சாதிய சினிமாக்கள் என்னும் சர்ச்சையில் தொடர்ந்து உரையாடப்படும் ‘தேவர் மகன்’ போன்ற படங்களை விடவும் தலைப்பை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டுக் கடந்து செல்லப்படும் ‘சின்னக்கவுண்டர்’ போன்ற படங்கள் அதிக ஆபத்தானவை. எப்படி என்று பார்ப்போம்.
இந்தப் படம் தமிழ்ச் சினிமாவில் சாதியப் பெருமிதத்தை உயர்த்திப் பேசியது; அதன் மூலம் சம்பந்தப்பட்ட சமூகத்தின் மக்களுக்கு தன்னிச்சையான ஊக்கத்தை அளித்தது; அவர்கள் தற்பெருமையை இன்னமும் உற்சாகமாகப் பேசக் காரணமாக இருந்தது; சாதியக் கலவரங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது என்று விமர்சிக்கப்படும் திரைப்படங்களின் வரிசையில் ‘தேவர் மகன்’ தொடர்ந்து சுட்டிக் காட்டப்படுகிறது. இது ஒருவகையில் தவறான புரிதல். ஒரு படத்தின் நுண்மையான சித்தரிப்புகளைவிடவும் அந்தத் திரைப்படத்தின் மையம் என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
‘தேவர் மகன்’ திரைப்படம் சாதியத்துக்கு ஆதரவாக உரையாடுகிறதா?
‘தேவர் மகன்’ திரைப்படத்தில் ‘பெரிய தேவர்’ பாத்திரத்தை ஏற்றிருந்தவர் சிவாஜி கணேசன். தனது சாதி குறித்த பெருமை இவரிடம் இருந்தாலும் ஊர் மக்களிடம் பாரபட்சம் பார்க்காதவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் இடையூறு நேரக்கூடாது என்று எண்ணுபவர். ஆனால் சின்னத் தேவரான காகா ராதாகிருஷ்ணன் இதற்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர். பெரிய தேவரின் மகன் சக்திவேல், முற்போக்கான எண்ணம் கொண்டவன்; நவீன வாழ்க்கையைப் பின்பற்ற முனைபவன். சின்னத் தேவரின் மகன் மாயத் தேவன். தந்தையின் அப்பட்டமான நகலாக விளங்குபவன். சொத்து, உறவுச்சிக்கல் தகராறு காரணமாக பங்காளிச் சண்டை வெடிக்கிறது. இவர்களுக்கு இடையே நிகழும் சண்டை காரணமாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். சக்திவேல் இதனால் மனம் உடைந்து போகிறான்.
பெரிய தேவரின் மறைவுக்குப் பிறகு சக்திவேல் அந்த இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தனது வெளிநாட்டுக் கனவைத் துறந்துவிட்டு அந்த இடத்தில் அமர்கிறான். மாயத்தேவனுக்கும் இவனுக்கும் இடையில் தொடர்ச்சியாக நிகழும் சண்டையின் உச்சத்தில் அவனுடைய தலையைக் கொய்துவிடுகிறான் ‘இந்தச் சண்டையெல்லாம் வேணாம்டா. இத்தோட போதும்டா… புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா’ என்று மக்களிடம் அரற்றிக் கொண்டே சிறைக்குச் செல்கிறான்.
‘தேவர் மகன்’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த மையமும் செய்தியும் சாதியத்துக்கு எதிராகத்தான் உரையாடுகிறது. அசட்டுத்தனமான சாதியப் பெருமிதங்களும் அதனால் நிகழும் வன்முறைகளும் கல்வியறிவு இல்லாமையும் ஒரு பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன என்கிற செய்திதான் சக்திவேலின் மூலமாகத் தொடர்ந்து, அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் இந்தத் திரைப்படம் எதனால் விமர்சிக்கப்படுகிறது?
ஒரு படைப்பின் ஆதாரமான மையம்தான் முக்கியமானது
ஒரு காலக்கட்டத்திய தமிழ் சினிமாக்களில் நாயகனின் பின்னணியோ சாதியோ துலக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருக்காது. பொத்தாம் பொதுவான சில அடையாளங்களாகவும் யூகிக்கும்படியான மங்கலாகவும்தான் இருக்கும். ஆனால் இயக்குநர்கள் கதை சொல்லும் முறையில் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட ஆரம்பித்த போது நம்பகத்தன்மைக்காக நிறைய சிரத்தை காட்ட ஆரம்பித்தார்கள். ஒரு கதையின் சித்தரிப்புகளில் நம்பகத்தன்மையும் நுண்மைகளும் கூடினால்தான் பார்வையாளனால் அதில் மனம் ஒன்ற முடியும். அந்தப் படைப்பின் சிறப்பும் கூடும்.
எனவே பாத்திரங்களின் வடிவமைப்பு, பின்னணி போன்ற விஷயங்களில் கூர்மைகள் உருவாக்கப்பட்டன. நாயகன் சார்ந்திருக்கும் சமூகம், அதன் சடங்குகள், வரலாற்று அடையாளங்கள், வழக்காறுகள் போன்றவை நுட்பமாகச் சித்தரிக்கப்பட ஆரம்பித்தன. ஊரின் பெரிய மனிதரைக் கூத்துப் பாடகர்கள் பெருமைப்படுத்திப் பாடுவது ஒரு வழக்கம். அந்த வகையில் பெரிய தேவரின் சமூகத்தைப் பெருமைப்படுத்துவதுபோல ‘போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ என்கிற பாடல் உருவாக்கப்பட்டிருக்கும். பெரிய தேவர் அடிப்படையில் நல்லவராக இருந்தாலும் அவர் சார்ந்திருக்கும் சாதி குறித்த பெருமையை உடையவர். அவர் இந்தப் பாடலைக் கேட்டு பெருமிதப்படுவதுபோலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இது போன்ற சித்தரிப்புகள் ஒரு படைப்பின் கட்டுமான பாகங்கள் போலத்தான். அந்தப் படத்தின் ஆதாரமான செய்தி என்னவென்று பார்த்தால் அது சாதியத்துக்கு எதிரான உரையாடலாகத்தான் அமைந்திருக்கிறது. அதனால்தான் படமும் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட பாடலின் வரிகளை, படத்தின் சில வசனங்களை தனியாகப் பிடுங்கியெடுத்து தங்களுக்குச் சௌகரியமான வகையில் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் நடைமுறையில் பயன்படுத்திக் கொண்டபோதுதான் பிரச்னை துவங்கியது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சீண்டுவதற்காக இந்தப் பாடலைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் படம் சொல்லும் ஆதாரச் செய்தியைக் காற்றில் பறக்கவிட்டனர். இந்தப் பாடலின் வரிகள், சில சாதிய சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக அமைந்ததென்பது துரதிர்ஷ்டமான விஷயம்தான். நமக்கு ஒரு திரைப்படத்தை எவ்வாறு அணுகுவது என்கிற பயிற்சி இல்லை என்பதுதான் காரணம்.
ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்
என்றாலும் ‘தேவர் மகன்’ திரைப்படம் ஏன் விமர்சிக்கப்பட்டது என்றால் அதற்குரிய நியாயமான காரணங்கள் சிலவும் உண்டு. தமிழ் சினிமாவில் தலித் சமூகம் குறித்தான சித்தரிப்பு எப்படி அமைந்தது என்பதில்தான் இந்தத் தொடரே துவங்கியது. அந்த வகையில் ‘தேவர் மகனில்’ தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எவ்வாறு சித்தரிக்கப்பட்டனர் என்பதைக் கவனிப்பது முக்கியமானது. தமிழ் சினிமா அதுவரை காட்டிய போக்கிலிருந்து ‘தேவர் மகனும்’ விலகவில்லை. இதில் முற்பட்ட சாதியினர் மட்டுமே பிரதான பாத்திரங்களில் இடம் பெற்றார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வழக்கம் போல உதிரியான பாத்திரங்களில் ஓரமாக இருந்தார்கள். ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு நபர்களுக்குள் நிகழும் பங்காளிச் சண்டைதான் பிரதானப்பட்டிருந்தது. அடித்தட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக இவர்களை அண்டியிருப்பதாகவும், தகராறு ஏற்பட்டால் ‘அய்யா எங்களை காப்பாத்துங்கய்யா’ என்று கூட்டமாக வந்து காலில் விழுந்து சரண் அடைவதாகவும் காட்சிகள் இருந்தன. இந்த நோக்கில் பார்த்தால் அதுவரையான தேய்வழக்கு சித்தரிப்புகளில் இருந்து ‘தேவர் மகனும்’ பெரிதும் விலகவில்லை.
இதில் ‘இசக்கி’ என்னும் பாத்திரம் ஒன்றுள்ளது. வடிவேலு தன் ஆரம்ப காலக்கட்டத்தில் நடித்த படம். அவருடைய பங்களிப்பும் சிறப்பாகப் பேசப்பட்டது. சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் கோயில் கதவை உடைத்தால் பிரச்னை வந்து சேரும் என்று எச்சரித்தும், சக்திவேல் வற்புறுத்துவதால் அதைச் செய்யத் துணிகிறான் இசக்கி. தொடரும் சர்ச்சை காரணமாக அவனுடைய கை வெட்டப்படுகிறது. ஒரு அடிமையின் மனநிலையில் அதைக்கூட அவன் பெருமிதமாகவே சக்திவேலிடம் சொல்கிறான். ஆண்டைக்குத் தரப்பட வேண்டிய பலியாக, தியாகமாக இதை முன்வைக்கிறான்.
‘தேவர் மகன்’ திரைப்படத்தின் மையம் சாதியத்துக்கு எதிராக உரையாடினாலும் முற்பட்ட சாதியைச் சேர்ந்த இரு பெரிய தலைக்கட்டுகளுக்கு இடையே நிகழும் போராகத்தான் காட்சிகள் பயணிக்கின்றன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்காக, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஹீரோதான் போராடுகிறான். இதற்கு மாறாக, அவர்களே ஒன்று திரண்டு ஏன் போராடுவதில்லை? ஏன் அவர்களில் இருந்து ஒரு நாயகன் உருவாவதாகச் சித்தரிக்கப்படவில்லை? ‘தேவர் மகன்’ திரைப்படம் ஏன் மாயத்தேவனுக்கும் இசக்கிக்குமான போராட்டத்தின் மையமாக இருந்திருக்கக்கூடாது? இது போன்ற கேள்விகள் தேவர் மகன் தொடர்பாக எழுவது அவசியமானது.
தேவர் காலடி மண்ணை விடவும் எஜமான் காலடி மண் விஷமமானது
இப்போது ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘சின்னக்கவுண்டர்’ வகையறா திரைப்படங்களுக்கு வருவோம். இதிலும் ‘பெரிய தேவர்கள்’தான் ஹீரோ. ஆனால் சக்திவேல்கள் இருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியின் துல்லியமான அடையாளத்தோடு ஊரின் தலைவராக இருக்கும் ஹீரோ மிக மிக நல்லவராக இருப்பார். அனைத்து சமூகங்களையும் அரவணைத்துச் செல்கிறவராக இருப்பார். ‘தேவர் மகனைப்’ போலவே ‘சின்னக்கவுண்டரில்’ நிகழ்வதும் பங்காளிச் சண்டைதான். சின்னக்கவுண்டருக்கு எதிராக இருப்பவர், அதே சமூகத்தைச் சேர்ந்த சர்க்கரை கவுண்டர். இதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மக்கள் ‘அய்யா.. எங்களைக் காப்பாத்துங்கய்யா’ என்கிற அளவில்தான் காட்டப்படுவார்கள். அவர்களுக்கு அபயமும் வரமும் தரும் கடவுளின் பாத்திரத்துக்கு நிகராகவே ஹீரோ காட்டப்படுவார்.
தேவர் மகன் இசக்கியைப் போன்று சின்னக்கவுண்டரில் ‘வெள்ளை’ என்கிற பாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருப்பார். துணி துவைக்கும் தொழிலாளி. சின்னக் கவுண்டருக்கு விசுவாசமான நபராக இருப்பார். சின்னக்கவுண்டர் ஒட்டுமொத்த ஊராரின் அவப்பழி்க்கு ஆளாகும் சூழல் நேரும் போது இவர் மட்டும் விசுவாசத்தைக் கைவிடமாட்டார். ‘இனிமே உங்க துணிகளைத் துவைக்கமாட்டேன்’ என்று ஊரையே ஒதுக்கி விலகும் வகையில் இவரது பாத்திரப்படைப்பு இருக்கும்.
ஆனால் தேவர் மகனுக்கும் சின்னக் கவுண்டருக்கும் இடையே உள்ள ஆதாரமான வித்தியாசம் என்னவெனில், முந்தைய படைப்பில் சாதியப் பெருமைக்கு எதிரான உரையாடல்கள் தொடர்ந்து இருக்கும். மிக முக்கியமான அதன் மையம் சாதியத்துக்கு எதிரானது. ஆனால் சின்னக்கவுண்டர் போன்ற படங்களில் சாதியப் பெருமையை ஹீரோவின் வழியாக நிலைநாட்டுவதோடு படம் நின்றுவிடும்.
ஆர்.வி. உதயகுமார் இயக்கிய ‘எஜமான்’ என்கிற திரைப்படமும் இதே வகையறாதான். அதிலும் வில்லன் இதே சமூகத்தைச் சார்ந்தவராகத்தான் இருப்பார். தப்பித்தவறி கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்காது. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ என்று ஹீரோவை அடித்தட்டு மக்கள் பெருமைப்படுத்திப் பாடுவதாகப் பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆண்டை – அடிமை கலாசாரத்தை உறுதிப்படுத்தும் ஆபத்தை இவை கொண்டிருக்கும். சாதியப்பெருமிதங்களை மிக நேரடியாக நிலைநிறுத்துவதாக அமைந்திருக்கும்.
ஆனால் தேவர் மகன் போன்ற திரைப்படங்கள் சந்தித்த எதிர்ப்புகளை, விமர்சனங்களை இவ்வகையான திரைப்படங்கள் எதிர்கொள்ளவில்லை. இத்தனைக்கும் அதிக ஆபத்தான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பது இவ்வகையான திரைப்படங்கள்தான். ஏனெனில் சாதியப் பெருமிதங்களை ஹீரோவின் வழியாக இவை இயல்பாக்கும் விஷமத்தைச் செய்கின்றன.
(தொடர்ந்து பேசுவோம்)