Skip to content
Home » செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

செகாவ் கதைகள் #13 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 4

மாடி வீட்டு ஓவியனின் கதை

IV

வெளியே எல்லாம் அமைதியாக இருந்தது. குளத்தின் மறுபக்கம் இருந்த கிராமம் இப்போது அடங்கி இருந்தது. ஒரு விளக்குகூட இல்லை. குளத்தில் நட்சத்திரங்களின் ஒளி மட்டும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. கல் சிங்கங்கள் இருந்த வாயிலின் அருகே ஜென்யா, நான் வருவதற்குக் காத்திருந்தாள்.

“கிராமமே தூங்கி கொண்டிருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அவளது முகத்தை இருட்டில் பார்க்க முயற்சி செய்தேன். அவளது கருமையான, சோகமான கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன. “விடுதி உரிமையாளர்களும், குதிரை திருடுபவர்களும் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் போல நல்லவர்கள் சண்டையிட்டுக் கொண்டும், எரிச்சல்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.”

சோகமான ஆகஸ்ட் மாத இரவு. இலையுதிர்காலம் ஆரம்பிக்கும் நேரம் என்பதால் சோகமாக இருந்தது. நீல மேகத்தின் பின்னே நிலா எழுந்து கொண்டிருந்தது. சாலையில் வெளிச்சம் இல்லாமலும், இரண்டுபுறமும் குளிர்கால சோள வயல்கள் இருந்தன. நட்சத்திரங்கள் கீழே விழுந்து கொண்டிருந்தன. ஜென்யா என்னுடன் சாலையில் நடந்து கொண்டே, வானத்தையும், விழும் நட்சத்திரங்களையும் காண்பதைத் தவிர்த்தபடியே இருந்தாள். அவை அவளுக்குப் பயத்தைக் கொடுத்தன.

மாலை குளிரில் நடந்து கொண்டே, “நீங்கள் சொல்வது சரி என்று நம்புகிறேன். மக்கள் அவர்களை ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுத்திக் கொண்டால், அவர்கள் எல்லாவற்றையும் உடைத்துவிடுவார்கள்” என்றாள்.

“ஆமாம். நாம் மேலானவர்கள். நம்முடைய மேதமையின் வல்லமையை முழுவதுமாகக் புரிந்துகொண்டு, உயர்ந்த நோக்கங்களுக்காக வாழ்ந்தால் நாமும் கடவுளைப்போல வாழலாம். ஆனால் அது நடக்கப் போவதில்லை. மனிதகுலம் நசிந்து போய், அவர்களது மேதமையின் அடையாளமே தெரியாமல் போகப்போகிறது.”

பார்வையில் இருந்து வாசல் கதவுகள் மறைந்துவிட்டவுடன், ஜென்யா என்னுடைய கைகளை எடுத்துக் குலுக்கினாள்.

“நல்லிரவு.” என்று நடுக்கத்துடன் காத்திருந்தாள். அவள் தோள்களில் இருந்த ஆடை மெல்லியதாக இருந்தது. குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள். “நாளை வாருங்கள்.”

திடீரென்று என்னை ஒரு பயங்கரமான தனிமை உணர்வு கவ்விக்கொண்டது. என் மீதும், மக்களின் மீதுமான அதிருப்தியுடன் மிகுந்த தனிமையில் நான் விடப்பட்டதுபோல் உணர்ந்தேன். நானும் விழும் நட்சத்திரங்களைக் காண பயப்பட்டேன்.

“தயவுசெய்து இன்னும் சிறிது நேரம் என்னுடன் இரு” என்றேன்.

நான் ஜென்யாவைக் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் என்னைச் சந்தித்து, என்னுடன் இதுபோல் இரவு நேரச் சாலையில் பேசிக்கொண்டே நடக்க விரும்பினாள். என்னை எப்போதும் அபிமானத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாள். அவளது வெளிறிய முகம், மெல்லிய மூக்கு, கைகள், அவளது மெல்லிய உருவம், எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பது போன்றவை எவ்வளவு அழகாக இருக்கிறது! அவளது அறிவு? அவள் மிகவும் அசாதாரணமான அறிவாளியாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அவளது கருத்துகளின் விரிவு என்னை ஈர்த்தது. அத்தோடு அவள் கம்பீரமும், வலிமையும் மிகுந்த மற்றும் என்னை விரும்பாத லைடாவின் கருத்துகளில் இருந்து வேறுபட்டு சிந்திப்பதும் ஒரு காரணம். ஜென்யா என்னை ஒரு ஓவியராகவும் விரும்பினாள். என்னுடைய திறமையால் அவளைக் கவர்ந்துவிட்டேன். அவளுக்காக மட்டுமே ஓவியம் வரையும் நாளை எதிர்பார்த்தேன். என்னுடைய சிறிய அரசியாக, அற்புதமான மரங்கள், வயல்கள், நதி, அதிகாலை என எல்லா இயற்கையையும், இவற்றுடன் இருப்பதால்  ன்று உபயோகமற்றவனாக கைவிடப்பட்டவனாக உணரும் நிலை மாறி அவளுடன் சேர்ந்து அனுபவிக்கும் நாளைக் கனவுகண்டுகொண்டிருந்தேன்.

“இன்னும் சிறிது நேரம் என்னுடன் இரு. மன்றாடிக் கேட்கிறேன்” என்றேன்.

என்னுடைய மேலங்கியை எடுத்து, அவளது தோள்களில் வைத்தேன். ஆணின் மேலங்கியில் தான் அவலட்சணமாகத் தெரிவோம் என்று எண்ணி, அவள் உடனே அதை எடுத்தெறிந்து விட்டு, சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்படிச் செய்யும் போது, நான் அவளைக் கட்டி அணைத்து, அவளது முகம், தோள், கைகளில் முத்தம் கொடுத்தேன்.

“நாளை பார்க்கலாம்” என்று இரவின் அமைதியை உடைத்துவிட பயந்தவளைப் போல மெதுவாகக் கூறினாள். அவள் என்னை அணைத்தாள்; “நாம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அம்மாவிடமும், என் அக்காவிடமும் தெரிவிக்கவேண்டும்… அவ்வளவு மோசமான விஷயமா இது? அம்மா சந்தோஷப்படுவாள். அம்மாவுக்கு உங்களைப் பிடிக்கும், ஆனால், லைடா!”

அவள் வாயிலை நோக்கி ஓடினாள்.

“போய் வருகிறேன்” என்று கத்தினாள்.

இரண்டு நிமிடங்களுக்கு நான் அங்கேயே நின்று, அவள் ஓடும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை. அங்கே செல்ல எந்தக் காரணமும் இல்லை. சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். திரும்பவும் அங்கேயே சென்று, அவள் வசிக்கும் வீட்டைப் பார்த்தேன். எளிமையான, பழைய, அழகான வீடு. அதன் மாடியில் இருக்கும் சன்னல்கள், கண்களைப் போல என்னைப் பார்த்து, எல்லாவற்றையும் புரிந்துகொள்வது போல இருந்தது. அதைத் தாண்டி நடந்து, டென்னிஸ் மைதானத்தின் அருகில் இருந்த எல்ம் மரத்தின் கீழே இருந்த பலகையில் அமர்ந்து அந்த வீட்டை பார்த்துக் கொண்டிருந்தேன். மாடியில் இருந்த சன்னலில் வெளிச்சம் தெரிந்தது. அங்குதான் மிஸ்சியுஸ்சின் அறை இருந்தது. சற்று நேரத்தில் மெலிதான பச்சை வெளிச்சம் தெரிந்தது. விளக்கின் மீது நிழல் விழுந்து கொண்டிருந்தது. நிழல்கள் இப்போது நகர ஆரம்பித்தன… நான் அமைதியாகவும், மென்மையான உணர்வுகளுடன் இருந்தேன். நான் காதலில் விழுந்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் அங்கிருந்து சிறிது தூரத்தில் இருந்த இன்னொரு அறையில் இருந்த லைடா, என்னை விரும்பாததோடு நில்லாமல் என்னை வெறுத்தாள் என்பதும் என்னைக் கலங்க வைத்தது. அங்கேயே அமர்ந்து ஜென்யா வெளியே வருகிறாளா என்று காத்திருந்தேன். அவர்கள் அனைவரும் மாடியில் இருந்தார்கள் என்று தெரிந்தது. அங்கிருந்து வந்த சத்தத்தைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு மணி நேரம் கழிந்தது. பச்சை விளக்கு அணைந்தது. நிழல்கள் இப்போது தெரியவில்லை. வீட்டின் மீது இருந்த நிலவின் ஒளியில் தூங்கிக் கொண்டிருந்த தோட்டமும், பாதைகளும் தெரிந்தன. வீட்டின் முன்னிருந்த பூந்தோட்டத்தில் ரோஜா பூக்களும் மற்ற பூக்களும் தெரிந்தன. எல்லாம் ஒரே நிறமாகத் தெரிந்தன. மிகவும் குளிர ஆரம்பித்திருந்தது. தோட்டத்தில் இருந்து கிளம்பி, என்னுடைய மேலங்கியை எடுத்துக்கொண்டு, மெதுவாக வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்.

மறுநாள் இரவு உணவுக்குப் பின்னர், வோல்சனினோவ் வீட்டுக்குச் சென்றேன். கண்ணாடிக் கதவுகள் திறந்திருந்தன. பூந்தோட்டத்தில் இருந்தோ, பாதைகளில் இருந்தோ ஜென்யா வருகிறாளா என்று மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன், அவளது குரல் ஏதாவது அறையில் இருந்து வருகிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கிருந்து வரவேற்பறைக்கும், உணவருந்தும் அறைக்கும் சென்றேன். அங்கே ஒருவரும் இல்லை. உணவருந்தும் அறையில் இருந்து முன்னறைக்கு சென்றேன். திரும்பவும் சென்றேன். வழியில் இருந்த பல கதவுகளில் ஒன்றின் பின்னால் இருந்து லைடாவின் குரல் கேட்டது.

“எங்கேயோ இருக்கும் காகம் ஒன்றுக்கு… கடவுள்… ஒரு சீஸ் துண்டை அனுப்பினார்… காகம் ஒன்றுக்கு… என்று மெதுவாக, தெளிவாக, யாருக்கோ வாசித்துக் கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது.

என்னுடைய காலடி சத்தத்தை கேட்டு, “…எங்கோ… யாரங்கே?”  என்று கேள்வி எழுப்பினாள்.

“நான்தான்.”

“ஓ! நான் இப்போது வெளியே வரமுடியாது. நான் மாஷாவுக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.”

“எக்டேரினா பாவ்லோவ்னா தோட்டத்தில் இருக்கிறாளா?”

“இல்லை. அம்மாவும், சகோதரியும் இன்று பெங்காவில் இருக்கும் என்னுடைய அத்தை வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். குளிர்காலத்தில் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்.” சிறிது அமைதிக்கு பின்னர், அவள் திரும்பவும் ஆரம்பித்தாள். “எங்கோ இருக்கும் காகம் ஒன்றுக்கு கடவுள் சீஸ் துண்டு ஒன்றை அனுப்பினார். புரிகிறதா?”

நான் திரும்பவும் முன்னறைக்குச் சென்றேன். ஒரு சிந்தனையும் இல்லாமல், நின்று, அங்கிருந்த குளத்தையும், கிராமத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்னமும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஒரு துண்டு சீஸ்… எங்கோ இருந்த காகத்துக்கு கடவுள் சீஸ் துண்டை அனுப்பினார்.”

நான் வீட்டில் இருந்து கிளம்பினேன். முதல் முறை நான் வந்த வழிக்கு நேர்மாறாக – பண்ணையிடத்தில் இருந்து தோட்டத்துக்கு, வீட்டைத் தாண்டி, எலுமிச்சை மரப்பாதையில் சென்றேன். ஒரு சிறுவன் என் முன்னே சென்றான். கையில் சிறிய குறிப்பைக் கொடுத்தான்: “நான் என்னுடைய சகோதரியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவள் நான் உங்களைப் பிரிவது தான் நல்லது என்கிறாள். என்னால் அவள் வார்த்தையை மீறமுடியாது. கடவுள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும். நானும், அம்மாவும் எவ்வளவு அழுதோம் என்று உங்களுக்குத் தெரிந்தால் தாங்கமாட்டீர்கள்!” என்று இருந்தது.

அங்கிருந்து பிர் மரங்களின் இடையே இருந்த பாதையில் சென்று, வேலியை அடைந்தேன்.  அங்கே வயல்களில் சோளம் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. குயில்கள் கூவிக் கொண்டிருந்தன. அங்கங்கே பசுக்களும், கட்டி போடப்பட்ட குதிரைகளும் மேய்ந்து கொண்டிருந்தன. இங்கும், குன்றுகளிலும் குளிர்கால சோளம் பசுமையாக இருந்தது. மந்தமான சோர்வான உணர்வு என்னைச் சூழந்தது. வோல்சனினோவ் வீட்டில் நான் பேசியதை எல்லாம் நினைத்து அவமானமாக இருந்தது. வாழ்க்கை மேலும் சோர்வூட்டுவதாக ஆனது. வீட்டுக்குச் சென்று, என்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, அன்று மாலையே பீட்டர்ஸ்பர்க் திரும்பினேன்.

அதன் பின்னர் நான் வோல்சனினோவ் குடும்பத்தைப் பார்க்கவேயில்லை. சமீபத்தில் நான் கிரிமியா சென்றிருந்தபோது, பெய்லகுரோவ்வை ரயில் நிலையத்தில் பார்த்தேன். பழைய நாட்கள் போலவே, நீண்ட ருஷ்ய அங்கி அணிந்து, வேலைப்பாடுகள் உள்ள சட்டையை அணிந்திருந்தார். அவரது உடல்நலத்தை விசாரித்தபோது, “கடவுள் அருளால் நன்றாக இருக்கிறது” என்று பதில் கூறினார். அதன் பின், பேச ஆரம்பித்தார். அவரது பண்ணையை விற்றுவிட்டு, இன்னொரு சிறிய பண்ணையை லயபார் இவனொவ்னா பெயரில் வாங்கியிருந்தார். வோல்சனினோவ் குடும்பத்தைப் பற்றிச் சிறிது மட்டுமே அவர் கூறினார். லைடா இன்னமும் ஷோல்கோவ்காவில் இருப்பதாகவும், அங்கிருந்த பள்ளியில் குழந்தைகளுக்கு ஆசிரியையாக இருப்பதாகவும் சொன்னார்; அங்கு சிறிது சிறிதாகத் தன்னைச் சுற்றி, தன்னைப் போலவே சிந்திக்கும் சிலரை சேர்த்துக் கொண்டு, குழுவைச் சேர்த்து, கடந்த ஸிம்ஸ்டோவ் தேர்தலில் மாவட்டத்தைத் தன்னுடைய கைகளில் வைத்திருந்த பாலகின்னைத் தோற்கடித்திருந்தாள். ஜென்யா அந்த வீட்டில் வசிக்கவில்லை என்றும், அவள் எங்கிருக்கிறாள் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.

நான் ஏற்கனவே மாடி வீட்டை குறித்து மறந்துவிட்டிருந்தேன். எப்போதாவது நான் வேலை செய்யும் போதோ, வாசிக்கும் போதோ திடீரென்று, எந்தக் காரணமும் இல்லாமல், அந்தச் சன்னலில் தெரிந்த பச்சை விளக்கு நினைவுக்கு வரும். நான் காதலில் இருந்த நாட்களில், அன்றிரவு வயலில் நடந்ததும், வெப்பமாக இருப்பதற்காகக் கைகளை உரசிக் கொண்டு இருந்ததும் நினைவுக்கு வந்தது. இன்னமும் அரிதாக, நான் தனியாகவும், சோகமாகவும் இருக்கும் நேரங்களில், அவளும் அந்த நாட்களை எண்ணிக்கொண்டு, என்னையும் நினைத்துக் கொண்டு, எனக்காக காத்துக் கொண்டு இருக்கக்கூடும் என்றும், நாங்கள் கட்டாயம் ஒரு நாள் சந்திப்போம் என்றும் தோன்றும்.

மிஸ்சியுஸ், எங்கே இருக்கிறாய்?

(முற்றும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *