‘இந்தியாவில் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருப்பது, அவர் செய்யும் தொழிலால் அல்ல; அவர் தூய்மைப் பணியைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், தனது பிறப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளராகவே இருக்கிறார்’ – பி.ஆர்.அம்பேத்கர்.
2022-ல் வெளியான ‘விட்னஸ்’ என்கிற தமிழ்த் திரைப்படத்தின் கருப்பொருள், இந்த மேற்கோளையொட்டித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதி என்பது உருவாவதற்கு, ஒருவர் செய்யும் தொழில்தான் துவக்கத்தில் பிரதான காரணியாக இருந்தது. அக்காலக்கட்டத்தில் தொழில் வாரியாகவே பிரிவுகள் இருந்தன. தீண்டாமை என்பது இல்லை. அதன் பிறகு அவற்றில் உயர்வு தாழ்வு தோன்றி சாதி என்பது இறுக்கமான அமைப்பாக மாறியது. ஆனால் இன்றைக்குக் குலத்தொழில் என்பது பெரிதும் இல்லை. பின்தங்கியிருந்த பெரும்பாலான சமூகங்கள் கல்வி கற்று முன்னேறி தங்களின் பரம்பரைத் தொழிலை விட்டு விலகி வெவ்வேறு பணிகளுக்குப் பரவிவிட்டார்கள்.
ஆனால் நாகரிகம் நவீனமடைந்த இந்தக் காலத்தில் கூட ‘மலக்குழிகளை சுத்தப்படுத்துவது, அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடைக் குழிக்குள் இறங்குவது, சாலைகளில் குப்பை வாருவது என்று அத்தனை விதமான தூய்மைப்பணிகளையும் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள்தான் தொடர்ந்து செய்து வருகின்றன. இதுவொரு நடைமுறை அவலம். அது மட்டுமல்லாமல், அந்தச் சமூகத்தினர் மட்டுமே இந்தப் பணிகளைச் செய்யவேண்டும் என்று மையச்சமூகம் எதிர்பார்க்கிறது. சாதிய ரீதியிலான இந்த அடையாளச் சுமை, அவர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து சுமத்தப்படுவது கூடுதல் அவலம்.
இப்படியொரு அடையாள அரசியல் காரணமாக சாக்கடைக் குழியினுள் இறங்கி பணி செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஓர் இளைஞன் மரணமடைகிறான். இந்த பரிதாபமான கதையை இந்தத் திரைப்படம் மிக வலுவான அரசியல் தொனியுடனும் உணர்வுபூர்வமாகவும் சித்திரிக்கிறது.
தொடரும் மலக்குழி மரணங்கள்
மனிதக்கழிவை அகற்ற மனிதர்களைப் பணியமர்த்த தடை செய்வதற்கான சட்டம் 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. கழிவுநீர்த் தொட்டிகள் போன்றவற்றை எந்தவிதப் பாதுகாப்புமின்றிச் சுத்தம் செய்ய மனிதர்களைப் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டது. என்றாலும் இந்தச் சட்டம் இன்றளவும் எழுத்தளவில் மட்டும்தான் இருக்கிறது. நடைமுறையில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படவில்லை. கழிவுநீர்த்தொட்டியில் இறங்கி விஷவாயு தாக்குவதால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த பார்வதி, சாலையோர குப்பைகளை கூட்டி வாரும் தூய்மைப் பணியாளராக இருக்கிறார். கணவர் இல்லாத நிலையில் தனது ஒரே மகனைச் சிரமப்பட்டுக் கல்லூரியில் படிக்க வைக்கிறார். சமூகமே அருவருக்கும் தொழிலில் இருந்து தங்களின் பிள்ளைகளாவது விடுபட்டு கல்வி கற்று முன்னேறட்டும் என்று அடித்தட்டு மக்கள் கொண்டிருக்கிற அதே கனவும் லட்சியமும் பார்வதிக்குள்ளும் இருக்கிறது.
ஒருநாள், தனது மகன் இறந்துவிட்டான் என்கிற அதிர்ச்சியான செய்தி பார்வதிக்கு கிடைக்கிறது. இறப்பிற்கான காரணம்? குடிபோதையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கியவன், விஷவாயு தாக்கி இறந்துவிட்டான் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. பார்வதியால் இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கல்லூரிக்குச் செல்லும் மகன், சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. மேலும் அவனுக்குக் குடிப்பழக்கமும் இல்லை.
இளைஞனை சட்டவிரோதமாகப் பணியமர்த்திய குடியிருப்பு நலச்சங்கம், நகராட்சி ஒப்பந்ததாரர், அரசு அதிகாரிகள், காவல்துறை ஆகிய அதிகார சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இளைஞனின் மரணத்துக்கான உண்மைக் காரணத்தை மூடி மறைக்க முயற்சி செய்கின்றன. நீதிமன்றத்தை நாடும் பார்வதிக்கும் அவருக்கு உதவி செய்ய முன்வருபவர்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் தருகின்றன. இறுதியில் என்னவாயிற்று? பார்வதிக்கு நீதி கிடைத்ததா? மிகையான நாடகத்தன்மை ஏதுமில்லாமல் யதார்த்தமான ஆனால் கசப்பான முடிவோடு படம் நிறைவுறுகிறது.
அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த அலட்சியம்
பார்வதியாக தனது மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார் ரோஹிணி. ஒரு தூய்மைப் பணியாளரின் பாத்திரத்தில் சரியாகப் பொருந்தியிருக்கிறார். தன் மகனாவது கல்லூரிக்குச் சென்று நல்லதொரு பணியைச் செய்ய வேண்டும் என்கிற கனவும் ஏக்கமும் இவரது கண்களில் மிதந்து கொண்டிருக்கிறது. அந்தக் கனவு முற்றிலும் அழிந்து மகனின் மரணச் செய்தியை அறியும்போது ஏற்படும் பதற்றம், அதற்கான காரணத்தைப் பிடிவாதத்துடன் துரத்திச் செல்லும் உறுதி, ‘என் மகன் என் கிட்ட பேசற மாதிரியே இருக்கு’ என்று பிதற்றும் துயரம், நீதிமன்றத்தில் மகனின் மரணத்தைப் பற்றிய விசாரணையைக் கேட்க நேரும் போதெல்லாம் எழுந்து வெளியே செல்லும் சோகம்… என்று ஓர் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த தாயின் பரிதவிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதிகார சக்திகள் ஒன்றாக இணைந்து நின்றாலும், நீதிமன்றத்தில் உண்மையை வெளியே கொண்டுவர முயற்சி செய்யும் நேர்மையான வழக்கறிஞராக சண்முகராஜன் நன்கு நடித்திருக்கிறார். இளைஞனின் மரணத்தையொட்டி அரசு இயந்திரங்கள் இயங்குவதிலுள்ள அலட்சியம், ஊழல், பொறுப்பின்மை போன்ற விஷயங்களை தனது விசாரணையின் மூலம் வெளிக்கொணர்வது சிறப்பான காட்சிகளாக அமைந்திருக்கின்றன. ‘இந்த வழக்கு வெற்றி பெறுவது சிரமம்’ என்பதை அவரது உள்ளுணர்வு அறிந்திருந்தாலும் நீதிக்காக இறுதி வரை முட்டி மோதுவதின் மூலம் ஒரு நல்ல வழக்கறிஞரின் கடமையை நினைவுப்படுத்துகிறார்.
தனியாக வாழும் பெண்களின் சிக்கல்கள்
இத்திரைப்படத்தில் ரோஹிணிதான் பிரதான பாத்திரம் என்றாலும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் கேரக்ட்டரும் முக்கியமானது. இளைஞனின் மரணம் நிகழும் குடியிருப்பில் வசிக்கும் இவர், சக குடியிருப்புவாசிகள் உண்மையை மூடி மறைப்பதற்காக ஒன்று திரண்டு நிற்கும் போது, அந்த அநீதியை எதிர்த்துத் தனியாளாகப் போராடுகிறார். அதற்காக பல அவமதிப்புகளையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கிறார்.
மலக்குழி மரணம்தான் இந்தத் திரைப்படத்தின் மையம் என்றாலும் தனியாக வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இந்தப் படம் இன்னொரு இழையில் பேசுகிறது. மேற்பார்வையாளரின் அவமதிப்புகளையும் வசவுகளையும் தினம் தினம் எதிர்கொள்கிறார் தூய்மைப் பணியாளர் பார்வதி. தாங்க முடியாத ஒரு நாளில் சூப்பர்வைசரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இதனால் பணியிழப்பை எதிர்கொள்வதோடு அவருக்குச் சேரவேண்டிய பணமும் பணியனுபவமும் பறிபோகிறது.
அபார்ட்மெண்டில் தனியாளாக வசிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், உண்மையைத் தட்டிக் கேட்கும் ஒரே காரணத்துக்காக சக குடியிருப்புவாசிகளால் வெறுக்கப்படுகிறார். இளைஞனின் மரணத்துக்கான சாட்சியங்களை இவர் திரட்டித் தருவதால் மிரட்டலுக்கு ஆளாகிறார். தன்னுடைய பணியில் நேர்மையாக இருப்பதால் இவரும் பணியிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. துணிச்சலான பெண்மணியாக அறியப்பட்டாலும் உள்ளுக்குள் பதற்றமும் உளைச்சலும் கொண்டவராக இருக்கிறார். இதற்கு இவரது குடும்பப் பின்னணி காரணமாக இருக்கிறது.
அறிமுக இயக்குநரான தீபக், இந்தத் திரைப்படத்தை கோர்வையாகவும் நேர்மையாகவும் உருவாக்கியுள்ளார். ஆவணப்படத்தின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும் நீதியைப் பிடிவாதமாகத் துரத்தும் சாட்சிகள் வேகமாக நகர்கின்றன. அதற்காக செயற்கையான பரபரப்பை ஏற்படுத்தாமல், நீதிமன்றக் காட்சிகளின் வழியாக அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த அலட்சிய மனோபாவத்தையும் உயர்தட்டு மக்களின் சுயநலத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்ட வைக்கிறது. ‘ஆயிரம் ரூபா காசுக்கு ஆசைப்பட்டுத்தான் அவங்க இந்த வேலைக்கு வராங்க’ என்று பாதிக்கப்படும் சமூகத்தின் மீதே பழிபோடுகிறார் அபார்ட்மெண்ட் செக்ரட்டரி. ‘நீங்க லாரி மூலம் மெஷின் வரவழைச்சு சாக்கடையைச் சுத்தம் செஞ்சிருக்கலாம். பணத்தை மிச்சப்படுத்தத்தானே ஒரு பையனை உள்ளே இறக்கியிருக்கீங்க. ஆக… காசுக்கு ஆசைப்பட்டவங்க யாரு?‘ என்றொரு கேள்வியை முன்வைக்கிறார் வழக்கறிஞர். இம்மாதிரியான வசனங்கள் நீதிமன்றக் காட்சிகளை சுவாரசியமாக்கியிருக்கின்றன.
பாதுகாப்பில்லாத பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது எப்போது நிற்கும்?
நகராட்சி அதிகாரி, ஒப்பந்ததாரரைச் சுட்டிக்காட்டி பிரச்னையிலிருந்து நழுவ நினைக்கிறார். ஒப்பந்ததாரரோ, சப்-காண்டிராக்ட்டரை நோக்கிக் கை காட்டுகிறார். அவரோ தலைமறைவாக இருக்கிறார். இறந்து போன இளைஞன் குடிபோதை காரணமாகத்தான் சாக்கடைக் குழியில் இறங்கி இறந்துபோனான் என்று அரசு மருத்துவர் பொய் சாட்சி சொல்கிறார். வழக்கறிஞரின் திறமையான வாதம் மூலம் மருத்துவரின் குட்டு அம்பலமாகிறது. இறுதித் தீர்ப்பு வெளியாகும் காட்சி சுவாரசியமானது மட்டுமல்ல, நடைமுறை சார்ந்து கசப்பானதும் கூட. நீதிபதியின் இடத்தை அரசு அதிகாரிகள் பறித்துக்கொண்டு தங்களுக்கு சாதகமாக தாங்களே தீர்ப்பு எழுதிக்கொள்ளும் ‘கற்பனையான’ காட்சியோடு படம் நிறைகிறது. கற்பனைதான் என்றாலும் யதார்தத்தில் நிகழ்வது அதுவே. நீதியின் இடத்தை பொய்தான் பெரும்பாலும் அபகரித்துக்கொள்கிறது.
இடதுசாரி சக்திகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மக்களுக்கான பிரச்னைகளுக்கு முதலில் வந்து களத்தில் இறங்கி போராடுவது பெரும்பாலும் அவர்களே. அப்படியாக இதிலும் ஒரு நேர்மையான ‘தோழர்’ வருகிறார். தன்னுடைய குடும்பத்தை மறந்து, தனக்கான ஆபத்துக்களைப் புறக்கணித்து மக்கள் பிரச்னைகளில் தன்னை ஒப்படைத்துக்கொள்கிறார். ‘உனது மகனின் மரணத்துக்கான நீதிக்காக விடாமல் போராடுங்கள் தோழர். அது பல மலக்குழி மரணங்கள் நிகழாதவாறு ஒரு முன்னுதாரணமாக அமையலாம்’ என்று பார்வதிக்கு உபதேசம் செய்கிறார். இந்த வழக்கில் செயல்படாதவாறு இவரை அதிகார சக்திகள் சிறைக்கு அனுப்புகின்றன. அவரது குடும்பம் தத்தளிக்கிறது. என்றாலும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் அவரது நேர்மைதான், பார்வதியை உந்தித் தள்ளிக்கொண்டு செல்கிறது.
இந்தியா போன்ற வளரும் நாட்டில், பல துறைகளில் எத்தனையோ நவீன வசதிகள் வந்தவிட்டன. எத்தனையோ விஞ்ஞான சாதனைகள் நிகழ்கின்றன. ஆனால் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் பணிகளில் மனிதர்களையே பயன்படுத்தப்படும் அவல நிலை இன்னமும் நீடிக்கிறது. நீதிமன்றத்தின் கடுமையான தடை இருந்தாலும்கூட நடைமுறையில் அவை பின்பற்றப்படுவதில்லை. பாதுகாப்பில்லாத சூழலில் பணிபுரியக் கட்டாயப்படுத்தப்படும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து பலியாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நகரம் தூய்மையாக இருக்கவும், தொடர்ந்து இயங்கவும் அடித்தட்டு மக்களின் உழைப்பும் உயிரும் தொடர்ந்து சுரண்டப்படுகிறது. ஆனால் அவர்களின் இருப்பிடமோ நகரத்திற்கு வெளியே தூக்கி வீசப்படும் அவலத்தையும் இந்தப் படம் பேசுகிறது.
தொழிலும் சாதியும் இறுக்கமாக பிணைந்து அடித்தட்டு மக்களின் மீது சாதியச் சுமையாக நிற்கும் அவலத்தை நேர்மையான குரலில் பேசியிருக்கும் ‘விட்னஸ்’, ஒரு முக்கியமான சாதி எதிர்ப்புத் திரைப்படம்.
0