Skip to content
Home » இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

இராணி அகல்யாபாய்

ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள். அது அரசும், அரச குலமும் ஒன்று அல்ல. அரசு என்பது நெடிது, நிலைத்து நின்றிருப்பது. ஆனால் அரச குல மனிதர்களின் ஆயுள் சிறிது காலத்துக்கானது. அதாவது, அரச குலத்தவர்கள் அரசிலிருந்து தனிப்பட்டவர்கள் என்ற கொள்கை. அரசுக்கான செல்வங்கள், வலிமை போன்றவை அரசுக்கானதும், அரசைப் பிரதிபலிக்கும் மக்களுக்குமானதும் மட்டுமே. அவற்றின் மீது அரச குலத்துக்குக் காப்பாளர் என்ற உரிமையைத் தவிர, அனுபவிப்பாளர் என்ற உரிமை இல்லை என்ற தெளிவு. அதாவது, கிட்டத்தட்ட நவீன மக்களாட்சி முறையில் அரசாட்சி.

ஆனால், இன்றைய நவீனக் கால மக்களாட்சி முறையில் தலைவர்கள் பலர், தாங்களும் அரசும் வேறு வேறு அல்ல, அரசின் செல்வம் அனைத்தும் தங்களுடையதும்தான் என்று ஐயமே இன்றி நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேடிக்கையான ஒரு முரண். ஆனால் ஓல்கர் இனத்து அரசு குலத்தவர் அத்தகைய அருமை நேர்மையைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களது அரச குலக் குடும்பத்தை நடத்துவதற்கும், சொந்தச் செலவுகளுக்கும் தனிப்பட்ட செல்வத்திலிருந்து மட்டுமே செலவு செய்தனர். அரசின் செல்வங்களைத் தங்களது சொந்தத் தேவைகளுக்காகத் தொடக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர்.

இராணி அகல்யா பாயின் தனிச்சொத்தாக மட்டுமே ஏறத்தாழ அக்காலப் பண மதிப்பில் 16 கோடிகள் இருந்ததாக ஒரு மதிப்பீடு சொல்கிறது. அத்தகைய தனிப்பட்ட செல்வாக்குடன் இருந்தவர் இராணி அகல்யா பாய். பல கோயில்களைக் கட்டவும், புதுப்பிக்கவும் இந்தத் தனிச்சொத்தின் பணத்தையே அவர் பயன்படுத்தினார். இப்படிப்பட்ட ஓர் அரசகுலத்தின் ஆட்சி எத்தனை மேன்மையானதாக இருக்கும் என்று நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் அரசின் தலைமையாக இருந்த அவருக்கு 18, 19ஆம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்களும், மராத்தாவைச் சேர்ந்தவர்களும் ஒரு புனிதருக்குரிய மரியாதையை வழங்குவதில் பெருமைப்படுகிறார்கள். மராத்தாவைச் சேர்ந்த மால்வா பகுதியின் இராணியாக ஆட்சி செய்தார் அகல்யா பாய். அவருடைய ஞானம், புத்திசாலித்தனம், மேன்மையான குணங்கள், பக்தி, தொழில்மயமாக்கலுடனான அரசாட்சி, மக்களின் மீதான அக்கறை போன்ற அனைத்துக் குணங்களுமே அவர் மக்களிடம் பெற்ற பேரன்புக்குக் காரணம்.

அத்தகைய ஓர் அரச குலத்தில் தோன்றிய அரசியைப் பற்றிய வரலாற்றைத்தான் இன்றைய பகுதியில் பார்க்கப் போகிறோம். 2025ஆம் ஆண்டு வரும்போது அந்த அரசியின் 300 ஆவது பிறந்த ஆண்டை நாம் கொண்டாடுவோம்.

பிறப்பு, வளர்ப்பு, மணம், அரசு

மே 31, 1725 அன்று மகாராட்டிரத்தில் உள்ள அகமதுநகரைச் சேர்ந்த சாம்கெட் பகுதியில், சொண்டி என்ற ஊரில் அந்தக் கிராமத் தலைவரது மகளாகப் பிறந்தவர் அகல்யாபாய். தந்தையின் பெயர் மங்கோசிராவ் சிண்டே. தனது மகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தார் சிண்டே. பெண்கள் படித்திராத அக்காலத்தில் அகல்யாபாய் எழுதப் படிக்கக் கற்றதோடு, வலிமையும் நேர்மையும் கொண்ட குணத்தையும் கொண்டிருந்தார். அந்த மால்வா பகுதியின் அரசராக இருந்த மால்கர் ராவ் ஓல்கரின் கவனத்தைக் கவர்ந்தார் சிறு பெண்ணாக இருந்த அகல்யாபாய். எட்டு வயது நிரம்பியிருந்த அகல்யாபாயைத் தனது மகனான கண்டேராவ் ஓல்கருக்கு 1733ஆம் ஆண்டு மணமுடித்தார் மால்கர்ராவ். அகல்யாபாய்க்கு இருபது வயது இருந்தபோது கும்கர் கோட்டை முற்றுகைப் போரில் கண்டேராவ் இறந்து போனார். துக்கப் பெருங்கடலுக்குள் வீழ்ந்த அகல்யாபாய், சதி என்ற உடன்கட்டை ஏறும் சடங்குக்கு அணியமாகி தன்னுடைய கணவனது சிதையில் ஏறத் துணிந்தார். ஆனால் அகல்யாபாயின் அறிவையும் திறத்தையும் அறிந்திருந்த மால்கர் ராவ், அவர் அவ்வாறு இறந்துபோவதை விரும்பவில்லை. அகல்யாபாயின் தலைமை நாட்டுக்குத் தேவை என்று உணர்ந்திருந்த அவர், அகல்யாபாயின் மனதை மாற்றி, அவர் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தார். மேலும் அவர் அகல்யாபாய்க்கு அரசாட்சி, நிருவாகம், போர்முறைகள் போன்றவற்றில் பயிற்சி அளித்து, அவரை மிகச் சிறந்த வீரப் பெண்மணியாக மாற்றினார்.

அவ்வாறு செதுக்கிச் செதுக்கி இராணி அகல்யா பாயை உருவாக்கிய மால்கர் ராவ் 1766ஆம் ஆண்டு மறைந்தார். அதற்கடுத்த ஆண்டே அகல்யா பாயின் மகனான மாலே ராவும் இறந்தார். எனவே 1767ஆம் ஆண்டு மராட்டியப் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த தலைவராக இருந்த பேஷ்வா என்பவரிடம் தானே மால்வாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்போவதாகக் கடிதம் மூலம் அறிவித்தார் அகல்யா பாய். அவரது ஒப்புதலுக்குப் பின்னர் மால்வா பிரதேசங்களின் அரசுப் பொறுப்பை ஏற்ற அகல்யாபாய் அப்பிரதேசங்களின் அரசியாக ஏறத்தாழ 28 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியவர்.

நல்லரசாகத் திகழ்ந்த பெண்ணரசு

டிசம்பர் 11, 1767ஆம் ஆண்டு மால்வா பகுதியின் அரசாட்சியை ஏற்றார் அகல்யா பாய். அவரது ஆட்சி 28 ஆண்டுகள் நீடித்தது என்பதே அவரது திறமையையும், அவருக்கு இருந்த மதிப்பையும் எடுத்துக்காட்டும்.

அகல்யாபாயின் ஆட்சி மால்வாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க காலமாக 17, 18ஆம் நூற்றாண்டுகளில் திகழ்ந்தது என்றால் மிகையில்லை. அமைதி, வளமை, ஆட்படுத்தலுக்கு ஆளாகாத இயல்பு நிலை, கலை-மொழி-இசை போன்றவற்றில் வளர்ச்சி, பொருளாதாரமும் உற்பத்தித் துறையும் தன்னிறைவோடு இயங்கியது என்று பல முத்திரை நிலைகளை அகல்யா பாயின் ஆட்சி கொண்டிருந்தது.

அகல்யா பாயின் ஆட்சிக் காலத்தில் இசைஞர்களும் கலைஞர்களும் கவிஞர்களும் பொறிஞர்களும் மால்வா பிரதேசத்தை நோக்கிக் குவிந்தனர். காரணம் எளிது, அவர்கள் மால்வா அரசில் போற்றப்பட்டார்கள். அவர்களது கலை மால்வா பிரதேசத்தில் வளர்ந்து மிளிர்ந்தது.

அகல்யாபாய் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவின்போதே அவரது பிரதேசத்தை எதிரிகள் நுழைந்து பிடிக்க முற்பட்டனர். அவரது திவானாக இருந்த கங்காதர ராவ் என்பவரே கலகம் செய்து மால்வாவைச் சுற்றியிருந்த அரசர்களில் சிலரை இணைத்துக் கொண்டு இராணி அகல்யா பாயை முடக்க முற்பட்டார். அவருக்கு எதிரான யுத்தக் களத்தில் வாள், வில், அம்புகளுடன் தானே தனது படைக்குத் தலைமை தாங்கிய அகல்யா பாய், ஆக்கிரமிப்பாளர்களை ஒடுக்கி அடக்கினார். அது மட்டுமின்றி மராத்தாவின் தலைவரான பேஷ்வாவிடம் அப்போதுதான் நுழையத் தொடங்கியிருந்த பிரித்தானியர்களிடம் நட்புறவு வைத்துக் கொள்ளவேண்டாம் என்றும், அது நமக்குத்தான் கேடாக முடியும் என்றும் தெளிவாக எடுத்துரைத்தார் அகல்யா பாய். அத்தகைய நுண்ணறிவும் வீரமும் அவருக்கு இருந்தது.

மகேசுவர் என்ற ஊரில் அகல்யாபாய் ஒரு துகிலகத் தொழிற்சாலையை நிர்மாணித்தார். இன்று, சுமார் முந்நூறு ஆண்டுகள் கழிந்தும் மகேசுவரி சேலைகள் என்ற விற்பெயருடன் (Brand Name) முன்னணி ஆடை நிறுவனமாக விளங்குகிறது அது. அகல்யா பாய் தினசரி மக்களைச் சந்தித்து அவர்களுக்கிருக்கும் குறைகளைக் கேட்க நேரம் ஒதுக்கியிருந்தார். அவரது ஆட்சியில் வழிபாட்டு நிலையங்களைப் பராமரித்தல், புதுப்பித்தல், நாடு தோறும் பிரயாணிகளுக்குத் தேவைப்படும் வசதிகளைச் செய்து கொடுத்தல், குறைந்த கட்டணத்திலான நல்ல தங்குமிடங்களைப் பயண வழிகள் நெடுக அமைத்தல், எளியவர்களைப் பராமரிக்கவும், ஆதரிக்கவும் மடங்கள், அன்னதான நிலையங்கள், தொழிலுக்கும், உழவுக்கும் தேவைப்படும் உதவிகளை முன்னின்று அமைத்தல் என்று வருவாய், பராமரிப்பு, பாதுகாப்பு, தொழில் என்று பல முனைகளில் கவனம் கொண்ட அரசாக அகல்யா பாயின் அரசு இருந்தது. 1780ஆம் ஆண்டு காசி விசுவநாதர் ஆலயத்தை முழுமையாகப் புதுப்பித்துக் கட்டியது அவரது ஆட்சியின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1795ஆம் ஆண்டு தனது எழுபதாவது வயதில் அகல்யா பாய் இவ்வுலக வாழ்வை நீத்து நிறைந்தார். ஞானத்துவமான அரசி என்று (Philosopher Queen) என்று போற்றப்படுகிறார் அகல்யா பாய்.

இயொவனா பெய்லி (Joanna Bailie) என்ற ஸ்காட்லாந்து நாட்டுக் கவிஞர் அகல்யா தேவியின் ஆட்சிக் காலத்தில் மால்வாவையும், அவரது ஆட்சித் திறத்தையும், அருங்குணத்தையும் பார்த்து வியந்து ஒரு அழகிய கவிதையை எழுதினார்.

‘முப்பது ஆண்டுகள் ஒளிர்ந்து துலங்கின’ என்று தொடங்குகின்ற அந்த ஆங்கிலக் கவிதை, அகல்யா பாய் இராணியின் அரும் பண்புகளை எடுத்துச் சொல்வதாக அமைந்தது.

சமூக நல, மக்கள் நல அரசாட்சி

இராணி அகல்யா பாயின் படைத் தலைவராக மால்கர் ராவ் தனது வளர்ப்பு மகனாக வரித்த சுபேதார் துக்கோசி ராவ் ஓல்கர் என்பவரை நியமித்திருந்தார். அவர் இராணி அகல்யா பாயின் நம்பிக்கைக்குரிய படைத்தலைவராக மால்வா அரசைப் பாதுகாக்க உதவினார். இந்தூர் போன்ற நகர்களுக்குச் செல்ல நேர்ந்தால் தான் செல்லும் நகரில் 10,000இலிருந்து 12000பேர் வரை சந்தித்துப் பேசுவார் இராணி அகல்யாபாய். அப்போது அவர்கள் அனைவருக்கும் உணவும் பரிமாறப்படும். செல்லுமிடங்களில் எளியக் கூடாரங்களை அமைத்துத் தங்குவதை இராணி விரும்பினார். அது மக்களோடு இணைந்து தம்மை வைத்துக் கொள்ளும் என்று அவர் சிந்தித்தார். காசி ஆலயம் மட்டுமல்லாது, மராத்தாவிலிருந்து வாரணாசி வரை இடையில் பல புகழ்பெற்ற ஆலயங்களைப் பராமரித்துப் பழுதுபார்த்துக் கொடுத்தார் இராணி அகல்யா பாய்.

தமது ஆட்சிக் காலத்தில் முற்காலத்திலிருந்து நிலவி வந்த வாரிசுகளற்ற பெண்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்திக் கொள்ளும் என்ற விதியை, மால்வாவில் திரும்பப் பெற்றார் இராணி அகல்யாபாய். அவ்வாறு இருக்கும் செல்வங்களை அக்குடும்பத்தின் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப மூத்தவர், அவர் பெண்ணாக இருப்பினும், அவரது விருப்பத்தின்படிப் பல நற்காரியங்களுக்காகச் செலவிட்டுக்கொள்வதற்கு ஊக்கமளித்தார். அத்தகைய செல்வங்களை மால்வா அரசு எடுத்துக்கொள்ளாது என்ற சட்ட உறுதியையும் கொடுத்த சமூக மேம்பாட்டு எண்ணம் கொண்டவராக இராணி அகல்யா பாய் இருந்தார்.

நின்று நிலவும் புகழ் வாய்ந்த ஒப்பற்ற முப்பது ஆண்டுகள்

இராணி அகல்யா பாயின் பெருந்திறத்தையும் நுண்ணறிவையும் பிற மொழி அறிஞர்கள் பலரும் நிறையப் பதிந்து வைத்திருக்கின்றனர். பிரித்தானியக் கவிஞர்கள், பயணிகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தொடக்கக் கால அதிகாரிகள் இந்தூர் இராணி அகல்யா பாயைப் பற்றிய பல குறிப்புகளை எழுதி வைத்திருக்கின்றனர்.

அகல்யா பாய் தனது 70 ஆவது வயதில் மறைந்த பிறகு அவரது படைத்தலைவராக இருந்த துக்கோசி ராவ் அரசரானார். சில நாட்களில் அவர் தனது மகனான காசி ராவ் ஓல்கரின் பொறுப்பில் ஆட்சியை விட்டுவிட்டு ஒதுங்கினார்.

வரலாற்றாய்வாளர்கள் ஒப்புயர்வற்ற இராணியாக அவர் 30 ஆண்டு காலம் ஆண்டதைத் தெரிவிப்பதோடு, அவரது நுண்ணறிவு, மக்களை நேசித்த பண்பு, ஞானியைப்போல வாழ்ந்த வாழ்வு என்று அனைத்தையும் பதிவு செய்கிறார்கள். இந்திய அரசிகளில் இராணி அகல்யா பாய் தவிர்க்க முடியாத ஞானவானான அரசியாக நிலைத்து நிற்கிறார்.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *