Skip to content
Home » இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலும் இறுதியிலும் அன்றைய தென்னிந்தியப் பகுதியும் தமிழகப் பகுதியும் மாபெரும் அரசியல் குழப்பங்களோடு இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி உறுதியாக இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்திருக்கவில்லை. ஆற்காடு நவாபின் ஆதிக்கம் பொதுவாகத் தென்னிந்தியப் பகுதியில் இருந்தாலும் பல சிற்றரசுகள் அந்தந்தப் பகுதியின் அரசர்கள், பாளையக்காரர்கள் வசம் இருந்தன. ஆங்கிலேயர்களும் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கும் வண்ணம் அரசியல் வாரிசுகள் இல்லாத இடங்களில் அரசுக்குப் பாதுகாப்பு தருவதன் மூலமும், படை உதவி உடன்பாடுகளின் மூலமும் அரசப் பகுதிகளைச் சிறிது சிறிதாக வளைக்கும் முயற்சிகளில் இருந்தனர்.

பின்னால் 1820களில் தொடங்கி வலுப்பெற்ற ஆங்கில ஆதிக்கம், 1857இல் ஆயுதப் புரட்சியின் தோல்விக்குப் பிறகு கிளைவ் மூலம் வங்காளத்தில் தொடங்கி மேலும் வலுவாக வேரூன்ற ஆரம்பித்தது. ஆனால் அதற்கெல்லாம் முன்னர் 1792இல் கிழக்கிந்தியக் கம்பெனி தென்னிந்தியப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஆற்காடு நவாபைத் தமது கைக்குள் கொண்டு வந்தது. கம்பெனியிடம் வாங்கிய கடன்களுக்காகத் தென்னிந்திய, தமிழக அரசுகளிடம் வரி வசூலித்துக் கொள்ளும் உரிமையை கம்பெனிக்கு வழங்கி விட்டார் நவாப். ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற பின்னர், குறுநில அரசுகளும் ஆற்காடு நவாபும் ஒருங்கே ஆங்கில அரசுக்கு அடிமைகளாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மருது சகோதரர்கள்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் 1770களில் மறவர் சீமை என்ற சிவகங்கைப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பாளையக்காரர்தான் முத்துவடுகநாதர் என்ற மறவர். அவரது வீரத்துணைவியாக இருந்தவரே வேலு நாச்சியார். அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த மருது சகோதரர்களான பெரிய மருதுவும், சின்ன மருதுவும் சிவகங்கைச் சீமையின் படைத் தளபதிகளாக விளங்கினார்கள். தொடக்கத்தில் சாதாரணப் படைவீரர்களாகவே படையில் சேர்ந்த மருது இரட்டையர், நாளடைவில் தங்களது குன்றா வீரம், தலைமைத்துவம், எதற்கும் அஞ்சாத போர்க்குணம் போன்ற சிறப்புகளால் படைத்தலைவர் பொறுப்புக்கு உயர்ந்தார்கள். இந்த நிலையில் நவாப் ஆங்கிலேயர்களின் துணை கொண்டு சிவகங்கைச் சீமை தங்களுக்குத் திறை செலுத்த வேண்டும் என்று தாக்கீது அனுப்ப, அதனை மறுத்து வெருட்டி அனுப்பி விட்டார் முத்து வடுகநாதர்.

அரசர் கொல்லப்படுவது

மறவர் சீமையின் அரச குலத்துக்கும் மக்களுக்கும் காளையார் கோயில் கோட்டையும், காளையார் கோயிலும் மிகப் புனிதமானவை. ஜூன் 25, 1772 அன்று அரசர் முத்துவடுகநாதர் தமது இரண்டாவது அரசி கௌரி நாச்சியாரோடும், படைத் தளபதிகளான சின்னமருது, பெரிய மருது சகோதரர்கள் கூடிய சிறு படையோடும் காளீசுவரன் கோவிலுக்கு இறையின் தரிசனத்துக்காக வந்தார். மறவர் சீமையின் போக்குவரத்துகளை ஒற்றர்கள் மூலம் கவனித்துக் கொண்டிருந்த நவாப் -கம்பெனி அரசின் கூட்டணி, இதுவே சரியான தருணம் என்று தாக்குதலுக்குத் தீர்மானித்தது.

காளையார் கோயிலி்ன் மக்களும், காளீசுவரன் கோயிலும் அரசர் வருகையை எதிர்பார்த்து விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசரையும் அரசியையும் தளபதிகளையும் ஆரவாரத்துடன் வரவேற்றது காளையார் கோயில். ஆங்கிலேயர்கள் பான்சோர் என்ற ஆங்கில அதிகாரியின் தலைமையில் ஒரு படையை அனுப்பி மறவர் சீமையின் அரசரையும் தளகர்த்தரைகளையும் காளையார் கோயிலில் வைத்துக் கொன்றுவிட முடிவு செய்து வந்தனர். அவர்களோடு புதுக்கோட்டை அரசனையும் பணத்தாசை காட்டித் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். பெரும் படைபலமும் ஆட்களையும் கொண்ட ஆங்கிலப் படையினர், காளையார் கோயில் கோட்டையைத் தாக்கிப் போரில் இறங்கினார்கள். விபரீதமாக ஏதோ நடப்பதைக் கண்ணுற்ற மன்னர் முத்துவடுகநாதரும், மருது இரட்டையரும் தமது படையுடன் பாய்ந்து கோட்டை வாசலுக்கு வந்தனர். கோட்டைக்குள் நுழைந்த ஆங்கிலப் படையினரை வீரத்துடன் வெகுண்டு நின்று எதிர்கொண்டார் மன்னர் முத்துவடுகநாதன்.

ஆனாலும் ஆங்கிலப் படைபலத்தைக் கண்ணுற்ற மருது இரட்டையர், அரசர் முத்துவடுகநாதரிடம் இப்போது தப்பிச் சென்று பின்பு தாக்குவோம் என்று கூறினர். இதை ஏற்காத அரசர், மருது இரட்டையர்களிடம் அரசியை அழைத்துச் சென்று பத்திரமாகக் காத்து வருமாறு பணித்து, அவர்களைத் தப்பிச் செல்லுமாறும், தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து நிர்மூலமாக்கவேன் அல்லது வீரமரணம் அடைவேன் என்று சூளுரைத்தார். மறவர் படை ஆங்கிலப் படையைச் சிதறடித்தது. தன்படை பலத்த சேதமுற்றுக் கொண்டிருந்த நிலையில், மரத்தின் மீது அமர்ந்து ஒளிந்திருந்த பான்சோர், துப்பாக்கியால் சுட்டு முத்துவடுகதாதரைக் கொன்றான். கூடவே அரசி கௌரி நாச்சியாரையும் சுட்டுக் கொன்றான். அரசரும் அரசியும் சரிந்து வீழ்ந்ததைக் கண்ட மறவர் படை வீரர்கள் பதைபதைத்துச் சிதற, பான்சோரின் படை மறவர் மன்னரைக் கொன்று விட்டதைக் கொண்டாடி மகிழ்ந்தது.

குத்தகைக்குப்போன மறவர் சீமை

மறவர் சீமை மன்னர் நயவஞ்சகமாக காளையார் கோயிலில் கொல்லப்பட்டபோது, வேலு நாச்சியார் கொல்லங்குடி என்ற ஊரின் அரண்மனையில் இருந்தார். ஒற்றர்கள் மூலம் நடந்த செய்தியைக் கேள்விப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயில் விரைந்தார். மன்னரின் ஈமச் சடங்குகள் காளையார் கோயில் அருகிலேயே விரைந்து நடத்தி முடிக்கப்பட்டன. மருது இரட்டையரையும், தம்மையும் கொன்றுவிட ஆங்கிலப் படை முயலும் என்று உணர்ந்த வேலு நாச்சியாரும் தீர ஆலோசித்தனர். மருது சகோதரர்கள் பிரான்மலைக் கோட்டையிலும், வேலு நாச்சியார் மதுரையை அடுத்த விருப்பாச்சிக் கோட்டையிலும் தற்காலிகமாக மறைந்து இருப்பது அவசியம் என்று முடிவு செய்யப்பட்டது. விருப்பாச்சிக் கோட்டையின் மன்னர் கோபால் நாயக்கர் ஆங்கிலேயருக்குத் திறை செலுத்த மறுத்த இன்னொரு மறவர். எனவே அவர் வேலு நாச்சியாரை விருப்பத்தோடு வரவேற்று விருப்பாச்சிக் கோட்டை அரண்மனையையில் தங்க வைத்தார்.

முத்துவடுகநாதரின் படுகொலைக்குப் பிறகு நவாப், சுமார் எட்டு ஆண்டுகள், 1780ஆம் ஆண்டு வரை சிவகங்கை, இராமநாதபுரப் பாளையப் பகுதியைக் குத்தகைக்கு விட்டு வரி வசூலிக்க முயற்சித்தான். ஆனால் பொதுமக்களோ, நாட்டை விட்டு நீங்கி திண்டுக்கல் விருப்பாச்சிப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த வேலு நாச்சியாருக்கும், மருது இரட்டையருக்குமே கடப்பாடு உடையவர்களாக இருந்தனர். மறைவாகத் திறையை வசூலித்து அதை வேலுநாச்சியாருக்கு அனுப்பி வைத்தனர். மருது இரட்டையரும் மறவர் சீமை மக்களை ஆரவாரமில்லாமல் சந்தித்து அவர்களை ஊக்கப் படுத்தி, தக்கத் தருணத்தில் மீண்டும் மறவர் சீமையை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கையை அளித்துக் கொண்டிருந்தார்கள். மறவர் சீமையின் மந்திரி பிரதானிகள், முக்கியத்தர்கள் அனைவரும் தலைமறைவாகச் சென்று தக்கச் சமயத்துக்காகக் காத்திருந்தார்கள்.

விருப்பாச்சிக் கோட்டையில் தங்கியிருந்தபடி சிவகங்கைச் சீமை முழுவதிலும் இருந்து போருக்காக ஆட்களைத் திரட்டும் முயற்சியை முன்னெடுத்தார் வேலு நாச்சியார். மருது இரட்டையர்கள் அவ்வப்போது மறவர் நாட்டில் ஊடறுத்துச் சென்று மக்களைச் சத்திந்தவண்ணம் இருந்தார்கள். இரவுகளில் மக்கள் கிளம்பி விருப்பாச்சிக்குப் போய்ச் சேர்ந்து அங்கு பயிற்சியில் ஈடுபடலானார்கள்.

உறுதிகொண்ட பெண்ணினாய்

விருப்பாச்சியில் தங்கிக்கொண்டு படைகளைத் திரட்டிப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த வேலு நாச்சியார், அக்காலத்தில்தான் தனது பின்னாள் முக்கியத் தளபதியான குயிலியைக் கண்டுபிடித்தார். பயிற்சிக்கு வந்த சாதாரண கடைநிலைசாதிப் பெண்ணான குயிலி, பயிற்சியில் பெரிதும் ஈடுபாடு காட்டி ஈடுபட்டாள். அப்போது வேலுநாச்சியாருடன் தங்கியிருந்த அவருடைய சிலம்ப வாத்தியாரை, ஆங்கிலப் படை பணத்தாசையால் வீழ்த்தியிருந்தது. அந்தச் சிலம்பு வாத்தியார் அவ்வப்போது வேலு நாச்சியாரின் நடவடிக்கைகளை ஆங்கில அரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அப்படி ஒரு முயற்சிக்காக குயிலியையே சிலம்ப வாத்தியார் ஈடுபடுத்தினார்.

கடைநிலைச் சாதிக்காரப் பெண்ணான குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று நினைத்த சிலம்பவாத்தியார், உளவுக் கடிதத்தை அவளிடம் கொடுத்து குறிப்பிட்ட ஒருவரிடம் சேர்க்கச் சொன்னார். அன்றிரவு தனிமையில் கடிதத்தைப் படித்துப் புரிந்து கொண்ட குயிலி, வேலு நாச்சியாரிடம் அதனை எடுத்துச் சொல்ல, சிலம்ப வாத்தியாருக்கு மரண தண்டனை விருப்பாச்சியிலேலே வேலு நாச்சியார் முன்னிலையில் குயிலியால் அளிக்கப் பட்டது. வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்கு உகந்த தளபதியாக மாறிய குயிலி அவருடனே தங்கினார்.

சிலம்ப வாத்தியாரின் இறப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய ஆங்கிலேயர், கடைநிலைச் சாதிக்காரியான குயிலி முன்னிலைச் சாதிக்காரரான சிலம்ப வாத்தியாரைக் கொன்றுவிட்டதாகச் செய்தி கிளப்பி, அதைச் சாதிக் கலவரமாக மாற்றினர். மக்களிடம் உண்மைநிலையை எடுத்துக்கூறி சதிகாரர்களுக்குச் சாதி முக்கியமில்லை, நன்னெறியில் நிற்கச் சாதி ஒரு தடையில்லை என்று விளக்கிக்கூறி மக்களின் மனத்தடையை உடைத்தார் வேலு நாச்சியார்.

விசுவரூப வேலு நாச்சியார்

ஒருபுறம் விருப்பாச்சியில் படைப் பயிற்சியும் படையணியும் அணியமாகிக் கொண்டிருக்க, மறுபுறம் மறவர் சீமையைப்போரிட்டு மீட்க, மைசூர் மன்னர் ஐதர் அலியிடம் படை உதவியைக் கேட்டுப்பெறத் தனது தளபதி தாண்டவராயரை கோபால் நாயக்கருடன் அனுப்பினார் வேலு நாச்சியார். அவருக்கும் முத்துவடுகநாதருக்கும் பிறந்த மறவர் சீமையின் ஒரே வாரிசான வெள்ளச்சி நாச்சியாருக்குப் பதின்மூன்று வயதான நிலையில், இளவரசியான அப்பெண்ணைப் போர்ப்பயிற்சி நடக்கும் இடத்தில் வைத்துப் பாதுகாப்பது சரியாக இருக்காது என்று எண்ணிய வேலு நாச்சியார், தனது மகளைப் பிரான்மலைக் கோட்டையில் தேவையான பாதுகாப்புடன் ஆரவாரமின்றித் தங்க வைத்தார்.

இந்த நிலையில் விருப்பாச்சியில் வேலு நாச்சியார் மீது மேலும் சில கொலை முயற்சிகள் நடந்தன. முத்துவடுகநாதரைச் சதிமூலம் கொன்றுவிட்டதுபோல, வேலுநாச்சியாரையும் கொன்று விட்டால் மறவர் சீமையைக் கைப்பற்றி விடலாம் என்று கணக்கிட்டார்கள் ஆங்கிலேயர்கள். ஆள்வைத்து வேலு நாச்சியாரின் பெண்ணான வெள்ளச்சி நாச்சியாரைக் கடத்திக் கொலை செய்ய முயன்றார்கள். குயிலி, மருது இரட்டையர் ஆகியோரின் உதவியோடு அக்கடத்தலை முறியடித்த வேலு நாச்சியார், தனது மகளையும் மீட்டுக்கொண்டார்.

ஐதர் அலியின் உதவிப்படை, திப்பு சுல்தானின் நவீன ஆயுதங்கள், மருது இரட்டையரின் வாட்திறம், வளரித் திறம், குயிலியின் எல்லையில்லாப் பெருவீரம் என அனைத்தும் நிரம்பிய படை ஒன்று வேலுநாச்சியாரின் தலைமையில் சிவகங்கையை மீட்கப் புறப்பட்டது.

படிக்கற்களான தடைக்கற்கள்

படையுடன் புறப்பட்ட வேலுநாச்சியாரை வழியிலேயே மடக்கிக் கொன்றுவிட ஆங்கிலேயர்கள் பல திட்டங்களைத் தீட்டினர். சிலம்புவாத்தியாரின் தரகராக இருந்த மல்லாரிராயன் என்ற தளபதியின் தலையையில் ஒரு படையை, வேலுநாச்சியாரை வழியிலேயே எதிர்த்துக் கொல்ல அனுப்பினார்கள். சின்னமருதுவின் வளரிப்படை மல்லாரிராயனை மதுரையை அடுத்த கோச்சடைக்கு அருகில் சிதைத்து அழித்தது. சின்னமருதுவின் கைவளரி மல்லாரிராயனிம் தலையைக் கொய்து திரும்பியது. வேலு நாச்சியாரின் படை மேலும் முன்னேறியது.

திருபுவனத்தை அடுத்த சிலைமான் என்ற இடத்தில் மல்லாரிராயனின் தம்பி அரங்கராயன் தலைமையில் இன்னொரு படையை ஆங்கிலேயர்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஒருவேளை மல்லாரிராயன் தோற்றால், அரங்கராயன் வேலுநாச்சியாரை எதிர்த்துக் கொன்றுவிட வேண்டும் என்பது ஏற்பாடு. அந்தப் படையையும் வேலு நாச்சியார் தலைமையில் அமைந்த சின்னமருதுவின் வளரிப்படை சிதறடித்தது. அரங்கராயனும் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து வைகைஆற்றின் மானமதுரை அருகில் இன்னொரு ஆங்கிலேயப் படை நவீன ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அரங்கராயனின் படையும் வீழ்ந்தால், மானாமதுரையோடு வேலுநாச்சியாரை அழித்துப்புதைத்துவிட வேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளை. அங்கிருந்த நாணற்புதர்களில் மறைந்து நின்று போரிட்டு இடர் கொடுத்தார்கள் ஆங்கிலேயர்கள். பீரங்கிகளும் துப்பாக்கிகளும் முழங்கின. போரின் சூழலை உணர்ந்த வேலு நாச்சியார் தமது கவண்கல் படையையும் விற்படையையும் தூரத்தில் நிறுத்தி ஆங்கிலப்படைகளை அழிக்க உத்தரவிட்டுவிட்டு, பெரிய மருதுவை இடதுபுறத்தில் இருந்தும் சின்ன மருதுவை வலது புறத்திலிருந்து தாக்க உத்தரவிட்டுவிட்டார். பின் தான் யானை மீது ஏறி குயிலியின் துணையோடு நேரிடி ஊடறுப்பாகப் போரை எதிர்கொண்டார். ஆங்கிலப் படை சிதறி ஓட, மானாமதுரைப் போரிலும் வெற்றி கொண்டு முன்னேறினார் வேலு நாச்சியார்.

அடுத்து காளையார் கோயிலில் பான்சோர் தலைமையில் இன்னொரு ஆங்கிலேயப் படை நின்றிருந்தது. அந்தப் படைக்கு முத்துவடுகநாதரை மரத்தின்மீதிருந்து சுட்டுக்கொன்ற பான்சோரும், யோசப் சுமித் என்ற இன்னொரு தளபதியும் தலைமை ஏற்றிருந்தார்கள். அவர்கள் முத்துவடுக நாதரை நயவஞ்சமாகக் கொன்றவர்கள் என்றறிந்த வேலுநாச்சியாரின் விடுதலைப் படை, உக்கிரம் பொங்கி தாக்குதல் நடத்த காளையார் கோயில் போரிலும் ஆங்கிலேயர் சிதறி ஓட வேண்டியதாயிற்று.

மீண்ட மறவர் பூமியும் ஆண்ட வேலு நாச்சியாரும்

இறுதிப் போரான சிவகங்கைக் கோட்டையைப் பிடிக்க ஆலோசனை செய்தபோது, மாறுவேடத்தில் கோட்டைக்குள் சென்று வந்த குயிலி, சிவகங்கை அரண்மனையினுள் இருந்த இராச இராசேசுவரி கோயில் விசயதசமி வழிபாட்டுக்காகப் பெண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் என்று ஆங்கிலேயர்கள் அறிவித்திருந்த பறைச் செய்தியைச் சொன்னாள்.

உடனேயே குயிலி, வேலு நாச்சியார், மறவர் படையின் பெண்கள் ஆகியோர் மாறுவேடத்தில் கோட்டைக்குள் நுழைந்து திடீர்த்தாக்குதல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதல் தொடங்கியவுடன் மருது இரட்டையர் கோட்டைக் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுழைவது என்றும் தாக்குதல் உத்தி தீர்மாணிக்கப்பட்டது. அவ்வாறே பெண்கள் படை இரகசியமாக உள்நுழைந்து அரண்மனையிலும் கோயில் வளாகங்களிலும் நிரம்பினார்கள். விசயதசமிக் கொண்டாட்டதிற்காகப் பெரிய வெண்கல அண்டாவில் விளக்கெண்ணெய் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. தக்கச் சமயத்தில் கோயில் மணியை ஒலிக்கச் செய்து யுத்தத் தொடக்கத்தை மாறுவேடத்தில் இருந்த ஒரு பெண் வீரர் அறிவித்தார். மாறு வேடத்தில் இருந்த பெண்கள் மறைத்து வைத்திருந்த வாட்களை எடுத்துக்கொண்டு ஆங்கிலேய வீரர்களை வெட்டி வீழ்த்தினர். விசயதசமிப் பண்டிகை நாளன்று போரைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்காத தளபதி பான்சோர் வெலவெலத்துப் போனான்.

ஆயுதக்கிடங்கில் இருந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்றவற்றை விரைவாகக் கொண்டு வந்து அனைவரையும் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான். ஆனால் குயிலி அண்டாவிலிருந்த விளக்கெண்ணணையைத் தன்மேல் ஊற்றிக் கொண்டு, மேன்மாட முற்றக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, ஆயுதக் கிடங்கிற்குள் தீப்பிழம்பாய்க் குதித்தாள். அதனால் ஆயுதக்கிடங்கு பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறியது. ஆங்கிலப் படையினருக்குப் போரிட ஆயுதங்கள் கிடைக்கவில்லை. உக்கிரத்துடன் பாய்ந்து போரிட்ட வேலு நாச்சியாரும், மருது இரட்டையரும் சிவகங்கைச் சீமையை மீட்டு வெற்றி கொண்டார்கள்.

வீரமங்கை வேலு நாச்சியார் சிவகங்கைச் சீமையின் அரசியாக 1780 வாக்கில் பதவியேற்றுக் கொண்டார். மருது இரட்டையர்கள் அவருக்குத் துணையான தளகர்த்தா்களானார்கள். சிவகங்கைச் சீமையின் முதல் பெண்ணரசியாக, விடுதலைப் போரின் முதல் வித்தாக, ஜான்சி இராணி இலக்குமிபாய் தோன்றுவதற்கு இருநூறாண்டுகள் முன்பாகவே தோன்றிவிட்ட போராளி வேலு நாச்சியார். தற்கால வரலாறு அறிந்த முதல் தற்கொலைப் போராளி குயிலி.

நிறைவுரை

வேலு நாச்சியார், நவாப்புடனும் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் ஒப்பந்தம் பெற்றுக் கொண்டு ஆட்சி புரிந்தார் என்ற வரலாறு பெரும்பாலாக இடம் பெறுகிறது. ஆனால் சஞ்சீவி எழுதிய மருதிருவர் என்ற வரலாற்று நூலும், ஆலம்பட்டு சோ.உலகநாதன் எழுதிய குயிலி என்ற நூலும், காளையார் கோயில் கல்வெட்டுகளும் மேற்கண்ட சம்பவங்களை உறுதி செய்கின்றன. அதோடு காளையார் கோயில் கல்வெட்டுகள் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட போரில் வேலு நாச்சியார் பங்கு பெறவில்லை என்று உறுதி செய்கின்றன.

கணவர் இல்லாத அரசியாக அரசாண்ட வேலுநாச்சியாரைப் பற்றிப் பல அவதூறுகள் எழுப்பி விடப்பட்டன. அந்த அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, மருது இரட்டையர்களிடம் அரசுப் பொறுப்பைக் கொடுத்து விட்டு, 1783இல் இராணியாகப் பதவி விலகினார் வேலு நாச்சியார். எனினும் பத்தாண்டுகள் அவரது இருப்பில் சிவகங்கைச் சீமை ஆளப்பட்டது. 1790இல் அவரது மகள் வழிப் பேத்தியின் இறப்பு அவரது உறுதியைக் குலைக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற மருது இரட்டையர்கள் சிற்சில அரசு விசயங்களில் வேலு நாச்சியாரின் ஆலோசனைகளுக்கு முரண்பாடாகச் செயலாற்றுகின்றனர். எனவே இம்முறை வேலுநாச்சியாரிடம் உடன்படிக்கை எடுத்துக் கொண்டு மருது இரட்டையர்களைத் தொலைத்துவிட ஆங்கிலேயர்கள் முயற்சிக்கிறார்கள். இந்தச் சூழலில் 1796இல் வேலு நாச்சியார் இயல்பான உடல், மனநலிவால் மரணமடைகிறார்.

பின்னர் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை எதிர்த்துத் தொடர்ந்து மருதிருவர் பொறுப்பில் சிவகங்கைச் சீமை விடுதலைப் போரைத் தொடர்ந்து நடத்திய வரலாறையும், இறுதியாகக் காளையார் கோவிலின் காளீசுவரத்தைப் பீரங்கி வைத்துத் தகர்ப்போம் என்ற அநீதிப் போரைத் தடுக்க மருதிருவர் சரண்டைவதும், அவர்கள் கொல்லப்படும் சூழ்ச்சிகளும் ஆங்கிலேயர்களால் அரங்கேறுவதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *