அந்த அரசிக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய அரச குடும்பத்தினர்களில், அரச குலத்தினரில் பெண்ணரசியாக இருந்து நீண்ட காலம் ஆட்சி செய்த ஓர் அரசி என்ற சிறப்பு. நீண்ட நெடுங்காலம் என்றால், ஏறத்தாழ 54 ஆண்டுகள் தொடர்ந்தது அவரது ஆட்சி. காலம் கிட்டத்தட்ட 1550களிலிருந்து 1600கள் வரை. அவரது சரியான பிறப்பு இறப்பு ஆண்டுகள் தெரியவில்லை. அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகளும் போர்ச்சுகீசியர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்தே கிடைக்கிறது. அந்த இராணியின் பெயர் சென்னபைரதேவி.
இன்றைய கோவாவின் தென்பகுதியிலிருந்து, வட, தென் கன்னடப் பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதி வரையான அரபிக் கடலோரப் பகுதிகள் அவரது ஆட்சிக்குட்பட்டிருந்தன. அந்நாளைய சாளுவ அரச குலத்தைச் சேர்ந்தவர் அவர். மகா மண்டலேசுவரி என்ற குலச் சிறப்புப் பெயரும், மிளகுப் பேரரசி என்று போர்ச்சுகீசியர் அவருக்குச் சூட்டிய பெயரும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டன.
குருசாடோ என்பது அந்நாளைய போர்ச்சுகீசிர்களின் பொன் நாணயத்தின் பெயர். இந்திய மிளகுக்குப் போர்ச்சுகீசியர்களும் ஐரோப்பியர்களும் கையை வெட்டிக் கொடுக்க அணியமாக இருந்த காலம் அது. ஓர் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 5000 குரூசாடோக்கள் மதிப்புள்ள மிளகு வணிகத்தைத் தான் அரசாண்ட 50 ஆண்டு காலம் முழுவதும் ஏற்றுமதி செய்துகொண்டிருந்த சிறப்பு சென்னபைரதேவிக்கு இருந்தது.
கொச்சிப் பகுதியில் போர்ச்சுகீசியத் படைத்தளபதியாகவும் தலைவராகவும் இருந்த அஃபோன்சோ மெக்சியா என்ற தலைவர் போர்ச்சுகீசிய மன்னருக்கு எழுதிய கடிதம் இவ்வாறு போகிறது, ‘கோவாவுக்கும் படிகோலாவுக்கும் இடைப்பட்ட சில பகுதிகள் உள்ளன. ஓனார், ஓங்கோல், மெர்ஜன் என்ற அந்தப் பகுதிகளில் விளையும் மிளகு மலபாரிலோ, கொச்சியிலோ கிடைக்கும் மிளகைவிட அளவில் பெரியது. ஆனால் மலபார் மிளகைப்போலக் கருங்காரமில்லாதது. இந்த மிளகையும் வாசனைப் பொருட்களையும் அந்தப் பகுதியின் அரசியான சென்னபைரதேவி ஆண்டுக்கு 5000 குரூசோடாக்கள் மதிப்பு அளவுக்கு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்; இந்தப் பகுதியை நாம் கையகப்படுத்துவது நமக்கு மிகுந்த பலனைத் தரக் கூடியது….’ என்று போகிறது அந்த அதிகாரியின் கடிதம்.
சென்னபைரதேவியின் ஓவியமோ, எழுத்துப் படமோ கிடைக்கவில்லையெனினும், தங்கத்தில் செய்யப்பட்ட அவரது சிறிய உருவச்சிலை வரலாற்றின் ஏடுகள் எதிலிருந்தோ கிடைக்கின்கிறது. அந்நாளைய இந்தியப் பகுதிகளில் விளைந்த மிளகு, சந்தனம், தேன், பட்டை என்ற இலவங்கம், சாதிக்காய் போன்ற நறுமண உணவுப் பொருள்கள், போட்டி போட்டுக் கொண்டு ஐரோப்பிய, உரோமானிய, அரபு தேசங்களால் வாங்கப்பட்டன. இந்திய நாட்டின் பகுதிகள் வலிமையான அரசர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த வரை வணிகமாகத் தொடர்ந்த இந்த வியாபாரம், உள்நாட்டு அரசர்களின் வலிமை குறைந்தவுடன் ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தப் பொருள்களுக்காக இந்திய நாட்டின் அரச பிரதேசங்களைப் போரிட்டும் வெருட்டியும் ஆட்சியையே பிடுங்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்றது. இது பெரிய அளவில் நிகழ்ந்தபோதுதான் இந்தியாவின் மொத்தப் பகுதியும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதியாக மாறிப்போனது.
முன்வரலாறு
உத்தர கன்னடம் என்னும் வடகன்னடத்தில் ஓடும் ஆறு சாராவதி ஆறு. அந்த ஆற்றின் கரையை ஒட்டி இருந்த பிரதேசப் பகுதி கெருசொப்பா என்ற பெயருடையது. அதன் அருகமைந்த பகுதியின் பெயர் அடுவள்ளி. அடுவள்ளியின் தலைநகர் பத்கலா. அதன் அரசராக இருந்தவர் இம்மடி தேவராயர். அவரது மனைவி சென்னதேவி.
தொடக்கத்தில் இம்மடி தேவராயரைக் கப்பம் கட்டவில்லை என்று போருக்கிழுத்த போர்ச்சுகீசியர்கள், 1542ஆம் ஆண்டு அல்போன்சா டிசௌசாவின் தலைமையில் அவரைக் கொன்றுவிட்டு பத்கல நகரையும் தீயிட்டழித்தனர். இம்மடி தேவராயருக்குப் பிறகு அடுவள்ளிப் பகுதியின் ஆட்சி சென்னதேவிக்கு வந்தது. அரபு தேசத்திலிருந்து அடுவள்ளிப் பிரதேசத்தின் கடற்கரைக்கு வரும் வணிகக் கப்பல்களைத் தமக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தைச் செலுத்தாமல் அனுமதிப்பதாகக் குற்றம்சாட்டி மீண்டும் போருக்கு வந்தனர் போர்ச்சுகீசியர்கள். மீண்டும் பத்கலா நகரம் சூறையாடப்பட்டது. சென்னதேவியும் வெல்லப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சென்னதேவி வேறு யாருமல்ல, சென்னபைரதேவியின் மூத்த சகோதரிதான் அவர்.
பழியும் எழுச்சியும்
தனது மூத்த சகோதரியும் அவரது கணவரும் வீழ்த்தப்பட்ட பழிவெறியில் விளைந்த வீரம்தான் சென்னபைர தேவியின் எழுச்சி. அந்த எழுச்சி கெருசொப்பா, அடுவள்ளி பிரதேசங்களின் ஒருங்கிணைந்த எழுச்சியாக மாறியது. அந்த ஒருங்கிணைந்த பிரதேசங்களின் அரசியாக 1542இல் பதவியேற்றுக் கொண்டார் சென்னபைரதேவி. அவரது ஆட்சிக்காலம் 1606 வரை சுமார் 54 ஆண்டுகள் நீடித்தது. சிறந்த கூர்மதியும் பெருவீரமும் போர்ப்பயிற்சிகளும் நிரம்பியவராக இருந்தார் சென்னபைரதேவி. இலக்கியங்களிலும் கலைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த அவர், கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் புரவலராக இருந்து ஆதரித்தார்.
திகம்பர செயின மடத்தின் மகுடாதிபதியாக அக்காலத்தில் இருந்தவர்களில் ஒருவர் பத்தகலங்க தேவா. கன்னட மொழியியலின் முக்கியமான இலக்கண நூலாகக் கருதப்படுகின்ற கருநாடக சப்தானுசாசனம் என்ற 592 சூத்திரங்கள் நிரம்பிய நூலை எழுதியவர். அவரது செயின மடம் புரவலம் பெற்று நன்கு பராமரிக்கப் பட்டது சென்னபைரதேவியின் ஆட்சியில்தான். இவ்வாறு கலை, மொழி, வீரம் என்ற பல புலங்களிலும் திறம்பெற்ற ஓர் ஆட்சியை சென்னபைரதேவி அளித்தார் என்பது பல ஆதாரங்களிலிருந்து தெரிகிறது.
மதவெறிகள் பரவாத நல்லாட்சி
இராணி சென்னபைரதேவி செயின மதக் கொள்கைகளைப் பின்பற்றியவர். ஆனால் அவர், சிவ (சைவ), விண்ணவ (வைணவ), சக்தி (சாக்த) சமய மரபுகளையும் அந்தச் சமயம் சார்ந்த மக்களையும் சமமாக ஆதரித்து ஆட்சி நடத்தியிருக்கிறார். அவரது ஆட்சி கேரளத்தின் மலபார் பகுதி வரை தென்னிந்தியக் கடற்கரைப் பகுதியிலும், மத்தியக் கோவா வரை வட இந்தியக் கடற்கரைப் பகுதியிலும் அரபிக் கடற்கரையோரமாக விரிந்து பரந்திருந்தது.
போர்ச்சுகீசியர்களின் வல்லடியான மதமாற்றும் நடவடிக்கைகளிலிருந்த தப்பிப் பிழைத்து வந்த கொங்கணி இனத்தவர்களையும், சரசுவத் பிராமணர்கள் என்ற பிராமண இனத்தவர்களையும் அவர் ஆதரித்து தனது நாட்டில் அனுமதித்தார். வேணுபுரத்தில் இருந்த வர்த்தமான பசதி என்ற கோவிலையும், யோக நரசிம்மர் ஆலயத்தையும் பழுது நீக்கிச் செப்பம் செய்து கட்டிக்கொடுத்தார். கருநாடகப்பகுதியில் இருந்த கர்கலா என்ற ஊரின் புகழ்வாய்ந்த செயின சமயக் கோயிலான சதுர்முகபசதி என்ற ஆலயத்தை நிர்மாணித்தார். அனைத்துச் சமய இன மக்களையும் இணக்கமான முறையில் நடத்தியதால், அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் அமைதியாகவும் வசதியாகவும் வாழ்ந்தனர்.
நல்ல அரசுக்கு நிறைந்த செல்வம் தேவை என்பதை உணர்ந்திருந்த சென்னபைரதேவி, தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளைந்த விளைபயிர்களான மிளகு, பட்டை, சந்தனம், சாதிக்காய், இஞ்சி போன்ற வாசனைப் பொருட்களைப் பல ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். தென்னிந்திய, கேரளப் பகுதிகளில் விளைந்த வாசனைப் பொருட்களுக்கும், மிளகுக்கும் அந்நாளைய ஐரோப்பிய, அரபு நாடுகளில் மிகுந்த கேட்பு இருந்தது. தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து அவற்றைக் கப்பல் கப்பல்களாகப் பொதிகளில் வாங்கிச் சென்றனர் வெளிநாட்டினர்.
போரும் அமைதியும், உடன் செழித்த வணிகமும்
1552’இல் அடுவள்ளி, கெருசொப்பா ஆகிய இணைந்த பகுதிகளின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அவர், குறைந்த ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கைக்குரிய ஆட்சியாளரானார். அவரது ஆட்சி திறம் பெறுவதைக் கண்ணுற்ற போர்ச்சுகீசியர் 1559லேயே அவருடன் போர் தொடுத்தனர். அந்தப் போரில் சென்னபைரதேவி வெற்றி பெற்றார். போரில் தோற்ற போர்ச்சுகீசியர்கள், சென்னபைரதேவியின் அண்டை அரசுகளான கேளாடி, பில்கி பகுதிகளின் அரசர்களைத் தூண்டி விட்டு சென்னபைரதேவியை ஆட்சியிலிருந்து நீக்கிடக் கலகம் செய்தனர். அவற்றை அரசதந்திரத்துடன் அடக்கி ஒழித்த சென்னபைரதேவி, போர்ச்சுகீசியரின் முறைகளை அறிந்து தனது ஆட்சிப்பகுதியைச் சுற்றியிருந்த அரசுகளின், அரசர்களின் தோழமையையும் நம்பிக்கையையும் பெறுவதில் கவனம் செலுத்தினார். அந்தச் சமயத்தில் குஜராத்தில் ஆட்சியிலிருந்த சுல்தான்கள், பிதாரின் பொறுப்பிலிருந்த சுல்தான்கள், பீஜப்பூரின் அதில் குலத்து அரசர்கள், கேரள தேசத்தை ஆண்ட அரசர்கள் ஆகிய அனைவரோடும் நட்புறவு பேணினார்.
வடகன்னடப் பகுதிகளில் கன்னூர், மிரிஜன் கோட்டைகள் புதிதாகக் கட்டப்பட்டும், ஏற்கெனவே இருந்தவை செப்பனிட்டும் பலப்படுத்தப்பட்டன. மிரிஜன் கோட்டை அகநாசினி ஆற்றங்கரையில் இருந்ததால், வணிகப் பொருள்களான மிளகு போன்றவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவும், தேவைப்படும்போது நீர்ப்போக்குவரத்து மூலம் விற்பனைக்குக் கொண்டு செல்லவும் வசதியாக அமைந்தது. அப்பகுதிகளின் கரையோர நகர்களான பத்கலா, கொன்னவார், மிரிஜன், அங்கோலா, பைந்தர் போன்ற துறைமுகங்கள் போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் மேலும் உதவியாக இருந்தன. கொன்னவார், பத்கலா துறைமுகங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகங்களில் பெரும்பங்கு வகித்தன.
வணிக விளைபொருள்கள் கிளைத்தது, உள்நாட்டில் அமைதியான, அனைத்துச் சமயங்களும் பங்கு பெற்ற இணக்கமான ஆட்சி, தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புக்கான கோட்டைகள், அண்டை நாடுகளோடு நட்புறவு என்ற சூழலை ஏற்படுத்தி சென்னபைரதேவியை மேலும் வலிமையான அரசியாக மாற்றியது.
1570இல் போர்ச்சுகீசியர்கள் மீண்டும் சொத்தைக் காரணங்களுக்காக சென்னபைரதேவியோடு போர் தொடுத்து, கோட்டைகளைக் கைப்பற்ற முனைந்தார்கள். அப்போது போர்ச்சுகீசியர்கள் கொன்னவார் நகரின் பல பகுதிகளை எரியூட்டினார்கள். ஆனால் இறுதியில் இம்முறையும் அவர்களை வென்று வெருட்டி ஓட்டிய சென்னபைரதேவி, தனது பகுதியின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு வசதியாக, அண்டை நாடுகளோடு இணைந்த ஒரு போர்ப்படையை 1571இல் உருவாக்கினார். அந்த இணைந்த படைக்கு சென்னபைரதேவியே தலைமைதாங்க, அப்பகுதியின் வலிமை அசைக்கமுடியாததாக அமைந்தது. இப்போது போர்ச்சுகீசியர்களுக்கு சண்டை உதவாது என்று தெரிந்தது. சென்னபைரதேவியோடு இணக்கமாகப்போனால்தான் வணிகப் பொருட்களால் இலாபம் உண்டு என்பது அவர்களுக்குப் புரிந்தது. எனவே அப்பகுதியின் பெரும் அரசியாக சென்னபைரதேவியை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிவந்தது.
அடுத்த முப்பது ஆண்டுகள் வரை சென்னபைரதேவியின் அரசும் வணிகமும் அந்தப் பகுதியில் செழித்து வளர்ந்தன. அசைக்கமுடியாத நிலையில் நிலைபெற்ற சென்னபைரதேவி, போர்ச்சுகீசிய வரலாற்றாசிரியர்களாலேயே ‘மிளகு வணிகத்தின் அரசி’ என்று வியந்து போற்றப்படுகிறார்.
நிறைவு
54 ஆண்டுகள், 1606 வரை ஆட்சி புரிந்தாலும், போர்ச்சுகீசியர்கள் தாம் நினைத்ததை நடத்தினார்கள். கேளாடி, பில்கி பகுதிகளின் அரசர்களிடையே அவர்களது வாரிசுகள் மூலம் திருமணப்பந்தம் ஏற்பட்டது. எனவே இரு பகுதிகளின் அரசுகளும் அரசர்களும் இணைந்தார்கள். அவர்களுக்கு ஏற்கெனவே சென்னபைரதேவியின் மீது பொறாமையும், கசப்பும், அடைந்த தோல்வியும் மனத்தில் குமைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தன. சென்னபைரதேவி இந்த அனைத்துத் தீய சக்திகளோடு சேர்ந்து தனது மூப்புடனும் போராட வேண்டி வந்தது. போர்ச்சுகீசியர் பின்னணியில் கேளாடி பில்கி இன அரசர்கள் இணைந்து போரைக் கிளப்பி, சென்ன பைரதேவியைச் சிறைபிடித்தார்கள். கேளாடி கோட்டையில் சிறை வைக்கப்பட்ட சென்னபைரதேவியின் வாழ்வு அந்தச் சிறைக்கோட்டையிலேயே முடிவுக்கு வந்தது.
சென்னபைரதேவியின் காலத்துக்குப் பின்னர் கெருசொப்பா பகுதி கேளாடி பகுதியின் கீழ் வந்தது. பகைவர்களால் சாதிக்க இயலாததை உள்ளடி விரோதம் சாதித்துக்காட்டியது. இந்தியப் பெண்ணரசிகளில் ஒரு மாபெரும் அரசியாக, மிளகு இராணியாகத் திகழ்ந்த சென்னபைரதேவியின் ஒளிபொருந்திய வரலாறு கடைசியில் அண்டை அயலார்களான அரசர்களது துரோகம் என்னும் இருண்மையால் நிறைவுக்கு வந்தது. ஆயினும் இன்றளவும் இந்திய அரசிகளில் ஒரு கலங்கரை விளக்கமாக சென்னபைரதேவி நிச்சயம் இருக்கிறார்.
(தொடரும்)