புத்தகங்கள் வாசிப்பது ஹெலனுக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் அது மட்டுமே அவர் பொழுதுபோக்கல்ல. தன்னைக் குதூகலமாக வைத்துக்கொள்ளப் பல்வேறு பிடித்த செயல்களில் ஈடுபடுவார். ஹெலனுக்குப் படகு ஓட்டத் தெரியும். நீந்தத் தெரியும். ஒரு விடுமுறை முழுவதும் படகில்தான் வாழ்ந்தார் எனலாம். அந்த அளவிற்குத் தீவிரமாகக் கற்றுக்கொண்டார். தன்னைப் பார்க்க வரும் நண்பர்களையும் படகிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். அவர்கள் தந்த உற்சாகத்தில் கற்றுக் கரைசேர்ந்தார்.
ஆரம்பத்தில் ஹெலன் துடுப்புப் போட்டால் பின்னாலிருந்து யாராவது சுக்கானை இயக்குவார்கள். போகப்போக சுக்கானை யாரும் இயக்காமல் அவராகத் துடுப்புபோட்டுச் சென்று வந்தார். துடுப்புகள் தோலாலான வளையங்களுக்குள் சொருகப்பட்டிருக்கும். அவை அப்படி இருக்கின்றனவா என்று உறுதிசெய்துகொண்டு படகை எடுப்பார். நீரோட்டத்திற்கு எதிராகப் படகு செலுத்துவதை ஹெலனால் உணர முடியும். துடுப்பசைப்பது சற்றுக் கடினமாகிவிடும். காற்றின் வேகம் கொண்ட ஹெலனுக்கு, காற்றோடும் அலையோடும் போட்டிப்போடுவது பிடித்திருந்தது.
நீர்ப்பரப்பில் படர்ந்திருக்கும் புற்கள், கரையில் வளர்ந்திருக்கும் புதர்களின் மணத்தை வைத்தே சரியாகப் படகைச் செலுத்திவிடுவார். அதன் மணத்தை அனுபவித்துக்கொண்டே துடுப்பசைப்பதை ஹெலன் ரசித்துச் செய்வார்.
ஒரு சிறிய படகு ஹெலனின் அத்தனை திறனையும் பலத்தையும் கொட்ட வைத்தது. பதிலுக்கு ஹெலனும் தண்ணீரின் அசையும் திறனையே தன் கட்டுக்குள் வைத்துக்கொள்வார்.
கெனாயிங் என்று ஒரு வகையான படகு இருந்தது. அது நீளமாகவும், பக்கவாட்டில் குறுகலாகவும் இருக்கும். அதில் பயணம் செய்வதுதான் ஹெலனுக்குப் பிடிக்கும். குறிப்பாகப் பௌர்ணமி நிலவொளியில் பளபளக்கும் தண்ணீரில் செல்வது பிடிக்கும். பைன் மரங்களுக்குப் பின்னாலிருந்து புறப்பட்டு துடுப்பசைத்துக்கொண்டே வானத்தில் ஏறவேண்டும். அப்பயணத்தின்போது குளிர்ச்சியான ஒளியூட்டும் நிலவைத் தன்னால் பார்க்க முடியாது என்பது மட்டுமே அவர் வருத்தம். ஆனால் அது எங்கு இருக்கிறது என்பதை அறிவார். எனவே படகில் தலையணைகளுக்கு இடையில் மல்லாந்து படுத்துக்கொள்வார். நிலவொளி ஆடையில் பட்டு வேறு நிறம் பூண்டு பளபளப்பதாகக் கற்பனை செய்வார். படகின் இருபுறமும் கைகளைத் தண்ணீரில் வைப்பார். ஹெலனைப் போலவே துணிச்சல் கொண்ட சிறிய மீன்கள் அவர் கைகளைச் சீண்டிப்பார்க்கும். நீரோ வெட்கம் கொண்ட பெண்ணைப்போல் பட்டும் படாமல் உரசிச் செல்லும்.
அதுவரைப் பாதுகாப்பாகக் குகைக்குள் பயணம் செய்தவர் திடீரென வெட்டவெளிக்கு வந்ததைப்போல் உணர்வார். ஏனெனில் சட்டெனக் குளிர் நீங்கி கதகதப்பு போர்த்தும். அவ்வெப்பம் நாள் முழுவதும் சூரிய ஒளியில் நின்று கிரகித்த மரங்களிலிருந்து வருகின்றனவா? அல்லது தண்ணீரே அதைத் தரமுடியுமா என்பதை ஹெலனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தண்ணீரை விட்டு நகரத்தில் இருக்கும்போது இப்படியான மாறுபட்ட பரவசத்தை அடைந்திருக்கிறார். குளிர்காலத்திலும், புயல் அடிக்கும் காலத்திலும் இரவில் அப்படித் தோன்றும். முகத்தில் கொடுக்கும் முத்தத்தின் பரவசம்போல் அதை உணர்வார். எல்லாத் திறனும் வாய்க்கப்பெற்ற சாதாரண மனிதர்கள் இந்த அளவிற்கு உணர்வார்களா என்பது சந்தேகமே.
ஆற்றைக் கடந்த அனுபவத்தில்தான் கடல்மீதும் கொள்ளை பிரியம் வைத்தார். நோவா ஸ்காட்டியாவில் கடலோடு நெருக்கமாக உறவாடினார். சொர்க்கபுரி, உல்லாசபுரி போன்ற தெரியாத வார்த்தைகளுக்கெல்லாம் அவ்விடம்தான் பொருள் என்ற அளவில் அடுத்த விடுமுறை கழிந்தது. ஒருநாள் அக்கடலில் படகுப்போட்டி நடந்தது. பல்வேறு போர்க்கப்பல்களிலிருந்த படகுகளும் கலந்துகொண்டன.
அந்தப் போட்டியைக் காண ஹெலனும் ஸல்லிவனும் ஒரு பாய்மரப் படகில் சென்றனர். அவர்கள் படகோடு பலநூறு பாய்மரப் படகுகளும் சென்றிருந்தன. படகுப்போட்டி முடியும் வரை அமைதியாகக் கண்டுகளித்தனர். போட்டி முடிந்து திரும்பும்போது வானத்தில் மேகங்கள் சூழ்ந்தன. காற்று தன் வேகத்தை அதிகரித்தது. தடுப்பு அரண்களை அலைகள் பசிகொண்டு சாப்பிட்டன. ஹெலன் சென்றதோ சிறிய படகு. பிறந்ததிலிருந்து காற்றை உணர்ந்தவர், அந்த நேரம் காற்றின் மீது அமர்ந்திருப்பதாக நினைத்தார். அடுத்த கணம் காற்று வேண்டுதல்போல் தன்னைத்தானே சுழற்றிக்கொண்டது. ராட்சச அலைகள் படகைச் சூழ்ந்தன. பாய்மரத்தின் திசையை மாற்றி படகைத் தூளியைப்போல் ஆட்டிவிட்டது. கோபம்கொண்ட காற்று திடீரெனத் தாக்கியதால் சமாளிக்க முடியாமல் திணறினர். இதயம் வேகமாகத் துடித்தது. பயத்தினால் அல்ல ஆபத்திலிருந்து தப்பித்த மகிழ்ச்சிக்காக.
மாலுமி பல புயல்களைச் சந்தித்தவர் என்பதால் சூழலை லாவகமாகக் கையாண்டார். இவர்களைப்போலவே பெரிய கப்பல், சிறிய போர்க்கப்பல்களும் ஆட்டம் கண்டன. மாலுமிகள் ஒருவருக்கொருவர் கைதட்டிப் பாராட்டிக்கொண்டனர். குளிரும் பசியும் சேர்ந்த சோர்வோடு படகுத்துறையை அடைந்தனர்.
சாம்பர்லி என்பவர் தன் குடும்பத்தோடு ரெட்ஃபார்ம் என்ற வீட்டில் வசித்தார். ஹெலனின் பல விடுமுறைகளுக்கு அதுதான் வீடானது. அவ்வீட்டில் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் ஹெலனிடம் அன்பு செலுத்தினர். எல்லோரோடும் சேர்ந்து காடுகளில் சுற்றித்திரிவார். அங்கும் தண்ணீரில் விளையாடுவார்கள். சிறு குழந்தைகள் பேசும் மழலைப் பேச்சுகளை ஸல்லிவன் ஹெலனின் கைகளில் எழுதிக்காட்டுவார். ஹெலன் அக்குழந்தைகளுக்குச் சித்திரக் குள்ளன், பூதக் கதைகள், தந்திர நரியின் கதைகள் போன்றவற்றைச் சொல்லுவார். கதை கேட்டு மகிழும் குழந்தைகளால் ஹெலனும் உற்சாகத்தில் துள்ளுவார்.
இன்னொருபுறம் சாம்பர்லின் சொல்லும் கதைகளை ஹெலன் கேட்டுக்கொண்டிருப்பார். மரம், செடி, கொடியுடன் மாயாஜாலப் புதிர்களுக்குள் ஹெலனை ஆழ்த்துவார். புதிருக்கு ஹெலனால் விடை சொல்ல முடியாமல் போகும்.
சராசரி குழந்தை அனுபவிக்கும் எல்லா உணர்வுகளையும் ஹெலனால் உள்வாங்க முடியும். பச்சை பூமி, சலசலக்கும் தண்ணீர் இதை எல்லாம் எந்தக் குழந்தைக்கும் யாரும் சொல்லித்தருவதில்லை. முற்பண்பிலிருந்து கடத்தப்படுகிறது. இப்பண்பெல்லாம் நாளுக்கு நாள் ஹெலனுக்குக் கூர்மையானது. அதைத்தான் தன் ஆறாவது பண்பென நம்பினார். ஏதேதோ பண்புகளை மாற்றியமைத்த இயற்கை, குறைகளைக் களையத் தன்னால் ஆன உணர்தலைக் கொடுத்துதவியது.
மனித நண்பர்களைப்போலவே ஹெலனுக்கு மர நண்பர்கள் இருந்தனர். மனம் முழுவதும் காதாக இருப்பதால் பைன் மரத்தின் உயிர்த்துடிப்பை உணர்வார். தன் நண்பர்களுக்குள் 800 வருட மூத்த ஓக்கிற்குத்தான் முதல்மரியாதை கொடுப்பார். பல நிஜ நண்பர்களை அழைத்துவந்து இந்த நிழல் நண்பரிடம் அறிமுகப்படுத்துவார். செவ்விந்தியர்களின் வீரத் தளபதி கிங் ஃபிலிப் மூத்தவன் மடியில்தான் மூச்சை விட்டதாக அம்மரத்திற்குப் பரம்பரை கதை சொல்லி பெருமை சேர்ப்பார்.
ஓக்கைப்போல் உயரமல்லாத இன்னொரு மர நண்பனும் இருந்தான். தினமும் அவனைப் பார்க்காமல் ரெட் ஃபார்மிற்குள் செல்ல முடியாது. வாசலில் இருப்பான். கட்டி அணைத்துவிட்டுத்தான் உள்ளே செல்லுவார். ஒருநாள் மதியம் புயல் காற்று வீசியது. பக்கச்சுவரைத் தொட்டுச் சுற்றிச் சுற்றி விளையாடினான். கடைசியில் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான். வெளியே வந்து பார்த்த பிறகுதான் அது விளையாட்டல்ல. புயலுக்கெதிராக அவன் செய்த போர். அதில் அவன் வீர மரணம் அடைந்துவிட்டான் என்று புரிந்தது. அந்த நண்பனின் மரணத்திற்காக ஹெலன் வருந்தினார்.
வேலை, படிப்பு பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பது விடுமுறை கொண்டாட்டத்தில் மட்டுமே. நகரத்தின் இரைச்சலை மறக்கடிக்கக் கிராமத்தின் அமைதியை நாடுவார்கள் ஹெலனும் ஸல்லிவனும். நாட்டில் நடக்கும் போர், கூட்டணி, மோதல்கள் என எந்தப் பிரச்னையின் எதிரொலியும் இன்றி வாழ்வார்கள். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தெரியாது. எதன் சுவடும் படாமல் உல்லாசத்தில் இருந்தவர்களுக்கு மர நண்பனின் மரணம் துயரானது. மகிழ்ச்சியோ துயரோ நிரந்தரமில்லை. அடுத்த நிமிடம் மாறுதலுக்குட்பட்டது எனத் தேறினார்.
நகர வாழ்வைக் கிராமத்தோடு ஒப்பிட்டார். நகரத்தில் பரபரப்பாக ஓடுவதைப்போல் கிராமத்தில் உள்ளவர்களின் மனம் ஓடுவதில்லை. நகரத்தில் அழகான வீடுகளில் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். காற்றும் சூரியனும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் குறுகலான சந்துகளில் அவற்றைக் காண முடியாது. காற்றும் அசுத்தமாகிவிடும். வீடுகளும் இருளாக இருக்கும்.
கிராமத்தில் அழுக்கடைந்த வீடுகளில் குறுகலான தெருக்களில் வசித்தாலும் நிறைவாக இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பிற்கும் கிடைக்கும் பலனிற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. உரிய வாய்ப்புகள் கிடைக்காததால் சரிசெய்ய முடியாத ஏற்றத்தாழ்வு நிலவுவதாக நினைத்தார்.
ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் பாடுபடுகிறார்கள். கிராம வாசிகளைப்போல் பரந்த மனம் படைத்தவர்கள் அல்ல நகர வாசிகள். சக மனிதர்களை முன்னேறவிடாமல் தடுக்கிறார்கள். தங்களிடம் உணவில்லாதபோது மட்டுமே பிறரைச் சிந்திக்கிறார்கள். நகரத்தை விட்டுவிட்டு மறுபடியும் காட்டிற்கோ வயலுக்கோ சென்று அவர்களால் வாழ முடியாது. அப்படிச் சென்றாலும் அவர்களுடைய பிள்ளைகள் ஓக்கைப்போல் கல்வியில் உயரமாக வளரமாட்டார்கள். பாதையோரப் பூக்களைப்போல் ஆங்காங்கே தென்படுவார்கள் என நினைத்தார். ஆக எங்கு எது சிறப்பு, எங்கு எப்படி வாழலாம் போன்ற ஆராய்ச்சி ஹெலனிடம் தெளிவாக இருந்தது.
கிராமங்களில் ஹெலனின் பாதங்களுக்கு அடியில் மென்மையான பூக்கள் இருக்கும். பட்டுபோன்ற உணர்வு அவரைப் பரவசப்படுத்தும். நீர்ப் பாதையில் புற்கள் முளைத்திருப்பதும், அதன் மீது நடப்பதும், தண்ணீரில் விரலை விட்டு முக்குவதும், சுற்றுச்சுவரில் ஏற முயற்சி செய்து வழுக்கி வழுக்கி விழுந்து கடைசியாக ஏறி வெற்றி பெறுவதும்தான் எவ்வளவு ஆனந்தம்.
அக்கிராம மக்கள் கண்களும் காதுகளும் இருந்தால் மட்டுமே இதை எல்லாம் உணர முடியும் என நினைத்தனர். ஆனால் ஹெலனுக்குச் சுற்றி இருக்கும் சூழலை முழு உடலும் விழிப்பாக இருந்து உணர்த்திவிடும் என்பது புதியவர்கள் அறியாத ஒன்று.
நகரத்தின் கூச்சல் ஹெலனின் முக நரம்புகளைத்தாக்கும். மக்கள் கூட்டத்தைக் காலடி ஓசையால் உணர்வார். கூச்சல், குழப்பம், சண்டைகள் எல்லாம் நேரடியாக ஹெலனின் மனதில் வந்து இறங்கிவிடும். நெருக்கடியான சாலையில் கவனத்தைச் சிதறவிட்டால் விபத்தாகும் என்று தெரியும். அவற்றை ஊன்றிக் கவனித்தால் நரம்புகளை உலுக்கி எரிச்சலூட்டும் ஹெலனுக்கு. இப்படியான தொல்லைகளின்றி இயற்கையோடு இயைந்து வாழத்தான் விடுமுறைக்குக் கிராமங்களில் ஒதுங்கிவிடுவார்.
(தொடரும்)