முதலாம் சந்திரகுப்தர் எப்படித் தன் பல மைந்தர்களில் சிறந்தவரான சமுத்திரகுப்தரைத் தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தாரோ, அதே போல சமுத்திரகுப்தரும் தன் வாரிசாக (இரண்டாம்) சந்திரகுப்தரைத் தேர்ந்தெடுத்ததாக மதுரா கல்வெட்டு தெரிவிக்கிறது. அந்தக் கல்வெட்டில் உள்ள ‘தத் பரிக்ரிஹிதேன’ என்ற வார்த்தைகளின் மூலம் சமுத்திரகுப்தருக்குப் பல மகன்கள் இருந்தாலும் சந்திரகுப்தரையே குப்தர்களின் அரியணைக்குச் சிறந்தவனாகக் கருதி அவனைத் தனது வாரிசாக அறிவித்தார் சமுத்திரகுப்தர் என்பது தெரிய வருகிறது. இதே ‘தத் பரிக்ரிஹித’ என்ற சொற்றொடர் ஸ்கந்தகுப்தரின் பீகார் கல்வெட்டிலும் இரண்டாம் சந்திரகுப்தரைக் குறிக்கும் விதமாகக் கையாளப்பட்டது இங்கே கவனிக்கத் தகுந்தது.
சந்திரகுப்தரை ‘சத் புத்திரர்’ என்றும் மதுராக் கல்வெட்டு வர்ணிக்கிறது. இந்தக் குறிப்புகளிலிருந்து சந்திரகுப்தர் முறைப்படி வாரிசாக சமுத்திரகுப்தரால் அவர் உயிருடன் இருக்கும்போதே அறிவிக்கப்பட்டார் என்பதும், பல மகன்கள் இருந்தாலும் வலிமையானவரையே (துல்ய குலஜ) குப்தர்கள் தங்கள் வாரிசாகத் தேர்ந்தெடுத்தனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ராமகுப்தர் என்ற மகன் சமுத்திரகுப்தருக்கு இருந்தார், அவர்தான் அடுத்ததாக அரியணை ஏறினார் என்ற பல ஆய்வாளர்களின் வாதமும் இதனால் அடிபட்டுப் போகிறது.
இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்திலிருந்துதான் குப்தர்களின் காலக்கணக்கில் தெளிவான வரையறை காணப்படுகிறது. மதுராவிலுள்ள அவரது கல்வெட்டு சந்திரகுப்தரின் ஐந்தாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ‘மகாராஜ ராஜாதிராஜ ஸ்ரீ சந்திரகுப்தஸ்ய விஜய ராஜ்ய சம்வத்ஸரே பஞ்சமே’ என்று அது குறிப்பிடுவதிலிருந்து சந்திரகுப்தரின் ஐந்தாம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு ‘சம்வத்ஸரே ஏகசஷ்டே’, அதாவது குப்தர்கள் ஆண்டின் 61ஆம் வருஷம் சாசனம் செய்யப்பட்டது என்பதும் தெரிகிறது. குப்தர்களின் ஆண்டுத் தொடக்கம் பொயு 319 என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆகவே மதுரா கல்வெட்டின் ஆண்டு பொயு 380 என்பதும் அது சந்திரகுப்தரின் ஐந்தாம் ஆட்சியாண்டு என்பதால் அவர் பொயு 375இல் அரியணை ஏறியிருக்கிறார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
பெரும் வீரரும் திறமைசாலியுமான சமுத்திரகுப்தர் ஒரு பெரிய நிலப்பரப்பைக் கட்டியாளும் பொறுப்பை சந்திரகுப்தரிடம் விட்டுச் சென்றிருந்தார். ஆர்யவர்த்தம் முழுவதையும் குப்தர்களின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்த சமுத்திரகுப்தர், அதன் எல்லைப்புறத்தில் இருந்த பல அரசுகளை அவர்களே ஆளுமாறு செய்த ஏற்பாடு சந்திரகுப்தருக்கு ஆரம்பத்தில் தலைவலியைக் கொடுத்தது. குறிப்பாக இந்தியாவின் வடக்கிலும் மேற்குப் பகுதியிலும் இருந்த பல அரசுகள் சமுத்திரகுப்தர் இறந்துபட்டதும் தன்னாட்சி பெற வேண்டி கிளர்ச்சி செய்தன. அவற்றைத் தவிர வங்காளத்தில் இருந்த சில அரசுகள் கூட்டணி அமைத்துக்கொண்டு தன்னாட்சியை அறிவித்தன. அந்த அரசுகளை அடக்கவேண்டிய கட்டாயம் சந்திரகுப்தருக்கு இருந்தது.
சந்திரகுப்தரின் வடமேற்கு வெற்றிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவியாக இருப்பது அவரது சமகாலத்தவரான காளிதாசரின் ரகுவம்சம் என்ற காவியம். அதில் கூறப்பட்டுள்ள அரசன் ரகுவின் திக்விஜயம் பற்றிய நிகழ்வுகள் பெரும்பாலும் சந்திரகுப்தரின் வெற்றிகளைக் குறிப்பனவே என்பது ஆய்வாளர்களின் கருத்து. முக்கியமாக ரகு பாரசீகத்தை நோக்கிப் படையெடுத்து அங்கே அடைந்த வெற்றிகள் சந்திரகுப்தர் வடமேற்கு இந்தியாவில் ஆட்சி செய்துகொண்டிருந்த அரசர்களின் மீது அடைந்த வெற்றிகளையே குறிக்கின்றன என்று பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது கொஞ்சம் ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒன்று.

டெல்லிக்குத் தெற்கே உள்ள மிஹிரபுரி என்ற இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டு குதுப்மினார் வளாகத்தில் உள்ள இந்த இரும்புத்தூணில் ஒரு சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. அது யாருடையது என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு அது இரண்டாம் சந்திரகுப்தருடையதே என்பதாகும். அரசனின் பெயர் ‘சந்திர’ என்பதை மட்டுமே சாசனம் குறிப்பிடுவதால் அது யார் என்பதைக் கண்டறிவது சிக்கலான விஷயமாக உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் :
– சந்திர என்ற பெயருடைய அரசன் வங்காளத்தின்மீது படையெடுத்துச் சென்று அங்கே கூட்டணியாக அவனை எதிர்த்த அரசர்களை வென்றான்
– அடுத்து வடமேற்கை நோக்கிப் படையெடுத்துச் சென்று ஏழு முகங்களைக் கொண்ட சிந்து நதிக்கரையில் வாஹ்லிகர்களை வென்றான்
– தெற்கிலுள்ள கடல் வரை தன் புகழைப் பரவச் செய்தான்
– அவனுடைய புஜ வலிமையால் உலகைக் கட்டியாண்டான்
மேலும் இந்த வெற்றிகளைக் கொண்டாடும் விதத்தில் விஷ்ணுவிற்கு ஒரு தூணை விஷ்ணுபாதம் என்ற மலையடிவாரத்தில் அவன் எழுப்பினான் என்கிறது அந்தத் தூணில் உள்ள சாசனம்.
சிலர் இந்த வெற்றிகள் வங்காளத்தைச் சேர்ந்த சந்திரவர்மன் என்ற அரசனுடையது என்று கூறுகின்றனர். ஆனால் வடமேற்கு இந்தியாவில் உள்ள வாஹ்லிகர்களிலிருந்து தெற்கே கடல் வரையுள்ள ஒரு சாம்ராஜ்யத்தை சந்திரவர்மன் என்ற அரசன் ஆட்சி செய்ததாக எந்தக் குறிப்பிலும் இல்லை. வங்காளத்தில் ஆட்சி செய்த அரசன் ஏன் டெல்லி அருகே உள்ள இடத்தில் இந்த இரும்புத்தூணை நிறுவ வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே இரும்புத்தூண் குறிப்பிடுவது சந்திரவர்மனை அல்ல என்று ஒதுக்கிவிடலாம். முதலாம்
சந்திரகுப்தரே இந்தச் சந்திரன் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் முதலாம் சந்திரகுப்தர் கங்கைச் சமவெளியையே ஆட்சி செய்ததாலும் வடமேற்கிலோ தெற்கிலோ அவர் வெற்றிகள் எதையும் ஈட்டாததாலும் அவரைப் பற்றி இந்தத் தூண் தெரிவிக்கவில்லை எனலாம். ஆகவே, இரும்புத் தூணில் உள்ள சாசனம் இரண்டாம் சந்திரகுப்தருடையது என்பதில் ஐயமில்லை.
இதற்கு இன்னும் இரண்டு காரணங்கள் வலுச்சேர்க்கின்றன. அதில் உள்ள எழுத்தமைதி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறியப்பட்டுள்ளது. அது இரண்டாம் சந்திரகுப்தரின் காலகட்டம். மேலும் மதுரா கல்வெட்டு போன்ற சந்திரகுப்தரின் சாசனங்கள் அவரை பரமபாகவதன் என்று வர்ணிக்கின்றன. இது விஷ்ணு பக்தர்களையே குறிக்கும் என்பதாலும் இரும்புத்தூணை நிறுவிய அரசன் விஷ்ணு பக்தன் என்பதாலும் அதில் உள்ள ‘சந்திர’ என்பத இரண்டாம் சந்திரகுப்தரையே குறிக்கும் என்பதும் தெளிவு.

இவற்றைத் தவிர சந்திரகுப்தரால் அச்சிடப்பட்ட தாமிர நாணயங்களில் சில ‘சந்திர’ என்ற பெயரை மட்டும் கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து சந்திர என்பது அவருடைய இயற்பெயர் என்றும் குப்த என்பது அவருடைய பெயரின் பின்னெட்டு என்றும் ஆய்வாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.
மெஹ்ரோலி தூணில் குறிப்பிட்டுள்ளபடி சந்திரகுப்தர் முதலில் வங்காளத்தின் மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்த அரசர்களின் கூட்டணியை வென்று அதை குப்தப்பேரரசுடன் இணைத்துக்கொண்டார். அதன்பின் அவருடைய கவனம் வடமேற்குப் பகுதிக்குத் திரும்பியது. தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் என்ற இடம்வரை அவர் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதை வாஹ்லிகர்களை (பாஹ்லிகர்கள்) சந்திரகுப்தர் வென்றார் என்ற சாசனத்தின் வாசகம் உணர்த்துகிறது. சமுத்திரகுப்தரால் குறிப்பிடப்பட்டுள்ள தேவபுத்ர ஷாஹி, ஷாஹானுஷாஹி ஆகிய கிடார குஷாணர்களையும் சசானியர்களியும் தோற்கடித்து இந்தியாவின் வடமேற்கில் குப்தர்களின் அதிகாரத்தை நிலைநாட்டியவராக இரண்டாம் சந்திரகுப்தர் அறியப்படுகிறார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் கிடைக்கும் சில குப்தர்கள் காலக் கல்வெட்டுகளில் சந்திர என்ற வாசகம் காணப்படுகிறது. அங்கே கிடைத்த சில நாணயங்களில் சந்திரகுப்த என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சந்திரகுப்தர் இந்தப் பகுதிகளில் தன்னுடைய வெற்றி முத்திரையைப் பதித்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், அவை குப்தர்களுடைய ஆட்சிப்பகுதியில் இணைக்கப்பட்டிருந்தனவா என்பது பற்றித் தெளிவான குறிப்புகள் இல்லை.
சாகர்கள்
இரண்டாம் சந்திரகுப்தர் பெற்ற வெற்றிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது அவர் சாகர்கள் மேல் படையெடுத்து அவர்களை வென்ற நிகழ்வு ஆகும். ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த இந்தோ ஸித்தியர்கள் வடமேற்கில் அலை அலையாக வந்த படையெடுப்புகளால் தெற்கு நோக்கி நகர்ந்து குஜராத், ராஜஸ்தானம், மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்யத் தொடங்கினர். க்ஷத்ரபர்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் சாதவாகனர்களால் ஒடுக்கப்பட்டாலும் குப்தர்களின் ஆட்சியின் ஆரம்பத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றனர். சமுத்திரகுப்தர் அவர்களைத் தோற்கடித்தாலும் தனக்கு அடங்கிய சிற்றரசாகச் செய்தாரே அன்றி அவர்களை குப்தர்களின் ஆட்சிப்பரப்பில் இணைத்துக்கொள்ளவில்லை. சமுத்திரகுப்தரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கலகம் செய்யத்தொடங்கிய சாகர்கள் தங்களுடைய ஆட்சிப்பகுதி குப்தர்களுக்கு அடங்கியதில்லை என்று அறிவித்தனர்.
ஆட்சி அதிகாரம் பறிபோனது ஒரு புறமிருக்க, இந்த அறிவிப்பு பொருளாதார ரீதியாகவும் குப்தர்களுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. குஜராத், மகாராஷ்ட்ரா பகுதியில் இருந்த பல துறைமுகங்கள் மேற்கு நாடுகளோடான வணிகத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தன. உதாரணமாக பாரிகாஸா (தற்போதைய பரூச்) துறைமுகத்திலிருந்து இந்தியாவைச் சேர்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல், மத்திய ஆசியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த வழி அடைபட்டது குப்தர்களுக்கு ஒரு பின்னடைவாக இருந்தது. சாகர்களின் கிளர்ச்சியால் மேற்கு நாடுகளோடான இந்தியாவின் வணிகம் சிறிது குறைந்ததாக மைட்டி போன்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தார் இப்படி இந்தியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக்கொண்டு அதன் வணிகத்தைத் தடைசெய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சந்திரகுப்தர் அவர்கள் மேல் படையெடுத்தார்.
ஆனால் சாகர்களும் லேசுபட்டவர்கள் அல்ல. மூன்றாம் ருத்ரசேனன், சிம்மசேனன், நான்காம் ருத்ரசேனன் ஆகிய சாக மன்னர்கள் தொடர்ந்து குப்தர்களின் படையெழுச்சியைத் தடைசெய்தனர். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேல் இந்தப் போர்கள் நடைபெற்றன என்று தெரிகிறது. பொயு 409ஆம் ஆண்டு வாக்கில் குஜராத், சௌராஷ்ட்ரா ஆகிய பகுதிகளையும் மாளவத்தையும் முற்றிலும் வெற்றி கொண்டு சாகர்கள் ஒட்டுமொத்தமாகத் துரத்தினார் சந்திரகுப்தர்.
சந்திரகுப்தரிடம் போர் மற்றும் சமாதானத்திற்கான அமைச்சனாக இருந்த வீரசேனனின் உதயகிரிக் கல்வெட்டு ‘உலகத்தை வெல்ல சந்திரகுப்தர் புறப்பட்டபோது வீரசேனனும் உடன் சென்றதாகக்’ குறிப்பிடுகிறது. சாஞ்சியில் உள்ள ஆம்ரகார்த்தவன் என்ற இன்னொரு தளபதியின் கல்வெட்டு ‘எல்லாப் போர்களிலும்’ வெற்றி பெற்றவராக சந்திரகுப்தரைக் குறிக்கிறது. இவற்றிலிருந்து சந்திரகுப்தரின் திக்விஜயத்தில் அவர் பெற்ற வெற்றிகளையும் குறிப்பாக சாகர்களோடு அவர் மேற்கொண்ட பல போர்களில் அவர் வென்றதையுமே மேற்கொண்ட கல்வெட்டுகள் அறிவிப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
எப்படி சமுத்திரகுப்தர் வாகாடகர்கள்மீது பெற்ற வெற்றியை அடுத்து ஏரனின் தனது படைத்தளத்தை அமைத்துக்கொண்டாரோ, அதேபோல மாளவத்தின்மீது பெற்ற வெற்றிக்கு அடுத்தாற்போல் சந்திரகுப்தர் உஜ்ஜயினியில் தன்னுடைய தளத்தை அமைத்துக்கொண்டார். இதை வைத்தும் சுபியாவில் உள்ள தூண் கல்வெட்டு சந்திரகுப்தரை விக்கிரமாதித்தன் என்று அழைப்பதை வைத்தும் பண்டார்கர், டி.சி.சிர்கார் போன்ற ஆய்வாளர்கள் இரண்டாம் சந்திரகுப்தரே விக்கிரமாதித்தன் கதைகளில் வருபவர் என்று கருதுகின்றனர். சாகர்கள், குஷாணர்கள் போன்ற வெளிநாட்டவர்களை வென்று அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் மீட்டவனாக உஜ்ஜயினியை ஆட்சி செய்த விக்கிரமாதித்தன் கருதப்படுவது இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கிறது.
(தொடரும்)