Skip to content
Home » குப்தப் பேரரசு #21 – குமாரகுப்த மகேந்திராதித்யர்

குப்தப் பேரரசு #21 – குமாரகுப்த மகேந்திராதித்யர்

குமாரகுப்த மகேந்திராதித்யர்

சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் ஆகிய இரு பெரும் ஆளுமைகளுக்குப் பிறகு அரசுப் பொறுப்பை ஏற்றவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் மகனுமான குமாரகுப்தர் அவர்கள் இருவருக்கும் தான் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தார். சந்திரகுப்தருக்கும் துருவதேவிக்கும் பிறந்தவரான குமாரகுப்தர் பொயு 415ஆம் ஆண்டு வாக்கில் அரியணையில் ஏறினார். பில்சடில் கிடைத்த அந்த வருடத்தைய கல்வெட்டு ஒன்று ‘மகாதேவி தர்மதேவியின்’ மைந்தனான புதிய அரசனின் ஆட்சி ‘அபிவர்த்தமான விஜயராஜ்யம்’ அதாவது தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் ஒன்றாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. அது குமாரகுப்தரின் ஆட்சியைப் பற்றியே என்பது தெளிவு.

பரமவைஷ்ணவர்களாக இருந்த குப்தர்கள் முருகப்பெருமானின் பக்தர்களாகவும் இருந்தனர். அதற்கான உதாரணம் முருகனின் பெயரைக் கொண்ட குமாரகுப்தர் ஆவார்.

ஒரு பெரும் அரசைக் கட்டிக்காக்கவேண்டிய பொறுப்பு குமாரகுப்தரின் தலைமேல் இருந்தது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாட்டின் மேற்குப் பகுதியான கத்தியவாரில் ஆளுநராகப் பணிபுரிந்த அனுபவம் அவரிடம் இருந்தது. அதையும் தன்னுடைய வீரத்தையும் விவேகத்தையும் கொண்டு குப்தர்களின் அரசை அவர் தொடர்ந்து உச்சத்திற்குக் கொண்டு சென்றார். குப்தர்களின் அரசு இருந்த வட பாரதத்தில் பல இடங்களிலும் கிடைக்கும் அவரது நாணயங்கள் அதற்கான சான்றாகும். ஜுனகாத், மோர்வி போன்ற குஜராத்தின் நகரங்களிலும் கிழக்கில் வங்காளத்திலும் அவரது நாணயங்கள் கிடைத்துள்ளன.

குமாரகுப்தர் அரியணையில் ஏறியதைப் பற்றி (வழக்கம்போல) சில ஆய்வாளர்கள் கட்டுக்கதைகளைச் சிருஷ்டித்திருக்கின்றனர். குப்தர்களின் அரியணைக்கு உரியவர் துருவதேவியின் இன்னொரு மகனான கோவிந்தகுப்தர் என்றும் குமாரகுப்தர் அதை அபகரித்துக்கொண்டார் என்பதும் அவர்களின் கருத்து. ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. கோவிந்தகுப்தர் துருவதேவியின் மகன் என்பதையும் மாளவத்தின் ஆளுநராக அவர் இருந்தார் என்பதையும் வைசாலியில் கிடைத்த அவரது முத்திரை தெரிவிக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அதில் கோவிந்தகுப்தர்தான் மூத்த மகன் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை.

மாண்டசாரில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் கோவிந்தகுப்தரின் பாதத்தில் பல மன்னர்கள் விழுந்து பணிந்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்து அவர் அரசராக இருந்திருக்கூடும் என்று சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். பேரரசு ஒன்றின் ஆளுநராக ஒரு பகுதியில் பணிபுரியும் ஒருவருக்கு, அதிலும் மன்னரின் மகனுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசர்கள் மரியாதை செலுத்துவதில் வியப்பேதும் இல்லை அல்லவா. அதை மட்டும் வைத்துக்கொண்டு அவரை அரசராக எப்படி முடிவு செய்ய இயலும்?

ஜகந்நாத் என்கின்ற வரலாற்று அறிஞர் துமைன் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் குமாரகுப்தர் அரசை வலுக்கட்டாயமாக அபகரித்துகொண்டார் என்று பொறித்திருப்பதாகக் கூறினார். அந்தக் கல்வெட்டில் உள்ள உபகுஹ்ய என்ற சொல்லிற்கு வலுக்கட்டாயமாக என்று அவர் பொருள் கொண்டார். ஆனால் உபகுஹ்ய என்ற சொல்லிற்கு அரவணைத்தார் என்ற பொருளும் உண்டு என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர் கோயல், அந்தக் கல்வெட்டு ‘அரசை அரவணைத்துக்கொண்டார்’ என்று சொல்கிறதே தவிர ‘பறித்துக்கொண்டார்’ என்று குறிப்பிடவில்லை என்று நிறுவுகிறார்.

போர்கள்

குமாரகுப்தர் பெற்ற வெற்றிகளைப் பற்றி அதிகத் தகவல்கள் இல்லையென்றாலும் குப்தப் பேரரசு முழுவதும் கிடைக்கும் அவரது கல்வெட்டுகளும் நாணயங்களும் அவருடைய காலத்திலும் பேரரசு சிதறுண்டு போகாமல் இருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பாக தக்காணப் பகுதிகளான சதாராவிலும் பேராரிலும் கிடைத்த குவியலான அவரது வெள்ளி நாணயங்கள் அவரது அரசு தெற்கில் விரிவடையத் தொடங்கியதைக் காட்டுகிறது. அப்படியானால் தக்காணத்தை அதுவரை ஆட்சி செய்துகொண்டிருந்த வாகாடர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இரண்டாம் சந்திரகுப்தரின் மகளான ப்ரபாவதி, வாகாடக அரசன் இரண்டாம் ருத்ரசேனனை மணந்துகொண்டதையும் அவன் இளவயதிலேயே இறந்துபட்டபோது தன்னுடைய இரு மகன்களும் சிறுவயதினர்களாக இருந்ததால் தானே ஆட்சிப் பொறுப்பை ப்ரபாவதி ஏற்றுக்கொண்டார் என்பதையும் பார்த்தோம். தன்னுடைய தகப்பன் வழி வம்சத்தின்மீது பெருமை கொண்ட ப்ராபாவதி தன்னுடைய செப்பேடுகளில் குப்தர்களின் வம்சாவழியையும் குறிப்பிடத்தவறவில்லை.

அவளது மகனான (இரண்டாம்) ப்ரவரசேனன் ஆட்சி ஏறிய பின்னரும் இரு அரசுகளுக்கும் இடையேயான இந்தச் சுமூக உறவு தொடர்ந்தது. தன் சகோதரி மகனான ப்ரவரசேனனை குமாரகுப்தர் அன்போடு நடத்தினார் என்று சொல்லலாம். ப்ரவரசேனனும் தன்னுடைய அரசை விஸ்தரிக்கும் வேலைகளில் ஈடுபடாமல், அமைதியாகவே ஆட்சியை நடத்திவந்தான். அவனுடைய மறைவுக்குப் பிறகு, அவன் மகனான நரேந்திரசேனன் வாகாடகர்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அப்போது குமாரகுப்தருக்கு வயது முதிர்ந்திருந்தது. குப்த இளவரசர்களுக்கும் நரேந்திரசேனனுக்குமான உறவில் மெல்ல மெல்ல விரிசல் விழ ஆரம்பித்தது.

தக்காணத்தின் ஒரு பகுதியை சிற்றரசனான நளவம்சத்து மன்னன் பவத்தவர்மன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். அவனுக்கும் வாகாடகர்களின் அரசனான நரேந்திரசேனனுக்கும் பகை இருந்தது. ஒரு கட்டத்தில் பவத்தவர்மன், வாகாடகர்களின் மீது படையெடுத்தான். சிறு பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த பவத்தவர்மன், வலிமையான அரசாக அப்போது இருந்த வாகாடர்கள் மீது படையெடுத்தது ஆச்சரியமான விஷயமென்றால், அதைவிட ஆச்சரியம் அவனுக்கு குப்தர்கள் உதவ முன்வந்தது. வாகடர்களின் அரசை கிழக்கிலிருந்து பவத்தவர்மனும் மேற்கிலிருந்து குப்தர்களும் தாக்கினர்.

இந்தச் செய்திகள் பவத்தவர்மன், வாகாடர்களின் தலைநகராக அப்போது இருந்த நந்தவர்த்தனத்தில் இருந்து வெளியிட்ட ரித்பூர் செப்பேடுகளால் தெரியவருகிறது. அதற்கான ஆணையை பவத்தவர்மன் வெளியிட்டபோது அவன் குப்தர்களின் முக்கிய நகரான பிரயாகையில் இருந்ததாகவும் அந்தச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து பவத்தவர்மனுக்கும் குப்தர்களுக்கும் இருந்த உறவு வெட்டவெளிச்சமாகத் தெரியவருகிறது. குப்தர்களுக்கும் பவத்தவர்மனுக்கும் இடையில் மண உறவு நிலவியதாகவும் இந்தச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, என்ன காரணத்தால் குப்தர்களுக்கும் அவர்களது உறவினர்களான வாகாடகர்களுக்கும் பகை மூண்டது என்பது சரிவரத் தெரியவில்லை. ஒரு தலைமுறைக்கு முன்னால் தங்களோடு நெருங்கிய உறவு பூண்டிருந்த வாகாடகர்களை குப்தர்கள் ஒரு சிற்றரசனுக்காக எதிர்க்க முன்வந்தது சாதாரண விஷயமில்லை. இதற்கு ஏதோ ஒரு பலமான காரணம் இருந்திருக்கவேண்டும்.

தன்னுடைய பகைவர்களான வாகாடர்களை வீழ்த்த தனக்கு உதவி செய்த குப்தர்களுக்கு நன்றிக்கடனாக குப்த இளவரசனான ஸ்கந்தகுப்தனின் பெயரை ஒட்டி தன் மகனுக்கும் ஸ்கந்தவர்மன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். குப்தர்களின் விருதுப் பெயர்களான ஸ்ரீமகேந்திராதித்ய, ஸ்ரீக்ரமாதித்திய என்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் நள வம்ச அரசர்களால் வெளியிடப்பட்டன.

பல தசாப்தங்களாக தக்காணத்தில் வலுவாக ஆட்சி செய்துவந்த வாகாடகர்களுக்கு இந்த நிகழ்வு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதைச் சரிக்கட்டுவதற்காக நரேந்திரசேனன், குந்தள அரசை ஆட்சி செய்துகொண்டிருந்த கதம்பர்களுடன் மண உறவை ஏற்படுத்திக்கொண்டான். இது தக்காணத்தின் அரசியல் நிலையை முற்றிலும் மாற்றி, நெருங்கிய நண்பர்களாகவும் உறவினர்களாகவும் இருந்த குப்த-வாகாடகர் கூட்டணியைப் பிரித்தது. வாகடர்களும்-கதம்பர்களும் ஒருபுறம் நளவம்ச அரசர்களும் குப்தர்களும் மறுபுறம் என்று இரு கூட்டணிகள் புதிதாக உருவாயின. இவை இரண்டும் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? எப்படி நரேந்திரசேனன் தன் அரசை மீட்டெடுத்தான் என்பதைப் பின்னால் காணலாம்.

இப்படியாக குமாரகுப்தரின் ஆட்சியில் தக்காணத்தின் பெரும்பகுதியும் குப்தர்களின்கீழ் வந்தது. தன்னுடைய வெற்றிகளைக் குறிக்கும் வண்ணமாக குமாரகுப்தர் அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்தார். அதைக் கொண்டாடும் விதத்தில் நாணயங்களையும் வெளியிட்டார்.

நிர்வாகத் திறன்

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளிலிருந்து குமாரகுப்தரின் ஆட்சியில் மிகக் குறைந்த அளவிலேயே போர்கள் நடைபெற்றன என்பது தெரிகிறதல்லவா. ஆகையால், அவருடைய ஆட்சிக் காலகட்டத்தின் பெரும்பகுதி நிர்வாகத்தை மேலும் செப்பனிடுவதிலேயே கழிந்தது. பேரரசு ப்ருத்வி என்று அழைக்கப்பட்டது. சகல அதிகாரங்களையும் படைத்தவராக பேரரசர் இருந்தார். அவருக்கு பரம தைவதா, பரம பட்டாரகா, மகாராஜாதிராஜா போன்ற விருதுப் பெயர்கள் வழங்கப்பட்டன. அரசின் பல பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசர்கள் ந்ருப, ந்ருபதி, பார்த்திவ என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். சிற்றரசுகள் தேசம் என்று அழைக்கப்பட்டன.

அரசு நிர்வாக வசதிக்காக பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மாகாணங்கள் புக்தி என்று அழைக்கப்பட்டன. விஷயா என்ற பெயருள்ள மாவட்டங்களாக அவை பிரிக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் தலைநகர் அதிஷ்டானம் என்று அழைக்கப்பட்டது. மாகாணத்தின் ஆளுநர் உபரிக மஹாராஜா என்று அழைக்கப்பட்டார். மாவட்டத்தின் தலைமை அதிகாரியின் பெயர் விஷயபதி ஆகும். மாவட்டத் தலைமை அலுவலகத்திற்கு விஷயாதிகரணம் என்று பெயர். பல வட்டங்களாக மாவட்டம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்திற்கும் வீதி என்று பெயரிடப்பட்டிருந்தது. வட்டாட்சியருக்கு ஆயுக்தகா என்று பெயர். இப்படி மிகத் துல்லியமாக ஆட்சிப்பகுதிகள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் குமாரகுப்தரின் காலத்தில் நடைபெற்றது. அவரது காலத்தில் இருந்த மிகப்பெரிய மாகாணம் புண்டரவர்த்தன புக்தி ஆகும். பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் சிராததத்தர் என்பவராவார்.

குப்த இளவரசர்கள் இப்படிப்பட்ட மாகாணங்களில் ஆளுநராக இருந்து ஆட்சி செய்தனர். பின்னாளில் அரசுப்பொறுப்பேற்பதற்குச் சரியான பயிற்சிக்களமாக இந்தப் பதவி இருந்தது. குமாரகுப்தரின் மகன்களான கடோத்கஜகுப்தரும் ஸ்கந்தகுப்தரும் பூரகுப்தரும் இப்படி மாகாண ஆளுநர்களாக இருந்தவர்கள்தான். கடோத்கஜகுப்தர் ஐரிகினப் பிரதேசம் என்ற ஏரனை ஆட்சி செய்தார்.

விருதுப்பெயர்கள்

குப்த அரசர்களிலேயே அதிகமான விருதுப்பெயர்களைச் சூட்டிக்கொண்டவராக குமாரகுப்தர் இருக்கக்கூடும். விஜிதாவனிர் அவனிபதி (உலகை வெற்றி கொண்ட பூவுலகாதிபதி), மஹீதலம் ஜயதி (உலகை வென்றவன்), சாக்ஷாதிவ நரசிம்ஹோ சிம்ஹ மகேந்த்ரோ (நரசிம்மனைப் போன்ற சிம்ம மகேந்திரன்), யுதி சிம்ஹ விக்ரம (போரில் சிங்கத்தைப் போன்றவன்), வ்யாக்ரபல பராக்ரமா (புலியைப் போன்ற வலிமை உடையவன்), குப்தகுல வ்யோமசசி (குப்தர்களின் குலத்தின் சந்திரனைப் போன்றவன்), குப்தகுலாமலசந்த்ரோ (குறையில்லாத குப்தர்கள் குலச்சந்திரன்) என்று பல பெயர்களால் கௌரவிக்கப்பட்டவர் குமாரகுப்தர்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *