குறைபாடுள்ள ஒரு பெண் கல்லூரியில் சேர்ந்ததும், அவர் எல்லோரும் படிக்கும் பாடங்களைப் படிப்பதும் வெளி உலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் ஹெலனுக்கு நண்பரானார். 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்கள் என்று இருவரைத் தேர்வு செய்தால் ஒன்று நெப்போலியன் மற்றொன்று ஹெலன் என்றார் ட்வைன். நெப்போலியனுக்கு நிகராக ஹெலனை மதித்தார். அந்த அளவிற்கு ஹெலன் திறமைசாலி.
மார்க் ட்வைனின் எழுத்துகளுக்குத் தீவிர வாசகர்கள் இருந்தார்கள். உலக அளவில் அவருடைய படைப்புகள் பேசப்பட்டதால் அங்கெல்லாம் வாசகர்கள், நண்பர்கள் முளைத்தார்கள். அதில் தொழிலதிபர்களும் இருந்தனர். அதில் ஒருவரிடம் ஹெலனின் கல்லூரிச் செலவுகளை ஏற்க வைத்தார் ட்வைன்.
தன்னுடன் படிக்கும் சக மாணவிகள் தன் மீது இரக்கப்படுவதை ஹெலன் ஒருபோதும் விரும்பவில்லை. தனக்கென எந்தவிதத் தனிச்சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. கால அவகாச நீட்டிப்பும் கோரவில்லை. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் கல்லூரிப் படிப்பை முடித்தார். சராசரி மாணவர்களைவிட சிறப்பாகத் தேர்வெழுதி வெற்றிபெற்றார்.
1904ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். மாற்றுத் திறனாளிகளில் உலகின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார். காதுகேளாத, பார்வையற்ற ஒருவர் பட்டம் பெற்றது உலகளவில் பிரபலமானது. அந்த இருண்ட உலகில் வாழும் பலருக்கும் ஹெலனின் முயற்சி புது நம்பிக்கையைக் கொடுத்தது.
உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்த்தன. தங்கள் நாடுகளிலும் மாற்றுத்திறனாளிக் கல்வியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றனர். ஆனால் உடனே மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடவில்லை. ஐம்பது ஆண்டுகள் கழித்துத்தான் இரண்டாவது பார்வையற்ற பெண் பட்டதாரியாக ராபர்ட் ஸ்மித்தாஸ் உருவானார். அவரும் பெர்கின்ஸ் பள்ளியில்தான் படித்தார். ஹெலனைப் போலவே எந்தப் புலனும் வேலை செய்யாது. ராட்கிளிஃப் கல்லூரியின் இரண்டாவது பட்டதாரி ஆனார். அதன் பிறகுதான் உலக நாடுகளில் பார்வையற்றவர் பட்டப்படிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
எந்தக் கனவு உயிர் மூச்சாக இருந்ததோ அதை அடைந்த பிறகு அதன் மீதான கவர்ச்சி வடிய ஆரம்பித்தது. அறிவே உலகம், அறிவே மகிழ்ச்சி என்பதை ஸல்லிவன் ஓயாமல் ஓதிக்கொண்டிருப்பார் ஹெலனிடம். பட்டப்படிப்பு முடித்ததும் அறிவைத் தேடும் விஷயங்களில் ஈடுபடலானார்.
ஹெலன் எங்கெல்லாம் வெளியே சுற்றினார், எப்படி எல்லாம் அனுபவம் பெற்றார் என்பதைப் பார்த்திருக்கிறோம். அதற்கு நிகரான அனுபவத்தைப் புத்தகங்கள் மூலமும் திரட்டினார். கண்ணும் காதும் உள்ளவர்களுக்குப் புத்தகங்கள் எப்படி உதவுகின்றனவோ அப்படித்தான் ஹெலனுக்கும்.
ஹெலனுக்குப் புத்தகங்கள் செயல்படாத புலன்களாகவும் செயல்பட்டன. அது மாற்றுத்திறனாளி பெற்ற புதிய உறுப்பு என்பதால் கிடைக்காதது கிடைத்ததைப்போல் கொண்டாடினார். மற்றவர்களைவிட ஹெலனுக்குப் புத்தகங்கள் காட்டிய உலகம் அலாதியானது.
ஏழு வயதில் எழுத்துப் பசியுடன் விரல் தடவியபோது தனது முதல் கதையை வாசித்து முடித்தார். ஆரம்பக் காலத்தில் தடவிப்பார்த்துப் படிக்கக்கூடிய புத்தகங்கள் குறைவாகவே கிடைத்தன. அவற்றை விரல்களால் அழுத்தி அழுத்தி எழுத்துகள் தேயும் அளவிற்கு வாசித்தார்.
போஸ்டர் நகருக்குச் சென்றபோதுதான் அதிக அளவில் வாசிக்கத் தொடங்கினார். புரியாத வார்த்தைகளையும் வாசித்துவிடுவதில் பெருமிதம் அடைவார். வாசித்ததை எல்லாம் நினைவில் நிறுத்த நினைக்க மாட்டார். அர்த்தம் புரியாத பல வார்த்தைகளும் வாக்கியங்களும் மனதில் ஊறிக்கொண்டிருக்கும்.
பேசவும் எழுதவும் தொடங்கிய பிறகு உள்ளிருந்த வாக்கியங்கள் தானாகத் தேவைப்பட்ட இடத்தில் வந்து அமர்ந்துகொண்டன. அதைப்படிக்கும் நண்பர்கள் ஹெலனின் வார்த்தை வளத்தைக் கண்டு வியந்தார்கள். ஆரம்பக் காலத்தில் எல்லாப் புத்தகங்களையும் முழுவதுமாக வாசிக்கமாட்டார். நடுவில் ஆரம்பித்து நடுவில் விட்டுவிடுவார். புரியாமலே பல கவிதைகளைப் படித்து வைத்தார். அதன்பிறகுதான் புரிந்துகொண்டு படிக்கும் பழக்கம் வந்தது.
ஹெலனும் ஸல்லிவனும் அவசர அவசரமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஆர்வமாகப் படிக்க அமர்வார்கள். அதிக நேரம் படிக்க வேண்டும் என்பதற்காக. பைன் மரத்தடியில் அமர்வார்கள். ஊஞ்சலிலும் ஆடையிலும் அமர்ந்திருக்கும் வெட்டுக்கிளிகளை அகற்றிவிட்டுப் படிப்பார்கள். சூரிய ஒளியில் பட்டு பைன் மர வாசனை மூக்கைத் துளைக்கும். கடலின் மணத்தை நாசி நுகரும். ஸல்லிவன் கதையைப் படிக்கத் தொடங்கும் முன் பல்வேறு விஷயங்களை எடுத்துச் சொல்வார். புதிய வார்த்தைகள் சிக்கினால் ஸல்லிவன் கதையை விட்டுவிட்டு விளக்கப் பிரசங்கத்தைத் தொடங்கிவிடுவார். கதையின் வேகம் தடைப்படுவதால் ஹெலன் எரிச்சல் அடைவார்.
கதை விறுவிறுப்பாகச் செல்லும்போது ஸல்லிவன் மாற்றுப்பாதையில் சென்றால், தடைபடாமல் தானே படிக்கத் தனக்குக் கண் இல்லையே என்று வருந்துவார். ஹெலன் அனாக்னஸிடம் கேட்டுக்கொண்டதால் அக்கதையை மட்டும் பிரெய்லியில் வடிவமைத்துக் கொடுத்தார். அதன்பிறகு புத்தகத்தின் மீது ஏற்பட்ட உற்சாகம் அளவிட முடியாதது.
வாசிக்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் பல நூல்களை வாசித்து முடித்தார். கிரேக்க வீரர்கள், லா பாண்டேனின் கதைகள், ஹாதார்ணின் அதிசயக் கதைகள், பைபிள் கதைகள், லாம்பின் ஷேக்ஸ்பியர் கதைகள், டிக்கன்ஸின் இங்கிலாந்து தேச சரித்திரம், அரபிக் கதைகள், இராபின்ஸனின் ஸ்விஸ் குடும்பம், ரட்சண்ய யாத்திரிகம் போன்றவை. இதில் ரட்சண்ய யாத்திரிகம் அவ்வளவாக ஹெலன் மனதைக் கவரவில்லை.
விளையாடும் நேரம் பாடம் படிக்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் இந்த மாதிரியான புத்தகங்களை எடுத்து வைத்துக்கொள்வார். வாசிக்க வாசிக்க ஹெலனின் அக மகிழ்ச்சி அதிகரித்தது. அவை எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றி ஹெலனுக்குத் தெரியாது. கதை சுவாரஸ்யத்தை மட்டுமே அனுபவித்துப் படித்தார்.
The Jungle Book, Wild Animals I have known போன்ற புத்தகங்கள் பிடித்திருந்தன. ஏனெனில் நிஜ விலங்குகளோடு ஒன்றி வாழ்ந்தவர். அதில் மனிதனின் கைவண்ணம்படும்போது கேலிச் சித்திரங்களாகி அழகு கூடின. நீதியை எடுத்துச் சொல்வதும் பிடித்திருந்தது.
கல்லூரிக்குப் பிறகு தொன்மை கலந்த கிரேக்கக் கதைகள் அவரை இனம் புரியாத பரவசத்தில் ஆழ்த்திவிடும். மனிதர்களுக்கும் கடவுளுக்கும் பிறந்ததாகக் கூறப்படும் பாதி மனித தெய்வங்கள், வன தேவதைகளை விரும்பிப் படித்தார். தவறு செய்யும்போது அனுமதித்துவிட்டு பிறகு தண்டிக்கும் தெய்வங்களைப் புதிராக நினைப்பார்.
இலியட்தான் கிரேக்கத்தைச் சொர்க்கமாக உணர வைத்தது. கிரேக்க இலக்கணம் கற்றதால் கிரேக்கப் பொக்கிஷங்களை எல்லாம் தன் காலடியில் கொண்டுவந்து கொட்ட அவர் அதிகம் சிரமப்படவில்லை. இலியட் ஆங்கிலத்தில் இருந்தாலும், கிரேக்கத்தில் இருந்தாலும் அதிலுள்ள சிறந்த கவிதைகளை ரசிக்கும் மன நிலை அவரிடம் இருந்தது. அதன் அடிப்படை அம்சங்களை, கட்டமைப்புகளை அக்குவேறு ஆணிவேறாக அலசிப்பார்க்கத் தெரிந்தவர். அதன் ஆழ அகலங்களால் இலியட்டின் வலிமை புரிந்தது. ஹெலனின் ஆன்ம ராகம் மீட்டப்பட்டது. தனது குறைபாடுகளை மறந்து இலியட்டின் வானத்தில் பறந்தார்.
கிரீக் ஹீரோஸ் புத்தகத்தில் ஆரம்பித்து இலியாட் வரை ஒருநாளில் செய்த பயணம் அல்ல. அதேபோல் ஒட்டுமொத்த பயணமும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்துவிடவில்லை. இலக்கணக் குழப்பம், அகராதி சிக்கல்களை எல்லாம் கடந்துதான் அறிவைத்தேடி அலைந்தார்.
கல்லூரியில் தேர்வுக்குழித் தோண்டி வைத்திருப்பதைப்போல் இப்படியான வாசிப்பிலும் பல படுகுழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் பைபிளின் அற்புதத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதை வாசிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டதால் அதன் கருத்துகளோடு மாறுபட்டிருந்தார்.
மகத்தான படைப்புகளைப் பலவீனமாக்கும் கருத்துகள் எந்தப் பழைய இலக்கியங்களில் இருந்தாலும் எல்லாவற்றிலிருந்தும் எடுக்க வேண்டும் என நினைத்தார். எஸ்தர், ரூத் போன்ற கதைகளோடு மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார்.
‘கண்ணில் காண்பவை தற்காலிகமானவை, காணாதது நிரந்தரமானது’ என்ற பைபிளின் வாசகம் ஹெலனுக்கு ஆறுதல் அளித்தது. ஏனெனில் அவர் எதையும் பார்க்கவில்லை. ஹெலனுக்கு எல்லாம் நிரந்தரமானது.
ஷேக்ஸ்பியரின் Tales from Shakespeare புத்தகத்தை மிகச்சிறிய வயதில் வாசித்தார். அவருடைய மேக்பத் நாடகம் ஹெலனை மிகவும் கவர்ந்தது. அதன் ஒவ்வொரு அசைவையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பார். கிங்லியர் வாசித்தார். அதில் க்ளோஸ்டரின் கண்களைத் தோண்டி எடுக்கும் காட்சி அவரைப் பலநாள் பீதியில் ஆழ்த்தியது. ஷைலக், சாத்தான் கதாபாத்திரங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று ஹெலன் விரும்பினார். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்கவில்லை என்று ஷேக்ஸ்பியர் மீது குறைபட்டுக்கொண்டார்.
கவிதைக்கு அடுத்தபடியாக அதிகம் நேசித்தது வரலாற்றைத்தான். இங்கிலாந்து மக்களின் வரலாறு முதல் ஐரோப்பிய வரலாறு வரை படித்து முடித்தார். மனித இனங்கள் ஒவ்வொரு பிரதேசமாகப் பரவிய விதம், பெருநகரை நிர்மாணித்தது, பலம் கொண்ட பேரரசுகள் எப்படித் தங்கள் காலனியின் கீழ் மற்ற நாடுகளைக் கொண்டுவந்தார்கள் இவற்றை எல்லாம் உலகச் சரித்திரப் புத்தகங்கள் மூலம் கண்டடைந்தார்.
கல்லூரி நாட்களின் வாசிப்பு அதன் பிறகும் தொடர்ந்ததால் ஜெர்மன் இலக்கியத்திலும் கரை கண்டார். ஃபிரஞ்சு எழுத்தாளர்களில் மோலியரும் ரேசினும் பிடிக்கும். விக்டர் ஹூக்கோவைப் படித்து வியப்பார். அவருடைய மேதைமையும், பரவசம் பீறிட வைக்கும் எழுத்தாற்றலையும் போற்றுவார்.
போலித் தன்மையை எள்ளி நகையாடும் குணத்திற்காக கார்லேவைப் பிடிக்கும். மனிதனையும் இயற்கையையும் போதித்த வோர்ஸ்வொர்த்தைப் பிடிக்கும். லில்லியையும் ரோஜாவையும் ஹெரிக் தனது வரிகளில் கொண்டுவந்தால் அவற்றைத் தொட்டுப்பார்க்கும் உணர்வைக் கொடுத்துவிடுவார்.
நெறி தவறாதிருக்கவும், ஆர்வம் குறையாமல் இருக்கவும் வழிகாட்டியவர் விட்டியர். அவர் நேரில் பார்த்த நண்பர் என்பதால் அதே இதமான நினைவுகளோடு அவருடைய கவிதைகளை வாசிப்பார். அப்போது இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்.
எல்லா எழுத்தாளர்களும் ஹெலனிடம் எதையும் மறைக்காமல் பேசுவார்கள். வாசகத்தின் ஊடாக அன்பையும் நம்பிக்கையையும் பொதித்துத் தந்தார்கள். உலகின் மாபெரும் எழுத்தாளுமைகள் எல்லாம் தங்கள் புத்தகங்கள் மூலம் ஹெலனின் நண்பர்களானார்கள். கோபம் கொப்பளிக்கும் மனநிலையில் உள்ளவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லெண்ணம் ஊட்டும் எழுத்தை யார் எழுதினாலும் அவர்களை ஹெலனுக்குப் பிடிக்கும். இலக்கியம் என்ற நிழல் உலகால்தான் ஹெலன் வளர்ந்தார், வாழ்ந்தார்.
(தொடரும்)