இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் படிநிலைகளின் கொடூரத்தை துணிச்சலாகவும் யதார்த்தமாகவும் அம்பலப்படுத்தியிருக்கும் முக்கியமான திரைப்படம் Article 15. சாதியத்தோடு சமகால மதவாத அரசியலின் பல்வேறு கூறுகளையும் ஆபத்துகளையும் உறுத்தாமல் இணைத்திருப்பது இந்த இந்தி திரைப்படத்தை முக்கியமாக்குகிறது.
அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ‘பிரிவு 15’ என்ன சொல்கிறது? ‘மதம், சாதி, இனம், நிறம், பிறப்பிடம், பாலினம் போன்றவற்றின் காரணமாக அரசு எவரிடமும் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது’ என்கிறது.
1950, ஜனவரி 26 அன்று முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் குடியரசாகி ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் இன்னமும் புத்தகங்களில் மட்டுமே பத்திரமாக உள்ளன. அவை நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. இந்த உண்மையை இந்தத் திரைப்படம் கச்சிதமாகp பதிவு செய்துள்ளது. ‘அரசியல் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதை எரிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன்’ என்று அம்பேத்கர் சொன்னார். அந்தக் கோபத்தையும் இந்தத் திரைப்படம் நேர்மறையாகப் பதிவாக்கியுள்ளது.
இந்தியாவின் பிரதானமான நோய்மைக்கூறுகளுள் ஒன்று சாதியம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல இந்தியா முழுக்க சாதி, மத அரசியல் நீக்கமற நிறைந்துள்ளது. நகரங்களில் சற்று கண்ணுக்குத் தெரியாத கிருமி போல இருக்கும் இந்தக் கொடுமை, கிராமப்புறங்களில் அப்பட்டமான முறையில் முகத்தில் அறைவதாக இருக்கிறது. அப்படியொரு இந்தியக் கிராமத்தின் அசலான சித்திரத்தை இந்த திரைப்படம் வலுவாக வரைந்திருக்கிறது.
‘அவங்களை வெக்க வேண்டிய இடத்துலதான் வெக்கணும்’
டெல்லியில் உயர்கல்வியை முடித்திருக்கும் அயன் ரஞ்சன், ஐரோப்பிய வாசத்தால் அந்த மனநிலையில் வாழ்பவன். ‘அரசுப் பணியைச் செய்ய வேண்டும்’ என்கிற தந்தையின் வற்புறுத்தல் காரணமாக இந்தியக் காவல்துறையில் உதவி ஆணையராக (ACP) பதவியேற்கிறான்.
கிராமத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வரும் அயனுக்கு அங்குள்ள சாதியப் படிநிலைகளின் யதார்த்தங்களும் அவை சார்ந்த கொடுமைகளும் மெல்ல உறைக்க ஆரம்பிக்கின்றன. கடுமையான தாகமாக இருந்தாலும் கூட தாழ்த்தப்பட்ட சாதியினர் விற்கும் நீரை அருந்தாத, அவர்களின் நிழல் கூட மேலே படுவதை விரும்பாத இடைநிலைச்சாதிக்காரர், இவர்களை இணைத்து மலினமாக பார்க்கும் ஆதிக்கச் சாதிக்காரர், இவற்றின் உட்பிரிவுகளிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள் போன்றவை அயனை ஆச்சரியத்திலும் எரிச்சலிலும் ஆழ்த்துகிறது. ஆனால் அவனுடைய கோபத்தால் ஒரு உபயோகமும் இல்லை. கெட்டி தட்டிப் போன சாதியத்தை அவனால் துளி கூட அசைக்க முடியவில்லை.
‘அவங்களை வெக்க வேண்டிய இடத்துலதான் வெக்கணும்’ என்று ஆதிக்க சாதியினர் ஒருபுறம் கொக்கரிக்க, ‘என்ன சாமி… பண்றது… எங்க விதி’ என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதை ஏற்றுக் கொள்ளும் அவலத்தில் இருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிளம்பும் சில கோபக்கார இளைஞர்களை ‘தீவிரவாதிகள்’ என்கிற முத்திரையோடு அரசு இயந்திரம் வேட்டையாடும் அவலமும் இன்னொரு புறம் நிகழ்கிறது.
தலித் சிறுமிகளின் மீதான பாலியல் வன்முறை
மூன்று தலித் சிறுமிகள் காணாமல் போன வழக்கோடு அயன் ரஞ்சனின் காவல்துறை பணி ஆரம்பிக்கிறது. அதில் இரண்டு சிறுமிகள் மரத்தில் தூக்கில் தொங்குகிறார்கள். ஒரு சிறுமி என்னவானாள் என்றே தெரியவில்லை. ‘இரு சிறுமிகளுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் அதனால் அவர்களின் பெற்றோர்கள் ஆணவக் கொலை செய்து விட்டதாகவும் காவல்துறை வழக்கை ஜோடிக்கிறது. இதற்காக சிறுமிகளின் தந்தைகளையும் அடித்து கைது செய்கிறது. தங்களின் பிரியமான மகள்களை இழந்ததோடு கொலைப்பழியையும் ஏற்க வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஆளாகின்றார்கள்.
அயன் ரஞ்சன் மெல்ல இந்த வழக்குக்குள் இறங்குகிறான். காணாமல் போன சிறுமி எங்கோ உயிருடன்தான் இருப்பாள் என்று அவனின் உள்ளுணர்வு சொல்கிறது. அவளைக் கண்டுபிடித்துவிட்டால் இந்த வழக்கு தொடர்பான விடைகள் கிடைத்துவிடும் என்று நம்புகிறான். ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. ஒருபுறம் அரசு இயந்திரமும் இன்னொரு புறம் சாதியமும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன.
நேர்மையும் மனச்சாட்சியும் உள்ள சில காவல்துறையினரோடு விசாரணையில் இறங்குகிறான் அயன் ரஞ்சன். அந்த ஊரில் தோல் தொழிற்சாலை நடத்தும் செல்வாக்குள்ள நபரான அன்ஷூ என்பவனின் மீது சந்தேகம் வருகிறது. மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக சிறுமிகள் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் மற்ற தொழிலாளர்கள் அச்சப்பட்டு கூலி உயர்வு கேட்டு போராட மாட்டார்கள் என்பது அவனது திட்டம். ‘நாங்களா பார்த்து கொடுக்கறதுதான் அவங்க இடம். அவங்களா கேட்டா நசுக்கிடுவோம்’ என்று விசாரணையில் எக்காளத்தோடு பதில் சொல்கிறான்.
சாதியமும் அரசு இயந்திரமும் கைகோர்க்கும் அவலம்
உண்மை தெரிந்தாலும் அயன் ரஞ்சனால் அன்ஷூவை எதுவும் செய்யமுடியவில்லை. அன்ஷூவின் செல்வாக்கும் சாதியும் குறிப்பாக கருப்பு ஆடுகளாக இருக்கும் சக அதிகாரிகளின் துரோகமும் அவனுடைய கையைக் கட்டிப் போடுகின்றன. ‘நீங்க இருந்து போயிடுவீங்க சார்.. நாங்க இங்கயேதான் இருந்தாகணும். வெட்டிப் போட்டுடுவாங்க’ என்று பதைபதைக்கிறார் இன்ஸ்பெக்டர் பிரம்மதத். இவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அது சார்ந்த பெருமிதத்தோடு பல கீழ்மைகளைச் செய்கிறார். தெரு நாயின் மீது அன்பையும் கருணையையும் காட்டும் இவர், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலேயே மனிதர்கள் மீது அவற்றைக் காட்ட மறுக்கிறார். இந்த முரண் மிக இயல்பாகப் பதிவாகியுள்ளது.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் மூலம் சிறுமிகள் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால் ரிப்போர்ட் எழுதப் போகும் இளம் மருத்துவரை பிரம்மதத் மிரட்டுகிறார். பிறகு அயன் ரஞ்சன் தரும் துணிச்சல் காரணமாக சாட்சியங்களை வலுவாக்குகிறார் இளம் மருத்துவர்.
ஆனால், ஒருநிலையில் அயன் ரஞ்சனின் அத்தனை முயற்சிகளுக்கும் பெரிய முட்டுக்கட்டையைப் போடுகிறது மேலிடம். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. சிபிஐ அதிகாரியாக வரும் பணிக்கரும் (நம்ம ஊர் நாசர் இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்). சாதி மற்றும் அதிகார வெறி கொண்டிருப்பதாகத் தெரிவதால் இந்த வழக்குக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏறத்தாழ பறிபோகிறது. அயன் ரஞ்சன் சஸ்பெண்ட் ஆகிறார்.
இந்த வழக்கு என்னவானது, காணாமல் போன சிறுமி கிடைத்தாளா, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா, அயன் ரஞ்சனின் போராட்டம் வெற்றி பெற்றதா என்பதையெல்லாம் இயல்பான காட்சிகளாகவும் அதே நேரத்தில் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். நேர்மறைத்தன்மையின் அழகு துளிர்க்கும் நையாண்டியின் இறுதிக்காட்சியோடு இந்தப் படம் முடிந்திருப்பதுதான் சிறப்பு.
கணக்கிலடங்காத சாதிப்பிரிவுகள்
ஏஸிபி அயன் ரஞ்சனாக, ஆயுஷ்மான் குரானா அற்புதமாக நடித்திருக்கிறார். நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலோடு அந்தக் கிராமத்துக்குள் நுழைகிறார் சாதியமும் பழமைவாதமும் நிறைந்திருக்கும் அந்த ஊரில் ஓர் அயல் கிரக ஜீவி போல் தாம் உணர்வதைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆயுஷ்மான்.
காவல்துறையில் உள்ள தன் சக ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் சாதியைப் பற்றி அயன் ரஞ்சன் விசாரிக்கும் காட்சி முக்கியமானது. அவர்களின் சாதியை அறிவது அவர் நோக்கமல்ல. அதன் மூலம் ஒவ்வொரு சாதியிலும் உள்ள உட்பிரிவுகள், அதனுள்ளும் ‘தான்தான் மேலே’ என்று அடித்துக் கொள்ளும் அபத்தம், ஆதிக்க சாதியினரின் பிரிவுக்குள்ளேயும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், உயர்வு மனப்பான்மைகள் போன்றவற்றை அவல நகைச்சுவையுடன் அந்தக் காட்சி வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றை அடையாளமாக்க முயலும் சமகால அரசின் பல அத்துமீறல்கள் இதில் துண்டுக்காட்சிகளின் வழியாக விரிகின்றன.
கசாப்புக்கடையில் பணிபுரியும் தலித் இளைஞர்கள் நடுத்தெருவில் அடிக்கப்படுவது; சாதியக்கொடுமை காரணமாக மதம் மாறும் தலித் சமூக மக்களை ‘வாருங்கள், இந்துக்களாக ஒன்றிணைந்து நிற்போம்’ என்று மதத்தலைவர்கள் தந்திரமாக அரவணைக்க முயல்வது; தலித்களுடன் ஒன்றாக இணைந்து உணவருந்துவதாக பொது மேடையில் நாடகமாடும் மதக்கட்சியினர் அவர்களுக்கான பாத்திரங்களைத் தனியாகக் கொண்டு வருவது; சில தலித் தலைவர்களே அறியாமை அல்லது ஆதாயம் காரணமாக கைகோர்த்து நிற்பது; ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வற்புறுத்தும் சிபிஐ அதிகாரி … என்று பல காட்சிகள் சமகால அரசியலின் மீதான விமர்சனங்களாக அமைந்துள்ளன. இவை திரைப்படத்தின் இடையே உறுத்தாமலும் பிரசாரமாக மாறாலும் நிகழ்ந்திருப்பதுதான் அற்புதம்.
ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் பஹ்வாவின் அற்புதமான நடிப்பு
இந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்ட மிகச் சிறப்பான நடிப்பு என இன்ஸ்பெக்டர் பிரம்மதத்-ஆக நடித்த மனோஜ் பஹ்வா-வைச் சொல்ல வேண்டும். அடிப்படையில் நகைச்சுவை நடிகரான இவர், இந்தத் திரைப்படத்தில் இயல்பான எதிர்மறைத்தன்மையை வெளிப்படுத்தி, தன் வில்லத்தனத்தை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். சாதியத்தில் ஊறிப்போன ஒரு கிராமத்துக்காரரின் சித்திரத்தையும் துல்லியமாகப் பிரதிபலித்துள்ளார்.
செல்வாக்குள்ள நபர்களிடம் பம்முவதாக இருக்கட்டும், சொந்த சாதிக்காரர்களுக்கு சாதகமாக நடப்பதாகட்டும், விசாரணையைத் துரிதப்படுத்தும் அயன் ரஞ்சனைப் பார்த்து உள்ளுக்குள் தவிப்பதாகட்டும், அவற்றுக்கு சாமர்த்தியமாக முட்டுக்கட்டை போடுவதாகட்டும், தன்னுடைய கீழ்மை வெளிப்பட்டுவிடக்கூடாது என்று பதறுவதாகட்டும்.. ஏறத்தாழ அனைத்துக் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
அதுபோலவே வயதான கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் குமுத் மிஸ்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. காவல்துறையின் நடைமுறை அநீதிக்கும் மனச்சாட்சிக்கும் இடையே தத்தளிப்பவராக வருகிறார். மேலதிகாரியான பிரம்மதத்தைப் பகைத்துக்கொள்ள முடியாமலும், அதே நேரத்தில் அயன் ரஞ்சனின் நியாயத்துக்குத் துணை போக முடியாமலும் இவர் தவிப்பது நன்கு வெளிப்பட்டுள்ளது.
தன்னுடைய குற்றத்தை அம்பலப்படுத்தி சட்டத்தின் பிடியில் மாட்டி விடும் கான்ஸ்டபிளை, இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அடித்து ‘உன்னையெல்லாம் அப்படியே செருப்பு தைக்க விட்ருக்கணும்டா.. நீயெல்லாம் பதவிக்கு வந்ததால்தான் இப்படியெல்லாம் ஆகுது’ என்று கொதிக்கும் போது பதிலுக்கு அதிகாரியை கன்னத்தில் அறைந்து ‘நாங்கல்லாம் எத்தனை காலத்துக்கு செருப்பு தைத்துக் கொண்டேயிருப்பது?’ என்று அவர் வெடிக்கும் காட்சி முக்கியமானது மட்டுமல்ல; அற்புதமானதும் கூட.
இந்தியாவின் பிரத்யேகமான, பல நூற்றாண்டு கால பிரச்னையான சாதியத்தைப் பற்றி மிகச் சரியான எதிர்ப்புக்குரலாக எழுந்திருக்கும் இந்தத் திரைப்படம் இந்தியச் சினிமாவின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்றாக இருக்கும்.
(தொடர்ந்து பேசுவோம்)