Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 33 – புழு

தலித் திரைப்படங்கள் # 33 – புழு

Puzhu (Malayalam)

‘சாதிய வெறி ஒருவரின் மனதில் எத்தகைய கொடூரமான விஷ எண்ணங்களை உற்பத்தி செய்கிறது’ என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்த மலையாளத் திரைப்படம் ‘புழு’. மெல்லப் பரவும் விஷம் போல இதன் திரைக்கதை நகர்கிறது. ஓர் எதிர்மறையான பாத்திரத்தைத் துணிச்சலுடன் ஏற்று அற்புதமாக நடித்திருக்கிறார் மம்முட்டி.

ஒருவரிடம் இருக்கும் சாதி குறித்த பெருமிதமும் உயர்வு மனப்பான்மையும் எவ்வாறு சக மனிதர்களை வெறுக்க வைக்கிறது என்பதை இந்தத் திரைப்படம் நிதானமான காட்சிகளின் வழியாக ஆழமாக உணர்த்துகிறது.

உள்ளுக்குள் மறைந்திருக்கும் சாதிய வெறி

மம்முட்டி ஒரு ஐபிஎஸ் அதிகாரி. மனைவியை இழந்தவர். பள்ளியில் படிக்கும் மகனோடு வாழ்கிறார். கறாரான தினசரி விதிகள் இருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கையை மகன்மீது திணிக்கிறார். சக மாணவர்களோடு விளையாடக்கூடாது; பழகக்கூடாது; அவர்களிடமிருந்து உணவு எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது; செஸ் விளையாடலாம்; கால்பந்து விளையாடக்கூடாது; இரவில் பல் துலக்குவதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒரு அன்றாட தினத்தின் அத்தனை அசைவுகளையும் தான் தீர்மானித்தபடியே மகன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே அவரது மகன் கிச்சா மூச்சுத்திணறுகிற சூழலில் வாழ்கிறான். ‘தன் தந்தைக்கு எப்போது சாவு வரும்’ என்று உள்ளூர ஏங்கியபடி இருக்கிறான். தன்னுடைய கற்பனைகளில் அவரை விதவிதமாகக் கொன்று பார்க்கிறான்.

மம்முட்டிக்கு பாரதி என்றொரு தங்கை. அவள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும் நாடக நடிகருமான குட்டப்பனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறாள். இதன் காரணமாகத் தங்கையை முற்றிலும் நிராகரிக்கிறார் மம்முட்டி. அவரது கணவரை மனதார வெறுக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குட்டப்பனுக்கு வீடு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நண்பர்களின் உதவியால் மம்முட்டி வசிக்கும் அதே ஆடம்பரமான அபார்ட்மெண்ட்டில் குட்டப்பனும் பாரதியும் குடியேறுகிறார்கள். இது மம்முட்டியைக் கடுப்பேற்றுகிற விஷயமாக இருக்கிறது.

மரண அச்சத்தில் பரிதவிக்கும் மம்முட்டி

காவல்துறையில் பணிபுரிந்த மம்முட்டி, தன்னை யாரோ கொல்ல முயற்சி செய்வதாக அடிக்கடி உணர்கிறார். ஏற்கெனவே ஒரு துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்திருக்கும் அவருக்குக் கற்பனையான பயமும் மன உளைச்சலும் அதிகரிக்கிறது. இவர் பணியில் இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல குற்றங்களைச் செய்து நிரபராதிகளின் மீது பழிபோட்டு லாபம் அடைந்திருக்கிறார். பழைய விரோதம் காரணமாகத் தன்மீது கொலை முயற்சி நிகழலாம் எனகிற சந்தேகத்தில் சம்பந்தப்பட்ட ஆசாமியைச் சென்று மிரட்டுகிறார். அவரது தற்கொலைக்கும் காரணமாக ஆகிறார். தன்னிடம் பணிபுரியும் அப்பாவியான பணியாளை அநியாயமாகச் சந்தேகப்பட்டு வேலையை விட்டு நீக்குகிறார்.

ஏற்கெனவே உயிர் அச்சத்தில் வாழும் மம்முட்டிக்கு, தான் வசிக்கும் குடியிருப்பிலேயே தங்கையும் அவளது கணவரும் வந்து வாழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது. தனது மகன் கிச்சா அங்கு செல்வதையோ தங்கை தனது வீட்டுக்கு வருவதையோ மம்முட்டி விரும்புவதில்லை. காவல்துறை அனுபவத்தைக் கொண்டு தன்னைக் கொல்வதற்கு முயற்சி செய்யும் ஆசாமியைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை மேற்கொள்கிறார். கூடவே அவரது பதற்றமும் தினசரி அதிகரிக்கிறது. தன்னை ஆழமாக வெறுக்கும் மகனிடம் மம்முட்டி காட்டும் இணக்க முயற்சிகள் பரிதாபமாகத் தோற்கின்றன.

மம்முட்டியைக் கொல்வதற்காக பின்தொடரும் ஆசாமி யார் என்கிற விடைக்கான முடிச்சு அவிழ்வதோடு படம் நிறைகிறது.

தலித் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு ‘ஆன்ட்டி ஹீரோ’

சினிமா என்கிற சாதனம் இந்தியாவில் நுழைந்தபோது அதில் சித்திரிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பிராமண சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த பாத்திரங்களும் பிறகு வந்து போயின. முன்னணி ஹீரோக்கள் பிராமண அல்லது இடைநிலைச் சாதியைச் சேர்ந்த பாத்திரங்களாக மட்டுமே நடித்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பாத்திரம் ஹீரோவாக எப்போதும் இருந்ததில்லை.

தொன்னூறுகளில் இந்த நிலைமை மாறியது. தலித் இயக்கங்களின் அரசியல் ரீதியிலான வளர்ச்சி சினிமாவிலும் பிரதிபலித்தது. எனவே சினிமா ஹீரோவும் ‘தலித்’ அடையாளத்துடன் வெளிப்பட்டார். அதாவது இப்படிப்பட்ட படங்களுக்கும் சந்தை மதிப்பு ஏற்பட்ட பிறகு ‘ஹீரோயிஸம்’ என்பது தலித் பாத்திரத்துக்கு நகர்ந்ததே ஒழிய, நடிகர்களுக்கு சமூகநீதியின் மீது அக்கறை என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நாயகனாகத் தங்களை முன்நிறுத்திக் கொண்டார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் மம்முட்டி ஏற்றிருக்கும் இந்தப் பாத்திரத்தைப் பார்க்க வேண்டும். மம்முட்டி எப்படிப்பட்டவர்? பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தனது சாதிய வெறியை உள்ளுக்குள் நாசூக்காக மறைத்து வைத்திருக்கிற மேல்தட்டு ஆசாமி. ‘கண்டிப்பான வளர்ப்பு’ என்கிற பெயரில் தனது மகனைச் சித்ரவதை செய்யும் நபர். சாதி விட்டுத் திருமணம் செய்த தங்கையை ஒதுக்கி வைத்திருப்பவர். அவரது கணவரை ஆழமாக வெறுப்பவர். கெட்ட காவல்துறை அதிகாரி. அப்பாவியான நபர்களை இரக்கமேயின்றி பழிவாங்குபவர். இத்தனை எதிர்மறைத்தன்மைகள் கொண்ட பாத்திரத்தை முன்னணி ஹீரோவான மம்முட்டி சமகாலத்தில் துணிச்சலுடன் ஏற்றிருப்பது பாராட்டத்தக்கது.

முகத்தில் நிரந்தர சலிப்பு, எவரையும் மெல்லிய எரிச்சலுடன் பார்க்கும் முகபாவம், தினசரி நடைமுறைகளில் பீதியூட்டும் நேர்த்தி என்று குட்டன் பாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார் மம்முட்டி. தான் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றச் சொல்லி மகனை மிக நுட்பமாகக் கட்டாயப்படுத்துவது, மெல்லிய மீறலுக்கே குரூரமான தண்டனைகளை அளிப்பது என்று அமைதியான வன்முறையைச் செலுத்தும் தந்தையாக இருக்கிறார்.

மகனை நுட்பமாக வதைக்கும் தந்தை

‘தக்காளி பழவகையைச் சேர்ந்தது’ என்று பாடம் பிடிக்கிறான் கிச்சா. ‘ஒரு நிமிஷம். தக்காளி என்பது காய்கறி வகையைச் சேர்ந்தது’ என்று குறுக்கிடுகிறார் மம்முட்டி. ‘இல்லப்பா.. எனக்கும் சந்தேகம் வந்து கூகுள்ல செக் பண்ணிப் பார்த்தேன்’ என்று மகன் சொல்ல ‘கூகுள் எல்லாத்தையும் கரெக்ட்டா சொல்லிடுமா?’ என்று கடுகடுக்கும் தந்தை அடுத்து தரும் தண்டனைதான் விபரீதமானது. ‘தக்காளி என்பது காய்கறி’ என்னும் வரியை ஐநூறு முறை எழுதச் சொல்கிறார்.

தனிமையான வீட்டில் தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருக்கும் கிச்சா, தந்தை வந்ததுமே சட்டென்று ஓடிப்போய் புத்தகத்தை எடுத்துவைத்துக் கொள்கிறான். தந்தையின் கண் பார்வைக்கு அர்த்தம் புரிந்து உடனே செயல்படுத்துகிறான். கிச்சாவின் சின்ன மீறல் கூட கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறது. குடும்ப வீடியோவைத் தினசரி பார்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் மம்முட்டி நிறுத்தி விட்டு எழுந்து செல்வார். கிச்சாவும் கூடவே எழுந்து செல்ல வேண்டும். இப்படி விதம் விதமாக கொடுமைப்படுத்தி விட்டு ‘உனக்காகத்தானே நான் இருக்கிறேன்’ என்று மகனிடம் நெகிழும்போது அவனும் வேறு வழியில்லாமல் பாவனையாக நெகிழ்கிறான்.

தலை நிமிர்ந்து நடக்கும் ‘தலித்’ பாத்திரம்

குட்டப்பனாக நடித்திருக்கும் அப்புண்ணி சசியின் நடிப்பும் பாத்திரமும் அருமை. இவர் ஒரு நாடகக் கலைஞர். அதன் வழியாக சினிமாவுக்குள் வந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘புழு’வில் இவர் ஏற்றிருந்த பாத்திரம் பரவலாகப் பாராட்டப்பட்டது. பொதுவாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பாத்திரம் என்றால் தாழ்வுணர்ச்சியுடன் பரிதாபத்தைக் கோருவதாகச் சித்திரிக்கப்படும். ஆனால் குட்டப்பன் பாத்திரம் எப்போதும் புன்னகையோடு, தலைநிமிர்ந்து நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. சாதிய உணர்வு மிக்கவர்களை இவரால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிரிப்புடன் கடக்கிறார். அரிதாகக் கோபம் கொள்கிறார்.

தனது உருவம் குறித்து கிண்டல் செய்யும் காவல்துறை அதிகாரியைக் கன்னத்தில் அறைந்து விடுகிறார். இது குறித்து மேலதிகாரி எச்சரிக்கும் போது ‘நானும் தீண்டாமைச் சட்டத்தில் வழக்குத் தொடுக்க முடியும்‘ என்கிறார் குட்டப்பன். பிறகு ‘எத்தனை வழக்கைத்தான் இப்படி தினம் தினம் தொடுத்துக் கொண்டிருக்க முடியும்?’ என்று அவர் கேட்பதிலிருந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அன்றாடம் எதிர்கொள்ளும் அவமதிப்புகளின் வலியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மம்முட்டியின் தங்கையாகவும் குட்டப்பனின் காதல் மனைவியாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் பார்வதி. தன்னை வெறுக்கும் அண்ணனின் மனது மாறாதா என்று இவரது கண்கள் தவிக்கிற தவிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கர்ப்பமுற்றிருக்கும் தனக்காக சிகரெட் பழக்கத்தை விட்டிருப்பதைக் கணவர் சொல்லும் போது முகத்தில் பெருமை பொங்கச் சிரிக்கும் காட்சியில் அத்தனை அழகாக இருக்கிறார் பார்வதி.

பரிட்சித்து மன்னனின் சாபமும் கொல்லும் தட்சகனும்

அறிமுக இயக்குநரான ரத்தீனா இந்த ‘சைக்கலாஜிக்கல் திரி்ல்லர்’ படத்தை மிக நுட்பமாகவும் அற்புதமாகவும் இயக்கியிருக்கிறார். ஒரு முனிவரை அவமதித்ததால் ‘நாகம் கடித்து ஏழாம் நாளில் இறக்கும்’ சாபத்தைப் பெறுகிறார், பரிட்சித்து மன்னன். சாபத்தின் படியே ஏழாம் நாளில் நாகர் குலத்தைச் சேர்ந்த தட்சகனால் இறக்கிறார்.

மகாபாரதத்தில் வரும் இந்த சம்பவத்தை குட்டப்பன் நடத்தும் நாடகத்தின் மூலம் திரைப்படத்தில் பொருத்தமாக இணைத்திருக்கிறார் இயக்குநர். தனது மரணத்தைத் தவிர்ப்பதற்காக மம்முட்டி எத்தனை முயன்றாலும் அது முடிவதில்லை. சந்தேகத்தின் பேரில் பல பாம்புகளைத் தேடிக் கொன்றாலும் ஒரு சிறிய ‘புழு’வின் வழியாக மம்முட்டியின் மரணம் இறுதியில் நிகழ்வது பொருத்தமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் சாதிய வெறுப்பு, ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்து ஆணவக் கொலையாக மாறும் காட்சி திகைப்பை ஏற்படுத்துகிறது.

தேனி ஈஸ்வரின் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோயின் அமானுஷ்யமான பின்னணி இசை போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இந்தப் படத்தின் காண்பனுபவத்தை, சுவாரசியமாக்கியிருக்கின்றன. சாதியத்தால் உந்தப்படும் ஒரு கொடூரமான மனம், தன்னைச் சுற்றியுள்ள சூழலை எத்தனை விஷமாக்கிவிடும் என்கிற விஷயத்தை ‘புழு’ திரைப்படம் மிக வலிமையாகக் கடத்தியிருக்கிறது.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
nv-author-image

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *