அன்றிரவு ஹெலனின் உடல்தான் உறங்கியது. ஆன்மா விழித்திருந்தது. அடுத்த நாள் விடியல் உற்சாகமாகமானதாக இருந்தது. அதற்கடுத்து வந்த நாள்களும் பெரும் உற்சாகம் ததும்பியவைதான்.
குழந்தையிலிருந்து தன் கைகள் மூலம் ஆராய்ந்த அனைத்திற்கும் பெயர் தெரிந்துகொண்டார். அதன் பயனையும் தெரிந்துகொண்டபோது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியில் மிதந்தார்.
வாழ்வின் மீதான நம்பிக்கையும் கூடியது. அதுவரை தனிமையாக உணர்ந்தவர் அதன்பிறகு சுற்றி உள்ளவர்களோடு ஓர் இணக்க உணர்வை ஏற்படுத்திக்கொண்டார். மற்றவர்களைப்போல்தான் தானும் என நினைத்தார்.
அந்த ஆண்டின் கோடைக்காலம் வந்தது. டெய்சி பூக்களும், மஞ்சள் பூக்களும் பூத்துக்குலுங்கின. ஸல்லிவன், ஹெலனின் கைகளைப் பிடித்துக்கொண்டு வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்றார்.
ஹெலனுக்கு வெளியில் செல்வது பிடிக்கும். இதனால் ஸல்லிவன் பெரும்பாலும் தன் பாடத்தை நான்கு சுவருக்கு அப்பால் வைத்துக்கொண்டார்.
ஒரு விவசாயி பயிரிடுவதற்கு முன் நிலத்தை முதலில் உழுவார். அதைப் போல் ஸல்லிவன் ஹெலனை முதலில் பண்படுத்தினார். வெளியில் அழைத்துச்சென்று மென்மையான புல்வெளிகளின் மீது அமர்ந்துகொண்டுதான் தன் பாடத்தைத் தொடங்கினார்.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. அதுவும் ஹெலன் போன்று குழந்தைகளுக்குச் சுத்தமாகச் சரிவராது. எந்தச் சாரட்டில் பூட்டினால் வண்டி ஓடும் என்பதை ஸல்லிவன் நன்கு அறிந்திருந்தார். ஹெலன் என்ற ரதத்தைக் கரடுமுரடான பாதையில் கவமாக ஓட்டிச் சென்றவர் ஸல்லிவன்.
எதுவானாலும் நேரடிப் பாடம்தான். இயற்கை தரும் பலன்களைப் பற்றி நேரடியாக விளக்கினார். ஒரு விதை விதைத்தால் அதற்குச் சூரியன் என்ன செய்கிறது? மழை என்ன செய்கிறது? அது எப்படி மரமாக வளர்கிறது? அது எப்படி வயிற்றிற்கு உணவாகிறது? கண்ணிற்கு எப்படி விருந்தாகிறது? உடலுக்கு என்ன இதம் தருகிறது என யாவும் நேரடி டெமோதான்.
அடுத்ததாக மரத்திலிருந்து கூட்டிற்குத் தாவுவார் ஸல்லிவன். பறவைகள் எப்படித் தாங்கள் வசிப்பதற்குக் கூடு கட்டுகின்றன. அவை ஏன் நீண்ட தூரம் வலசை போகின்றன என்பதையெல்லாம் விளக்கினார்.
அப்படியே கொஞ்சம் மெல்ல நகர்ந்து காட்டிற்குச் சென்றார். சிங்கம், மான் என அனைத்து உயிர்களும் எப்படித் தங்கள் இரையைத் தேடிக்கொள்கின்றன, அவற்றின் உறைவிடம் என்ன? எப்படித் தங்குகின்றன போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தார்.
எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிவு வளர வளர மகிழ்ச்சி மேலும் அதிகரித்தது ஹெலனுக்கு. தான் இருக்கும் உலகத்தில்தான் இத்தனை விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் அறிந்துகொண்டோம் என்ற குஷியாட்டம் அது.
கணக்கு, பூலோகம் எனப் பிற பாடங்களுக்குப் போவதற்கு முன் இயற்கையை, அதன் அழகை ரசிப்பதற்குக் கற்றுக்கொடுத்தார் ஸல்லிவன்.
மரங்கள், பூக்கள், புற்கள் என எல்லா அழகையும் விடுபடாமல் சொல்லிக் கொடுத்தவர், இன்னொரு முக்கிய அழகையும் சொல்லிக்கொடுத்தார். அது, ஹெலனுக்கு அவரது தங்கையின் கைகளில் உள்ள வளைவுகள், மேடு பள்ளங்களின் அழகைக் காண அறிவுக் கண்ணைத் தூண்டிவிட்டார். அதன்பிறகு தங்கை மீதான வெறுப்பு மாறி அன்பு பிரவாகமானது.
ஸல்லிவனின் பாடத்தில் மெய்மறந்த இயற்கை ஹெலனுக்குத் தானும் ஒரு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பியது. நீ உணரும் இயற்கைக்கு அப்பால் எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதைக் காட்ட நினைத்தது.
வெளியில் பாடம் படித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர் இருவரும். வெய்யில் அதிகமாக இருந்தது. வழியெங்கும் மரத்திற்கு மரம் நின்று ஓய்வெடுத்தனர். வீட்டை நெருங்கும் நேரத்தில் காட்டுச் செர்ரி மரத்தின் கீழ் நின்றனர்.
அதன் நிழல் மிகவும் இதமாக இருந்தது. ஹெலன் அதை அணைத்துப் பார்த்ததில் மரத்தை மிகவும் பிடித்துவிட்டது. ஏனெனில் ஏறுவதற்கு வசதியாக இருந்ததால்.
ஸல்லிவன் உதவியுடன் கிளைகளில் தாவித் தாவி மேலே ஏறினார். மரத்தின் உச்சியில் வசதியான இடத்தில் அமர்ந்துகொண்டார். அடித்த வெய்யிலுக்கு அந்த இடம் மிகவும் குளுமையாக இருந்தது.
மதிய உணவை இங்கேயே கொண்டுவந்து கொடுத்துவிடலாம் என ஸல்லிவன் நினைத்தார். ஆசிரியர் திரும்பிவரும்வரை மரத்தில் இருப்பதாக ஹெலனும் உறுதியளித்தார்.
இயற்கை திடீரென மாறியது. வெப்பம் மறைந்து வானம் இருண்டது. ஹெலன் வெளிச்சத்தை வெப்பத்தின் மூலம்தான் உணர்வார். திடீரென குளிர்ச்சியைக் கண்டதும் இருண்டுவிட்டது என நினைத்தார். மூக்கும் வேலை செய்யும் அல்லவா? பூமியிலிருந்து மண் வாசனை கிளம்பியது. இடி மழைக்கு முன்பாக வரக்கூடிய வாசம் அது என்பதை உணர்ந்துகொண்டார். அந்தச் சூழல் ஓர் இனம் புரியாத பயத்தைக் கொடுத்தது. தான் தனித்திருப்பதால் தன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்துவிட்டதை உணர்ந்தார். அதுவரை அனுபவிக்காத உணர்வு அது. பீதியால் உறைந்தார். மனம் ஆசிரியரைத் தேடியது. எப்படியாவது இறங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஒரு பேர் அமைதி. அதன்பிறகு மரத்தின் கிளைகள் அனைத்தும் அசுரத்தனமாக ஆடின. வீசிய காற்றில் மரம் வேரோடு குலுங்கியது. காற்று வேரைப் பிடுங்காமல் ஆட்டிக்கொண்டிருக்க, ஹெலன் மரத்தை இறுக அணைத்துக் கொண்டார். இல்லையெனில் காற்றினூடே பறந்திருப்பார்.
சிறுசிறு கிளைகள் ஒடிந்து ஹெலன் மீது விழுந்தன. கீழே குதித்துவிடலாமா என்று ஒரு கணம் நினைத்தார். பயம் அவரை அப்படிச் செய்யவிடாமல் தடுத்தது. மரத்தின் கிளைகள் அவரை உரசி உரசி அசைந்தன.
மரத்தோடு சேர்ந்து கீழே விழப்போகிறோம் என நினைத்த நேரத்தில் ஸல்லிவன் ஹெலனின் கரங்களைப் பற்றினார். ஆசிரியரின் உதவியால் மரத்திலிருந்து இறங்கிவந்தார். அடுத்த கணம் ஆசிரியரைக் கட்டி அணைத்துக் கொண்டார். பூமியில் பாதம்பட்ட பிறகே படபடப்பு மெல்லக் குறைந்தது.
இயற்கை தனக்கு அன்பு மட்டுமல்ல கோபமும் இருக்கிறதெனப் புரியவைத்துவிட்டது. அதன் மென்மையான ஸ்பரிசத்திற்குப் பின்னால் இருக்கும் கொடூர நகங்களை ஹெலன் அன்றைக்குப் புரிந்துகொண்டார்.
இப்படி ஓர் அனுபவம் கிடைத்த பிறகு அவர் மீண்டும் மரத்தில் ஏற நினைத்ததில்லை. அப்படியே நினைத்தாலும் பழைய பயம் அப்போதுதான் நிகழ்ந்ததைப்போல் மிரள வைக்கும்.
காலம் பிரசவ வலியை மறக்கச் செய்வதுபோல் ஹெலனுக்குப் புயல் சம்பவம் மெல்ல மறைந்தது. காரணம் பூத்துக் குலுங்கும் மரத்தின் இனிமையும் சுகந்தமும்தான். உன் கோர முகத்தை நீ காட்டும்போது காட்டிக்கொள். அதற்காக உன்னை நேசிக்காமல் இருக்க முடியாது என அடுத்த பிள்ளைக்கு ஆசைப்பட்டார்.
அது ஒரு கோடைக்காலம். வசந்தகாலத்தை அனுபவிக்கும் இல்லத்தில் ஹெலன் மட்டும் தனியாக இருந்தார். காற்றில் மிதந்துவந்த நறுமணம் அவர் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. அந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொண்டார்.
மரம் மணத்தை அனுப்பி ஹெலனை அழைத்தது. எழுந்து நின்று கைகளை நீட்டியபடி தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அது மிசோமா பூக்களின் மனம் என்பதை உணர்ந்தார். அம்மரம் தோட்டத்திற்குச் செல்லும் பாதையின் கடைசியில் இருந்தது. அதுவும் ஒரு வளைவின் ஓரத்தில் இருக்கும் என்பதெல்லாம் முன்கூட்டியே தெரியும். அனுமானமாக அவ்விடத்தை அடைந்துவிட்டார்.
மிதமான சூரிய ஒளியில் கிளைகள் அசைந்தாடின. அதன் கிளைகள் உயரமாக வளர்ந்திருந்த புற்களைத் தொட்டுக்கொண்டிருந்தன. அதையும் ஹெலன் தொட்டுத்தான் உணர்ந்தார். அந்தக் கணம் இதைவிட அழகு உலகில் வேறில்லை என நினைத்து அனுபவித்தார்.
சொர்க்கத்திலிருந்து ஒரு மரம் இறங்கிவந்திருப்பதாக நினைத்தார். அம்மரத்தின் மென்மையான மலர்கள் லேசான ஸ்பரிசம் பட்டாலே சுருங்கிவிடும். காற்றில் பறந்து வந்து வீழ்ந்திருக்கும் அதன் பூக்களை மிதித்துவந்துதான் அம்மரத்தை அடைந்தார்.
என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு நிமிடம் நின்றார். ஏறிய கால்கள் மீண்டும் ஏற மறப்பதில்லை. அடுத்த விநாடி மளமளவென ஏறினார். கிளைகள் பெருத்து இருந்ததால் அவற்றைப் பிடித்துக்கொள்ளச் சிரமப்பட்டார். வலியின்றியா பிள்ளை பெறமுடியும்? சற்று நேரத்தில் சுகப் பிரசவம் முடியும். அந்தச் சுகமான நேரத்திற்காகக் கஷ்டப்பட்டு மேலேறினார்.
தான் ஓர் உன்னதப் பணியில் ஈடுபட்டிருப்பதைப்போல் இனிமையாக உணர்ந்தார். ஏற்கெனவே ஏறிய சீனியர்கள் அங்கு தங்குவதற்கு வாகான ஓர் இருக்கைப் போட்டிருந்தனர். அதைக் கண்டுபிடித்து அமர்ந்துகொண்டார்.
மர உச்சியில் அமர்ந்திருந்த தன்னை வான தேவதையாக உணர்ந்தார். அதன்பிறகு அடிக்கடி இம்மரத்திற்கு வருவதும், சொர்க்கச் சுகத்தை அனுபவிப்பதும் அவருக்கு வாடிக்கையாகிப்போனது.
ஒளிமயமான கனவு சிந்தனையில் மணிக்கணக்காக ஆழ்ந்திருப்பார். நீந்தி முடித்துக் கரை சேர்ந்தால், கரை சேர்க்க வந்த ஆசிரியர் ஸல்லிவன் அங்கிருப்பார்.
(தொடரும்)