தமிழ்க் கடவுள் முருகனின் சிறப்புகள் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளன. கார்த்திகை மைந்தன், குறிஞ்சி நிலத் தலைவன், சிவ மைந்தன், சூரனை வென்றவன் எனப் பல்வேறு பெயர்களைக்கொண்டிருக்கும் முருகனின் பிறப்பு திட்டமிடப்பட்டு நிகழ்ந்த ஒன்றாகும்.
‘ஒரு பெண் வயிற்றில் பிறக்காத சிவ அம்சம் நிறைந்த குழந்தையால் மட்டுமே என்னுடைய அழிவு நிகழவேண்டும்’ என்கிற வரத்தைத் தவமிருந்து சூரபத்மன் பெற்றான். ஒரு பெண்ணின் வயிற்றில் அல்லாமல் வேறெங்கும் குழந்தை உருவாக முடியாது என்பதால், அப்படியொரு குழந்தை உருவாகச் சாத்தியமே இல்லை என்கிற மமதை சூரபத்மனுக்கு ஏற்பட்டது. இதனால் தேவர்கள் அனைவருக்கும் அவன் கடுந்தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினான்.
தேவர்கள் இன்னல்களுக்கு ஆளாகியிருந்த நேரத்தில் தேவாதி தேவரான சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். தங்களின் இன்னல்களைக் களைய சிவபெருமானால் மட்டுமே முடியும் என்கிற நம்பிக்கையைக்கொண்டிருந்த தேவர்கள், காமதேவன் மூலமாகச் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயன்றார்கள்.
காமன் விடுத்த கணையால் சிவபெருமானின் தியானம் கலைந்தது. இதனால் சினம்கொண்ட சிவபெருமான், தன் நெற்றிக் கண்ணைத் திறந்து காமதேவனை எரித்துச் சாம்பலாக்கினார். உலகிலுள்ள ஜீவராசிகளின் காதலுக்கும் உயிர் பெருக்கத்துக்கும் காரணமான காமதேவன் எரிந்து சாம்பலானதால், உயிர் பெருக்கமின்றி உலகம் நிலை குலைந்துபோனது.
கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனம் வெதும்பிய ரதி தேவி, ‘என் காதலன் இறந்து உன் காதலை வாழ வைக்கவேண்டுமா? உன்னால் என்றுமே ஒரு குழந்தையைச் சுமந்து பெற்றெடுக்க முடியாது. உன்னால் என்றும் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது’ எனக் கூறி பார்வதிக்கு சாபம் அளித்தாள்.
ரதி தேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். காமதேவன் இல்லாமல் உலகம் செழிப்புறாது என்கிற உண்மையை உணர்ந்திருந்தாலும், தன்னுடைய நெற்றிக்கண் நெருப்பினால் எரிந்து சாம்பலானதால் அவனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றார் சிவபெருமான். ஆனாலும், ‘உன்னுடைய கண்களுக்கு மட்டுமே காமதேவன் தெரிவான். உன்னால் மட்டுமே அவனது உருவத்தை உணரமுடியும்’ என்று கூறி ரதிதேவிக்கு அவர் வரமளித்தார். காமதேவன் அருவமாக நடமாடத் தொடங்கினான்.
காமதேவனை எரிக்க சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்தபோது அதிலிருந்து ஆறு தீப்பொறிகள் சிதறியிருந்தன. அவற்றின் வீரியத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அண்ட சராசரங்களும் நடுநடுங்கின. பயந்துபோன தேவர்கள் ஓடி ஒளிய முற்பட்டார்கள். பார்வதியும் அச்சமயம் எழுந்து ஓடினார். அவ்வாறு ஓடுகையில் அவரது பாத சலங்கையில் இருந்து சிந்திய ஒன்பது மணிகளில் இருந்து ஒன்பது பெண்கள் தோன்றினார்கள். நவசக்திகள் என்று அறியப்பட்ட அந்த ஒன்பது பெண்களும் சிவபெருமானை அன்புடன் நோக்கியதால் கருவுற்றார்கள்.
இதை அறிந்து கோபமுற்ற பார்வதி, ‘நீங்கள் நவமரும் பிரசவிக்காமல் நீண்டகாலம் இருப்பீராக…’ எனச் சாபமிட்டார். அச்சாபத்தைக் கேட்ட ஒன்பது பெண்களும் வியர்த்து நடுங்கினார்கள். அந்த வியர்வைத் துளிகளில் இருந்து லட்சக்கணக்கான வீரர்கள் தோன்றினார்கள். அதே சமயம் நந்திக் கூட்டத்தினர் (சிவ கணங்கள்) என்று அறியப்பட்டவர்கள் நவசக்திகளின் வயிற்றில் குழந்தைகளாக வளர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தன்னுடைய சாபத்தால் நவசக்திகள் பிரசவிக்க முடியாமல் தவிப்பதைத் தெரிந்துகொண்ட பார்வதி, கோபத்தை விடுத்துக் குழந்தைகள் பிறக்க அருள்பாலித்தார்.
இதன்படி ஒன்பது சக்திகளுள் மாணிக்கவல்லியிடம் வீரபாகுவும், மௌத்திகவல்லியிடம் வீரகேசரியும், புஷ்பராகவல்லியிடம் வீரமகேந்திரரும், கோமேதகவல்லியிடம் வீரமகேசுவரரும், வைடூரியவல்லியிடம் வீரபுரந்தரும், வைரவல்லியிடம் வீரராக்கதரும், மரகதவல்லியிடம் வீரமார்த்தாண்டரும், பவளமல்லியிடம் வீராந்தகரும், இந்திரநீலவல்லியிடம் வீரதீரரும் பிறந்தனர். இந்த நவ வீரர்களும் பின்னாளில் முருகனின் படைவீரர்களாகத் திகழ்ந்தனர்.
அதேநேரம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு சுடர்களாக மாறின. அவற்றை அக்னி தேவனும் வாயு தேவனும் சரவணப் பொய்கையில் உள்ள ஆறு தாமரை இலைகளில் சேர்க்கவே, அவை ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் கண்டெடுத்தனர். அக்குழந்தைகள் சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து உருவானவர்கள் என்பதை அறிந்த பார்வதி, தாய்மை உணர்வு பொங்க அவர்களை ஒன்றாகச் சேர்த்து அணைக்கவே, ஆறு குழந்தைகள் இணைந்து ஒரு குழந்தையானது.
பார்வதி தேவியால் ஒன்றிணைக்கப்பட்டதால் அந்தச் சிவ மைந்தனுக்கு ‘கந்தன்’ என்கிற பெயர் உருவானது. வடமொழியில் ‘ஸ்கந்த’ என்றால் ஒன்றாக இணைக்கப்பட்டது அல்லது குவிக்கப்பட்டது என்பது அர்த்தம். அந்த வகையில் ‘ஸ்கந்த’ என்னும் வார்த்தையில் இருந்து ‘கந்தன்’ என்கிற நாமம் தோன்றியது. முருகன், சுப்ரமணியன், கார்த்திகேயன், சண்முகன், குமரன் எனப் பின்னாளில் பல பெயர்களைப் பெற்றான் கந்தன். அவனுடைய குறும்புகளும் வீரதீர பராக்கிரமங்களும் அவன் வளர வளர அதிகரித்தன.
0
சிவபெருமானை மகிழ்விக்கவேண்டி ஒருமுறை நாரத முனிவர் வேள்வி ஒன்றை நடத்தினார். அங்கு ஏற்பட்ட சிறு பிழையால் வேள்வித்தீயிலிருந்து ஒரு பயங்கர உருவம்கொண்ட ஆட்டுக்கிடா வெளியே வந்தது. தேவர்களின் இருப்பிடங்களை அது நாசம் செய்யத் தொடங்கியது. வேள்வித்தீயில் இருந்து தோன்றிய அந்த ஆட்டுக்கிடாயை எதிர்க்க முடியாததால் பயந்துபோன தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்தார்கள். தேவர்களின் அபயக்குரலைக் கேட்ட முருகப்பெருமான், அந்த ஆட்டுக்கிடாயை அடக்கி அதைத் தனது வாகனமாக்கிக்கொண்டார். அன்று முதல் அந்த ஆட்டுக்கிடாய், அதாவது ஒரு மேஷம் முருகப்பெருமானின் வாகனமானது. அதனாலேயே அவருக்கு ‘மேஷவாகனார்’ என்கிற நாமம் உருவானது.
அடக்க முடியாத மனதை அடக்கி ஆள்பவராக முருகன் கருதப்படுகிறார். இந்த மேஷவாகனார் தோற்றம் மும்மலங்களான ஆணவம், கன்மம் (வினைப்பயன்), மாயை ஆகியவற்றை அவர் அடக்கி ஆள்வதைக் குறிக்கிறது. அச்சமின்மையையும் இது குறிக்கிறது. முருகன் என்றதுமே அவரது வாகனமாக மயில்தான் நம் மனதில் முதலில் தோன்றும். ஆனால் மயிலுக்கு முன்பாகவே அவரது வாகனமாக ‘ஆட்டுக்கிடா’ இருந்துள்ளது. இன்றளவும் திருவிழா காலங்களில் சில திருத்தலங்களில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகன் வீதி உலா வருகிறார்.
ஆட்டுக்கிடா வாகனமாகக் கிடைத்ததும் அதில் ஏறி தன்னுடைய நவ வீரர்கள் மற்றும் லட்சக்கணக்கான படைவீரர்களுடன் தேவர் உலகில் இருந்த அனைத்து இடங்களுக்கும் முருகப்பெருமான் சென்று வந்தார். அப்படி ஒருமுறை பிரம்மலோகம் வழியாக அவர் சென்றுகொண்டிருந்தபோது, சிறுவன்தானே என ஏளனமாக நினைத்து பிரம்மதேவர் அவரை வணங்கவில்லை. இதனால் பிரம்மதேவர் மூலமாக ஒரு திருவிளையாடலை நிகழ்த்த முருகப்பெருமான் திட்டமிட்டார்.
பிரம்மதேவரை அழைத்து, ‘நீவிர் என்ன தொழில் செய்கிறீர்?’ எனக் கடுமையான தொனியில் அவர் வினவினார்.
அவரது கேள்வியால் ஆடிப்போன பிரம்மதேவர், ‘மகாதேவரின் அருளால் உயிர்களைப் படைக்கும் தொழிலைச் செய்து வருகிறேன் ஐயனே’ என்றார்.
‘அவ்வாறெனில் வேதங்கள் தெரியுமா?’ என்று முருகப்பெருமான் கேட்டார்.
‘தெரியும்’ என்றார் பிரம்மதேவர்.
‘அப்படியெனில் ரிக் வேதத்தைக் கூறுங்கள்’ என்று முருகப்பெருமான் கேட்கவே, ‘ஓம்…’ என்று பிரம்மதேவர் அதைக் கூறத் தொடங்கினார்.
உடனே அவரைத் தடுத்து நிறுத்திய முருகப்பெருமான், ‘ஓம் என்றால் என்ன? அதன் அர்த்தத்தைக் கூறிவிட்டு அதன்பிறகு வேதத்தைக் கூறுங்கள்’ என்றார்.
‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறாமல் பிரம்மதேவர் சற்று தயங்கி நின்றார். அதைப் பார்த்த முருகப்பெருமான், ‘உமக்குப் பிரணவத்துக்கே பொருள் தெரியவில்லை. நீர் எப்படி படைப்புத் தொழிலைச் செய்ய முடியும்?’ எனக் கூறிவிட்டு, பிரம்மதேவரை சிறை வைத்தார். அதன்பிறகு படைப்புத் தொழிலில் அவரே ஈடுபடத் தொடங்கினார். இதை அறிந்ததும், முருகப்பெருமானைத் தேடி சிவபெருமான் பிரம்மலோகம் வந்தார்.
தன்னுடைய மைந்தன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்த சிவபெருமான், ‘பிரம்மதேவர் எங்கே? நீ ஏன் படைப்புத் தொழிலைச் செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று அவரிடம் கேட்டார்.
‘பிரம்மதேவருக்கு ஒன்றுமே தெரியவில்லை தந்தையே. ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்குக்கூட அவருக்குப் பொருள் தெரியவில்லை. இது தெரியாமல் அவர் எப்படி படைப்புத் தொழிலைச் செய்ய முடியும்? அதனால் அவரைச் சிறை வைத்துவிட்டு நானே படைப்புத் தொழிலை மேற்கொண்டேன் தந்தையே’ என்று பதிலளித்தார் முருகப்பெருமான்.
‘நான்முகன் அறியாத பிரணவ மந்திரத்துக்கு உனக்குப் பொருள் தெரியுமா? அவ்வாறு தெரியுமெனில் எனக்கு விளக்கிக் கூறு’ என்றார் சிவபெருமான்.
‘கூறுகிறேன் தந்தையே’ என்ற முருகப்பெருமான், சிவபெருமானை சுற்றி அவருடைய கணங்கள் இருப்பதைப் பார்த்தார். உடனே, ‘முழு முதற் கடவுளான நீங்கள், முன்பு ஒருமுறை என் தாய் பார்வதிக்கு உபதேசித்த பிரணவ மந்திரத்தின் பொருளை நான் பலரும் அறியும்படியாக உரக்கக் கூறுவது தகாது’ என்றார்.
‘அப்படியெனில் அதை எனக்கு ரகசியமாகவே கூறு…’ என்றபடி குனிந்த சிவபெருமான், தனது செவியை முருகப்பெருமானின் முகத்துக்கு அருகே கொண்டு சென்றார். தன் தந்தைக்குப் பிரணவ மந்திரத்தின் பொருளை முருகப்பெருமான் உபதேசித்து அருளினார்.
உபதேசம் முடிந்ததும் முருகப்பெருமானைப் பார்த்துப் புன்னகைத்த சிவபெருமான், ‘மகனே… பிரணவப் பொருளை மற்றவர் கேட்க உரக்கக் கூறுவது தகாது என்றாயல்லவா? உன்னைச் சுற்றி லட்சக்கணக்கான வீரர்கள் இருக்கும்போது அதைக் கூறவேண்டாம் எனக் கருதி, நான்முகன் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறாமல் இருந்திருக்கலாம் அல்லவா?’ என்றார்.
அதைக் கேட்டதும் உண்மையை உணர்ந்துகொண்ட முருகப்பெருமான், பிரம்மதேவரை விடுவித்தார். படைக்கும் தொழிலைச் செய்வதால் தானே சிறந்தவன் என்று எண்ணியிருந்த பிரம்மதேவரின் ஆணவத்தை அழிப்பதற்காகவே முருகப்பெருமான் இத்திருவிளையாடலை நடத்தினார். ஒரு சிறுவனான தன்னாலும் படைப்புத் தொழிலைத் திறம்படச் செய்ய முடியும் என்பதை இதன் மூலம் பிரம்மதேவருக்கு அவர் உணர்த்தினார். நம் மனதில் உள்ள ஆணவத்தையும் பயத்தையும் அழித்து மேஷவாகனார் முருகப்பெருமான் நம்மை நல்வழிப்படுத்துவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது.
நமக்குள் இருக்கும் ஆணவம், தீவினை, பேராசை, பயம் போன்றவற்றை விடுத்து தூய மனதுடன் வாழ்ந்தால், தேவாதி தேவரான தந்தைக்கே உபதேசம் வழங்கிய சிறுவன் முருகனைப்போன்று தெளிவான உயர்ந்த ஞானத்தை அடையலாம் என்பதை இப்புராணக்கதை வழியாக அறியலாம். எண்ணத்தில் உண்மையும் தூய்மையும் தெளிவும் இருந்தால் எண்ணிய வாழ்வை நாம் எளிதாக எட்டிப்பிடிக்கலாம்.
0
Image Credit: https://www.youtube.com/@bhakthimaiyamoff

