அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல நூற்றாண்டுகளாக, உலகின் பல பகுதிகளிலிருந்தும் தென்னிந்தியப் பகுதிக்கு வியாபாரிகள் வந்து அந்தந்தப் பகுதிகளின் அரசர்களுடன் வணிகம் செய்வது இயல்பாக இருந்தது. ஆனால் 1400களுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்கள் உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்யத் தொடங்கி பல நாடுகளைக் காலனி நாடுகளாகப் பிடிக்கத் தொடங்கினார்கள்.
இந்தியப் பகுதிகளைப் பொறுத்து இது 1500களின் மத்தியில் உச்சம் பெற்றது. 1500களின் மத்திக்குள் தென்னிந்தியப் பகுதிகளின் சமத்தான அரசுகள் இருந்த பல இடங்களில் போர்ச்சுகீசியர்கள் ஊடுருவி சென்னையின் மைலாப்பூர், பீஜப்பூர், பாம்பே முதலிய பகுதிகளைக் கைப்பற்றினார்கள். பின்னர் அவர்கள் கோவாவைத் தமது தலைமையிடமாகக் கொண்டு இயங்கத் தொடங்கியிருந்தனர். மயிலைக் கபாலீசுவரர் கோயிலை இடித்து விட்டு, ஒரு தேவாலயம் கட்டும் எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடும் அளவுக்குச் செல்வாக்கும் கொண்டிருந்தார்கள்.
அவர்களது கண்களை உறுத்தத் தொடங்கியிருந்தது மங்களூர் துறைமுகமும், அதனைச் சுற்றியிருந்த துளு நாடும், அதன் உள்ளால் கோட்டையும். அப்போது அங்கு ஆட்சியிலிருந்தது இராணி அபக்கா சௌதா தேவி என்ற அரசியின் தாய்வழிச் சமூக அரசு.
அபக்கா தேவியின் பின்னணியும் நாடும்
இன்றைய மங்களூருக்கு அருகில் உள்ளது உள்ளால் எனும் நகரம். அது இப்போதைய இந்திய வரைபடத்தில் மங்களூருக்குக் கீழ் உள்ள நகர். 1530இல் இருந்து 1600 வரையான இந்தப் பகுதியின் காலகட்டம் ஒரு வீரம் செறிந்த வரலாற்றை நமக்கு அளிக்கிறது. அப்போதைய துளு நாடான இப்பகுதியை ஆண்டு வந்தவர் அபக்கா தேவி . அப்போது அப்பகுதியின் அரசுரிமை ‘அலிய சந்தானா’ என்று அழைக்கப்பட்ட தாய்வழிச் சமூக அரசுரிமையாக இருந்தது.
அபக்கா தேவி அவரது மாமா திருமலைராயர் என்பவரால் அரசியாக முடிசூட்டப்பட்டவர். துளுநாடு கடற்கரையை ஓட்டிய நாடு. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே அரபிக் கடலின் கரையோர நாடுகள் முழுதிலும் போர்ச்சுகீசியர் வந்து இறங்கி ஆங்காங்கே அவர்களது ஆட்சியை நிறுவியிருந்தனர். அரபிக் கடலின் அப்பகுதிக் கரையோரம் பல நூற்றாண்டுகளாக வணிகத்திற்குப் பெயர் பெற்ற பகுதி. போர்ச்சுகீசியர்கள் முதலில் வந்ததும் வணிகத்துக்குக்காகத்தான். ஆனால் நவீன ஆயுதங்கள் தோன்றத் தொடங்கிய காலகட்டத்தில் அவர்கள் கொண்டிருந்த ஆயுத பலம், சிறிது சிறிதாக அரபிக் கடலின் கரையோர நகரங்களின் ஆட்சி விவகாரங்களுக்குள் நுழைந்து அப்பிரதேசங்களைக் கைப்பற்ற முயலுவதில் அவர்களை ஈடுபட வைத்து கோவாவைத் தலைமையிடமாக நிலைநிறுத்தி வெற்றி பெறுவதில் முடிந்திருந்தது.
திருமலைராயர் இராணி அபக்காவை, அண்டை ஆட்சிப் பகுதியான பங்கர் என்ற தேசத்தின் அரசரான இலக்சுமப்ப அரசா என்ற மன்னனுக்கு மணமுடித்தார். எனினும் அவர்களது மணவாழ்வு நீண்டநாள் நீடிக்காமல் பிரிவில் முடிந்தது. அபக்கா சௌதா, அரசா கொடுத்த நகைகளைத் திரும்பக் கொடுத்து, மணவாழ்வை முறித்துக் கொண்டார். பிரிவு கொண்டு வந்த மனக்கசப்பு அபக்கா தேவியின் முன்னாள் கணவரான அரசாவை போர்ச்சுகீசியருடன் இணைந்து கொள்ள வைத்து, அபக்காவை எதிர்க்கச் சொன்னது. இது போன்ற வாய்ப்புகளுக்கு போர்ச்சுகீசியர்களும் சரி, பின்னால் வந்த ஆங்கிலேயர்களும் சரி, வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தவர்கள். வட்டார முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைப் பகுதியான உள்ளால் கோட்டையைக் கைப்பற்ற அதுவே நல்ல வாய்ப்பு என்று கருதிய போர்ச்சுகீசியர்கள், அபக்காவின் முன்னாள் கணவருடன் இணைந்தனர். அப்போது அபக்கா தேவிக்கு வயது முப்பதுதான்.
துளுவில் தெறித்த வீரம்
1555ஆம் ஆண்டு மங்களூருக்குச் சில படகுகளில் சில வீரர்களை அனுப்பினர் போர்ச்சுகீசியர். துறைமுகத்தில் எதிர்ப்பவர் எவர் இருப்பார் என்று எண்ணினர் போர்ச்சுகீசியர். ஆனால் போன வீரர்கள் ஒருவரும் திரும்பி வரவில்லை. படகுகளும் என்னவாயின என்று தெரியவில்லை. போர்ச்சுகீசியர்களுக்கு என்ன நடந்தது என்றே விளங்கவில்லை.
சிறிது காலம் பொறுத்து 1558ஆம் ஆண்டு சில கப்பல்களில் சில நூறு வீரர்களையும், டாம் அல்வாரோ என்ற தளபதியின் தலைமையில் அனுப்பி வைத்தனர். ஆனால் அனைவரும் சிதைபட்டு, அடிபட்டு நொந்துபோக நேர்ந்தது. தளபதி அல்வாரோ கிழிந்த கந்தல் போன்ற நிலையில் உயிர்தப்பி ஓடிவந்தான்.
இம்முறை போர்ச்சுகீசியரின் சீற்றம் அதிகமானது. 1567ஆம் ஆண்டு ஒரு பெரிய கப்பற்கடையை அனுபவம் வாய்ந்த ஜெனரல் என்ற அளவில் தலைமைத்துவம் உள்ள பெய்க்சோதா என்ற படைத்தலைவரின் தலைமையில் அனுப்பினார்கள். மங்களூர் துறைமுகம் கைப்பற்றப்பட்டது. உள்ளால் நகர், கோட்டை அனைத்தையும் தகர்த்து, அபக்காவையும் பிடித்து வரும் படி உத்தரவுடன் அனுப்பப்பட்டான் அந்தப் படைத்தலைவன். மங்களூர் துறைமுகத்தைப் பாதுகாப்புடன் வீரர்கள் சிலரோடு மசுக்கரன்காசு என்ற படைத்தலைவரின் தலைமையில் கைப்பற்றி ஒப்படைத்த பின்னர், அபக்காவை முழுதாக ஒழித்து விடும் எண்ணத்துடன் உள்ளால் கோட்டையைத் தாக்கச் சென்றது போர்ச்சுகீசியப் படை.
ஆயிரக்கணக்காண வீரர்களுடன் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களோடு உள்ளாலுக்குச் சென்ற படை அதிர்ச்சிக்குள்ளானது. ஏனெனில் அங்கு எவருமே இல்லை. உள்ளால் வெறிச்சோடிக் கிடந்தது. உள்ளால் வீழ்ந்து விட்டது என்று எக்காளமிட்ட போர்ச்சுகீசியர்கள், உள்ளால் கோட்டையைச் சுற்றிவந்து எக்காளமிட்டுக் கொண்டிருந்தபோது, தேர்ந்தெடுத்த இருநூறே வீரர்களுடன் அவர்கள் மீது இடிபோல இறங்கினார் அபக்கா. நீண்ட பளபளக்கும் துளு வாட்களுடன் நுழைந்த அந்த வீரர்களின் கைகளில் போர்ச்சுகீசியப் படை சரசரவென்று வெட்டுண்டு மடிந்தது. அடித்த அடியின் வேகத்தில், போர்ச்சுகீசியப் படை சிதறியது. படைத்தலைவன் பெய்க்சோதா கொல்லப்பட்டான். சிதறி ஓடியவர்களைத் தவிர மீதமிருந்த போர்ச்சுகீசிய வீரர்கள் சுமார் 70 பேரை, அபக்கா சிறைபிடித்தார். அபக்கா அத்துடன் நிற்கவில்லை.
அன்றைய இரவே வெல்லப்பட்ட மங்களூர்
அன்றைய இரவுக்கிரவே மங்களூருக்குத் திரும்பிச் சென்றது அபக்காவின் படை. மங்களூர் கோட்டை முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்கதவுகள் இரவுக்கிரவே உடைக்கப்பட்டன. அங்கு பொறுப்பில் இருந்த படைத்தலைவன் மசுக்கரன்தாசு என்ற போர்ச்சுகீசியத் தளபதி. அவன் கொல்லப்பட்டான். மங்களூர், உள்ளால் பிரதேசங்கோடு நிற்காமல், துளுவில் சுற்றியிருந்த பகுதிகளிலும் குண்டப்பூர் கோட்டையையும் கைப்பற்றி, போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தை அடக்கி ஒடுக்க முனைந்தார் அபக்கா சௌதா. போர்ச்சுகீசியரை அடக்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்த அபக்கா தேவி, பீஜப்பூர் சுல்தானோடும் கோழிக்கோடு அரச குடும்பம் போன்றவர்களோடும் உடன்படிக்கைகள் செய்துகொண்டு, தனது படைபலத்தையும், துணைபலத்தையும் பெருக்கிக் கொண்டார். 1570 வரை இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.
மைசூரின் பின்னாளைய தலைவரான திப்பு சுல்தான்போல, தீச்சுடர் தெறிக்கும் வாணப் போன்ற ஆயுதங்களைக் கையாளும் திறன் பெற்றிருந்தார் அபக்கா தேவி. அந்த ஆயுதங்கள் போர்ச்சுகீசியப் படையைச் சிதறடித்தது. அபக்கா சௌதா தேவியை எவ்வாறு வெல்வது என்று சதித்திட்டம் தீட்டிய போர்ச்சுகீசியர், அபக்கா சௌதாவின் முன்னாள் கணவரான அரசாவுக்கு ஏராளமாகப் பணம் கொடுத்து அவரைத் தம்பக்கம் இழுத்தனர். அபக்கா சௌதா கையாளும் போர்த்தந்திரங்கள் பற்றித் தந்திரமாக அறிந்து வந்து சொல்லுமாறு அவரைப் பயன்படுத்தினர். அபக்கா தேவியின் நடவடிக்கைகளை ஒற்றறிந்து அரசா காட்டிக் கொடுத்ததால், அபக்கா தேவி சிறைப்பட நேர்ந்தது.
சிறைப்பட்ட அபக்கா சௌதா தேவி, சிறையிலிருந்து தப்பிக்க முயன்றார். அதிலும் கண்காணாது தப்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், சிறைக்குள்ளேயே போரிட்டு வெளிப்பட்ட முனைந்த அபக்கா தேவி, போர்ச்சுகீசியர்களால் கொல்லப்பட்டார்.
அபக்கா என்ற பெண்மணி யார்?
அபக்கா தேவி அவரது மாமா திருமலைராயர் என்பவரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர் என்ற செய்தி காணப்படுகிறது. சிறுவயதிலேயே பல்வேறு போர்க்கலைகளில் மிகுந்த திறமையும் பயிற்சியும் பெற்றவராக விளங்கியிருக்கிறார் அபக்கா சௌதா தேவி. பயம் என்பதே அறியாதவர் என்ற பொருள்படும் அபய இராணி என்றும் அவர் அழைக்கப்படுகிறார். அபக்கா சௌதா தேவிக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், அவர்களும் அபக்கா தேவி என்ற பெயருடனேயே வழங்கப்பட்டார் என்ற கர்ணபரம்பரைக் கதையும், கருநாடகத்தின் நாட்டிசைப் பாடல் வடிவமான யக்சகாணம் என்ற பாடல்களில் இசைத்துப் பாடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அபக்கா சௌதா தேவியரின் ஆட்சிக்காலம் சுமார் 60 ஆண்டுகாலம் நீடித்ததாக அந்த நாட்டார் பாடல்கள் கூறுகின்றன. ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி அவரது கணவரின் சதிகளால் அபக்கா சௌதா சிறைப்பிடிக்கப்படுகிறார்.
தேசம் போற்றிய இராணி
அபக்கா சௌதா, சுயமாகத் தன் அளவில் ஜெயின மதத்தைக் கடைப்படித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தனது நாட்டில், அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இணக்கமாக வாழும் சூழலை ஏற்படுத்தியிருந்தார் அவர். அவரது வீரமும் மதி நுட்பமும் மக்களுக்கு அவர்மேல் எல்லையில்லாத அன்பை வளர்த்திருந்தது. மக்கள் அவரை நேசித்தார்கள். அவரது படையில் முகமதியர்களும் இந்துக்களும் ஜெயினர்களும் சம அளவில் இருந்திருக்கிறார்கள். எனினும், அவரது படை கட்டுத் திட்டமாக இயங்கியிருக்கிறது. அந்த அளவு இணக்கமான சூழலைத் தமது நாட்டிலும் படையிலும் அபக்கா சௌதா தேவியால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. மக்களின் இடர்களைத் தீர்க்க இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கிப் பணிபுரியும் இராணியாக நாட்டார் பாடல்கள் அவரது புகழைப் பாடுகின்றன.
பெருவீரத்துடன் போரிட்ட அபக்கா தேவி, போர்க்களத்தில் வென்றும், சதிகளால் வீழ்த்தப்பட்டது அவலம். இந்திய விடுதலைப் போராட்டம் 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைத்தான் வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால் அதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அபக்கா தேவி, அபக்கா தேவிக்குப் பின்னர் தமிழகத்தில் தோன்றிய வேலு நாச்சியார் போன்ற வீர மங்கைகள் பண்டைய இந்திய அரச மரபின் வீரமிக்க ராணிகளாக விளங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அபக்கா தேவியின் வீரத்தைப் போற்றும் வண்ணம் உல்லாள் நகரில் அவருது பெயரில் சதுக்கமும், அவருக்குச் சிலையும் நிறுவப்பட்டிருக்கிறது. கருநாடகத்தின் பங்களூரு நகரிலும் ராணி அபக்கா தேவிக்குச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்திய அஞ்சல் துறை 2003இல் அவரது பெயரிட்ட அஞ்சல்தலையை வெளியிட்டிருக்கிறது. இந்தியக் கப்பற்படையின் ஒரு கடலோரக் காவல்படைக் கப்பல் இராணி அபக்கா சௌதா தேவியின் பெயர் தாங்கி நிற்கிறது.
(தொடரும்)