வேத காலத்திற்குப் பின்பு வட பாரதத்தில் பல சமயங்கள் கிளர்ந்தெழுந்தென. அதன் காரணமாக வைதிக சமயம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நந்தர்கள் அவைதிக சமயங்கள் மேலோங்குவதற்கு உதவியாக இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் அரசர்கள் சமணத்தையும் பௌத்தத்தையும் ஆதரித்தனர். ஆஜீவகம் போன்ற பல வழிமுறைகள் அக்காலத்தில் தோன்றி வளர்ந்தன. இப்படியாக மகதம் பல சமயங்களின் தலைமையகமாகச் செயல்பட்டது.
மௌரியர்களுக்குப் பின்னால் வந்த சுங்க வம்ச அரசர்கள் வைதிகத்தை ஆதரித்தபோதிலும் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. அவர்கள் மகதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, விதிஷாவிலிருந்து வந்தவர்கள் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அதன் பின் வடமேற்குப் பகுதியில் அமைந்த குஷாணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. அந்தப் பகுதியே பல வகை இனங்களால் உருவானது. ஆகவே அத மேற்கில் தோன்றிய சமயங்கள் உட்பட பல சமயங்களின் கலவையாக இருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலையெடுத்த குப்தர்களின் அரசு, வேதகாலச் சமயத்தின் ஆரம்பப் பகுதியான கங்கைச் சமவெளியைத் தன் தலைமை இடமாக அமைத்துக்கொண்டது முக்கியமான விஷயமாகும். அதன் காரணமாக குப்தர்களின் காலத்தில் வைதிக சமயம் மீண்டும் செல்வாக்குப் பெற்றது. குப்தர்கள் வேதங்களில் கூறியபடி பல யாகங்களைச் செய்தனர். அவர்களைப் பின்பற்றி வாகாடகர்களும் மற்ற அரசர்களும் வைதிக யாகங்களைச் செய்தனர். பல ‘அஸ்வமேத’ யாகங்களைச் செய்ததாக பெருமையுடன் கூறிக்கொள்ளும் அரசர்கள் உருவாயினர். உபநிஷதங்களுக்கு உரைகள் எழுதப்பட்டன. வேதச் சடங்குகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்த அவைதிக சமயங்களைப் புறக்கணித்து குப்தர்களும் ஆரம்பகாலத்தில் வேதங்களில் கூறிய சடங்குகளைச் செய்வதில் பெரும் முனைப்புக் காட்டிய போதிலும் பக்தி பூர்வமான ஆலயங்களும் அவர்களின் காலத்தில் பெருமளவு உருவாகத் தொடங்கியதைப் பார்க்கிறோம்.
சிவபெருமான், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன் ஆகிய கடவுளர்களுக்கான பல ஆலயங்கள் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டன. புராணங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. சில கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளை வைத்து புராணங்கள் அக்காலத்தில் பிரபலமானதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் சாதாரண மக்கள் பின்பற்றும் வழிபாடு முறைகளும் மேம்பாடு அடைந்தது. இது அவைதிக சமயங்களின் வளர்ச்சியில் தேக்கத்தில் ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. ஆதரவு அதிகம் இல்லாத காரணத்தால், அந்தச் சமயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின. பின்னாளில் ஹூணர்களின் படையெடுப்பின்போது புத்த சமயம் கிட்டத்தட்ட அழிந்தே போனது என்பதைப் பார்த்தோம்.
வைதிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமயத்தை ஆதரித்த குப்தர்கள் அதன் உள்ளடக்கமான ஷண்மதங்களையும் போற்றினர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
வைணவம்
குப்தர்கள் வைணவர்களாக, விஷ்ணுவின் பக்தர்களாக இருந்தனர் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. இதற்கான பல ஆதாரங்கள் அவர்களின் கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கின்றன. குப்தர்கள் தங்களை ‘பரம பாகவதர்கள்’ என்று அழைத்துக்கொண்டனர். பாகவதர்கள் என்பது வைணவர்களின் மரபில் வருவது. குப்தர்களின் நாணயங்களில் விஷ்ணுவின் வாகனமான கருடனும் தேவியான மகாலக்ஷ்மியும் இடம்பெறுவது அவர்கள் வைணவத்தைப் பின்பற்றியதற்கான இன்னொரு சான்று. அவர்கள் வம்சத்தின் இறுதியில் வந்த அரசனான புதகுப்தர் கூட விஷ்ணுத்வஜம் என்ற கருடக்கொடியை கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றார். ஸ்கந்தகுப்தரின் ஜுனகாத் கல்வெட்டு விஷ்ணுவின் துதியோடு தொடங்குவதும் ஒரு சான்றாகக் காட்டப்படுகிறது.
ஆனால் இந்தக் கூற்றை மறுப்பவர்களும் உள்ளனர். பாகவதர் என்ற சொல், பகவானின் புகழ் பாடுபவர்களைக் குறிக்கும். அந்தப் பகவான் விஷ்ணுவாக மட்டுமல்ல வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்கின்றனர் சிலர். ஒரு ஆய்வாளர் திருக்குறளின் வரும் பகவன் என்பதைக் கூடச் சுட்டி, அது விஷ்ணுவையா குறிக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். ஏன் புத்தரைக்கூட பகவான் என்பவர்கள் உண்டு என்று சிலர் சுட்டுகின்றனர். விஷ்ணுவின் அவதாரங்களைக் குறிக்கும் நூலுக்குத்தானே பாகவதம் என்ற பெயர் உள்ளது என்ற கேள்விக்குப் பதிலாக தேவி பாகவதத்தை எடுத்துக்காட்டுகின்றனர் சிலர்.
நாணயம் என்பது செல்வத்தைக் குறிப்பது. அதில் செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி இருப்பதில் என்ன அதிசயம் என்று கூறும் அவர்கள், அதை வைத்து மட்டும் குப்தர்களை வைணவர்கள் என்று கூறலாகாது என்கின்றனர். அக்காலகட்டத்தில் தனித்தனி கடவுளர்களை வைத்து வழிபடும் சமயங்கள் உருவாகவில்லை. குப்தர்கள் ஹிந்து சமயத்தில் உள்ள எல்லாக் கடவுளர்களையும் வழிபட்டவர்கள், ஆகவே அவர்களை வைணவர்கள் என்று மட்டும் ஒதுக்குவது தவறு என்பது இன்னும் சிலரின் வாதம். வைணவர்கள் ‘குமாரகுப்தர்’, ‘ஸ்கந்தகுப்தர்’ என்றெல்லாம் பெயர்கள் வைப்பார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
சைவம்
குப்தர்களின் காலத்தில் பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. நகோட், அஜைகர், மதுரா போன்ற பல இடங்களில் சிவனுக்கான கோவில்கள் அமைக்கப்பட்டதை அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மதுராவில் உள்ள இரண்டாம் சந்திரகுப்தர் காலத்துக் கல்வெட்டு உதிதாச்சார்யர் என்பவர் கபிலேஸ்வரருக்கும் உபமிதீஸ்வரருக்கும் சிவலிங்க உருவில் ஆலயங்கள் எழுப்பினார் என்பதைத் தெரிவிக்கிறது. ஆகவே சிவனை லிங்க வடிவில் வழிபாடும் பழக்கம் இருந்தது தெளிவாகிறது. உதயகிரியில் உள்ள அதே அரசரின் கல்வெட்டு ஒன்று ‘சம்பு’வுக்கான கோவிலை அங்கே எழுப்பியதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. குமாரகுப்தர் காலத்து கரம்தண்டாக் கல்வெட்டு சிவலிங்கத்திலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. ‘நமோ மகாதேவாய’ என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு சிவபெருமானை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் விழாவைப் பற்றிக் குறிக்கிறது. ஆகவே உலோகங்களால் ஆன சிவனுடைய சிலைகளும் அக்காலத்தில் வடிக்கப்பட்டு உற்சவமூர்த்திகளாகப் பூஜிக்கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. குப்தர்களின் காலத்தில் சிவனுக்கு மட்டுமல்லாமல் பார்வதிக்கும் சேர்த்து கோவில்கள் எழுப்பப்பட்டன. சில கோவில்களில் அன்னையர் எழுவரான ‘சப்த மாதர்களின்’ உருவங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்குப் பகுதியில் குப்தர்களின் சிற்றரசர்களாக இருந்த வலபி அரசர்கள் தங்களைச் சிவனுடைய பக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். அவர்களுடைய நாணயங்களில் ரிஷபத்தின் உருவம் இடம்பெற்றது. இதைப் பின்பற்றியே ஸ்கந்த குப்தரும் ரிஷப உருவம் பொறித்த நாணயங்களை அச்சிட்டார்.
குப்தர்களின் கல்வெட்டுகளில் சிவனின் மற்ற பெயர்களான பசுபதி, சூலபாணி, ஸ்தாணு ஆகியவை இடம்பெற்றதைப் பார்க்கிறோம். சிவலிங்கத்தைத் தவிர மூர்த்திபூர்வமாக சிவனை வழிபடும் வழக்கமும் அப்போது இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. சிவனை அர்த்தநாரீஸ்வரராக வழிபடும் பழக்கத்தையும் குப்தர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.
சாக்தம்
குப்தர்களின் நாணயங்களில் உள்ள லக்ஷ்மி, சிம்ஹவாஹினியின் உருவங்கள் அவர்கள் சக்தி வழிபாட்டையும் பெருமளவில் மேற்கொண்டதை எடுத்துக் காட்டுகின்றன. உதயகிரி குகையில் உள்ள மகிஷாசுரமர்த்தனியின் உருவமும் சப்தமாதர்களின் சிற்பங்களும் குப்தர்களின் சக்தி வழிபாட்டிற்கான உதாரணங்களாகும். குறிப்பாக துர்கையின் வடிவமான சிம்ஹவாகினியின் உருவம் பல இடங்களில் காணப்படுகிறது. போரில் வெற்றி பெறுவதற்காக துர்கையை வழிபடுவது அக்காலத்தைய வழக்கம். அதைப் பின்பற்றியே குப்தர்களும் துர்கையை வணங்கி தங்களுடைய போர்களைத் தொடங்கினர். தவிர, பீகாரில் உள்ள கல்வெட்டு ‘மாத்ரிபிஸ்-ச’ என்று குறிப்பிடுவதிலிருந்து சாந்தமான தாய் தெய்வமாகவும் சக்தியை வழிபடும் வழக்கம் இருந்தது தெளிவாகிறது.
கௌமாரம்
முருகனைத் ‘தமிழ்க் கடவுள்’ என்று குறிப்பிட்டாலும் இந்தியா முழுவதும் பண்டைக்காலத்திலிருந்தே முருகனை வழிபடும் முறை இருந்தது என்பதைப் பல்வேறு கல்வெட்டுகளும் நாணயங்களும் எடுத்துக்காட்டுகின்றன. குப்தர்கள் காலத்திற்கு சற்று முன்னால் ஆட்சி செய்த குடியரசான யௌதேயர்கள் முருகனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள். குப்தர்கள் காலத்தில் ஸ்கந்தன் என்ற முருகக் கடவுளின் வழிபாடு பரவலாகப் பின்பற்றப்பட்டுப் பிரபலம் அடைந்தது. ப்ளீட் பதிவெடுத்த கல்வெட்டு ஒன்றில் கார்த்திகேயன், ஹரனின் மகனாகவும் மயிலை வாகனமாகக் கொண்டவனாகவும் குறிப்பிடப்படுகிறான். ஸ்கந்தனை தேவ சேனாதிபதியாக போர்க்கடவுளாக அக்காலத்தில் வழிபட்டனர். குப்தர்கள் எழுப்பிய ‘ஸ்வாமி மஹாசேனாவின்’ கோவிலைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். முருகனை முதன்மையாக வைத்து குப்தர்களின் அவைப் புலவனான காளிதாஸன் ‘குமார ஸம்பவம்’ என்ற காவியத்தை இயற்றினான். குப்த அரசர்களின் பெயர்களே குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் என்று அமைந்திருந்தன.
கணாபத்யம்
கணபதியை வழிபடும் கணாபத்யமும் குப்தர்களின் காலத்தில் பிரசித்தியை அடைந்தது. பும்ரா குகையில் உள்ள சிதிலமடைந்த சிற்பம் கணேசருடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கசியா குகையில் கணபதியுடனும் கார்த்திகேயருடனும் அமர்ந்திருக்கும் பார்வதியின் சிற்பமும் கணபதி வழிபாட்டை உறுதி செய்யும் ஆதாரங்களில் ஒன்றாகும். சமகாலத்தில் ஹூணர்கள் அமைத்த ஆப்கானிஸ்தானில் உள்ள கணபதியின் கோவிலும் கணாபத்யத்திற்கான் சிறந்த உதாரணமாகும்.
சௌரம்
வேத காலத்திலிருந்தே சூரியன் வழிபடப்பட்டு வந்தாலும் சூரியனுக்கான கோவில்களைக் குப்தர்கள் காலத்திலிருந்து தான் பெருமளவு காணமுடிகிறது. ஸ்கந்தகுப்தருடைய இந்தோர் செப்பேடுகள் சூரியனுக்கான ஸ்லோகத்தைக் கொண்டுள்ளன. மேலும் அதில் தேவவிஷ்ணு என்ற ஒருவன் இந்திரபுரத்தில் சூரியனுக்கான கோவிலில் விளக்கு ஒன்றை அளித்ததாகக் குறிப்பிடுகிறது. இப்படி இந்திரபுரத்தில் சூரியனுக்காக கோவில் எழுப்பியவர்கள் எண்ணெய் வணிகர்கள் ஆவர். போலவே குமாரகுப்தரின் கல்வெட்டு ஒன்றில் பெரும் வலிமையை உடையனவாகவும் ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரில் உலா வருபவனாகவும் சூரியன் புகழப்படுகிறான். போலவே குமாரகுப்தரின் மாண்டஸோர் கல்வெட்டில் சூரியனைப் புகழும் ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. இடையில் ஹூணர்கள் குப்தர்களின் ஆட்சிப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியபோதுகூட சூரிய வழிபாடு தொடர்ந்தது என்பதைக் காணமுடிகிறது. மிகிரகுலனின் காலத்தில் சூரியனின் கோவில் ஒன்று கட்டப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அக்காலத்தில் கிடைத்த பல முத்திரைகள் சூரியனின் உருவத்தைக் கொண்டுள்ளன.
மேற்கண்டவற்றிலிருந்து தனிப்பட்ட முறையில் ஹிந்து சமயத்தில் உள்ள குறிப்பிட்ட தெய்வங்களை அரசர்கள் வழிபட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக வைதிகத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள, அதை ஏற்கும் பல்வேறு தெய்வங்களை வழிபட்டும் அவர்களுக்கான கோவில்களை நாடெங்கும் எழுப்பி, சனாதன மதத்தையே குப்தர்கள் பின்பற்றியதாகத் தெரிகிறது. ஆகவே அவர்களை ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குள் அடைப்பது என்பது முடியாத விஷயமாகும்.
பௌத்தமும் சமணமும்
இருப்பினும் அவைதிக சமயங்களின்மீது வெறுப்புக் காட்டாமல் சமயப் பொறையோடு அவற்றையும் குப்த அரசர்கள் ஆதரித்து வந்தனர். பௌத்த மதத்தைப் பொருத்தவரை, ஸ்ரீகுப்தரின் காலத்திலேயே பௌத்த மடாலயம் ஒன்றை அவர் கட்டினார் என்று சீன யாத்திரிகர் இஸிங் குறிப்பிடுகிறார். சமுத்திரகுப்தரின் காலத்தில் புத்தகயாவில் மடாலயம் ஒன்றை எழுப்புவதற்காக இலங்கை அரசன் மேகவர்ணன் பௌத்தத் துறவிகளின் குழு ஒன்றை அனுப்பினான். அவர்களை கயாவில் தங்க வைத்து மடாலயத்தை எழுப்ப சமுத்திரகுப்தர் உதவினார் என்று தெரிகிறது. இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தைய சாஞ்சிக் கல்வெட்டு அவரது அதிகாரியான ஆம்ரகாடவன் புத்தவிஹாரம் ஒன்றை எழுப்பியதைப் பற்றித் தெரிவிக்கிறது. சந்திரகுப்த விக்கிரமாதித்தரின் காலத்தில்தான் சீன யாத்திரிகரான பாஹியான் இங்கு வந்து பௌத்தர்கள் இங்கே அமைதியாக வாழ்ந்ததைப் பற்றிக் குறிப்பெழுதி வைத்திருக்கிறார். குமாரகுப்தரின் காலத்தில் புத்தமித்திரர் என்ற பிக்ஷு புத்தருக்கான சிலைகளைச் செய்துவைத்ததைப் பற்றி கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடுகிறார். ஸ்கந்தகுப்தரின் காலத்தைய தியோரியாக் கல்வெட்டு சாக்கியமுனிக்கான சிலை ஒன்று எழுப்பப்பட்டதைப் பற்றித் தெரிவிக்கிறது.
அதைப் போலவே சமண சமயமும் குப்தர்களால் ஆதரிக்கப்பட்டாலும் பௌத்தத்தைப் போல அப்போது அது செழித்திருக்கவில்லை என்றே தெரிகிறது. சமுத்திரகுப்தரின் காலத்திலும் இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்திலும் அவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் எதுவும் குப்தர்களின் ஆட்சிப்பகுதியில் கிடைக்கப்பெறவில்லை. பாஹியானின் குறிப்புகளில்கூட அந்தச் சமயத்தைப் பற்றி எழுதப்படவில்லை என்பது வியப்பிற்குரிய விஷயமாகும். அவர் ஸ்ரமணர்கள் என்ற பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும் அது சமண மதத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறதா அல்லது ஹிந்து சன்யாசிகளைக் குறிக்கிறதா என்பது பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
குமாரகுப்தரின் காலத்தில்தான் சமணர்களைப் பற்றிய முதல் கல்வெட்டு கிடைக்கிறது. பொயு 432ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் பட்டிபவா என்பவரின் மகளான சாமாத்யா என்பவர் ஜைன முனிவரின் உருவம் ஒன்றை அமைத்ததாகக் குறிப்பிடுகிறார். தன்னுடைய ஆசார்யாரின் அனுமதி பெற்றே இந்தத் தீர்த்தங்கரர்களின் சிலைகளை அமைத்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். குமாரகுப்தரின் காலத்தைய உதயகிரிக் கல்வெட்டு சங்கரன் என்பவர் பார்ஸ்வநாதரின் உருவத்தை அங்கே அமைத்ததாகக் குறிப்பிடுகிறது. ஸ்கந்தகுப்தரின் கஹோம் கல்வெட்டு ஐந்து அர்ஹர்களின் (தீர்த்தங்கரர்களின்) உருவம் அமைத்ததைப் பற்றிக் குறிக்கிறது.
ஆகவே குப்தர்களின் காலத்தில் இந்திய சமயங்கள் அனைத்திற்கும் சிறப்பான இடம் அளிக்கப்பட்டு அவை அனைத்தும் போற்றப்பட்டன என்பதே அக்காலத்தைய கல்வெட்டுகளும் நாணயங்களும் அளிக்கும் செய்தியாகும்.
(தொடரும்)