தித்தாளை படிப்பதுபோல அமர்ந்துகொண்டாள். நான் அங்கிருப்பதை அவள் விரும்பவில்லை. எனவே அவர்களிடம் சொல்லிவிட்டு, நான் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *