Skip to content
Home » செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

வார்டு எண் 6

III

இலையுதிர் காலத்தின் காலை ஒன்றில், இவான் டிமிட்ரிட்ச் தன்னுடைய அங்கியின் கழுத்துப்பட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு, சகதியில் மிதித்துக்கொண்டே நடந்தார். சிறிய தெருக்கள் மற்றும் சந்துக்களின் வழியே சென்று, தனக்கு வர வேண்டிய பணத்தை பெறவும், அங்கு ஒரு கலைஞனை பார்க்கவும் சென்றுகொண்டிருந்தார். அந்தச் சிறிய தெரு ஒன்றில் அவர் விலங்கிடப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் அவர்களுடன் கையில் துப்பாக்கியுடன் வந்த நான்கு வீரர்களையும் பார்த்தார். இவான் டிமிட்ரிட்ச் அது போன்ற குற்றவாளிகளை ஏற்கனவே பார்த்திருக்கிறார். அவர்கள் அவரிடம் எப்போதும் பரிதாபத்தையும் மனஉளைச்சலையும் அவருக்கு ஏற்படுத்தினார்கள். இப்போதைய சந்திப்பு அவரிடம் வினோதமான உணர்ச்சியை ஏற்படுத்தியது. தானும் அதுபோலவே விலங்கிடப்பட்டு, சகதிகளின் வழியே சிறைக்கு அழைத்துச் செல்வதுபோல, அவருக்கு என்ன காரணத்தினாலோ தோன்றியது.

அவர் அந்தக் கலைஞரைப் பார்த்த பின்னர், வீட்டுக்குச் செல்லும் வழியில் தபால் நிலையத்தில், அவருக்குப் பழக்கமான காவல் அதிகாரி ஒருவரைப் பார்த்தார். அவர் இவானிடம் சிறிது பேசிவிட்டு, அவருடன் தெருவில் சிறிது தூரம் நடந்து வந்தார். இது இவானுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அன்று முழுவதும் இவானால் அந்தக் குற்றவாளிகளையோ, அவர்களுடன் வந்த துப்பாக்கி ஏந்திய வீரர்களையோ மறக்க முடியவில்லை. அவரது மனக் கிளர்ச்சி அவரை வாசிக்கவோ, வேறு விஷயங்களில் மனதை செலுத்தவோ விடவில்லை. மாலையில் அவர் விளக்கேற்றவில்லை. இரவில் அவரால் தூங்க முடியவில்லை. தன்னையும் அவர்கள் கைது செய்து, விலங்கில் கட்டப்பட்டு, சிறைக்கு அனுப்பிவிடலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தார். தான் எந்தத் தவறையும் செய்திருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. தான் கொலை, நெருப்பு வைப்பது, திருட்டு என எதையும் செய்யப் போவதில்லை என்றும் அவருக்குத் தெரிந்தது. ஆனால் தெரியாமல் ஒரு தவறையோ, குற்றத்தையோ செய்துவிடுவது எளிதல்லவா? அல்லது தெரியாமல் பொய் சாட்சி சொல்வதும் சாத்தியம்தானே? எனவேதான் சாதாரண மக்களின் பல கால அனுபவம், அவர்களுக்குப் பிச்சை எடுப்பதில் இருந்தும், சிறைக்குச் செல்வதில் இருந்தும் யாரும் எல்லா நேரமும் தப்பித்துப் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கற்றுக் கொடுத்திருக்கிறது.

இப்போதெல்லாம் நீதி வழங்குவதில் தவறு நேருவது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பிற மனிதர்களின் துயரங்களுடன் அதிகாரபூர்வ உறவு கொண்டிருக்கும் எவரும் – நீதிபதிகள், காவல் அதிகாரிகள், மருத்துவர்கள் – பழக்கத்தின் காரணமாக, காலப்போக்கில் அவர்களது துயரங்களைத் தங்களது அதிகாரத்தின் வழியிலேயே பார்க்கிறார்கள். இதில் அவர்கள், ஆடுகளையும், குட்டிகளையும் கொல்லும் குடியானவர்கள் அவற்றின் ரத்தத்தைக் கூடக் கவனிப்பதில்லை அல்லவா, அதற்கு ஒப்பாக இருக்கிறார்கள். மனிதர்களின் மனோபாவத்தை ஆன்மாவில்லாமல் நோக்கும் நீதிபதிக்கு ஒன்று மட்டுமே முக்கியம் – நேரம் – அதன் மூலம் அவர் ஒரு சாதாரண, குற்றமற்ற மனிதனின் சொத்துக்கள் முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அவனைக் காலம் முழுவதும் சிறையில் தள்ளலாம். நீதிபதி சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காகச் செய்ய வேண்டிய சில வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே நேரம் தேவை – அதன் பின் எல்லாம் முடிந்து விடும்.

நீங்கள் அதன் பின்னர், புகைவண்டி நிலையத்தில் இருந்து நூற்றைம்பது மைல் தொலைவில் இருக்கும் இந்தச் சிறிய நகரத்தில் நீதியையும், பாதுகாப்பையும் தேடிக் கொண்டிருக்கலாம்! ஒவ்வொருவிதமான வன்முறையையும் அறிவார்ந்தது என்றும், தேவை என்றும் கருதி ஏற்றுக்கொள்ளும், ஒவ்வொரு கருணை நடவடிக்கையையும் – உதாரணமாக, விடுதலை செய்யும் உத்தரவு – அதிருப்தியுடனும், பழிவாங்கும் உணர்வுடனும் நோக்கும் சமூகத்தில், நீதி என்பதே அபத்தம் அல்லவா?

காலையில் இவான் டிமிட்ரிட்ச் தன்னுடைய படுக்கையில் இருந்து பயத்துடன் எழுந்தார். நெற்றியில் வேர்த்திருந்தது. எந்த நிமிடமும் தான் கைது செய்யப்படலாம் என்று நினைத்தார். நேற்றைய தினத்தில் மோசமான நினைவுகள் எல்லாம் அவரை நீண்ட நேரம் கொடுமை செய்திருந்தது. எனவே, அவற்றில் சிறிது உண்மை இருந்திருக்கலாம் என்று நினைத்தார். அவற்றில் ஏதோ உண்மை இருப்பதால்தான் தனக்கு அவை தோன்றியது என்றும் நினைத்தார்.

அவரின் சன்னலின் வெளியே காவல் அதிகாரி நடந்து சென்றதற்கு காரணம் இருக்க வேண்டும். இதோ, இரண்டு மனிதர்கள் அவரது வீட்டின் அருகில் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? மறுபடியும் கொடுமையான தினங்கள் இவான் டிமிட்ரிட்ச்சைத் தொடர்ந்தன. அவரது சன்னலின் வெளியே முற்றத்துக்கு வந்த அனைவரும் உளவாளியாகவோ, துப்பறியும் அதிகாரியாகவோ அவருக்குத் தோன்றினர். நண்பகலில் அந்தத் தெருவின் வழியே காவல் துறை தலைவர், இரட்டை குதிரை வண்டியில் செல்வார். நகரின் அருகில் இருந்த அவரது பண்ணை வீட்டில் இருந்து அவர் காவல் நிலையத்துக்குச் செல்வார். ஒவ்வொரு முறையும் அவர் முகத்தில் ஒரு விசித்திரமான உணர்வு தெரிவதாகவும், அவர் வேகமாக வண்டியில் செல்வதாகவும் இவான் டிமிட்ரிட்ச்சுக்குத் தோன்றியது. நகரில் ஒரு முக்கியக் குற்றவாளி ஒளிந்து இருப்பதாக அறிவிக்க அவர் அவசரமாக செல்வதாகத் தோன்றியது.

ஒவ்வொரு முறை வாயிலில் மணி அடிக்கும்போதோ கதவைத் தட்டும் போதோ அவர் பயந்தார். அவரது வீட்டு உரிமையாளர் வீட்டுக்கு யாராவது புதியவர் வந்தாலும் பயந்தார். வெளியே காவல் அதிகாரிகளையோ, காவலாளிகளையோ காணும்போதெல்லாம் புன்னகைத்தும், தனக்கு எந்தப் பயமும் இல்லை என்பதுபோல விசிலடித்துக்கொண்டும் சென்றார். கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அவரால் இரவில் தூங்க முடியவில்லை. ஆனாலும் அவரது வீட்டு உரிமையாளர் அவர் தூங்குவதாக எண்ணவேண்டும் என்று அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோலக் குறட்டைவிடவும், பெருமூச்சுவிடவும் செய்தார். ஏனென்றால் அவரால் தூங்க முடியவில்லை என்றால், அவரது மனசாட்சி தொந்தரவு செய்கிறது என்று முடிவு செய்துவிடலாம் – என்ன மாதிரியான சாட்சி! இந்தப் பயங்கள் எல்லாம் முட்டாள்தனம் என்றும், மனநோய் என்றும் அவருக்குத் தெரியத்தான் செய்தது. மனசாட்சி உண்மையாக இருக்கும்வரை, கைது செய்யப்படுவதிலோ, சிறையில் தள்ளப்படுவதிலோ எந்தப் பயங்கரமும் இல்லை என்றும் தெரிந்தது. ஆனால் அவர் எவ்வளவு அறிவார்ந்து சிந்தித்தாரோ, அவ்வளவுக்கு அவரது மனத்துயரம் அதிகமாகவும், வலியுடனும் மாறியது.

தனக்கெனக் காட்டில் ஒரு வாழ்விடத்தைக் கட்ட முயன்ற துறவியின் கதையுடன் இதை ஒப்பிடலாம்; கோடாரியால் அவர் எவ்வளவு முயன்று வெட்டினாரோ, அதை விட வேகமாக காடு வளர்ந்தது. முடிவில், இவான் டிமிட்ரிட்ச், அறிவார்ந்து சிந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று, மொத்தமாக பகுத்தறிவதை விட்டுவிட்டு, பயத்துக்கும் கவலைக்கும் தன்னை முழுமையாகக் கொடுத்துவிட்டார்.

மனிதர்களைத் தவிர்க்கவும், தனிமையைத் தேடவும் ஆரம்பித்தார். அவரது வேலை அவருக்கு முன்பே பிடிக்காமல் இருந்தது. இப்போது தாங்க முடியாததாக ஆனது. எப்படியாவது அவரை எதிலாவது சிக்கவைத்துவிடுவார்கள் என்று நினைத்தார். அவரது சட்டை பையில் தெரியாமல் லஞ்சத்தை வைத்துவிடலாம் அல்லது அவர் தெரியாமல் அரசாங்க காகிதங்களில் ஏதாவது தவறு செய்துவிடலாம் அல்லது மற்றவர்களின் பணம் காணாமல் போய்விடலாம். இப்போதுபோல அவரது கற்பனை இதற்கு முன் இவ்வளவு வேகமாகவும், புதுமையாகவும் இருந்ததில்லை. தினமும் அவர் தன்னுடைய சுதந்தரம் மற்றும் கௌரவம் குறித்துக் கவலைப்பட ஆயிரம் புதிய காரணங்கள் கிடைத்தன. அதே நேரத்தில், வெளியுலகம் குறித்த அவரது ஒரே ஆர்வமான புத்தகங்களை மெதுவாகத் தவிர்க்க ஆரம்பித்தார். அவரது ஞாபக சக்தியும் குறைந்துகொண்டே வந்தது.

வசந்த காலத்தில், பனி எல்லாம் உருகிய நேரம், கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் இருந்த பள்ளத்தில் பாதி அழுகிய நிலையில் இரண்டு பிணங்கள் கண்டறியப்பட்டன. வயதான பெண்மணியும், சிறுவனும் கொலை செய்யப் பட்டிருந்தார்கள். அப்போது நகரெங்கும் இந்த இரண்டு பிணங்களை பற்றியும், அதன் கொலைகாரர்கள் பற்றியும் மட்டுமே பேச்சாக இருந்தது. தன்னை யாரும் குற்றம் சொல்லிவிடக்கூடாது என்று இவான் டிமிட்ரிட்ச் தெருக்களில் புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தார். தெரிந்தவர்கள் யாரேனும் வந்தால் முகம் வெளிறி, பலவீனமானவர்களையும், தற்காத்துக் கொள்ள முடியாதவர்களைக் கொல்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார். ஆனால் இப்படி நடிப்பது அவருக்கு களைப்பாக இருந்தது.

சிறிது யோசித்துவிட்டு, அப்போதைய நிலையில் அவரது வீட்டு உரிமையாளரின் நிலவறையில் ஒளிந்துகொள்வதுதான் சரி என்று முடிவு செய்தார். ஒரு முழு பகலும், இரவும் நிலவறையில் அமர்ந்திருந்தார். இன்னொரு நாளும் கழிந்தது. மிகவும் குளிர ஆரம்பிக்கவே, இரவில் திருடனைபோலத் தன்னுடைய அறைக்குத் திரும்பினார். அறையின் நடுவில் விடியும்வரை நின்றுகொண்டே இருந்தார். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பே, அவரது வீட்டுக்குச் சில தொழிலாளிகள் வந்தார்கள். அவர்கள் அவரது அடுப்பைச் சரிசெய்ய வந்தவர்கள் என்று இவான் டிமிட்ரிட்ச்சுக்குத் தெரியும். இருந்தாலும் அவர்கள் தொழிலாளிகள் வேடத்தில் இருக்கும் காவல் அதிகாரிகள் என்று அவரது பயம் கூறியது. அறையில் இருந்து ரகசியமாக வெளியேறி, பயத்துடன் தெருவில் மேலங்கியும், தொப்பியும் இல்லாமல் ஓடினார். அவரது பின்னால் நாய்கள் துரத்தின. குடியானவன் ஒருவன் அவரது பின்புறம் சத்தம் போட்டான். காற்று அவரது காதுகளில் விசிலடித்தது. மொத்த உலகின் பலமும், வன்முறையும் தனக்கு எதிராக ஒன்றாகச் சேர்ந்து தன்னை துரத்துவதாக இவான் டிமிட்ரிட்ச்சுக்குத் தோன்றியது.

அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, வீட்டுக்குக்கொண்டும் செல்லப்பட்டார். அவரது வீட்டு உரிமையாளர் மருத்துவருக்கு ஆள் அனுப்பினார். பின்னால் நாம் இன்னமும் விவரிக்கப்போகும் மருத்துவர் ஆண்ட்ரே எபிமிட்ச் அவரது தலைக்குக் கட்டும், சில மருந்துகளும் கொடுத்துவிட்டு, தலையை ஆட்டிவிட்டு, பைத்தியமாகிக் கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால், அவர் திரும்ப வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

வீட்டில் இருந்து அவரை யாரும் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால், இவான் டிமிட்ரிட்ச் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பாலியல் நோயாளிகள் இருக்கும் பகுதியில் முதலில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவரால் தூங்க முடியவில்லை என்பதாலும், அவரது கதைகளும், கற்பனைகளும் மற்ற நோயாளிகளைத் தொந்தரவு செய்ததாலும், அவர் மருத்துவர் ஆண்ட்ரே எபிமிட்ச்சின் ஆணையின் படி, வார்ட் எண் 6-க்கு மாற்றப்பட்டார்.

ஒரு வருடத்துக்குள் இவான் டிமிட்ரிட்ச்சை நகரில் அனைவரும் மறந்துவிட்டார்கள். அவரது வீட்டு உரிமையாளர் புத்தகங்களைக் குவியலாக வெளியேபோட்டுவைக்க, அதை அந்தப் பகுதி சிறுவர்கள் கட்டுக்கட்டாக எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

IV

இவான் டிமிட்ரிட்ச்சுக்கு இடது பக்கம், நான் ஏற்கனவே சொன்னபடி, யூதரான மொய்செய்கா இருந்தார்; அவரது வலதுபுறம் இருந்த குடியானவர் மிகவும் பருமனாக, கிட்டத்தட்ட உருண்டையாக இருந்தார். எந்த உணர்வையும் காட்டாத, எந்த சிந்தனையும் இல்லாத முட்டாள்தனமான முகமுடன் இருந்தார். அசைவில்லாத, உண்ண மட்டும் செய்யும், சுத்தமில்லாத மிருகம். பல காலத்துக்கு முன்பே சிந்தனை செய்யும் சக்தியையும், உணர்வுகளையும் இழந்துவிட்டார். அவரிடம் இருந்து எப்போதும் ஒரு அழுகிய, மூச்சை அடைக்கும் நாற்றம் வந்துகொண்டே இருந்தது.

அவரைச் சுத்தம் செய்ய வேண்டிய நிகிதா, தன்னுடைய எல்லா சக்தியையும்கொண்டும் அவரை அடித்தான். ஆனால் இதில் கொடுமையானது அவரை அடிப்பது அல்ல – அது ஒருவருக்குப் பழகிவிடும் – ஆனால் அந்த அடிகளுக்கு அந்த மிருகம் எந்தவிதத்திலும் பதில் உணர்ச்சியைக் காட்டாது. சத்தமோ, அசைவோ, கண்களில் எந்தவிதமான உணர்வோ இருக்காது. பெரிய பீப்பாய் லேசாக அசைவதுபோல அசைய மட்டுமே செய்யும்.

வார்ட் எண் 6-ன் ஐந்தாவது, கடைசி நபர், தபால் நிலையத்தில் தபால்களைப் பிரிக்கும் வேலை செய்தவர். மெல்லிய, வெளுத்த நிறமுடைய அவர் நல்ல குணத்துடன் இருந்தாலும், அவரது முகம் சூழ்ச்சி செய்பவர்போல இருந்தது. அவரது அமைதியான, அறிவான கண்களில் தெரிந்த தெளிவும், உற்சாகமும் அவரது மனதில் ஏதோ நல்ல விஷயம் இருப்பதுபோலவும், அவர் ஏதோ ஒரு நல்ல ரகசியத்தை வைத்திருப்பதுபோலவும் இருந்தது. அவரது தலையணை மற்றும் படுக்கைக்கு கீழே அவர் எதையோ மறைத்துவைத்திருந்தார். அதை அவர் எவரிடமும் காட்டுவதில்லை. திருட்டு பயத்தால் அல்ல; தன்னடக்கத்தால். சில நேரம் அவர் சன்னலில் சென்று நின்றுகொண்டும், அவரது மார்போடு ஒன்றை அணைத்துக்கொண்டும், தலையை குனிந்துகொண்டும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அவரின் அருகில் சென்றால், மிகுந்த குழப்பத்தோடு, மார்பில் வைத்திருப்பதைப் பிடுங்கிக்கொள்வார். ஆனால் அவரது ரகசியத்தைத் தெரிந்து கொள்வது சிரமமானது அல்ல.

அடிக்கடி இவான் டிமிட்ரிட்சிடம் வந்து “என்னை வாழ்த்துங்கள். எனக்கு ஸ்டானிஸ்லாவ் இரண்டாம் வரிசை நட்சத்திரப் பதக்கத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டாம் வரிசை நட்சத்திர பதக்கம் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது. என்ன காரணத்துக்காகவோ எனக்காக விதிவிலக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள்” என்று புன்னகையுடனும், தோள்களைக் குழப்பத்துடன் குலுக்கிக்கொண்டும், “ஆனால் இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்றும் சொல்வார்.

“எனக்கு இதைப் பற்றி எதுவும் புரியவில்லை” என்று இவான் டிமிட்ரிட்ச் முக வாட்டத்துடன் பதில் கூறுவார்.

“ஆனால் நான் கூடிய சீக்கிரத்தில் எதை அடையப்போகிறேன் என்று தெரியுமா?” என்று தபால்களைப் பிரிப்பவர், தன் கண்களை இடுக்கிக்கொண்டு கேட்பார்: “கட்டாயம் எனக்கு ஸ்வீடன் நாட்டின் ‘துருவ நட்சத்திரம்’ பதக்கம் கிடைத்துவிடும். அதற்காக உழைப்பது மிகவும் சரியானது. வெள்ளைச் சிலுவையில் கறுப்புத் துணி கட்டப்பட்டிருக்கும். மிகவும் அழகாக இருக்கும்.”

வேறெந்த இடத்தையும்விட அதிகமாக இந்த வார்டில் வாழ்க்கை மிகவும் சலிப்பூட்டுவதாக இருந்தது. காலையில், அங்கிருந்த நோயாளிகள், வாதம் வந்தவரையும், பருமனான குடியானவரையும் தவிர, அனைவரும் வாயிலில் இருந்த குளியல் தொட்டியில் தங்களைச் சுத்தம் செய்துகொண்டு, அவர்களது மேலங்கியிலேயே துடைத்துக் கொள்வார்கள்; அதன் பின்னர் நிகிதா முக்கியக் கட்டடத்தில் இருந்துகொண்டுவரும் தகரக் கோப்பைகளில் தேநீர் அருந்துவார்கள். அனைவருக்கும் ஒரு கோப்பை தேநீர் கொடுக்கப்படும். நடுப்பகலில் அவர்களுக்குப் புளித்த முட்டைகோசு மற்றும் வேகவைத்த தானிய சூப் கொடுக்கப்படும். மாலையில் அவர்களுக்கு அவற்றில் மிஞ்சிய தானியம் அவர்களுக்கு உணவாக தரப்படும். இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் படுக்க, தூங்க, சன்னலின் வழியே வெளியே பார்க்க, ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நடக்க என்று பலதும் செய்வார்கள். இப்படியே ஒவ்வொரு நாளும் கழிந்தது. தபால் வரிசைக்காரரும் தினமும் அதே பதக்கங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

வார்டு எண் 6-ல் புதுமுகங்கள் அரிதாகவே காணப்பட்டன. புதிதாக எந்த மனநல நோயாளியையும் மருத்துவர் நீண்ட காலங்களாக அனுமதிக்கவில்லை. பைத்தியக்கார விடுதிகளை வந்து பார்க்கும் மக்களும் உலகில் வெகு சிலர் மட்டுமே இருந்தார்கள். ஒவ்வொரு இரண்டு மாதங்களும் முடி திருத்தும் செம்யன் லைசரிட்ச் அங்கே வருவார். அவர் எப்படி முடியை வெட்டுவார் என்றோ, அதற்கு நிகிதா எப்படி உதவுகிறார் என்பதையோ, அந்தக் குடிகார, சிரித்துக் கொண்டிருக்கும் முடி திருத்துபவனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எப்படி நடுங்கினார்கள் என்றோ இங்கே நாம் விவரிக்கப் போவதில்லை.

அந்த முடி திருத்துபவரைத்தவிர வேறு யாரும் வார்டுக்குள் எட்டிப் பார்ப்பதில்லை. அங்கிருந்த நோயாளிகள் ஒவ்வொரு நாளும் நிகிதாவைத் தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை.

ஆனால், மருத்துவமனையில் இப்போது வினோதமான வதந்தி சுற்றி வந்தது.

வார்ட் எண் 6-க்கு ஒரு மருத்துவர் வர ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான் அது.

V

என்ன வினோதமான வதந்தி!

மருத்துவர் ஆண்ட்ரே எபிமிட்ச் ராஜின், அவரது வழியில் ஒரு வினோதமான மனிதர். அவர் இளமையில் மிகவும் மதப்பற்று கொண்டவராக இருந்தார் என்றும், அரசாங்க வேலைக்காக தன்னை மாற்றிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. 1863-ல் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அவர் இறையியல் கல்லூரிக்குச் செல்லவிருந்தார். ஆனால் அறுவை சிகிச்சை மருத்துவரான அவரது தந்தை அதை மறுத்து, அவர் பாதிரியாரானால் அவருக்குச் சொத்தில் எந்தப் பங்கும் தர முடியாது என்று நேரடியாகச் சொல்லிவிட்டார். இது எவ்வளவு தூரம் உண்மை என்று யாருக்கும் தெரியாது. ஆண்ட்ரே எபிமிட்ச் பல முறை தனக்கு மருத்துவம் அல்லது பொதுவாக அறிவியல் படிக்கவே தனக்கு விருப்பமிருந்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

எப்படியாக இருந்தாலும், அவர் மருத்துவப் படிப்பை முடித்தவுடன் பாதிரியாராகப் போகவில்லை. அவரிடம் எந்தவிதத்திலும் மத ஈடுபாடு மாறியிருக்கவில்லை. அப்போது அவரிடம் இருந்த அதேஅளவு ஈடுபாடு தான், இப்போதும் இருக்கிறது.

அவர் குடியானவர்களைப்போலப் பெரிய உருவத்துடன் இருந்தார். அவரது முகம், தாடி, மடித்துச் சீவப்பட்ட முடி, அவரது முரட்டுத்தனமான, அருவருப்பான உருவம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுக்கொண்டும், எப்போதும் கோபத்தில் இருக்கும் நெடுஞ்சாலை விடுதி காப்பாளர்களை நினைவுபடுத்தியது. அவரது முகம் சிடுசிடுவென்று நீல நரம்புகளால் நிரம்பியும், அவரது கண்கள் சிறியதாகவும், மூக்கு சிவப்பானதாகவும் இருந்தது. அவர் உயரமாக, அகன்ற தோள்களுடன், பெரிய கை, கால்களுடன் இருந்தார்; அவர் ஒரு குத்துவிட்டால், ஒருவரது உயிரே போய்விடும் என்றுதான் தோன்றும். ஆனால் அவரது நடை மிகவும் மென்மையாகவும், கவனத்துடனும் இருந்தது.

அவர் யாரையாவது குறுகலான பாதையில் சந்தித்தால், அவரே முதலில் விலகி நின்று வழிவிடுவார். அப்போது, அதிகாரமாக இல்லாமல், மிகவும் மென்மையாக “மன்னித்துக் கொள்ளவும்!” என்று சொல்வார். அவரது கழுத்தில் ஒரு வீக்கம் இருப்பதால் அவரால் இறுக்கமான கழுத்துப்பட்டைகளை அணிய முடியாது. அதனால் எப்போதும் மெல்லிய, பருத்தி ஆடைகளையே அணிவார். மொத்தத்தில் அவர் மருத்துவர்களைப்போல உடையணிவதில்லை. ஒரே மேலங்கியைப் பத்து வருடங்களுக்கு அணிந்திருப்பார். வழக்கமான யூதரின் கடையில் அவர் வாங்கும் புதிய ஆடைகளும், அவரது பழைய ஆடைகளைபோலக் கசங்கியும், மோசமாகவும் இருக்கும். நோயாளிகளைப் பார்ப்பது, வெளியே சாப்பிடுவது, பிறர் வீடுகளுக்கு போவது என எல்லாவற்றுக்கும் ஒரே அங்கியைத்தான் அணிவார்; ஆனால் இதற்கு அவரது கஞ்சத்தனம் காரணமில்லை. தன்னுடைய தோற்றம் பற்றி அவர் கவலைப்படுவதில்லை என்பதே காரணம்.

ஆண்ட்ரே எபிமிட்ச் அந்த நகருக்குப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவந்தபோது, ‘கடவுளின் புகழை பாடத் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம்’ மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மருத்துவமனையின் வார்டுகளில், பாதைகளில், முற்றங்களில் அடித்த துர்நாற்றத்தில் ஒருவராலும் மூச்சுவிடக்கூட முடியாது. மருத்துவமனை பணியாட்கள், செவிலிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என அனைவரும் நோயாளிகளுடன் வார்டுகளில் உறங்கினார்கள். அங்கே வண்டுகள், பூச்சிகள், எலிகள் நடமாடுவதாகக் குறை சொன்னார்கள். அறுவை சிகிச்சை வார்டுகளில் இருந்தவர்களுக்கு ஏதாவது தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டு அறுவைக் கத்திகள் மட்டுமே இருந்தன. மொத்த மருத்துவமனையிலும் ஒரு வெப்பமானி கூட இல்லை. உருளைக்கிழங்குகள் குளியல் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. மேற்பார்வையாளர், சுகாதார பணியாளர், மருத்துவ உதவியாளர் என அனைவரும் நோயாளிகளிடம் இருந்து திருடினார்கள்.

ஆண்ட்ரே எபிமிட்ச்சுக்கு முன்னிருந்த வயதான மருத்துவர், மருத்துவமனை சாராயத்தை ரகசியமாக விற்றதாக அனைவரும் கூறினார்கள். அத்தோடு அவருக்கு அங்கிருந்த செவிலிகள் மற்றும் பெண் நோயாளிகளுடன் தொடர்பிருந்ததாகக் கூறப்பட்டது. இந்த முறைகேடுகள் எல்லாம் நகரில் நன்றாகவே தெரிந்திருந்தது, சில நேரங்களில் அவை மிகைப்படுத்தப்பட்டுப் பேசப்பட்டாலும், மக்கள் அதை அமைதியாகவே எடுத்துக்கொண்டார்கள். இன்னமும் சிலர் மருத்துவமனையில் இருக்கும் விவசாயிகளும், தொழிலாளிகளும், வீட்டில் இருப்பதைவிட மருத்துவமனையில் நன்றாகவே இருப்பதால் அது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவிக்கக்கூடாது என்று கூறினார்கள்.

இன்னமும் சிலர் ஸிம்ஸ்டோவோ உதவியில்லாமல் நகர நிர்வாகம் மட்டுமே நல்ல முறையில் மருத்துவமனையை நடத்துவது முடியாது என்றார்கள். மோசமாக இருந்தாலும், ஒரு மருத்துவமனை இருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ளவேண்டும் என்றார்கள். புதிதாக உருவான ஸிம்ஸ்டோவோ, ஏற்கனவே ஒரு மருத்துவமனை இருப்பதால், வேறு மருத்துவமனைகளை அந்த நகரிலோ, அருகிலோ திறப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

மருத்துவமனையை முதலில் பார்த்தவுடன் ஆண்ட்ரே எபிமிட்ச் அது ஒரு ஒழுக்கமில்லாத இடம் என்றும், நகர மக்களின் ஆரோக்கியத்துக்கு அது சிறிதும் உதவப் போவதில்லை என்றும் முடிவு செய்தார். அவரது கருத்தின் படி, உடனடியாக நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு, மருத்துவமனையை மூடுவதுதான் அனைவருக்கும் நன்மை பயக்கும். ஆனால் அதைத் தன்னால் மட்டுமே செய்ய முடியாது என்பதையும், அந்த இடத்தின் அசுத்தத்தையும், ஒழுக்கக்கேட்டையும் விரட்டினால், அவை இன்னொரு இடத்துக்கு மட்டுமே செல்லும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவை தானாக அந்த இடத்தில் இருந்து வெளியே செல்லக் காத்திருக்கவேண்டும் என்று நினைத்தார். அதோடு மக்கள் ஒரு மருத்துவமனையைத் திறந்து, அதை நடத்திக்கொண்டும் இருந்தார்கள் என்றால், அவர்களுக்கு அது தேவைப்படுகிறது என்று நினைத்தார். கழிவுகள் எப்படி உரமாக மண்ணைச் செம்மைப்படுத்துகிறதோ அதுபோலவே மூடநம்பிக்கைகளும், தினசரி வாழ்வில் இருக்கும் எல்லாத் தொந்தரவுகளும், வெறுப்பும் தேவைப்படுகிறது. காலப்போக்கில் அவை மனிதர்களை செம்மைப்படுத்தும் என்று நினைத்தார். உலகில் இருக்கும் நல்லவை அனைத்தும் மோசமான ஆரம்பத்தில் இருந்தே கிளைத்தன என்பது அவரது கருத்து.

ஆண்ட்ரே எபிமிட்ச் தன்னுடைய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டபோது, அவர் மருத்துவமனையில் நடந்து கொண்டிருந்த முறைகேடுகளைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவமனை பணியாளர்களையும், செவிலிகளையும் நோயாளிகளிடம் வார்டில் தூங்கக்கூடாது என்று மட்டும் சொன்னார். இரண்டு அலமாரிகள் நிறைய உபகரணங்களை நிரப்பினார். மேற்பார்வையாளர், சுகாதார பணியாளர், மருத்துவ உதவியாளர், தொற்றுகள் முதலியவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தன.

ஆண்ட்ரே எபிமிட்ச் நேர்மையையும், அறிவுக்கூர்மையையும் மிகவும் விரும்பினார். ஆனால் அவரைச் சுற்றி அறிவார்ந்த, நேர்மையான வாழ்வை அமைத்துக் கொள்ள தேவையான வலிமையோ, மனஉறுதியோ அவரிடம் இல்லை. ஆணையிடவோ, எதையும் தடை செய்யவோ, வலியுறுத்தவோ அவரால் முடியாது. அவரது குரலை உயர்த்தவோ, அதிகாரமாக பேசவோ கூடாது என்று அவர் சபதம் செய்திருந்தார் போலும். ‘கொண்டு வா’ என்று சொல்வது அவருக்கு மிகவும் கடினம். அவருக்கு உணவு தேவைப்படும்போது, தயக்கத்துடன் இருமி, சமையல்காரனிடம் “தேநீர் குடிக்கலாமா?…” அல்லது “உணவை சாப்பிடலாமா?…” என்று கேட்பார். மேற்பார்வையாளரை வேலையில் இருந்து நீக்குவதோ அவரைத் திருடுவதை நிறுத்த சொல்வதோ அல்லது அந்தத் தேவையில்லாத பதவியையே நீக்கிவிடுவதோ அவரது சக்திக்கு இயலாத காரியம்.

ஆண்ட்ரே எபிமிட்ச் ஏமாற்றப்பட்டாலோ அல்லது புகழப்பட்டாலோ அல்லது அவரது கையெழுத்துக்குத் திருட்டு கணக்குகள் வரும் போதோ அவர் முகம் சிவந்துவிடும். ஆனால் குற்ற உணர்வுடன் கையெழுத்திட்டுவிடுவார். நோயாளிகள் அவரிடம் தாங்கள் பசியுடன் இருப்பதாகவோ, செவிலிகள் தங்களை நடத்துவது குறித்தோ கூறினால், அவர் குழம்பி, குற்ற உணர்வுடன் “சரி, சரி, அப்புறமாக அது குறித்துப் பார்க்கிறேன்… ஏதோ தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது…” என்று முணுமுணுப்பார்.

முதலில் ஆண்ட்ரே எபிமிட்ச் மிகவும் வேகத்தோடு உழைத்தார். தினமும் காலையில் இருந்து மாலை வரை நோயாளிகளைப் பார்த்தார். அறுவை சிகிச்சைகள் செய்தார். அடைத்து வைக்கப்பட்ட நோயாளிகளைக்கூடச் சென்று பார்த்தார். அவர் மிகவும் கவனத்துடன் இருப்பதாகவும், நோய்களை மிகவும் புத்திசாலித்தனமாகக் கண்டுபிடிப்பதாகவும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நோய்களைச் சரியாகக் கண்டறிவதாகவும் பெண்கள் பேசிக் கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவரது வேலையின் சலிப்பூட்டும் தன்மையும், அவரது உழைப்பு எந்தப் பயனையும் தரவில்லை என்பதும் அவரைக் களைப்படைய வைத்தது.

இன்று அவர் முப்பது நோயாளிகளைப் பார்க்கிறார், நாளை அது முப்பத்து ஐந்தாகிறது, அதற்கு மறுநாள் நாற்பதாகிறது, அப்படியே ஒவ்வொரு தினமும், மாதமும், வருடமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் நகரின் இறப்பு விகிதம் குறைவதில்லை. நோயாளிகள் வருவதும் நிற்பதில்லை. காலையில் இருந்து மாலை வரை வரும் நாற்பது நோயாளிகளுக்கு உண்மையாக உதவுவது என்பது முடியாத காரியம். அது தன்னைத் தானே ஏமாற்றி கொள்வதிலேயே முடியும். வருடத்துக்குப் பன்னிரெண்டாயிரம் நோயாளிகளைப் பார்ப்பது என்பது, பன்னிரெண்டாயிரம் பேரை ஏமாற்றுவதுதான். அவர்களில் மோசமாக இருப்பவர்களை வார்டுகளில் சேர்த்து, அறிவியல் கோட்பாடுகளின் படி சிகிச்சை செய்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால் கோட்பாடுகள் இருந்தன; அறிவியல்தான் இல்லை;

தத்துவம் பேசுவதை விட்டுவிட்டு, மற்ற மருத்துவர்கள் செய்வதை மட்டும் செய்தால், தேவைப்படுவது எல்லாம் தூசிக்கு பதிலாகச் சுத்தமும், காற்றோட்டமும்தான். புளித்துப் போன முட்டைகோசு சூப்புக்குப் பதிலாக ஆரோக்கியமான உணவும், திருடர்களுக்கு பதிலாக நல்ல பணியாட்களும் தேவை; மரணமே அனைவரின் இறுதி முடிவு என்னும்போது, அதை எதற்குத் தடுக்க வேண்டும்? வணிகரோ, குமாஸ்தாவோ இன்னொரு ஐந்து, பத்து வருடங்கள் உயிருடன் இருப்பதால் என்ன பயன்? மருத்துவத்தின் குறிக்கோள் மருந்துகளின் மூலமாகத் துயரத்தைத் துடைப்பது என்றால், அடுத்த கேள்வி அதிலிருந்தே ஒருவரிடம் எழுகிறது; எதற்காகத் துடைக்க வேண்டும்? முதலில், துயரமே மனிதனை முழுமையை நோக்கி நகர்த்துவதாகக் கூறுகிறார்கள்; இரண்டாவதாக, மனிதர்கள் மாத்திரைகளையும், மருந்துகளையும் உட்கொண்டு அவர்களது துயரங்களில் இருந்து தப்பித்துவிட்டால், இதுவரை அவர்களை அவற்றில் இருந்து காப்பாற்றியும், சில நேரங்களில் அதில் மகிழ்ச்சியையும் கொடுத்து வந்த மதங்களையும், தத்துவங்களையும் அவர்கள் கைவிட்டுவிடுவார்கள்.

புஷ்கின் இறப்பதற்கு முன் மிகவும், மிகவும் துயரத்தை அனுபவித்தார். ஹெய்ன் பல வருடங்கள் வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்; ஏன், ஆண்ட்ரே எபிமிட்ச்சோ அல்லது மாற்றியோன சவிஷ்ணவோ நோயில் இருக்கக்கூடாது? அதுவும் அவர்கள் வாழ்வில் எதுவும் முக்கியமாக இல்லை. துயரத்தை தவிர மற்ற வகைகளில் அமீபாவை போன்று அவர்களது வாழ்வும் ஒன்றுமில்லாதது அல்லவா?

இது போன்ற சிந்தனைகளின் அழுத்தத்தில், ஆண்ட்ரே எபிமிட்ச் தன்னுடைய முயற்சிகளைக் குறைத்துக்கொண்டும், தினமும் மருத்துவமனைக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டார்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *