‘குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எதற்கு சாதி அடையாளம் கேட்கப்படுகிறது? இந்தியன் என்கிற அடையாளம் போதும். மதம் என்கிற பிரிவில் அந்தந்த மதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் போதும். சாதி ரீதியான அடையாளத்தை ஏன் குறிப்பிட வேண்டும்? இப்படி சாதியைப் பற்றி யாரும் உரையாடாமல் இருந்தாலே காலப்போக்கில் அது காணாமல் போய் விடும்.’
இப்படியொரு அருமையான கருத்தை சமீபத்தில் உதிர்த்திருப்பவர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார். ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தைப் பார்த்து விட்டு, திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுள் ஒருவர் என்கிற முறையில் படத்தைப் பாராட்டிப் பேசும்போது பத்திரிகையாளர்களிடம் அவர் சொன்னது இது. ‘எனில் ‘சின்னக்கவுண்டர்’ என்கிற தலைப்பில் படம் எடுத்தது நீங்கள்தானே?’ என்று பத்திரிகையாளர்களின் தரப்பிலிருந்து சரியான கேள்வி கேட்கப்பட்டது.
‘அந்தப் படத்தில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஹீரோவை ‘நல்லவர்’ என்றுதான் படம் முழுவதும் சித்திரித்திருக்கிறேன். யாரையும் கெட்டவராக காட்டவில்லை. மேலும் துணி துவைக்கும் தொழிலைச் செய்கிறவரை பிரதானப்படுத்தி காட்டியிருக்கிறேன்’ என்று சமாளிப்பாக பதில் சொல்கிறார் உதயகுமார்.
சாதியைப் பற்றி உரையாடாமல் இருந்தாலே, சாதி காணாமல் போய் விடும் என்கிற அசட்டுத்தனமான நம்பிக்கை, ‘சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்று விடும்’ என்கிற நகைச்சுவைக்கு இணையானது. சமீபத்தில் மட்டுமல்ல, ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த இசை வெளியீட்டு விழாவிலும் இதே புரிதலின்மையுடன்தான் ஆர்.வி. உதயகுமார் பேசியிருக்கிறார். இதெல்லாம் ஒரு உதாரணம்தான்.
சாதியைப் பற்றி பேசாதிருந்தால், அது ஒழிந்து விடுமா?
தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையாகத் தோன்றியிருக்கும் தலித் சினிமாக்கள் பற்றியும் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் பற்றியும், சில சக இயக்குநர்கள் எரிச்சலுடன் முனகத் துவங்கியிருக்கிறார்கள். ‘ஏன் சாதிய அரசியலைப் பற்றி திரைப்படத்தில் பேச வேண்டும்? இதனால் சர்ச்சைகள் மிகுந்து விரோதங்கள் இன்னமும் அதிகமாகும்’ என்பது அவர்களின் பார்வை. உடலின் ஒரு பாகம் சீர்கெட்டிருந்தால் அறுவை சிகிச்சையைப் பற்றித்தான் ஒரு நல்ல மருத்துவர் யோசிப்பாரே தவிர, அதை மூடி மறைத்துவிட்டால் அந்தப் புண் தன்னாலேயே சரியாகிவிடும் என்று நிச்சயம் பரிந்துரைக்க மாட்டார். ஒரு படைப்பின் அடிப்படையான நோக்கம் மற்றும் அதன் மையம் என்னவென்பதைப் பார்ப்பதுதான் அறிவுடைமை.
சினிமாவுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுல்ல, முற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த கணிசமான பார்வையாளர்களிடமிருந்தும் இது குறித்த ஆத்திரமான முணுமுணுப்புகளும் ஆட்சேபங்களும் எதிர்ப்புகளும் வருகின்றன. இவையெல்லாம் ஏன் நிகழ்கின்றன்?
தொண்ணூறுகளில், தமிழ் படைப்புலகில் ‘தலித் இலக்கியம்’ என்கிற வகைமையும் போக்கும் உருவானதைப் போலவே, இதற்கும் சில வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவிலும் தலித் விடுதலையை, வரலாற்றை, வாழ்வியலை, அரசியலைப் பேசும் சினிமாக்கள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. இது இடைநிலைச் சாதிகளின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உறுத்தலாக தோன்ற ஆரம்பித்திருக்கிறது. பிராமணிய மரபின் ஆதிக்கத்தை எதிர்த்து, அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும், அதிகாரப் பங்கீட்டிற்காகவும் பல்வகையான போராட்டங்களை நிகழ்த்திய ‘பிராமணரல்லாதவர்’ இயக்கம், சற்று முன்னேறிய பிறகு, தமக்குக் கீழேயுள்ள சமூகங்களை ஒடுக்குவதில் இன்னமும் அதே மூர்க்கத்தைக் காட்டுவது ஒரு விநோதமான சமூக முரண் மட்டுமல்ல, சமூக அநீதியும் ஆகும். தான் இன்னொருவருக்கு அடிமையாக இருந்தாலும், தான் அடக்கியாள ஒரு அடிமை இருந்தாக வேண்டும் என்கிற மனித மனம் சிந்திக்கிற சமத்துவமற்ற போக்கின் விளைவு இது.
நந்தன் கதைகள் – சமரசம் மற்றும் அரசியல் தந்திரம்
சினிமா என்கிற நுட்பம் தமிழில் அறிமுகமானபோது அது பெரும்பாலும் பிராமணர்கள் மற்றும் இடைநிலைச் சாதியினரின் கையில் இருந்தது. தமிழின் முதல் மௌனத் திரைப்படமான ‘கீசக வதத்தை’ இயக்கியவர், ஆர்.நடராஜ முதலியார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த கே.சுப்பிரமணியம், ‘தமிழ் சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் புராண, இதிகாச, மாயாஜாலப் படங்கள் உருவாக்கப்பட்டன. சுதந்திரப் போராட்டக்காலம் என்பதால் தேசப் பக்தியை வளர்க்கும் படங்களும் அதன் ஊடே சமூக சீர்த்திருத்த அம்சங்களும் கலந்திருந்தன. தீண்டாமை, விதவை மறுமணம், குடியின் தீமை உள்ளிட்ட முற்போக்கு விஷயங்களை இவை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன.
இந்தத் திரைப்படங்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பற்றி கரிசனத்துடன் உரையாடினாலும், அந்த மக்கள் திருத்தப்பட்டு அல்லது சுத்திகரிக்கப்பட்டு ‘மேல் நிலையாக்கம்’ செய்யப்பட வேண்டியவர்களாக சித்திரிக்கப்பட்டனர் என்பதுதான் கசப்பான முரண். இதற்கு சிறந்த உதாரணம் ‘நந்தனார்’ திரைப்படம்.
சிறந்த சிவபக்தரான நந்தன், புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவனின் மீது இவர் மனமுருக பாடியதைக் கேட்டு சிவனை தரிசிக்க நந்தியே விலகி நின்று வழிவிட்டதாக சொல்லப்படுகிறது. தில்லை தரிசனம் செய்ய வேண்டும் என்பது இவரது வாழ்நாள் கனவு. ஆனால் வேதியரிடம் பண்ணை அடிமையாக இருக்கும் நந்தனுக்கு அது எளிதில் சாத்தியப்படுவதில்லை. சிவபக்தி காரணமாக நந்தனின் புகழ் பெருகுவதைக் கண்டு வேதியருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. சிதம்பரம் செல்ல விடாதவாறு முட்டுக்கட்டைகளை இடுகிறார். ‘40 ஏக்கர் நிலத்தை ஒரே இரவில் பயிரிட்ட பின்னர் சிதம்பரம் செல்லலாம்’ என்று செயல்படுத்தவே முடியாத பணியை வேதியர் கட்டளையிட, நடராஜனின் புகழ் பாடிக்கொண்டே வேலை செய்து மயக்கமடைகிறார் நந்தன். சிவபெருமான் வந்து அந்தப் பணியைச் செய்து முடிக்க, ஒரே இரவில் 40 ஏக்கர் நிலமும் பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டு வேதியரும் கிராம மக்களும் திகைத்துப் போகிறார்கள். நந்தனின் காலில் விழுந்து கதறும் வேதியர் சிதம்பரம் செல்ல அனுமதி தருகிறார்.
ஆனால் நந்தன் தீண்டத்தகாதவர் என்பதால் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்படுகிறார். பூசாரியின் கனவில் தோன்றும் சிவன், நந்தனை கோயிலுக்குள் அழைத்து வருமாறு கூற, அவர் நுழையாதவாறு சில பிராமணர்கள் தடுக்கிறார்கள். பின்னர் நந்தன் தனது பரிபூரண நிலையை அழிப்பதற்காக நெருப்பு வழியாக செல்லும் தீ சடங்கை செய்ய முடிவு செய்கிறார். புனித நெருப்பு தயாரிக்கப்பட்டு, நந்தன் அதனை சுற்றிச் செல்கிறார். ஒரு புதிய உடலுடன் நெருப்பிலிருந்து வெளியேறுகிறார். புனித சாம்பல் பூசப்பட்டு, அவரை கோயிலுக்குள் பூசாரி அழைத்துச் செல்கிறார். பின்னர் மறைந்து இறைவனுடன் ஐக்கியமாகிறார். நந்தன் கொண்டிருந்த உண்மையான சிவபக்தி காரணமாக ‘திருநாளைப் போவார் நாயனார்’ என்கிற பெயரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிறார். இதுதான் நந்தனின் சரித்திரம். ‘உடம்புக்கு உயர்வு, தாழ்வு உண்டு, ஆன்மாவிற்கு இல்லை’ என்பது சைவக் கருத்து.
சிறந்த சிவபக்தராக இருந்தாலும் பிறவி இழிநிலையை நெருப்பில் கரைத்து புனித உடம்புடன் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே நந்தனாரால் ஆலயத்திற்குள் செல்ல முடிகிறது. இது போன்ற கதைகளும், திரைப்படங்களும் தாழ்த்தப்பட்டோரைப் பற்றி பேசினாலும் அவர்களின் உண்மையான அரசியல் விடுதலையைப் பற்றிய அக்கறையுடன் பேசவில்லை. மாறாக முற்பட்ட சாதியரின் கருணையாலும் சீர்திருத்தத்தாலும் மேல் நோக்கி உயர்ந்து அதனுடன் ஐக்கியமானால்தான் உயர்வு சாத்தியம் என்கிற ‘சுத்திகரிக்கப்பட்ட’ அரசியலைத்தான் முன்வைக்கிறது. தீண்டத்தகாதவர்களை ‘கடவுளின் குழந்தைகள்’ என்கிற பொருள்வரும்படியாக ‘ஹரிஜன்’ என்கிற அரசியல் சொல்லை காந்தி உருவாக்கினார். தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலிருந்து வெளியேற விடாமல் செய்யும் தந்திரமாக இதைப் பார்த்த அம்பேத்கர், ‘ஹரிஜன்’ என்கிற சொல்லை ஏற்க மறுத்தார். ‘தலித்’ என்கிற சொற்பிரயோகத்தை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
‘தேவர் மகன்களை விடவும் ‘சின்னக் கவுண்டர்கள்’ ஆபத்தானவர்கள்
பொ.ஆ பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் இந்திய வருகை துவங்கியது. மதமாற்றம்தான் அவர்களின் பிரதான இலக்கு. முற்பட்ட சாதிகளால் பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த மக்களை, கல்வி, மருத்துவம், உணவு போன்ற அடிப்படை வசதிகளைத் தந்து கிறிஸ்துவ மதத்திற்கு ஈர்ப்பது ஐரோப்பியர்களுக்கு ஓர் எளிதான வழியாக இருந்தது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பிரிந்து போனால், அது இந்து மதத்தினரின் பெரும்பான்மை பலத்தைக் குறைத்து விடும் என்று அச்சப்பட்ட முற்பட்ட சாதிய சமூகம், தாழ்த்தப்பட்டவர்களையும் பிரதானப்படுத்தி கதையாடல்களை உருவாக்கின. ‘பள்ளு இலக்கியம்’ என்கிற தமிழ் சிற்றிலக்கியத்தை இந்த வகையில் சொல்லலாம். வேளாண்மை குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை இவை. இவை உருவாக்கப்பட்டது, தாழ்த்தப்பட்டவர்களின் மீதான அக்கறையினால் அல்ல. அவர்களை இந்து மதத்திலிருந்து வெளியேறாதவாறு தடுக்கும் சமரசப் போக்கு மற்றும் அரசியல் தந்திரம் ஆகும்.
நந்தன் கதைகளும், காந்தி உருவாக்கிய ‘ஹரிஜன்’ என்கிற சொல்லை அம்பேத்கர் ஏற்க மறுத்ததையும் இந்தப் போக்கின் தொடர்ச்சி எனலாம். மறுபடியும் ஆர்.வி. உதயகுமாரின் கருத்திற்கே திரும்பி வருவோம். தமிழில் உருவான சாதிய சினிமாக்கள் பற்றி பேசும் போதெல்லாம் ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்கள் ஆழமான, உக்கிரமான விமர்சனத்திற்கு ஆளாகும். ஆனால் உதயகுமார் உருவாக்கிய திரைப்படங்கள், தலைப்புகளை மட்டும் சுட்டிக் காட்டுவதோடு கடந்து விடும். ஆனால் ‘தேவர் மகன்’ போன்ற படங்களை விடவும் ‘சின்னக் கவுண்டர்’ போன்ற படங்கள் அதிக ஆபத்தைக் கொண்டவை. அது எப்படி?
(தொடர்ந்து பேசுவோம்)