Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

மனுசங்கடா

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் பல்வேறு துன்பங்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்தபின்பும்கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டேவருகிறது என்பது கசப்பான உண்மை.

இறந்தவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது என்பது தொடர்பாக பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. முற்பட்ட சமூகத்தினரின் ஆக்கிரமிப்புகள் போக எளிய சமூகத்தினருக்கென மயானங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை எளிதில் கடந்து செல்ல இயலாதபடி, மோசமான வழித்தடங்களில் இருக்கும்; ஊருக்கு வெளியே வெகு தொலைவுக்குச் செல்லும்படியான அவலத்தைக் கொண்டிருக்கும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கிராமப்புறங்களில் இந்த அவலம் தொடர்கிறது. ‘சமரசம் உலாவும் இடமாக’ மயானங்கள் இல்லை. அப்படியொரு பிரச்னையைத்தான் அம்ஷன்குமார் இயக்கிய ‘மனுசங்கடா’ திரைப்படம் பேசுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. கீழே விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

மரணத்துக்குப் பிறகும் துரத்தும் சாதியம்

நாகை மாவட்டம், வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த திருநாள் கொண்டசேரியில் வாழ்ந்த செல்லமுத்து என்கிற தலித் பெரியவர் 2016- ல் இறந்து போகிறார். அவரது உடலைப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல, முற்பட்ட சமூகத்தினர் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இறந்த உடல்களை எடுத்துச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பாதை எளிதில் செல்ல முடியாததாக இருக்கிறது. ‘பாதையைச் சரி செய்து தருவோம்’ என்று உறுதியளித்திருந்த அரசாங்க இயந்திரம் வழக்கம்போல் மெத்தனமாக இருக்கிறது. எனவே பொதுப்பாதையில்தான் எடுத்துச்செல்வோம் என்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தங்களின் உரிமையைக் கோருகிறார்கள். இது தொடர்பாக முன்பே பிரச்னைகள் நிகழ்ந்திருக்கின்றன.

செல்லமுத்துவின் பேரன் கார்த்திக் அன்றிரவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். செல்லமுத்துவின் சடலம் கெளரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும். காவல்துறை இதற்கான பாதுகாப்பை அளிக்கவேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் முற்பட்ட சமூகத்தினர் இதற்கு ஒப்புக்கொள்வதில்லை. பொதுப்பாதையை கடக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்துகின்றனர். உள்ளூர் காவல்துறையும் அரசாங்க அதிகாரிகளும் அவர்களின் பக்கமே நிற்கிறார்கள். ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள். பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதியுங்கள்’ என்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தங்கள் உரிமையை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்துகிறார்கள். இறந்த உடல் கிடத்தப்பட்டிருக்கும் வீட்டின் மின்சாரம் பிடுங்கப்படுகிறது. இதனால் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் உடல் அழுகத் தொடங்குகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மூன்று நாட்கள் கடந்தும் நிலைமை சீராகவில்லை.

முற்பட்ட சமூகத்துக்கு ஆதரவாக இயங்கும் அரசு இயந்திரம்

நீதிமன்ற உத்தரவைப் பெற்றும் தங்களின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லையே என்னும் உளைச்சலில் மண்ணெண்ணைய் ஊற்றித் தங்களைக் கொளுத்திக்கொள்ள முயன்று தடுக்கப்படுகிறார்கள். நிலைமை மோசமாகவே, ‘பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லலாம்’ என்கிற வாக்குறுதியை அரசாங்க அதிகாரிகள் பாவனையாகத் தருகிறார்கள். அந்த வாக்குறுதியை நம்பி சடலத்தை எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் ‘நீங்கள் பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. காட்டுப்பாதையில்தான் செல்லவேண்டும்’ என்கிற முற்பட்ட சமூகத்தின் குரலை அதிகார தரப்பும் எதிரொலிக்கிறது.
இந்த நம்பிக்கைத் துரோகத்தால் போராடத் துவங்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அடித்துத் துரத்தியும் கைது செய்தும் அப்புறப்படுத்தும் காவல்துறை சடலத்தைக் கைப்பற்றி தாங்களே அதைக் காட்டுப்பாதை வழியாகத் தூக்கிச் சென்று அரையும் குறையுமாக அடக்கம் செய்து முடிக்கிறார்கள்.

இது ஓர் உதாரணச் சம்பவம்தான். இது போல் பல துயரச் சம்பவங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வில் நிறைந்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஏறத்தாழ அப்படியே திரைக்கதையாக்கி ‘மனுசங்கடா’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அம்சன் குமார்.

வெகுசன சினிமாவின் அலங்கார ஆடம்பரம் எதுவுமில்லாமல், ஓர் ஆவணப்படத்துக்குரிய எளிமையான அழகியலோடு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் நிகழும் சம்பவங்கள் நேர்க்கோட்டுத்தன்மையோடு யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. எவ்வித செயற்கையான திணிப்பும் இல்லாமல் நூல் பிடித்தது போல் தொடர்ச்சியாகப் பயணிக்கும் கதையாடலாக உள்ளது. பெரும்பான்மையான காட்சிகளில் இயற்கையான சப்தங்களே பயன்படுத்துள்ளன. மொத்தப் படத்துக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பின்னணி இசை அவசியமான இடங்களில் ஒலிக்கிறது. (இசை: அரவிந்த் சங்கர்)

சடலத்துடன் ஒரு சாதியப் போராட்டம்

நகரத்தில், ஒரு ஸ்டீல் கம்பெனியில் பணிபுரியும் கோலப்பனுக்கு அன்றைய நாள் துயரத்துடன் விடிகிறது. ஊரில் அவனுடைய தந்தை இறந்துபோன தகவல் கிடைப்பதால் நண்பர்களின் உதவியுடன் ஊருக்கு கிளம்புகிறான். இந்தத் துயரத்தின் ஊடாக இன்னொரு தகவலும் அவனை எரிச்சலுக்கு ஆளாக்குகிறது. கோலப்பன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுடைய தந்தையின் உடலைப் பொதுப்பாதையின் வழியாக எடுத்துச் செல்ல, முற்பட்ட சமூகத்தினர் மறுக்கின்றனர். இந்த விஷயம் ஏற்கெனவே அந்த ஊரில் தொடர்கதையாக இருக்கவே கோபமுறும் கோலப்பன், தன் சமூகத்தினருக்காகப் பாடுபடும் தலைவரை அணுகி, தன் தந்தையின் சடலத்தை மரியாதையுடன் அடக்கம் செய்ய நீதிமன்றத்தை அணுகுகிறான்.

அதற்கு முன் அவன் சந்திக்கும் இன்ஸ்பெக்டரும், ஆர்டிஓ-வும் மழுப்பலான பதில்களையே தருகிறார்கள். நல்லுள்ளம் படைத்த ஒரு வழக்கறிஞர் இவருக்கு உதவ முன்வருகிறார். அரசு தரப்பு வழக்கறிஞர், முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘இன்னமும் மூன்று மாதத்தில் அவர்களுடைய சுடுகாட்டுப்பாதையைச் செப்பனிட்டுத் தருவோம்’ என்று தற்காலிக சமாதானத்தைச் சொல்லி, தங்களின் தரப்புக்கு சாதகமாகப் பேசுகிறார். பொதுப்பாதையில் சடலத்தை அனுமதித்தால் ‘சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்’ என்கிற காரணத்தையும் சொல்கிறார்.

ஆனால் நீதிபதி இந்த வாதத்தை ஏற்பதில்லை. ‘ஒருவர் இறந்த பிறகும் கூட அவருக்குக் கிடைக்க வேண்டிய இறுதி மரியாதையைக் கூடவா தர முடியாது?” என்கிற நியாயமான கேள்வியுடன் கோலப்பனின் தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்குகிறார். இனி சிக்கல் இருக்காது என்கிற நம்பிக்கையுடன் கோலப்பன் ஊர் திரும்பினாலும் அவனுக்குள் சந்தேகம் கனன்று கொண்டேயிருக்கிறது. அவன் நினைத்தபடியே ஆகிறது. நீதிமன்றத் தீர்ப்பை முற்பட்ட சமூகத்தினர் ஏற்பதில்லை. காவல்துறை அதிகாரியும் ஆர்டிஓவும் அவர்களுக்கு சாதகமாக சமாதானம் பேச மறுபடியும் வருகிறார்கள். பிறகு மேலே குறிப்பிட்ட உண்மைச் சம்பவத்தில் நிகழும் அத்தனை விஷயங்களும் இதில் நடக்கின்றன.

இறுதிக்காட்சியில் தன் தந்தையின் பிணம் எங்கே அடக்கம் செய்யப்பட்டது என்பது கூட தெரியாமல் தரையில் வீழ்ந்து ‘கோ’வென்று கதறி அழுகிறான் கோலப்பன். பின்னணியில் கவிஞர் இன்குலாப் எழுதிய ‘மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..உன்னப்போல அவனப்போல எட்டுச்சாணு ஒசரமுள்ள…மனுசங்கடா நாங்க மனுசங்கடா.. என்கிற புகழ்பெற்ற பாடல் ஓங்கி ஒலிக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கென பிரத்யேகமான வரிகளை எழுதித் தந்திருக்கிறார் இன்குலாப். திரைப்படத்துக்காக அவர் எழுதிய ஒரே பாடல் இதுதான்.

பெருக வேண்டிய மாற்று முயற்சிகள்

எடுத்துக்கொண்ட விஷயத்தைக் கோர்வையாகவும், பிரசாரதொனியில்லாமலும் எவ்வித கவனச்சிதறல்கள் உருவாகாமலும் நேர்மையாக அணுகியிருக்கிறது ‘மனுசங்கடா’. சுயாதீன சினிமா என்பதால் அதற்குரிய பலமும் பலவீனங்களும் இருக்கின்றன.

கோலப்பனாக ராஜீவ் ஆனந்த் சிறப்பாக நடித்திருந்தார். ‘உங்க அழுக்கை எல்லாம் நாங்கதானே சுத்தம் பண்றோம். இந்தப் பாதைல போனா உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று உணர்ச்சிகரமாக இவர் கேட்கும் காட்சி சிறப்பானது. வழக்கறிஞராக நடித்திருக்கும் நாடகவியலாளர் கருணா பிரசாத்தின் நடிப்பு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. இறந்தவரின் மனைவியாக நடித்த, கூத்துப்பட்டறை ‘மணிமேகலை’க்கு ஒப்பாரிப்பாடல் பாடுவதைத் தவிர வேறு காட்சியில்லை. கோலப்பனின் வருங்கால மனைவியாக நடித்த ஷீலா ராஜ்குமாரின் இயல்பான நடிப்பு கவர்ந்தது. சில பாத்திரங்களுக்குத் தோற்றப் பொருத்தமும் உடல்மொழியும் பொருந்திவராததைக் கவனத்திருக்கலாம். கோலப்பனின் உறவினர்களாக நடித்திருப்பவர்களின் தோற்றமும் நடிப்பும் பொருத்தமாக அமைந்திருந்தது.

பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவு ஆவணத்தன்மை கொண்டிருந்தது. உ.வே.சாமிநாதய்யர், சர்.சி.வி.ராமன், சுப்ரமணிய பாரதி போன்ற ஆளுமைகள் தொடர்பாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் அம்ஷன் குமார். தவில் வித்வான் யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி தொடர்பான ஆவணப்படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. கி.ரா.வின் ‘கிடை’ என்கிற குறுநாவலையொட்டி இவர் இயக்கிய ‘ஒருத்தி’ என்கிற திரைப்படம், ‘இந்தியன் பனோரமா’வில் திரையிடப்பட்டது. ‘மனுசங்கடா’ இவரது இரண்டாவது திரைப்படம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரச்னைகளை அவர்களின் நோக்கில், கோணத்தில் உரையாடும் கலை, இலக்கியம், சினிமா என்பது தமிழில் மிக குறைவு. இது போன்ற சூழலில் ‘மனுசங்கடா’ போன்ற மாற்று முயற்சிகள் அதிகம் உருவாக வேண்டும்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *