தன்னுடைய பாட்டனாரையும் தந்தையையும் போல, சொல்லப்போனால் அவர்களைவிட அதிகமாக, விதவிதமான நாணயங்களை வெளியிட்டவர் முதலாம் குமாரகுப்தர். பாரதத்தின் பெரும் பகுதி அவரது ஆட்சியின்கீழ் இருந்த காரணத்தாலோ என்னவோ இத்தனை விதமான நாணயங்களை அவர் வெளியிட்டிருக்கிறார் என்று கருதலாம். பொன்னாலும் வெள்ளியாலும் ஆன நாணயங்களை அவர் அச்சடித்தார். நாட்டின் மேற்குப் பகுதியில் இரண்டாம் சந்திரகுப்தர் வெளியிட்டதைப் போலவே வெள்ளி நாணயங்களைப் புழக்கத்தில் விட்டார் குமாரகுப்தர். மத்தியப் பகுதியைப் பொருத்தவரை அதற்கான தனிப்பட்ட நாணயங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
குமாரகுப்தரின் நாணயங்களைப் பின்வருமாறு தரம் பிரிக்கலாம்.
தங்க நாணயங்கள்
வில்வீரர் வகை
குமாரகுப்தரின் ஆட்சியில் அதிக அளவில் வெளியிடப்பட்ட நாணயங்கள் வில்வீரர் வகையைச் சேர்ந்ததாகும். ராதா பானர்ஜி இந்த வகை நாணயங்களை குமாரகுப்தரின் மிகச் சிறந்த கலைப்படைப்புகளில் ஒன்றாக மதிப்பிடுகிறார். நாணயத்தின் ஒரு புறம் அரசர் இடது கையில் வில்லை ஏந்தியபடி காணப்படுகிறார். அவரது வலது கையில் அம்பு இருக்கிறது. நாணயத்தின் மறுபுறம் தாமரையில் அமர்ந்த தேவியின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை நாணயங்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் :
- விஜிதாவனிரவனிபதி குமாரகுப்தோ திவம் ஜயதி
- ஜயதி மஹீதலம்
- பரம ராஜாதிராஜ ஸ்ரீகுமாரகுப்த
- குமார – மகாராஜாதிராஜ ஸ்ரீகுமாரகுப்த
- குணேஸோ மஹீதலம் ஜயதி குமர
அடிப்படை இவையாக இருந்தாலும் காலப்போக்கில் இந்த வகை நாணயங்களில் சிற்சில மாறுதல்கள் காணப்படுகின்றன. ஆயினும் நாணயங்களில் எழுதப்பட்டுள்ள ‘ஸ்ரீமகேந்திர’ என்பதை வைத்து அவை அனைத்தும் குமாரகுப்தரின் நாணயங்களாக அடையாளம் காணப்படுகின்றன.
வாள் வீரர் வகை
மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய இவ்வகை நாணயத்தில் அரசர் இடுப்புவரை உள்ள ஆடை ஒன்றை அணிந்து நிற்கிறார். அவரது வலது கரம் முன்புள்ள யாககுண்டம் ஒன்றில் நெய்யை ஊற்றுகிறது. இடது கரம் வாள் ஒன்றைத் தாங்கி நிற்கிறது. அருகில் கருடனின் உருவம் உள்ளது. நாணயத்தின் விளிம்பில் ‘அவஜித்ய சுசரிதை குமாரகுப்தோ திவம் ஜயதி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் லக்ஷ்மிதேவி தாமரையில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருடைய கரத்திலும் தாமரை உள்ளது. அந்தப் பக்கத்தில் ‘ஸ்ரீகுமாரகுப்த’ என்று எழுதப்பட்டுள்ளது.
அஸ்வமேத வகை
குப்தர்கள் வம்சத்தில் சமுத்திரகுப்தருக்குப் பிறகு அஸ்வமேதயாகம் செய்தவர் குமாரகுப்தர். அதிகப் போர்கள் இல்லாமல் நடைபெற்ற அவரது ஆட்சியில், அவர் வாகாடகர்கள் மேல் அடைந்த வெற்றிக்குப் பிறகு இந்த அஸ்வமேதயாகத்தைச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதைக் குறிப்பிடும் வண்ணம் இந்த வகை நாணயம் வெளியிடப்பட்டது.
நாணயத்தின் ஒரு புறம் யாகக் குதிரை யாகத்தூணின் முன்பு நிற்கிறது. குதிரையின் கால்களின் இடையில் ‘ஸ்வமேத’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலே ‘ஜயதி திவம் குமாரா’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபுறம் அரசி சாமரத்தை வலப்புறம் ஏந்தி நிற்கிறார். தோடு, கழுத்தணி, வளையல்கள் போன்ற ஆபரணங்களை அவர் அணிந்திருக்கிறார். அவரது இடப்பக்கத்தில் யாகத்தில் பயன்படுத்தப்படும் வேல் ஒன்று உள்ளது. அந்தப் பக்கத்தில் ‘ஸ்ரீஅஸ்வமேதமகேந்திர’ என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த யாகத்தைச் செய்த புண்ணிய பலனைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தையும் குமாரகுப்தர் வென்றுவிட்டார். ஆகவே இந்திரனுக்கு இணையான ‘மகேந்திரர்’ என்ற பெயரையும் அவர் பெற்றுவிட்டார் என்பதற்கு அடையாளமாகத்தான் மகேந்திர என்ற பெயர் குமாரகுப்தரின் நாணயங்களில் காணப்படுகிறது.
குதிரை வீரர் வகை
முதலாம் குமாரகுப்தரின் குதிரை வீரர் வகையில் ஆறு விதமான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவ்வகை நாணயங்களில் ஒரு புறம் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றில் அரசர் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் பலவிதமான ஆயுதங்கள் காணப்படுகின்றன. மறுபக்கத்தில் லக்ஷ்மிதேவி ஆசனம் ஒன்றில் அமர்ந்திருக்கிறார். அவரது இடக்கரத்தில் தாமரை உள்ளது.
சில நாணயங்களில் மயிலுக்குப் பழங்களைக் கொடுக்கும் தேவியின் உருவம் உள்ளது. அது துர்க்கா தேவி என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. மயிலின் உருவம் காணப்படுவதால் அது சப்த மாதர்களின் ஒருவரான கௌமாரியாக இருக்கலாம் என்று இன்னும் சிலர் கருதுகின்றனர். குமாரகுப்தரின் ஆட்சிப் பகுதியில் பரவலாக இந்த வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. இவ்வகை நாணயங்களில் எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள்:
- ப்ருத்விதலம் திவம் ஜயத்யஜித
- க்ஷிதிபதிரஜிதோ விஜயி மஹேந்திரசிம்ஹோ திவம் ஜயதி
- குப்தகுலவ்யோமசசி மஹேந்த்ர
- குப்தகுலாமல சந்த்ரோ மஹேந்த்ரகர்மாஜிதோ ஜயதி
நாணயத்தின் பின்புறம் அஜிதமஹேந்த்ர என்று எழுதப்பட்டிருக்கிறது.
சிங்கத்தை வெல்லும் வீரர்
தன் தந்தை சந்திரகுப்தரைப் போலவே சிங்கத்தை வெல்லும் அரசனாகத் தன்னைச் சித்தரித்துக்கொண்டு குமாரகுப்தர் வெளியிட்ட அரிய வகை நாணயங்கள் இவை. ஆனால் பாட்டனாரின் நாணயத்தில் உள்ள வேலைப்பாடு இந்த வகை நாணயங்களில் இல்லை என்று கூறலாம். சில நாணயங்களில் அரசர் சிங்கத்தோடு சண்டையிடுவது போலவும் இன்னும் சில வகை நாணயங்களில் சிங்கத்தின் மேலேறி அதை அடக்குவது போலவும் அரசரின் உருவம் காணப்படுகிறது. நாணயத்தின் மறுபுறம் கையில் தாமரையோடு கூடிய தேவியின் உருவம் உள்ளது. அது லக்ஷ்மி என்று சிலரும் துர்க்கை என்று சிலரும் கூறுகின்றனர்.
இவ்வகை நாணயங்களில் ‘சாக்ஷாத் இவ (நரசிம்ஹோ) சிம்ஹ மஹேந்த்ரோ ஜயத்யனிஸம்’ அதாவது உலகத்தில் உலவும் நரசிம்மரான, சிம்ஹ மஹேந்திரருக்கு எப்போதும் வெற்றி கிடைக்கட்டும் என்று பொறிக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் ‘குமாரகுப்தோ விஜயீ சிம்ஹ மஹேந்த்ரோ திவம் ஜயதி’ என்றும் இன்னும் சிலவற்றில் ‘குமாரகுப்தோ யுதி சிம்ஹ விக்ரமா’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த பல அரசர்களோடு போரிட்டு அடைந்த வெற்றியைக் குறிக்க குமாரகுப்தர் இந்த வகை நாணயங்களை வெளியிட்டார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புலியை வெல்லும் வீரர்
சமுத்திரகுப்தரின் புலியை வெல்லும் வீரர் வகை நாணயங்களும குமாரகுப்தரின் குதிரை வீரர் வகை நாணயங்களும் சேர்ந்த கலவை இந்த வகை நாணயங்கள். நாணயத்தின் ஒருபுறம் அரசர் புலியை வீழ்த்துகிறார். அது பின்னோக்கிச் சாயும்போது அதன் மேல் தன்னுடைய காலை வைத்து அழுத்துகிறார். நாணயத்தின் மறுபுறம் லக்ஷ்மிதேவி மயிலுக்குப் பழம் கொடுக்கும் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாணயத்தில் ‘ஸ்ரீமாம் வ்யாக்ரபலபராக்ரமா’ என்று எழுதப்பட்டுள்ளது. புலிக்கு அஞ்சாத குமாரகுப்தரின் தன்னம்பிக்கையும் வீரமும் வலிமையும் இந்தவகை நாணயங்களில் வெளிப்படுவதாகக் கருதலாம்.
மயில் வகை
குப்தர்களின் நாணயங்களில் மிகவும் அழகான நாணய வகை இது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றன. ‘கார்த்திகேய நாணயங்கள்’ என்றும் அழைக்கப்படும் இவ்வகை நாணயங்கள் முருகக் கடவுளின் மேல் குமாரகுப்தருக்கு இருந்த பக்தியை வெளிக்காட்டுகின்றன.
நாணயத்தின் ஒருபுறம் அரசர் பழங்களை கையில் வைத்துக்கொண்டு மயிலுக்கு அவற்றை உணவாகக் கொடுக்கும் காட்சி சித்தரிக்கபட்டிருக்கிறது. மறுபக்கத்தில் கார்த்திகேயக் கடவுள் மயிலின் மீது உலவும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. முருகனின் கையில் வேல் உள்ளது. ‘ஜயதி ஸ்வபூமௌ குணராஸி’ என்று நாணயத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் குமாரகுப்தர் தன்னுடைய சொந்த வலிமையை பெரிதும் மதிப்பதைக் காட்டுகின்றன.
ப்ரதாப வகை
அப்ரதிக்ய வகை என்று அழைக்கப்படும் இவ்வகை நாணயங்களில் அரசர் தன்னுடைய இரு அரசிகளோடு இருக்கும் சித்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறம் அரசர் நடுவில் நிற்கிறார். அவரது கையில் ஆயுதங்கள் உள்ளன. அவரது இடதுபுறத்தில் பெண் ஒருவர் தலைக்கவசத்தோடும் இடது கையில் கேடயத்தோடும் காணப்படுகிறார். வலப்பக்கம் உள்ள பெண்மணி வலக்கையை தொங்கவிட்டும் இடக்கையை இடையின் மேல் வைத்தவாறும் காணப்படுகிறார். மூவருக்கும் பின்னால் கருடனின் உருவம் உள்ளது. அருகே ‘குமாரகுப்த’ என்று எழுதப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபுறம் லக்ஷ்மிதேவி கையில் தாமரையைப் பிடித்தவண்ணம் சித்தரிக்கப்பட்டுள்ளார். அருகில் ‘ஸ்ரீப்ரதாப’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
இது அவரது வெற்றிகளைவிட, அவரது மகனான ஸ்கந்தகுப்தரின் வெற்றிகளைக் குறிப்பதாக ஆய்வாளர் ஆர்.டி.முகர்ஜி கருதுகிறார்.
யானைமேல் சவாரி செய்பவர்
இவை குப்தர்களின் நாணயங்களிலேயே தனித்தன்மை வாய்ந்த நாணய வகையாகும். நாணயத்தின் ஒருபுறம் அரசர் யானைமேல் அமர்ந்திருக்கும் உருவம் உள்ளது. அவருக்குக் பின் சேவகர் ஒருவர் குடைபிடிக்கிறார். மறுபுறம் லக்ஷ்மிதேவி தாமரை மலர்களை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்.
யானை மேல் அரசர் அமர்ந்து ஊர்வலமாகச் செல்வது நம்முடைய பாரத நாட்டின் தனித்தன்மை வாய்ந்த கலாசாரக் குறியீடுகளில் ஒன்று. போலவே கஜலக்ஷ்மியின் வழிபாடும் அவர்மேல் யானைகள் நீரைச் சொரிவதும் வளமையின் அடையாளமாக பல்வேறு கோவில் சிற்பங்களில் காணப்படும் காட்சி. அவ்விதமான வளமை தன்னுடைய நாட்டில் இருந்ததைக் குறிக்க குமாரகுப்தர் இந்த வகை நாணயங்களை வெளியிட்டதாகக் கருதலாம்.
யானைமேல் சவாரி செய்து சிங்கத்தைக் கொல்வது
இதுவும் அரிய வகை நாணயங்களில் ஒன்று. பயனா பகுதியில் கிடைத்த குப்தர்கால நாணயங்களில் இவ்வகை நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. நாணயத்தின் ஒருபுறம் யானைமேல் சவாரி செய்யும் அரசரை ஒரு சிங்கம் தாக்கும் காட்சி காணப்படுகிறது. அரசர் கையில் வாளேந்தி அந்தச் சிங்கத்தைத் தாக்குகிறார்.
நாணயத்தின் மறுபுறம் தேவி ஒருவரின் உருவம் உள்ளது. அவரது கையில் இருக்கும் பொருள் இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் அருகிலேயே மயில் ஒன்றின் உருவம் உள்ளது.
காண்டாமிருக வகை
பயனாவில் கிடைத்த நாணயங்களில் இந்தவகையும் உண்டு. ஒருபுறம் அரசர் முழு ஆடை அணிந்து குதிரைமீது அமர்ந்திருக்கிறார். தன் கையில் உள்ள வாளால் காண்டாமிருகம் ஒன்றைத் தாக்குகிறார். மறுபுறம் முதலையின் மீது நின்றிருக்கும் தேவியின் உருவம் உள்ளது. அவர் கையில் தாமரை மலரைத் தாங்கியிருக்கிறார்.
குமாரகுப்தர் கங்கை நதி ஓடும் காண்டாமிருகங்கள் நிறைந்த இந்தியாவின் கிழக்குப் பகுதிகளை வென்றதன் அடையாளமாக இந்த வகை நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாம்.
குடை வகை
குமாரகுப்தரின் இந்தவகை நாணயங்கள் அவர்களுடைய முன்னோர்கள் வெளியிட்ட இதேவகை நாணயங்களைப் போலவே உள்ளன. ஒருபுறம் பிரார்த்தனை செய்யும் அரசரின் உருவம் உள்ளது. அவர் பின்னால் சேவகர் ஒருவர் குடையைத் தாங்கி நிற்கிறார். அவரது உடையை வைத்து அது ஒரு பெண்ணின் உருவம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வகை நாணயங்களில் இரண்டு மாதிரிகள்தான் இதுவரை கிடைத்துள்ளன.
வீணை வாசிக்கும் அரசர்
பாட்டனார் சமுத்திரகுப்தரைப் போலவே, தான் வீணை வாசிக்கும் சித்திரத்தைப் பொறித்த நாணயங்களை குமாரகுப்தரும் வெளியிட்டார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், குமாரகுப்தர் வீணை வாசித்துக்கொண்டு இருக்கும்போது அரசி அவரது அருகில் அமர்ந்துகொண்டு ஒரு மலரை முகர்வதுபோன்ற சித்திரம் நாணயத்தின் ஒருபுறம் பொறிக்கப்பட்டுள்ளதுதான். சில வகை நாணயங்களில் அரசர் அரசிக்கு மலர்களைப் பரிசளிப்பதுபோன்ற ஓவியம் உள்ளது.
வெள்ளி நாணயங்கள்
நாட்டின் மேற்குப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சாகர்களை (க்ஷத்திரபர்களை) வெற்றி கொண்ட பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர் வெள்ளி நாணயங்களை வெளியிட்டார் என்று ஏற்கெனவே பார்த்தோம். அந்தப் பகுதியில் அதைப் போன்ற நாணயங்கள் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்ததை ஒட்டியே அவர் அங்கே வெள்ளி நாணயங்களை அச்சடித்து வெளியிட்டார். ஆகவே அந்தப் பகுதிகளை நீண்ட நாள் ஆட்சி செய்த அவரது மகனான குமாரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தரை விட அதிக அளவில் வெள்ளி நாணயங்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட வெள்ளி நாணயங்களை ஐந்து பிரிவுகளாகத் தரம்பிரிக்கலாம்
முதல் வகை நாணயங்கள் க்ஷத்திரபர்கள் ஆட்சி செய்த இந்தியாவின் மேற்குப் பகுதியில் புழக்கத்திற்காக விடப்பட்டவை. இதில் சில கிரேக்க எழுத்துகள் காணப்படுகின்றன. இரண்டாம் சந்திரகுப்தர் அந்தப் பகுதியில் வெளியிட்ட நாணயங்களைப் போலவே உள்ள இவற்றின் ஒரு பக்கத்தில் கருடனுடைய உருவம் காணப்படுகிறது. அருகே ஏழு நட்சத்திரங்கள் உள்ளன. ‘பரமபாகவத மகாராஜாதிராஜ ஸ்ரீகுமாரகுப்த மகேந்திராதித்யா’ என்று அந்தப் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகை நாணயங்கள் மேலே குறிப்பிடப்பட்ட நாணயங்களைவிட அளவில் சிறியவை. இவ்வகை நாணயங்களில் கிரேக்க எழுத்துகள் இல்லை. நாணயத்தின் ஒரு பகுதியில் அரசரின் மார்பளவு உருவம் காணப்படுகிறது. மறுபுறம் கருடனின் உருவம் உள்ளது. ஆனால் இரண்டு உருவங்களும் துல்லியமாகப் பொறிக்கப்படவில்லை. மாளவத்திலும் குஜராத்தின் வட பகுதியிலும் இந்த வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. ஆகவே இவை அந்தப் பகுதிகளில் மட்டும் புழக்கத்திற்கு விடப்பட்டவை என்று கருதலாம். மூன்றாம் வகை நாணயங்களிலும் அரசரின் மார்பளவு உருவமும் கருடனின் உருவமும் உண்டு. ஆனால் இதில் கிரேக்க எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
நான்காம் வகை வெள்ளி நாணயங்கள் குப்தர்களின் ஆட்சிப் பகுதியின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் புழக்கத்திற்கு விடப்பட்டவை. ஆகவே இவை க்ஷத்திரபர்களின் ஆட்சிப்பகுதியில் கிடைத்த நாணயங்களைவிட வேறுபட்டவையாக உள்ளன. நாணயத்தின் ஒருபுறம் அரசரின் முழு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் தோகையை விரித்தாடும் மயிலின் உருவம் உள்ளது. கிரேக்க எழுத்துகளுக்குப் பதிலாக பிராமி எழுத்துகள் இவற்றில் உள்ளன. பின்னாளில் வர்த்தன வம்ச அரசர்களாலும் உத்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்த மௌகாரிகளாலும் இதே போன்ற நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஐந்தாம் வகை நாணயங்கள் வெள்ளி முலாம் பூசப்பட்ட செம்பு நாணயங்களாகும். இவை கத்தியவார் பகுதியில் வெளியிடப்பட்டன. இவை குமாரகுப்தரின் ஆட்சியின் பிற்பகுதியில் அரசு நிதிச்சுமையால் திண்டாடியபோது வெளியிடப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த வகை நாணயங்களிலும் கருடனின் உருவம் உள்ளது. ‘பரமபாகவத மகாராஜாதிராஜ ஸ்ரீகுமாரகுப்த மகேந்திராதித்யா’ என்று இவ்வகை நாணயங்களில் எழுதப்பட்டுள்ளது.
செம்பு நாணயங்கள்
குமாரகுப்தர் மிகக் குறைந்த அளவிலேயே செம்பாலான நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது. இரண்டே நாணயங்கள்தான் இதுவரை கிடைத்துள்ளன. ஒன்றில் அரசர் நின்றுகொண்டிருக்கும் உருவம் ஒருபுறமும், கருடனின் உருவம் மறுபுறமும் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தில் ‘குமாரகுப்தா’ என்று எழுதப்பட்டுள்ளது. இன்னொரு நாணயத்தில் யாககுண்டம் ஒருபுறமும் சிம்மவாகனத்தில் அமர்ந்த தேவியின் உருவம் மறுபுறமும் பொறிக்கப்பட்டுள்ளன. ‘ஸ்ரீகு’ என்ற எழுத்துகள் மட்டும் அந்த நாணயத்தில் காணப்படுகிறது.