போராட்டக் குணத்தைக் கொண்டிருந்த ஹெலனுக்கு உள்ளே, ஒரு சாதாரணப் பெண்ணுக்கான உணர்வுகளும் இருந்தன. வெளியுலகத்துக்கு அவர் ஓர் இரும்புப் பெண்மணியாக, எதற்கும் அஞ்சாத புரட்சியாளராகத் தெரிந்தாலும், அன்பு, பாசம், கடமை, நன்றியுணர்ச்சி போன்ற பல உணர்வுகளால், அவருடைய தனிப்பட்ட வாழ்வில் அலைக்கழிக்கப்பட்டு, நிம்மதி இழக்கும் நிலை ஏற்பட்டது. இத்தகைய ஒரு நிலைக்குக் காரணம் காதல். ஆம்! காதல் என்கிற அந்த இனிய தென்றல், ஹெலனின் மன வாசலையும் தட்டியது.
ஹெலனின் வாழ்வின் மிக முக்கியத் தூணாக, அதாவது அவருடைய புலன்களாக, பல தசாப்தங்கள் உடன் பயணித்தவர், ஆசிரியையும் வழிகாட்டியுமான ஆனி சல்லிவன். உண்மையில், ஆனி சல்லிவனுடைய அர்ப்பணிப்பு இல்லாவிட்டால், ஹெலன் கெல்லர் என்கிற ஆளுமையே உருவாகியிருக்க முடியாது என்றுகூடச் சொல்லலாம். ஆனால் ஒரு கட்டத்தில் ஆனி சல்லிவனின் உடல்நலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான உழைப்பும், வயது மூப்பால் ஏற்பட்ட நோய் பாதிப்புகளும் அவரைத் தள்ளாடச் செய்தன.
இனியும் உழைத்தால் இறந்துபோய்விடக்கூட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியதால், ஹெலனுக்குப் புதிய உதவியாளரைத் தேடினார்கள். அப்படித்தான், ஹெலனின் 36வது வயதில், அவருடைய வாழ்க்கைக்குள் நுழைந்தார் பீட்டர் ஃபாகன். ஓர் இளம் சீர்திருத்தவாதியாகவும், கூர்மையான சிந்தனைகொண்ட பத்திரிகையாளராகவும் இயங்கி வந்த பீட்டரின் வருகை, ஹெலனின் அமைதியான தனிமை உலகத்தில் ஒரு புதிய வசந்தத்தை உருவாக்கி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் வெறும் அலுவல் ரீதியாகத் தொடங்கிய இருவருக்கும் இடையிலான அந்த உறவு, நாளுக்கு நாள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நேசிக்க வித்திட்ட ஆழமான காதலாக மலர்ந்தது. உலகத்தையே தன் கைவிரல் தொடுதல்களாலும் அதிர்வுகளாலும் மட்டுமே உணர்ந்து வந்த ஹெலன், அன்பின் மிக உயர்ந்த பரிமாணத்தையும், காதலின் சிலிர்ப்பையும் பீட்டரின் மூலமாக முழுமையாக அனுபவித்தார்.
மௌனமும் இருளும் மட்டுமே நிரம்பியிருந்த அவரது அக உலகத்தில், காதலின் மெல்லிய கீதம் ஒலிக்கத் தொடங்கியது. பீட்டரின் குரலற்ற தொடுதல்களும், கைகளில் அவர் எழுதிக் காட்டிய ஆசை வார்த்தைகளும், ஹெலனுடைய இதயத்தில் அதுவரை எவரும் எழுப்பாத மெல்லிய சலனங்களை உருவாக்கின.
அந்தக் காதல் உணர்வு ஹெலனின் உடலில் ஒரு புதிய சிலிர்ப்பைப் பாய்ச்சியது. அதுவரை உலகத்தின் அறிவுரைகளையும், அரசியல் சித்தாந்தங்களையும் மட்டுமே விரல் நுனிகளால் உணர்ந்திருந்த அவருக்கு, ஓர் ஆணின் அன்பும் அரவணைப்பும் எப்படிப்பட்டதொரு பரவசத்தை அளிக்கும் என்பதை பீட்டரின் அருகாமை கற்றுக்கொடுத்தது. மௌன சூழலில் ஹெலனின் கைகளில் பீட்டருடைய விரல்களால் கோர்க்கப்படும் வார்த்தைகள், அவருக்குள் ஆயிரமாயிரம் ரகசியக் கதைகளை முணுமுணுத்தன.
ஹெலன் ஒரு பெண்; அதைவிட முக்கியமாக எளிய மனிதர்களைப்போல் மனதார நேசிக்கவும், இன்னொருவரால் ஆழமாக நேசிக்கப்படவும் விரும்பிய ஓர் உணர்ச்சிமிக்க ஜீவன். காதலின் உன்னதமான அன்பை ஹெலனின் உடல் உணர்ந்துகொண்ட விநாடி முதல், அவருடைய தனிமை உலகமானது அன்பால் நனையத் தொடங்கியது. தன் காதலைப் பீட்டர் வெளிப்படுத்தியதும், அதனை மகிழ்ச்சியோடு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார் ஹெலன். இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்தனர்; தங்களது எதிர்கால வாழ்க்கையை இணைத்துக்கொள்ள, ரகசியமான முறையிலாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென உறுதியாக முடிவெடுத்தனர். இப்படித் தன் திருமணத்தை ரகசியமாக ஹெலன் மேற்கொள்ள முயன்றதற்கு, வலுவான காரணம் இல்லாமலில்லை.
அது ஒரு தூய காதல். எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும், இந்தக் காதல் விவகாரத்தில் அன்றைய சமூகச் சூழல் ஹெலனுக்கு எதிராக இருந்தது. அதாவது, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் கால அமெரிக்கச் சமூகம் அவருடைய இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இல்லை. ஒரு மாற்றுத்திறனாளிப் பெண், அதுவும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள ஒருவர், திருமணம் செய்துகொண்டு ஒரு சாதாரணக் குடும்ப வாழ்க்கையை முன்னெடுப்பது குறித்து அந்தச் சமூகம் கற்பனை செய்துகூடப் பார்க்க மறுத்தது.
பார்வையற்ற ஒருவர் எதற்கும் தகுதியற்றவர் என்கிற பிற்போக்குத்தனமான சிந்தனையும், மாற்றுத்திறனாளி ஒருவருக்குப் பிறக்கும் குழந்தையும் மாற்றுத்திறனாளியாகவே இருக்கும் என்கிற எண்ணமும் அச்சமூகத்தின் மூளையில் ஊறிக் கிடந்தன. அப்படியே மாற்றுத்திறன் இல்லாத குழந்தை பிறந்தாலும், அதைக் கவனிக்கவோ அல்லது அக்குழந்தையைச் சராசரி பெற்றோரைப்போல் வளர்க்கவோ முடியாது. கூடவே வீட்டு வேலைகள் செய்யவும் குடும்பத்தின் பாரத்தைத் தங்கும் வலிமையும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இருக்காது என்கிற பிற்போக்குத் தனமான பொதுப் புத்தி அந்தக் காலத்தில் பரவலாக இருந்தது. இதுவே ஹெலனின் காதலுக்கு எதிராக மாபெரும் எஃகு சுவராக எழுந்து நின்றது.
பொதுச் சமூகத்தின் இத்தகைய நிலை ஒருபுறம் இருக்கட்டும். சமூகம் எப்படியெல்லாம் சிந்திக்கும் என்பதை ஏற்கெனவே ஹெலன் நன்கு அறிந்திருந்தார். அது குறித்து அவர் அதிகம் யோசிக்கவில்லை. ஆனால், அதைவிட முக்கியமாக ஹெலனைச் சுற்றி இருந்தவர்கள், குறிப்பாக, அவருடைய பெற்றோர், ஆனி சல்லிவன் போன்றோர் இக்காதலை எதிர்த்ததோடு வன்மையாக அவரைக் கண்டிக்கவும் செய்தார்கள். இதை ஹெலனே எதிர்பார்க்கவில்லை. அவர்களுடைய இந்த அணுகுமுறை அவருடைய இதயத்தை நொறுக்கியது.
ஹெலன் திருமணம் செய்துகொண்டால், பொதுச் சமூகம் அவரை வெறுத்து ஒதுக்கி வைத்துவிடும், அதனால் தன் மகளுக்குப் பாதுகாப்பில்லாமல் போய்விடும் என்றெல்லாம் நினைத்து ஹெலனின் தாய் அஞ்சினார். ‘பார்வையற்ற உன்னால் எப்படி ஒரு குடும்பத்தின் பாரத்தைத் தாங்க முடியும்? இந்தச் சமூகம் உன்னை ஏளனம் செய்யும்’ என்று அவருடைய தாய் கூறிய வார்த்தைகள், ஹெலனின் இதயத்தில் முட்களாகப் பாய்ந்தன.
தன்னுடைய குறைபாட்டைப் பெரிதாக எண்ணாமல், அடுத்தடுத்துப் படிக்கவும், விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் ஊக்குவித்த தாய், தற்போது எதனால் தன்னுடைய காதலை எதிர்க்கிறார் என்பது புரியாமல் திணறிப்போனார் ஹெலன். ஆனால் இதைவிடவும் அவருக்கு அதிக வேதனையைத் தந்தது ஆனி சல்லிவனின் எதிர்ப்பு.
தன் ஒட்டுமொத்த வாழ்வையும் ஹெலனுக்காக அர்ப்பணித்த ஆனி சல்லிவன், ஹெலன் தனக்கான ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்வது குறித்து மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக, தன் பிடியிலிருந்து ஹெலன் நழுவிச் செல்வதாக எண்ணித் தவித்தார். ஹெலனின் காதல் என்பது ஒரு துரோகச் செயல் என்கிற மனநிலையில் அவர் இருந்தார். ‘நீ ஒரு தனி மனிதனுக்காக உன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளக்கூடாது; உன்னுடைய ஆன்மா இந்த உலகத்திற்குச் சொந்தமானது’ என்று கூறி அக்காதலை எதிர்த்தார் ஆனி சல்லிவன். அவருடன் ஹெலனின் தாயாரும் இணைந்துகொண்டார்.
சமூகத்தின் அழுத்தங்களும், குடும்பத்தினரின் தடைகளும், ஆனி சல்லிவனின் தொடர்ச்சியான வஞ்சகமற்ற எதிர்ப்பும், நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஹெலனால் அந்தத் திருமணத்தை எவ்விதத்திலும் வெளிப்படையாக முன்னெடுக்க முடியாத சூழல் உருவானது. தாயின் அழுகையும் ஆனி சல்லிவனின் பிடிவாதமும், காதலைக் கைவிடும் நிலையை நோக்கி அவரைத் தள்ளுவதில் குறியாக இருந்தன.
சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய ஹெலன் கெல்லர், தன் சொந்தக் காதலைத் தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் காப்பாற்றப் போராடியது அவருடைய வாழ்வின் மாபெரும் முரணாகவும் சோகமாகவும் மாறியது.
ஆனால் எத்தனை அழுத்தம் வரப்பெற்றாலும் தன் காதலில் ஹெலன் உறுதியாக இருந்தார். வீட்டைவிட்டு ரகசியமாக வெளியேறி, வேறு மாகாணத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர். திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துவிட்டால் கண்டிப்பாகத் தன் தாயும், ஆனி சல்லிவனும் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார் ஹெலன். இதன்படி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. ஹெலனின் வீட்டில்தான் அப்போது ஆனி சல்லிவனும் வசித்திருந்தார். அதே வீட்டின் வெளிப்பகுதியில் இருந்த ஓர் அறையில் பீட்டர் தங்கியிருந்தார்.
குறிப்பிட்ட நாளன்று இரவு, தனக்குத் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் முகப்பு வாசலுக்கு ஹெலன் வந்துவிட வேண்டும். பீட்டரும் அதேநேரம் அங்கு வந்த பிறகு, இருவரும் இணைந்து அங்கிருந்து வேறு மாகாணத்துக்குச் சென்றுவிடவேண்டும். அதன்பின்னர் அங்கே திருமணம் செய்து கொள்ளவேண்டும். இதுதான் திட்டம்.
இந்நிலையில், குறிப்பிட்ட அந்த இரவும் வந்தது. ஆனால் அன்று அவருக்கு அங்கு நடந்தது, ஹெலனின் வாழ்க்கையில் என்றுமே ஆறாத நிரந்தரக் காயமாக மாறியது.
(தொடரும்)

