Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

ஒவ்வொரு ஆன்மாவும் தவத்தின் மூலமாகக் கடவுள் நிலையை அடைய முடியும் எனச் சமண மதம் நம்புகிறது. மேலும், தவம் மற்றும் அகிம்சை மூலமாகக் கர்ம வினைகளை அழித்து, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, வீடுபேறு (நிர்வாணம்) அடைவதே மனித வாழ்வின் இறுதி இலக்கென சமணத்தில் கருதப்படுகிறது.

தியானம் மற்றும் துறவறம் வழியாகப் பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலைபெற்று கடவுள் நிலையை அடைந்த நபர்களைச் சமணத்தில் ‘தீர்த்தங்கரர்கள்’ என்கின்றனர். ரிஷபநாதர் (ஆதிநாதர்), அஜிதநாதர், சம்பவநாதர், அபிநந்தனநாதர், சுமதிநாதர், பத்மபிரபர், சுபர்ஸ்வநாதர், சந்திரபிரபர், புஷ்பதந்தர் (சுவிதிநாதர்), சீதளநாதர், சிரேயாம்சநாதர், வாசுகிபூஜ்யர், விமலநாதர், அனந்தநாதர், தர்மநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனிசுவ்ரதர், நமிநாதர், நேமிநாதர், பார்ஸ்வநாதர் மற்றும் மகாவீரர் (வர்த்தமானர்) எனச் சமணத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர்.

இந்த 24 தீர்த்தங்கரர்களில் மல்லிநாதர் மட்டுமே பெண். சமண கோட்பாட்டின்படி பொதுவாக ஆண்கள் மட்டுமே தீர்த்தங்கரர்களாக முடியும் என்பதால் பெண்ணான இவர் ஆணாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய முந்தைய பிறவியில் மகாபலன் என்கிற மன்னராகப் பிறந்தார் மல்லிநாதர். பெயருக்கேற்றதுபோல் வலிமைமிக்க மன்னராகத் திகழ்ந்த மகாபலனுக்கு, சிறுவயதில் இருந்தே 6 நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். தங்களுக்கிடையே இருந்த ஆழமான பிணைப்பின் காரணமாக, எச்செயல் செய்தாலும் ஒன்றாகவே இணைந்து செயல்படுவோம் என அவர்கள் உறுதிபூண்டிருந்தனர்.

முடிசூட்டுவதற்கான வயது வந்ததும் மகாபலன் மன்னராகப் பதவியேற்றார். அதன்பிறகு அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் பிறந்தான். மகன் வளர்ந்து ஆளானதும் அவனுக்கு முடிசூட்டிய மகாபலன், தனது 6 நண்பர்களுடன் இணைந்து துறவறம் மேற்கொண்டு சமயப் பணிகளில் ஈடுபட தொடங்கினார். தியானம், ஆன்மிகப் பயிற்சி என எதுவாயினும் மகாபலன் உள்ளிட்ட அந்த 7 நண்பர்களும் சமமாகவே மேற்கொண்டார்கள். உதாரணமாக, ஒருவர் தியானத்தில் ஈடுபடும் பட்சத்தில் மற்றவர்களும் தியானத்தில் ஈடுபடுவார்கள். அதற்கான கால அளவும் சமமாகவே இருக்கும். யாரும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஈடுபடமாட்டார்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் தன் நண்பர்களை மகாபலன் ஏமாற்றத் தொடங்கினார். நண்பர்களுடன் இணைந்து தியானத்தில் ஈடுபட்டாலும், தியானம் முடிந்து அவர்கள் உணவு உண்ணச் சென்றதும், அவர்களுக்குத் தெரியாமல் மேலும் அதிக நேரம் தியானத்தில் ஈடுபட்டார். நண்பர்களை இவ்வாறு ஏமாற்றியதால், அடுத்த பிறவியில் பெண்ணாகப் பிறப்பதற்கான கர்ம வினைகள் மகாபலன் வசம் சேர்ந்தது. ஆனால், அவர் தூய மனதுடன் தியானத்தில் ஈடுபட்டதால் தீர்த்தங்கரர் ஆகுவதற்கான கர்ம வினையும் சேர்ந்தது.

மகாபலனின் ஆயுட்காலம் முடிந்ததும், மிதிலை மன்னர் கும்பனுக்கும் ராணி பிரபாவதிக்கும் மல்லி என்கிற மகளாக அவரது ஆன்மா மறு பிறப்பெடுத்தது. அதேநேரம் அவருடைய 6 நண்பர்களின் ஆன்மாக்கள், வெவ்வேறு நாட்டு மன்னர்களின் மகன்களாகப் பிறப்பெடுத்தன.

பெற்றோரால் மிகுந்த அன்பு செலுத்தப்பட்டு பல்வேறு வசதிகளுடன் மல்லி வளர்க்கப்பட்டாள். அறிவுக்கூர்மையுடனும் ஈடு இணையற்ற அழகுடனும் இருந்ததால், மல்லியைப் பார்த்த மாத்திரத்திலேயே அனைவரும் அவள் மீது காதல் மயக்கம் கொண்டார்கள். இதனால் மல்லியின் தந்தை கும்பன், அவளுக்குத் திருமணம் செய்துவைக்கச் சரியான மணமகனைத் தேடத் தொடங்கினார். இதற்கு நடுவே மல்லியின் முற்பிறவி நண்பர்கள் ஆறு பேரும் வளர்ந்து தத்தமது நாடுகளுக்கு மன்னர்களாகப் பொறுப்பேற்று, சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அந்த ஆறு மன்னர்களில், முதலாவது மன்னரின் மனைவி ஒரு நாள் கோவிலுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள். அச்சமயம் ‘என் மனைவியைவிட அழகான பெண் இவ்வுலகத்தில் இருக்க முடியுமா?’ எனப் பெருமை பொங்கத் தன்னுடைய அமைச்சரிடம் அந்த மன்னர் கேட்டார்.

அதற்கு ‘இல்லை அரசே… நம் ராணியைவிட அழகான பெண்ணொருத்தி இருக்கிறாள். அவள் மிதிலை மன்னர் கும்பனின் மகள் மல்லி. அவளது அழகை ஈடுசெய்ய இவ்வுலகில் உள்ள வேறு எந்தப் பெண்ணாலும் முடியாது’ என்றார் அமைச்சர். இதைக் கேட்டதும், மல்லியை மணமுடிக்கும் ஆசை அந்த மன்னருக்கு ஏற்பட்டது. உடனே தன்னுடைய ஆசையை ஓர் ஓலையில் எழுதி, அதை அவர் மிதிலைக்கு அனுப்பினார்.

இரண்டாவது மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்காக ஓர் அழகான குளியலறை கட்டப்பட்டது. அந்தக் குளியலறையைத் தன் அமைச்சரிடம் காண்பித்த மன்னர், ‘என் மகளின் குளியலறையைப்போல் அழகான ஒன்று எங்கும் காணப்படாது’ என்று பெருமையாகக் கூறினார். மன்னரின் கூற்றை உடனடியாக மறுத்த அமைச்சர், ‘இல்லை அரசே. கும்பனின் மகள் மல்லியின் குளியலறை இதைவிட நேர்த்தியாகவும் அழகுடனும் விசாலமானதாகவும் காணப்படும்’ என்றார். இதைக் கேட்ட அந்த மன்னர், கும்பனின் மகள் மல்லியைத் தான் மணமுடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டு மிதிலைக்கு தூதனுப்பினார்.

மூன்றாவது மன்னரின் நாட்டில் தேவர்கள் போற்றும் சிராவகர் (இல்லற வாழ்வில் இருந்தவாறு சமண நெறிகளைப் பின்பற்றுபவர்) ஒருவர் இருந்தார். அந்தச் சிராவகரின் பக்தியில் மகிழ்ந்த தேவர்கள் அவருக்கு ஒரு ஜோடி காதணிகளைப் பரிசாக அளித்தார்கள். அக்காதணிகளில் ஒன்றைக் கும்பனின் மகள் மல்லிக்கும் மற்றொன்றை இந்த மூன்றாம் மன்னரின் மகளுக்கும் அவர் வழங்கினார். மற்றொரு காதணி குறித்து மூன்றாம் மன்னர் விசாரித்தபோது, மிதிலை இளவரசி மல்லிக்கு அதை அளித்தாகக் கூறி அவளது அழகை வர்ணித்தார் சிராவகர். அதைக் கேட்டதும், மிதிலை இளவரசியைத் தனக்கு மணமுடிக்குமாறு குறிப்பிட்டு கும்பனுக்கு மடல் அனுப்பினார் மூன்றாம் மன்னர்.

நான்காவது மன்னரின் நாட்டில் ஓர் ஓவியர் இருந்தார். ஒரு பெண்ணின் உருவத்தை அப்படியே வரையும் திறமை அவருக்கு இருந்தது. ஒருமுறை அவர் மல்லியின் கால் விரல் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதை வைத்தே மல்லியின் அழகு உருவம் முழுவதையும் அவர் ஓவியமாகத் தீட்டினார். அந்த ஓவியத்தின் வழியே மல்லியின் அழகு குறித்து தெரிந்துகொண்ட நான்காவது மன்னர், அவளை மணம் முடிப்பது குறித்த தன் விருப்பத்தைத் தெரிவித்து மிதிலை மன்னன் கும்பனுக்கு ஓலை அனுப்பினார்.

ஒருமுறை மல்லியின் நாட்டுக்கு நன்கொடை பெறுவதற்காக தபஸ்வினி என்கிற பெண்ணொருத்தி வந்தாள். அந்தப் பணத்தை தபஸ்வினி தீய காரியத்துக்குப் பயன்படுத்த எண்ணியிருப்பதை அறிந்த மல்லி, அவளை அழைத்து அறிவுரை கூறினாள். ஆனால் தபஸ்வினிக்கோ மல்லி மீது கடுஞ்சினம் ஏற்பட்டது. இதனால் பல ராணிகளைக்கொண்ட ஒரு மன்னருக்கு மல்லியை மணமுடித்து வைக்க அவள் திட்டம் தீட்டினாள். இத்திட்டத்தைச் செயல்படுத்த தபஸ்வினி ஐந்தாவது மன்னரின் அரண்மனைக்குச் சென்றாள். தபஸ்வினி மூலமாக மல்லியின் அழகைப் பற்றி தெரிந்துகொண்ட ஐந்தாவது மன்னர், அவளை மணமுடிக்க ஆசைகொண்டார். தனது ஆசையை ஓர் ஓலை மூலமாக அவர் கும்பனுக்கு தெரியப்படுத்தினார்.

ஒருநாள் மல்லியின் காதணி உடைந்துவிட, அவள் அதைச் சரி செய்வதற்காகப் பொற்கொல்லனிடம் கொடுத்தாள். ஆனால் பொற்கொல்லனால் அதைச் சரி செய்ய முடியவில்லை என்பதால், அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினான் கும்பன். அந்தப் பொற்கொல்லன், ஆறாவது மன்னரிடம் தனது துயரக் கதையைக் கூறி முறையிட்டான். அவனது துயரக் கதை முழுவதையும் கேட்ட ஆறாவது மன்னரின் மனதில், மல்லியின் அழகு குறித்த வர்ணிப்பு மட்டுமே நிறைந்திருந்தது. இதனால் சற்றும் தாமதிக்காமல், மல்லியை மணமுடிக்கும் எண்ணத்தை மிதிலை மன்னர் கும்பனுக்கு ஓலை வழியாகத் தெரியப்படுத்தினார் ஆறாவது மன்னர்.

ஆறு மன்னர்களின் விருப்பத்தையும் தெரிந்துகொண்ட கும்பனை கவலை ஆட்கொண்டது. ஆறு மன்னர்களில் ஏதாவது ஒரு மன்னரின் விருப்பத்துக்கு இணங்கினால் மற்ற ஐந்து மன்னர்களின் பகையை எதிர்கொள்ள நேரிடும். அதற்காக ஆறு மன்னர்களையும் மகளுக்கு மணமுடித்து வைக்கவும் முடியாது. மன்னர்கள் அனைவரின் விருப்பத்தையும் நிராகரிக்கும் பட்சத்தில் அவர்களின் பகையை ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள நேரிடும். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கும்பன் சோகத்தில் ஆழ்ந்தார்.

தந்தையின் சோகமான மனநிலைக்கான காரணத்தை மல்லி விசாரித்துத் தெரிந்துகொண்டாள். தனது தந்தைக்கு ஆறுதல் கூறிய மல்லி, ஆறு மன்னர்களையும் தான் சந்திக்க விரும்புவதாகக் குறிப்பிட்டு, அவர்களுக்கு ஓலை அனுப்பச் சொன்னாள். கும்பனும் அவ்வாறே செய்தார். பதில் ஓலையைக் கண்டு மகிழ்ந்த ஆறு மன்னர்களும் மிதிலைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆறு வாயில்கள் உள்ள ஓர் அறைக்கு அந்த ஆறு மன்னர்களையும் வரச் செய்தாள் மல்லி. ஒவ்வொரு வாயில் வழியாக அந்த அறைக்குள் நுழைந்த ஆறு மன்னர்களும், அவ்வறைக்கு நடுவே மல்லி நின்றிருப்பதைக்கண்டு, அவளை ஆவலுடன் நெருங்கினார்கள். ஆனால் அருகில் சென்றதும் துர்நாற்றம் வீசியதால், முகத்தைச் சுழித்தவாறு அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியேறினார்கள். நடந்தவற்றை மறைந்திருந்து கண்ட மல்லி, மெதுவாக அவர்களை நோக்கிச் சென்றாள். அவர்கள் அனைவரும் முற்பிறவியில் தன்னுடைய பழைய நண்பர்கள் என்பதை அச்சமயம் அவள் அடையாளம் கண்டுணர்ந்தாள்.

இதனால் அகமகிழ்ந்த மல்லி, ‘சற்று முன்னர் அறையில் நீங்கள் கண்டது என்னைப்போன்ற ஒரு சிலை. அச்சிலை நான் உண்ட உணவுகளால் உருவானது. வெளிப் பார்வைக்கு அழகாகத் தெரிந்து அருகில் சென்றதும் துர்நாற்றம் வீசிய அச்சிலையைப் போன்றுதான் நம்முடைய உடலும். நாளை அழுகி துர்நாற்றம் வீசப்போகும் இந்த உடலின் மீதா தாங்கள் ஆசைப்படுகிறீர்கள்? முந்தைய பிறவியில் நீங்கள் என்னுடைய நண்பர்களாக இருந்ததை ஏன் மறந்துவிட்டீர்கள்? தயவுசெய்து அதை நினைவுபடுத்திப் பாருங்கள்’ என்று அவர்களுக்கு ஞானமூட்டும் வகையில் பேசினாள்.

மல்லியின் சக்திமிக்க வார்த்தைகளைக் கேட்ட ஆறு மன்னர்களும் ஜாதிஸ்மரண ஞானத்தை (முந்தைய பிறவிகளை நினைவுகொள்ள உதவும் ஞானம்) பெற்றார்கள். இதன் விளைவாக அவர்கள் அனைவரும் தங்களின் முற்பிறவியை நினைவுகூர்ந்தார்கள். இதைத் தொடர்ந்து அந்த ஆறு மன்னர்களும் உலகத்தின் மீதான பற்றுதலைக் கைவிட்டார்கள். தங்களது செயலுக்காக வருந்தி மல்லியிடம் மன்னிப்பு கோரினார்கள். அதன்பிறகு அவரவர் நாட்டுக்குத் திரும்பினார்கள். திருமணம் செய்துகொள்ளாமல் மல்லி பிரம்மச்சரிய வாழ்வை முன்னெடுத்தாள்.

பின்னர் ஒருநாள் துறவறம் பூண்ட மல்லி, கேவல் ஞானத்தை (முழுமையான அறிவு) அடைந்தார். அதன்பிறகு மிதிலையின் இளவரசி, மல்லிநாத பகவானாகப் போற்றப்பட்டார். மல்லிநாத பகவானைப் பின்பற்றி அந்த ஆறு மன்னர்களும் துறவறம் மேற்கொண்டு, அவரது முதன்மைச் சீடர்களாக மாறினார்கள்.

கேவல் ஞானம் பெற்று கடவுள் நிலையை அடைந்த மல்லிநாத பகவான், நீண்டகாலத்துக்குச் சமண கொள்கைகளை மக்களுக்குப் போதித்தார். பின்னர் சம்மேத் சிகரத்துக்குச் சென்று நிர்வாணம் அடைந்தார்.

சமணத்தின் ஒரே பெண் தீர்த்தங்கரராக மல்லிநாதர் திகழ்கிறார். ஆண்களால் மட்டுமே மோட்சமடைய முடியும், அனைத்துப் பற்றுகளில் இருந்தும் (மோகம்) விடுபட முடியும் என்கிற கூற்றைப் பொய்யாக்கி, ஒரு பெண்ணாலும் மோட்சத்தை அடைய முடியும் என்பதை மல்லிநாதர் நிரூபித்தார். மல்லிநாத பகவானின் இக்கதை மோகமும் ஈர்ப்பும் வெறும் மாயைகளே என்பதை நமக்கு உணர்த்துகிறது.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *