பாரதத்திற்குப் பல இயற்கை அரண்கள் பெரும் பாதுகாப்பு அளித்திருந்தாலும், அதன் வடமேற்குப் பகுதி பலவீனமாகவே இருந்திருக்கிறது என்பதையும் அதுவே பல அயல்நாட்டு அரசுகளின் ஊடுருவலுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் பார்த்தோம். பொயு முதல் நூற்றாண்டுக்குப் பின் பெரும் குழப்பம் நிலவிய அந்தப் பகுதியில், குப்தர்களின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் குஷாணர்களும் சசானியர்களும் சில பகுதிகளைப் பிடித்துக்கொண்டு ஆட்சி செய்துகொண்டிருந்தனர். ஒரு காலத்தில் பெரும் அரசாக வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு கொண்டிருந்த குஷாணர்களின் ஆட்சிப் பரப்பு சுருங்கிப் போனாலும், அவர்கள் ஆட்சி செய்த பகுதி பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பட்டுச் சாலை என்று அழைக்கப்பட்ட வணிகத்திற்கு முக்கியமான சாலையின் மூன்று பாதைகள் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களின் ஊடே சென்றன. ஆகவே அவர்களைச் சுற்றியுள்ள அரசுகளுக்கு அதன்மீது ஒரு கண் இருந்தது.
குறிப்பாக சசானிய அரசன் முதலாம் அர்தஷீர், குஷாணர்கள் ஆட்சி செய்த பாக்டீரியாவின் பல பகுதிகளை வென்று தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான். ஆயினும் குஷாண அரசர்களையே அந்தப் பகுதிகளை ஆளுமாறு அனுமதித்திருந்தான். அக்காலகட்டத்தில் இரண்டு விதமான நாணயங்கள் அந்தப் பகுதியில் அச்சிடப்பட்டன. சசானியர்கள் நேரடியாக வெளியிட்ட குஷாண ஷாஹன்ஷா என்ற வகை நாணயங்களும் அவர்களின் ஆளுநர்கள் வெளியிட்ட குஷாண ஷா என்ற வகை நாணயங்களும் தான் அவை. இது சசானிய அரசனான இரண்டாம் ஷாபுர் காலம் வரை தொடர்ந்தது. இந்த ஷாபூர் தற்காலத்தில் காபூல் என்ற அழைக்கப்படும் கபீசபுரத்திலிருந்து ஆட்சி செய்துகொண்டிருந்தான்.
பொயு 350ம் ஆண்டு வாக்கில் சீன நாடோடிக் கூட்டம் ஒன்றினால் தெற்கு நோக்கி விரட்டப்பட்ட குஷாண அரசன் கிடாரன், காந்தாரத்தைத் தன் தலைநகராக ஆக்கிக்கொண்டு ஷாபூருக்கு அடங்கிய சிற்றரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்தான். ஒரு காலகட்டத்தில் சசானியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கிடாரன் தன்னாட்சி செய்ய ஆரம்பித்துவிட்டான் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பொயு 367இல் நடந்த ஒரு போரில் கிடாரன் ஷாபூரைத் தோற்கடித்துத் துரத்தியிருக்கிறான். இப்படியாக சமுத்திரகுப்தரின் காலத்தில் இரு பெரும் சக்திகளான குஷாணர்களும் சசானியர்களும் வடமேற்குப் பகுதியை ஆட்சி செய்து வந்தனர். குப்தர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பல குடியரசுகள் அமைந்திருந்தன. அவற்றின்மீது சமுத்திரகுப்தரின் கவனம் சென்றது.
ராஜஸ்தானின் தெற்குப் பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த மாளவர்களை குப்தர்களின் படை தாக்கி அவர்களைத் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். அதன்பின் அருகிலிருந்த அர்ஜுனயனர்களை சமுத்திரகுப்தர் வென்றார். அடுத்ததாக மூலஸ்தானபுரம் வரையுள்ள பஞ்சாபின் பெரும் பகுதியை ஆண்டுகொண்டிருந்த யௌதேயர்களுக்கும் குப்தர்களுக்கும் போர் மூண்டது. இதிலும் குப்தர்களே வெற்றி பெற்றனர். மேலும் வடக்கு நோக்கி முன்னேறிய குப்தர்களின் படை அடுத்து எதிர்கொண்டது சாகலம் (சியால்கோட்) என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மத்ரகர்களை. அவர்களைப் போரில் வென்ற சமுத்திரகுப்தரின் படை குஷாணர்களின் அரசின் எல்லைப்புறத்தை எட்டியது.
பிரயாகைக் கல்வெட்டின் படி வடமேற்கில் ஆட்சிசெய்துகொண்டிருந்த ‘தெய்வபுத்ரஷாஹி ஷாஹானுஷாஹி’, ஆத்ம நிவேதனத்தின் மூலமும் (தாமே நேரில் வருவது) கன்யோபாயனதானத்தின் மூலமும் (பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பது) சமுத்திரகுப்தரிடம் சமாதானம் செய்துகொண்டனர் என்று தெரிகிறது. இதைச் சிலர் தெய்வபுத்ரர், ஷாஹி, ஷாஹானுஷாஹி என்ற மூன்று அரச குலத்தினர் என்று பிரித்துப் படித்தனர். தெய்வபுத்ர என்பது கனிஷ்கருக்குக் கொடுக்கப்பட்ட பட்டமாகும். சில சீன நூல்கள் கூட கனிஷ்கரைப் பற்றிக் குறிப்பிடும்போது இந்த அடைமொழியை வைத்து அழைக்கின்றன. இது சமஸ்கிருத அடைமொழி என்பது தெளிவு. அடுத்துள்ள ஷாஹி, ஷாஹானுஷாஹி என்ற இரண்டு பெயர்களும் பாரசீகத்தை அடிப்படையாகக் கொண்டவை (பின்னாளில் இரானிய அரசர்கள் ஷா என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டது இங்கே நினைவுகூறத்தக்கது).
ஷாஹி என்றால் அரசன், ஷாஹானுஷாஹி என்றால் பேரரசன். இதையெல்லாம் வைத்து, இவை மூன்று பெயர்கள் அல்ல, இரண்டே பெயர்கள்தான் என்ற முடிவு எட்டப்பட்டது. அதாவது தெய்வபுத்ர ஷாஹி என்பது ஒரு பெயர், ஷாஹானுஷாஹி என்பது இன்னொரு பெயர். சமுத்திரகுப்தரின் சமகாலத்தவனான கிடாரன் குஷாணர்களின் வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு தெய்வபுத்ர என்ற அடைமொழி இருந்தது. தன்னுடைய நாணயங்களில் “கிடார குஷாண ஷாஹி” என்று அவனுடைய பெயரை கிடாரன் பொறித்திருந்தது இங்கே கவனிக்கவேண்டியதாகும். அப்படியானால் ஷாஹானுஷாஹி என்பது யார் என்று பார்த்தால், சசானியர்களின் பேரரசனாக விளங்கிய இரண்டாம் ஷாபூரையே அது குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.
இந்தக் குறிப்புகளிலிருந்து சமுத்திரகுப்தரின் வடமேற்குப் படையெடுப்பின் விவரங்களைத் தொகுத்தால், வடமேற்குப் பகுதியில் தனக்கு இணக்கமான, நிலையான அரசு ஒன்றை விரும்பிய சமுத்திரகுப்தர் கிடாரனோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதைத்தான் பரிசுகள் தந்து அவரோடு தெய்வபுத்திரஷாஹி நட்புக்கொண்டதாக பிரயாகைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மிகச் சிறந்த ராஜதந்திரியான சமுத்திரகுப்தர் தன்னுடைய அரசை நீண்ட தூரத்திற்கு நீட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பதை அவரது தென்னக திக்விஜயத்தின் போதே பார்த்தோம். அதே போன்ற ஒரு அணுகுமுறையைத்தான் அவர் வடமேற்கிலும் கடைப்பிடித்திருக்கிறார். தனக்கு அணுக்கமான அரசு ஒன்று அங்கே இருப்பது பலவிதத்திலும் அனுகூலம் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். கிடாரன் சசானிய அரசனான ஷாபூரை வென்று தன்னாட்சி பெறுவதற்கும்கூட அவர் உதவியிருக்கக்கூடும். ஷாஹானுஷாஹி என்று அவர் குறிப்பிடுவது ஷாபூரைத்தான் என்பதால், சமுத்திரகுப்தரோடு சசானிய அரசனான ஷாபூரும் அந்தப் போருக்குப் பின் சமாதானம் செய்துகொண்டிருக்கலாம். இப்படியாக பொருளாதார ரீதியில் மிக முக்கியமான வடமேற்கு இந்தியாவை அவர் தன்னுடைய வசத்தில் கொண்டுவந்தார். இந்த வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள ரோம சாம்ராஜ்யத்திற்கு அவர் ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாக ரோமானிய வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஆட்சி செய்த சாகர்களும் சமுத்திரகுப்தரோடு மேற்சொன்ன முறைகளைக் கையாண்டு நட்புறவு ஏற்படுத்திக்கொண்டதாக கல்வெட்டு குறிக்கிறது. இந்தோ ஸித்திய வம்சாவளியினரான சாகர்கள் குஜராத்-மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால், சமுத்திகுப்தரின் மகனான இரண்டாம் சந்திரகுப்தருக்கும் சாகர்களுக்கும் இடையில் பெரும் பகை நிலவியது என்பது வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. ஆகவே, கல்வெட்டு குறிப்பிடுவது இந்தியாவின் மேற்கில் ஆட்சி செய்த சாகர்கள் அல்ல, வடக்கில் ஆட்சி செய்த அதே பெயரைக் கொண்ட வேறு ஒரு பிரிவினர் என்று சொல்பவர்களும் உண்டு. இதைப் போல முருந்தர்கள் என்ற அரசைப் பற்றியும் பிரயாகைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சாகர்களின் மொழியில் இதற்கு சுவாமி என்று பொருள். சாகர்களின் கல்வெட்டுகளில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மேற்கு க்ஷத்ரபர்களின் ஒரு பிரிவினராகவோ அவர்களது கிளை வம்சத்தினராகவோ இவர்கள் இருக்கக்கூடும்.
பாரதத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் மட்டுமல்லாது கடலைத் தாண்டியும் சமுத்திரகுப்தரின் கரங்கள் நீண்டன. இந்தியாவின் அருகில் உள்ள இலங்கையோடு வணிகத் தொடர்புகளை அவர் ஏற்படுத்திக்கொண்டார். தாம்ரலிப்தி துறைமுகத்திலிருந்து இலங்கைத் தீவுக்கு வாசனைத் திரவியங்களையும், உலோகங்களையும், தாதுக்களையும் ஏற்றிக்கொண்டு பல கலங்கள் சென்றன. அப்படி ஒரு கலத்தில் ஏறித்தான் பின்னாளில் இந்தியா வந்த சீனத் தூதர் பாஹியான் சென்றதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அடிப்படையில்தான் இலங்கை அரசரோடு அவர் உறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதற்கும் அதை தன்னுடைய பிரயாகைக் கல்வெட்டில் இலங்கையை நட்புக்கொண்ட நாடு என்று அவர் குறிப்பிட்டதற்குமான காரணங்களாக நாம் கருதலாம்.
பிரயாகைக் கல்வெட்டு மட்டுமல்லாமல், சமுத்திரகுப்தர் இலங்கையோடு ராஜீக உறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது பற்றி சீனப் புத்தகம் ஒன்றும் குறிப்பிட்டிருக்கிறது. வாங் ஹுயூன் சி என்ற நூல் இலங்கை அரசன் ஶ்ரீமேகவர்ணன் இந்திய அரசரான சன் ம்யூ தோ லொ க்யூ தோ வுக்கு தூது ஒன்றை அனுப்பினான் என்றும் புத்த கயாவில் மடம் ஒன்றைக் கட்டிக்கொள்ள அனுமதி கேட்டான் என்றும் கூறுகிறது. அந்த அனுமதி உடனே வழங்கப்பட்டது. சுவான் சங் இந்தியா வந்தபோது அந்த மடாலயம் பெரிதாக வளர்ந்திருந்தது. அதன் பராமரிப்பிற்காக இலங்கை அரசன் இந்திய அரசருக்கு கப்பம் வழங்கியதாக சுவான் சங் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவரங்கள் சமுத்திகுப்தரின் காலத்திலிருந்தே இலங்கையோடு குப்தர்கள் கொண்டிருந்த உறவை உறுதி செய்கிறது.
இலங்கையைப் போலவே இந்தியாவைச் சுற்றியிருந்த பல தீவு நாடுகளோடு சமுத்திரகுப்தர் சுமூக உறவை மேற்கொண்டிருந்தார் என்று பிரயாகைக் கல்வெட்டு குறிக்கிறது. ஏன், தென்கிழக்கு ஆசியாவில் கூட சமுத்திரகுப்தரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தந்த்ரீ காமண்டகா என்ற ஜாவாவின் நூலில் ஐஸ்வர்யபாலன் என்ற அரசன் சமுத்திரகுப்தரின் வம்சாவளி வந்தவன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
(தொடரும்)