I
கடற்கரைக்குப் புதியதாக ஒருவர் வந்திருப்பதாகப் பேசிக்கொள்ளப்பட்டது; சிறிய நாயுடன் ஒரு பெண். பதினைந்து நாட்களாக யால்டாவில் இருந்த டிமிட்ரி டிமிட்ரிச் குரோவ்வுக்குச் சூழல் பழகிப்போயிருந்தது. எனவே புதிதாக வருபவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார். வெர்னி’ஸ் அரங்கில் அமர்ந்திருக்கும்போது, கடற்கரையில் தங்க நிற முடியுடனும், தலையில் தொப்பியுடனும் நடந்து கொண்டிருக்கும் இளம்பெண்ணைப் பார்த்தார். அவளுக்கு அருகில் ஒரு சிறிய வெள்ளை போமெரேனியன் நாய் ஓடிக்கொண்டிருந்தது.
அதன் பின்னர் அவளை பல முறை பொது இடங்களிலும், பூங்காக்களிலும் அவர் பார்த்தார். அவள் தனியாகவே நடந்துகொண்டிருந்தாள். எப்போதும் அதே தொப்பியை அணிந்தும், அதே நாயுடனும் நடந்து கொண்டிருந்தாள். யாருக்கும் அவள் யாரென்று தெரியவில்லை. எல்லோரும் அவளை ‘ நாயுடன் வரும் பெண்’ என்றே அழைத்தார்கள்.
“நண்பர்களோ, கணவனோ இல்லாமல் இருந்தால், அவளது நட்பை வேண்டுவதில் தவறில்லை.” என்று குரோவ் நினைத்தார்.
அவருக்கு வயது நாற்பதுக்குள் இருக்கும். பனிரெண்டு வயதில் ஒரு பெண்ணும், பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்களும் அவருக்கு இருந்தார்கள். இளவயதிலேயே, கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும்போதே திருமணம் செய்துவிட்டார். இப்போது அவரது மனைவி அவரது வயதில் பாதியாக இருப்பதாகத் தெரிந்தது. அவள் உயரமாகவும் கருத்த புருவங்களுடன் நிமிர்ந்தும், கௌரவமாகவும், எந்த உணர்ச்சியும்காட்டாத பெண்.
தன்னை மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தாள். நிறையப் புத்தகங்கள் வாசிப்பவள். ஒலியியல் எழுத்துகளை உபயோகிப்பவள். அவளது கணவனை டிமிட்ரி என்று அழைக்காமல், திமித்ரி என்று அழைப்பாள். அவரோ அவளை முட்டாள் என்றும், குறுகிய மனமும், அழகற்றவள் என்றும் ரகசியமாக நினைத்துக் கொண்டிருந்தார். அவளை நினைத்து பயம் கொண்டிருந்தார்.
அவளுடன் வீட்டில் இருப்பதும் அவருக்குப் பிடிப்பதில்லை. அவளுக்கு உண்மையாக இருப்பதை நிறுத்தி பல காலம் ஆகியிருந்தது. பல முறை அவளுக்குத் துரோகம் இழைத்திருந்தார். அந்தக் காரணத்தினாலேயே அவர் பெண்களைப் பற்றிப் பேசும்போதோ, வேறு யாரேனும் பெண்களைப் பற்றி அவரிடம் பேசும்போதோ, அவர்களை ‘தாழ்ந்தவர்கள்’ என்று பேசுவது அவருக்கு வழக்கமாக இருந்தது.
அவருடைய கசப்பான அனுபவங்களால், அவர்களை அப்படி அழைப்பது சரி என்று அவர் நினைத்தார். ஆனாலும் அவரால் அந்த ‘தாழ்ந்தவர்கள்’ இல்லாமல் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல இருக்கமுடியாது. ஆண்களுடன் இருக்கும்போது அவர் எளிதாகச் சலிப்படைந்துவிடுவார். அவர்களுடன் சரியாகப் பேசாமலும், கண்டு கொள்ளாமலும் இருப்பார். தான் தானாக இருப்பதாக அவருக்குத் தெரியாது. ஆனால் பெண்களுடன் இருக்கும் போது, அவர் சுதந்திரமாகவும், எப்போதும் என்ன பேசவேண்டும் என்று தெரிந்தும், எப்படி நடந்து கொள்ளவது என்பதை அறிந்தும் இருந்தார்; அமைதியாக இருக்கும் போதும் பெண்களுடன் அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அவருடைய உருவத்தில், அவரது முழுமையான குணத்தில் புரிபடாத ஒன்று பெண்களை அவரிடம் ஈர்த்தது. பெண்களுக்கு அவரைப் பிடித்தமானவராக இருக்கச் செய்தது. அவருக்கும் அது தெரிந்தே இருந்தது. அவர்களை அவரிடம் இழுத்ததுபோல ஏதோ ஒரு சக்தி அவரையும் அவர்களிடம் இழுத்தது.
அவருடைய அனுபவத்தில், திரும்பத் திரும்ப நடக்கும் கசப்பான அனுபவத்தில், நல்ல மனிதர்களுடன் – குறிப்பாக மாஸ்கோ மனிதர்கள் – மெதுவாக முடிவெடுப்பவர்கள் – இருக்கும் நெருக்கம், முதலில் வாழ்வைச் சற்று வண்ணமயமாகவும், ஒரு புதுவிதமான சாகசமாக ஆக்கினாலும், எப்போதும் ஒரு குழப்பமான புதிராகவும், காலம் செல்ல செல்ல தாங்க முடியாததாகவும் மாற்றிவிடுகிறது என்பதைக் காலம் அவருக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை ஒரு சுவாரசியமான பெண்ணைச் சந்திக்கும் போதும், இந்தப் பாடம் அவரது நினைவில் இருப்பதில்லை. மீண்டும் ஒரு முறை வாழ்வதற்கு ஆர்வமாகவும், எல்லாவற்றையும் எளிமையாகவும், வேடிக்கையாகவும் எண்ணிக்கொண்டுவிடுவார் .
ஒரு நாள் அவர் தோட்டத்தில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது, தொப்பி அணிந்திருந்த பெண் அவருக்கு அடுத்த மேசையில் வந்தமர்ந்தாள். அவளுடைய நடை, உடை, முகபாவனை, அவள் தலைமுடியை அணிந்திருந்தவிதம் எல்லாம் அவள் உயர்ந்த குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்; அவள் மணமானவள்; அவள் யால்டாவுக்கு முதல் முறையாக அதுவும் தனியாக வந்திருக்கிறாள்; அங்கே மந்தமான நாட்களைக் கடத்துகிறாள் என்பதையெல்லாம் உணர்த்துவதாக இருந்தன.
யால்டா போன்ற இடங்களில் நடப்பதாகச் சொல்லப்படும் நெறியற்ற கதைகள் பெருமளவில் உண்மையாக இருப்பதில்லை; அது போன்ற கதைகள் தங்களால் முடிந்தால் பாவம் செய்துவிடக் கூடியவர்களாலேயே கட்டப்படுகிறது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால் அவருக்கு அருகில் மூன்று அடி தொலைவில் அவள் அமர்ந்திருந்த போது, அந்தக் கதைகள் – எளிதாக மயங்கும் பெண்கள், மலைகளுக்கு உல்லாச பயணம், வேகமான, உணர்ச்சிகரமான காதல் கதை, பெயர் கூடத் தெரியாத பெண்ணுடன் நிகழ்த்தப்படும் சாகச காதல் போன்றவை அவரை ஆக்ரமித்தது.
அவர் போமெரேனியன் நாயை மெல்ல அழைத்தார். அவருக்கு அருகில் வந்தவுடன், அதன் கரங்களைப் பிடித்துக் குலுக்கினார். நாய் மெதுவாக உறுமியது; குரோவ் திரும்பவும் அதன் கரங்களைக் குலுக்கினார்.
அவள் அவரை ஒரு முறை பார்த்து, கண்களைக் கீழே திருப்பிக்கொண்டாள்.
“கடிக்கமாட்டான்” என்று சொல்லும்போதே அவள் முகம் சிவந்தது.
“நான் ஒரு எலும்பைக் கொடுக்கலாமா?” என்று கேட்டார். அவள் தலையசைத்து சம்மதம் சொல்லவே, மீண்டும் மிகவும் பணிவுடன் “யால்டாவில் வெகு நாட்களாக இருக்கிறீர்களா?” என்றார்.
“ஐந்து நாட்கள்.”
“நான் பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டேன்.”
சற்று நேரம் அமைதி நிலவியது.
“காலம் வேகமாகச் செல்கிறது. ஆனால் இங்கே எல்லாம் மந்தமாக இருக்கிறது!” அவரைப் பார்க்காமலேயே, அவள் சொன்னாள்.
“இங்கு மந்தமாக இருக்கிறது என்று சொல்வது கூட நாகரீகமாகிவிட்டது. பேலியோவ் அல்லது சிட்ராவில் வாழ்க்கையை மந்தம் என்று எண்ணாமல் வாழ்பவர்கள், இங்கே வந்தவுடன், ‘ஓ! எல்லாம் மந்தமாக இருக்கிறது! ஓ! தூசி!’ என்று கிரெனடாவில் இருந்து வந்தவர்களைப்போல பேசுவார்கள்.”
அவள் சிரித்தாள். அவர்கள் இப்போது அமைதியாக, தெரியாதவர்கள் போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இரவு உணவுக்குப் பின்னர் அவர்கள் ஒன்றாக நடந்தார்கள்; எங்கே போவது என்றோ, எதைப் பற்றிப் பேசுவது என்றோ எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவர்கள் இடையே நிகழும் உரையாடல் போல அவர்களிடையே சுதந்திரமாகவும், திருப்தியுடனும் வேடிக்கையான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது.
நடந்து கொண்டே, கடலின் வினோதமான வண்ணங்களைப் பற்றிப் பேசினார்கள்; கடல் வெப்பமான, இளம் ஊதா நிறத்தில் இருந்தது. அதன் நடுவே நிலவின் ஒளி தங்க கீற்றைப் போலப் பாய்ந்திருந்தது. அன்றைய வெப்பம் எப்படி வியர்வையைக் கொடுத்தது என்று பேசினார்கள். குரோவ் தான் மாஸ்கோவில் இருப்பதாகவும், கலைகளில் தான் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், வங்கியில் வேலை செய்வதாகவும் கூறினார். தான் ஓபரா பாடகனும் கூட என்றும், இப்போது அதை விட்டுவிட்டதாகவும், மாஸ்கோவில் தனக்கு இரண்டு வீடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவள் பீட்டர்ஸ்பர்க்கில் வளர்ந்ததாகவும், இரண்டு வருடங்களுக்கு முன் திருமணத்துக்குப் பின், வேறிடத்துக்கு மாறிவிட்டதாகவும், யால்டாவில் ஒரு மாதம் இருக்கப்போவதாகவும், திருப்பி அழைத்துப் போகவும், கணவருக்கும் விடுமுறை தேவை என்பதாலும் அவளது கணவன் அங்குவரக்கூடும் என்றும் தெரிவித்தாள்.
அவளது கணவன் அரசவையில் இருக்கிறானா அல்லது பிரதேசக் குழுவில் இருக்கிறானா என்று அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை. அவளுக்குத் தெரியவில்லை என்பது, அவளுக்கே வேடிக்கையாகவும் இருந்தது. அவளது பெயர் அன்னா செர்கெய்வன என்றும் குரோவ் தெரிந்துகொண்டார்.
அவளைப் பற்றி அவரது விடுதிக்கு வந்த பின்னர் யோசித்துக் கொண்டிருந்தார். மறுநாள் அவள் கட்டாயம் அவரைச் சந்திப்பாள். கட்டாயம் நடக்கப்போகிறது. தூங்கப் போகும் முன் அவள், அவரது மகளைப் போல, பள்ளியில் இருந்து சமீபத்தில் தான் வெளியே வந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். தெரியாதவர்களிடம் பேசும் போது அவளது வார்த்தைகளில் தெரிந்த தன்னம்பிக்கையின்மை அவருக்குத் தெரிந்திருந்தது. அவள் இது போன்ற சூழலில் இருப்பது இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். அதுவும் அவளை ஒருவர் தொடர்ந்து, பார்த்து, ரகசிய நோக்கத்தோடு அவளிடம் பேசுவதும் (அவளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை) முதல் முறையாக இருக்கக்கூடும். அவளுடைய மெல்லிய, அழகான கழுத்தையும், அழகான சாம்பல் நிறக் கண்களையும் நினைவுகூர்ந்தார்.
“அவளிடம் ஏதோ ஒன்று பரிதாபமாக இருக்கிறது” என்று நினைத்துக்கொண்டே, தூங்கிப்போனார்.
II
அவர்கள் பழக ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று விடுமுறை. உள்ளே வெப்பமாக இருந்தது. காற்றும் சுழன்று, சுழன்று தூசியைக் கிளப்பிக்கொண்டு, நடப்பவர்களின் தொப்பிகளைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. அன்று அனைவருக்கும் தாகம் எடுத்துக் கொண்டிருந்தது. குரோவ் அரங்குக்குச் சென்று, அன்னா செர்கெய்வனவை இனிப்பு சாறும், குளிர் நீரும் எடுத்துக்கொள்ள வற்புறுத்தினர். என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.
மாலையில், காற்றின் வேகம் சிறிது குறைந்தது. அவர்கள் கடல் அரிப்பைத் தடுக்கப் போட்டிருந்த கற்களில் இருந்து, அங்கு வந்து கொண்டிருந்த கப்பல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். துறைமுகத்தில் பலரும் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் யாரையோ வரவேற்க, கைகளில் பூங்கொத்துடன் காத்திருந்தார்கள். யால்டாவில் சேரும் கூட்டங்களின் இரண்டு விசித்திரங்களை அங்கே காணலாம். ஒன்று, வயதான பெண்கள் இளம் பெண்களைப்போல உடையணித்திருந்தது, இரண்டு, பல ராணுவ தளபதிகள் அங்கிருந்தது.
கடல் கொந்தளிப்பாக இருந்ததால், கப்பல் தாமதமாக வந்தது. சூரியன் அஸ்தமித்த பின்னரும், கப்பல் துறைமுகத்துக்குத் திரும்புவதற்கு வெகு நேரம் ஆனது. அன்னா செர்கெய்வன, தன்னுடைய கண்ணாடிகளின் வழியே கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த கப்பல் பயணிகளில் தன்னுடைய நண்பர்களைத் தேடுவதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தாள். குரோவ் அவளைப் பார்த்தபோது, அவளது கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவள் நிறைய பேசிக்கொண்டிருந்தாள். சம்பந்தமில்லாமல் கேள்விகளும் கேட்டுக்கொண்டிருந்தாள். அடுத்த நொடியே அவள் கேட்ட கேள்வியை மறந்துவிடுவாள். கூட்ட நெரிசலில் அவளது கண்ணாடியைக் கீழே போட்டுவிட்டாள்.
கூட்டம் கலைய ஆரம்பித்தது. இருட்டில் யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை. காற்றும் முழுவதுமாக நின்றுவிட்டது. ஆனால் குரோவும், அன்னா செர்கெய்வனவும் இன்னமும் கப்பலில் இருந்து யாரையோ எதிர்பார்த்து நிற்பதுபோல நின்று கொண்டிருந்தார்கள். அன்னா செர்கெய்வன இப்போது அமைதியாக இருந்தாள். குரோவைப் பார்க்காமல், பூக்களை முகர்ந்து கொண்டிருந்தாள்.
“இப்போது மாலையில் வானிலை நன்றாக இருக்கிறது. “எங்கே செல்லலாம்? எங்காவது வண்டியில் செல்லலாமா?”என்றார்.
அவள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
அவர் அவளை உற்று பார்த்தார். தன்னுடைய கையை அவளைச் சுற்றிப்போட்டு, அவளை உதடுகளில் முத்தமிட்டார். பூக்களின் வாசத்தையும் ஈரப்பதத்தையும் முகர்ந்தார். உடனே அவரைச் சுற்றிப் பார்த்தார். யாராவது அவர்களைப் பார்த்து விட்டார்களா என்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.
“உன்னுடைய விடுதிக்குச் செல்லலாம்” என்று மெதுவாகக் கூறினார். இருவரும் வேகமாக நடந்தார்கள்.
அவளது அறை அருகிலேயே இருந்தது. அவள் அங்கிருந்த ஜப்பானிய கடையில் இருந்து வாங்கியிருந்த வாசனை திரவிய வாசத்துடன் இருந்தது. குரோவ் அவளைப் பார்த்து, நினைத்தார். “உலகில் எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்க முடிகிறது!” பழைய நாட்களில் இருந்து அவருடைய நினைவில் பல கவலையில்லாத, நல்ல குணமுள்ள பெண்கள் இருந்தார்கள். அவர் அந்தப் பெண்களுக்கு கொடுத்த சந்தோசம், எவ்வளவு சிறிய காலத்துக்கு இருந்தாலும், அவரை அவர்கள் காதலித்து, நன்றியுடன் இருந்தார்கள்.
அதே நேரத்தில், அவரது மனைவியைப்போல எந்த உண்மையான உணர்வும் இல்லாமல், காதலோ, உணர்ச்சிகளோ இல்லாமல் வெறும் வார்த்தைகளை மட்டும் பேசும் பெண்களும் இருந்தார்கள்; இன்னமும் இரண்டு, மூன்று அழகான, உணர்ச்சியற்ற பெண்கள், அவர்களின் முகத்தில் பேராசையைக் காணலாம் – வாழ்வு தங்களுக்குக் கொடுத்ததைவிட அதிகமாகப் பெற்றுவிடவேண்டும் என்று விடாமல் முனைபவர்களும் இருந்தார்கள்.
இவர்கள் தங்களது இளமையைத் தாண்டிவிட்ட, வினோதமான, யோசிக்காத, அதிகாரம் செய்யும், முட்டாள் பெண்கள் என்று நினைத்தார். அவர்களின் மீதான ஆசை வடிந்தவுடன், குரோவுக்கு அவர்களது அழகு வெறுப்பை உண்டாக்கியது. அவர்களது உடைகளில் இருந்த அலங்கார வேலைப்பாடுகள் அருவெறுப்பான செதில்களாகத் தோன்றியது.
ஆனால் அவளிடம் தன்னம்பிக்கையின்மையும், அனுபவமில்லாத இளமையின், தடுமாற்றமான உணர்வுதான் இருந்தது; வீட்டுக் கதவை யாரோ திடீரென்று தட்டியது போல தடுமாற்றம் இருந்தது. நடந்தது குறித்த அன்னா செர்கெய்வனவின் – ‘நாயுடன் வந்த பெண்’ – நடத்தை வித்தியாசமாகவும், மிகவும் தீவீரமானதாகவும், அது அவளுடைய வீழ்ச்சி என்பது போன்றும், அது பொருத்தமானதில்லை என்பது போலவும் இருந்தது. அவளது முகம் வெளிறி, தொங்கி போனது. அவளுடைய நீண்ட முடி இரண்டு புறமும் சோகமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் பழைய படங்களில் இருக்கும் ‘பாவம் செய்த பெண்’ படத்தைப் போன்ற நொந்து போன உணர்வுடன் இருந்தாள்.
“இது தவறு. நீங்கள் என்னை இப்போது வெறுப்பீர்கள்” என்றாள்.
மேசையில் ஒரு தர்பூசணி இருந்தது. குரோவ் தனக்கு ஒரு துண்டை நறுக்கி கொண்டு, அவசரமில்லாமல் அதை உண்ண ஆரம்பித்தார். அடுத்த அரை மணி நேரத்துக்கு அமைதியாக இருந்தார்கள்.
அன்னா செர்கெய்வன சொன்னது மனதைத் தொடுவதாக இருந்தது. வாழ்வை பற்றிச் சிறிதே தெரிந்திருந்த நல்ல, எளிய பெண்ணின் தூய்மை அது. மேசையில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மெழுகுவர்த்தி அவளது முகத்தில் மெல்லிய ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
“நான் எப்படி உன்னை வெறுக்க முடியும்? என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்கிறாய்” என்றார் குரோவ்.
“கடவுள் என்னை மன்னிக்கட்டும். நான் செய்தது பயங்கரமானது” என்றார். அவளது கண்களில் நீர் கோர்த்தது.
“உன்னை யாரோ மன்னிக்க வேண்டும் என்று நீ விரும்புவதாகத் தெரிகிறது.”
“மன்னிப்பா? இல்லை. நான் மிகவும் மோசமான, கீழான பெண். என்னையே நான் வெறுக்கிறேன். எந்தவிதத்திலும் நான் செய்ததை நியாயப்படுத்த முடியாது. என்னுடைய கணவனை அல்ல, என்னையே நான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது மட்டுமல்ல; என்னையே பல காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கணவன் நல்ல, நேர்மையான மனிதராக இருக்கலாம், ஆனால், அவர் ஒரு வேலைக்காரன்! அவர் அங்கே என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியாது, அவரது வேலை என்ன என்றும் தெரியாது, ஆனால் அவர் ஒரு வேலைக்காரர் என்று எனக்குத் தெரியும்! நான் அவரைத் திருமணம் செய்த போது, எனக்கு இருபது வயது. எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டிய ஆவல் என்னை வாட்டிக்கொண்டிருந்தது. இன்னமும் மேலான வாழ்வை வேண்டினேன். ‘இன்னொரு விதமான வாழ்வு இருக்க வேண்டும்’ என்று நானே எனக்குச் சொல்லிக் கொண்டேன். வாழ்வதற்கு விரும்பினேன்! வாழ வேண்டும்! வாழ வேண்டும்!… என்னையே எரித்துக் கொண்டிருந்தது அந்த ஆவல்… உங்களுக்குப் புரியாது, ஆனால், கடவுள் சாட்சியாக என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை; எனக்கு என்னவோ நடந்துவிட்டது. எனக்கு உடல் சரியில்லை என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு, இங்கே வந்தேன்… இங்கே வந்த பின்னரும், பைத்தியக்காரியைப் போல இங்கே நடந்து கொண்டிருந்தேன்… இப்போது நான் அசிங்கமான, கண்டனம் செய்ய வேண்டிய, எல்லோரும் வெறுக்கும் பெண்ணாகிவிட்டேன்.”
குரோவுக்கு அவள் பேசுவதைக் கேட்பது, சலிப்பாக இருந்தது. அவளது குரலில் இருந்த வெகுளித்தனம் அவருக்கு எரிச்சலை தந்தது. எதிர்பார்க்காத, நேரங்கெட்ட நேரத்தில் வரும் இந்தக் குற்ற உணர்வும் எரிச்சலாக இருந்தது. அவளது கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை மட்டும் பார்க்கவில்லை என்றால் அவள் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்திருப்பார்.
“எனக்குப் புரியவில்லை. உனக்கு என்ன வேண்டும்?” என்று மென்மையாகக் கேட்டார்.
அவள் அவரது மார்போடு தன்னுடைய முகத்தை அழுத்திக்கொண்டு, அவருடன் நெருக்கமாக வந்தாள்.
“என்னை நம்புங்கள், என்னை நம்புங்கள், கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்…” என்றாள். “நான் சுத்தமான, நேர்மையான வாழ்வை விரும்புகிறேன். பாவம் செய்வது எனக்கு வெறுப்பானது. நான் என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. எளிய மக்கள் ‘என்னைத் தீயவன் ஏமாற்றி விட்டான்’ என்பார்கள். இப்போது என்னைப் பற்றி நானும், தீயவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லலாம்.”
“ஷ்! ஷ்!…” என்று அவர் முணுமுணுத்தார்.
அவளைத் தன்னுடைய நிலைகுத்திய கண்களால் பார்த்துக்கொண்டு, மெதுவாகப் பேசிக்கொண்டு, அன்போடு முத்தமிட்டார். அவளும் சிறிது சிறிதாகத் தன்னிலைக்கு திரும்பினாள். அவளது மகிழ்ச்சி திரும்பியது. இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
அதன் பின்னர் அவர்கள் வெளியே சென்றார்கள். கடற்கரையில் ஒருவர் கூட இல்லை. சிப்ரஸ் மரங்கள் நிறைந்த நகரத்தில் மயான அமைதி நிலவியது. ஆனால், கடல் அலைகள் மட்டும் கரையுடன் மோதிக் கொண்டிருந்தன. கடலில் ஒரு படகு மட்டுமே அசைந்தாடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு விளக்கு மட்டும் மினுக்கிக் கொண்டிருந்தது.
அங்கே வண்டியைப் பிடித்து அவர்கள் ஒரேண்டா சென்றார்கள்.
“முன்னறையில் எழுதியிருந்ததில் இருந்து உனது கணவரின் பெயரைத் தெரிந்து கொண்டேன். வான் டிடெரிடிஸ்” என்றார் குரோவ். “உனது கணவர் ஜெர்மனியரா?”
“இல்லை. அவரது தாத்தா ஜெர்மானியர் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் மரபார்ந்த ரஷ்யர்.”
ஒரேண்டாவில் அவர்கள் தேவாலயத்தில் இருந்து வெகுதூரத்தில் இல்லாத, இருக்கை ஒன்றில் அமர்ந்து, கடலைப் பார்த்துக் கொண்டு, அமைதியாக இருந்தார்கள். யால்டா அங்கிருந்து காலைப் பனியில் முழுவதுமாகத் தெரியவில்லை. மலை முகட்டில் வெள்ளை மேகங்கள் அசையாமல் இருந்தன. மரங்களில் இலைகள் அசையாமல் இருந்தன. வெட்டுக்கிளிகள் சத்தம் போட்டன. தரையில் இருந்து கடல் எழுவதன் சத்தம், நமக்காகக் காத்திருக்கும் அமைதியை, நித்திய உறக்கத்தை நினைவுபடுத்தியது. யால்டாவோ, ஒரேண்டாவோ அங்கு இல்லாத நாட்களில் அப்படியே சத்தம் கேட்டிருக்க வேண்டும். நாமெல்லோரும் இங்கிருந்து சென்ற பின்னரும் அப்படியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.
இந்த நிரந்திரத்தில்தான், நம் ஒவ்வொருவரின் வாழ்விலும், சாவிலும் இருக்கும் அக்கறை இல்லாத சாதாரண தன்மையில் தான் , ஒருவேளை நமது நிரந்தர இரட்சிப்புக்கான உறுதியும், பூமியில் நிற்காமல் நகன்று கொண்டு இருக்கும் வாழ்வும், பூரணத்தை நோக்கிய நமது நிற்காத முன்னேற்றமும் இருக்கும். அதிகாலை நேரத்தில் அழகாக, அமைதியாக, மயக்கத்தில் இருக்கும் ஒரு இளம்பெண்ணுடன் அந்த மாயமான சூழலில் – கடல், மலை, மேகம், திறந்த வானம் – அமர்ந்து கொண்டு, குரோவ் உண்மையில் யோசித்துக் கொண்டிருப்பது இந்த உலகத்தில் இருப்பதை எல்லாம் எவ்வளவு அழகாகக்காட்டுகிறது என்று யோசித்தார். எல்லாம்தான் – நாம் நம்முடைய மனித கண்ணியத்தையும், நமது வாழ்வின் உன்னத நோக்கங்களையும் மறந்துவிட்டு நினைக்கவோ அல்லது செயல்களில் இறங்கவோ செய்யும் நேரங்கள் தவிர.
அவர்களை நோக்கி ஒரு மனிதன் – அந்த இடத்தின் காப்பாளன் – வந்து அவர்களைப் பார்த்துவிட்டு, நடந்து சென்றுவிட்டான். அதுவும் கூட மர்மமாகவும், அழகாகவும் இருந்தது. தியோடோசியாவில் இருந்து வரும் கப்பல் ஒன்று விளக்குகளை அணைத்துவிட்டு, அதிகாலையின் வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டு இருந்த்தைப் பார்த்தார்கள்.
“புற்களில் பனி விழுந்திருக்கிறது” சற்று நேர மவுனத்துக்குப் பின்னர், அன்னா செர்கெய்வன கூறினாள்.
“ஆமாம். வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது.”
திரும்பவும் நகரத்துக்குச் சென்றார்கள்.
அதன் பின்னர், அவர்கள் ஒவ்வொரு நாளும் பனிரெண்டு மணிக்கு கடற்கரையில் சந்தித்தார்கள். மதிய உணவும், இரவு உணவும் ஒன்றாக உண்டார்கள். ஒன்றாக நடந்து, கடலை ரசித்தார்கள். தான் சரியாகத் தூங்குவதில்லை என்றும், தன்னுடைய இதயம் வேகமாக அடிப்பதாகவும் அவள் குறை சொன்னாள். எப்போதும் அதே கேள்விகளைக் கேட்டாள். திடீரென்று பொறாமையாலும், பயத்தாலும் அவன் தன்னைச் சரியாக மதிப்பதில்லை என்று கூறினாள்.
பொது இடங்களிலும், தோட்டங்களிலும் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், அவளை சட்டென்று அணைத்து, உணர்ச்சிகரமாக முத்தமிட்டார். முழுமையாகச் சோம்பலாக இருந்தது, பட்டப்பகலில் யாரும் பார்த்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டு கொடுத்த முத்தங்கள், வெப்பம், கடலின் வாசம், அவருக்கு முன் எப்போதும் நன்றாக உடையணிந்து, சாப்பிட்டு, சோம்பலாக இருக்கும் மனிதர்கள் முதலியவை அவரைப் புதிய மனிதனாக்கியது; அன்னா செர்கெய்வன எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள் என்று கூறினார். அவர் பொறுமையில்லாமல் உணர்ச்சிவசத்தில் இருந்தார். அவளை விட்டு ஒரு நிமிடம் கூட தள்ளி இருக்கவில்லை.
அவளோ எப்போதும் ஏதாவது யோசனையிலும், எப்போதும் அவர் தன்னை மதிக்கவில்லை என்றோ, தன்னைச் சிறிதும் காதலிக்கவில்லை என்றும், அவளைச் சாதாரண வேசி என்று அவர் நினைப்பதாகவுமே சொல்லிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் மாலையில் அவர்கள் நகரை விட்டு வெளியே எங்காவது சென்றார்கள். ஒரேண்டா அல்லது நீர்வீழ்ச்சி, என்று அவர்கள் சென்ற இடங்கள் எல்லாம் வெற்றியாகக் கிடைத்தது. அங்கிருந்த காட்சிகள் எல்லாம் பிரமாண்டமாகவும், அழகாகவும் இருந்தது.
அவளது கணவன் வருவதை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அவனது கண்களில் ஏதோ பிரச்னை என்று அவனிடம் இருந்து கடிதம் வந்தது. அவனது மனைவியை எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தான். அன்னா செர்கெய்வன வேகமாகக் கிளம்ப ஆரம்பித்தாள்.
“நான் இப்போது கிளம்புவது நல்லதுதான். அதுதான் விதி!” என்று அவள் குரோவிடம் தெரிவித்தாள்.
அவள் குதிரை வண்டியில் கிளம்பி, அவளுடன் அவரும் கிளம்பினார். அன்றைய நாள் முழுவதும் வண்டியில் சென்றார்கள். அங்கிருந்து துரித ரயில் வண்டியில் அவள் ஏறியவுடன், இரண்டாவது மணி அடித்தவுடன், அவள் கூறினாள்;
“இன்னொரு முறை உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்… பார்த்துக் கொள்கிறேன்.”
அவள் கண்ணீர் விடவில்லை. ஆனால் அவள் முகத்தில் இருந்த சோகத்தில், அவள் உடல் நலம் இல்லாதது போலத் தெரிந்தது. அவளது முகம் நடுங்கி கொண்டிருந்தது.
“நான் உங்களை நினைவில் வைத்திருப்பேன்… நினைத்து கொண்டிருப்பேன்” என்றாள். “கடவுள் உங்களுக்கு உதவட்டும். மகிழ்ச்சியாக இருங்கள். என்னைத் தவறாக நினைக்காதீர்கள். நாம் நிரந்தரமாக பிரிகிறோம் – அதுதான் சரி. ஏனென்றால், நாம் சந்தித்திருக்கவே கூடாது. கடவுள் உங்களுடன் இருக்கட்டும்.”
ரயில் வேகமாக நகர்ந்தது. அதன் விளக்குகள் சற்று நேரத்தில் மறைந்து போயின. ஒரு நிமிடம் கழித்து, அதன் சத்தமும் கேட்கவில்லை. அனைத்தும் அவரது அந்த இனிமையான பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிட ஒன்றாக சதி செய்தது போல இருந்தது. தனியாக நின்று கொண்டு, தூரத்து இருட்டை பார்த்துக் கொண்டும், வெட்டுக்கிளிகளின் சத்தத்தையும், தந்தி கம்பிகளின் சத்தத்தையும் கேட்டுக் கொண்டும் இருந்த அவருக்கு அப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்ததுபோல இருந்தது. தன்னுடைய வாழ்வின் இன்னொரு அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது; அதுவும் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது; மிஞ்சி இருப்பதெல்லாம் நினைவுகள் மட்டுமே என்று நினைத்துக் கொண்டார்.
அவர் சற்று கலங்கவும், சோகமாகவும், சிறிது குற்ற உணர்வையும் உணர்ந்தார். தான் திரும்பவும் சந்திக்க வாய்ப்பில்லாத அந்த இளம்பெண், தன்னுடன் மகிழ்ச்சியாக இருக்கவில்லை; அவர் அவளிடம் உண்மையில் அன்பாகவும், அவள் மீது விருப்பத்துடனும் இருந்தார்… ஆனாலும், அவளைவிட இரண்டு மடங்கு வயதுடைய அவரின் நடத்தையிலும், தொனியிலும், அவரது அணைப்புகளிலும் வஞ்சப்புகழ்ச்சியும், மகிழ்ச்சியான மனிதன் தன்னிலும் கீழானவர்களுக்குக் காட்டும் கருணையும் இருக்கத்தான் செய்தது.
அப்போதெல்லாம் அவள் அவரை அன்பானவர் என்றும், சிறந்தவர் என்றும், மேலானவர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதில் இருந்து மாறுபாடாக அவள் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். அவளை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும், அவர் அவளை ஏமாற்றத்தான் செய்திருந்தார்.
புகைவண்டி நிலையத்தில் இலையுதிர் காலத்தின் வாசம் ஏற்கனவே வந்துவிட்டது; மாலை குளிர்ச்சியாக இருந்தது.
“வடக்கே செல்லும் நேரம் வந்துவிட்டது.” என்று அங்கிருந்து கிளம்பும்போது, குரோவ் நினைத்தார். “நேரம் வந்துவிட்டது!”
(தொடரும்)