குப்தர்களின் ஆரம்பகால அரசர்களை அறிமுகம் செய்துகொள்ளும்முன் பொயு மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வட இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்று மீண்டுமொருமுறை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
வடக்கு-வட மேற்கு இந்தியாவில் கோலோச்சிய குஷாணப் பேரரசும் தக்காணத்தில் வலிமையுடன் ஆட்சி செய்த சாதவாகனப் பேரரசும் வீழ்ந்த பிறகு பல சிறிய அரசுகள் மேலெழுந்தன. அவற்றில் பிராமண குலத்தை சேர்ந்த அரசர்களான வாகாடகர்கள் தற்போது வாஷிம் என்று அழைக்கப்படும் வத்ஸகுல்ம நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். முதலாம் ப்ரவரசேனன் என்ற அவர்களின் அரசன் வாகாடகர்களின் வலிமையை நிறுவி தங்களை சாம்ராட் என்று அழைத்துக்கொள்ளும் நிலைக்கு அவர்களை உயர்த்தினான். நான்கு அஸ்வமேத யாகங்களையும் வாஜபேயம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களையும் செய்த அரசன் அவன். மகாராஷ்டிரத்தின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கே கிருஷ்ணா நதி வரை அவர்களது அரசு பரவியிருந்தது.
வாகாடகர்களின் இந்த எழுச்சி தக்காணத்தில் சாதவாகனர்களுக்குச் சவாலாக ஒரு காலகட்டத்தில் இருந்த க்ஷத்ரபர்களைப் (சாகர்களை) பாதித்தது. அதன் காரணமாக அவர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் ஆட்சி குஜராத்திலிருந்து மேற்கு மத்தியப் பிரதேசம் வரை மட்டுமே இருந்தது. இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து சசானியர்களால் அவர்கள் தொல்லைகளைத் தொடர்ந்து சந்தித்தனர். இதற்கிடையில் மத்தியப் பிரதேசத்தின் பத்மாவதி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாரசிவ நாகர் குலத்தினர் வலிமையடைய ஆரம்பித்தனர். அவர்களும் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததாகக் கூறிக்கொண்டனர். வடக்கே கங்கைச் சமவெளி வரை அவர்களது அரசு பரவியிருந்தது. அண்டை அரசுகளான வாகாடகர்களுக்கும் நாகர்களுக்கும் இடையில் உரசல்கள் இருந்துவந்தன.
அதே காலகட்டத்தில் நேபாளத்திலிருந்து மகதம் (பீகார்) வரை லிச்சாவி வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர்.
குடியரசுகள்
மன்னர்களின் முடியாட்சி நிலவிய இந்த இடங்கள் தவிர மக்களாட்சி நிலவிய குடியரசுகளும் அக்காலத்தில் இருந்தன. மக்கள் சபைகளால் இந்த அரசுகள் ஆளப்பட்டன. மௌரியர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன்பே தோன்றிய இந்தக் குடியரசுகள் மௌரிய, குஷாணப் பேரரசுகளால் தங்கள் வலிமையை இழந்தாலும் குஷாணப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னால் இருந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் மேலெழுந்தன. அவர்களில் முக்கியமான சில குடியரசுகளைப் பற்றிக் காண்போம்.
பஞ்சாபில் தோன்றிய மாளவர்கள் அங்கிருந்து சிறிது சிறிதாக இடம்பெயர்ந்து தற்போது மாளவம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தானுக்கும் மத்தியப் பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் குடியேறினர். குஷாணர்களுக்குப் பிறகு சுதந்தரப் பிரகடனம் செய்து தன்னாட்சி செய்ய ஆரம்பித்த இவர்களது ஆட்சிப் பரப்பு கணிசமான அளவில் இருந்தது. அவர்களது அருகிலேயே தற்போதைய ஜெய்ப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளை அர்ஜுனயனர்கள் என்ற இனத்தவர் ஆட்சி செய்தனர். சிறிது காலம் சாகர்களால் ஒடுக்கப்பட்டு இருந்தாலும் அவர்களது வலிமை குன்றியபிறகு தங்களை சுதந்தர அரசாக அர்ஜுனயனர்கள் அறிவித்துக்கொண்டு குடியாட்சி முறையை மேற்கொண்டனர்.
சட்லெட்ஜ் ஆற்றின் கரையில் தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்தவர்கள் யௌதேயர்கள். வீரமும் வலிமையும் மிக்கவர்கள் இந்த யௌதேயர்கள். முருகப் பெருமானை குலதெய்வமாகக் கொண்டவர்கள். குஷாணர்களின் வலிமையை ஒடுக்கிய முதல் குடியரசு என்ற பெருமையை உடையவர்கள். பொயு முதல் நூற்றாண்டில் தங்களை சுதந்தர அரசாகப் பிரகடனப் படுத்திக்கொண்டு நாணயங்களை வெளியிட்டனர் யௌதேயர்கள். அதில் முருகனின் உருவம் வேலோடும் மயிலோடும் பொறிக்கப்பட்டிருக்கும். யௌதேயர்களோடு இணைந்து குஷாணர்களோடு போரிட்டவர்கள் குனிந்தர்கள். யமுனை நதிக்கும் பியாஸ் நதிக்கும் இடைப்பட்ட பகுதிகளை இவர்கள் ஆட்சி செய்தனர்.
இவர்களைத் தவிர குல்லு பகுதியை ஆட்சி செய்த குலுதர்கள், பஞ்சாபின் வட பகுதியை ஆட்சி செய்த ஔதும்பரர்கள், தற்போதைய இமாசலப் பிரதேசப் பகுதியை ஆட்சி செய்த மாத்ரகர்கள் என்று மேலும் சில குடியரசுகளும் அக்காலத்தில் இருந்தன.
ஸ்ரீகுப்தர்
இத்தனை அரசுகளுக்கும் சமகாலத்தில் மேற்கு கங்கைச் சமவெளியில் கௌசாம்பிகளின் அரசு அமைந்திருந்தது. அவர்களது அரசர்களின் வரிசையில் பீமவர்மன் என்ற அரசனுக்குப் பிறகு வலிமையான அரசர்கள் யாரும் தோன்றவில்லை. கௌசாம்பி அரசு வீழ்ந்த பிறகு, அந்தப் பகுதியில் குப்தர்களின் ஆட்சி தோன்றியது. அவர்களின் முதலாம் அரசர் ஸ்ரீகுப்தர். இவரது ஆட்சியின் தொடக்க காலத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பொதுவாக பொயு 275ம் ஆண்டு வாக்கில் இவர் ஆட்சிக்கு வந்ததாக எடுத்துக்கொள்ளலாம். பொயு 300 வரை இவர் ஆட்சி செய்தார்.
இந்த நிகழ்வைப் பற்றி ‘குப்தர்களின் அரசு தோன்றியதால் மீண்டும் (இந்தியாவில்) ஒளி பிறந்தது, இருள் என்னும் திரை விலகியது, இந்தியா மீண்டும் ஒன்றுபட்டு உயர்ந்தது’ என்று வரலாற்று ஆய்வாளர் வி.ஏ.ஸ்மித் குறிப்பிட்டிருக்கிறார். மிகவும் சரியான பார்வை இது. குஷாணர்களுக்குப் பிறகு துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்த இந்தியா மீண்டும் ஒன்றுபட்டது குப்தர்களது ஆட்சியில்தான். அந்த வகையில் இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வு இது.
சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு அவர்களது முதலாம் அரசரை ‘மகாராஜா ஸ்ரீகுப்தர்’ என்று அழைக்கிறது. சமுத்திரகுப்தரின் வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிடும்போது
‘மகாராஜாதிராஜர் சந்திரகுப்தர்-மஹாதேவி குமாரதேவியின் மகனும் லிச்சாவிகளின் தௌஹித்திரனும் (மகள் வயிற்றுப் பேரன்) மகாராஜா கடோத்கஜரின் பேரனும் சிறப்புவாய்ந்த மகாராஜா ஸ்ரீகுப்தரின் கொள்ளுப்பேரனும் ஆன சமுத்திரகுப்தர்’ என்கிறது அந்தக் கல்வெட்டு.
முதலாம் சந்திரகுப்தர் மகாராஜாதிராஜா என்று அதே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இதை வைத்து ஸ்ரீகுப்தரும் அவருக்கு அடுத்து வந்த கடோத்கஜ குப்தரும் சிற்றரசர்களாக இருந்தனர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. பெரும் வீரர்களும் வலிமையான அரசுகளை ஆட்சி செய்தவர்களுமான வாகாடகர்களின் முதலாம் பிரவரசேனனும் பத்மாவதியின் நாக அரசர்களும் தங்களை மகாராஜா என்றே அழைத்துக்கொண்டனர். ஆகவே குப்தர்களின் முதல் இரண்டு அரசர்களும் கூட சுயேச்சையாகவே ஆட்சி செய்து வந்தனர் என்பது தெளிவு.
ஸ்ரீகுப்தரின் பெயர் தொடர்பான சர்ச்சையை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய பெயரில் உள்ள ஸ்ரீ என்பது முன்னொட்டே என்று பல ஆய்வாளர்களால் இப்போது ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள குப்த என்ற பெயரைக் கொண்டு அவருக்கு குப்தா என்றே பெயரிட்டிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். போலவே அவரின் பெயரை சீன யாத்திரிகரான யி ஜிங் குறிப்பிட்டு ஸ்ரீ குப்தர் எழுப்பிய சீனக் கோவிலையும் பற்றி தனது புத்தகத்தில் எழுதியிருந்தார் என்றும் பார்த்தோம். ஆகவே ஸ்ரீகுப்தர் பல்வேறு சமயங்களை ஆதரித்தார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
கடோத்கஜர்
ஸ்ரீகுப்தருக்குப் பிறகு ஆட்சியில் ஏறிய அவரது மகனான கடோத்கஜரும் மகாராஜா என்றே சமுத்திரகுப்தரின் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். பிரபாவதிகுப்தாவின் பூனாச் செப்பேடு இவரையே குப்தர்களின் அரசைத் தோற்றுவித்தவர் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அது காலத்திற்குப் பிந்தையது என்ற காரணத்தால் சமுத்திரகுப்தரின் கல்வெட்டுச் செய்தியையே நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம். கடோத்கஜரும் தன் தந்தையைப் போலவே ஒரு சிறிய பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்தார்.
சில ஆய்வாளர்கள் இவரை வைசாலியில் கிடைத்த முத்திரைகளில் உள்ள கடோத்கஜகுப்தர் என்ற பெயரை வைத்துக் குழப்பிக்கொள்கின்றனர். கடோத்கஜரின் காலத்தில் குப்தர்களின் அரசு வைசாலி வரை பரவியிருக்கவில்லை. அந்த முத்திரைகளுக்கு உரிமையான கடோத்கஜ குப்தர் இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தவர். அந்த மாகாணத்தின் தலைவராக இருந்தவர். குப்தர்களின் முன்னோர் அல்ல. அந்த முத்திரைகள் அவரை மகாராஜா என்று குறிப்பிடாமல் குமார அமாத்யாயர் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
கடோத்கஜரின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு ஒன்று இந்திய அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. வாகாடகர்களின் அரசனான முதலாம் ப்ரவரசேனனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்களின் முதலாமானவனும் பட்டத்து இளவரசனுமான கௌதமிபுத்திரனுக்கு பாரசிவ நாகர்களின் அரசனான பவநாகனின் மகளைத் திருமணம் செய்துகொடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. வலிமை மிக்க இந்த இரு அரசுகளின் மண உறவு அக்கம் பக்கத்து அரசுகளுக்கு ஒரு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ப்ரவரசேனன் உயிருடன் இருக்கும்போதே கௌதமிபுத்திரன் இறந்துபட்டான். அவனுக்குச் சகோதரர்கள் இருந்த போதிலும் அவனது மகனான முதலாம் ருத்ரசேனனே பட்டத்திற்கு வந்தான். வாகாடகர்களின் சாசனங்கள் அவனை பவநாகரின் தௌஹித்திரர் என்று பெருமையுடன் குறிப்பிடுவதிலிருந்து இரு அரசுகளின் இந்த உறவை அவர்கள் மதித்த விதம் தெளிவாகிறது. தங்களது மகள் வயிற்றுப் பேரனை அரசனாக்கியதிலிருந்து நாகர்களின் வலிமையையும் இந்த நிகழ்வு விளக்கியது.
குப்தர்களுக்கும் இந்த மண உறவுக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் நேரலாம். அக்காலத்திலிருந்து இன்று வரை கூட்டணிகளின் வலிமை எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தன்னுடைய அரசின் அருகில் இப்படி ஒரு சக்திவாய்ந்த கூட்டணி உருவானதைக் கண்ட கடோத்கஜர் சும்மா இருக்க விரும்பவில்லை. அவர் என்ன செய்தார் ? பார்க்கலாம்.
வாகாடகர்களுக்கும் நாகர்களுக்கும் இடையில் உருவான இந்த மண உறவைப் பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு. பொதுவாக இந்திய அரசர்களின் வம்சாவளியைப் பற்றி சாசனங்கள் குறிப்பிடும்போது இன்னாருடைய மகன், இன்னாருடைய பேரன் என்று தந்தைவழிச் சொந்தங்களையே குறிப்பிடுவது வழக்கம். ‘தௌஹித்திரன்’ என்று தாய்வழி வம்சத்தைக் குறிப்பிடுவது அரிது. கௌதமிபுத்திரனின் மகனான முதலாம் ருத்ரசேனன் பவநாகரின் தௌஹித்திரன் என்று வாகாடகர்களின் சாசனங்களில் பெருமையாகக் குறிப்பிடுவது பற்றி ஆய்வாளர் வி.எஸ்.பதக் ஒரு புதிய கருத்தை முன்வைத்தார்.
அரசின் சாசனங்களில் தௌஹித்திரர் என்று குறிப்பிடும்போது அது பெண் வயிற்றுப் பேரன் என்பதை மட்டும் குறிப்பிடுவதில்லை அது வாரிசுரிமையையும் குறிக்கிறது என்கிறார் அவர். வாகாடகர்கள், குப்தர்கள், கோபராஜாவின் ஏரான் கல்வெட்டு என்று பல உதாரணங்களைக் காட்டி இன்னாருடைய தௌஹித்திரன் என்று ஒருவர் குறிப்பிடப்பட்டால் அது அவரது வாரிசு (அதாவது தத்துப் புத்திரர்) என்பதையும் அது குறிக்கிறது என்கிறார் அவர். அதற்கு நீதி நூல்களையும் மேற்கோள் காட்டுகிறார்.
நாகர்களின் அரசரான பவநாகருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால், வாகாடகர்களுக்கு தன் மகளை மணம் செய்துகொடுக்கும் போதே அவளது மகனே தன் வாரிசு என்றும் அவனே இரு நாடுகளையும் ஆளவேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருக்கலாம். சண்டையிட்டுக்கொண்டிருந்த இரு நாடுகளும் இப்படி ஒன்றிணைவதை விரும்பிய ப்ரவரசேனனும் அதற்கு இசைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார். அதன் காரணமாகவே கௌதமிபுத்திரன் இறந்துபட்டதும் தன்னுடைய மற்ற மூன்று மகன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுக்காமல் கௌதமிபுத்திரனின் மகனான ருத்ரசேனனை அடுத்த அரசனாக ப்ரவரசேனன் அறிவித்தான் என்பது அவரது முடிவு.
(தொடரும்)