விலங்கியலையும் தாவரவியலையும் சாவகாசமான முறையில் இயற்கையோடு ஒன்றிப் படித்தார் ஹெலன். இப்படி ஆர்வமாகக் கற்றுக்கொண்ட ஹெலனுக்காக ஒரு செல்வந்தர் பரிசு அனுப்பினார். அது தொல்படிமங்களின் சேகரிப்பு. பறவைகளின் நகங்கள் போன்றவற்றைச் சிறு சிறு கற்களில் பதித்திருந்தார். அவற்றோடு நத்தை போன்ற உயிரினத்தின் மேலோடுகளையும் சேர்த்து அனுப்பினார்.
ஆதிகாலத்தில் காடுகளில் செடிகளையும் கொடிகளையும் துவம்சம் செய்த மிருக இனத்தின் மிச்சம் அது. தன் உணவிற்காக மிகப்பெரிய மரங்களையும் ஒடித்துவிடும் தன்மைகொண்ட விலங்கினம் அது. மிகப்பெரிய காட்டாற்று வெள்ளத்தால் அவ்வினம் அழிந்தது.
அது எப்படி இருக்கும் என்பதை ஸல்லிவன் ஹெலனுக்குப் புரியவைத்துவிட்டார். அந்த விசித்திரமான மிருகம் பலகாலம் ஹெலனின் கனவில் வந்து பீதியடைய வைத்தது. ரோஜா, மரம், செடி, கொடி, சூரிய ஒளி, குதிரை குலம்படி, வான்கோழி எனச் சந்தோஷமாகப் பொழுதுபோக்கிய காலமது. ஹெலனின் கனவில் மட்டும் இப்படி ஒரு துயரப் பின்னணி இருந்தது.
இன்னொரு செல்வந்தர் அழகான கிளிஞ்சலைக் கொடுத்தார். நத்தைபோல் இருந்த அந்த உயிரினம் கூட்டிற்குள்ளிருந்து வெளிப்பட்டது. மீண்டும் அதற்குள் சுருண்டது. அந்த அதிசய உயிரினத்தைக் குதூகலத்துடன் தொட்டு உணர்ந்தார். இதைப்போன்ற மாற்று மகிழ்ச்சிதான் பழைய கனவு துயரத்திலிருந்து ஹெலனை மீட்டது.
உடனே கடல் பாடத்தை நடத்த ஆரம்பித்தார் ஸல்லிவன். அலையில்லாத அமைதியான கடலில் நாட்டிலுஸ் என்ற உயிரினம் எப்படிச் செல்கிறது? கடலின் செல்வங்கள், சுண்ணாம்புப் பாறைகள், கடலில் வாழும் உயிரினங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியான தி சேம்பர்டு நாட்டிலஸ் என்ற புத்தகத்தை ஸல்லிவன் வாசித்துக்காட்டினார். அதில் மோலுஸ்க்ஸ் என்ற உயிரினம் படிப்படியாகத் தனது மேலோட்டினை எப்படி உருவாக்குகிறது என்பதை விளக்கினார். மனித மனத்தின் வளர்ச்சிக் கட்டங்களும் இதைப்போன்றதுதான் என ஒப்பிட்டார். அந்த உயிரினம் தண்ணீரிலிருந்து கிரகிப்பதை எவ்வாறு ஓடாக மாற்றிக்கொள்கிறதோ, அதேபோல் நாமும் திரட்டிய அறிவுத் துகள்களை முதிர்ந்த சிந்தனைகளாக வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
கண்ணாடி தொட்டியில் மீன் வளர்ப்பதுபோல் தலைப்பிரட்டைகளை விட்டுவைத்திருந்தார் ஆசிரியர். அதற்குள் ஹெலன் கையை விடுவார். அவை விரல்களுக்கிடையே தப்பிச்செல்வது ஹெலனுக்கு வேடிக்கையாக இருக்கும். அளவுக்கு மீறி ஹெலன் செய்த சேட்டையில் தலைப்பிரட்டை தொட்டியைத்தாண்டிக் குதித்துவிட்டது. அது இறந்துவிடும் என்பது தெரியாமல் துடிப்பைக் கையால் உணர்ந்து குஷியானார். கடைசி நேரத்தில் எடுத்து தொட்டிக்குள் விட்டார். உடனே அது நீரின் ஆழத்திற்குச் சென்று பதுங்கிக்கொண்டது.
தலைப்பிரட்டை குஞ்சுப் பருவத்திலிருந்து தவளைப் பருவத்தை எட்டியது. அதற்குமேல் தொட்டியில் வைத்திருக்கவில்லை. அவற்றை வீட்டின் பின்புறமிருந்த குளத்தில் விட்டுவிட்டனர். கோடைக்கால இரவில் அதன் விசித்திரச் சத்தத்தை ஹெலன் அதிர்வின் மூலம் உணர்ந்தார். அது காதல் செய்வதாக நினைத்தார். முதலில் அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய மூளையைக் கசக்கியவர், பின்னர் தவளைகளின் காதல் வரை மிகச் சரியாகக் கண்டுபிடித்தார்.
ஒரு லில்லிச்செடியை வெளிச்சம் படும் சாளரத்தில் வைத்தார் ஸல்லிவன். அதைத் தினமும் தொட்டுப் பார்ப்பார் ஹெலன். மொட்டு விரியும் அறிகுறி தெரிந்ததிலிருந்து வெடித்து வருவது வரை அதன் வளர்ச்சியைக் கவனித்தார். பூக்கள் மலர்ந்து மணத்தையும் அழகையும் பரப்புவது வரை ரசனையோடு கூடிய தாவரவியலைப் படித்தார்.
எதை எப்படிக் கற்றுக் கொடுத்தாலும் ஒரு குழந்தைக்கு ஏதாவது ஒரு பாடம் கசக்கும்தானே. அப்படி ஹெலனுக்குக் கசந்த பாடம் கணிதம். ஆரம்பத்திலிருந்தே எண்களில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. எண்ணிக்கையைக் கணக்கிடத்தான் ஊசி மணி, பாசி மணி விவகாரத்தை உருவாக்கினார் ஸல்லிவன். குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மணிகளை ஒவ்வொரு பக்கமும் சமமாகக் கோர்க்க வேண்டும் என்றார்.
சின்னச் சின்ன குழல் வடிவச் சாதனங்களைப் பயன்படுத்தி கூட்டல், கழித்தல் கணக்குகளைக் கற்றுக் கொடுத்தார். ஒரே சமயத்தில் ஐந்து ஆறு குழுக்களாகக் குழல்களை வைத்துக் கணக்கு போடச்சொன்னார். பொறுமை இல்லாமல் போனது ஹெலனுக்கு. கோபம் வரும், கத்துவார் என்றதறிந்த ஆசிரியர் விட்டுவிடுவார். கணக்கிற்குப் போக்குக் காட்டிய ஹெலன் விளையாட்டு நண்பர்களைத் தேடிச் சென்றுவிடுவார்.
ஆண்டுகள் செல்லச் செல்ல அனைத்தையும் கற்க நினைத்தார். அதற்கு ஒத்துழைத்து மேடை விரித்துக்கொடுத்தார் ஸல்லிவன். ஆரம்பத்தில் எந்தத்திறமையையும் ஹெலனால் வெளிப்படுத்த முடியவில்லை. அதைப் பட்டைத்தீட்டி வெளிப்படுத்த வைத்தவர் ஸல்லிவன். கற்க, கற்கச் சண்டியர் சாந்தர்வர் ஆனார். விடாப்பிடி அடம் மாறி நெகிழும் தன்மையரானார்.
எந்த ஒரு விஷயத்திலும் அதற்குள் ஒளிந்திருக்கும் அழகை ஸல்லிவன் ஹெலனுக்குச் சொல்லிக் கொடுத்துவிடுவார். ஹெலனின் வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக மாறியது. ஓயாத சிந்தனை, செயல், உதாரணம் மூலமாக அவர் கற்றுக்கொள்வது தொடர் பயிற்சியானது.
மேதைமை துள்ளும் ஸல்லிவனின் அணுகுமுறை, அன்பு ததும்பும் ஆரம்பக் கற்றல் எனப் பலமான அஸ்திவாரம் அமைந்தது. எந்தச் சந்தர்ப்பத்தில் எந்த விஷயத்தை அறிவின் ஆழம்வரை பாய்ச்ச முடியுமோ அவ்வளவு ஆழம் பாய்ச்சினார். ஹெலனும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
ஆறு போகிற போக்கில் ஓரிடத்தில் மலர் வைத்திருக்கும். இன்னொரு இடத்தில் புதர் வைத்திருக்கும். வேறோர் இடத்தில் பஞ்சு போன்ற மேகங்களைப் பிரதிபலிக்கும். ஆனால் நதி என்னவோ தெள்ளிய நீரோடையாகத்தான் ஓடும். ஹெலனின் மனமும் அப்படித்தான். மனம் போனபோக்கில் போகவிட்டு ஹெலனைப் புரிந்துகொண்டு பாடம் நடத்தினார் ஸல்லிவன்.
மலையருவி, காட்டாறு, நீரோடை என எல்லாம் ஒன்றாகும். அப்போதும் அது தன் துல்லியத்தை மாற்றாமல் மலைகளையும், நீல வானையும், மரங்களையும் பிரதிபலித்தவாறு ஓடும். ஏன் ஒரு சிறு மலரின் முகப்பொலிவைக்கூடப் பிரதிபலித்துவிடும். அப்படித்தான் ஹெலனுக்குள் ஆயிரம் பாடங்கள் வந்து ஏறினாலும் பிஞ்சு மனதின் துல்லியம் தனிப் பிரதிபலிப்பைக் காட்டிவிடும்.
எந்த ஆசிரியராலும் சொல்லித்தர முடியும். ஆனால் கற்பது அவரவர் திறமையால்தான். சுறுசுறுப்பாகக் கற்றுக்கொள்வதும், ஓய்வாக இருந்துகொண்டு ஏமாற்றுவதும் அந்தந்தக் குழந்தையின் மனநிலையைப் பொறுத்ததே. ஹெலனோ இருண்ட வாழ்வை அனுபவித்தவர். வெற்றியின் ருசியைச் சுவைத்தவர். எந்தக் கசப்பான வேலையையும் மனமுவந்து செய்தார். பாடத்தைக் கொண்டாட்டமாகப் படிக்க வேண்டும் என்பதைத் துணிவுடன் ஏற்றார்.
ஸல்லிவன், ஹெலன் உறவு பரஸ்பர நெருக்கத்தால் பிரிக்க முடியாத உறவானது. ஹெலன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடியும் ஸல்லிவனுடையது. ஹெலன் அடைந்த எல்லாச் சிறப்பும் ஸல்லிவனுக்கும் உரியது. அவருடைய அன்பான ஸ்வரிசத்தால்தான் இவருடைய செல்கள் திறமை பூத்து விரிந்தன. ஸல்லிவன் அல்லாத எந்தவொரு உத்வேகமோ சந்தோஷமோ ஹெலனுக்குத் தன்னால் கிடைத்துவிடவில்லை.
ஸல்லிவன் வருகைக்குப் பிறகு வந்த முதல் கிறிஸ்துமஸ் ஹெலனால் மறக்க முடியாது. குடும்பமே ஹெலனை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க நினைத்தது. அந்தக் குடும்பத்தையே பதில் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செயலை ஸல்லிவனும் ஹெலனும் சேர்ந்து செய்தார்கள். அதற்கேற்றார்போல் ஹெலனின் நண்பர்களும் ரகசியத்தை எப்படிக் காக்க வேண்டும்? எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். இது ஹெலனின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது. ரகசியம் காப்பதைப் போதை தரும் கிக்காக உணர்ந்தார். இந்த ரகசிய விளையாட்டால் மொழியின் உபயோகம் பற்றி அறிந்துகொண்டார். கொண்டாட்டம் ஒரு புறம். அந்தக் கொண்டாட்டத்தினூடாகப் பாடம் மறுபுறம்.
தினமும் மாலை நேரத்தில் குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டுவார்கள். ஹெலன் குடும்பம் சுற்றிலும் அமர்ந்துகொண்டு யூகத்தால் கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாடுவார்கள். கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க இந்த விளையாட்டு மேலும் பரவசத்தைக் கொடுத்தது.
டஸ்கம்பியா பள்ளிக் குழந்தைகள் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வகுப்பறையில் அமைத்தார்கள். அதைப் பார்க்க ஹெலனுக்கு அழைப்பு வந்திருந்தது. மரம் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதைத் தொட்டுப்பார்த்து உணர்ந்தார். இதமான ஒளியில் விசித்திரமான பழங்கள் அதன் கிளைகளில் ஊஞ்சலாடின. ஹெலன் குஷியின் உச்சத்திற்குச் சென்றார். மனதில் கரைபுரண்ட மகிழ்ச்சிக்கேற்ப அந்த மரமும் துள்ளிக் குதித்தது.
ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசு உண்டு என்பதை அறிந்ததும் ஹெலன் இன்னும் பரவசமானார். அடுத்த மகிழ்ச்சி அந்த மரத்தை அமைத்த குழந்தைகளுக்கு ஹெலன் கைகளால் பரிசு வழங்குவார் என்ற அறிவிப்பு. பிறருக்குப் பரிசு கொடுக்கப்போகும் மகிழ்ச்சியில் தனக்கு வரவிருக்கும் பரிசு பற்றிய கனவை மறந்தார்.
கிறிஸ்துமஸ் தினம் தொடங்கப்போகிறது. நேரமாக ஆக ஹெலனின் பொறுமை குறைந்தது. தனக்கு எல்லோரிடமிருந்தும் என்ன பரிசு கிடைக்கும் என்ற ஆவல் அதிகரித்தது. ஸல்லிவன் ‘பொறுமையாகக் காத்திரு. மற்றவர்களைவிட உனக்கு நல்ல பரிசு கிடைக்கும்’ என்று சமாதானப் படுத்தினார். ஏற்கெனவே கிடைத்த பரிசுகள்தான் கிடைக்கப் போகும் பரிசு பற்றிய ஆர்வத்தைத் தூண்டியிருந்தன. பள்ளியின் கிறிஸ்துமஸ் மரத்திலிருந்து கிடைத்த பரிசோடு உறங்கச் சென்றுவிட்டார்.
படுக்கைக்குச் சென்றாலும் நீண்ட நேரம் உறங்காமல் விழித்திருந்தார். கிறிஸ்துமஸ் தாத்தா வந்தால் என்ன செய்வார் என்பதைக் கவனிப்பதற்காக உறங்காமல் உறங்குவதைப்போல் நடித்தார். தூங்கி எழுந்தபோது ஹெலனின் கைகளில் வெள்ளைக் கரடி பொம்மை இருந்தது. தாத்தா வந்ததோ பரிசு வைத்ததோ தெரியாது. அவர் நடிப்பு அதை அவருக்குக் காட்டிக்கொடுக்காமல் நிஜத்தில் ஆழ்த்திவிட்டது.
ஆனால் மறுநாள் காலை முதல் ஆளாக எழுந்தார். மெர்ரி கிறிஸ்துமஸ் என்று கத்தி அனைவரையும் எழுப்பினார். மேஜை, நாற்காலி, கதவு, சாளரம் என நடக்கும் இடத்தில் எல்லாம் பரிசுப் பொருட்கள். கவனமாக நடந்தாலும் பரிசுகளின் மீது இடறி விழுந்தார். ஆச்சர்யம் நிறைந்த பரிசுகள் அனைத்தும் மெல்லியக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தன.
ஹெலனுக்குக் கிடைத்த பரிசுகளில் உயிர்ப்புள்ளது ஸல்லிவனின் பரிசு. மஞ்சள் நிறப் பாடும் பறவையைப் பரிசளித்திருந்தார். இதைவிடப் பேரானந்தம் ஹெலனுக்கு வேறில்லை. ‘லிட்டில் டிம்’ என்று பெயர் சூட்டினார். கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார். டிம்மும் தத்தி தத்தி மேலேறும். கைகளில் வைத்திருக்கும் செர்ரியைக் கொத்திச் சாப்பிடும். அந்த அளவிற்கு டிம் ஹெலனோடு நெருக்கமானது.
புதிய நண்பனை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை ஸல்லிவன் சொல்லிக்கொடுத்திருந்தார். தினமும் காலை உணவிற்குப் பிறகு நண்பனைக் குளிக்க வைத்து தயார்ப்படுத்துவார். கூண்டைச் சுத்தம் செய்வார். கிண்ணங்களில் புதிய விதைகளையும் தண்ணீரையும் நிரப்பி வைப்பார். கூண்டிற்குள் பறவை சுகமாக இருக்கக் குட்டி ஊஞ்சல் கட்டிவைத்தார். அதில் புற்களைத் தொங்கவிட்டார்.
ஒருநாள் சாளரக் கட்டையில் கூண்டை வைத்துவிட்டு நண்பனைக் குளிப்பாட்டுவதற்காகத் தண்ணீர் எடுக்கச் சென்றார். திரும்பி வரும்போது பூனை ஒன்று தன்னை உரசிச் செல்வதை உணர்ந்தார். அப்போது என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் அனுமானிக்க முடியவில்லை. கூண்டிற்குள் கையைவிட்டார். டிம்மின் ஸ்பரிசம் கிடைக்கவில்லை. நண்பன் ஹெலனின் விரலைக் கவ்வ வரவில்லை. அந்தத் தோழனை மீண்டும் பார்க்க முடியாது என்பது புரிந்தது.
ஹெலன் பள்ளிப்பாடங்கள் மட்டுமல்ல வாழ்வின் யதார்த்தப் பாடங்களையும் கற்றுக்கொண்டார். ஏற்க முடியாத நிஜத்தையும் ஏற்கத் துணிந்தார்.
(தொடரும்)