VI
ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார் அல்லது மருத்துவமனைக்குச் செல்வார். மருத்துவமனையில் இருக்கும் இருளும் குறுகலுமான பாதையில் மருத்துவரைப் பார்க்க நோயாளிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். செவிலிகளும் பணியாளர்களும் தங்களது காலணிகளைத் தரையில் மிதித்துக்கொண்டும் ஓடிக் கொண்டிருந்தார்கள்; மெலிந்த நோயாளிகள் மருத்துவ அங்கிகளை அணிந்துகொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்; பிணங்களும் பாத்திரங்களில் குப்பைகளும் எடுத்துச் செல்லப்பட்டன; குழந்தைகள் அழுது கொண்டிருந்தன; குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அது போன்ற சூழல் காய்ச்சல் வந்தவர்கள், காச நோய் வந்தவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் போன்றோருக்குக் கொடுமையானது என்று ஆண்ட்ரே எபிமிட்ச்சுக்குத் தெரியும்; ஆனால் என்ன செய்ய முடியும்?
அவரது அறையில், செர்கெய் செர்கெய்ட்ச் – சிறிய பருமனான, குட்டை மனிதர், தனது நன்றாக மழிக்கப்பட்ட முகத்துடன், மென்மையான பழக்கங்களும், புதிய நன்றாகத் தைக்கப்பட்ட அங்கியுடன், அரசியல்வாதிபோல இருப்பவர் அவரைச் சந்திப்பார். அவர் நகரில் தனியாக மருத்துவம் செய்து வந்தார். அப்படி எதுவும் செய்யாத மருத்துவரை விடத் தனக்கு அதிகமாகத் தெரிந்திருப்பதாக அவர் நம்பினார். அறையின் மூலையில் ஒரு சிறிய கடவுள் உருவமும், அதன் முன்னே பெரிய விளக்கொன்றும், ஒரு வெள்ளை மூடியிட்ட மெழுகுவர்த்தித் தாங்கியும் இருந்தது. சுவர்களில் பல பேராயர்களின் படங்களும், சவ்யடோகோர்ஸ்கி மடத்தின் படமும், காய்ந்து போன பூக்களும் இருந்தன.
செர்கெய் செர்கெய்ட்ச் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடுடையவர். அவர் வழிமுறைகளையும், கண்ணியத்தையும் மிகவும் மதித்தார். அங்கிருந்த கடவுள் உருவம் அவரது செலவிலேயே அங்கு வைக்கப்பட்டது. அவரது வேண்டுகோளின் படி, நோயாளிகளில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே கடவுள் பாடல்களைப் பாடுவார். பாடி முடித்தவுடன், செர்கெய் செர்கெய்ட்ச் கையில் தூபத்தை எடுத்துக்கொண்டும், ஒவ்வொரு வார்டாகச் செல்வார்.
நிறைய நோயாளிகள் வந்தனர். நேரம் குறைவாகவே இருந்தது. எனவே அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு, ஏதாவது மருந்தை – விளக்கெண்ணெய் அல்லது ஏதாவது களிம்பு – கொடுத்துவிடுவதுதான் வேலை. ஆண்ட்ரே எபிமிட்ச் கைகளைக் கன்னத்தில் வைத்துக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும், எந்திரம்போலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பார். செர்கெய் செர்கெய்ட்ச் அருகில் கைகளைத் தேய்த்துக்கொண்டும் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவ்வப்போது அவரும் கேள்விகளைக் கேட்பார்.
“நாம் வலியிலும், ஏழ்மையிலும் துயரப்படுகிறோம். காரணம் நாம் நமது ஆண்டவனிடம் வேண்டுவதில்லை. அதுதான்!” என்பார்.
ஆண்ட்ரே எபிமிட்ச், நோயாளிகளைப் பார்க்கும் போதெல்லாம் அறுவை சிகிச்சை செய்வதில்லை; பல காலத்துக்கு முன்பே, அவருக்கு ரத்தத்தைப் பார்ப்பது பிடிக்காமல் போனதிலிருந்து அப்படித்தான் இருக்கிறார். குழந்தைகளின் தொண்டையைப் பார்க்க அவர்களின் வாயை திறக்கும்போது, குழந்தை அழுது, தனது சிறிய கைகளால் தற்காத்துக் கொள்ளும்போது, அவரது காதுகளில் கேட்கும் சத்தம் அவரது தலையைச் சுற்றச் செய்து, கண்களில் கண்ணீர் வந்துவிடும். வேகமாக மருந்தை எழுதிக் கொடுத்துவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டும் செல்லும்படிச் சொல்லிவிடுவார்.
அவரது நோயாளிகளின் கோழைத்தனம், அவர்களால் எதையும் விவரமாகச் சொல்ல முடியாமல் இருப்பது, செர்கெய் செர்கெய்ட்ச் அருகில் இருப்பது, சுவர்களில் தொங்கும் படங்கள், இருபது வருடங்களாக அவர் திரும்ப, திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் போன்றவை அவரைக் களைப்படையச் செய்தன. ஐந்து, ஆறு நோயாளிகளைப் பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிடுவார். மற்றவர்களை அவரது உதவியாளர் பார்ப்பார்.
தான் வெளியே மருத்துவம் பார்ப்பதில்லை என்பதும், தன்னை யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை என்ற மகிழ்வான சிந்தனையுடன் அவர் வீட்டுக்குச் சென்றவுடன், மேசையில் அமர்ந்து புத்தகத்தை எடுத்துக் கொள்வார். அவர் நிறையப் புத்தகங்களை, மிகவும் மகிழ்ச்சியோடு வாசிப்பார். அவரது சம்பளத்தில் பாதி புத்தகங்கள் வாங்குவதில் சென்றது. வீட்டில் இருந்த ஆறு அறைகளில், மூன்றை அவர் புத்தகங்களாலும், பழைய பத்திரிகைகளாலும் நிரப்பி இருந்தார். அவருக்கு வரலாறும் தத்துவமும் பிடித்தமானவை. அவர் வாங்கும் ஒரே மருத்துவப் பத்திரிகை ‘தி டாக்டர்’. அதிலும் முதலில் கடைசிப் பக்கங்களை மட்டுமே படிப்பார்.
எப்போதும் பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக, களைப்படையாமல் வேலை செய்வார். இவான் டிமிட்ரிட்ச் முந்தைய நாட்களில் படித்ததுபோல அவர் வேகமாகவும், கிடைத்ததை எல்லாமும் படிப்பதில்லை. அவர் மெதுவாகவும், நிதானமாகவும், அவருக்குப் பிடித்த அல்லது புரியாத பத்திகளில் வெகு நேரம் நிறுத்தி, சிந்தித்து வாசிப்பார். புத்தகங்களுக்கு அருகிலேயே ஒரு போத்தல் வோட்காவும், உப்பிட்ட வெள்ளரியோ, ஊற வைத்த ஆப்பிளோ அருகில் ஒரு துணியில் வைக்கப்பட்டிருக்கும். அரை மணிக்கு ஒரு முறை அவர் ஒரு கோப்பை வோட்காவை ஊற்றி, புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலேயே குடித்து விடுவார். திரும்பவும் பார்க்காமலேயே, கைகளால் தடவி வெள்ளரியை எடுத்துக் கடிப்பார்.
மூன்று மணிக்கு, அவர் மெதுவாகச் சமையலறை கதவுக்கு அருகில் சென்று, “டரியுஷ்கா, உணவு அருந்தலாமா?…” என்பார்.
மோசமாகவும், அசுத்தமாகவும் தரப்பட்ட உணவுக்குப் பின்னர், ஆண்ட்ரே எபிமிட்ச் தன்னுடைய அறையில் சிந்தித்துக் கொண்டே நடந்துகொண்டிருப்பார். மணி நான்கு, அதன் பின் ஐந்து அடிக்கும். அப்போதும் சிந்தித்துக்கொண்டே நடந்து கொண்டிருப்பார். சில நேரம் சமையலறை கதவு திறக்கும். அதன் வழியே தூங்கி வழிந்துகொண்டு, சிவந்த முகத்தோடு டரியுஷ்கா வருவாள்.
“ஆண்ட்ரே எபிமிட்ச், நீங்கள் பீர் அருந்தும் நேரமல்லவா?” என்று அக்கறையுடன் கேட்பாள்.
“இல்லை, இன்னமும் நேரமாகவில்லை…. இன்னமும் சிறிது நேரம் ஆகட்டும்… இன்னமும் சிறிது நேரம் ஆகட்டும்…” என்பார்.
நகரில் ஆண்ட்ரே எபிமிட் சலிப்படையாமல் பேசக்கூடிய ஒரே நபரான தபால்காரரான மிகைல் அவீர்யனிட்ச், மாலையில் வருவார். மிகைல் அவீர்யனிட்ச் ஒரு காலத்தில் மிகவும் செல்வந்தரான நில உடைமையாளர். அவர் குதிரைப் படையில் இருந்தவர். ஆனால் இப்போது அவரது சொத்துக்கள் அழிந்துவிட, ஏழ்மையில் தபால் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனாலும் அவர் ஆரோக்கியமான, உள்ளார்ந்த தோற்றமும், பெரிய பழுப்பு நிற மீசையும், நல்ல முறையில் வளர்க்கப்பட்ட மனிதனின் பழக்கவழக்கமும், சத்தமான, இனிமையான குரலும் கொண்டிருந்தார். அவர் நல்ல குணமும், உணர்ச்சிவசப்படுபவராகவும் ஆனால் மிகுந்த முன் கோபியாகவும் இருந்தார். தபால் நிலையத்தில் யாராவது அவரிடம் மறுத்துப் பேசினாலோ கோபப்பட்டாலோ அல்லது விவாதம் செய்ய ஆரம்பித்தாலோ, மிகைல் அவீர்யனிட்ச் முகம் சிவந்து, உடல் நடுங்கி, இடியைபோல முழங்குவார். “வாயை மூடுங்கள்!” . எனவே அவரது தபால் நிலையம் நேரில் செல்வதற்கு பயங்கரமான இடம் என்ற பெயரைப் பெற்றிருந்தது.
மிகைல் அவீர்யனிட்ச், ஆண்ட்ரே எபிமிட்ச்சின் நல்ல நாகரீகத்துக்காகவும், அவரது ஆன்மாவின் உன்னதக் குணத்துக்காகவும் மிகவும் விரும்பவும், மதிக்கவும் செய்தார். நகரின் மற்ற மக்களை, தன்னுடைய வேலைக்காரர்கள்போல நடத்தினார்.
ஆண்ட்ரே எபிமிட்ச்சைச் சந்தித்தவுடன், அவர் “வந்துவிட்டேன், மாலை வணக்கம், என் நண்பனே! என்னைச் சந்திப்பதே உனக்குப் பிடிக்காமல் போய்விட்டது, இல்லையா?” என்பார்.
“மாறாக, நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களைப் பார்ப்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே” என்பார்.
அவர்கள் இருவரும் வாசிக்கும் அறையிலிருந்து மெத்தையில் அமர்ந்து, சில நேரம் அமைதியாக புகை பிடிப்பார்கள்.
“டரியுஷ்கா, பியர் அருந்தலாமா?” என்று ஆண்ட்ரே எபிமிட்ச் கூறுவார்.
அவர்களது முதல் போத்தல்களை அமைதியாகக் குடிப்பார்கள். மருத்துவர் யோசித்துக்கொண்டும், மிகைல் அவீர்யனிட்ச், எதையோ சுவாரஸ்யமானதைச் சொல்லப் போகும் மனிதனின் மகிழ்ச்சியும், உணர்ச்சிகரமான முகத்துடனும் இருப்பார். மருத்துவர்தான் எப்போதும் உரையாடலை ஆரம்பிப்பார்.
அமைதியாகவும், மெதுவாகவும், அவரது நண்பரின் முகத்தைப் பார்க்காமல் (அவர் யார் முகத்தையும் நேரடியாக பார்ப்பதில்லை), “இந்த நகரில் சுவாரசியமான, அறிவார்ந்த உரையாடலை நடத்துவதற்கு அல்லது அதற்கு விருப்பம் தெரிவிக்க யாரும் இல்லை என்பது எவ்வளவு பரிதாபம்! எவ்வளவு பெரிய இழப்பு அது. படித்தவர்கள்கூட ஆபாசமான உரையாடல்களைத் தாண்டிப் பேசுவதில்லை; அவர்களது அறிவின் வளர்ச்சி, படிக்காதவர்களைவிட அதிகமில்லை.”
“சரியான உண்மை. நான் ஒத்துக்கொள்கிறேன்.”
“மனித மனதின் உயர்ந்த ஆன்மிக வெளிப்பாடுகளைத் தவிர இந்த உலகில் இருக்கும் எல்லாம் எந்தச் சிறப்பும் இல்லாத, அசுவாரஸ்யமானவைதான். மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையில் அறிவுதான் எல்லைக்கோடாக இருக்கிறது. அதுவே மனிதர்களின் உயர்ந்த கடவுள் தன்மையைக் குறிக்கிறது. அதுவே இங்கு இல்லாத நித்திய ஜீவிதத்தின் இடத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே அறிவு மட்டுமே நமது மகிழ்ச்சியின் ஒரே ஊற்று. நம்மைச் சுற்றிலும் நம்மால் அறிவை பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை என்றால், நமது மகிழ்ச்சி வடிந்துவிடுகிறது. புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் உயிருள்ள மனிதர்களுடன் பேசி, உரையாடுவதைப் போலிருக்காது. ஒப்பீடு செய்வது என்றால், எழுதி வைக்கப்பட்ட சங்கீதக் குறிப்புகள்தான் புத்தகங்கள். பேசுவது என்பது பாடுவது.”
“உண்மை.”
இப்போது திரும்பவும் அமைதி திரும்பும். டரியுஷ்கா சமையலறையில் இருந்து வந்து, கதவருகே நின்று, முகத்தைக் கைகளால் தாங்கிக்கொண்டும், முகத்தில் வெறுமையுடன் நின்று கொண்டிருப்பாள்.
“ஹ! இந்தத் தலைமுறையிடம் அறிவை எதிர்பார்ப்பது!” என்று மிகைல் அவீர்யனிட்ச் பெருமூச்சு விடுவார்.
அப்படியே சென்ற காலத்தில் வாழ்வு எப்படி சுவாரசியமாகவும், முழுமையாகவும், கேளிக்கையுடனும் இருந்தது என்று விவரிக்க ஆரம்பிப்பார். ரஷ்யாவில் படித்தவர்கள் எவ்வளவு அறிவானவர்களாக இருந்தார்கள், எப்படி அவர்கள் சிறு காகிதத்தில் எழுதியதற்கு நேராகப் பணம் கடன் கொடுத்தார்கள், தோழனுக்குத் தேவையின்போது உதவாமல் இருப்பது எப்படி அவமானகரமானதாகப் பார்க்கப்பட்டது. எப்படிப்பட்ட சாகசங்கள், சண்டைகள், தோழர்கள், பெண்கள்! காகசஸ் எப்படியான அருமையான இடம்! அங்கே படைப்பிரிவு அதிகாரியின் மனைவி எப்படி அதிகாரிகளின் சீருடையை அணிந்துகொண்டும், மாலையில் தனியே – எந்தத் துணையும் இன்றி – மலையில் வண்டியை ஓட்டிச் செல்வாள். அங்கிருந்த கிராமம் ஒன்றின் இளவரசனிடம் அவள் காதலாக இருந்ததாகப் பேசிக் கொள்ளப்பட்டது.
“கடவுளே, புனிதத்தாயே…” என்று டரியுஷ்கா பெருமூச்சு விட்டுக்கொண்டு சொல்வாள்.
ஆண்ட்ரே எபிமிட்ச் எதையும் கேட்காமல், கேட்டுக் கொண்டிருப்பார்; அவரது பீர் குடித்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருப்பார்.
“நான் அறிவார்ந்த மக்களைப் பற்றிக் கனவு கண்டு, அவர்களுடன் உரையாடுகிறேன்.” என்று திடீரென்று அவர், மிகைல் அவீர்யனிட்ச் பேசுவதில் குறுக்கிட்டு கூறுவார். “என் தந்தை எனக்கு மிகச் சிறந்த கல்வியைக் கொடுத்தார். ஆனால் அறுபதுகளில் இருந்த கருத்துகளின் படி, என்னை மருத்துவராக ஆக்கினார். நான் அப்போது அவர் பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால், இப்போது அறிவார்ந்த கூட்டத்தில் நடு நாயகமாக இருந்திருப்பேன். ஏதாவது பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இருந்திருப்பேன். அறிவும் நித்தியமானது கிடையாது, அநித்தியமானதே. ஆனால் அதை நான் ஏன் மற்றவற்றை விடவிரும்புகிறேன் தெரியுமா? வாழ்க்கை ஒரு பொறி. சிந்திக்கும் மனிதன் ஒருவன் வளர்ந்து, வயதை அடையும்போது, அவன் தான் தப்பிக்க முடியாத ஒரு பொறியில் சிக்கி இருப்பதை உணர்வதைத் தவிர்க்க முடியாது.
அவன் உலக வாழ்வுக்கு. சந்தர்ப்பவசத்தால், அவனது சம்மதம் இல்லாமலேயே இழுத்து வரப்படுகிறான்… எதற்காக? அவன், தனது இருப்பின் அர்த்தத்தையும், காரணத்தையும் கண்டறிய முயற்சி செய்கிறான்; அவனிடம் எதுவும் சொல்லப்படுவதில்லை அல்லது அவனிடம் அபத்தங்களே சொல்லப்படுகின்றன; அவன் தட்டிப் பார்க்கிறான், அவனுக்குத் திறக்கப்படுவதில்லை; மரணமும் அவனது சம்மதம் இல்லாமல் வந்துவிடுகிறது. எனவே, சிறையில் எப்படித் தங்களது பொதுவான துரதிர்ஷ்டத்தின் காரணமாக மனிதர்கள் ஒன்றாக வருகிறார்களோ, அதுபோலவே ஆராயவும், பொதுவான காரணங்களைப் பேசவும் செய்யும் ஆர்வம் உடையவர்கள் ஒன்றாக இருக்கும்போது, வாழ்வின் பொறிகளைக் கவனிக்காமல், தங்களது கருத்துகளை சுதந்திரமாகவும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வகையில் மேதைமையின் மகிழ்ச்சியை எதனாலும் கொடுக்க முடியாது.”
“உண்மை.”
அவரது நண்பரின் முகத்தைப் பார்க்காமலே, ஆண்ட்ரே எபிமிட்ச் அமைதியாகவும், நிறுத்தி நிதானமாகவும் மேதைகளைப் பற்றியும், அவர்களுடனான உரையாடல் பற்றியும் பேசிக்கொண்டே செல்வார். மிகைல் அவீர்யனிட்ச் கவனமாகக் கேட்டு, ஒத்துக்கொள்வார்: “உண்மை.”
“நீங்கள் ஆன்மாவின் நித்தியத் தன்மையை நம்புவதில்லையா?” என்று திடீரென்று கேட்பார்.
“இல்லை, மரியாதைக்குரிய மிகைல் அவீர்யனிட்ச்; நான் அதை நம்புவதில்லை. அதை நம்புவதற்கான காரணங்களும் இல்லை.”
“எனக்கும் அது குறித்துச் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நான் மரணமடையக் கூடாது என்ற உணர்வும் இருக்கிறது. எனக்கு நானே சிந்தித்துக் கொள்வேன்; ‘கிழவனே! நீ மரணமடையும் நேரம் வந்து விட்டது!’ ஆனால் என்னுடைய ஆன்மாவில் இருக்கும் சிறிய குரல் சொல்கிறது; ‘அதை நம்பாதே; நீ இறக்க மாட்டாய்.’”
ஒன்பது மணி தாண்டியவுடன், மிகைல் அவீர்யனிட்ச் கிளம்பிவிடுவார். அவரது குளிருக்கான மேலங்கியை வாயிலில் போடும்போது, பெருமூச்சு விட்டுக்கொண்டே “ விதி நம்மை எத்தகைய காட்டில் கொண்டுவந்து விட்டுள்ளது! எல்லாவற்றை விடவும் மோசமானது இந்த இடத்தில் மரணமடைவதுதான். ச்!…”
VII
அவரது நண்பரை அனுப்பிவிட்டு, ஆண்ட்ரே எபிமிட்ச் திரும்பவும் மேசையில் அமர்ந்து, வாசிக்க ஆரம்பித்தார். மாலை நேரத்தின் அமைதியும், அதன் பின்னான இரவின் அமைதியும் எந்த ஒரு சத்தத்தாலும் உடைக்கப்படவில்லை. மருத்துவர் புத்தகத்தை வைத்து யோசித்துக் கொண்டிருப்பதைக் காலமும் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. புத்தகங்களும், பச்சை நிற விளக்கின் நிழலையும் தவிர அங்கு எதுவும் இருப்பதுபோலத் தெரியவில்லை. மனித அறிவின் முன்னேற்றத்தை எண்ணிய மருத்துவரின், கடுமையான குடியானவனைப் போன்ற முகம் மெதுவாக மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் புன்னகையால் ஒளி பெற்றது. மனிதன் ஏன் நித்திய வாழ்வுடன் இருக்கவில்லை? என்று யோசித்தார்.
மூளையின் சிந்தனையும், அதன் வேலையும், பார்வை, பேச்சு, சுயஉணர்வு, மேதமை எல்லாம் மண்ணுக்குள் சென்று, பூமியின் மண்ணோடு மண்ணாகி குளிர்ந்து, பல லட்சக்கணக்கான வருடங்கள் எந்த அர்த்தமும், குறிக்கோளும் இல்லாமல் சூரியனைச் சுற்றி வரும் என்றால், அந்த மூளையால் என்ன பயன்? அதைச் செய்வதற்கு, எதற்காக மனிதனை ஒன்றுமில்லாததிலிருந்து கடவுள் போன்ற மேதைமையுடன் படைத்து, அதன் பின்னர், அதைக் கேலி செய்வதுபோல, அவனைக் களிமண்ணாக இயற்கை ஆக்கி விடுகிறது. பொருட்களின் தனிம மாற்றம்! ஆனால் நித்யவாழ்வுக்குப் பதிலாக மனதைத் தேற்றிக்கொள்ள என்ன மாதிரியான கோழைத்தனம்! இயற்கையில் நடைபெறும் இந்த யதேச்சையான மாற்றங்கள், முட்டாள்தனத்தைவிடக் கீழானவை. ஏனென்றால், முட்டாள்தனத்தில் மனிதனின் உணர்வும், உறுதியும் இருக்கிறது. இயற்கையின் மாற்றங்களில் ஒன்றுமே இருப்பதில்லை.
தன்னுடைய சுய மரியாதையை விட அதிகமாக மரணத்துக்குப் பயப்படும் மனிதன் தான், தனது உடல் கற்களிலும், புற்களிலும், தவளைகளிலும் வாழும் என்று நம்புவான். தனிம மாற்றத்தில் நித்திய வாழ்வை எண்ணி கொள்வது, நல்ல இசைக்கருவி உடைந்து, உபயோகமற்று போன பிறகு அதன் பெட்டிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஆருடம் கூறுவது போலாகும்.
மணி அடித்தவுடன், ஆண்ட்ரே எபிமிட்ச் தன்னுடைய நாற்காலியில் அமர்ந்துகொண்டும், கண்களை மூடிக்கொண்டும் சிறிது நேரம் சிந்திப்பார். அது வரை அவர் வாசித்திருந்தவற்றில் இருந்த அருமையான கருத்துகளின் யோசனையில் அவர் தனது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் நினைவுபடுத்திக் கொள்வார். கடந்த காலம் வெறுப்பால் நிறைந்தது – அதைப் பற்றி நினைக்காமல் இருப்பதுதான் நலம். நிகழ் காலமும் அப்படியே. பூமி சூரியனைச் சுற்றுவதைப்பற்றி அவரது சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும்போல, அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் கட்டடத்தில் மனிதர்கள் நோயாலும், உடல் அசுத்தத்தாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; யாரோ தூக்கம் வராமல், அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் பூச்சிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஒருவருக்குப் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லது அவரது கட்டு மிகவும் இறுக்கமாக இருப்பதாகக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை, ஒருவேளை நோயாளிகள், செவிலிகளுடன் சீட்டாடிக்கொண்டும், வோட்கா குடித்துக் கொண்டிருக்கலாம்.
வருடாந்திர எண்ணிக்கையின்படி, பன்னிரெண்டாயிரம் மக்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள். மொத்த மருத்துவமனையும் இருபது வருடங்களாகத் திருட்டிலும், அழுக்கிலும், பழிச்சொல்லிலும், மோசடி மருத்துவத்திலும் நின்று கொண்டிருப்பதுபோலவே இன்னமும் நின்று கொண்டிருக்கிறது. நெறியற்ற அந்த மருத்துவமனை அதில் இருப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு எதிரானது. வார்டு எண் 6-ல் இருக்கும் நோயாளிகளை எல்லாம் நிகிதா அடிப்பதும், மொய்செய்கா ஊருக்குள் ஒவ்வொரு நாளும் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதும் அவருக்குத் தெரியும்.
இன்னொருபுறம், கடந்த இருபத்தி ஐந்து வருடங்களில் மருத்துவத்தில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களையும் அவர் அறிந்திருந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, மருத்துவத்தை ரசவாதமும் மீமெய்யியலும் முந்திக்கொண்டும் சென்றுவிடும் என்று எதிர்பார்த்தார்; இப்போது அவர் இரவில் வாசிக்கும் மருத்துவத்தின் அறிவியல் அவரைத் தொட்டு, அவரது வியப்பை அதிகரித்து, அவரது உற்சாகத்தைக் கூட அதிகரித்தது. என்ன மாதிரியான அற்புதங்கள், என்ன மாதிரியான புரட்சி! கிருமிநாசினி உபயோகித்துச் செய்யும் அறுவை சிகிச்சைகள், முன்பு பெரும் மருத்துவரான பிரோகோவினால் நம்பிக்கை இல்லாமல் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளையும் செய்யச் சாத்தியப்படுத்தியது.
சாதாரண ஸிம்ஸ்டோவோ மருத்துவர்கள் கூட மூட்டு கால் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறார்கள்; வயிற்றில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே இறப்பில் முடிந்தது; கற்கள் பற்றிய சிகிச்சைகள் மிகவும் சாதாரணமாகிவிட்டது என்பதால் அதைப் பற்றி யாரும் எழுத கூடச் செய்வதில்லை. சிபிலிஸ் நோய்க்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. மரபுவழி கருதுகோள், அறிதுயில் சிகிச்சை, பாஸ்டர் மற்றும் கோச்சின் கண்டுபிடிப்புகள், புள்ளிவிவரம் சார்ந்த ஆரோக்கியம், நமது ஸிம்ஸ்டோவோ மருத்துவர்களின் அர்பணிப்பான வேலை!
மனநோய்கள் சிகிச்சையும் அதன் நவீன மனநோய்கள் பற்றிய வகைப்பாடு, கண்டறியும் முறைகள், சிகிச்சை முதலியவை சென்ற காலத்தோடு எண்ணிப் பார்க்கும்போது மலையைப்போல வளர்ந்துள்ளது. இப்போதெல்லாம் பைத்தியங்களின் தலையில் குளிர்ந்த நீரை ஊற்றுவதோ, அவர்களை எல்லாப்பக்கமும் மூடப்பட்ட அங்கிகளில் கட்டிப்போடுவதோ கிடையாது; அவர்கள் மனிதத் தன்மையுடன் நடத்தப்பட்டார்கள். செய்தித்தாள்களில் குறிப்பதுபோல அவர்களுக்கு நடன நிகழ்ச்சிகளும், கேளிக்கைகளும் நடத்தப்பட்டது. அன்றைய நவீன சூழலில், வார்டு எண் 6 போன்ற வெறுப்பை உண்டாக்கும் இடம் இருப்பது, ரயில் நிலையத்தில் இருந்து நூற்றைம்பது மைல் தொலைவில் இருக்கும் சிறிய நகரத்தில், அதன் மேயரும், நகர நிர்வாகக் குழுவும் படிக்காத அரைகுறை முட்டாள்களாக இருக்கும் இடத்தில், மருத்துவரை நிமித்தக்காரனாக நம்பும், வாயில் ஈயத்தைக் கரைத்து ஊற்றினாலும் அதை எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் இருக்கும் இடத்தில்தான் சாத்தியம் என்று ஆண்ட்ரே எபிலிமிட்ச் தெரிந்துதான் வைத்திருந்தார். வேறு எந்த இடத்திலும், பொதுமக்களும், செய்தித்தாள்களும் இது போன்ற இடங்களைத் துண்டுதுண்டாக உடைத்திருப்பார்கள்.
“ஆனால், அதனால் என்ன?” என்று ஆண்ட்ரே எபிமிட்ச் தனது கண்களைத் திறந்துகொண்டும், தனக்குத் தானே கேட்டுக் கொள்வார். “கிருமிநாசினிகள், கோச், பாஸ்டர் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் உண்மை சிறிதும் மாறவில்லை; நோயும், மரணமும் இன்னமும் அப்படியே இருக்கிறது. பைத்தியங்களுக்கு நடன நிகழ்ச்சிகளும், கேளிக்கைகளும் நடக்கின்றது. ஆனால், அவர்களை வெளியே விடுவதில்லை. எனவே எல்லாம் முட்டாள்தனம், ஆடம்பரம் மட்டுமே. உண்மையில் வியன்னாவில் இருக்கும் சிறந்த மருத்துவமனைக்கும், என்னுடைய மருத்துவமனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.” ஆனால் மனச்சோர்வும், பொறாமையைப் போன்ற உணர்வும் அவருக்கு ஏற்பட்டு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கவிடாது செய்தது.
ஒருவேளை களைப்பினால் இருக்கலாம். அவரது கையைப் புத்தகத்தில் வைத்து, இன்னொன்றைத் தனது முகத்தின் அடியில் வைத்து மென்மையாகச் செய்துவிட்டு, நினைத்தார்; “மனிதனின் உயிரை எடுக்கும் இடத்தில் வேலை செய்கிறேன். நான் ஏமாற்றும் மனிதர்களிடம் இருந்தே சம்பளம் வாங்குகிறேன். நான் நேர்மையாக இருப்பதில்லை, ஒன்றுமில்லாத நான், இப்போது நானுமே தவிர்க்கமுடியாத சமூகத் தீமையில் ஒரு பகுதியாக மாறிவிட்டேன்; எல்லா நகர அதிகாரிகளும் அப்படியே உயிரைப் பறிப்பவர்கள். ஒன்றும் செய்யாமல் இருப்பதற்குச் சம்பளம் வாங்குகிறார்கள்… ஆனால், என்னுடைய நேர்மையின்மைக்கு என்னைவிட, இந்தக் காலத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்… இன்னமும் இருநூறு வருடங்கள் கழித்து நான் பிறந்திருந்தால், வேறுமாதிரியாக இருந்திருப்பேன்…”
மூன்று மணி அடித்தபோது, விளக்கை அணைத்துவிட்டு, படுக்கை அறைக்குச் சென்றார்; அவருக்குத் தூக்கம் வரவில்லை.
(தொடரும்)