தங்களுடைய பரம வைரிகளான நாகர்களுடைய கூட்டணியை முறியடித்த பிறகு சமுத்திரகுப்தரின் கவனம் இன்னொரு வலிமையான அரசான வாகாடகர்கள்மீது திரும்பியது. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சமுத்திரகுப்தருக்கும் வாகாடகர்களுக்கும் நடந்த போரைப் பற்றி நேரடிக் குறிப்புகள் பிரயாகைக் கல்வெட்டில் இல்லை என்பதுதான். ஆனால் அந்தக் கல்வெட்டில் சமுத்திரகுப்தர் தோற்கடித்த ஆர்யவர்த்த அரசர்களின் பட்டியலில் ருத்ரதேவன் என்ற பெயர் வருகிறது. அது வாகாடக அரசன் முதலாம் ருத்ரசேனன் என்பது பல வரலாற்றாய்வாளர்களின் கருத்து. இதை மறுப்பவர்களும் உள்ளனர். அவர்களின் வாதங்கள் பின்வருமாறு :
– வாகாடகர்கள் தக்காணத்தில் ஆட்சி செய்தவர்கள். அவர்கள் எப்படி ஆர்யவர்த்தத்தில் உள்ள அரசர்களின் பட்டியலில் சேரமுடியும்? ஆகவே ருத்ரதேவன் வேறு ஒரு அரசனாகவே இருக்கமுடியும்
– பின்னாளில் ருத்ரசேனனின் மகனான முதலாம் ப்ருதிவிசேனன் அவனுடைய மகனை சமுத்திரகுப்தரின் மகன் (இரண்டாம்) சந்திரகுப்தரின் மகளுக்குத் திருமணம் செய்துகொடுத்து அவர்களோடு மண உறவு வைத்துக்கொண்டான். தன்னுடைய தகப்பனைக் கொன்ற பரம்பரையோடு இப்படி உறவு கொண்டாடுவது எப்படிச் சாத்தியமாகும்?
இந்தக் கேள்விகளுக்கான எதிர்வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலாவதாக வாகாடகர்கள் தக்காணத்தில் ஆட்சி செய்தனர் என்ற போதிலும் நாகர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டபோது, முதலாம் ருத்ரசேனன் நாகர்களின் ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளைப் பிடித்துக்கொண்டான் என்று பார்த்தோம். தற்போதைய மத்தியப் பிரதேசத்தில் விதிஷா என்ற இடத்தைச் சுற்றியுள்ள இந்தப் பகுதிகள் ஆர்யவர்த்தத்தில்தான் உள்ளன. குப்தர்களின் அரசுக்கு மிக அருகில் உள்ள இந்தப் பகுதி ஒரு முக்கியமான கேந்திரமாகும். கங்கைச் சமவெளியில் மேற்கிலுள்ள பகுதிகளையும் விந்தியத்திற்குத் தெற்கில் உள்ள நாடுகளையும் கண்காணிக்க சிறந்த இடமாக விதிஷா இருந்தது. அதன் காரணமாக பல போர்களும் அங்கே நிகழ்ந்திருக்கின்றன. ஆகவே மேற்கு கங்கைச் சமவெளியை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த பிறகு, இந்த இடத்தை மட்டும் வாகாடகர்களிடம் விட்டுவைக்க சமுத்திரகுப்தர் விரும்பியிருக்கமாட்டார் என்பது தெளிவு.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, அங்குள்ள ஏரான் என்ற இடத்தில் சமுத்திரகுப்தரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்தக் கல்வெட்டு ஐரிகினப் பிரதேசம் என்ற ஏரானை சமுத்திரகுப்தர் ஸ்வபோகமாகத் (தன்னுடைய சொந்த உரிமையாக) ஆக்கிக்கொண்டார் என்று குறிப்பிடுகிறது. தவிர அந்தக் கல்வெட்டின் அழிந்து போன பகுதிகளில் உள்ள சில எழுத்துகளை வைத்து அங்கே சமுத்திரகுப்தர் எதையோ கட்டியிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அங்கே அவர் கட்டியது தற்போது அழிந்து போன நிலையில் உள்ள விஷ்ணுவின் பெரும் கோவில் ஒன்றை என்று அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் குறிப்பிடுகிறார். ஏரான் கல்வெட்டடில் ஒவ்வொரு ஸ்லோகமும் தனித்தனியாக எண்களால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் இது ஒரு முக்கியமான கல்வெட்டு என்று கன்னிங்ஹாம் கருதுகிறார். தன்னைப் பரமபாகவதர் என்று பெரும் விஷ்ணுபக்தனாகக் கருதிக்கொண்ட சமுத்திரகுப்தர், திருமாலுக்கு அங்கே ஒரு கோவிலை எழுப்பியதிலும் வியப்பு இல்லை அல்லவா.
மேற்குறிப்பிட்ட காரணங்களால், ஆர்யவர்த்தத்தில் ஒரு கேந்திரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட ருத்ரசேனனோடு போரிட்டு சமுத்திரகுப்தர் அவனைத் தோற்கடித்திருக்கிறார் என்று தெரிகிறது. அந்த இடத்தில் தன்னுடைய ஆட்சியை அவர் நிலைநிறுத்திக்கொண்டதற்கான சாட்சியாக ஏரான் கல்வெட்டு விளங்குகிறது. வாகாடகர்களோடு அவர் நடத்திய போர் ஆர்யவர்த்தத்தில் நடந்ததால், ருத்ரதேவன் என்று ருத்ரசேனனின் பெயரை ஆர்யவர்த்தத்தில் உள்ள அரசர்களோடு ஹரிசேனன் சேர்த்திருக்கவேண்டும்.
மண உறவுகளைப் பொருத்தவரை, இந்திய வரலாற்றில் இது போன்று நடந்திருப்பதற்குப் பல உதாரணங்கள் இருப்பதைப் பார்க்கலாம். பரமவைரிகளாக இருந்தும் அரசியல் காரணங்களால் அரசவம்சங்கள் தங்கள் கௌரவத்தை விட்டுக்கொடுத்து மண உறவு வைத்துக்கொள்வது பல முறை நடந்துள்ளது. தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்த சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே வீரராஜேந்திரசோழனின் காலத்தில் ஏற்பட்ட மண உறவு இதற்கோர் உதாரணம். ஆகவே வாகாடகர்களுக்கும் குப்தர்களுக்கும் ருத்ரசேனன் கொல்லப்பட்டதற்கு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மண உறவும் இது போன்ற சூழ்நிலைகளின் காரணமாக ஏற்பட்டதாகவே இருக்கவேண்டும்.
தர்க்கரீதியாகப் பார்த்தாலும், சமுத்திரகுப்தர் வாகாடகர்கள்மீது போர் தொடுக்கவில்லை என்ற கருத்து சரியானதல்ல. தக்ஷிணபாதத்தின் மீது படையெடுத்த சமுத்திரகுப்தர், அதன் வடக்கில் மிக வலிமையுடன் ஆட்சி செய்த வாகாடகர்களின் அரசைச் சுற்றிக்கொண்டு தெற்கில் நீண்ட தூரம் தன்னுடைய படைகளை நடத்திச் சென்றார் என்பது அபத்தமாகத் தோன்றுகிறது. அவர்களை நன்றாக உள்ளிழுத்து, தனக்கு அடங்கிய சில அரசுகளுடன் சேர்ந்துகொண்டு வாகாடகர்கள் குப்த அரசுக்கும் சமுத்திகுப்தரின் படைகளுக்கும் இடையே குறுக்கே ஒரு திரையைப் போட்டுவிட்டால், தானும் தன் படைகளும் ஆந்திரத்திலேயே சமாப்தி ஆகிவிடுவோம் என்பது பெரும் ராஜதந்திரியும் சிறந்த படைத்தளபதியும் ஆன சமுத்திரகுப்தருக்குத் தெரியாதா என்ன? அப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை அவர் ஒரு போதும் செய்ய மாட்டார் என்ற காரணத்தினால் வாகாடகர்களை ஒரு ‘காட்டுக் காட்டிவிட்டுத்தான்’ தக்காணத்திலுள்ள மற்ற அரசர்கள் மீது சமுத்திரகுப்தர் படையெடுத்திருக்கவேண்டும் என்ற கருத்து வலிமையானதாகவே தோன்றுகிறது.
சமுத்திரகுப்தருக்கும் ருத்ரசேனனுக்கும் இடையேயான போர் ஏரானில் நடந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர் கோயல் கருதுகிறார். அங்கே தனது வெற்றியைக் குறிக்கும் விதமாகவே சமுத்திரகுப்தர் விஷ்ணுவின் கோவிலையும் எழுப்பினார் என்று அவர் குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த காகர்கள் என்ற குறுநில மன்னர்களையும் சமுத்திரகுப்தர் தோற்கடித்தார். அவர்கள் குப்தர்களுக்கு அடிபணிந்ததன் காரணமாக அவர்களை தன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அரசர்களாக ஆளச்செய்தார்.
வங்கப் படையெடுப்பு
இப்படியாக தன்னுடைய அரசின் மேற்குப் பகுதி முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கொண்டுவந்த பிறகு சமுத்திரகுப்தரின் படைகள் கிழக்கு நோக்கிச் சென்றன. அதன் காரணத்தை ஊகிப்பது சிரமமல்ல. கிழக்கு கங்கைச் சமவெளியும் வளம் வாய்ந்தது. நாட்டின் முக்கிய வருமானங்களில் ஒன்றான வணிகம், இந்தியாவிற்குக் கிழக்கில் இருந்த நாடுகளோடு நடைபெற முக்கியமானது அந்தப் பகுதிகளை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. தவிர சுற்றிலும் நிலப்பகுதியால் சூழப்பட்டிருந்த குப்தர்களுக்கு வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ள ஒரு துறைமுகம் தேவையாக இருந்தது. அந்த வசதி கங்கை நதியின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள தாம்ரலிப்தியில் இருந்தது. தாம்ரலிப்தியில் இருந்துதான் சீனா, தாய்லாந்து, மலேயா, இலங்கை போன்ற கீழ்த்திசைப் பகுதிகளுக்கும் எகிப்து ,அரேபியா போன்ற இந்தியாவின் மேற்கு நாடுகளுக்கும் வணிகம் நடைபெற்று வந்தது. ஆகவே வங்காளத்தை வெல்வது சமுத்திரகுப்தரின் அடுத்த நோக்கமாக இருந்தது.
போலவே, நில வழியாக திபெத், சீனா போன்ற நாடுகளுக்கும் காமரூபம் என்று அழைக்கப்பட்ட அஸ்ஸாமிற்கும் செல்லும் பாதைகள் வங்காளத்தில் உள்ள புண்டரவர்த்தனத்தைத் தொட்டுச் சென்றன. துணிகள், வாசனைப் பொருட்கள் போன்றவற்றை வணிகம் செய்வதற்கு இந்தப் பாதை முக்கியமானதாக இருந்தது. இது போன்ற பொருளாதாரக் காரணங்களால் சமுத்திரகுப்தர் வங்காளத்தை நோக்கிப் படையெடுத்தார்.
வங்காளத்தின் வடக்கில் (தற்போது பங்களாதேஷில் உள்ள போக்ரா பகுதி) உள்ள புண்டரவர்த்தனத்தை ஆட்சி செய்த நாகதத்தன் என்ற அரசனைப் போரில் தோற்கடித்தன குப்தர்களின் படைகள். அடுத்ததாக வங்காளத்தின் மேற்குப் பகுதியை ஆட்சி செய்த சந்திரவர்மனையும் சமுத்திரகுப்தர் தோற்கடித்து அந்த அரசையும் குப்தர்களோடு இணைத்துக்கொண்டார். பின்னாளில் சந்திரவர்மனின் உறவினனான பலவர்மன் இன்னும் சிலரோடு சேர்ந்து குப்தர்களின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தபோது அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு அந்தக் கூட்டணி தோற்கடிக்கப்பட்டதாக மெஹரோலியில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. வங்காளத்தின் மீதான இந்த வெற்றிகளின் மூலம் சமுத்திரகுப்தரின் ஆட்சிப் பகுதி கிழக்கே காமரூபம் (அஸ்ஸாம்) வரையிலும் தென்கிழக்கு வங்காளத்தின் சாமதத்தம் வரையிலும் நீண்டது.
ஆர்யவர்த்தம் முழுவதையும் தன் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த சமுத்திரகுப்தர் அதன் எல்லைப்புற நாடுகளைக் கப்பம் கட்டும் நாடுகளாக மட்டும் மாற்றி தன்னுடைய மையமான அரசைச் சுற்றி ஒரு பாதுகாப்பான வலையைப் பின்னிக்கொண்டார். மிகவும் வலிமையான படையைக் கொண்டிருந்த சமுத்திரகுப்தர் அந்த நாடுகளையும் ஆக்கிரமித்து குப்த அரசோடு சேர்த்திருக்கலாம். ஆனால் சிறந்த ராஜதந்திரியான சமுத்திரகுப்தர் தன்னுடைய வலிமையை அறிந்திருந்த காரணத்தால், காடுகளால் சூழப்பட்டு ஆறுகள், மலைகள் போன்று இயற்கை அரண்களால் பாதுகாக்கப்பட்ட அந்த அரசுகளை நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது அவற்றோடு தொடர்ந்து மோதல் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்பதையும் அதனால் தன் அரசுக்குப் பலவீனம் என்பதையும் உணர்ந்திருந்தார்.
பழங்குடி மக்களைப் பெரும்பாலும் கொண்டிருந்த ஆடவிக அரசுகளான அவை குப்தர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டபின், அவற்றைக் கப்பம் மட்டும் கட்டச்சொல்லிவிட்டு அவற்றோடு சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொண்டார் சமுத்திரகுப்தர். சாமதத்தம், காமரூபம் போன்ற நாடுகளைப் பொருத்தவரை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவை வேறுபட்டு இருந்ததாலும் அவற்றை குப்தர்களோடு சேர்ப்பது பல விதமான குழப்பங்களை உருவாக்கும் என்பதாலும் தனி நாடுகளாகவே அவற்றை அங்கீகரித்தார் சமுத்திரகுப்தர். பிரயாகைக் கல்வெட்டில் ஹரிசேனன் பொறித்திருக்கும் வார்த்தைகளைப் பார்க்கும்போது வலிமையான சமுத்திரகுப்தரின் படைகளோடு போரிட விரும்பாமல் இந்த நாடுகள் தாமாகவே அவருடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கருதலாம்.
இருந்தாலும் சில இடங்களில் அங்கிருந்த அரசர்களை அகற்றி தனக்கு விசுவாசமான ஆட்களை சமுத்திரகுப்தர் ஆட்சியாளராக நியமித்ததற்கும் ஆதாரங்கள் உண்டு. காமரூபத்தில் அரசனாக இருந்த புஷ்யவர்மன் என்ற அரசன் ‘வர்மன்’ வம்சத்தில் முதல் அரசனாகக் கருதப்படுகிறான். அவனை குப்தர்களின் அரசர் நியமித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அதன் காரணமாக தன்னுடைய மகனுக்கும் மகளுக்கும் அரசர், அரசிகளின் பெயர்களை அவன் வைத்தான் என்று சொல்லப்படுகிறது.
இப்படி வட இந்தியா முழுவதையும் தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட்ட சமுத்திரகுப்தர் அதன்பின் தக்ஷிணபாதம் என்று அழைக்கப்பட்ட தென் இந்தியாவை நோக்கி தன்னுடைய படைகளைச் செலுத்தினார்.
(தொடரும்)