III
மாஸ்கோவில் அவரது வீடு குளிர் கால நடைமுறையில் இருந்தது; அடுப்புகள் ஏற்றப்பட்டன. காலையில், இன்னமும் இருளாக இருக்கும் போதே, குழந்தைகள் தங்களது காலை உணவை முடித்துவிட்டு, பள்ளிக்குச் செல்லத் தயாரானார்கள். அப்போது அவர்களது தாதி சிறிது நேரம் விளக்கை ஏற்றுவாள். உறைபனி ஆரம்பித்திருந்தது. முதல் பனி விழுந்தவுடன், வண்டியில் செல்வதும், வெள்ளைப் பனியால் மூடப்பட்டிருக்கும் பூமி, வெள்ளை கூரைகள், மென்மையான, இனிமையான சுவாசம் – குளிர்காலம் ஒருவரின் இளமைக்கால நாட்களைத் திரும்பக்கொண்டு வருகிறது. பழைய எலுமிச்சை, பிர்ச் மரங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும்; அவை சிப்ரஸ் மற்றும் பனை மரங்களைவிட ஒருவரின் மனதுக்கு நெருக்கமானவை. அவற்றின் அருகே, நாம் கடல்களையும் மலைகளையும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை.
குரோவ் மாஸ்கோவில் பிறந்தவர்; அவர் மாஸ்கோவுக்கு ஒரு உறைபனி விழும் நாளில் வந்து சேர்ந்தார். தன்னுடைய வெப்பமான மேலங்கியை அணிந்து, கைகளில் உறையும் அணிந்து பெட்ரோவ்காவில் நடந்துகொண்டு, சனிக்கிழமை மாலை அவர் மணிகளின் ஓசையைக் கேட்டபோது, அவரது சமீபத்திய பயணமும், அவர் பார்த்த இடங்களும் அவ்வளவு விருப்பமானதாக இல்லை. சிறிது சிறிதாக அவர் மாஸ்கோ வாழ்வில் ஈடுபட ஆரம்பித்திருந்தார். தினமும் மூன்று மாஸ்கோ செய்தித்தாள்களை வாசித்தார். அதன் பின்னர், தான் மாஸ்கோ செய்தித்தாள்களை வாசிப்பதில்லை என்று உறுதியாகத் தெரிவிக்கவும் செய்தார்!
அதற்குள்ளேயே அவருக்கு உணவு விடுதிகள், கிளப்கள், இரவு விருந்துகள், ஆண்டுக் கொண்டாட்டங்கள் போன்றவற்றை எண்ணி ஏங்க ஆரம்பித்திருந்தார். புகழ்பெற்ற வக்கீல்களுடனும், கலைஞர்களுடன் பழகுவதும், மருத்துவர்கள் கிளப்பில் ஒரு பேராசிரியருடன் சீட்டு விளையாடுவதும் அவருக்குப் பெருமையாக இருந்தது. அப்போதே அவரால் ஒரு தட்டு முழுவதும் உப்பிட்ட மீனும் முட்டைக்கோஸும் சாப்பிட முடிந்திருந்தது.
இன்னொரு மாதத்தில், அன்னா செர்கெய்வனவின் முகம் தன்னுடைய நினைவில் இருந்து மறைந்துவிடும் என்று நினைத்தார். அதன் பின்னர், மற்றவர்களைப் போல, அவ்வப்போது கனவில் வந்து சிரித்துவிட்டுப் போவாள் என்று நினைத்தார். ஆனால் ஒரு மாதமும் கடந்தது. உண்மையான குளிர்காலமும் வந்தது. ஆனாலும், நேற்றுதான் அன்னா செர்கெய்வனவைப் பிரிந்ததுபோல எல்லாம் அவரது நினைவில் தெளிவாக இருந்தது. இன்னமும் அவரது நினைவுகள் மேலும், மேலும் தெளிவாகிக் கொண்டே சென்றது. மாலை நேர அமைதியில், பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும் அவரது குழந்தைகளின் குரல்கள் அவருக்குக் கேட்கும் போதோ, ஒரு பாடலை கேட்கும் போதோ, இசையைக் கேட்கும் போதோ, புகைபோக்கியில் புயல் வீசியபோதோ அவரது நினைவில் எல்லாம் மேலே வரும். கடற்கரையில் நடந்தது, மலைகளில் இருக்கும் அதிகாலை பனி, தியோடோஸியாவில் இருந்து வந்த கப்பல், முத்தங்கள் எல்லாம் நினைவுக்கு வரும். வெகு நேரம் அவர் அறையில் எல்லாவற்றையும் எண்ணி, சிரித்துக்கொண்டு நடந்து கொண்டிருப்பார். அதன் பின்னர் அவரது நினைவுகள், கனவுகளாக வரும். அவரது கற்பனையில் அவர் கடந்த காலத்தில் நடந்ததையும், வரப்போவதையும் கலந்து யோசித்துக் கொண்டிருந்தார்.
அன்னா செர்கெய்வன அவரது கனவில் வருவதில்லை. ஆனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் நிழலாக விடாமல் தொடர்ந்தாள். அவர் கண்களை மூடும் போது, அவள் முன்னே நிற்பதை உண்மையாகப் பார்த்தார். அவள் அவரது நினைவுகளில் இன்னமும் இளமையாகவும், அழகாகவும், மென்மையாகவும் தோன்றினாள்; அவள் யால்டாவில் இருப்பதைவிட இன்னமும் அருமையாக இருப்பதாக நினைத்தார். மாலைகளில் அவரது புத்தக அலமாரியின் பின்னிருந்தும், அவரது கணப்பின் பின்னிருந்தும், மூலையில் இருந்தும் அவரைப் பார்த்தாள். அவளது சுவாசத்தின் சத்தத்தையும், அவளது உடைகளின் அசைவையும் கேட்க முடிந்தது. தெருக்களில், அவளைப்போல யாராவது போகிறார்களா என்று பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது நினைவுகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளத் தீவிரமான ஆசை வந்தது. ஆனால் அவரது வீட்டில் காதலைப் பற்றிப் பேச முடியாது. அவருக்கு வெளியிலும் யாரையும் தெரியாது. அவரது வீட்டு குடித்தனக்காரர்கள் அல்லது வங்கியிலும் இதைப் பற்றிப் பேசமுடியாது. அவர் எதைப் பற்றிப் பேசுவது? அப்படியென்றால், அவர் காதலில் விழுந்துவிட்டாரா? அன்னா செர்கெய்வனவுடனானா அவரது உறவில் ஏதாவது அழகாகவோ, கவித்துவமாகவோ, மென்மையானதாகவோ அல்லது வெறும் சுவாரசியமாகவோ ஏதாவது இருக்கிறதா? எனவே அவர் பொதுவாகக் காதல், பெண்கள் பற்றி மட்டுமே பேச முடிந்தது.
அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை; அவரது மனைவி மட்டும் புருவங்களை உயர்த்திக்கொண்டு, “பெண்களை மயக்கும் ஆண் வேடம் உங்களுக்குப் பொருந்தவில்லை, திமித்ரி!” என்றாள்.
ஒரு நாள் மாலை, மருத்துவர்கள் கிளப்பில் இருந்து, அவருடன் சீட்டாடிக் கொண்டிருந்த அதிகாரியுடன் வெளியே வரும்போது, அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை;
“யால்டாவில் நான் பழகிய சுவாரசியமான பெண்ணைப் பற்றி தெரிந்தால்!”
அவரோ எதையும் யோசிக்காமல் வண்டியில் ஏறிக்கொண்டு கிளம்பிவிட்டார். திரும்பி, அவரைப் பார்த்து கத்தினார்;
“டிமிட்ரி டிமிட்ரி!”
“என்ன?”
“நீ இன்று மாலை சொன்னது சரிதான்; சாப்பிட மீன் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது!”
இந்தச் சாதாரண வார்த்தைகள், என்ன காரணத்தினாலோ குரோவுக்குக் கடுமையான கோபத்தை உண்டாக்கியது. அது இழிவாகவும், அசுத்தமானதாகவும் இருந்தது. என்ன மோசமான நடத்தை, என்ன மாதிரியான மக்கள்! என்ன உணர்ச்சியற்ற இரவுகள், என்ன அசுவாரஸ்யமான நிகழ்வுகளும் இல்லாத நாட்கள்! சீட்டாட்டமோ, பெரும் தீனியோ, குடி பழக்கமோ, தொடர்ந்து பேசுவது என எல்லாமே ஒரே மாதிரியானவைதான். தேவையில்லாத துரத்தல்கள், உரையாடல்கள் என எல்லாமே ஒருவரின் பெரும்பாலான நேரத்தையும், வலிமையையும் எடுத்துக் கொள்கின்றன. இறுதியில் எந்தப் பயனுமில்லாத, சாதாரண, சுருக்கமான, இழிவான வாழ்க்கையே மிஞ்சுகிறது. அதிலிருந்து தப்பிப்பதும் முடியாது. பைத்தியக்கார விடுதியிலோ சிறையிலோ இருப்பது போல இருக்கவேண்டியதுதான்.
குரோவ் இரவு முழுவதும் தூங்கவில்லை. கோபத்துடனே இருந்தார். மறுநாள் முழுவதும் அவருக்குத் தலைவலி இருந்தது. மறுநாள் இரவும் மோசமாகத் தூங்கினார்; படுக்கையில் அமர்ந்துகொண்டும், அறையில் உலாவிக்கொண்டும் யோசித்துக் கொண்டிருந்தார். குழந்தைகள், வங்கி என எல்லாம் அவருக்கு வெறுப்பைக் கொடுத்தன; எங்கும் செல்லவோ, எதைப்பற்றியும் பேசவோ அவருக்கு விருப்பமில்லை.
டிசம்பர் மாதம் அவர் பயணத்துக்குத் தயாரானார். அவரது மனைவியிடம் தன் நண்பனை பார்ப்பதற்காகச் செல்வதாகக் கூறினார். அங்கிருந்து கிளம்பி அன்னா செர்கெய்வன இருக்கும் நகருக்கு கிளம்பினார். எதற்காக? அவருக்கே அது தெரியவில்லை. அவர் அன்னா செர்கெய்வனவை பார்த்து, அவளிடம் பேச விரும்பினார். முடிந்தால், ஒரு முறை சந்திக்கவும் விரும்பினார்.
காலையில் அங்கே சென்றடைந்தார். அங்கிருந்த விடுதியில் இருந்த சிறந்த அறையை எடுத்துக்கொண்டார். தரையில் சாம்பல் நிற துணியை விரித்திருந்தார்கள். மேசையில் தூசி படிந்த மை புட்டி இருந்தது. அதில் குதிரையில் அமர்ந்திருக்கும் ஒருவர் சிலை, கைகளில் தொப்பியுடனும், தலை உடைந்தும் இருந்தது. விடுதி வேலையாள் அவருக்குத் தேவையான செய்தியைக் கொடுத்தான்; வான் டிடிரிடிஸ், பழைய கோண்ட்சரணி தெருவில் வாழ்ந்து வந்தார். அது அவர் இருந்த விடுதியில் இருந்து அதிக தூரத்தில் இல்லை. பணக்காரரான அவர், நல்லவிதமாக, பல குதிரைகளுடன் வாழ்ந்தார்; நகரில் அனைவருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. வேலையாள் அவரது பெயரை ‘ட்ரிடிர்டிஸ்’ என்றான்.
தாமதிக்காமல், குரோவ் பழைய கோண்ட்சரணி தெருவுக்குச் சென்று, வீட்டைக் கண்டு பிடித்தார். அந்த வீட்டுக்கு எதிரே ஆணிகள் அடிக்கப்பட்ட, நீண்ட சாம்பல் நிற வேலி இருந்தது.
“இது போன்ற வேலியில் இருந்தே ஒருவர் ஓடிவிட விரும்புவார்’ என்று குரோவ் நினைத்தார். வேலியில் இருந்து அந்த வீட்டுச் சன்னல்களைத் திரும்ப, திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் யோசித்தார்; அன்று விடுமுறை. அவளது கணவன் வீட்டில் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும், திடீரென்று அவளது வீட்டுக்குச் சென்று, அவளைப் பயமுறுத்த விரும்பவில்லை. அவளுக்குக் கடிதம் எழுதலாம் என்றால், அது அவளது கணவனின் கைகளுக்குச் சென்று சேர்ந்துவிடலாம். அது எல்லாவற்றையும் பாழ்படுத்திவிடும். விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது என்று தோன்றியது. வேலியை ஒட்டி மேலும், கீழுமாக நடந்து கொண்டிருந்தார். அங்கே வாசலில் ஒரு பிச்சைக்காரன் வருவதையும், நாய்கள் அவனைத் துரத்துவதையும் பார்த்தார். இன்னமும் ஒரு மணி நேரம் கழித்து, எங்கிருந்தோ மெல்லிய பியானோ சத்தம் கேட்டது. ஒருவேளை அன்னா செர்கெய்வனவாக இருக்கும்.
வீட்டின் முன்கதவு திறந்தது. வயதான பெண்மணியும், அவருக்குத் தெரிந்த போமெரேனியன் நாயும் வந்தார்கள். குரோவ் நாயை அழைக்க நினைத்தார். ஆனால் அவரது இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. உணர்ச்சிவசப்பட்டதில், அவருக்கு நாயின் பெயர் மறந்து போயிருந்தது.
அவர் அங்கே நடக்க, நடக்க அந்த வேலியை வெறுக்க ஆரம்பித்தார். ஒருவேளை அன்னா செர்கெய்வன தன்னை மறந்திருக்கக்கூடும் என்று எரிச்சலுடன் நினைத்தார். அவள் இன்னொரு மனிதனுடன் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். காலையில் இருந்து மாலை வரை இந்த உருப்படாத வேலியை பார்த்துக் கொண்டிருக்கும் எந்த இளம்பெண்ணும் அதைத்தான் செய்வாள். அவரது விடுதிக்கு திரும்பி, அறையில் என்ன செய்வது என்று தெரியாமல், வெகுநேரம் அமர்ந்திருந்தார். அதன் பின்னர் இரவு உணவை உண்டுவிட்டு, நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்தார்.
“எவ்வளவு முட்டாள்தனம் இது!” எழுந்து, இருளாக இருந்த சன்னல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். மாலை ஆகி இருந்தது. “என்ன காரணமோ, இங்கே நன்றாகத் தூங்கி இருக்கிறேன். இரவில் என்ன செய்வது?”
மருத்துவமனைகளில் இருக்கும் போர்வைகள் போன்ற ஒன்றை போர்த்திக்கொண்டு, படுக்கையில் அமர்ந்திருந்தார். எரிச்சலுடன் தனக்குத்தானே பேசிக் கொண்டார்;
“நாயுடன் வந்தவள் அவ்வளவுதான்… சாகசமும் அவ்வளவுதான்… நன்றாகச் சிக்கிக் கொண்டாய்!”
அன்று காலை அவர் நிலையத்தில் பெரிய எழுத்துக்களில் இருந்த சுவரொட்டி அவரது கண்களைக் கவர்ந்தது. “தி கெய்ஷா” முதல் முறையாக மேடையேற்றப்படுகிறது. அதை நினைத்துக்கொண்டு, அவர் நாடக அரங்குக்குச் சென்றார்.
“அவள் முதல் காட்சிக்கு வந்தாலும், வரலாம்” என்று யோசித்தார்.
அரங்கம் நிறைந்திருந்தது. எல்லா மாநில அரங்கங்களும் இருப்பது போல, மேலே இருந்த தொங்கும் விளக்கில் தூசி மூட்டமாக இருந்தது. அரங்கம் முழுவதும் சத்தமாகவும், நெருக்கடியாகவும் இருந்தது; முதல் வரிசைகளில் இருந்தவர்கள், காட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு கைகளை பின்னால் கட்டிக்கொண்டு எழுந்து நின்று கொண்டிருந்தார்கள். ஆளுநரின் பகுதியில், ஆளுநரின் மகள், கழுத்தில் பாம்பு தோல் கழுத்துக்குட்டை அணிந்துகொண்டு, முன் வரிசையில் அமர்ந்திருந்தாள். ஆளுநர் திரைக்குப் பின்னால், கைகள் மட்டும் தெரிய நின்று கொண்டிருந்தார். வெகுநேரம் இசை கலைஞர்கள் தங்களது கருவிகளைச் சரி செய்து கொண்டிருந்தனர். மேடை திரை அசைந்தது. எல்லா நேரமும் பார்வையாளர்கள் வந்து, தங்களது இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். குரோவ் அவர்களை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்னா செர்கெய்வனவும் உள்ளே வந்தாள். மூன்றாவது வரிசையில் அமர்ந்தாள். அவளைப் பார்க்கும் போதே குரோவின் இதயம் சுருங்கியது. அவளைவிட தனக்கு நெருங்கிய, முக்கியமான, மதிப்பான எந்த உயிரும் தனக்கில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்தார். எந்தவிதத்திலும் சிறப்பாக இல்லாத அவள், அந்தச் சிறு பெண், இந்தக் கூட்டத்தில் காணாமல் போய்விடும் சாதாரணப் பெண், கைகளில் ஆபாசமாகக் கண்ணாடிகளை வைத்துக்கொண்டு இருப்பவள் தன்னுடைய வாழ்வை முழுவதாக நிரப்புகிறாள். அவரது வருத்தத்தையும், மகிழ்ச்சியையும் நிர்ணயிக்கிறாள். தனக்காக அவர் விரும்பிய ஒரே மகிழ்ச்சியும் அவள் மட்டுமே. மோசமாக வாசித்துக்கொண்டிருந்த வயலின் இசையின் நடுவே அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று நினைத்தார். அதையே நினைத்து கனவு கண்டார்.
அன்னா செர்கெய்வனவுடன் உயரமான, கொஞ்சம் குனிந்து கொண்டிருந்த, சிறிய கிருதா வைத்திருந்த இளைஞன் ஒருவனும் வந்திருந்தான். அவள் அருகில் அமர்ந்திருந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், குனிந்துகொண்டும், எல்லோரிடமும் பணிவாக இருப்பதாகவும் தெரிந்தது. இதுவே அவள் யால்டாவில், ஒரு கசப்பான நேரத்தில், அரசாங்க வேலைக்காரன் என்று கூறிய அவளது கணவனாக இருக்க வேண்டும். அவனுடைய உயரமான உருவம், கிருதா, தலையில் இருந்த சிறு வழுக்கை போன்றவற்றில் வேலைக்காரர்களின் அடிமைத்தனம் இருந்தது. அவனது சிரிப்பு மிகவும் செயற்கையாகவும், அவனது சட்டையில் வேலைக்காரர்கள் அணியும் பெயர் பட்டைகளைப் போன்ற ஒன்றையும் அணிந்திருந்தான்.
முதலாவது இடைவேளையில், அவளது கணவன் எழுந்து புகைபிடிக்கச் சென்றுவிட்டான். அவள் மட்டுமே அங்கே அமர்ந்திருந்தாள். குரோவ், எழுந்து அவளை நோக்கிச் சென்று, நடுங்கும் குரலுடனும், வலிந்து வரச்செய்த புன்னகையுடனும், “மாலை வணக்கம்!” என்றார்.
அவரைப் பார்த்ததும் அவளது முகம் வெளிறியது. அவரைப் பயத்துடன் பார்த்தாள். அவளால் அவளது கண்களையே நம்ப முடியவில்லை. கைகளில் இருந்த விசிறியையும், கண்ணாடியையும் இறுகப் பிடித்துக்கொண்டாள். மயங்கிவிடாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இருவரும் அமைதியாக இருந்தார்கள். அவள் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவர் நின்று கொண்டிருந்தார். அவளது குழப்பத்தைக் கண்டு பயந்து, அவளுக்கு அருகில் உட்கார முயற்சி செய்யவில்லை. வயலினும், குழலும் திரும்ப வாசிக்க ஆரம்பித்தது. அவருக்குச் சட்டென்று பயம் வந்தது; சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல இருந்தது.
அவள் எழுந்து, வேகமாக கதவை நோக்கிச் சென்றாள். அவரும் அவளின் பின்னே சென்றார். இருவரும் பாதைகளின் வழியும், படிகளின் மேலும், கீழும் உணர்வின்றி நடந்தார்கள். சமூக, நீதி, குடிமை துறை அதிகாரிகள் தங்களது சீருடையில் அவர்களின் கண்களின் முன் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த பெண்களையும் பார்த்தார்கள். கொக்கிகளில் தொங்கிக்கொண்டிருந்த மேலங்கிகளும் தெரிந்தது. கீழிருந்து வீசிக்கொண்டிருந்த காற்றில் புகையிலை வாசம் வந்து கொண்டிருந்தது. வேகமாக அடித்துக்கொண்டிருந்த இதயத்துடன் குரோவ் நினைத்தார்;
“ஓ! கடவுளே! இந்த மக்களும், இசைக்குழுவும் இங்கே எதற்காக வந்திருக்கிறார்கள்…”
அந்த நொடியில் அவருக்கு, அன்னா செர்கெய்வனவை புகைவண்டி நிலையத்தில் வழியனுப்பிய போது, தான் அவளைத் திரும்பவும் பார்க்கவே போவதில்லை என்று நினைத்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர்கள் இன்னமும் முடிவில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தார்கள்!
குறுகலான, பொலிவின்றி இருந்த படிகளில் ‘அரங்கிற்கு வழி’ என்று எழுதியிருந்த இடத்தில், அவள் நின்றாள்.
“எப்படிப் பயமுறுத்திவிட்டீர்கள்!” என்று வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு, முகம் வெளிறிக் கூறினாள். “ஓ! என்னைப் பயமுறுத்திவிட்டீர்கள்! பாதி இறந்து விட்டேன். எதற்காக வந்திருக்கிறீர்கள்? ஏன்?”
“புரிந்துகொள், அன்னா, புரிந்துகொள்…”என்று மெதுவான குரலில் கூறினார். “நான் சொல்வதைப் புரிந்துகொள்…”
அவள் பயத்துடனும், காதலுடனும், கெஞ்சுதலுடனும் பார்த்தாள்; அவரது நினைவில் இருந்து அவரின் உருவத்தைகொண்டு வந்து, அவரைக் கூர்ந்து பார்த்தாள்.
“நான் மகிழ்ச்சியாக இல்லை” என்று அவர் சொல்வதைக் கேட்காமல் பேச ஆரம்பித்தாள். “எல்லா நேரமும் உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்; உங்களைப் பற்றிய எண்ணமே என்னை வாழ வைக்கிறது. உங்களை மறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். எதற்காக வந்திருக்கிறீர்கள்?”
அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தின் மேலே இரண்டு பள்ளி மாணவர்கள் புகை பிடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் குரோவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அன்னா செர்கெய்வனவை அவர் அருகே இழுத்து, அவளது முகம், கன்னங்கள், கைகளில் முத்தமிட ஆரம்பித்தார்.
“என்ன செய்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்…” என்று அவரைத் தள்ளிக் கொண்டே, அவள் பயத்துடன் கத்த ஆரம்பித்தாள். “நமக்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். இப்போது சென்றுவிடுங்கள்; உடனே சென்றுவிடுங்கள்… கெஞ்சி கேட்கிறேன்… இந்தப் பக்கமாக ஆட்கள் வருகிறார்கள்!”
படிகளில் யாரோ வந்து கொண்டிருந்தார்கள்.
“நீங்கள் இங்கேயிருந்து சென்றுவிடுங்கள்” அன்னா செர்கெய்வன மெதுவாகக் கூறினாள். “கேட்கிறதா, டிமிட்ரி டிமிட்ரிட்ச்? நான் மாஸ்கோவில் வந்து, உங்களைச் சந்திக்கிறேன். நான் மகிழ்ச்சியாகவே இருந்ததில்லை; இப்போது இன்னமும் கவலையில் இருக்கிறேன். எப்போதும், எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை! என்னை இன்னமும் துயரப்படுத்தாதீர்கள்! நான் மாஸ்கோ கட்டாயம் வருவேன். ஆனால், இப்போது நாம் பிரியவேண்டும். என் அன்பானவரே, நான் பிரியவேண்டும்!”
அவருடைய கைகளை அழுத்திவிட்டு, வேகமாகப் படியில் இறங்கிச் செல்ல ஆரம்பித்தாள். திரும்பி அவரைப் பார்த்துக்கொண்டே சென்றாள். அவளது கண்களைப் பார்த்ததில், அவள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது அவருக்குத் தெரிந்தது. குரோவ் சிறிது நேரம் அங்கே நின்றுகொண்டிருந்தார். எல்லாச் சத்தமும் அடங்கியவுடன், தன்னுடைய மேலங்கியை எடுத்துக்கொண்டு, அரங்கில் இருந்து வெளியேறினார்.
IV
அன்னா செர்கெய்வன அவரைப் பார்க்க மாஸ்கோ வர ஆரம்பித்திருந்தாள். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவள் அவளது கணவனிடம், தன்னுடைய மருத்துவரிடம் உடல் நலச் சோதனைக்காகச் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவாள். அவளது கணவன் அவளை நம்பவும் செய்தான் – நம்பாமலும் இருந்தான். மாஸ்கோவில் அவள் ஸ்லாவியன்ஸ்கி பஜார் விடுதியில் தங்குவாள். அங்கிருந்து குரோவிடம் சிவப்பு தொப்பி அணிந்த ஒருவனை அனுப்புவாள். குரோவ் சென்று அவளைப் பார்ப்பார்; மாஸ்கோவில் யாருக்கும் இது தெரியாது.
ஒரு குளிர்கால காலை அவளைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்தார் (முந்தைய தினம் மாலை அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூதுவன் வந்திருந்தான்). அவருடன் அவரது மகளும் பள்ளிக்கு செல்ல அவருடன் வந்து கொண்டிருந்தாள். வழியில்தான் பள்ளி இருந்தது. பனி பெரிய துண்டுகளாக விழ ஆரம்பித்தது.
“உறை நிலையில் இருந்து வெப்பம் மூன்று டிகிரி அதிகமாக இருக்கிறது. ஆனாலும் பனி விழுகிறது’ என்று குரோவ் அவரது மகளிடம் கூறினார். “பூமியின் மீதிருக்கும் வெப்பத்தை விட வேறுபாடான வெப்பம் வளிமண்டலத்தின் மேலே இருக்கிறது.”
“குளிர்காலத்தில் இடியுடன் மழை பெய்வதில்லை, ஏன்?”
அதையும் அவளுக்கு விளக்கினார். அவர் பேசிக் கொண்டிருந்தாலும், அவளைத் தான் சென்று பார்க்கப்போவதே அவரது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. யாருக்கும் தெரியாது. இனியும் யாருக்கும் தெரிய போவதில்லை. அவர் இரண்டு வாழ்க்கைகளை வாழ்ந்து கொண்டிருந்தார். ஒன்று, திறந்ததாக, அனைவரும் பார்த்து, தெரிந்து கொள்ளக்கூடியது; அவரது நண்பர்களையும், தெரிந்தவர்களையும் போல ஒப்பீட்டளவில் உண்மையும், பொய்யும் கலந்த வாழ்வு. இன்னொன்று ரகசியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு. ஏதோ ஒரு வினோதமான, ஒரு வேளை விபத்தைப் போன்ற சூழலில், அவருக்கு எவை எல்லாம் தேவையானதாகவும், சுவாரசியமானதாகவும் இருக்கிறதோ, அவர் தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல், எதிலெல்லாம் உண்மையாக இருக்கிறாரோ, அவரது வாழ்வின் மையமாக இருப்பது எல்லாம் ரகசியமாக இருந்தது.
அவரது வாழ்வின் பொய்கள் எல்லாம், எதை வைத்து அவர் உண்மைகளை மறைத்துக் கொண்டிருத்தாரோ – உதாரணமாக, அவரது வங்கி வேலை, கிளப்களில் அவரது உரையாடல்கள், ‘கீழான பெண்கள்’, அவரது மனைவியுடன் ஆண்டு விழாக்களில் கலந்துகொள்வது – என எல்லாம் அனைவரும் பார்க்கும்படியாக இருந்தது. அவர் மற்றவர்களையும் தன்னைக் கொண்டே எடை போட்டார். பார்ப்பது எதையும் நம்பாமல், ஒவ்வொரு மனிதனும் ரகசியமாக, இரவின் இருளில் உண்மையான, மிகவும் சுவாரசியமான வாழ்வை வாழ்வதாக எண்ணினார்.
எல்லாத் தனிப்பட்ட வாழ்வும் ரகசியமானது. அதன் காரணமாகவே ஒவ்வொரு நாகரிக மனிதனும், தன்னுடைய தனியுரிமை பற்றி மிகவும் கவலையுடன் இருக்கிறான்.
மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, குரோவ் ஸ்லாவியன்ஸ்கி பஜார் விடுதிக்குச் சென்றார். அங்கு தன்னுடைய மேலங்கியை கீழே விட்டுவிட்டு, மேலே சென்று, கதவை மெதுவாகத் தட்டினார். அன்னா செர்கெய்வன, அவளது பிரியமான சாம்பல் நிற உடையை அணிந்துகொண்டு இருந்தாள். முந்தைய தின பயணத்தின் களைப்பும், முந்தைய தின மாலையில் இருந்து அவரை எதிர்பார்த்தும் அவளிடம் இருந்தது. வெளிறி போன முகத்துடன் இருந்தாள்; அவரைச் சிரிக்காமல் பார்த்து, அவர் உள்ளே நுழைந்தவுடன் அவரது மார்பில் முகம் பதித்தாள். இரண்டு வருடங்கள் கழித்துப் பார்த்ததுப்போல அவர்களது முத்தம் மெதுவாகவும், நீண்டதாகவும் இருந்தது.
“எப்படி இருக்கிறாய்? “என்ன செய்தி?” என்றார்
“கொஞ்சம் பொறுங்கள்; நானே சொல்கிறேன்….”
ஆனால், அவளால் பேச முடியவில்லை; அழுதுகொண்டிருந்தாள். அவரிடம் இருந்து திரும்பிக்கொண்டு, கண்களில் கைக்குட்டையை வைத்து துடைத்துக்கொண்டாள்.
அவள் அழுது முடிக்கட்டும். நான் அதுவரை உட்கார்ந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, அவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
மணியை அடித்து, தனக்குத் தேநீர் கொண்டு வரச் சொன்னார். அவர் தேநீரைக் குடிக்கும் போது, அவள் அவருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, சன்னலின் வழியே வெளியே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அவள் உணர்ச்சி வேகத்தில் அழுது கொண்டிருந்தாள். அவர்களது வாழ்வு எவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பது பற்றியும், அவர்கள் ரகசியமாக மட்டுமே சந்திக்க முடிவது பற்றியும், திருடர்களைப் போல மற்றவர்களிடம் இருந்து மறைக்கவேண்டியிருப்பது பற்றிய கொடுமையான உணர்வு அவளை அழ வைத்தது. அவர்கள் வாழ்வு நொறுங்கிவிட்டது அல்லவா?
“அழுவதை நிறுத்து!” என்றார்.
அவர்களது காதல் இப்போதைக்கு முடியப்போவதில்லை என்றும், அதற்கு முடிவைத் தன்னால் காண முடியவில்லை என்பதையும் உணர்ந்தார். அன்னா செர்கெய்வன அவர் மீது மேலும், மேலும் அன்பை செலுத்திக் கொண்டிருந்தாள். அவரை அவள் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து விரும்பினாள். அவர்களது காதல் ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும் என்பதை அவளிடம் சொல்வதையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. மேலும், அவள் அதை நம்ப போவதும் இல்லை.
அவளிடம் சென்று, அவளது தோளை பிடித்துகொண்டு, அவளிடம் அன்பாகவும், உற்சாகப்படுத்தும் படியாகப் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் தன்னையே கண்ணாடியில் பார்ப்பதுபோல உணர்ந்தார்.
அவரது முடிகள் ஏற்கனவே வெள்ளையாக ஆரம்பித்திருந்தன. கடந்த சில வருடங்களில் அவருக்கு வேகமாக வயதாகிவிட்டது அவருக்கு வினோதமாக இருந்தது. தோள்களில் வைத்திருந்த அவரது கைகள் வெப்பமாகவும், நடுங்கிகொண்டும் இருந்தன. இன்னமும் உயிர்ப்புடனும், அழகாகவும் இருக்கும் வாழ்வின் மீது அவருக்கு இரக்கம் ஏற்பட்டது. ஆனால் அவரது வாழ்வை போல அது ஏற்கனவே மங்கியும், உதிர்ந்தும் போகத் தொடங்கியிருந்தது. அவரை எதற்காக அவள் இவ்வளவு காதலிக்கிறாள்? அவர் எப்போதும் பெண்களிடம் உண்மையாக இருந்ததில்லை. அவரை அவர்கள் தங்களது கற்பனையில், தங்கள் வாழ்வில் தேடிக் கொண்டிருக்கும் ஆண்மகனாக கற்பனை செய்தே காதலித்தார்கள்; அந்தத் தவறை அவர்கள் பின்னர் உணரும் போதும் அவரைக் காதலிக்கவே செய்தார்கள். ஆனால் ஒருவர் கூட அவருடன் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. காலம் சென்றது, அவர்களைத் தெரிந்துகொண்டார், பழகினார், பிரிந்தார், ஆனால் ஒருமுறைகூடக் காதலிக்கவில்லை; என்ன வேண்டுமானாலும் அதைச் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் காதல் இல்லை.
இப்போது அவரது தலைமுடி வெள்ளையாகும்போதுதான், அவரது வாழ்வின் முதல் முறையாக, சரியாக, உண்மையில் காதலில் விழுந்திருக்கிறார்.
அன்னா செர்கெய்வனவும், அவரும் மிகவும் நெருக்கமானவர்கள்போல, கணவன் மனைவியைப்போல, நெருக்கமான நண்பர்களைப் போலக் காதலித்தார்கள்; விதிதான் அவர்களை ஒன்றாகச் சேர்த்திருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவருக்கு எதற்கு மனைவி இருக்கிறாள் என்றோ, அவளுக்கு எதற்குக் கணவன் இருக்கிறான் என்றோ அவர்களுக்குப் புரியவில்லை. வலசை போகும் பறவைகள் இரண்டை பிடித்து வேறு வேறு கூடுகளில் அடைத்துவைத்தது போல இருந்தார்கள். அவர்களின் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றுக்கு அவர்கள் தங்களை மன்னித்துக் கொண்டார்கள். அவர்களது நிகழ்காலத்தின் தவறுகளையும் மன்னித்துக் கொண்டார்கள். அவர்களது காதல் அவர்களை மாற்றிவிட்டதை உணர்ந்தார்கள்.
முன்பு அவர்கள் சோகமாக இருக்கும்போது, அவர் அப்போது அவருக்குத் தோன்றிய காரணங்களைச் சொல்லி அவளை சமாதானப்படுத்துவார்; இப்போது அவர் காரணங்களுக்கு கவலைப்படுவதில்லை. இரக்கமும், உண்மையாகவும், மென்மையாகவும் இருக்கவேண்டும் என்ற உணர்வே மேலோங்கியிருந்தது.
“அழாதே! என் கண்ணே! போதுமான அளவுக்கு அழுதுவிட்டாய்… பேசலாம், ஏதாவது திட்டத்தை யோசிப்போம்” என்றார்.
அதன் பின்னர் வெகு நேரம், அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்; ரகசியமாக இருப்பதை எப்படித் தவிர்ப்பது, ஏமாற்றுவது, வேறு, வேறு ஊர்களில் இருப்பது, நீண்ட காலம் பார்க்காமல் இருப்பது போன்றவற்றைப் பற்றி பேசினார்கள். இந்தத் தாங்கமுடியாத தளையில் இருந்து விடுதலை பெறுவது எப்படி?
“எப்படி? எப்படி?” என்று, தலையைப் பிடித்துக்கொண்டு பேசினார். “எப்படி?”
இன்னமும் சிறிது காலத்தில் அதற்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று தோன்றியது. அதன் பின்னர் புதிய, அருமையான வாழ்வு தொடங்கிவிடும். இன்னமும் நீண்ட சாலை அவர்களுக்கு முன் இருக்கிறது என்பதும், அவர்கள் வாழ்வின் மிகவும் சிக்கலான, கடினமான பகுதி இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்பதும் இருவருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது.
(தொடரும்)