ஸ்கந்தகுப்தர் குப்தர்களின் அரசராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டு பொயு 455 என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அரசராவதற்கு முன்பே புஷ்யமித்திரர்களைத் தோற்கடித்து குப்தர்களின் கௌரவத்தைக் காப்பாற்றிய அவர், அந்த வெற்றிக்குப் பிறகு நாடு திரும்பும்போது அவரது தந்தை உயிருடன் இல்லை என்பதையும் அதனால் உடனடியாக அரசுப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார் என்பதையும் பார்த்தோம். அவரது வீரமே மற்ற வாரிசுகளப் புறந்தள்ளிவிட்டு அவர் அரசராவதற்கான அடிப்படைக் காரணமாக இருந்தது. ஜுனாகத் கல்வெட்டுகள் குப்தர்களின் ஆண்டு 136,137, 138 ஆகிய ஆண்டுகளை அவரது ஆட்சிக்காலமாகக் குறிப்பிடுகின்றன. அதிலிருந்து குமாரகுப்தருக்குப் பிறகு உடனடியாக அவரே அரசரானார் என்பது தெளிவு.
ஆனால் அரசரான பிறகும் ஸ்கந்தகுப்தருக்குச் சோதனைகள் காத்திருந்தன. அவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலேயே ஹூணர்கள் வடமேற்கு இந்தியாவில் பல இடங்களை வெற்றி கொண்டு பாரதத்தின் உள்ளே ஊடுருவினர். ஆகவே அவர்களைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு அவருக்கு வந்து சேர்ந்தது. குப்தர்களின் தலைநகரான பாடலிபுத்திரத்திலிருந்து தற்போது பெஷாவர் என்று அழைக்கப்படும் புருஷபுரத்திற்குத் தனது படைகளைத் தானே நடத்திச் சென்றார் ஸ்கந்தகுப்தர். அங்கே நடைபெற்ற போரில் பெரும் வெற்றி அடைந்து ஹூணர்களைத் துரத்தியடித்தார். ‘ஹூணைர்யஸ்ய ஸமாகதஸ்ய சமரே’- நேரடியாக ஹூணர்களிடம் மோதி உலகம் நடுங்கும் வண்ணம் (தாரா கம்பிதா) நடைபெற்ற போரில் அவர்களை ஸ்கந்தகுப்தர் தோற்கடித்ததாக அவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஹுணர்களின் பெருமை என்ற வேர்களை அடியோடு வெட்டி எறிந்து (ஆமூலபக்னதர்ப) ஸ்கந்தகுப்தருக்கே வெற்றி என்று அவர்களையே கூறச் செய்தார் என்கிறது ஜுனாகத் கல்வெட்டு.
அதன்பின்னும் அவரது வீரத்தைக் காட்ட பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அவரது சகோதரர்களின் தூண்டுதலின் பேரிலும் அரசு பலவீனமாகி வருகிறது என்று கருதிய பல சிற்றரசர்களின் நினைப்பாலும் நாட்டில் ஆங்காங்கே சலசலப்புகள் ஏற்பட்டன. அதன்காரணமாக பல சிறிய அரசுகளோடு போர் புரிய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ‘நரபதி புஜங்கானாம்’ அதாவது பாம்புகள் பல தங்கள் தலையைத் தூக்கி படமெடுத்து ஆடுவது போல பல்வேறு அரசர்களும் தங்கள் ஆணவத்தினால் குப்தர்களுக்கு எதிராகக் கிளம்பினார்கள். கருடர்களைப் போல இருந்த குப்தர்களின் பிரதிநிதிகளுக்கு எதிராக அவர்கள் போரிட்டனர். தன்னுடைய ஆத்ம சக்தியினால் எதிரிகள் அனைவரையும் ஸ்கந்தகுப்தர் வென்றார். ‘சதுருததி ஜலாந்தம் ஸ்பித பர்யந்த தேஸம் அவனீம்’ – நான்கு பெருங்கடல்களால் சூழப்பட்டதும் வளமிக்கதுமான நாட்டை அவர் தன்னுடையதாக்கிக் கொண்டார் என்று ஜுனாகத் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்படிப் பல திசைகளிலிருந்தும் எழுந்த எதிர்ப்புக் குரல்களை திக்விஜயம் செய்து அடக்கிய ஸ்கந்தகுப்தர் அதைத் தர்மவிஜயமாகவும் செய்து, அதாவது வென்றவர்கள் மன்னிப்புக் கோரும்போது அவர்களையே அந்தந்தப் பகுதிகளில் ஆட்சியாளர்களாக நியமித்து நாடு திரும்பினார் என்கிறது கல்வெட்டு.
இப்படிக் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தன் பகைவர்களை அடக்குவதில் ஸ்கந்தகுப்தர் செலவிட்டார். இளவரசராகவும் அதன்பின் அரசராகவும் ஆரம்ப காலத்தில் போர்களிலேயே நேரத்தைச் செலவிட்டு ஆட்சியை நிலைநிறுத்திய பிறகு, நிர்வாகச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தினார் ஸ்கந்தகுப்தர். அதற்குக் காரணம் என்ன என்பதை ஊகிப்பது சிரமமான விஷயமில்லை.
மற்ற சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளை நீக்காவிட்டால், தொடர்ந்து உள்நாட்டுச் சிக்கல்களைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்த ஸ்கந்தகுப்தர், அதிக பிரச்சனை எழுப்பாதவர்களும், தனக்கு ஆதரவாக இருப்பவர்களுமான ஆளுநர்களை நாடு முழுவதும் நியமித்தார். இதைப் பற்றிக் கூறும் ஜுனாகத் கல்வெட்டு ‘உலகம் முழுவதையும் வென்ற ஸ்கந்தகுப்தர், ‘ஸர்வேஷு தேஸேஷு விதாய கோப்த்ரீண்’- எல்லா மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்தார். ‘சஞ்சிந்தயாமாச பஹூ ப்ரகாரம்’ – மிகவும் ஆழமாகச் சிந்தித்து கடினமாக ஆட்சிப் பொறுப்பை நிர்வகிக்கக் கூடியவர்களை – பாரஸ்ய உத்வஹனே சமர்த்தா, புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஸௌராஷ்ட்ர நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்க (ப்ரசிஷ்யாம் நிகிலான் சுராஷ்ர்ட்ரம்) அமர்த்தினார் ’ என்கிறது.
ஆட்சிகள் மாறும்போது அதிகாரிகளும் மாற்றப்படும் வழக்கம் குப்தர்கள் காலத்திலிருந்தே இருக்கிறது என்பது இதிலிருந்து தெரியவரும் ஒரு செய்தி. தவிர, குறிப்பாக இரண்டாம் சந்திரகுப்தர் காலத்திலிருந்தே குப்தர்கள் வசமாக இருந்த சௌராஷ்ட்ர மாகாணத்தைப் பற்றி அது ‘புதியதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது’ என்று ஏன் இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது?
குமாரகுப்தரின் ஆட்சியின் பிற்பகுதியில் அந்தப் பகுதியில் இருந்த அரசர்கள் கலகம் செய்ததாலோ அல்லது ஹூணர்கள் சௌராஷ்டிரத்தையும் பிடித்துக்கொண்டதாலோ குப்தர்கள் பிடியிலிருந்து இந்த மாகாணம் விலகிப் போயிருக்கலாம். அதை மீட்டு மீண்டும் குப்தர்கள் ஆட்சிப் பகுதியில் இணைத்த காரணத்தாலேதான் புதியதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்ற வரிகள் கல்வெட்டில் உள்ளன. போலவே, ஹூணர்கள் பின்வாங்கிச் சென்றாலும் மீண்டும் அந்தப் பகுதியைத் தாக்கலாம் என்று ஸ்கந்தகுப்தர் ஊகித்திருக்கலாம். எனவே, தன் மூதாதையர்கள் செய்த தவறைச் சரி செய்ய வடமேற்கிலும் சௌராஷ்ட்ரத்திலும் வலிமையான ஆளுநர்களை நிறுத்தி வைக்க அவர் முடிவுசெய்திருக்கிறார். இதைத்தான், ஆழ்ந்து சிந்தித்து அங்கே தகுதியானவர்களை ஸ்கந்தகுப்தர் நியமித்தார் என்ற வாசகங்கள் வலியுறுத்துகின்றன.
ஆளுநர்களுக்கான தகுதிகள் என்னென்ன என்பதையும் அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவர்கள் ‘அறிவாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் பணிவுடையவர்களாகவும் நினைவாற்றல் நிரம்பியவர்களாகவும் உண்மையானவர்களாகவும் பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் தலைமைப் பண்பு மிக்கவர்களாகவும் நல்ல குணங்களை உடையவர்களாகவும் இருக்கவேண்டும்’ என்று அந்தத் தகுதிகளை அது பட்டியலிடுகிறது.
‘பல நாட்கள் இப்படிச் சிந்தித்து, பர்ணதத்தன் என்பவரை சௌராஷ்ட்ரத்தின் ஆளுநராக ஸ்கந்தகுப்தர் நியமித்தார். அதன்பின்னரே அவர் அதைப் பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டார். எப்படி கடவுளர்கள் வருணனை மேற்குத் திசைக் காவலனாக நியமித்த பின்னர் நிம்மதி அடைந்தனரோ அதேபோல பர்ணதத்தனை மேற்குப் பகுதிகளைக் காக்க நியமித்த ஸ்கந்தகுப்தர் நிம்மதியடைந்தார்’ என்கிறது ஜுனாகத் கல்வெட்டு. இதிலிருந்து அவர் மேற்குப் பகுதிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் விளங்கும்.
நிர்வாகம்
குமாரகுப்தரின் ஆட்சியில் இருந்த நிர்வாக அமைப்பே பெரும்பாலும் ஸ்கந்தகுப்தர் காலத்திலும் தொடர்ந்தது. ஆயினும் அதில் சிற்சில மாறுதல்களைச் செய்தார் ஸ்கந்தகுப்தர். மாகாணங்கள் தேசங்கள் என்று அழைக்கப்பட்டன. அவற்றின் ஆளுநர்கள் கோப்தா என்று அழைக்கப்பட்டனர். உதாரணமாக சௌராஷ்ட்ரத்தின் ஆளுநராகச் செயல்பட்ட பர்ணதத்தன் சௌராஷ்டர தேசத்தின் கோப்தா என்ற அடைமொழியைப் பெற்றார். சில இடங்களில் சிற்றரசர்களே மாகாண ஆளுநராக இருந்தனர். கௌசாம்பியின் அரசனான பீமவர்மன் அந்தப் பகுதியின் ஆளுநராக கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்படுகிறார்.
மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க பல்வேறு நிர்வாக அலுவலர்கள் இருந்தனர். மாவட்டத் தலைமை அதிகாரி விஷயபதி என்று அழைக்கப்ட்டார். அந்தர்வாதி மாவட்டத்தின் அதிகாரியான சர்வநாகர் அதன் விஷயபதி என்று குறிப்பிடப்படுகிறார். பீகார் கல்வெட்டில் அதிகாரிகளின் பெயர்களும் அவர்களின் துறைகளும் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஸௌல்கிகர் (சுங்கம் வசூலிப்பவர்), கௌல்மிகர் (வனத்துறை அதிகாரி) ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில பதவிகள் ஆகும்.
பொருளாதாரம்
ஸ்கந்தகுப்தரின் சில கல்வெட்டுகள் அவரது ஆட்சிக்காலத்தில் நிலவிய பொருளாதார நிலைமையை எடுத்துக்காட்டுகின்றன. ஸ்ரேணி என்ற பெயரில் அழைக்கப்பட்ட வணிகக் குழுக்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கை வகித்தன. இந்திரபுரி என்று அப்போது அழைக்கப்பட்ட இந்தோரில் கிடைத்த செப்பேடுகள் ‘தைலிக ஸ்ரேணி’ என்ற வணிகக் குழு அந்த இடத்தைத் தலைமையாகக் கொண்டு இயங்கியதாகத் தெரிவிக்கிறது. அந்தப் பெயரிலிருந்தே அது எண்ணெய் வர்த்தகம் செய்யும் குழு என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
அந்தச் செப்பேடுகள் தெரிவிப்பது என்னவென்றால் ‘அந்தணர் ஒருவர், குறிப்பிட்ட ஒரு தொகையை மூலதனமாக அந்த வணிகக் குழுவிடம் கொடுத்து அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தை வைத்து இரண்டு பலம் அளவு எண்ணெயை விளக்கெரிப்பதற்காக அளிக்கும் படி கேட்டுக்கொண்டார். அந்த மூலதனம் தொடர்ந்து அவர்களிடமே இருக்கும் என்றும் வாக்களித்து சாசனம் செய்தார்’ என்கிறது. மூலதனமாகக் கொடுக்கப்பட்ட பணம் அதன் மதிப்புக் குறையாமல் இருக்கவேண்டும் என்றும் (ப்ரதமார்தா அவச்சின்னஸமஸ்தம்), கொடுக்கப்படும் எண்ணெயின் அளவு குறையாமல் இருக்கவேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து வணிகக் குழுக்கள் நல்ல நம்பகத்தன்மையோடு வங்கிகள் போன்று செயல்பட்டதை அறிந்துகொள்ள முடிகிறது. நீண்டகால வைப்பு நிதியாக இதுபோன்ற நிவந்தங்கள் அளிக்கப்பட்டதிலிருந்து அவற்றின் நிலைத்தன்மையும் உறுதியாகிறது. நிதியை இதுபோன்று முதலீட்டாளர்களிடமிருந்து பெறுதல், அவற்றை நல்ல லாபம் ஈட்டக்கூடியவற்றில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் தொகையைக் கொண்டு வட்டியோ அல்லது அதற்கு ஈடான பண்டங்களோ அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் வணிகக் குழுக்கள் ஈடுபட்டதையும் இந்தச் செப்பேடுகள் எடுத்துக்காட்டுகின்றன. நிதியை இதுபோன்று குழுக்களில் முதலீடு செய்தவருக்கும் அந்தக் குழுக்களுக்கும் இடையே பதிவுசெய்யப்பட்ட அதாவது சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் இருந்ததையும் செப்பேடுகள் குறிக்கின்றன. வணிகக் குழுக்கள் வர்த்தகத்தில் மட்டும் அல்லாமல் இப்படிப்பட்ட பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவியிருக்கின்றன.
ஆயினும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால், ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின் பிற்பகுதில் பொருளாதாரம் தேக்கமடைந்தது. அதனால் தன்னுடைய நாணயங்களின் மதிப்பை அவர் குறைக்க நேர்ந்தது என்று சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
(தொடரும்)