Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

Kotreshi Kanasu

ஓர் எளிய குடும்பம், தனது மகனின் கல்விக்காக நிகழ்த்தும் போராட்டம்தான் இந்தப் படத்தின் மையம். 1994-ல் வெளியான ‘Kotreshi Kanasu’ (கொட்ரேஷியின் கனவு) என்கிற இந்தத் திரைப்படம், மாநில மொழித் திரைப்படங்களின் வரிசையில் தேசிய விருதைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவனாக நடித்த விஜய் ராகவேந்திராவுக்கு ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ பிரிவில் தேசிய விருதும் கிடைத்தது.

ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் முன்னேறுவதற்கு கல்விதான் பிரதானமான பாதை. அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை நிகழ்த்துகிற சாதியம், எப்படி கல்விக்கான பாதையையும் அடைக்கிறது என்பதை இந்தத் திரைப்படம் இயல்பான காட்சிகளின் வழியாக சித்திரிக்கிறது.

புத்திசாலித்தனமும் சுயமரியாதையும் கொண்ட மாணவன்

கொட்ரேஷி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன். நன்றாகப் படிப்பவன். புத்திசாலியானவன். பள்ளி செல்லும் நேரம் தவிர, மாட்டுக் கொட்டகையில் பணிபுரிந்து வீட்டுக்கு உதவுகிறான். சுயமரிதையுணர்வு கொண்டவன். தான் பணிபுரியும் இடத்தில் ‘தனியான’ கோப்பையில் தேநீர் தரப்படும்போது அதை அருந்தாமல் அமைதியாகப் புறக்கணிக்கிறான். ‘முதலாளியின் காலில் விழு’ என்று பெற்றோர் வற்புறுத்தும் போது சங்கடத்துடன் அதைச் செய்யாமல் இருக்கிறான்.

அவனுடைய பெற்றோரும் கிடைத்த வேலைகளைச் செய்கிறார்கள். தன் மகனைப் படிக்க வைத்து எப்படியாவது பெரிய ஆளாக ஆக்கவேண்டும் என்று ஒவ்வொரு எளிய குடும்பத்தினருக்கும் இருக்கிற அதே ஆசை இவர்களுக்கும் இருக்கிறது. கடுமையான வறுமைக்கு இடையிலும் சிரமப்பட்டுத் தன் மகனைப் படிக்க வைக்கிறார்கள்.

ஏழாம் வகுப்பில் சிறப்பாகத் தேர்வாகிறான் கொட்ரேஷி. அந்த ஊரிலேயே அதிக மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறான். அவனது குடும்பம் இதைக் கொண்டாடுகிறது. சுற்றத்தார் கொட்ரேஷியைத் தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாகச் சென்று இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவுகிறது.

இந்த விஷயம் கொட்ரேஷிக்குக் கடுமையான எதிர்விளைவுகளைத் தருகிறது. தங்களுக்கு கீழே பணிபுரிவரின் மகன் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றதை முற்பட்ட சமூகத்தினர் ரசிக்கவில்லை. உள்ளூற ஆத்திரப்படுகின்றனர். சுமாராகப் படிக்கும் அவர்களின் பிள்ளைகளை விடவும், கொட்ரேஷி சிறப்பாகப் படிப்பது அவர்களை எரிச்சலூட்டுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்னேறுவதை விரும்பாத சாதியம்

‘வாங்க ஆஃபிசர்… உக்காருங்க. சொல்லியனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே?’ என்று கொட்ரேஷியைப் பாராட்டுவது போல் பேசி அவமதிக்கிறார்கள். கொட்ரேஷியின் கூட படித்த மாணவர்களும் அவனிடமிருந்து விலகி நிற்கின்றனர். முன்பு போல் ஒன்றாகச் சேர்ந்து விளையாட வருவதில்லை. இது போன்ற விஷயங்கள் கொட்ரேஷியின் மனதைப் பாதிக்கின்றன. ‘ஏன்தான் நன்றாகப் படித்தோமோ?’ என்று துயரம் அடைகிறான். ‘நான் ஹைஸ்கூல் போக மாட்டேன். கூலி வேலைக்குப் போகிறேன்’ என்கிறான். இது கொட்ரேஷியின் தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மகனை அடித்து நொறுக்குகிறார்.

‘கோயில் குளத்தின் நீர் மாசுபட்டிருக்கிறது. அதை அருந்தாதீர்கள். நோய்கள் வரும்’ என்று ஊர் மக்களில் சிலரை எச்சரிக்கிறான் கொட்ரேஷி. தங்களின் நமபிக்கைக்கு எதிராகப் பேசுகிற கொட்ரேஷியை அவர்கள் ரசிக்கவில்லை. இதைக் கவனித்துக் கொண்டிருக்கிற ஒரு நபர், கொட்ரேஷியை அழைத்து அம்பேத்கரின் புத்தகத்தை பரிசாக அளித்து ‘நன்றாகப் படி. நீயொரு புத்திசாலி’ என்கிறார். ‘ஹைஸ்கூல் படிப்பு ரொம்ப கஷ்டமா இருக்காம். மேத்ஸ் எல்லாம் ரொம்ப சிரமமாம்’ என்று கொட்ரேஷியின் காதில் விழும்படியாக சக மாணவர்கள் சொல்லிச் சிரிக்கிறார்கள். இந்த விஷயங்கள் கொட்ரேஷியின் மனதை மாற்றுகின்றன. ‘நான் உயர்கல்விக்குச் செல்கிறேன்’ என்று அவன் சொன்னதும் பெற்றோர் அளவில்லாத மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஆனால் கொட்ரேஷி ஹைஸ்கூல் செல்வது அத்தனை எளிதானதாக இல்லை. அந்த ஊரில் உள்ள ஒரேயொரு தனியார் பள்ளியில்தான் அந்த வசதி இருக்கிறது. இவர்கள் சென்று அட்மிஷன் கேட்கும்போது ‘தாமதம் ஆகி விட்டது. அடுத்த வருடம் பார்க்கலாம்’ என்று வேண்டுமென்றே தட்டிக் கழிக்கிறார்கள். கொட்ரேஷியின் தந்தை பள்ளி அதிகாரியின் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறார். இவர்களை எப்படியாவது துரத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் ‘ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று சொல்லி அதிர்ச்சியைத் தருகிறது, பள்ளி நிர்வாகம்.

ஆயிரம் ரூபாய் பணத்துக்காக எங்கெங்கோ அலைகிறார், கொட்ரேஷியின் தந்தை. முதலாளிகளின் வீடுகளுக்குச் சென்று கூலி வேலையும் கடனும் கேட்கிறார். எல்லோரும் துரத்தியடிக்கிறார்கள். “பணம் தருகிறேன். என் ஆசைக்கு இணங்குவாயா?’ என்று கொட்ரேஷியின் அம்மாவிடம் கேட்கிறான், ஒரு முதலாளி. குடி போதையில் ஊர் பெரிய மனிதர்களை எல்லாம் திட்டித் தீர்க்கிறார், கொட்ரேஷியின் தந்தை.

கல்விக்குத் தடைபோடும் சாதியக் கொடுமை

இதற்கான தீர்வு கொட்ரேஷியின் மாமாவின் வழியாக வருகிறது. அவர் ஊரில் சற்று செல்வாக்கு உள்ளவர். பொய் சாட்சி சொல்லுதல், தோ்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு வேலை செய்தல் போன்ற காரணங்களால் காவல்துறையில் சற்று செல்வாக்கைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். கொட்ரேஷியின் படிப்புமீது அவருக்கு மிகுந்த அக்கறை உண்டு. தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு போய் பள்ளி நிர்வாகத்திடம் நீட்டுகிறார். அப்படியும் அட்மிஷன் தருவதை அவர்கள் தவிர்ப்பதால் மாமாவின் ஆட்கள் பள்ளி அதிகாரிகளைத் தாக்குகிறார்கள்.

பள்ளி நிர்வாகம் கொட்ரேஷிக்கு அனுமதி மறுப்பதில் ஒரு மறைமுகமான அரசியல் காரணம் இருக்கிறது. அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுள் ஒருவர் கௌடா. பள்ளியின் ஸ்தாபகர்களில் அவரும் ஒருவர். எனவே அவரை மீறி இடம் தர முடிவதில்லை. கௌடாவின் வீட்டில்தான் கொட்ரேஷி பணிபுரிந்து கொண்டிருந்தான். புத்திசாலித்தனமாகப் பேசுவதாலும் வேலைகளைப் பொறுப்பாக செய்வதாலும் கௌடாவுக்கும் அவரது மனைவிக்கும் கொட்ரேஷி மீது பிரியம் உண்டு. ஆனால் ஏழாம் வகுப்பில் சிறப்பாகத் தேர்வாகி, உயர்கல்விக்கு அவன் செல்லும் விஷயம், இதர முதலாளிகளைப் போலவே கௌடாவுக்கும் பிடிக்கவில்லை. எனவே அவனைப் பணியிலிருந்து நீக்குகிறார். ‘ஆஃபிசர்.. நீங்க சாணி அள்ளுகிற வேலையை செய்யலாமா?’ என்று கிண்டல் செய்து அனுப்புகிறார்.

உள்ளூரில் படிக்க வழியில்லாததால் கொட்ரேஷியை பெங்களூர் நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார் மாமா. ஊரில் மட்டுமே அவருக்கு சிறிது செல்வாக்கு உண்டு. அந்த ஜம்பத்தில் கிளம்பியவரை நகரம் நிறைய அலைக்கழிக்கிறது. அரசு அலுவலகத்தில் எவரும் பொறுப்பாகப் பதில் சொல்வதில்லை. இதற்கு இடையில் ‘என் மகன் திரும்பி வரும் வரையில் எதையும் சாப்பிட மாட்டேன்’ என்று பள்ளியின் வாசலிலேயே உண்ணாவிரதம் இருக்கிறார், கொட்ரேஷியின் தந்தை. மனைவியும் சுற்றமும் சொல்வதைக் கேட்காமல் பிடிவாதமாக இருக்கிறார்.

கொட்ரேஷியும் அவனது மாமாவும் நகரத்தில் அலைந்து சோர்வுறுகிறார்கள். கொட்ரேஷியின் வற்புறுத்தல் காரணமாக அவனைக் கல்வித்துறை அமைச்சரின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் மாமா. இவர்களை வீட்டு வாசலில் கூட அனுமதிக்காமல் காவல்துறை துரத்துகிறது. அமைச்சரின் கார் வெளியில் கிளம்பும்போது கோபத்துடன் அதன் மீது கல்லெறிகிறான் கொட்ரேஷி. வாகனத்தில் இருந்து வெளியே வரும் அமைச்சர் பரிவுடன் கொட்ரேஷியின் பிரச்னையைப் பற்றி கேட்கிறார். பிறகு உயர்கல்வி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்கிறார்.

அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் கிராமத்துக்கு வந்து உண்ணாவிரதம் இருக்கும் கொட்ரேஷியின் தந்தையை எழுப்புகிறார்கள். கௌடாவை வைத்தே உண்ணாவிரதத்தை முடிக்க வைக்கிறார்கள். அமைச்சரின் உத்தரவு காரணமாக பள்ளியில் அனுமதி கிடைக்கிறது. கொட்ரேஷி பள்ளியில் நுழைந்து கல்வி கற்கத் துவங்குவதோடு படம் நிறைகிறது.

எளிய சமூகத்தின் ஆதாரமான கனவுகள் கூட நசுக்கப்படும் அவலம்

இந்தப் படத்தை இயக்கியவர் நாகதிஹள்ளி சந்திரசேகர். கன்னட சினிமாத் துறையில் மிகுந்த அனுபவம் உடையவர். நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர் என்று பல முகங்களைக் கொண்டவர். கல்வி என்னும் அவசியமான விஷயம் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அடைய முடியாத பெருங்கனவாக இருப்பதையும் அதை நோக்கி அவர்கள் நகரும்போது எவ்வாறு சாதியம் மூர்க்கமாகத் தடைபோடுகிறது என்பதையும் இயல்பான காட்சிகளின் வழியாகப் பதிவு செய்துள்ளார்.

நாடகத்தனமான தருணங்கள் நிறைய இருந்தாலும், எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்து எங்கும் அலைபாயாமல் நேர்மையான நேர்க்கோட்டில் பயணிக்கிறது, இந்தத் திரைப்படம். அநாவசியமான இடைச்செருகல்களோ வணிகரீதியான துருத்தல்களோ இல்லை.

கொட்ரேஷியாக விஜய் ராகவேந்திரா என்னும் சிறுவன் சிறப்பாக நடித்துள்ளான். இவனது தந்தையாக நடித்துள்ள கரிபசவியாவின் நடிப்பு மிக உணர்ச்சிகரமாக இருந்தது. தனது மகனுக்கு எப்படியாவது கல்வியைப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று இவர் அடைகிற துடிப்பானது, ஒவ்வொரு எளிய குடும்பத்தின் தந்தையையும் பிரதிபலிக்கிறது. கொட்ரேஷியின் தாயாக நடித்துள்ள உமாஸ்ரீயின் நடிப்பும் மிக உணர்வுபூர்வமாக இருந்தது. தனக்கு வந்த ஒரு கனவை, பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் இவர் விவரிப்பது உட்பட பல காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார். சன்னி ஜோசஃப்பின் ஒளிப்பதிவு, அஷ்வத்தின் பாடல்கள் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் படத்துக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன.

தங்களின் ஆதாரமான கனவுகள்கூட மறுக்கப்படும்போது எளிய சமூகத்தினர் ஆவேசப்படுவது இயல்பு. தொடர் உண்ணாவிரதம் காரணமாகத் தன்னுடைய கணவன் இறந்து விடுவாரோ என்று அஞ்சுகிற கொட்ரேஷியின் தாய், தன் சுற்றத்தாரைப் பார்த்து “என் கணவர் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் உங்களைச் சும்மாவிடமாட்டேன். ஏதாவது செய்யுங்கள்’ என்று ஆவேசத்தோடு கூறுகிறார். அவர்களும் ஆவேசமாகக் கிளம்பிச் சென்று ஊர் பெரிய மனிதர்களிடம் கோபத்துடன் வாக்குவாதம் செய்கிறார்கள்.

நகரத்தில் தொடர்ச்சியான புறக்கணிப்பைச் சந்திக்கும் கொட்ரேஷி, ஒரு கட்டத்தில் கோபம் தாங்காமல் அமைச்சரின் கார் மீது கல்லை விட்டு எறிகிறான். ஆனால் இவனது நியாயமான கோபத்தை அமைச்சர் புரிந்து கொள்கிறார். (இந்த காமியோ பாத்திரத்தில் நடித்தவர் விஷ்ணுவர்தன்). “ஏன்.. இந்தப் பையனின் கிராமத்தில் அரசுப் பள்ளிக்கூடம் இல்லை?. அரசாங்க பள்ளிக்கூடத்தின் வசதிகள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்றடைவது அவசியம். அதற்கான நடவடிக்கைகளை உடனே செய்யுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறார்.

தங்களின் நியாயமான தேவைகள் கடுமையாக நிராகரிக்கப்படும்போது எளிய மக்கள் வேறுவழியின்றி வன்முறையை நோக்கிச் செல்வதை படம் உரையாடும் அதே சமயத்தில் கொட்ரேஷியின் தந்தை, காந்திய வழியில் உண்ணாவிரதம் செய்வதையும் பதிவு செய்திருக்கிறது.

தங்களது பிள்ளைகளுக்கு எப்படியாவது கல்வி தந்து பெரிய ஆளாக்கிவிடவேண்டும் என்று ஒவ்வொரு எளிய சமூகத்தின் பெற்றோரும் காணும் கனவையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்தையும் சாதியத் தடைகளையும் மிக இயல்பான மொழியில் பதிவு செய்திருக்கிறது, இந்த கன்னடத் திரைப்படம்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *