ஹெலன் உள்சிந்தனையை வளர்க்க நினைத்தார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார். அப்பயணங்கள் அவர் சிந்தனைக்குத் தீனி போட்டன. அதுவரை அகப்படாமல் போக்குக் காட்டியவற்றை வரிசையில் வந்து நிற்க வைத்தார். அவர் செய்த சோதனைகள் அவரைப் புடம் போட்டன. அந்த அனலிலிருந்து வெளியே வந்தபிறகு தங்கம்போல் ஜொலித்தார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக கிலெவ்லெண்ட் பதவியேற்றார். அந்தச் சமயத்தில் ஹெலன் வாஷிங்டன் சென்றிருந்தார். உலகப் பொருட்காட்சியைச் சுற்றிப்பார்த்தார். நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுகளித்தார். உலகில் பல்வேறு அனுபவங்கள் ஒருங்கே கிடைக்கப்பெற்ற பயணம் அது.
மன உளைச்சல் நேரத்தில் ஹெலனின் படிப்பு பாதித்தது. அதேபோல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோதும் படிப்பு பாதித்தது. வாரக் கணக்கில் படிப்பை மூடிவைத்துவிட்டு உலக அனுபவங்களைப் படித்தார்.
ஹெலன் நின்ற இடத்தில் தலைக்குமேல் நயாகரா வீழ்ந்துகொண்டிருந்தது. அந்தரத்தில் கொட்டிய வெள்ளிக் கரைசலையும், பூமியின் நடுக்கத்தையும், காற்றின் அதிர்வலையையும், அது கொண்டுவந்த சாரலையும் உணர்ந்தார். கண்ணிருந்து பார்க்கும் காட்சியைவிட மனக்கண்ணில் அதிகம் பார்த்தார். உயரத்திலிருந்து விழும் நயாகரா அருவி நிலத்தில் கரைபுரளவில்லை. ஹெலன் மனதிற்குள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஹெலனைச் சுற்றிச் சூழ்ந்தது. துள்ளிக் குதித்தார். அந்த அளவிற்கு நயாகராவால் ஹெலன் மகிழ்வார் என்று ஸல்லிவனே எதிர்பார்க்கவில்லை. மற்றவர்கள் கேள்வி கேட்காமல் இருப்பார்களா? அதன் அழகும் இசையும் எப்படி ஏதுமற்ற சிறுமிக்குப் புரியும்? கரையை நோக்கிப் பாய்ந்துவரும் அலையைப் பார்க்க முடியாது. ஆரவாரத்தைக் கேட்க முடியாது. எப்படிப் புரிந்துகொண்டதாகச் சொல்கிறார் என்று பலரும் சந்தேகக் கேள்வி எழுப்பினர்.
‘பார்க்க முடியாத அன்பை எந்த அளவிற்கு ஆழமாகப் புரிந்துகொள்ள முடியுமோ அப்படித்தான் நயாகராவையும் புரிந்துகொள்ள முடிந்தது’ என்று பதில் சொன்னார். அன்பு என்றால் என்ன என்று தெரியாமல் கஷ்டப்பட்ட ஹெலன் அதை உரிய இடத்தில் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்குத் தேறிவிட்டார்.
அடுத்து அலெக்சாண்டர் கிரகாம்பெல், ஸல்லிவன் ஆகியோருடன் உலகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். எது எப்படி இருக்கும் என்று கற்பனையால் மட்டும் வாழ்ந்த குழந்தைக்கு அத்தனையும் கைகளால் தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கற்கனைகளை நிஜமாக்கிய நாள்கள் அவை.
உலகக் கண்காட்சியின் தலைவராக ஹிக்கின்ஸ் பாதம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் ஹெலன் தொட்டுப்பார்க்கச் சிறப்பு அனுமதி கொடுத்திருந்தார். போரில் பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடிப்பதுபோல் கட்டுக்கடங்காத ஆர்வத்தோடு ஹெலன் எல்லாவற்றையும் தொட்டுப்பார்த்தார். கண்காட்சியின் பெருமைகளை விரல்களால் உள்ளே அள்ளிப்போட்டுக்கொண்டார். கலைடாஸ்கோப் சாதனம் போல் அவர் விரல்கள் எல்லாவற்றையும் படம் பிடித்துக்கொண்டன.
உலகத்தின் மூலை முடுக்கை எல்லாம் இருந்த இடத்தில் கற்பனையால் வலம் வந்தவர். நிஜத்தில் தொட்டுப்பார்த்தபோது அதிசயங்களால் மகிழ்ந்தார். மனிதர்களின் கண்டுபிடிப்புகளையும் அவர்களுடைய திறமைகளையும் கண்டு வியந்தார். தொழில்துறையின் நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் அனைத்தையும் விரல்கள் மூலம் உள்ளுக்குள் ஏற்றினார்.
அடுத்து மூவரும் சேர்ந்து மிட்வே ப்லெசன்ஸ் சென்றனர். அங்கு அரேபிய இரவுகள் கதையில் வருவதைப்போல் பிரம்மாண்டமாக இருந்தன. எங்கு பார்த்தாலும் புதுமையும் சுவாரஸ்யமும் நிரம்பி வழிந்தன.
ஹெலன் தான் படித்த புத்தகங்கள் வழியாக இந்தியாவைப் பார்த்திருக்கிறார். கண்காட்சியில் இந்தியாவைக் கண்டார். கண்கவர் கடைவீதிகளில் விநாயர்களும் சிவபெருமான்களும் ஹெலனுக்குக் காட்சி கொடுத்தார்கள்.
பிரமிடு பிரதேசத்தின் கெய்ரோ நகரை வடிவமைத்திருந்தனர். மசூதிகள், ஒட்டக அணிவகுப்புகள் என அசல் கெய்ரோவைக் காட்சிக்கு வைத்தனர். சிறிது இடைவெளியில் வெனீஸின் ஆழமில்லாத ஏரிகளை அமைத்திருந்தனர். தினமும் மாலை நேரத்தில் வெனீஸின் ஏரிகளில் படகில் பயணம் செய்தனர்.
படகுத் துறைக்கு அருகில் கப்பல் மாதிரியை வைத்திருந்தனர். ஒளி வெளிச்சத்தில் அதில் ஏறி கப்பலைத் தொட்டு உணர்ந்தார். அதற்கு முன்பான பாஸ்டனின் போர் கப்பல் அனுபவம் ஹெலனுக்குக் கிடைத்திருக்கிறது. அக்கப்பலின் மாலுமியே கப்பலின் எல்லா வேலைகளையும் செய்தார். அதை அருகில் இருந்து பார்த்திருக்கிறார். புயல் காலத்திலும் அமைதியான காலத்தைப்போல் நெஞ்சுறுதியோடு கப்பலைச் செலுத்தினார். விபத்து நிகழ்ந்தால் உயிருக்குப் போராடும் அத்தனை பேரையும் காப்பாற்றினார். அதற்கு மூளைபலம் உடல் பலம் இரண்டையும் சேர்த்துவைத்துப் போராடினார். தன்னை நம்பி வந்தவர்களை மீட்பதே மாலுமிகளின் சாதனை. இயந்திரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு விதிவழி விபத்தாக அந்த மாலுமி நினைக்கவில்லை. போர்வீரர்களைவிடப் பெரிய வீரர்கள் மாலுமிகள் என நினைத்தார் ஹெலன்.
அந்த நினைவுகளிலிருந்து மீண்டவர் இந்தக் கப்பலுக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் இன்னொரு கப்பலின் மாதிரியைக் கண்டார். அதையும் உள்ளே சென்று ஆராய்ந்துப் பார்த்தார். அதற்குள் கொலம்பஸ் பயன்படுத்திய கேபினும் டெஸ்க்கும் இருந்தன. அவற்றை அதன் மாலுமி ஹெலனுக்குக் காட்டி விளக்கினார். அதன் மீது ஒரு மணல் கடிகாரம் இருந்தது. அது ஹெலனை மிகவும் ஈர்த்தது. அதிலிருந்து ஒவ்வொரு துகளாக மணல் விழுந்துகொண்டிருப்பதைத் தொட்டுப் பார்த்தார். நீண்ட நேரம் ஹெலன் அவ்விடத்தைவிட்டு அகலவில்லை. மாலுமி களைத்துப்போனார். ஆனாலும் ஹெலன் ரசித்து முடிக்காமல் அன்றைய கண்காட்சியை நிறைவுசெய்யவில்லை.
அங்கிருந்த பொருள்களில் ஹெலனை அதிகம் கொள்ளைக் கொண்டது ஃபிரெஞ்சு வெண்கலச் சிலைகள். ஒவ்வொன்றாகத் தொட்டுப்பார்த்தார். உயிருள்ள உருவம்போல் உணர்ந்தார். அதன் தத்ரூபத்தைக் கண்டு அதிசயித்தார். தேவதையின் உருவத்தைச் சிற்பிகள் பூமிக்குச் செதுக்கிக் கொடுத்துவிட்டதாக நினைத்தார்.
நன்னம்பிக்கை முனையின் மாதிரி வடிவத்தைத் தொட்டுப்பார்த்தார். கூடவே படித்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.
வைரங்களைத் தோண்டி எடுப்பதில் உள்ள பல அடுக்கு வேலைகளைத் தெரிந்துகொண்டார். வைரங்கள் எந்த அளவில் துண்டு போடப்படுகிறது? எப்படி மெருகூட்டப்படுகின்றன? எப்படி எடை போடப்படுகின்றன? போன்றவற்றைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துகொண்டார். இயங்கிக்கொண்டிருக்கும்போதே இயந்திரங்களைத் தொட்டு அதன் இயங்கும் முறையைத் தெரிந்துகொண்டார். அமெரிக்காவில் கிடைப்பவை அனைத்தும் உண்மையான வைரக்கற்கள் என்று பலரும் ஹெலனுக்குச் சொன்னார்கள். கழுவி சுத்தம் செய்யும் இடத்திலிருந்து கண்காட்சியின் நினைவாக ஒரு வைரக்கல்லை எடுத்துக்கொண்டார்.
அத்தனை இடங்களுக்கும் அத்தனை நாளும் கிரகாம்பெல்லும் உடன் சென்றார். அவருக்கே உரிய பாச மொழியில் சுவாரஸ்யத் தகவல்களை எல்லாம் ஹெலனுக்கு விளக்கினார். ஒவ்வொரு பொருள் பற்றியும் எடுத்துச் சொன்னார். மின்னியல் துறைக்கென ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் தொலைபேசிகள், ஆட்டோஃபோன்கள், ஃபோனோகிராஃப்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். தந்திக்கு வயர்கள் மூலம் எப்படித் தகவல் அனுப்ப முடியும் என்பதைப் புரியவைத்தார். காற்றை விஞ்சக்கூடிய தந்தியின் செயல்களைக் கண்டு வியந்தார் ஹெலன்.
மனிதஇயல் துறைக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். மெக்சிகோவின் நினைவுச் சின்னங்கள் அவரைக் கவர்ந்தன. கரடுமுரடான கற்கருவிகளையும் ஆயுதங்களையும் தொட்டுப்பார்த்தார். வரலாற்றுத் தடயங்கள் காலப்போக்கில் மறைந்துபோகும். அதைப் பாதுகாத்து வைத்திருந்தது தான் தொட்டுப்பார்க்கத்தான் என்பதாக நினைத்தார் அவ்விடத்தைவிட்டு அகலும்வரை.
மன்னர்கள் முனிவர்களின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் அழிந்துபோயிருந்தன. அவை எகிப்திய மம்மிகளின் புதைக் குழிக்குள் புதைந்திருந்தன. ஹெலனுக்கு அந்த மம்மிகளைத் தொட்டுப்பார்க்கத் துணிவில்லை. நீட்டிய கரங்களை உள்ளே இழுத்துக்கொண்டார்.
மனித இனத்தின் வளர்ச்சிபற்றி அதுவரை வாசித்ததைவிட நினைவுச்சின்னங்கள் மூலம் கற்றுக்கொண்டது அதிகம். இந்த அனுபவங்கள் ஹெலனின் வார்த்தை வளத்தை மேம்படுத்தின. பல புதிய சொற்கள் கிடைத்தன.
மூன்று வாரங்கள் உலகக் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்தார். குறுகிய காலத்தில் செய்த நீண்ட தூரப் பாய்ச்சல் அது. ஒரே தாவலில் அதிக தூரத்தைக் கடந்ததாக உணர்ந்தார். பொம்மைகளின் மீதும், தேவதைக் கதைகள் மீதும் ஆர்வம் கொண்ட குழந்தை ஹெலன் மெல்ல மாறிவிட்டார். எதையும் கற்பனை செய்தே பழகியவர். நிஜ உலகின் மாயங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டார்.
(தொடரும்)