Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’

தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’

பெயர் அறியாதவர்

இந்தியாவில், 7.8 கோடி மக்கள் வசிப்பதற்கு வீடற்றவர்களாக இருக்கிறார்கள்; அதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் மேலாக இருக்கிறது என்கிற தகவல் இந்தத் திரைப்படத்தின் இறுதியில் வரும் டைட்டில் கார்டில் தெரிவிக்கப்படுகிறது. ‘பெயர் அறியாதவர்’ என்கிற தலைப்பிலான இந்த மலையாளத் திரைப்படம், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை இயல்பான தொனியில் பதிவு செய்திருக்கிறது. டாக்டர் பிஜ்ஜு இயக்கத்தில், 2015-ல் வெளிவந்த இந்தப் படம், சர்வதேச அளவில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.

மலையாள நகைச்சுவை நடிகராக அறியப்படும் சூரஜ் வெஞ்சரமூடு, தனது குணச்சித்திர நடிப்புக்காக, ‘சிறந்த நடிகருக்கான’ தேசிய விருதை இந்தப் படத்தின் மூலம் பெற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் என்கிற பிரிவிலும் தேசிய விருது கிடைத்தது.

உதிரி மனிதர்களின் அவலமான வாழ்க்கை

‘பெயர் அறியாதவர்’ என்கிற படத்தின் தலைப்புக்கு ஏற்ப, இதில் வரும் பிரதான பாத்திரத்துக்குப் பெயர் இல்லை. மனைவியை இழந்தவர். தனது ஒரே மகனை, பொருளாதார சிரமத்துக்கு இடையிலும் பாசமாக வளர்த்து வரும் தகப்பன். கொல்லம் முனிசிபல் கார்ப்பரேஷனில் துப்புரவுப் பணியாளராக இருப்பவர். அது தற்காலிகப் பணி மட்டுமே.

தற்காலிகப் பணியாக இருந்தாலும் அதை அர்ப்பண உணர்வுடன் செய்கிறார். பணி நேரத்தைத் தாண்டியும், குப்பைகளை எங்கு கண்டாலும் உடனே அப்புறப்படுத்துகிறார். மற்றவர்கள் அருவருப்புடன் கடந்துசெல்லும் போது சாலையில் கிடக்கும் பூனையின் சடலத்தை எடுத்து, குப்பைத் தொட்டியில் போடுகிறார். நீர்நிலையை அடைத்துக் கொண்டிருக்கும் பழைய துணிகளை எடுத்து வெளியில் போடுகிறார்.

அதிகாலையில் தந்தை பணிக்குச் செல்லும் போதெல்லாம் அவரின் கூடவே செல்வது மகனுக்கு விருப்பமான விஷயம். “ஏம்ப்பா.. இங்க எல்லாம் அவனைக் கூட்டிட்டு வரே?’ என்று சக பணியாளர்கள் தந்தையை அக்கறையுடன் ஆட்சேபிக்கிறார்கள். சிறுவனுக்கு அதெல்லாம் பிரச்னையில்லை. தந்தையுடன் ஒட்டிக் கொண்டு நடப்பதில்தான் அவனுக்கு இன்பம். விலை அதிகமான பொம்மையை வாங்க விருப்பம் என்றாலும் பொருளாதாரச் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்பவன். வானத்தை நோக்கி, இறந்து போன அம்மாவிடம் “நாங்க.. இன்னிக்கு எங்கல்லாம் போனோம் தெரியுமா’ என்று மனதோடு பேசிக் கொண்டிருப்பவன்.

ரயில் அடிக்கடி தடதடத்துச் செல்லும் தண்டவாளத்துக்கு அருகிலுள்ள வறுமையான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். அன்றாட மதுவுக்கு சம்பாதித்தவுடன் நிறைவு கொள்ளும் வொர்க் ஷாப் முதலாளி, ‘பிராக்டிஸ் பண்ணுங்கடா’ என்று தன்னிடம் பணிபுரிபவர்களைக் கடிந்து கொள்ளும் பேண்ட் மாஸ்டர், ‘அடியேய் கதவைத் திறடி’ என்று நள்ளிரவில் கத்திக் கொண்டே வந்து மனைவியை அடிக்கும் குடிகாரன், தொலைக்காட்சித் தொடரை தவற விட விரும்பாத இல்லத்தரசி என்று விதம் விதமான நபர்கள் சுற்றத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இணைப்பது ஒரே விஷயம்தான்: அது ஏழ்மை.

நகர வளர்ச்சிப் பணிக்காக அவர்கள் இருக்கும் குடிசைப்பகுதியை விட்டுச் செல்லுமாறு அரசாங்கம் அறிவுறுத்துகிறது. குப்பையைப் போலவே நகரத்துக்கு வெளியே அவர்களை அள்ளி வீசுகிறது. வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருந்தவன், அரசு ஏற்பாடு செய்யும் தற்காலிக வசிப்பிடத்துக்குக்கூட தகுதியில்லாமல் நடுத்தெருவில் நிற்கிறான். சக பணியாளர் உதவுவதால் இன்னொரு இடம், அப்போதைக்குத் தங்குவதற்குக் கிடைக்கிறது.

நகருக்கு வெளியே கொட்டப்படும் குப்பை காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இவனுடைய தற்காலிகப் பணி, பறிபோகிறது. தனக்கு ஆதரவாக இருக்கும் சக பணியாளரான சாமி என்பவரின் ஊருக்கு அவரோடு பயணப்படுகிறான். பழங்குடியினத்தவரான அவரது வீடு தொலை தூரத்தில் காட்டையொட்டி இருக்கிறது. அங்கு நிலவுரிமைக்கான போராட்டத்தை ஆதிவாசி மக்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தந்தையும் மகனும் சில நாட்களை அங்கு கடத்துகிறார்கள்.

போராட்டம் தீவிரமடையவே காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. வேடிக்கை பார்க்கச் சென்ற மகன் அதில் பலியாகும் பரிதாபத்தோடு படம் நிறைகிறது.

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற சூரஜ் வெஞ்சரமூடு

‘பெயர் அறியாதவராக’, சிறுவனின் தந்தையாக சூரஜ் வெஞ்சரமூடு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான விருது அவருக்குக் கிடைத்தது முற்றிலும் நியாயமே. நகைச்சுவை நடிகர்கள், சோகமான பாத்திரத்தை ஏற்றால் கூடுதலாக பிரகாசிப்பார்கள் என்பதற்கு நாகேஷ் முதல் பல உதாரணங்கள் இருக்கின்றன.
நகைச்சுவை நடிப்பில் சிறந்து விளங்கிய சூரஜ் வெஞ்சரமூடு, அதன் எதிர்முனையில் குணச்சித்திர நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். துயரத்தின் நிரந்தர சாயலை முகத்தில் தேக்கிக் கொண்டு விளிம்புநிலை மக்களின் பிரதியாகவே படம் முழுவதும் வலம் வருகிறார். மகனோடு இருக்கும் நேரங்களில் மட்டும்தான் இவரது முகத்தில் புன்னகை வருகிறது.

மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் கோவிந்தனின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. சினிமாத்தனமான சிறுவனாக அல்லாமல், நாம் அன்றாடம் பார்க்கும் ஓர் எளிய சிறுவனின் சித்திரத்தை அதன் வெள்ளந்தித்தனத்தோடு திரையில் பிரதிபலித்திருக்கிறான். வொர்க் ஷாப் உரிமையாளராக நெடுமுடி வேணு, பேண்ட் மாஸ்டராக சசி கலிங்கா, சாமியாக இந்திரன்ஸ் போன்ற நடிகர்கள் இந்தப் படத்தை உயிரோட்டமுள்ளதாக மாற்றியிருக்கிறார்கள்.

படத்தை இயக்கியிருக்கும் டாக்டர் பிஜ்ஜு அடிப்படையில் ஒரு ஹோமியோபதி மருத்துவர். சினிமாவின் மீதுள்ள விருப்பம் காரணமாக திரைத்துறைக்குள் வந்திருக்கிறார். சிறந்த இயக்குநராகவும் திரைக்கதையாசிரியராகவும் இருக்கும் இவரது படங்கள் சர்வதேச அரங்குகளில் பரவலான கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கின்றன.

‘பெயர் அறியாதவர்’ படத்தை ஆவண நாடகப் பாணியில் (docudrama) உருவாக்கியிருக்கிறார் பிஜ்ஜு. வீடற்ற மக்கள், சாலையோர வணிகர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளிகள், பழங்குடியின மக்கள் என்று பல்வேறு தரப்பு விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை, செயற்கையான ஆர்ப்பாட்டங்கள் இன்றி கலையமைதியுடனான காட்சிகளாக ஆக்கியிருக்கிறார்.

சாமியின் வீடு அழகான இயற்கையின் சூழலில் இருக்கிறது. அங்குள்ள நீர்நிலையில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் இருப்பதைக் கண்டு வெளியில் எடுத்துப் போடுகிறார். ‘நகரத்துல இருந்து வர்றவங்க பண்ணிட்டுப் போற அநியாயம் இது’ என்று அந்த ஊரைச் சேர்ந்தவர் சொல்கிறார்.

விளிம்புநிலைச் சமூகத்தினரின் பல்வேறு தரப்பு பிரச்னைகள்

தாயில்லாத சிறுவனை, பாசமும் அன்பும் கொண்டு பொத்திப் பொத்தி வளர்க்கும் ஒரு தகப்பனின் சித்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூரஜ் வெஞ்சரமூடு. வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவது, மகன் சாப்பிடாமல் மிச்சம் வைப்பது போன்ற கடினமான சூழல்களில், அதை ஒரு கொண்டாட்டத் தருணமாக ஆக்கி மகிழ்கிறார்.
இவர்களது வீடே ஒழுகும்போது ‘இந்த மழைல அவங்கள்லாம் எங்க படுப்பாங்க?’ என்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி கரிசனத்துடன் கேட்கிறான் சிறுவன். வடமாநில தொழிலாளர்களின் அவலமும் கூடவே சொல்லப்பட்டிருக்கிறது.

வறுமையான வீட்டுக்குள் தொட்டியில் மீன் வளர்ப்பதுதான் சிறுவனின் பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கோ கடலில் இருந்த மீன்கள், சிறிய தொட்டிக்குள் அடைக்கப்பட்டிருப்பதைப் போலவே விளிம்புநிலை மக்கள், நகரத்தின் மூலைகளில் ஒண்டிக் கொண்டிருப்பதைக் குறியீடாகச் சொல்வது போலவே இருக்கிறது.
பெரும்பான்மையான காட்சிகள் இயல்பாகப் பயணம் செய்தாலும் சில காட்சிகள் மட்டும் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. கட்டடப் பணிக்காக வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து லாரியில் அமர்ந்து செல்கிறார் தந்தை. அதே சமயத்தில் இன்னொரு லாரியில் எருமை மாடுகள் பயணப்படுவதும் ஒரே ஷாட்டில் காண்பிக்கப்படுகிறது. ஆனால் விளக்கப்படாமலேயே அந்த மக்களின் துயரம் நமக்குப் புரிந்து விடுகிறது என்பதால் அதைத் தவிர்த்திருக்கலாம்.

பழங்குடியின மக்கள் தங்களின் நிலத்துக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அதைப் பற்றி பேசவே அஞ்சுகிறார் சாமி. ஏனெனில் அவர் ஓர் அரசாங்கப் பணியாளர். ‘என் மகன் கம்யூனிஸ்ட்டு. அதான் ஆக்ரோஷமா இருக்கான்” என்று சொல்கிறார். இப்படியாக இயல்புத்தன்மையுடன் பயணிக்கும் பல காட்சிகள், இந்தப் படததை யதார்த்தத்துக்கு அருகில் இட்டுச் செல்கின்றன. பிரதமரின் வருகைக்காக சாலையோர வணிகர்கள் துரத்தப்படும் காட்சி அவல நகைச்சுவையுடன் இருக்கிறது.

துப்புரவு பணியாளரின் பெயரை நாம் அறிவோமோ?

எம்.ஜே.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளியின் பின்னணி இசையும் மிக இயல்பான தொனியில் இயங்குகின்றன. தங்களின் அடிப்படை உரிமைகளைக்கூடப் போராடிப் பெறுவது அல்லது பெற இயலாமல் போவதுதான் எளிய மக்களுக்கு எப்போதும் விதிக்கப்பட்டிருக்கிறது.
நகரத்திலுள்ள விளிம்புநிலை மக்கள் தங்களின் இருப்பிடத்துக்காகப் போராடுவதைப் போலவே, பழங்குடியின மக்கள் தங்களின் நிலவுரிமைக்காகவும் காட்டின் மீதான உரிமைக்காகவும் போராடுகின்றனர். அவர்கள் கடுமையாகப் போராடினாலும், சில உயிர்களை இழந்தாலும், மூர்க்கமான அரசு இயந்திரம் போராட்டங்களை எளிதாக நசுக்கிப்போட்டுவிடுகிறது. படத்தின் இறுதியில் பின்னிணைப்பாக காட்டப்படும் வீடியோக் காட்சிகளும் புள்ளிவிவரங்களும் மனதைப் பிசைகின்றன.

நகரத்து வீடுகளில் வந்து குப்பைகளை எடுத்துச் செல்லும் தூய்மைப் பணியாளரின் பெயரை நம்மில் பெரும்பாலோர் அறிவதில்லை. ‘குப்பைக்காரர்’ என்றோ ‘குப்பைக்காரன் வந்துட்டு போயிட்டானா?’ என்றோதான் அன்றாட உரையாடலில் பயன்படுத்துகிறோம். அவர்கள் செய்யும் பணியின் முக்கியத்துவம் பற்றி ஒரு வார்த்தைகூட பாராட்டிச் சொல்ல நமக்குத் தோன்றுவதில்லை.

உதிரி மனிதர்களாகவே தங்களின் வாழ்வைக் கழித்து மடியும் விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு ‘பெயர் அறியாதவர்’ என்கிற தலைப்பு மிகப் பொருத்தம்தான். எளிய மக்களின் பல்வேறு தரப்பு பிரச்னைகளை மிக இயல்பான தொனியிலும் அதே நேரத்தில் மனதில் அழுத்தமாகப் பதியும்விதத்திலும் சித்திரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘சிறந்த தலித் சினிமா’ வரிசையில் நிச்சயம் இணைக்கலாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *